Saturday, November 17, 2007

நடைவண்டிச் சாலைகள்! (2)


ஆடை அளவுகோலா?

ஒருநாள் இரவு பத்தரை மணி. சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் நிற்கிறேன். அழுக்கு ஆடையும், ஒட்டிய தேகமும் உடைய நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் நடைபாதை இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். சோதனை பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இளம்வயது காவலர்கள் அந்த இடத்திற்கு வந்தார்கள். அப்போது அமர்ந்து இருந்தவர், ""மணி என்ன சாரு...'' என்று கேட்டார். அடுத்த நொடி கேட்டவருக்குப் பலமான லத்தி அடி. " டிக்கெட் வைச்சிருக்கியா? எங்க வேலை செய்யிற...'' தொடர் கேள்விக்கணைகளுடன் அடிகள்."ஐயோ...அம்மா'' என்ற அலறலுடன் டிக்கெட்டை எடுத்துக் காட்டி, "கொத்தவால்சாவடியில் காய்கறி விற்கிறேன்'' என்றார். பின்னர், காவலர்கள் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்துவிட்டு, "சரி... போய்யா'' என்று தவறு செய்துவிட்ட சஞ்சலத்துடன் அனுப்பி வைத்தனர். அந்த நபர் அணிந்திருந்த அழுக்கு ஆடை காவலர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படியானால் ஆடை என்பது அளவுகோலா?நகர்புறப் பகுதி பேருந்துகளில் கட்டடத் தொழில் செய்பவர்கள் தங்கள் பணிக்குத் தேவையான சாதனங்களுடன் ஏறுவதைக் காணலாம். இவர்கள் ஏறும்போது சகப் பயணிகள் முகம் சுழிப்பார்கள். இருக்கையில் அமரும்போது கூசி ஒதுங்குவார்கள். தள்ளி நிற்கச்சொல்லி எரிச்சல் அடைவார்கள். அழுக்கான ஆடைக்காகவே, தொழிலாளி அருகில் நிற்க அருகதையற்றவனாக ஆகிவிடுகிறானா?ஆதியில் மனிதன் ஆடையில்லாமல் அலைந்தான். காலவெள்ளத்தில் நாகரீகம் வளர, இலை ஆடை, தோலாடை அணிந்தான். இப்போது நூலாடையும், தோலாடையும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனாலும், இன்றைக்கும் நமது இந்தியாவின் அந்தமான் காடுகளிலும், ஆப்பிரிக்க காடுகளிலும் ஆடையில்லாமல் காட்டு வாழ்க்கை வாழ்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். இதன்காரணம் காலதட்பவெப்பம், நாகரிக அறிவு வாய்ப்பைப் பெறும் வரிûசையில் இவர்கள் கடைசியில் நிற்கிறார்கள். இந்த வாய்ப்பாட்டின் அடிப்படையில் பின்வரிசையில் வந்த காரணத்தாலும், சில அடக்குமுறைகளாலும் மருத்துவராக, பொறியாளராக, விஞ்ஞானியாகப் பிரகாசிக்க முடியாமல் இருக்கிறார்கள். நாம் இமயமலையில் ஏறிவிட்டோம் என்பதற்காக வங்க கடலின் ஆழத்தில் மீன் பிடிப்பவரைக் கேலி செய்வது கேவலம்.மாடமாளிகையில் நாம் அமர, சிமெண்டோடு இரத்தத்தையும் சேர்த்து கலவையாக்கிக் கட்டிக்கொடுப்பவன் தொழிலாளி. அவன் ஆடை அழுக்காகத்தான் இருக்கும். அவன் அழுக்காடை அணிவதால்தான் நாம் வெள்ளாடை அணிகிறோம். பருத்திச் செடியில் இருந்து பஞ்சு எடுக்கிறவன் பட்டாடை அணிந்துகொண்டு எடுக்கமுடியாது. ஆனால் நாம் அணிந்து கொள்ளலாம். அதற்காக நாம் உயர்ந்தவர்கள். அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமல்ல.கழிப்பறையைச் சுத்தம் செய்வோர், தெருவைச் சுத்தம்செய்வோர், சமையல் வேலைக்காரர்கள், வீட்டு வேலை செய்வோர் ஆகியோரின் ஆடைகளைக் கண்டு நாம் குறுகிய கண்ணோட்டத்தோடு அணுகுகிறோம். மேலை நாடுகளில் இவர்களே சிறந்த மருத்துவர்கள் என்று புகழாரம் சூட்டுகிறார்கள். நோய் வந்தபின் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களைக் காட்டிலும் நோய் வராமல் தடுக்கும் இவர் போன்றோரே சிறந்த மருத்துவர் என்கின்றனர். இந்த வகையான கருத்துக்களை விட்டுவிட்டு மேலை நாடுகளிலிருந்து அரைநிர்வாண ஆடைக்குறைப்பு போன்ற கலாச்சார சீரழிவுகளைத்தான் இறக்குமதி செய்துள்ளோம். கூலி வேலை செய்கிறோம் என்பதற்காக அழுக்கான ஆடைதான் அணியவேண்டுமா? துவைத்து அணியக்கூடாதா? என்று கேட்போர் உண்டு. கந்தலைக் கசக்கிக் கட்டினாலும் கந்தல் கந்தலாகத்தான் தெரியும். மகாத்மா காந்தியடிகள், " இந்த நாட்டில் உள்ள எல்லோருக்கும் என்று ஆடை கிடைக்கிறதோ அன்றுதான் மேலாடையே அணிவேன்' என்றார். அதன்படி வாழ்நாள் முழுவதும் மேலாடை அணியாமலேயே இருந்தார். தோழர் ஜீவா மாற்றாடை இல்லாமல் ஓராடையையே தினமும் துவைத்து துவைத்து அணிந்துகொண்டார். பெருந்தலைவர் காமராஜர் ஓரிரு ஆடைகளோடு கஷ்டப்பட்டார். இன்றைய செயற்கைகோள் காலத்திலும் ஜீவா, காமராஜர் போல ஆடைகளுக்கே சிரமப்படும் வசதியற்றவர்கள் நிரம்பப்பேர் இருக்கிறார்கள்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நேர்முகத் தேர்வுகள், உயரதிகாரிகள் நேர்முகத் தேர்வுகள் போன்றவற்றிற்கு வேண்டுமானால் ஆடை என்பது மதிப்பெண்ணாக இருக்கலாம். பள்ளி மாணவர்களுக்கு, காவலர்களுக்கு, முப்படையினருக்கு ஆடை என்பது அடையாளமாக , ஒழுக்கமாக இருக்கலாம். ஆனால் பொதுவாக ஆடை என்பதை மனிதனின் நன்னடத்தையைக் கணக்கிடும் அளவுகோலாகவும், அங்கீகாரம் கொடுக்கும் அளவுகோலாகவும் கொள்ளாதீர்கள்!

No comments: