Friday, November 23, 2007

அரசியலுக்கு மாற்று வழி!

அரசியலுக்கு மாற்று வழி!
(நடைவண்டிச் சாலைகள் -9)

அரசியல்-சாக்கடை. இந்தச் சொற்றொடரை உச்சரிக்காத உதடுகள் குறைவு. சாக்கடை எப்படி உருவாகிறது? ஓடும் நதியை மக்கள் பயன்படுத்தாத நிலையிலேயே, நதி-கூவம்.
அரசியலால், அரசியல்வாதிகளால் இந்தியா குப்பைமேடாய் மாறுகிறது என்று வாதத்துக்கு எடுத்துக் கொள்வோம். அப்படியெனில், அரசியலுக்கு மாற்று வழி? அரசியல் முறை இல்லாத இந்தியா எப்படி இருக்கும்?இந்தியா பல துண்டுகளாகச் சிதறும்; குறுநில மன்னர்கள் தோன்றுவார்கள்; அடிமை முறை உயிர்த்தெழும்; ஆளுக்கொரு நீதி சொல்கிற, கட்டப் பஞ்சாயத்து நீதிபதிகள் வலம் வருவார்கள். இப்போது இருப்பதைவிட பன்மடங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அதிகரிக்கும்; பேச்சுரிமை, எழுத்துரிமை, மனித உரிமைகள் மறுக்கப்படும்; பசி, பட்டினியால் மனிதனை மனிதனே சாப்பிடுகிற அவலம் ஏற்படும். இத்தகைய இந்தியாவிலா நாம் வாழ விரும்புகிறோம்?
சமத்துவமான, சகோதரத்துவமான, ஊழலின் ஊற்றுக்கண் இல்லாத, வறுமைக்கோட்டிற்குக் கீழ் மக்கள் வாழாத எழுச்சியுற்ற இந்தியாவில் அல்லவா வாழ விரும்புகிறோம். இதனைப் பெற்றுத்தர நமக்கு வழிகாட்டும் சமுதாயப் பேராசிரியர்கள்தான் அரசியல்வாதிகள். ஆனால் இங்கு அரசியல்வாதிகள் பேராசிரியர்களின் எதிர்ப்பதம்.
சுயநலம், உணர்வு ஏய்ப்பு, உரிமை ஏய்ப்பு, வாக்கு பெற மட்டும் வாய்ச் சவடால், துக்கச் செய்தியிலும் அரசியல் செய்கிறவர்கள்தான் இங்கு அரசியல்வாதிகள். இவர்களின் செயல்முறைக்கு நாமும் பலவகையில் உறுதுணை. வீட்டில் குழந்தைக்குப் பால் வாங்க பணம் இல்லாவிட்டாலும் கட்சித் தலைவனுக்குப் பொன்னாடை போர்த்துகிற தொண்டர்கள் இருந்தால், அரசியல்வாதிகள் எப்படித் தங்களை மாற்றிக் கொள்வார்கள்? ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் செய்வதினால் மட்டுமே நாம் நல்லரசைப் பெற்றிட முடியும் என்பது மடமை.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பள உயர்வு உட்பட எல்லாத் தேவைகளையும் அவ்வப்போது கேட்டுப் பெறுகிற வாய்ப்பு எளிது. இவற்றிற்கு மட்டும் கட்சி பாகுபாடின்றி எல்லா உறுப்பினர்களின் குரலும் ஒருமித்தே ஒலிக்கிறது. ஆனால், பொதுமக்கள் தங்கள் தேவைகளைக் கேட்டு பூர்த்திச் செய்து கொள்கிற வாய்ப்பு மட்டும் குதிரைக் கொம்பு.
தேர்தலுக்குப் பின், மக்களுக்கும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான இடைவெளி பலகாத தூரம். மக்களின் பிரதிநிதியாகவே உறுப்பினர்கள் சபையில் காலெடுத்து வைத்தாலும் அவர்களின் குரல் மக்களின் குரலாக இல்லை. அரசியல் ரீதியான வாத, பிரதிவாதங்களே. உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிற நிலையிலும் இதே நியதியே.
அரசாங்கத் திட்டங்கள்கூட, ஆளுங்கட்சியின் அரசியல் லாபம் ஈட்டுகிற எண்ணங்களாகவே அமைகிறது. இது எல்லாத் தரப்பு மக்களுக்கும் திருப்தி அளிக்கக்கூடியதல்ல. மேலும் பயன்பாட்டுக்கு வரும் திட்டங்கள், சலுகைகளை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே பயன்பெறும் வகையில் உறுப்பினர்கள் வழிவகுத்துக் கொடுக்கின்றனர். இதனால் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல; எக்கட்சியையும் சாராதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதைக் களைவதற்கு பல வழிமுறைகள், சட்டத்திட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் அவை கட்டுப்படுத்தக்கூடியதாக இல்லை. இந்நிலையை மாற்ற, "மக்கள் சேவை கண்காணிப்பு' ஆணையம் என்று அமைக்கலாம். இந்த ஆணையம், தேர்தல் ஆணையத்தின் உப ஆணையமாகச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
தேர்தலோடு முடிவது தேர்தல் ஆணையப் பணி. தேர்தலுக்குப் பின் தொடங்குவது "மக்கள் சேவை கண்காணிப்பு' ஆணையப் பணி. இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர், ஐ.ஏ.எஸ்.அதிகாரி, சுதந்திரப் போராட்டத் தியாகி அல்லது ஓய்வுபெற்ற இராணுவ வீரர், சமூக ஆர்வலர், மூத்த பத்திரிகையாளர் ஆகியோர் உறுப்பினர்கள். எதிர்க்கட்சித் தலைவர் இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து எடுக்கிற முடிவே இறுதியானதாகும்.
எதிர்க் கட்சி தலைவர்கள் என்பவர் ஆளுங்கட்சியை எதிரிக் கட்சியாக நினைத்து செயல்படாதவராக இருக்க வேண்டும். அப்படி எவரும் கிடைக்கமாட்டார்கள் என்பது உண்மைதான். எதிர்க் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் இருந்தால்தான் மக்களுடைய உண்மையான குறைகள் தெரிய வரும், ஊழல் ஊற்றெடுக்காமலும் இருக்கும். ஒரு திட்டம் நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு எடுக்கும்போது இத்தாலி நாட்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருபது பேர் இருக்கிறார்கள் என்றால், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் 20 பேர்தான் இருப்பார்கள். மற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் உண்மையாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். அந்தவகையில்தான் இதையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.இந்த ஆணையத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் 20 பேர் கொண்ட குழுவை நியமிக்கலாம். அந்தக் குழுக்கள் தொகுதிகளில் களப்பணியில் ஈடுபட்டு, மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, உடனடித் தேவைகளை முன்னிலைப்படுத்தி, அதனை நிறைவேற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதிகள் சரியான முறையில் சரியான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா? எல்லாத் தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறதா? என்பதைக் கண்டறிந்து ஆய்வறிக்கை சமர்பிக்க வேண்டும். இதைப்போல ஆண்டுக்கொரு முறை தொகுதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து "மறுமதிப்பீடு' செய்ய வேண்டும்.
தொகுதி உறுப்பினர் குறித்து பொதுமக்களிடம் நேரிடையாகக் கருத்து கேட்டு, அந்தக் கருத்துகளின் தொகுப்பினை, உறுப்பினர்களுக்கு உணர்த்துடன் செய்தி ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம். ஓர் உறுப்பினர் இரண்டு ஆண்டுகளாகத் தொகுதி மக்களின் நம்பிக்கையிழந்தவராக இருப்பின், சபாநாயகர் துணையுடன் மக்கள் சேவை கண்காணிப்பு ஆணையம் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு வழிவகை காணலாம். இதன்பின் அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இதன்மூலமேனும் வாக்களித்த மக்கள் ஏமாந்து போகாத நிலை வரும். அரசியல்வாதிகளும் கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் பணியாளர்களாக மாறுவார்கள். எனவே அரசியலுக்கு மாற்றுவழி காண்பதைவிட, அரசியலை மாற்றுகிற வழியைக் காண்பதே சிறப்பு.
(இந்த வழி தவறென்றும். இதைவிட சிறந்த மாற்றுவழி இருக்கிறது என்று எண்ணுகிறவர்களும், எந்த வழிவந்தாலும் குறுக்குவழியை அரசியல்வாதிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்றும் கருதுகிறவர்களும் இருந்தால் பதில் எழுதுங்கள். கலந்துரையாடலாம்)

No comments: