Saturday, November 17, 2007

நடைவண்டிச் சாலைகள் (5)


விழிகளில் விழுந்ததற்கு விழாவா?

புல், பூண்டு, புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, நடப்பன போன்றவற்றால் இந்தப் பூமியை நிரப்ப முயற்சித்தது இயற்கை (இறைவன்). ஆனால் நிரப்ப இயலவில்லை. இதன் கடைசி முயற்சியாகப் படைக்கப்பட்டதுதான் காதல். ஆதாம்-ஏவாள் ருசித்த விலக்கப்பட்ட கனியின் மிச்சத்தைவிடாமல் ருசிக்கிறோம். எடுக்க எடுக்க வரும் அமுதசுரபியாக ருசிக்க ருசிக்க வளர்ந்து கொண்டே இருக்கிறது விலக்கப்பட்ட கனி. அடிக்கிற புயலில் வேரோடு பெயருகிற மரம்போல வருகிற ஒரு நொடியில் காதல் மனித வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. வருவதற்கு முன், கடற்கோள் (சுனாமி) போல் பின்நோக்கிச் சென்று மவுனயாகம் நடத்தவும் மறப்பதில்லை. உலக அளவில் ஓர் ஒப்பீடு நடத்தினால், எல்லா நாடுகளையும்விட, சற்று அதிகமாக, அழுத்தமாக காதல் கொடியை உயர்த்திப் பிடித்தவர்கள் நாம்தான். அதற்கு சான்று என்றும் மார்க்கண்டேய அழகாய் இருக்கும் தாஜ்மகால். நம்முடைய சங்ககால தமிழறிஞர்கள் இலக்கியங்களை அகம்-புறம் எனப் பிரித்து, அகத்திணை இலக்கியத்தில் காதலைப் பற்றியும், புறத்திணை இலக்கியத்தில் காதல் தொடர்பானவை பற்றியும் பாடியுள்ளனர். இவ்வளவு ஏன்? ஒருதலைக் காதலைப் பற்றி கைக்கிளையிலும், பொருந்தாக் காதலைப் பற்றி பெருந்திணையிலும் பாடி உள்ளனர். ஆண், பெண் போல இரண்டு வரிகளில் உலகிற்கு அறிவு விளக்கு ஏற்றியவர் வள்ளுவர். குறளில் காதலுக்கும் உரிய இடம் ஒதுக்கி, அதிலும் நல்லவை அல்லவைகளை இரண்டாகப் பிரித்துக் காட்டியுள்ளார். இந்தப் பெருமைச் சிறகையெல்லாம் அவிழ்த்து வைத்துவிட்டு சென்னைக்கு வருவோம். சென்னையில் காதலிக்க ஓர் இடம் உண்டா?
நீரில்லாக் காலங்களில் வேடந்தாங்கலுக்குப் பறவைகள் வருவதில்லை. வசந்தப் பிரதேசங்களை நோக்கி தங்கள் சிறகைத் திருப்புகின்றன. ஆனால் மனித காதல் பறவைகள் எங்கே செல்ல முடியும்? இத்துயர் காட்சியினை நீங்கள் எல்லாத் தெருக்களிலும் காணலாம். குப்பைத் தொட்டியோரமோ, சிறுநீர் கழிக்கப்பட்ட இடத்தின் அருகிலோ தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு காதலர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். காதலிக்க இடமின்மையின் காரணமாகத்தான் கிருமித்தொற்றையும் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற பகுதிகளில் நின்று பேசுகிறார்கள் இதைவிட்டால் காதலர்களின் அடைக்கலம் கடற்கரை. அங்கு வெயிலில் காய்வது கருவாடா? காதலர்களா? எனத் தெரியாமல் அமர்ந்து இருப்பார்கள். தூரத்தில் இருந்து பார்க்கையில் உலகத்தையே மறந்து காதலர்கள் இன்புற்று இருப்பதாக நினைக்கத் தோன்றும். உண்மையில், கடற்கரையில் காதலர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் வருத்தத்தை வரவழைக்கக்கூடியது. மிரட்டி பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்கள், உள்ளூர் பிரமுகர்களின் அடாவடி வசூல், சுற்றி அமர்ந்து கொண்டு துருவிதுருவிப் பார்த்து கேலிப் பரிகாசம் புரியும் காலிகள் எனப் பல துயர்களைச் சந்திக்க நேரிடுகிறது. சில காதலர்கள் தாக்கப்படுகிற சூழலும் நிலவுகிறது. இதனால் காதலர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சற்று வசதியான, படித்த காதலர்கள் என்றால் அவர்களின் காதல் வாசஸ்தலம் ஸ்பென்சர் பிளாசா. இங்கு மணிக்கணக்கில் நின்று கொண்டோ, சுற்றிக் கொண்டோதான் பேச முடியும். அதுவும் இல்லாவிட்டால், அங்கு உள்ள ஓட்டல் ஒன்றில் முப்பது ருபாய்க்கு ஒரு தயிர் வடையை வாங்கி வைத்துக்கொண்டு வெகு நேரம் காதல் பேசுகிறார்கள். பொழுது போகப்போக ஓட்டல் ஊழியர்கள் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைப்பார்கள். இதைவிடுங்கள், வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்குப் போவோம். அங்கு காதலர்களுக்கு அனுமதி உண்டா? கிடையாது. இது எழுதப்படாத விதியாகவே உள்ளது. இதற்கு ஊழியர்கள் சொல்கிற காரணம், இங்கு வருகிற காதலர்கள் சிலர் தற்கொலை புரிந்து கொள்கிறார்கள். இதனால் அனுமதிப்பதில்லை என்கிறார்கள். மிருகக் காட்சி சாலையில் யாராவது குடும்பத்தோடு வந்து தற்கொலை செய்து கொண்டால், அதற்காக எல்லோரையும் மிருகக்காட்சி சாலைக்குள் அனுமதிக்காமல் இருக்க முடியுமா? காதலிப்பது கொழுப்பெடுத்த தனம். அதனால் காதலிப்பவர்கள் கஷ்டப்படுவது ஒன்றும் தவறில்லை. அதற்காக காதலிப்பதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டுமா? என்றும் சிலர் கேட்கலாம். அப்படிக் காதலிப்பதற்கு என்று தனி இடம் ஒதுக்கிக் கொடுப்பது ஒன்றும் தவறில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ தனியிடம் ஒதுக்கிக் கொடுத்து, அங்கு யாரையும் அனுமதிக்காமல் இருக்கிறோம். கலாச்சாரத்தை கொலைபுரிகிற சிகப்பு விளக்கு பகுதிக்கு இந்தியாவில் இடம் கொடுத்திருக்கிறோம். அப்படியிருக்கையில் காதலிப்பதற்கு தனி இடம் ஒதுக்கிக் கொடுப்பதில் தவறில்லை. 'காணி நிலம் வேண்டும்' என்று கேட்டான் பாரதி. இப்போது இருந்தால் காணி நிலத்தில் காதலிப்பதற்கும் ஓர் இடம் கேட்டிருப்பான். சில காதலர்கள் வெளிப்புறங்களில் அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொள்வதாக பலர் குற்றம்சாட்டலாம். பூச்சடித்துவிட்டதற்காக பயிர்களையே அழித்து விடுபவன் விவசாயி அல்லன். காதலிப்பதற்கு தனி இடம் ஒதுக்காவிட்டாலும் பரவாயில்லை. காதலிப்பவர்களை ஏளனமாகவோ, கேலியாகவோ அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதையோ நிறுத்துங்கள்.காதல்தான் நம்மை நாகரீகப் பாதைக்கு வழிகாட்டியாக முன்னின்று அழைத்துச் சென்றது. பெண்ணடிமை விலங்கை உடைப்பது காதல். அரசியல்வாதிகளால், ஆன்மீகவாதிகளால் அமைக்க முடியாத சாதிமத பேதமற்ற சமுதாயத்தை அமைப்பது காதல். நிலத்தை வளப்படுத்தும் மண்புழு போல சமுதாயத்தைப் பலப்படுத்துபவர்கள் காதலர்கள்தான். எனவே காதல் புனிதமானது, காதலர்கள் புனிதமானவர்கள். ஆனால் ஒன்று அதற்காக 'காதலர் தினம்' கொண்டாடுவது என்பதெல்லாம் பிசகு. அது மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற கஞ்சா. காதலர் தினம் என்ற பெயரில் அபத்த கூத்து இங்கு அரங்கேறுகிறது. அன்பை வெளிப்படுத்துவதற்கு கொண்டாட்டம் தேவையில்லை. உலக உயிர்களை எல்லாம் வாழ வைக்கிறோம் என்பதற்காக காற்று பெருமை கொள்வதுமில்லை, விழா எடுப்பதுமில்லை.

No comments: