"இருந்தாலும் அதிதியின் விரல்களாக இருக்கவேண்டும்'
- ஹிந்துஸ்தானிய சாஸ்திரீய இசையை அவர் கீ போர்டில் இசைக்கிறபோது இப்படித்தான் பலர் சொல்கிறார்கள்!
கீ போர்டு மேற்கத்திய இசைக்கருவி. இதில் அமைக்கப்பட்டுள்ள இசைக்கருவிகளின் ஒலிகள்; தாள ஒலிகள் யாவும் மேற்கத்திய இசைக்கேற்ப இசைபவை!
இசைக்கு மனிதர்கள் மட்டும்தான் வசமாவார்களா? கீ போர்டு ஆகாதா?
ஏழு ஸ்வரங்களில் எண்ணற்ற இராகங்களைப் படைப்பதுபோல மேற்கத்திய இசைக்கருவியான கீ போர்டில் அவரவர் இசைமுறைகளுக்கேற்ப ஒலிகளைத் தேர்ந்தெடுத்து இசைக்கிறார்கள்!
மூன்று முதல் நான்கு ஆக்டேவ்களைப் பயன்படுத்தி கீ போர்டில் கர்னாடக இசையை வாசிக்கிறார்கள். அந்த வரிசையில் ஹிந்துஸ்தானி இசையை வாசிக்கும் தமிழகத்தின் முதல் பெண் அதிதி! ஹிந்துஸ்தானி இசையில் சந்தூர் ஸ்டைல் இவர் ஸ்பெஷல்!
இசையோடு, எஸ்.ஆர்.எம். ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வருடம் படித்து வருகிறார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைகிறபோது ஹிந்துஸ்தானி இசையே நம்மை வரவேற்று அழைத்துச் செல்கிறது.
இசையைப் பின் தொடர்ந்தோம்... நீங்களும் தொடருங்கள்!
""ஹிந்துஸ்தானி இசைதான் எங்கள் குடும்பத்தின் உயிர்மூச்சு. ஹிந்துஸ்தானி இசையை எனக்கு அறிமுகப்படுத்தியது அப்பாதான். முன்பு வடமாநிலங்களில் அப்பா பிசினஸ் செய்துகொண்டிருந்தார். வடமாநிலங்களில் ஹிந்துஸ்தானி இசைக்குத்தான் முதலிடம். மவுசு அதிகம். ஆரம்பத்தில் சாதாரணமாய் கேட்கத் தொடங்கி, போகப்போக மற்ற இசைகளைவிட ஹிந்துஸ்தானி இசை மீது அப்பாவுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அந்த ஆர்வம் தமிழகத்திற்கு வந்த பிறகும் அவருக்குக் குறையவில்லை. வீட்டில் ரேடியோ, டிவி என எதுவும் ஓடாது. எந்நேரமும் ஹிந்துஸ்தானி இசைக் கேசட்தான் ஓடிக்கொண்டிருக்கும். சின்ன வயதிலிருந்தே கேட்டுக் கேட்டு எனக்கும் ஹிந்துஸ்தானி இசை மீது தணியாத காதல் வந்துவிட்டது.
கீ போர்டு வாசிக்கத் தொடங்கியதும் கிட்டத்தட்ட இப்படித்தான். விளையாடுவதற்காக சின்ன கீ போர்டு ஒன்று வாங்கிக் கொடுத்திருந்தார் அப்பா. அதை வைத்துதான் எப்போதும் விளையாடிக்கொண்டிருப்பேன்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு விளையாட்டு போரடித்து கீ போர்டு வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. கீ போர்டு வாசிப்பது பற்றிய புத்தகங்கள் வாங்கி நானே வீட்டில் தினமும் பயிற்சி செய்துகொண்டிருந்தேன். இந்த நிலையில் கீ போர்டில் கர்னாடக இசையை வாசிப்பது பற்றி கேள்விப்பட்டேன். இதையடுத்து நமக்குப் பிடித்த ஹிந்துஸ்தானி இசையை கீ போர்டில் வாசிக்க ஏன் முயற்சிக்கக் கூடாது என்று தோன்றியது. முயற்சித்தேன். பல நாள் பயிற்சிக்குப் பிறகு கைகூடியது.
இந்துஸ்தானி இசையை வாசிப்பதற்கு என்றுள்ள பிரத்யேகமான வாத்தியங்களில் இசைப்பதற்கும் கீ போர்டில் வாசிப்பதற்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை. கீ போர்டில் ஐந்து ஆக்டேவ்களையும் பயன்படுத்தி வாசிக்கிறேன். கீ போர்டில் வாசிக்கிறபோது கமகம் வந்தாலும் முழுத் திருப்தியாக இருக்காது. இதனால்தான் ஹிந்துஸ்தானி இசையை சந்தூர் ஸ்டைலில் வாசிக்கிறேன். சந்தூர் ஸ்டைலில் கமகம் இல்லாமலேயே கமகம் இருப்பதுபோல இருக்கும்.
ஹிந்துஸ்தானியை நானே கற்றுக்கொண்டாலும் சிறப்புப் பயிற்சியாக "பாரத ரத்னா' பண்டிட் ரவிசங்கரின் முதன்மை மாணவர், சந்தூர் கலைஞர் பண்டிட் ஜனார்த்தன மிட்டாவிடம் கற்று வருகிறேன்.
வாய்ப்பாட்டாகக் கற்றுக் கொள்ளவில்லை. எனக்கு வாய்ப்பாட்டும் அவ்வளவாக வராது. சந்தூர் கருவியில் அவர் இசைப்பார். அதை நான் அப்படியே கீ போர்டில் வாசித்துப் பயிற்சி பெறுகிறேன். அதைப்போல கர்னாடக சங்கீதமும் கற்றிருக்கிறேன். வாய்ப்பாட்டுக் கலைஞர் கே.என். சசிகிரனிடம் இரண்டரை வருஷம் கற்றுக்கொண்டேன். இவர்களிடம் கற்றுக்கொள்வதையெல்லாம் கீ போர்டில் எப்படியெல்லாம் புகுத்தி இசைக்க முடியுமோ? அதைத் தினமும் வெவ்வேறு முறைகளில் முயற்சித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
இசை ஒரு கடல். அதுக்கு எல்லை என்றே ஒன்று இல்லை. இசைத் தேடல் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அதை நான் கீ போர்டு மூலம் ஹிந்துஸ்தானி இசையில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கீ போர்டில் ஹிந்துஸ்தானி இசையை வாசிப்பதற்கு இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஹிந்துஸ்தானி
கலைஞர்களும் இங்கு குறைவு. கேட்பவர்களும் குறைவு. இதனால்கூட இன்னும் எதிர்ப்பு வராமல் இருக்கலாம். என்னளவில் எந்தத் தப்பும் இல்லாமல் வாசிக்கிறேன். வடமாநிலங்களில் விரைவில் இசைக் கச்சேரி செய்யத் திட்டமிட்டுள்ளேன். அப்போது விமர்சனம் வரலாம். வராமலும் இருக்கலாம்.
இப்போது எனக்குக் கிடைப்பது பாராட்டுதான். பலரிடம் இருந்து பாராட்டுகள் வந்தாலும் நான் பெருமையாய் கருதுவது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சார் பாராட்டைத்தான். என்னுடைய ஃபேவரட் இசையமைப்பாளர் அவர். தமிழ்த் திரைப்படப் பாடல்களில் ஹிந்துஸ்தானிய இசையை அதிகளவில் பயன்படுத்தியது அவர்தான். அவர் இசையமைத்த பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "நிலவே என்னிடம் நெருங்காதே' பாடலும் "மலருக்குத் தென்றல் பகையானால்' பாடலும்! இந்த இரண்டு பாடலும் பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்தவை. எனக்குப் பிடித்த ராகமும் பாகேஸ்ரீதான்.
டிசம்பர் மாத இசைவிழாவின்போது நான் கீபோர்டில் இசைக்கச்சேரி நடத்தினேன். இதற்கு எம்.எஸ். விஸ்வநாதன் சார் வந்திருந்தார். நான் வாசித்ததைக் கேட்டு பாராட்டிவிட்டு, அவர் இசையமைத்த "அன்றொரு நாள் இதே நிலவில்' பாட்டை வாசிக்கச் சொன்னார். இது "தேஷ்' ராகத்தில் அமைந்த பாடல். கேட்ட உடனே வாசித்துக் காட்டினேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். என்னைப் பாராட்டி இன்னும் பெரிய ஆளாய் வருவாய் என்று வாழ்த்தினார். இந்தப் பாராட்டுதான் எனக்குக் கிடைத்த பாராட்டுகளிலேயே பெரிய பாராட்டு.
எம்.எஸ். சார் சொன்னதுபோல நிச்சயம் ஹிந்துஸ்தானி இசையில் நான் பெரிதும் சாதிப்பேன். எனக்குத் திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. இசையை மையப்படுத்திய படமாக இருந்தால் வாசிப்பேன். இப்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருக்கிறேன். படிப்பு முடிந்ததும் என் முழு நேரத்தையும் இசைக்காகவே செலவிடப் போகிறேன். தென்னிந்தியாவில் ஹிந்துஸ்தானி இசைக்கு மவுசு இல்லை. அதைப் பிரபலப்படுத்துகிற பணியில் ஈடுபடப் போகிறேன். இதுதான் என் இலட்சியம். அதைப்போல இசை மூலம் நோய்களைத் தீர்க்கும் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். அதற்காக பிரத்யேக முறையில் இசைக்க முடியுமா என்றெல்லாம் ஆராய்கிறேன்'' என்கிறார் கிளியாய் அதிதி!
1 comment:
இந்துஸ்தானிய இசையில் அதிதியின் ஆர்வம் அதி தீவிரமாகத்தான் தெரிகிறது எனக்கு. இது போன்று இந்துஸ்தானிய இசையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நாம் நிச்சயம் ஈடுபட் வேண்டும். அதிதிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுக்கும்தான்....
Post a Comment