Sunday, November 25, 2007

மலேசிய அரசே...மனதை வாசி!

மலேசிய அரசே....மனதை வாசி!
தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(26.11.2007)
செய்தி:
150 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக
மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். இதற்காக
பிரிட்டன் ரூ.16 லட்சம் கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ்
இரட்டைக் கோபுரங்களின் முன்பு, ஹிந்து உரிமைப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடினர். கைகளில்
மகாத்மா காந்தியடிகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு கட்டமாக
பத்தாயிரம் பேர் கையெழுத்திட்ட மனு ஒன்றை பிரிட்டிஷ் தூதரிடம் கொடுக்கவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். இது
சட்டவிரோதமானது என்று இந்த அமைப்பினரை மலேசிய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது. போராட்டக்காரர்கள் மீது
கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதுடன் தண்ணீரைப் பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர். இப்போராட்டத்தால் ஐந்து மணிநேரம் அந்தப் பகுதியே ஸ்தம்பித்து போய்விட்டது. இப்பிரச்சினை தொடர்பாக, "கோரிக்கைகளைப் பெறுவதற்குச் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவது சரியான வழி அல்ல. அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று
அதிகாரத்துக்கு வரலாம்'' என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் அப்துல்லா படாவி.


கேள்வி:


கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தாமல் கொழுக்கட்டை கேட்டா போராட்டம் நடத்துவார்கள்? கேட்கிற உரிமையைக்கூட கொடுக்காத அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்கமுடியும்? போராட்டம்
நடத்தியவர்கள் மீது நடந்த போலீசார் தாக்குதலைவிட மிகக் கொடுமையானது பிரதமர் அப்துல்லா படாவி தந்துள்ள பேட்டி. "போராட்டம் நடத்துவது சரியான வழி அல்ல. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வரலாம்" என்று அவர் பேட்டியளித்திருப்பதைப் பார்க்கிறபோது இப்போது நாங்கள் அதிகாரத்தில் இருக்கிறோம் . இப்போது எங்களுடைய ஆட்சி. இதில் உரிமை கேட்கிற அதிகாரம் யாருக்கும் கிடையாது என்பதுதான் அர்த்தமா? அப்துல்லாவின் கூற்று இதுதான் என்றால் தெருவுக்கு
ஒரு ரவுடி உருவாகி அந்தத் தெருவை நிர்வகிப்பது சரி என்று சொல்கிறாரா? மக்களுடைய உரிமைகளைக் காக்கக்கூடிய அரசே
நீண்டு நிலைத்திருக்க முடியுமே ஒழிய, மக்களை வருத்தும் அரசை மக்கள் தூக்கி எறிய அதிக நாட்கள் ஆகாது. இந்தப் பிரச்சினையில் 150 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடுமைக்கு இப்போது நஷ்ட ஈடு கேட்பது நியாயமா? என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. பாதிப்பு தொடர்கிறபோது கேட்பதில் தவறென்ன இருக்கமுடியும்? இப்போது அம்மை நோய் பெரும்பாலும் வருவதில்லை என்றாலும் பிறந்த குழந்தைக்கு அம்மை ஊசி குத்துவதில்லையா? அதைப்போல்தான் இதையும் எடுத்துக் கொள்ளவேண்டும். போராட்டக்குணம் எங்குப் போனாலும் இந்தியருக்குப் போகாது என்பதற்கு இப்போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு. இறுதியாய் ஒன்று மலேசிய வாழ் இந்தியர்களே! நீங்கள் எல்லோரும் வசதியாய், சந்தோஷமாய் இருக்கிறீர்கள் என்றுதான் இங்கு உள்ளோர் எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குமா?

No comments: