Wednesday, December 26, 2007

அந்த பெங்களூர் போன் கால்! எஸ்.எஸ்.மியூசிக் கிரேக்கோடு ஒரு ஜாலி அரட்டை!



"கிராக் ஜாக்' பிஸ்கட் போல வித்தியாசமானவர் எஸ்.எஸ்.மியூசிக் "விடியோ ஜாக்கி' கிரேக். "பெண்ணைச் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேச்சழகன்'. ரசம், சாம்பார் என எதைப் பற்றியும் ஷோவில் ஜோவியலாய் தமிங்கிலீஷில் பேசுவதுபோலவே இங்கேயும் அவர் மனசைத் திறந்து ஜோதியாய் கொட்டினார்.

உண்மையிலேயே இசையில் ஆர்வம் உண்டா? இல்லை; விதியேன்னு காம்பயர் செய்கிறீர்களா?
மியூசிக் இல்லையென்றால் நான் இல்லை என்று கூட சொல்லலாம். இப்ப யூத் எல்லாருமே மியூசிக் கேட்டுத்தான் வளர்கிறார்கள். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். ஜிங்கில்ஸ், ஆல்பம் உட்பட எல்லாவகையான மியூசிக்கையும் நான் ரசிப்பேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலரின் பழைய பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

தமிழ்கூட தகராறு செய்வதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?
முயற்சி செய்கிறேன். வீட்டில் யாருக்கும் தமிழ் தெரியாது. எல்லோரும் இங்கிலிஷ்லேயேதான் பேசுவார்கள். அதனால்தான் தமிழைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஓரளவு நான் இப்போது தமிழில் பேசுவதும் இங்கிலீஷில் யோசித்துத்தான். சில வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாது. இருந்தும் எப்படியோ பேசி சமாளிக்கிறேன். இப்படியே போனால் தமிழில் நன்றாகப் பேசலாம் என்று சொல்கிறார்கள். பார்ப்போம். எனக்கு நம்பிக்கையில்லை.

"என்னை ஞாபகம் இருக்கா' என ரெகுலர் காலர்ஸ் நச்சரிக்கிறபோது உங்களுக்கு எரிச்சலாக இருக்குமா?
எல்லோரும் அப்படிக் கேட்பதில்லை. இரண்டு தடவை, மூணு தடவை என்னிடம் பேசியவர்கள்தான் அப்படிக் கேட்பார்கள். எல்லோருக்கும் இருக்கக்கூடிய எதிர்ப்பார்ப்புதான். இரண்டு தடவை பேசியிருக்கிறோமே ஞாபகம் வைத்திருக்கிறானா? என்று சோதித்துப் பார்ப்பார்கள். இது பரவாயில்லை. இரண்டு வருடத்திற்கு முன்பு ஒருமுறை பேசியிருப்
பார்கள். அவர்களும் என்னை ஞாபகமிருக்கா? என்று கேட்பதுதான் வேடிக்கையாக இருக்கும். இருந்தாலும் எரிச்சல் வருவதில்லை. ஆசையோடும் அன்போடும் வேடிக்கையாகப் பேசுகிறவர்களிடம் கோபப்படலாமா?

தேர்தல் நேரத்தில் மக்களைப் பார்த்ததும் அரசியல்வாதிகள் கையெடுத்துக் கும்பிடத் தொடங்கிவிடுவதுபோல விடியோ ஜாக்கிகள் ஏன் நிகழ்ச்சி தொடங்கியதுமே கத்திப் பேசத் தொடங்கிவிடுகிறார்கள்?
சராசரி வாழ்க்கையில் எப்படி இருக்கிறோமோ அதேபோலவே அமைதியாக, சாந்தமாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நேரில் பார்க்கிறபோது சுவீட்டான சார்மிங் கேர்ளாக ஷ்ரேயா இருப்பார். அதே ப்ரோகிராம் பண்ணுகிறபோது பாருங்கள். அப்படியே செக்ஸியாக, வாய்ஸ் மாடுலேஷன் உட்பட எல்லாவற்றிலும் டோட்டலாக மாறியிருப்பார். இது வி.ஜே.க்களுக்கு அவசியமான ஒன்று.

விளம்பரங்களில், படங்களில் நடிப்பதற்கு என்று பெண் வி.ஜே.க்கள் பெரியளவில் போய்விடுகிறார்களே? உங்களைப் போன்றோருக்கு இதில் வருத்தம் உண்டா?
கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு, விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு என பெண் வி.ஜே.க்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வருவது உண்மைதான். அந்தளவிற்கு ஆண்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் பெண்கள் இதுபோன்ற துறையில் அதிக நாள்கள் நீடிப்பதில்லை. திரைப்படத் துறையையே எடுத்துக் கொண்டால் சிம்ரன், ஜோதிகாவுக்குப் பிறகு நீண்ட நாள்களுக்கு நிலைத்திருக்கும் கதாநாயகியைப் பார்க்க முடியவில்லை. நான்கு படங்கள் நடிப்பதற்குள் ஃபீல்டைவிட்டு ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு அப்படியில்லை. திறமையிருக்கிறவரை தொடரலாம். ஆண் வி.ஜே.க்களுக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என்று ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். இவர்களை விட்டு புதியவர்களை ரசிக்க ரசிகர்களும் விரும்புவதில்லை. படத்தயாரிப்பாளர்களும் விரும்புவதில்லை.

உங்களுக்கு அதிகளவில் வருகிற லேடீஸ் கால்களைப் பார்க்கிறபோது ஆண்களைவிட பெண்களே அதிகம் வழிவதுபோல தெரிகிறதே?
அப்படிச் சொல்லலாம். ஆனால் எனக்குப் பேசுகிறவர்களில் சில பள்ளி மாணவிகளும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் உண்டு. இவர்களை அந்தவகையில் சேர்க்க முடியாது. ஆரோக்கியமான காலர்களாகவே கொள்ளவேண்டும். அதேசமயம் ஆண்களும் அதிகளவில் பேசுகிறார்கள். "என்ன மச்சி எப்படியிருக்க?' என்றெல்லாம் பேசுவார்கள். அப்படி அவர்கள் பேசுவது எனக்கு உண்மையிலே பெருத்த சந்தோஷத்தையே அளிக்கிறது.

எல்லோரையும் கலாய்க்கும் உங்களை யாராவது கலாய்த்திருக் கிறார்களா?
பெங்களூர்ல இருந்து நவீனா என்று ஒரு பெண் பேசுவார். இருபத்தெட்டு வயசு இருக்கும். அவர் பேசினாலே நான் மிரண்டு போவேன். எதையும் நேராக அவர் குரலில் பேசமாட்டார். குழந்தை குரலிலேயே பேசுவார். எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்துவிட்டேன். அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. என்னை முழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பார். இப்போது அவர் கால் பண்ணுவதில்லை.

உங்கள் டூவிலரின் பின்னிருக்கை இப்போதும் காலியாகத்தான் இருக்கிறதா?
இல்லை. ஆள் இருக்கிறார்கள். அந்த ஆள் பற்றிய விவரத்தை இப்போதைக்குச் சொல்லமாட்டேன்.

No comments: