Wednesday, December 5, 2007

நான் குண்டா? சண்டைக்கு வருகிறார் சரண்யா




முதல் படத்திலேயே எல்லோர் உள்ளத்தையும் கொள்ளையடித்திருக்கிறார் சரண்யா. இந்தியாவின் நம்பர் 1 ஸ்கிரீன்-ப்ளே ரைட்டர் பாக்கியராஜின் மகள். பாரிஜாதம் படம் மூலம் பாரிஜாத பூவாகவே காட்சியளிக்கும் அவருடன் ஒரு சந்திப்பு.

* நடிகையாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்களா? அல்லது உங்கள் தந்தை கேட்டுக் கொண்டதின் பேரில் நடித்தீர்களா?
சின்ன வயதிலிருந்தே நடிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. ஆனால் நான் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஒருமுறை என்னுடைய அப்பா பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் "உங்கள் மகனை மட்டும் நடிக்க வைத்திருக்கிறீர்கள், மகளை நடிக்கவைக்காததற்கு காரணம் என்ன?' என்று கேட்டதற்கு, "என்னுடைய மகன் சாந்தனு நடிக்க ஆசைப்பட்டான். அதனால் அவன் படத்தில் நடிக்கிறான். என் மகளுக்கு நடிக்க விருப்பமில்லை. என்று கூறியிருந்தார். எனக்கு இதைப் படித்ததும் கோபம் வந்தது. "எப்படி என் விருப்பத்தை கேட்காமல், எனக்கு நடிக்க விருப்பமில்லை' என்று நீங்க சொல்லலாம்?'னு அப்பாகிட்ட கேட்டேன். அதன்பிறகுதான் "உனக்கு நடிக்க விருப்பமிருந்தால் நடி!' என்று பாரிஜாதம் படத்தில் வாய்ப்பு தந்தார்.

* நடிகையாக தேர்ந்தெடுத்ததிற்கு தந்தை ஏதாவது தனிப்பட்ட காரணம் சொன்னாரா?

தனிப்பட்ட காரணம் எதுவும் சொல்லவில்லை. அதுக்காக மகள் என்பதற்காக உடனேவும் எடுக்கவில்லை. ஸ்கிரீன் டெஸ்ட் உட்பட எல்லா டெஸ்ட்களையும் எடுத்துப் பார்த்துதான் என்னைத் தேர்வு செய்தார்.
* நடிப்பதற்கு யாரிடமாவது பயிற்சி பெற்றீர்களா?
நடிப்பதற்கு என்று பிரத்யேகமாக பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. ஆனால் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் பணியாற்றும் நிவேதிதா என்பவரிடம் பத்துப் பதினைந்து நாட்கள் சில பயிற்சிகள் பெற்றேன். நான் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுகிற டைப் கிடையாது. இதனால் ஷூட்டிங்கில் டயலாக் டெலிவரி செய்ய, நடிக்கும்போது சிரமமில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இவரிடம் பயிற்சி பெற்றேன். மத்தபடி வேற எந்தப் பயிற்சியும் செய்யவில்லை.

* பாரிஜாதம் பட ஷூட்டிங்கின்போது நடிந்த சுவையான சம்பவம்?

சுவையான சம்பவம் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு எதுவுமில்லை. என்னுடைய முதல் படம்இது. இதில் எல்லாச் சம்பவங்களும் சுவையான சம்பவங்கள்தான். ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டு நடித்த காட்சி என்றால், "உன்னைக் கண்டால்' பாடல்தான். இந்தப் பாடல் காட்சியில் செயற்கை மழையில் நனைந்தபடியே ஆடிப் பாடத் தயாராக இருந்தோம். ஆனால் இயற்கையாகவே மழை பெய்து, அந்தப் பாடல் முழுவதும், சீரற்று இருக்கும் தரைப்பகுதியில் ஓடிய படியே நடிக்கவேண்டி இருந்தது. இதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.
* இந்தப் படம் மூலம் உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறீங்களா?

நிச்சயமாக. நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. முதல்வர் கலைஞர் படத்தை பார்த்துட்டு, "நல்லா நடிச்சிருக்க... முதல் படம் மாதிரியே தெரியலை'ன்னு பாராட்டினாரு. இதுவே பெரிய அங்கீகாரம்தான்.

* உங்களை மாதிரியே உங்க தம்பியும் கதாநாயகனா அறிமுகமாக இருக்கிறார். அவர் உங்க நடிப்பைப் பார்த்துட்டு என்ன சொன்னார்?

அவன்தான் என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பான். "வேட்டிய மடிச்சிக் கட்டு' படத்துல எனக்கு முன்னவே நடிச்சிருக்கான். அதனால "நான் சீனியர் ஆர்ட்டிஸ்ட். ஏதாவது டவுட்னா என்கிட்ட கேட்டுக்கன்னு சொல்வான். இப்ப படத்தைப் பார்த்துட்டு அப்படியே உல்டாவா, "பரவாயில்லை... என் பேரைக் காப்பாத்திட்ட'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கான்!

* "விடியல்'னு குறும்படம் ஒண்ணு இயக்கி இருக்கீங்களே, அதைப் பற்றி...?

சென்னை, எம்.ஓ.பி வைஷ்ணவா காலேஜ்ல விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கிறப்ப தேர்வுக்காக இயக்கிய படம். பெண் சிசுக் கொலை பற்றிய படம். இதைப் போல தொடர்ந்து, குறும்படங்கள் பண்ணனும் என்கிற எண்ணம் இப்போது இல்லை. படத்தை அப்பா பார்த்தார். இயக்குனராக ஆவதற்கு இன்னும் நிறைய கத்துக்கணும்னு சொன்னார்.
* நீங்கள் நடிகையாவும் இருக்கீங்க, இயக்குனராகவும் இருக்கீங்க....அப்பா இயக்கிய படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்? உங்கள் அம்மா நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்?

அப்பா இயக்கியதில், "இன்று போய் நாளை வா', அம்மா நடித்ததில் விதி'.

* அப்பாவைப் போல் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?

இப்போதைக்கு அப்படிப்பட்ட எண்ணம் இல்லை. நான் நாளையைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டு செயல்படுகிற ஆள் கிடையாது. குறும்படம் இயக்கியபோது கேமரா பிடித்ததால் கேமரா மீது ஆசை உண்டு.

* நீங்கள் ரொம்ப குண்டாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

அந்தக் குற்றச்சாட்டெல்லாம் ஆறு மாதத்துக்கு முன்பு. தினம் உடற்பயிற்சி செய்து உடம்பை சுத்தமா குறைச்சிட்டேன். நீங்களே சொல்லுங்க நான் குண்டாவா இருக்கேன்?

* உங்களுடைய பொழுதுபோக்கு?

படிக்கிற காலத்திலும் சரி, இப்போதும் சரி சத்தியம் தியேட்டர்ல படம் பார்க்கப் பிடிக்கும். மாலை நேரங்களில் ப்ரெண்ட்ஸ்களோடு பெசன்ட் நகர் பீச்சுல சுற்றி வருவேன்.

* அப்பா எந்தக் கேள்வி கேட்டாலும் ஏதாவது ஒரு குட்டிக் கதை சொல்வாரு. உங்களிடம் அவர் அடிக்கடிச் சொல்லும் கதை என்ன?

எங்க அப்பா மாதிரி எனக்குச் சொல்லத் தெரியாது. இருந்தாலும் சொல்றேன்.
"ஒரு ஊர்ல கிணறு வெட்டுவதைத் தொடங்கி வைக்க அமைச்சர் ஒருவரைக் கூப்பிட்டிருந்தாங்க. அமைச்சர் வந்தபோது, இந்து ஒருவர் எங்க கோயிலுக்குத்தான் முதல்ல வந்துட்டுப் போகணும்னு சொன்னாராம். அதைப்போலவே முஸ்லீம் ஒருத்தரும், கிறிஸ்டின் ஒருத்தரும் பிடிச்சி இழுக்க என்ன பண்ணுறதுன்னு தெரியாம அமைச்சர் கோவிச்சுக்கிட்டுப் போய் கார்ல உட்கார்ந்திட்டாராம். அப்ப பார்த்து சிங்கம் ஒண்ணு உறுமுற சத்தம் கேட்டுச்சாம். அந்தச் சத்தம் கேட்டதும் அங்க நின்னவங்க எல்லாம் ஓடிப்போய்ட்டாங்களாம். ஆனா உண்மையிலே சிங்கம் உறுமலையாம். அமைச்சர் கார்ல இருந்த ஹாரன் சத்தம்தானாம் அது. கொஞ்சம் நேரம் பொறுத்து ஓடினவங்க எல்லாம் பதுங்கி, இருந்த இடத்துல இருந்து வெளியே வந்தாங்களாம். எங்கேயிருந்து தெரியுமா? முஸ்லீம், இந்து கோயில்ல இருந்தும், கிறிஸ்டின் மசூதியில இருந்தும், இந்து சர்ச்சிலிருந்தும் வெளியே வந்தார்களாம். வெளியே வந்தவர்களைப் பார்த்து அமைச்சர் சிரிச்சாராம். அந்தச் சிரிப்பின் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்ததாம்!'

- இந்தக் கதையைத்தான் அப்பா அடிக்கடி சொல்வார்'' எனச் சொல்லிச் சிரிக்கிறார் சரண்யா. நாமும்!

No comments: