Monday, December 3, 2007

காற்றின் மொழி... அனுவின் மொழி..!



"மொழி படத்தில் வரும் "காற்றின் மொழி' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்'' -என்று மொழியும் "அனு'வின் மொழியும் காற்றின் மொழிதான்! கவிதையின் மொழிதான்! ரேடியோ ஒன் எஃப்.எம்மில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை அனுவின் ராஜ்யம்தான். மூன்று மணி நேரம் போவதே தெரியாமல் மென் காற்றாய் வீசும் இவர் நிகழ்ச்சி. ஆர்.ஜே. என்றாலே "யா...ஊ...' என்று தொண்டைக் கிழிய கத்துவது என்கிற எழுதப்படாத விதிகளுக்கு மாறாக இதமாகப் பேசுவார். இதயப்பூர்வமாகச் சிரிப்பார். இப்போது நம்மிடமும்:

உங்கள் குடும்பம்?
கணவர் அச்சுதராமன், இசையமைப்பாளர். விளம்பரங்களுக்கும், சில படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இவர் இசையமைப்பில் சில ஜிங்கில்ஸ்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறேன்.

ஆர்.ஜே. ஆர்வம் எப்படி வந்தது?

சின்ன வயதிலிருந்தே கர்னாடகச் சங்கீதம் கற்றுக்கொண்டு வருகிறேன். நன்றாகவும் பாடுவேன். இதன்காரணமாக இயல்பாகவே எனக்கு மேடை மீதான பயங்கள் எதுவும் வந்ததில்லை. பள்ளியில் படிக்கிறபோது எல்லாக் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறேன். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் எம்.ஏ எக்னாமிக்ஸ் படிக்கிறபோதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்நிலையில் சூரியன் எஃப்.எம்.மில் ஆர்.ஜே. தேர்வு செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டு விண்ணப்பித்திருந்தேன். பல்வேறுகட்ட நேர்முகத் தேர்வுக்குப் பிறகு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

உங்களைத் தேர்வு செய்ததற்கான காரணம்? ஆர்.ஜே.வுக்கானத் தகுதிகள்?

இரண்டுக்கும் ஒரே பதில்தான். குரல். நல்ல குரல்வளத்துக்காகத்தான் தேர்வு செய்யப்பட்டேன். ஏதோ கத்திப் பேசினால்தான் ஆர்.ஜே. என்கிற எண்ணம் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. அப்படித்தான் பலரும் பேசுகிறார்கள். அது எனக்குப் பிடிக்காது. நடைமுறை வாழ்க்கையில் எப்படிப் பேசுகிறோமோ... அப்படித்தான் நிகழ்ச்சியின்போதும் பேசுவேன். நான் தொகுத்து வழங்குகிற நிகழ்ச்சிகள் வெற்றிபெறுவதற்கும் இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். ஆர்.ஜே.வாக விரும்புகிறவர்களுக்கு நல்ல குரல்வளம் இருந்தாலே போதும்.

வெற்று பேச்சாய் பேசி, ஏதாவது ஒரு பாட்டு போடுகிற மாதிரியான நிகழ்ச்சிகளாவே இருக்கின்றனவே?

மூன்று மணிநேரம் நான் தொகுத்து வழங்குகிற நிகழ்ச்சியில் இடம்பெறுகிற பகுதிகள் எல்லாமே நேயர்களுக்குப் பயனுள்ள தகவல்களைத் தருகிறவையாகத்தான் இருக்கும். அதற்காகச் சமையல் டிப்ஸ் தருகிற செய்திகளாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். நிகழ்ச்சி தொடங்குகிறபோது ஒரு சிந்தனையோடுதான் தொடங்குவேன். அதற்காகத் தத்துவக் களஞ்சியமாகப் பேசுவேன் என்று நினைக்கவேண்டாம். இயல்பான உதாரணங்களுடன் கூடிய கருத்துகளாகச் சொல்வேன்.
ஊடகத்துறை என்பது மிகவும் பலம் வாய்ந்த துறை. இதைத் தவறான கருத்துகளைப் பரப்பக்கூடிய, நம் நாட்டினுடைய பண்பாடுகளைச் சிதைக்கக்கூடிய ஒன்றாகப் பயன்படுத்தக்கூடாது என்றே நினைக்கிறேன். நாம் பேசுகிற ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு விளைவு ஏற்படுத்தக்கூடியவை என்பதை நான் நன்றாகவே அறிவேன். இதனால் நான் மிகவும் கவனத்துடனே பேசுகிறேன். நான் வழங்குகிற நிகழ்ச்சியில் ஒன்றை மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது "எதிர்பார்ப்பு இல்லாமல் சேவை செய்யும் சிறந்த மனிதர்' ஒருவரைத் தேர்ந்தெடுப்பதைத்தான்.
இதை வேறு எந்த வானொலியும் செய்வதாகத் தெரியவில்லை. மாதத்திற்கு ஒருவரைத் தேர்வு செய்கிறோம். தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒருவகையில் மக்களுக்குச் சேவை செய்திருக்க வேண்டும். இதுவரை நான்கு பேரைத் தேர்ந்தெடுத்து பரிசுக் கொடுத்திருக்கிறோம். இதைப்போல என்னுடைய நிகழ்ச்சியில் "அனு பஞ்ச்' என்று ஒரு பகுதி உண்டு. பின்னணியில் டிஷ்யூம்... டிஷ்யூம் சத்தத்துடன் சில தவறுகளைச் சுட்டிக்காட்டுவேன். இதற்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

எங்களுக்காக ஒரு பஞ்ச்?

பணத்தில் எதுவும் எழுதக்கூடாது என்பது ரிசர்வ் பேங்க் விதி. யார் கேட்கிறார்கள். சோகக் கதை, சொந்தக் கதை, காதல் கதை, கவிதை எனக் கண்டதையும் எழுதுகிறார்கள். சாதாரணமானவர்கள் இப்படி எழுதுவதைக்கூட விட்டுவிடுங்கள். பேங்கில் வேலை பார்ப்பவர்கள் பணத்தை எண்ணி முடித்து கடைசியாக எவ்வளவு ரூபாய் என்பதையும் குறித்து வைப்பார்கள். இதுதான் உச்சபட்ச வேடிக்கை என்று குறிப்பிட்டுக் காட்டுவேன்.

நேயர்களின் அன்பு தொல்லையைச் சமாளித்த அனுபவம்?

பெரிதாய் நேயர்கள் தொந்தரவு செய்வதில்லை. அப்படித் தொல்லையாய் பேசுகிற நேயர்களின் தொடர்பைத் துண்டித்துவிடுவோம். நேரில் சந்திக்கும் சில நேயர்கள் எங்களுக்கு கவுன்சிலிங் தாருங்கள் என்று கேட்பார்கள். இதுதான் எனக்குச் சற்று ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று சொல்லி சமாளித்துவிடுவேன்.

திரைப்படத்துறை பக்கம் வருகிற எண்ணம் இருக்கிறதா?

திட்டமிட்டு எதுவும் செய்வதில்லை. இப்போது வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன். திரைப்படத்துறையில் பாடுகிற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாடுவேன்.

No comments: