Wednesday, December 26, 2007

'ஜிம்'முக்குப் போகும் குழந்தைகள்!


மி ஸ்.வேர்ல்டு, மிஸ்.யுனிவர்ஸ், மிஸ்டர்.ஏசியா, மிஸ்டர்.இந்தியா பட்டங்களைப் பெறும் கனவோடு சுற்றும் டீன்ஏஜ்கள் "ஜிம்'க்கு படையெடுப்பது அவசியம். ஆறுமாதக் குழந்தைகள் "ஜிம்'க்குப் போக வேண்டிய அவசியமென்ன?

சென்னை மைலாப்பூரில் குழந்தைகளுக்காகவே ஒரு "வெனிலா சில்ட்ரன் ப்ளேஸ்' என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய "ஜிம்' மற்றும் ஷாப்பிங் தொடங்கியுள்ளனர். இதில் குட்டீஸ்களோடு அவர்களின் அம்மாக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனைத் தொடங்கியிருப்பவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இஃபாத் அகாம்.

"மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்திருந்தேன். இங்கு குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மகிழ்ந்து விளையாட ஒரு நிம்மதியான இடம் இல்லை என்று எனக்குப்பட்டது. எங்குப் பார்த்தாலும் ஒரே கூட்டம். நெரித்துக்கொண்டே குழந்தைகளை எடுத்துப் போக வேண்டியிருந்தது. கடைகளுக்குள் நுழையும்போதே தாய்மார்கள் குழந்தைகளை, "இதைத் தொடக்கூடாது. அதைத் தொடக்கூடாது' என்று மிரட்டியபடியே அழைத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். குழந்தைகளின் இயல்பு துள்ளித் திரிவது. கண்ணைப் பறிக்கிற வண்ணப் பொருள்களைக் கண்டால் உடனே அதை எடுத்துப் பார்ப்பதுதான்.



இந்தச் சாதாரண இயல்பைக்கூட குழந்தைகள் பெறமுடியாத நிலை இருந்தது. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த சில்ட்ரன் ப்ளேûஸத் தொடங்கி உள்ளோம். இது குழந்தைகளுக்கானது மட்டும் என்று கருதிவிடக்கூடாது. இங்கு தாய்மார்களும் பயன்பெறுகிற வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதுபோன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய ஓர் இடம் இந்தியாவிலேயே இல்லை. எங்களின் இந்த ஆரோக்கிய ஜிம்மில் உறுப்பினராவதற்கு 200 ரூபாய். ஒருமணிநேரத்திற்கான கட்டணம் 100 ரூபாய்.



குழந்தைகளுக்கு முக்கியமாய் நாங்கள் வைத்திருப்பது வெனிலா "பீன்ஸ்' என்ற பெயரில் விளையாட்டுப் பயிற்சி பெறும் ஜிம். இது பிரத்யேகமாய் குழந்தைகளுக்காகவே அமைக்கப்பட்டவை. மலரைப் போன்று மென்மையானவர்கள் குழந்தைகள். இவர்கள் கனமானப் பொருள்களில் விளையாடுகிறபோது, லேசாகத் தடுமாறி விழுந்தால்கூட சிராய்ப்போ அடியோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நாங்கள் அமைத்திருக்கிற ஜிம்மில் குழந்தைகள் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அடிபடாது. இந்தச் சாதனங்கள் எல்லாம் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. பஞ்சு போன்ற மென்மையான பொருட்களால் ஆனவை. உடல்ரீதியான வளர்ச்சி மற்றும் மனரீதியான வளர்ச்சியை இதில் விளையாடும் குழந்தைகள் பெறுவார்கள். நன்கு அறிவு வளர்ச்சி பெற்ற குழந்தைகளாகவும் உருவாகுவார்கள். கண்ணைப் பறிக்கிற வண்ணத்திலே இந்தச் சாதனங்கள் இருப்பதால் குழந்தை
களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இந்தச் சாதனங்களில் குழந்தைகள் எப்படி விளையாட வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பதற்கும் ஒரு பயிற்சியாளரை வைத்திருக்கிறோம். அந்தப் பயிற்சியாளரும் இஸ்ரேலில் இருந்து வந்தவர்தான்.



இந்த ஜிம்மின் மற்றொரு சிறப்பம்சம். குழந்தைகள் விளையாடுகிறபோது அவர்களின் அம்மாக்களும் அருகில் இருப்பதுதான். வேறு எங்கும் இப்படி அனுமதிப்பது இல்லை. ப்ளே ஸ்கூல்களில் குழந்தைகளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இங்கு அப்படி முடியாது. தாய்மார்கள் அருகிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதற்காக இது ப்ளே ஸ்கூல் என்று அர்த்தமில்லை.



ஒரே இடத்தில் எப்படி அமர்ந்திருக்க முடியும் என்று சில தாய்மார்கள் கவலைப்படலாம். இது ஒரு பிரச்சினையே இல்லை. குழந்தையை விளையாடவிட்டுவிட்டு, ரிலாக்சாக உங்கள் வேலையைச் செய்யலாம்.
இங்கேயே இன்டர்நெட் வசதி உள்ளது. இதில் உங்கள் பணியைச் செய்யலாம். உணவு விடுதி ஒன்று உள்ளது. இதில் சாப்பிடலாம். மசாஜ் மையம் உள்ளது. மசாஜ் செய்து கொள்ளலாம்.



ஜிம்மைப் போலவே வெனிலா ட்ரீ என்று ஒரு பயிற்சி மையம் உள்ளது. இது தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் குடும்ப இணைப்பை வலுப்படுத்தக்கூடிய அமைப்பாகும். இஸ்ரேல் போன்ற நாடுகளில்தான் இந்த அமைப்பு தேவையாக இருந்தது. இப்போது இந்தியாவிலும் தேவையான ஒன்றாகிவிட்டது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை இங்கேயும் இல்லாமல் போய்வருகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த மையம் அமைத்திருக்கிறோம்.

இங்கு மியூசிக், நாட்டியம் உட்பட எல்லாம் சொல்லிக்கொடுக்கிறோம். தாயும் பிள்ளைகளும் சேர்ந்து இங்கு பயிற்சி பெறுகிறபோது ஒரு குடும்பப் பிணைப்பு இன்னும் அதிகமாகிறது. தாய்மார்களுக்கும் பல்வேறு வேலை பளுவிலிருந்து விடுதலை கிடைக்கிறது. மனரீதியாக அவர்கள் பெரியளவில் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். இதைப்போலவே கர்ப்பிணிப் பெண்களுக்கும் யோகா சொல்லிக்கொடுக்கிறோம். குழந்தை வளர்ப்புக்குத் தேவையான எல்லாப் புத்தகங்களும் வாங்கி வைத்துள்ளோம். அதோடு குழந்தைகளுக்கான விசேஷ ஃபர்னிச்சர்களும் செய்து விற்கிறோம்.



இந்த ஷாப்பிங்கை இன்னும் விரிவாக்கவும் ஆசை உள்ளது. குழந்தைகளுக்குத் தேவையான உலகத்திலுள்ள எல்லாப் பொருட்களும் கிடைக்கிற வகையில் ஷாப்பிங்கை விரிவுப்படுத்தவும் விருப்பம் உள்ளது. இதைப்போல இந்த மையத்தை இந்தியா முழுவதும் தொடங்கவும் விருப்பமுள்ளது.'' என்கிற இஃபாத் அகாமுக்கு மூன்று குழந்தைகள். "வெனிலா சில்ட்ரன் ப்ளேஸ்' நாலாவது குழந்தை!

No comments: