ரஜினியோடு வாளெடுத்து சண்டை போடுவதற்கு இன்னும் அதிக நாள்கள் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. விரைவிலேயே சத்தம் போடலாம்... அவரோடு யுத்தம் புரியலாம்...
ரஜினியோடு மட்டும்தானா? "சிநேகா... அசின்... த்ரிஷா... பாவனா... நமீதா... ஐஸ்வர்யாராயோடெல்லாம் சண்டை போடமுடியுமா?' என்று ஆண்களும், "விஜய்... அஜித்... மாதவன்... சூர்யா... அர்விந்த்சாமியோடெல்லாம் சண்டை போடமுடியுமா?' என்றுதானே பெண்களும் அடுத்த கேள்வி கேட்கிறீர்கள்? (சரி...சரி... மந்திராபேடியையும் சேர்த்துக்கிறேன்...) கவலையை விடுங்கள். இவர்களென்ன? கமல், ஷாரூக், அமீர், ஜாக்கி ஷெராப், நானா படேகர், அமிதாப், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, பிரித்தி ஜிந்தா என யாருடனும் சண்டை போடலாம்.
உங்களுக்காகவே விரைவில் வர இருக்கிறது நடிகர், நடிகைகள் இடம்பெறும் வீடியோ கேம்ஸ்.
டூ வீலர் ரேஸ், கார் ரேஸ், ப்ளைட் சேஸிங், பேய் தீவுக்குள் பயணம், அலாவுதீன், இண்டியானா ஜோன்ஸ் என லட்சக்கணக்கான வீடியோ கேம்கள் இருக்கின்றன. இந்த கேம்கள்தான் இப்போது உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் இனிய உலகம்.
சென்னை நகர் முழுவதும் பரவலாக "வீடியோ கேம்ஸ் பார்லர்கள்' அதிகரித்து இருக்கின்றன. கல்லூரியை "கட்' அடித்துவிட்டு திரையரங்குக்குச் செல்வதுபோல பார்லர்களில் குழுமுகின்றனர்.
"கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் கட் அடித்துவிட்டு வந்து விளையாடுவதைத் தவிர விடியோ கேம்ஸில் ஒரு கெடுதலும் இல்லை. திரைப்படங்கள், சின்னத்திரைகள், பாப் ஆல்பங்கள் என இன்று எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களும் ஆபாசங்களாகிவிட்டன. விடியோ கேம்களில் அந்தக் கெடுதல்கள், சமுதாயச் சீரழிவுகள் எதுவும் இல்லை. (இப்போது ஆபாசக் காட்சிகள் விடியோ கேம்களிலும் வருவதாகச் குற்றசாட்டுகள் அதிகம் வருகிறது) மனதை ஒருமுகப்படுத்த விடியோ கேம்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த இவ்விளையாட்டுகள் இன்று பலமாற்றங்களைக் கண்டிருக்கிறது. எல்லோரையும் கவர்ந்திழுக்கிற வகையில் புதுப்புது விளையாட்டுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
இப்போது அதிகம் விற்பனையாவது பிரபல விளையாட்டு வீரர்களைக் கொண்டு விளையாடும் விடியோ கேம்கள்தான். டபிள்யூடபிள்யூஎப் வீரர்களான ராக், மைக், ஸ்டீவ் ஆஸ்டின் போன்ற வீரர்கள் விளையாடும் விளையாட்டுகள் அதிகமாக விற்பனையாகின்றன. இதைவிட அதிகம் விற்பனையாவது கிரிக்கெட் கேம்கள்தான். சச்சின், லாராவோடு விளையாடுவது போன்ற விடியோ கேம்களுக்குத்தான் அதிலும் அதிக வரவேற்பு.
சச்சின், லாராவின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கே கோடிக்கணக்கான பேர் காத்திருக்கிறார்கள். இதில் அவர்களோடு விளையாடுவது போன்ற அனுபவம் என்றால் சும்மாவா? சச்சினின் அதிரடி சிக்ஸர், ஜாண்டி ரோட்ஸின் டெரிபிக் ஃபீல்டிங், பிராட்னி மார்ஷலின் க்ளோஸப் ஸ்டெம்பிங், முத்தையா முரளிதரனின் புயல்வேகச் சுழற்பந்து வீச்சு, மால்கம் மார்ஷலின் அதிகவேகப் பந்துவீச்சுகள் கவாஸ்கரின் சொதப்பல் பொறுமை என அனைத்தும் ஒருங்கிணைந்த அனுபவத்தை நாம் ஆடுகிறபோது பெறலாம். விளையாட்டு விடியோ கேம்களை அடுத்து த்ரில்லிங் கேம்கள் அதிகம் விற்கின்றன.
ஹாலிவுட் நடிகர்கள் இடம்பெறுகிற ஒருசில விடியோ கேம்கள் இருக்கின்றன. ஆனால் இந்திய நடிகர், நடிகைகள் இடம்பெறுகிற விடியோ கேம்கள் இங்கு இன்னும் வரவில்லை. மொபைல் கேம்ஸில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். விடியோ கேம்களின் உலகம் மிகவும் பிரசித்துப் பெற்று இருப்பதால், நடிகர், நடிகைகள் இடம்பெற்ற விடியோ கேம்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது உருவாக்கப்படுகிற விடியோ கேம்கள் அனைத்துமே அமெரிக்காவில் உருவாக்கப்பபவை. அவர்கள் உருவாக்குகிற அந்த ஒரிஜினல் சி.டி. அதிக விலையாகும். ஆயிரக்கணக்கான ரூபாயாகும். அந்த ஒரிஜினல் சி.டி. இங்கு எங்கும் கிடைப்பதும் இல்லை. யாரும் வாங்குவதற்கும் முன்வரமாட்டார்கள். இங்கு விற்கிற எல்லா சி.டி.களுமே சைனாவிலிருந்து வருகிற சி.டி.க்கள்தான். அமெரிக்காவில் விடியோ கேம்ஸ் சி.டி.க்கள் உற்பத்தியாகிற அதேநேரத்தில் சைனாவில் டூப்ளிகேட் சி.டிக்களும் தயாராகி விடுகின்றன. அதைத்தான் விற்கிறோம். இந்திய நடிகைகளைக் கொண்டு அமெரிக்கர்கள் விடியோ கேம்கள் செய்யமாட்டார்கள். மொபைல் கேம்ஸ்களில் வருவதுபோல இங்கு யாராவது உருவாக்கினால்தான் உண்டு'' என்கிறார் சென்னை ரிச்சி தெருவில் விடியோ கேம்ஸ் பிளேயர், சி.டி விற்கும் கடை வைத்திருக்கும் ரமேஷ்.
விடியோ கேம்ஸ் வருகிறதோ இல்லையோ? இப்போது மொபைல் கேம்ஸில் நடிகைகள் இடம்பெறும் கேம்கள் பிரபலமடைந்து விட்டன. இப்போது இந்த மொபைல் கேம்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பி விளையாடுகிற விளையாட்டாக சமீரா ரெட்டி, மலாய்க்கா அரோரா, பிபாஷா பாசு போன்றோர் தோன்றுகிற கேம்கள் பிரபலமாக இருக்கிறது. இதில் சமீரா ரெட்டியின் கேம்ஸ் மிகவும் த்ரில்லிங்காகவும், விறுவிறுப்பாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப்போல மலாய்க்கா அரோரா தோன்றும் கேம்ஸ் சக்கைப்போடு போடுகிறது. இந்த விளையாட்டுகளைத் தயாரித்திருப்பவர்கள் இந்தியாவின் முதல்தர விளையாட்டு நிறுவனமான "பாரடாக்ஸ்'. இப்போது ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி மொபைல் போன்களிலும் இச் சேவை இருக்கிறது. இந்த ஆட்டம் விளையாடுகிறவர்களில் அதிக ஸ்கோர் பெறுகிற 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நடிகை சமீரா ரெட்டியைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்கள்.
"நானும் ஒரு வீடியோ கேம் பிரியைதான். இப்படி ஒரு மொபைல் கேமின் முதல் ஹீரோயினாக என்னைத் தேர்வு செய்திருப்பது மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன்.'' என்கிறார் சமீரா.
திரைப்பட ரசிகர்கள்போல இந்த கேம்ஸில் தோன்றுகிற நடிகைகளுக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. படத்தில் வருகிற கேரக்டர்களின் பெயரைக் கொண்டு, "சீயான்' விக்ரம், "காதல்' சந்தியா என்று அழைப்பதுபோல இவர்கள் கேம்ஸ் கேரக்டர்களின் பெயர்களைக் கொண்டு நடிகைகளை அழைக்கிறார்கள். இப்போது வந்துள்ள மொபைல் கேம்ஸில் ரசிகர்களுக்கு மட்டும்தான் கொண்டாட்டம் என்றில்லை. இதில் தோன்றுகிற நடிகைகளுக்கும் லாபம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மொபைல் கேம்களில் தங்கள் தோற்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒரு வருடம் இரண்டு வருடத்திற்கு அனுமதித்து அதற்கு தனியாக நடிகைகள் பணம் கறந்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது. பாலிவுட் நடிகர் நடிகைகளைத் தொடர்ந்து கோலிவுட் நடிகைகளுக்கு மொபைல் கேம்களில் தோன்றுகிற பாதிப்பு ஏற்படாமல் இருக்கப் போவதில்லை. பெரியதிரையில் தோன்றிய நடிகைகள் யாரும் சின்னத்திரை பக்கமே வரமாட்டார்கள் என்றுதான் முதலில் கருதினோம். வாய்ப்பு கிடைக்காத நடிகர், நடிகைகள் எல்லாம் இப்போது சின்னத்திரைக்குப் படையெடுக்கவில்லையா? சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைக்காத பட்சம், மொபைல் கேம்ஸ், விடியோ கேம்ஸில் தங்கள் தோற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு அனுமதிக்கிற நிலைக்கு வரலாம்.
மார்க்கெட் இல்லாத நடிகர், நடிகைகள் எல்லாம் இப்படி இறங்கி வரலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லாம் இதற்கு எப்படி அனுமதிப்பார் என்பதுதானே உங்கள் சந்தேகம்?
ரஜினிகாந்த் அவரது மகள் செளந்தர்யா எடுக்கும் "சுல்தான்' என்ற அனிமேஷன் படத்தில் நடிக்கவில்லையா? இதற்கு இறங்கி வந்தவர், அடுத்தகட்டமாக மொபைல் கேம்ஸ் பக்கம் வரமாட்டார் என்பது மட்டும் என்ன நிச்சயம்?
No comments:
Post a Comment