Wednesday, November 28, 2007

அறுபடும் மனிதச்சங்கிலி!

அறுபடும் மனிதச்சங்கிலி!
நடைவண்டிச் சாலைகள் (10)

(28.11.2007

காலையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் பேசினேன். மதியம், கியூபா நாட்டு மக்களின் "என்றும் தோழர்' ஃபிடல் காஸ்ட்ரோவிடம் பேசினேன். மாலையில் மேற்கிந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவிடம் பேசினேன். இதுபோன்று ஒருவர் மூச்சுவிடாமல் சொன்னால், பொய்யெனக் கருத வேண்டாம். இவையெல்லாம் எளிய சாத்தியம்.


இன்று உலகின் அகலம் நீளம் எல்லாம் சுருங்கி ஒரு புள்ளியில் குவிந்து கிடக்கிறது. வேற்றுக் கிரகங்கள் பற்றி வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து கணினியில் அலசலாம். இணையம் கொண்டு இணைக்க முடியாத இதயங்கள் இல்லை. எவ்வளவு தொலை தூரத்தில் உள்ள மனிதரையும் தகவல் தொடர்புச் சாதனங்கள் எப்போதும் அருகிலேயே வைத்து அழகு பார்க்கிறது. இத்தகைய மறைமுக மக்கள் இணைப்புப் புரட்சியால் முகம் மலரலாம். ஆனால் அகம் மலர முடிவதில்லை. நேர்முகமாக பல துண்டுகளாக மனிதச் சங்கிலி அறுபடுகிற வீழ்ச்சியைத்தான் நாம் காண முடிகிறது.

ஐந்தாயிரம் பேர் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு குடும்பத்தாருக்கு மற்றொரு குடும்பத்தாரை அறியாத அவலம். பத்தடி தூர இடைவெளியில் உள்ள எதிர் வீட்டாரின் பெயர் தெரியாத கேவலம் என வழுக்குப் பாதையில் பலர் வழுக்கி விழுந்து வருகின்றனர். அண்டை அயலாரோடு பழகுவதே பாவம் என்கிற ஓர் எண்ணத்தை மனதில் பதியம் போட்டு வைத்துள்ளனர். இது வளர்ச்சியா? வீழ்ச்சியா?

சாதி, மதம், வசதி, அரசியல், மொழி போன்றவற்றின் ரீதியாக மனித சமுதாயம் முன்னரே பிளவுப்பட்டுக் கிடக்கிறது. இப்போது மேலும் பிளவு அடைவதற்கான புதிய வழியையும் கண்டுள்ளார்கள். அதற்கு தனிமை (privacy) என்று பெயர் சூட்டியுள்ளனர். தனிமை என்றால் கதவு ஜன்னல்களை இழுத்து மூடிவிட்டு, சூரிய வெளிச்சத்தைக்கூட உள்ளே விடாமல் திருப்பி அனுப்பிவிட்டு தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக் கொள்வதுதான். வெளியில் இடியே விழுந்தாலும் உள்ளே கேட்டுவிடக்கூடாது. வெள்ளைக்காரர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டுதான் நம்மை அடிமைப்படுத்தி கொள்ளையடித்துச் சென்றார்கள். இன்றும் நாம் பலவகையில் பிரிந்து கிடக்கிறோம். கொள்ளைக்காரர்கள் இரத்தம் வழிய அடித்துப்போட்டு கொள்ளையடித்துச் செல்கிறார்கள். இது கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அன்றாடம் நடக்கிற நிகழ்வாகிவிட்டது. தன் வீட்டில் கொள்ளை போகிறபோதுதான் கேட்க நாதி இல்லையே என்று அக்கம் பக்கத்து வீட்டாரைக் கோபத்தோடு பார்க்கத் தோன்றும். அதுவரை நாம் நீரோக்களாக இருப்பதுதான் நியாயமா?

இந்தத் தனிமை பிளவால் கொள்ளைகள் மட்டுமல்ல; தற்கொலை, கொலைகளும் அதிகரித்து வருகிறது. வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சோக அலை ஆவேசம் பொங்க அலையும். அந்த அலைகளை எதிர்த்து நீச்சல் போட்டால்தான் கரை சேர முடியும். நீந்த முடியாதவர்களின் முடிவுதான் தற்கொலை. நீந்துவதற்கு உந்துசக்தியாக இருப்பவர்கள்தான் அண்டை அயலார்கள்.

ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு போதி மரம். முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பதுபோல ஒருவரின் சோகத்தைப் போக்கும் மருந்து மற்றொருவரின் பேச்சு. இதை மற்றவரோடு நன்கு பழகி உரையாடுதல் மூலமே உணரமுடியும். கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்த காவலர்கள் ஒழுக்கச்சீலர்களாக, கடமை தவறாத கண்ணியவான்களாக, கண்டிப்பானவர்களாக இருந்தாலே போதும் தானே குறைந்துவிடும் என்று பலர் சொல்லக்கூடும். ஒரு பக்கத் தாழ்ப்பாள் கொண்டு இருபக்கக் கதவுகளைச் சாத்திவிட முடியாது. காவலர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அந்த ஒத்துழைப்பு எந்தவித பிளவுகளுக்கும் இடம்தராமல் ஒரு தாயின் பிள்ளைகளாய் இணைந்திருந்து சமுதாயத்தைக் காக்கவேண்டும் என்பதுதான். இராணுவம்தான் நாட்டைக் காக்கின்றதே என்று இதரப் பிரிவு காவலர்கள் தூங்கினால் உள்நாட்டுக் கலவரம் மூண்டுவிடும். இது பகை நாடுகளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல வாய்ப்பு ஏற்பட்டு நம் நாட்டைக் கைப்பற்றிவிடும். இதைப்போலவே காவலர்கள் இருக்கிறார்கள் என தூங்குதல் ஆகாது. எனவே நாம் அறுபடும் மனிதச்சங்கிலியாக இல்லாமல் சமுதாயத்திற்கான இராணுவ வீரராக இருப்போம். அப்படி இணைந்திருந்தால்தான் கொலை கொள்ளை மட்டுமல்ல; இயற்கை சீற்றங்களால் நிகழும் விபத்து உட்பட எல்லாவற்றிலிருந்து மீட்டு இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லமுடியும்.

No comments: