காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பதும், அவர்களுக்கு ஆதரவாகப் பேரணி, கூட்டங்கள் நடத்துவதும் சட்டப்படி குற்றம், அவ்வாறு செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறைத் தலைவர் எச்சரித்திருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில் கடந்த சில காலமாக முகாம்களில் இருந்து விடுதலைப்புலிகள் தப்பிச் செல்வது, கடல்புலிகள் கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இவை எல்லாம் கவலையளிக்கின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். விடுதலைப்புலிகள் அல்லாத மற்ற போராளிகளின் தலைவர்கள் அமிர்தலிங்கம் போன்ற தமிழர் இயக்க தலைவர்கள் மரணத்திற்கும், கருணா பிரிவுக்கும் காரணம் பிரபாகரன்தான். இந்தவகையில் இப்போது தமிழ்ச்செல்வன் மரணத்திற்கும் பிரபாகரன்தான் காரணம். கடைசிக் காலங்களில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பெயரில் எந்த அறிக்கைகளும் வரவில்லை. தமிழ்ச்செல்வனுக்கு பிரபாகரனுக்கு ஈடாக பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவர் அலுவலகத்துக்கு வருகிற நேரமும், செல்கிற நேரமும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு நேரமுமாக இருக்கும். அவர் கொல்லப்பட்ட அன்று அதிகாலை ஆறு மணிக்கு முக்கிய தலைவர்களுடன் தமிழ்ச்செல்வன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பது இலங்கை ராணுவத்திற்கு எப்படித் தெரியும். அவர் கொல்லப்பட்ட தகவல் வெகு சீக்கிரமே எப்படி வெளியானது. இலங்கை இராணுவம் ஓர் இடத்தில் குண்டு வீசி தாக்கினால் அதனை அவர்கள் ஒப்புக்கொண்டு தகவல் வெளியிடுவார்கள். ஆனால் இதில் அப்படி எந்தத் தகவலும் வெளியிடவில்லை. இலங்கை தமிழர்கள் கூற்றுப்படி, எனக்குக் கிடைத்த தகவல்படி அவர் மரணத்திற்குக் காரணம் பிரபாகரன்தான். இதனை ஏதோ வீரமரணம் அடைந்துவிட்டதாகக் கூறி திசை திருப்பப் பார்க்கிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தை யார் ஆதரித்தாலும் அதனை ஏற்க முடியாது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்பதற்காகத் தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பற்றி இவர்கள் எதிர்த்துப் பேசிக்கொண்டிருப்பதும் தவறில்லையா? இயக்கங்களுக்குத் தடைவிதிக்கலாம். ஆனால், இயக்க ரீதியான கருத்துகளைச் சொல்ல... அதை எதிர்த்துக் குரல் கொடுக்க யாருக்கும் தடை விதிக்க முடியாது.
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியைப் படித்தால், ஏதோ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த ஓர் அமைப்பிலிருந்து பேசுவதுபோலவும் அல்லது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள சிலரோடு அவருக்குத் தொடர்பு இருப்பது போலவும், அவர்கள் கொடுத்தத் தகவலின்படிதான் தமிழ்ச்செல்வனை பிரபாகரன் கொன்றதாகத் தகவல் தருவதுபோலவும் பேட்டியளித்திருக்கிறார்.
இந்திய அளவிலான விவகாரங்கள் பற்றி பேசுகிறபோது எனக்குத் தகவல் கிடைத்தது என்று ஒருவர் சொன்னால், அந்தத் தகவலை ஒரு தொண்டர் கொடுத்திருக்கலாம். ஓர் அதிகாரி கொடுத்திருக்கலாம். ஒரு மந்திரி கொடுத்திருக்கலாம். சம்பந்தப்பட்டவரே நேரிடையாகச் சென்று பார்த்திருக்கலாம் அல்லது புலனாய்வுக் காவலர்கள் விசாரித்துத் தகவல் தந்திருக்கலாம். இது எதுவுமே இல்லாமல் விடுதலைப்புலிகளுக்கு இடையே நடைபெறும் கலக அரசியல் இவருக்கு எப்படித் தெரிந்திருக்கும்? அதுவும் இவர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் எதிர்த்துப் பேசி வரக்கூடியவர். தமிழக மக்களோடு புழங்குகிற இலங்கை அரசுக்கே இவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எஸ்.ஆர்.பியால் மட்டும் எப்படி முடிந்தது என்று தெரியவில்லை. பிரபாகரனை எதிரியாகக் கருதுகிற எஸ்.ஆர்.பி. இலங்கை அரசுக்கு உதவ முன்வந்தால் ஓரிரு நாட்களிலேயே பிரபாகரனின் கொட்டத்தை அடக்கிவிடலாம் .
அதேசமயம் எஸ்.ஆர்.பி. அளித்துள்ள பேட்டியில் ஒரு விஷயத்தை மட்டும் எல்லோரும் யோசித்துப் பார்த்தார்கள். தமிழ்ச்செல்வன் இருந்த இடம் தேடி குண்டு போட்ட இலங்கை இராணுவம், பிரபாகரன் மீது போடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? இப்படி நினைத்துப் பார்த்து அடிவயிறு வரை நடுங்கிப் போனவர்கள் எத்தனை பேர்? ஆனால் பிரபாகரனும் தமிழ்ச்செல்வனின் மனைவியும் நடுங்கியதாகத் தெரியவில்லை. தமிழ்ச்செல்வன் இறந்த இடத்திற்கு பிரபாகரன் நேரடியாகவே சென்றார். மரியாதை செலுத்தினார். தமிழ்ச்செல்வனின் மனைவி தன்னுடைய தாலியைக் கழற்றி கணவன் உடல் மீது வைத்து ஒரு போராளியாகவே மரியாதை செலுத்திய புகைப்படம் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்தது.
அந்தப் பெண் போராளியின் கண்களில் கண்ணீர் வந்ததாகத் தெரியவில்லை. அவர் இன்னும் போராளியாகத்தான் அந்த இயக்கத்தில் இருக்கிறார். ஒருவேளை பிரபாகரன், உண்மையில் தமிழ்ச்செல்வனைக் கொன்றிருந்தால் அவரது மனைவி எப்படி அமைதியாக இருக்க முடியும்?
மிரட்டியிருப்பார்கள் என்று குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது. போராளிகள் யாரும் பயப்படுவதில்லை என்பதை விடுதலைப்புலிகள் இயக்கம் உலகிற்குக் காட்டியிருக்கிறது. வெடிகுண்டு உடலில் இறங்கப்போவது என்பது அவர்களுக்குத் திண்ணம் . அது இலங்கை இராணுவக் குண்டாகயிருந்தால் என்ன? விடுதலைப்புலிகளுடைய குண்டாகயிருந்தால் என்ன? என்று தன் கணவன் வஞ்சமாகக் கொல்லப்பட்டிருந்தால் ஒரு மனைவி முடிவு எடுக்கமாட்டாளா என்ன? எஸ்.ஆர்.பி சொல்வதுபோல பிரபாகரன் திட்டமிட்டு கொன்றிருந்தால் நாளை இதுபோல் நாமும் கொல்லப்படலாம் என்று பிரபாகரனின் அருகிலேயே இருப்பவர்கள் அவரைக் கொல்லத் திட்டம் போடமாட்டார்களா என்ன? இது தெரியாமலா போராளிகள் இயக்கம் நடத்துகிறார் பிரபாகரன்?
ஆனால் ஒன்று பிரபாகரன் ஏற்கனவே செய்த பல துன்பியல் சம்பவங்களால்தான் எஸ்.ஆர்.பிக்கு இப்படி வெறும் வாயில் அவல் மெல்லுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
1 comment:
may be that is why lot of "traitors" are coming up from praba's camp
maththaya,
Karuna,
TamilCelvan,
may be tomorrow Chelvan's wife..
who said she is chelvan' wife for "real"..what if she likes praba?
Post a Comment