Wednesday, December 19, 2007

ரஜினிகாந்தின் ஒரு கோடி ரூபாய் என்னாச்சு?





தி நீர் தொடர்பான பிரச்சினை வருகிறபோதெல்லாம் எல்லோரும் சொல்கிற ஒரு தீர்வு நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என்பது.


யார் இணைக்க வேண்டாம் என்று சொன்னது? எத்தனை ஆண்டுகள்தான் சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டப்போகிறீர்கள்?


தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 54-வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகிறபோது, "நதிகள் இணைப்பை தேசியத் திட்டமாக அறிவிப்பதோடு அதை நிறைவேற்றவதற்கும் காலம் நிர்ணயிக்கப்பட்டு அட்டவணை வெளியிட வேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவதில் இன்னும் காலதாமதம் செய்தால் அது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும்'' என்று பேசியுள்ளார்.


இப்படிக் கருணாநிதி வலியுறுத்திப் பேசுவது அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்தே நிகழ்கிற ஒன்று. அதற்கு முன்பிருந்தே இந்த வலியுறுத்தல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கான தொடக்கப் பணியைத்தான் இன்னும் யாரும் தொடங்கி வைக்கவில்லை.



இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு நிறைய சிக்கல்கள், மாநில தகராறுகள் இருக்கின்றன என்பது உண்மை. எந்தத் திட்டத்தில்தான் பிரச்சினைகள் இல்லை. மாநில அரசியல் என்கிற கண்ணோட்டத்தை விட்டு தேசியம் என்கிற எண்ணத்தோடு இந்தத் திட்டத்தை அணுகிறபோது இத்திட்டம் வெற்றிபெறும். அதுவரை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.


காவேரி பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது நடிகர், நடிகைகள் எல்லாம் நெய்வேலியில் போராட்டம் நடத்தினார்கள். ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினிகாந்த் இருந்த நேரம். நெய்வேலி போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். கருணாநிதியின் ஆலோசனைபடிதான் இந்தப் போராட்டத்தை அவர் நடத்தியதாகச் சொல்லப்பட்டது.


உண்ணாவிரதம் பெரும் வெற்றிபெற்ற மிதப்பில் ரஜினிகாந்த் இறுதியாகப் பேசுகிறபோது, தேசிய நதிகளை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால்தான் மாநில சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று பேசி, நதி இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டால் தான் ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார். (ஒரு படத்தில் நடித்து ரஜினிகாந்த் எத்தனை கோடி சம்பாதிக்கிறார் என்பது யாருக்குமே வெளிச்சமில்லை.) அதற்குப் பிறகு மூச்சு பேச்சே இல்லை. இந்தத் திட்டம் தொடங்கவே மாட்டார்கள் என்கிற எண்ணத்துடன்தான் ரஜினிகாந்த் அறிவித்தாரா என்று தெரியவில்லை.


இந்த முறையாவது திட்டத்தை நிறைவேற்ற முனைகிறார்களா? என்று பார்ப்போம்.

No comments: