Saturday, December 22, 2007

சிங் சாங் சூ-வின் சிறப்பு பேட்டி!



கன்னிமாரா நூலக அலமாரிகளிடையே கண்டோம் படத்தில் நீங்கள் காணும் சிங் சாங் சூவை! காதல் கவிதைத் தொகுப்புகளாகத் தேடிக்கொண்டிருந்தது அந்தக் கவிதை!

ஓட்டைஉடைசலுடன் கூடிய காதல் கவிதைத் தொகுப்புகளையும் தேடித்தேடி ஒரு சைனீஸ் பொண்ணு படிக்கக் காரணம்?

நம்மூர் பசங்க போட்ட தூண்டிலில் சிக்கிக்கொண்டதா?

நெருங்கிப் போய் பார்த்தால் காட்சிப்பிழை! அது சைனீஸ் பொண்ணு இல்லை. விஜய் டிவியில் கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கவிதாதான் அந்த அழகு கவிதை!

"பிறகு ஏன் சிங் சாங் சூ-வா?'

பார்ப்பதற்கு சைனீஸ் மாதிரியே இருப்பதால் கவிதாவை அவர்கள் வீட்டிலேயே "சிங் சாங் சூ' என்றுதான் அழைப்பார்களாம்.


"காதல் தொகுப்பாகப் படிக்கக் காரணம்? காதல்... கீதல்?''
"இல்லை... இல்லை... எல்லா வகையான புத்தகமும் படிப்பேன். இப்போது கொஞ்சம் காதல் கவிதைத் தொகுப்புகளாகத் தேடிப் படிக்கிறேன். அவ்வளவுதான். அதற்காக "மோதல்... காதல்...சாதல்' என்றெல்லாம் அர்த்தமில்லை.'' எனும் "கவி'தாவுடனான உரையாடல்!

"கிராண்ட் மாஸ்டர்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு முன்பிருந்தே புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டா?
புத்தகம்தான் எனக்கு எல்லாமே! எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருப்பேன். பிரிட்டீஷ் கவுன்சில் நூலகம், கன்னிமாரா நூலகம் இந்த இரண்டிலும்தான் பெரும்பாலும் இருப்பேன். புத்தகம் படிக்கிறபோது கிடைக்கிற அமைதியைவிட நூலகங்களில் நிலவும் அமைதியை நான் இன்னும் விரும்பி ரசிக்கிறேன். இதுபோன்ற அமைதியை வேறு எங்கும் பெறமுடியாது. இந்தக் காரணத்திற்காகவும் நான் நூலகம் சென்று படிக்கிறேன்.

உங்கள் குடும்பம்?
சொந்தவூர் ஊட்டி. இப்போது இருப்பது சென்னை. அப்பா டி.எஸ்.பி. அம்மா. ஒரு அண்ணன்.
கொளுத்தும் சென்னை வெயிலில் ஊட்டியிலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதா?
அப்படியெல்லாம் இல்லை. எல்லா இடங்களையுமே நான் ரசிக்கிறேன். ஊர் சுற்றுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. சும்மாவாகவே ரயிலில் ஏறி பீச் டூ தாம்பரம் வரை போய் வருவேன். ஒரு காரணமும் இருக்காது. காலியான பெட்டியாக இருந்தால் இன்னும் கூடுதல் சந்தோஷம். இதேபோல வெளி மாநிலங்களுக்கும் போவதுண்டு. போகிறபோது வெறுமனே அந்த இடத்தின் அழகை மட்டும் ரசித்துப் பார்த்துவிட்டு வருபவள் இல்லை நான். அந்தப் பகுதி மக்களுடைய வாழ்க்கை முறை, கலாசாரம் முதலியவற்றைத் தெரிந்துகொள்வதுடன் அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதேபோல கொஞ்ச நாள்கள் வாழ்ந்து பார்த்துவிட்டுதான் வருவேன். உடுத்துகிற உடை, உண்ணுகிற உணவு என எல்லாமே அவர்கள்போல பழகிப் பார்த்துவிட்டு வருவது மனதுக்கு பெரிய திருப்தி. விரைவில் சிம்லா செல்ல இருக்கிறேன்.

படிக்கிற காலத்திலிருந்து இந்தத் துறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா?
திருச்சி பாரதிதாசன் யுனிவர்சிட்டியில பி.பி.ஏ முடித்தேன். முதல் வருஷம் யுனிவர்சிட்டிக்குப் போனேனான்னு எனக்கே சந்தேகமாக இருக்கு. அந்தளவுக்கு கல்ச்சுரல் ப்ரோகிராம் அதுஇதுன்னு சுற்றிக்கொண்டு இருந்தேன். டான்ஸ் பிரமாதமாகப் பண்ணுவேன். என்னுடைய டான்ஸ்க்குன்னே யுனிவர்சிட்டியில ஃபேன்ஸ் நிறைய பேர் இருந்தார்கள். பிரத்யேகமாக டான்ஸ் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. சின்ன வயதில் பரதமும், கர்நாடக சங்கீதமும் கொஞ்ச நாள்கள் கற்றுக்கொண்டேன். ஆனால் தொடர முடியவில்லை. அப்பாவுடைய வேலை காரணமாக இடம் மாறி இடம் மாறி போக வேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில் எல்லாம் டிவிக்குப் போகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இருக்கவில்லை. போகப்போகத்தான் ஆர்வம் வந்தது.

உங்களுடைய அப்பாபோல காவல்துறை பக்கம் செல்லாமல் தொகுப்பாளினியாக வந்தது ஏன்?
காவல்துறை பக்கம் பெண் வரவேண்டாமே என்று பெற்றோர்கள் கருதியிருக்கலாம். இதனால் காவல்துறை பக்கம் எனக்கு நாட்டத்தை ஏற்படுத்தாமல் அவர்கள் விட்டிருக்கலாம். காவல்துறை பக்கம் போகலாமா? வேண்டாமா? என்பது பற்றி நானும் யோசித்துப் பார்த்தது இல்லை. ஆனால் அம்மா மட்டும் எப்போதாவது சொல்வார்கள். உங்க அப்பா உனக்கு சல்யூட் அடிக்கிறளவுக்கு வளரணும் என்று சொல்லுவார்கள். அதேபோல வேறொரு துறையையும் குறிப்பிட்டு இந்தத் துறைக்குத்தான் போகணும் என்றும் அவர்கள் என்னை வலியுறுத்தியதில்லை. உன் விருப்பம் எதுவோ அதில் சிறப்பாகச் செயல்படு என்று மட்டும்தான் அடிக்கடிச் சொல்வார்கள். எனக்கு இந்தத் துறை பிடித்து இருந்தது. அதனால் வந்தேன்.


கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ஆனது எப்படி?
தொகுப்பாளினியாக ஆவது என்று முடிவு எடுத்த பிறகு எந்த டிவிக்குப் போக வேண்டும் என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. போனால் விஜய் டிவிக்குத்தான் போக வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன். என் நண்பர்கள் சிலர் வேறு தொலைக்காட்சிகளுக்குத் தொகுப்பாளினியாகப் போன நிலையிலும் நான் காத்திருந்தேன். இந்தச் சமயத்தில்தான் கடந்த ஒன்றரை வருஷத்துக்கு முன்பு "ரெடி ஜூட்'ன்னு விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி. திடீரென ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போக வேண்டும். அங்கு நடித்துக்கொண்டிருக்கிற ஒரு நடிகரை எப்படியாவது கன்வின்ஸ் செய்து மொரிஷியஸ் தீவுக்கு அழைத்துச் செல்லவேண்டும். இதில் என்னவென்றால் தயாரிப்பாளரிடமோ நடிகரிடமோ முன் அனுமதியெல்லாம் பெற்றிருக்கமாட்டார்கள். நாமேதான் எல்லாமும் செய்ய வேண்டும். எல்லாம் இரண்டு மணி நேரத்திற்குள். கன்வின்ஸ் செய்கிறவர் ஏர்போர்ட் வரைதான் செல்வார்கள். அழைத்துப் போகும் வி.ஜ.பிதான் ஒரு வாரம் மொரிஷியஸில் தங்கி வருவார்கள். என்னைப்போல மூன்று பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எனக்கு இரண்டாம் இடம்தான் கிடைத்தது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் எனக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதன்பிறகு ஐ.க்யூ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. இந்த ப்ரோகிராம் காலேஜ் கல்ச்சுரல் ப்ரோக்ராம் போல என்பதால் எனக்கு எந்தவித சிரமமும் இருக்கவில்லை. ஜாலியாகப் போனது. இதனையடுத்துதான் "கிராண்ட் மாஸ்டர்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நூலகத்திற்கு வேறு தினமும் போறீங்க... இதுக்குப் பின்னால "கிராண்ட் மாஸ்டர்' ஆகணும்ங்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது உண்மைதானே?
அந்த எண்ணமெல்லாம் இல்லை. அவர் மேதாவி. அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை. நான் என்ன சும்மா... அவரோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதையே பெரிய விஷயமாகக் கருதுகிறேன். எப்போதும் புதுப்புது தகவல்களை, கருத்துகளை அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்.

இப்படி "பிளேடு' போடுறாரேன்னு வெறுத்து ஓடியதுண்டா?
அப்படிப் பேசக்கூடியவர் அல்ல அவர். எந்த விஷயத்தையும் நகைச்சுவையுடன் சொல்லக்கூடியவர்.

மொழிகளின் காதலி என்று உங்களைச் சொல்கிறார்களே?
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ், பிரெஞ்ச் தெரியும். இத்தனை மொழிகள் எனக்கு தெரிவதற்கு முக்கியக் காரணம் என்னுடைய அப்பா அடிக்கடி இடம்மாறி பணியாற்றியதுதான்.

விதவிதமான சேலை கட்டுவதுடன், கட்டுகிற முறையிலும் விதவிதமாக கட்டி வந்து நிகழ்ச்சியில் கலக்குகிறீர்களே? உங்களுக்கு உண்மையிலேயே சேலை கட்ட ஆசை உண்டா?
சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வித வாசனை உண்டு என்பது உண்மை. சேலை கட்டும்போது பெண்மையின் இன்னொரு வடிவமாக பெண்கள் மாறுகிறார்கள் என்பது என் கருத்து. விதவிதமான ஸ்டைலில் சேலையை யாரும் கட்டுவதில்லை. ஒன்றிரண்டு முறைகளில் கட்டுவார்கள். நாங்கள் புதுப்புது ஸ்டைலை அறிமுகப்படுத்துகிறோம். இதற்கான ஐடியாவை எங்கள் டிசைனர் செய்வார். சில நேரங்களில் நான் செய்வதும் உண்டு.

கவர்ச்சிக்காக பெண்களைத் தொகுப்பாளினியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறதே?
அழகு எங்கிருந்தாலும் அதனை ஆராதனை செய்யவேண்டும். மென்மையும் அழகும் சேர்ந்தது பெண்மை. இதனால்தான் பெண்களை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இதில் தவறெதுவும் இல்லை.

சினிமாவுக்குப் போகிற எண்ணம் உண்டா?
சினிமா பக்கம் போகமாட்டேன். இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. எனக்கு விருப்பமில்லை அவ்வளவுதான். மாடலிங் வேண்டுமானால் செய்வேன். ஒரு சில விளம்பரங்களுக்கு மாடலிங்கும் செய்திருக்கிறேன்.

உங்கள் ரோல்மாடல்?
இந்த மீடியாவுக்கு, நான் "நியூ பார்ன் பேபி'. எனக்கு ரோல்மாடல் என்று யாரும் இல்லை. செய்வதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதைத்தான் கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகிறேன்.

No comments: