Sunday, December 9, 2007

ஐ.டி. அழகியின் அட்டகாசப் பேட்டி!




மிஸ்.வேர்ல்ட் போட்டியில் இறுதி சுற்றுதான் கேள்வி-பதில் சுற்று. ரீனா வின்ஸி பங்கேற்று பட்டம் பெற்றிருக்கிற போட்டியின் முதல் சுற்றே கேள்வி -பதில் சுற்று. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இடையே நடைபெறுகிற மிஸ். ஐ.டி. போட்டி என்றால் கேள்வியில் தொடங்குவதுதானே சரியாக இருக்கும்?

ஹை பவர்(வி) நிறுவனமும், டிட் அட்வர்டைஸ்மென்ட் நிறுவனமும் இணைந்து சென்னையில் சமீபத்தில் நடத்திய போட்டியில் மிஸ். ஐ.டி.யாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ரீனா வின்ஸி. வர்ட்சுஸô இண்டியா நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக இருக்கும் ரீனா முதல் சுற்றில் இணையத்தின் மூலம் அளித்த ஒரு கேள்விக்கான பதில்:

"உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைக்கிறது. அதை வைத்து என்ன செய்வீர்கள்?''
ரீனா பதில்: "முதியோர் இல்லம் தொடங்குவதற்கான முதல் செக்காக உங்கள் செக்கைப் பயன்படுத்துவேன்...''

அழகிப் பட்டம் பெறுகிற எல்லோருமே சொல்கிற ஒன்றுதான் இது. உண்மையிலே உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் உண்டா? என்று அவரோடு பேசத் தொடங்கினோம்.

"முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்துகிற அழகி போட்டி இல்லை இது. அக அழகிற்கும், போட்டியாளர்களின் தனிப்பட்ட திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற போட்டி. ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் வேலை பளுவின் காரணமாக அதிக அளவில் மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் இந்தப் போட்டியை நடத்தியிருக்கிறார்கள்.
இதில் நான் முதியோர் இல்லம் தொடங்கவேண்டும் என்று சொன்னது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று திட்டமிட்டுச் சொல்லவில்லை. இயல்பாகவே என் மனதில் ஊறி இருக்கிற விஷயத்தைத்தான் சொன்னேன். முதியோர் இல்லம் தொடங்க வேண்டும் என்பதும், டிவி தொகுப்பாளினியாக வேண்டும் என்பதும் எனக்கு சிறு வயதிலிருந்தே இருக்கும் கனவு.

தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆக வேண்டும் என்பதும் முதியோர் இல்லம் தொடங்க வேண்டும் என்பதும் முரண்பட்ட எண்ணங்களாகத் தோன்றுகிறதே?

முரண்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. இருப்பினும் என்னைப் பொறுத்தவரை நான் சொன்னதில் முரண் இருப்பதாக நினைக்கவில்லை. பள்ளியில் படித்தபோதும் சரி, பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரியில் என்ஜினியரிங் படித்தபோதும் சரி, நடைபெற்ற போட்டிகள் எல்லாவற்றிலும் பரிசு பெற்றிருக்கிறேன். பேச்சு போட்டி, பாட்டுப் போட்டி, டான்ஸ் போட்டி என ஒன்றுவிடாமல் எல்லாவற்றிலும் பரிசு வாங்கி இருக்கிறேன்.
அந்தப் பரிசுகள் கொடுத்த உற்சாகம்தான் மிஸ். ஐ.டி. பட்டம் வாங்குகிறளவுக்கு உயர்த்தியிருக்கிறது என்று சொல்லலாம். இதைப்போல கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நான்தான் தொகுத்து வழங்கியிருக்கிறேன். நான் தொகுத்து வழங்கியதைப் பலர் பாராட்டியிருக்கிறார்கள். இதனால் தொலைகாட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இதற்கு முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. முதியோர் இல்லம் தொடங்க வேண்டும் என்பதை என் இலட்சியமாகவே சிறு வயது முதலே கொண்டிருக்கிறேன்.

மிஸ்.ஐ.டி. பட்டம் உங்களுக்குக் கிடைத்ததற்கு முக்கிய காரணம்?

முதலில் என்னுடைய கடினமான முயற்சி. இந்தப் போட்டி ஒரே நாளில் நடந்து முடிந்துவிடவில்லை. ஒருமாத காலம் பல்வேறு கட்டமாக போட்டி நடைபெற்றது. இதில் தனித்திறன் வெளிப்படுத்துகிற சுற்றில் ""பக்கும்... பக்கும்... மாடப்புறா'' பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். இந்தப் பாடல் எல்லாக் காலங்களுக்கும் பொருந்துகிற வகையில் அமைந்த பாடல். பாட்டுக்கு ஆடுகிறபோது 80 -களில், 90-களில், 2000-த்தில் நாம் எப்படி ஆடை அணிந்திருந்தோமோ அந்த வகையிலான ஆடைகள் அணிந்து ஆடினேன். இதற்கு நல்ல பாராட்டு கிடைத்தது. இதைப் போல மற்றொரு சுற்றில் ஒரு சார்ட் கொடுத்திருந்தார்கள். இதில் தங்கள் எண்ணங்களை ஓவியங்களாகத் தீட்டவேண்டும் என்றார்கள். கொடுத்த சார்ட்டை நான் இரண்டாகக் கிழித்தேன். ஒரு சார்ட்டில் எயிட்ஸ் நோய் பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் வரைந்தேன்.

இரண்டாவது சர்ட்டில் பள்ளிகளில் செக்ஸ் கல்வி கொண்டு வந்த பிறகு முற்றிலுமாக எய்ட்ஸ் பாதிப்பு குறைந்து போய்விட்டது என்று குறிப்பிட்டு வரைந்திருந்தேன். இதற்கும் பாராட்டுக் கிடைத்தது. இதற்கு மிஸ்.கிரியேட்டிவ் பட்டமும் கொடுத்தார்கள். இறுதி போட்டியில் நான் வெல்வதற்கு எடுத்துக் கொண்ட மையக் கருத்தும் எய்ட்ஸ்தான். ஆட்டம் போட்ட ஒருவன் எப்படி எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறான் என்பதை நாடகமாகப் போட்டிருந்தேன். இந்தக் கதாபாத்திரத்தை வடிவேலு பாணியில் செய்திருந்தேன்.

ஒரு பெண் ஆண் வேடத்தில் நடிப்பது என்பது சிரமம். அதுவும் பாடலுக்கு ஆடவேண்டும். இடையில் வசனம் பேசி நடிக்க வேண்டும். இதை நான் சிறப்பாய் செய்திருந்தேன். மிஸ்.ஐ.டி பட்டமும் கிடைத்தது. இது என்னுடைய தனிப்பட்ட திறனால் மட்டும் முடிந்தது என்று சொல்வது பொய்யாக இருக்கும். என்னுடைய அலுவலகத்தில் பணிபுரிகிற கார்த்திக், என்னுடைய நண்பர் பிரபு, காமிராமேன் கீரன், இசையமைப்பாளர் ரமேஷ் ஆகியோரின் உதவி எனக்குப் பேருதவியாக இருந்தது. அதைப்போல என்னுடைய அப்பா வின்சென்ட், தம்பி ஜோசப், பாட்டி ஞானப்பூ ஆகியோரும் பல்வேறு வகையில் என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

பரிசு என்ன கொடுத்தார்கள்? அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

பரிசு பெறுகிறவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று முதலில் அறிவித்திருந்தார்கள். இதற்கிடையில் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்தத் தொகையை அநாதை இல்லத்திற்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். இதன்படி ஒரு அநாதை இல்லத்திற்கு வழங்கிவிட்டோம். இந்தப் பரிசோடு இரண்டு நாட்கள் பாங்ஹாங்கில் தங்கி வருவதற்கான முழுச் செலவையும் அவர்கள் ஏற்றிருந்தார்கள். நானும் என் தம்பியும் பாங்காங் செல்ல இருக்கிறோம்.

உங்கள் பலம்? பலவீனம்?

ஆண், பெண் பாகுபாடில்லாமல் எல்லோருடனும் நேசத்தோடு பழகுவது பலம். சில நேரங்களில் அது பலவீனமாகவும் அமையும். கோபமும் என்னுடைய பலவீனம்தான்.

மிஸ்.ஐ.டி.க்குப் பிறகு அடுத்த இலக்கு மிஸ்.வேர்ல்ட்டா?

இல்லை.

No comments: