தொல்பொருள் ஆய்வாளரின் மனைவியாக இருந்தால்?
கொட்டாவி விரட்டும்
மிட்டாய்கள்.
(30.11.2007)
பிரிட்டீஷ் பிரதமராக இருந்தவர் லாயிட் ஜார்ஜ். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவன் எழுந்து, லாயிட் ஜார்ஜை மட்டம் தட்டும் பொருட்டு, " கழுதை வண்டியை ஓட்டியவர் உங்கள் தாத்தா என்பது நினைவிருக்கிறதா?'' என்றான். கூட்டத்தில் ஒரே சலசலப்பு. லாயிட் ஜார்ஜ் பதற்றப்படவில்லை. கோபப்படவில்லை. சாதாரணமாகச் சொன்னார்: என்னுடைய தாத்தாவின் வண்டி போன இடம் தெரியவில்லை. கழுதை மட்டும் கிடைத்துவிட்டது.''
***
விஞ்ஞானத்துடன் நன்றாக வயலினும் வாசிக்கத் தெரிந்தவர் ஐன்ஸ்டீன். ஒருமுறை தனது நண்பர்களுக்கு மத்தியில் வயலின் வாசித்துக் காட்டினார். ஹங்கேரி நாட்டு நகைச்சுவை நடிகரான மோல்நார் மட்டும் ஐன்ஸ்டீனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தார். வயலின் வாசித்து முடித்த பிறகு ஐன்ஸ்டீன், மோல்நாரைப் பார்த்துக் கேட்டார்: " நான் வயலின் வாசிக்கும்போது சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே... என்றைக்காவது நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதைப் பார்த்து, நான் சிரித்திருப்பேனா?''
***
"மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் என்ன ஆயுதம் வீசுவார்கள்?'' என்று ஐன்ஸ்டீனிடம் நண்பர் ஒருவர் கேட்டார். அதற்கு ஐன்ஸ்டீன் சொன்னார்: "மூன்றாம் உலகப்போரில் என்ன ஆயுதம் வீசுவார்கள் என்று தெரியவில்லை. நான்காவது உலகப்போரில் வேண்டுமானால் என்ன ஆயுதம் வீசுவார்கள் என்று தெரியும். கல், ஈட்டி, அம்புதான் எறிவார்கள். ஏனென்றால் மூன்றாம் உலகப்போர் நடந்தால் மனிதர்கள் இருப்பார்களா என்பதே சந்தேகம். ஆதி வாழ்க்கையிலிருந்துதான் மனித வாழ்வு திரும்பத் தொடங்கும்.''
***
ஆங்கிலத் துப்புறியும் நாவலாசிரியர் அகதா கிறிஸ்டி. தொல்பொருள் ஆய்வாளர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். பத்திரிகையாளர் ஒருவர் அகதா கிறிஸ்டியிடம், "தொல்பொருள் ஆய்வாளரை மணந்து கொண்டதால் நன்மை ஏதும் உண்டா?"" என்று கேட்டார். அதற்கு அகதா சொன்னார்: "எல்லா ஆண்களுக்கும் மனைவிக்கு வயது ஆகஆக அவர் மேல் உள்ள ஆர்வம் போய்விடும். ஆனால் தொல்பொருள் ஆய்வாளர், மனைவிக்கு வயது ஆகஆகத்தான் அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்.''
***
2 comments:
சிந்திக்க வைக்கும்...
பகிர்வுக்கு நன்றி ,
நன்றி.
Post a Comment