Monday, December 3, 2007

புயற்பறவை பற்றிய பாடல்


புயற்பறவை பற்றிய பாடல்
(செவ்வியல் சிறுகதை)
மக்சிம் கார்க்கி
(1868-1936)
சோவியத் ருஷ்யாவின்
மிகச்சிறந்த படைப்பாளி.
இவரது 'தாய்' நாவல்
உலகப் புகழ்பெற்றது.


வெள்ளி போன்ற பெருங்கடலுக்கு மேலாகக் காற்று புயல் மேகங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறது. மேகங்களுக்கும் பெருங்கடலுக்கும் இடையே கருநிற மின்னல் கீற்றைப் போல புயற்பறவை பெருமையுடன் பறக்கிறது.
ஒரு நேரம் அதன் இறக்கையை அலை சீராட்டுகிறது. மறுநேரம் அது ஓர் அம்பு போல எழுந்து மேகங்களைக் கிழித்துக்கொண்டும் பயங்கரமாகக் கத்திக்கொண்டும் செல்கிறது. அதே வேளை மேகங்கள் பறவையினுடைய துணிச்சல் மிக்க கதறலில் ஓர் ஆனந்த பரவசத்தைக் காண்கின்றன.
இந்தக் கதறலில் புயற்காற்றுக்கான பேரவா ஒலிக்கிறது! இக்கதறலில் கோபத்தின் சக்தியை, கொழுந்து விட்டெரிகிற உணர்ச்சியை, வெற்றியில் உள்ள நம்பிக்கையை மேகங்கள் காண்கின்றன.
கடற்பறவைகள் அச்சத்தில் புலம்புகின்றன - புலம்பி கடலுக்கு மேலாக அங்குமிங்கும் அலைந்து, பெருங்கடலின் கருமைநிற ஆழத்திலே அச்சத்தை மறைக்கத் தயாராக இருக்கின்றன.
நீர்மூழ்கிப் பறவைகளும் புலம்புகின்றன - வாழ்க்கைப் போராட்டத்தின் மகிழ்ச்சி அவற்றிற்குத் தெரியவில்லை. அவை இடியொலி கேட்டு நடுங்குகின்றன.
முட்டாள்தனமான பெங்குவின் பாறை இடுக்குகளில் பயந்து ஒதுங்குகிறது... ஆனால் பெருமைக்குரிய புயற்பறவை மட்டும் பெருங்கடலுக்கு மேலாக, வெள்ளி நுரை பொங்கும் நீருக்கு மேலாகத் துணிவோடும் சுதந்திரத்தோடும் பறக்கிறது!
இன்னும் கருமையாக, இன்னும் தாழ்வாகப் புயல் மேகங்கள் கடலுக்கு மேலாக மூழ்குகின்றன. அமிழ்கின்ற அலைகளோ ஆவலால் இடியை நோக்கி உயர்கின்றன.
இடி இடிக்கிறது. இப்போது அவைகள் காற்றுடன் பயங்கரமாகச் சண்டையிடுகின்றன. கோப நுரையுடன் அலைகள் புலம்புகின்றன. அந்தோ-காற்று பிரிக்க முடியாதவாறு அலைக்கூட்டத் திரள்களை வெறியுடன் தழுவி, நெடும் பாறைகளின் மீது மரகதம் போன்ற அத்திரள்களை மோதிச் சிதறுமாறு உருட்டுகிறது.
கருநிற மின்னல் போல புயற்பறவை கதறலோடு பறக்கிறது. புயல் மேகங்களை அம்பு போலத் துளைத்து, நீரின் மேலாகப் பறந்து இறக்கையால் அலைகளின் நுரையைப் புரட்டிச் செல்கிறது.
அந்தோ, துர்தேவதை போல, புயற்காற்றின் கரும் பேய் போல, முன்னிலும் சிரித்துக்கொண்டு, முன்னிலும் தேம்பிக்கொண்டு விரைந்து செல்கிறது... புயல் மேகங்களைப் பார்த்துச் சிரிக்கிறது, அதனது ஆனந்தப் பரவசத்தால் தேம்புகிறது!
கூர்மையான பேய், இடியின் முழக்கத்தில் வெகுகாலமாகவே கனைப்பைக் கேட்கிறது. சூரியனை மேகங்களால் மறைக்க முடியாது என்பது அதற்கு உறுதியாகிறது, ஆமாம் மறைக்க முடியாதுதான்!
காற்று சீறுகிறது... இடி முழங்குகிறது...
அடியற்ற பெருங்கடலுக்கு மேலாக, நீல வெளிச்சம் போல புயல் மேகங்களின் கூட்டங்கள் எரிகின்றன. மின்னல் அம்புகளைக் கடல்பிடித்து அவற்றைத் தனது ஆழத்தில் போட்டு அவிக்கிறது. கொடிய பாம்புகளைப் போல, அந்த மின்னல்களின் பிரதிபலிப்புகள் கடலில் நெளிந்து மறைந்து போகின்றன.
"புயல்! விரைந்து புயல் வந்து அடிக்கப் போகிறது!"
மின்னல்களுக்கு மத்தியில், கர்ஜிக்கின்ற மூர்க்கமான பெருங்கடலுக்கு மேலாகத் தைரியமான புயற்பறவை பெருமையுடன் பறந்து கொண்டிருக்கிறது. வெற்றியின் தீர்க்கதரிசி போல அது முழங்குகிறது.
"தனது முழு ஆவேசத்துடன் புயல் அடிக்கட்டும்...!"


மொழி பெயர்ப்பு - துரைப்பாண்டி

No comments: