Saturday, December 22, 2007

ஒரு 'சில்' சந்திப்பு




"இனி என் எல்லாச் சந்திப்புகளும் சில்லுன்னு ஒரு சந்திப்புதான்'' என்கிறார் நடிகை ஷார்மிளா. விஜய் டி.வி.யில், "சில்லுன்னு ஒரு சந்திப்பு' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்ச்சி வருகிற திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது. வாய்ப்பு இல்லாத நிலையில் திரைத்துறையில் இருந்து சின்னத்திரைக்குப் பலர் தாவுவது வழக்கம். ஆனால் "இதயதுடிப்பு', "வதம்' உட்பட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிற நிலையிலும் சின்னத்திரையிலும் கவனம் செலுத்துகிறார் ஷார்மிளா. அவருடன் அமைந்த சில்லுன்னு ஒரு சந்திப்பு:

வழக்கமான டாக் ஷோ நிகழ்ச்சிகளிலிருந்து "சில்லுன்னு ஒரு சந்திப்பு' எந்தவிதத்தில் வித்தியாசப்படுகிறது?
இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. சாதனையாளர்களையும் அவர்கள் பற்றிய விவரங்களும் எல்லோருக்கும் தெரியும். சாதனையாளர்கள் உருவாவதற்கு ஏணிப்படிகளாய் இருந்தவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்? சாதித்த பிறகு எத்தனை பேர் தங்கள் ஏணிப்படிகளை நினைவுகூர்கிறார்கள்? இந்த நிகழ்ச்சி மூலம் ஏணிப்படிகளை நாங்கள் கவுரவிக்க இருக்கிறோம். நடிகர் மாதவன் பேட்டியை ஒளிபரப்புகிறோம் என்றால் அவர் வெற்றிபெறுவதற்கு யார் உறுதுணையாக இருந்தாரோ அவரையும் நிகழ்ச்சியில் வரவழைத்து, எந்தெந்த வகையில் எல்லாம் மாதவன் வெற்றிபெற உதவினார். அவர் பார்வையில் மாதவனின் ப்ளஸ் என்ன? மாதவன் மாற்றிக்கொள்ள வேண்டியது எது என்பதையெல்லாம் அலசுகிறோம்.

சாதனையாளர் என்றால் திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமா?
அதுதான் இல்லை. மருத்துவம், பொறியியல் என எல்லாத்துறை சாதனையாளர்களும் இந்த நிகழ்ச்சியில் வருவார்கள். மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இந்த நிகழ்ச்சி இருக்கப் போகிறது.

தொடர்பில்லாத துறைகளைச் சேர்ந்தவர்களோடு கலந்துரையாடுகிறபோது உங்களுக்குச் சிரமமாக இருக்காதா?
சாஃப்ட்வேர் என்ஜினியரிங் படித்துள்ளேன். படிப்பு வாசனையும் எனக்கு உண்டு என்பதால் ஓரளவு எனக்கு அனைத்துத் துறை தொடர்பான விஷயங்களும் தெரியும். இந்நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்தபிறகு, எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறேன். புத்தகத்தைப் படித்தெல்லாம் நிகழ்ச்சியை வழங்குவதால் ஏதோ இறுக்கமான நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். ஜாலிக்கு ஜாலி... ஜோலிக்கு ஜோலி என்கிற வகையில் இருக்கும்.

இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இதனால் எனக்குப் பொது அறிவு அதிகம் இருப்பதாக அவர்கள் கருதியிருக்கலாம். இரண்டாவது இயல்பாகப் பழகக்கூடிய ஒரு நடிகையைத் தேடியிருக்கிறார்கள். மூத்த நடிகைகளைப் போடுகிறபோது, வருகிற சாதனையாளர்கள் அவர்களிடம் இயல்பாகப் பேசுவதற்குச் சிரமமாக இருக்கும். அதைப்போல நடிகைகளும் அவ்வளவாகச் சாதனையாளர்களோடு இறங்கி பேசமாட்டார்கள். நான் அப்படியில்லை. நடிகை என்கிற பந்தா எனக்குச் சிறிதும் இதுவரை இருந்ததில்லை. இதனாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.

வாய்ப்பு இல்லாதபோதுதான் எல்லோரும் சின்னத்திரை பக்கம் வருகிறார்கள். நீங்கள்?
நான் கதாநாயகியாக நடித்த "இதயதுடிப்பு' என்கிற படம் வெளியாக உள்ளது. "வதம்' உட்பட நாலைந்து படங்களில் தமிழில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு வரவில்லை. சீரியலுக்கு நடிக்க வந்தால்தான் நீங்கள் சொல்வது பொருந்தும். சங்கீதா, கனிஹா போன்றோர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டே சினிமாவில் நடிக்கவில்லையா? அதைப்போல்தான் நானும் வந்துள்ளேன். இன்னொரு வகையில் சினிமாவில் நடிப்பது என்பது கிணற்றுத் தவளை வேலை போல. இந்நிகழ்ச்சியை வழங்குகிறபோது உலக அறிவு நமக்குக் கிடைக்கிறது. இது எனக்குப் பிடித்திருக்கிறது.

சீரியலில் நடிக்கவே மாட்டீர்களா?
க்ளிசரினுக்கு வேலை இல்லாத நல்ல கதையாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதுவும் இப்போது இல்லை. பெரிய திரையில் ஒரு வலம் வந்துவிட்ட பிறகுதான். நடிப்புக்கு அடுத்ததாக எழுத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. ஆங்கில கவிதைகள், கதைகள் எழுதி வருகிறேன். "திசை' என்கிற ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதினேன். அந்த படம் எடுக்க முடியாமல் போய்விட்டது. அடுத்த வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன். நடிப்பிற்கு பிறகு கதை வசனம் எழுதி நானே படங்களை இயக்குவேன். இதுதான் என்னுடைய அடுத்த இலக்காக இருக்கும்.

அப்போதாவது க்ளிசரினுக்கு வேலை இல்லாத சீரியல்கள் எடுப்பீர்களா?
மெகா சீரியல்கள் என்னால் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதுகிறேன். மூன்று நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை எடுக்கக்கூடிய தகுதி மட்டும்தான் என்னிடம் இருப்பதாக நினைக்கிறேன்.

உங்கள் ஏணிப்படி யார்?
என் அப்பா. என் அம்மாவுக்குக்கூட என்னைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். என் அப்பாவுக்குதான் என்னைப் பற்றி எல்லாம் தெரியும். நான் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணமும் என் அப்பாவே.

No comments: