Tuesday, November 24, 2015

400 பாடல்களும் 400 தங்கக் கட்டிகள் - சா.கந்தசாமி


புத்தகம் படிப்பது எப்படி?

ஐரோப்பியக் குடும்பங்களின் தின நிகழ்வு இது. குழந்தைகளின் 3 வயதில் இருந்து 12 வயது வரையில் அவர்கள் தூங்குவதற்கு முன்பு, தாயோ, தந்தையோ அல்லது பணம் வசதி படைத்தவர்கள் தாதிகளையோ வைத்து புத்தகத்தைப் படித்துக் காட்டுகின்றனர். அது பாடப் புத்தகம் இல்லை. கதை, கட்டுரை, கவிதை போன்ற புத்தங்கள். அதைக் கேட்டுக் கேட்டு படிப்பின் மீது ஒரு ருசியை குழந்தைகள் தங்கள் மனதில் ஏற்றிக் கொள்கின்றனர். 12 வயதுக்கு மேல் அந்தச் சிறுவர்கள் தாமே இதரப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி விடுகின்றனர். இந்தப் பழக்கத்தை இங்கும் பின்பற்றினால், புத்தகம் படிப்பது எப்படி என்ற கேள்விக்கு இடம் இருக்காது.


சிறந்த புத்தகத்தைத் தேர்வு செய்வது எப்படி?

ஆரம்பக் காலத்தில் நான் நூலகங்களுக்குச் சென்று, பல புத்தகங்களைப் படித்து, அதன் பிறகே எனக்கான புத்தகத்தைக் கண்டறியத் தொடங்கினேன். கொஞ்சம் சிரமப்பட்டு சில புத்தகங்களைப் படித்துவிட்டால், உங்கள் சொந்த அறிவே சொல்லும் எது சிறந்த புத்தகம், எது தரமில்லாதது என்று.


புத்தகம் புரியாவிட்டால் என்ன செய்வது?

புத்தகம் புரியாமல் இருக்காது. மொழியைத்தான் புரியவில்லை என்கிறீர்கள். ஆனால் உண்மையில் ஒரு புத்தகம் என்பது மொழியிலேயே இல்லை. மொழியில்தான் எழுதப்படுகிறது என்றாலும், புத்தகத்தில் மொழி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உங்கள் அறிவு கண்டுபிடிக்க முடியாதது. அறிவுக்கு மொழியில்லை. மொழியை அறிவு கிரகித்துக் கொள்ளும். மேலும் எந்த மொழியில் இருந்து ஒரு படைப்பு மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும், அந்தப் படைப்பை மனசு மொழிபெயர்த்துக் கொள்வதை நீங்கள் உணரலாம்.
எனினும் படிப்பது கடினமான வேலை. அதில் ருசி உண்டாக்கிக் கொண்டால் போதும். புத்தகம் புரியும்.

வாழ்நாளுக்குள் எல்லாப் புத்தகங்களையும் படித்து விட முடியுமா?

முடியாது.அனைத்தையும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.


பாடப்புத்தகத்தை விட, இதரப் புத்தகங்கள் பயனளித்துவிடுமா?

மதிப்பெண் வாங்குவதற்காக நினைவில் இருந்து எழுதுவதுதான் பாடப் புத்தகம். ஆனால் இதரப் புத்தகங்கள்தான் மனதுக்குள் சென்று யோசிப்பதற்குத் தூண்டும். எந்தத் தொழிலிலும் சொந்த அறிவின்படி முடிவு எடுப்பதற்கு இதரப் புத்தகங்களே பயன்படும்.


ஒரு படைப்பு சாகாவரம் பெற்றதாக இருக்க வேண்டியது அவசியமா?

அவசியம் ஒன்றுமில்லை. ஆனால் நல்ல புத்தகம் என்றால் இருக்கும். நம்முடைய முப்பாட்டனார், பாட்டி தற்போது இல்லை. எனினும், நம்முடைய மனைவியாக,பேத்தியாக இருந்துகொண்டே உள்ளனர். பேச்சு அவர்கள் கொடுத்ததுதான். எனவே நல்ல புத்தகம் இருக்கவே செய்யும்.


ஒரே ஒரு புத்தகமாக உங்கள் தேர்வு?

சங்க இலக்கியப் பாடல்கள். குறிப்பாக குறுந்தொகை. அதில் உள்ள 400 பாடல்களும் 400 தங்கக் கட்டிகள்.

Thursday, November 19, 2015

உக்கிர எழுத்துக்கான தருணம் - அழகிய பெரியவன்


தலித் இலக்கியம், தலித் எழுத்தாளர் என்ற வகைமை தேவையா?

பொதுவாகத் தேவை இல்லை என்றுதான் கூறுவேன். ஆனால் அந்த அடையாளம் எப்போது தேவைப்படுகிறது என்றால், ஒருவரைச் சரியாக அங்கீகரிக்காதபோது, அந்த அடையாளம் தேவைப்படுகிறது. அந்த வகையில் தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல், இந்திய அளவிலான இலக்கியத்தில்கூட, தொடக்கக் காலத்தில் இருக்கக்கூடிய இலக்கியப் பதிவுகள் அனைத்துமே மேட்டுக்குடியினரால் எழுதப்பட்டதுதான். அதில் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான, சரியான சித்திரம் இல்லாமல் இருந்தது. தலித்துகளும் இலக்கியம் சார்ந்த விஷயத்தில் அதிகமாக எழுதாமல் இருந்தனர். அந்த அடிப்படையில் தலித்துகளும் தங்கள் சொந்த அனுபவங்களையும் எழுதுவோம் என்று 90-களில் எழுத ஆரம்பித்தனர். அந்த வகையில் ஓர் அடையாளப் பூர்வமாகத்தான் தலித் எழுத்துகளைப் பார்க்க முடியும். ஆனால் இதை ஒரு தேவையான வகைமை என்று நான் சொல்லமாட்டேன்.

தலித் படைப்புகள் மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயம் ஏற்படுத்த முடியும். இலக்கியம் என்பது அடிப்படையில் மனதோடு உறவாடக்கூடிய ஒன்று. புத்தகத்துக்கும் வாசகனுக்குமான உறவு என்பது மிகவும் அந்தரங்கமானது. தனித்துவமானது. விருப்பு வெறுப்புகள் அற்று, வாசிப்புக்கு என்றுள்ள அரசியல் எல்லாம் அற்று, ஒரு வாசகன் புத்தகத்தை நேர்மையாக அணுகும்போது, நிச்சயம் அந்த வாசகன் மனதில் பெரிய மாற்றத்தைப் படைப்பு ஏற்படுத்தும். எல்லா இலக்கியத்துக்குமே மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி உண்டு. அது தலித் இலக்கியத்துக்கு உண்டு.

தலித் படைப்புகளை தலித் அல்லாதவர்கள் எழுதுவது சரியா?

தாராளமாக எழுதலாம். ஆனால் அனுபவங்கள் எழுத்தாகும்போது, அது சொந்த அனுபவமாக இருக்கும்பட்சத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக வெளிப்படும். அந்த வகையில் இந்திய சமூகத்தில் தலித்துகள் படக்கூடிய அவமானங்கள், வன்கொடுமைகளைத் தலித்துகள் எழுதும்போதும்தான் அது சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் அது முதல் கை அனுபவம். பார்த்து எழுதுவதற்கும், அனுபவித்து எழுதுவதற்கும் வேறுபாடு உள்ளது. அது மெல்லிய கோடுதான். அதனால் தலித் படைப்புகளை தலித்துகள் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறேன். அதேசமயம் தலித்துதான் தலித் படைப்புகளை எழுத வேண்டும் என்று நான் வாதிடவில்லை. தலித் அல்லாதோர் எழுதும் எழுத்துகளை தலித் சார்பு எழுத்துகள் என்று சொல்லலாம்.

தலித்துகள் எழுத்தாளர்களின் படைப்பு என்பது சுயபச்சாதாபம் கொண்ட எழுத்தாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அப்படி ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலித்துகள் மிக நீண்ட காலமாகவே தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அது சுயபச்சாதாபமாகவோ, அழுகையாகவோ, கோபமாகவோ இருக்கலாம். ஆனால் அது நீண்ட காலப் போக்கில் வேறு பல பரிமாணங்களையும் எடுக்கும். எல்லா மனிதர்களையும் போல, தலித்துகளுக்கும் தனித்துவங்கள் இருக்கின்றன. சுயபச்சாதாப படைப்புகள் ஒன்றிரண்டு வரலாம். ஆனால் தற்போது தலித்துகள் தங்கள் எழுத்துகளை மிக உக்கிரத்தோடு வெளிப்படுத்தும் தருணம் கனிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படியான படைப்புகளும் வருவதற்கான சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. எனவே சுயபச்சாதாப எழுத்து என்பது மேலோட்டமான மதிப்பீடாகும்.

பொதுதன்மைக்குள் வராமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி மட்டுமே எழுதுவதை, சிறந்த படைப்பாகக் கருத முடியுமா?

பொது, தனி என்று பிரிக்க முடியாது என்று நினைக்கிறேன். தனி என்று சொல்வது பொதுவுக்குள் அடக்கமாக இருக்கிறது. உண்மையில் பொது என்று நீங்கள் கூறுவதை, அணுகி நெருங்கிப் பார்த்தால் தனியாகத்தான் இருக்கும். எனவே, பொது, தனி என்பதெல்லாம் இல்லை. ஒரு மனிதருக்குக் கையிலோ, காலிலோ அடிபட்டிருக்கிறது என்றால், அது மருத்துவ ரீதியாக தனித்தனியாக இருக்கலாம். ஆனால் அந்த மனிதனுக்கு உடல் முழுவதும்தானே பாதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் இதைப் பார்க்க வேண்டும்.

அயோத்திதாசப் பண்டிதரைப் போன்று சிந்தனைவாதி என்ற நிலையிலோ, செயற்பாட்டாளர்கள் என்ற நிலையிலோ தற்போது தலித்துகள் யாரும் முதன்மையான நிலையில் இல்லையே?

எல்லாக் காலகட்டத்திலுமே, அந்தந்த தரப்பு மக்களின் ஒட்டுமொத்த குரலைப் பிரதிபலிப்பதற்கு கட்டாயம் ஒரு தலைவரோ, சில தலைவரோ இருப்பார்கள். இது வரலாற்று நீதி.
ஆனால் அவர்களின் செயல்பாட்டையும், களத்தையும் காலம்தான் தீர்மானிக்கிறது. ஒரு காலகட்டத்தில் இருக்கும் தலைவர்களைக் கொண்டு இன்னொரு காலகட்டத்தில் இருக்கும் தலைவர்களை மதிப்பிட வேண்டாம் என்று நினைக்கிறேன்.

Thursday, November 12, 2015

உணர்வுபூர்வமான கலை மொழியாக்கம் - எம்.ஏ.சுசீலா

நல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணம் என்ன?

மூலத்தைச் சிதைக்காமல் கொடுப்பதாகும். அது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வு படிப்பவருக்கு ஏற்படக்கூடாது. கதாபாத்திரங்களின் பெயர்கள், இடங்களைப் பற்றிய வர்ணனைகள் வேறுபாடாக இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைச் சரியாக தமிழ் மொழிக்குக் கடத்திவிட்டாலே போதும். அது அந்நிய மொழி படைப்பு என்ற உணர்வு தோன்றாது. உலகம் முழுவதும் மனித உணர்வுகள் என்பவை பொதுவானவைதான். எனவே மூலத்தில் உள்ள உயிரோட்டத்தை, உணர்ச்சிக் கொந்தளிப்பை, அதன் தரிசனத்தை அப்படியே தக்க வைப்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.ஒரு படைப்பை மொழியாக்கம் செய்வதன் வழியாக மொழிபெயர்ப்பாளர் அடைவது என்ன?

முதலில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியப் பணியைத் தொடங்கினேன். 80-க்கும் மேற்பட்ட கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. 2008-ஆம் ஆண்டு தான் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தேன். அதற்குப் பிறகு "அசடன்' மொழிபெயர்த்தேன். முதல் முயற்சியாக "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தபோது, என்னுடைய சொந்த படைப்புத்திறனை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் மொழிபெயர்த்து முடித்த பிறகுதான் எனது மொழியைக் கூர்மைப்படுத்த அது உதவியிருக்கிறது என்று புரிந்தது. மொழிபெயர்ப்புக்காக திரும்பத்திரும்ப அந்நாவலைப் படிக்கும்போது, தஸ்தயேவஸ்கி சொல்லும் விஷயத்துக்குப் பக்கத்தில் போக முடிந்தது. அதனால் சொந்தமாக வேறு படைப்பு எழுதும்போது என்னுடைய பார்வை விசாலப்பட்டது. மொழியாக்கத்துக்குப் பொருத்தமாக வேறுவேறு சொல்லைத் தேட வேண்டியிருந்தது. தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அதனால் ஒரே சொல்லைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு சொற்களை பயன்படுத்தும்போது, என்னுடைய மொழியும் வளப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.ஒரு படைப்பின் வேர்களை மொழியாக்கத்தின் மூலம் தொட்டுவிட முடியும் என்று கருதுகிறீர்களா?

படைப்பின் வேர்களைத் தொடுவதற்கு முயற்சிகள் செய்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சொந்த படைப்பை எழுதினாலும்கூட, அது ஒரு சில மனங்களையே தொடுகிறது. ஒத்த அலைவரிசை இல்லாத மனங்களைத் தொடுவதே இல்லை. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.கலாசாரம், பண்பாட்டு ரீதியாக ஒரு படைப்பு வேறுபட்டிருக்கிறது என்பதற்காகவும், நீடித்த விவரணை என்பதற்காகவும் ஒரு மொழிபெயர்ப்பாளன் அந்தப் படைப்பைச் சுருக்கலாமா?

சுருக்கக் கூடாது. முன்பு அப்படிச் செய்துகொண்டிருந்தனர். அசடன், கரம்úஸாவ் சகோதரர்கள்கூட அப்படி தமிழில் வந்துள்ளது. சுருக்குவதால் நிச்சயம் ஜீவன் இல்லாமல் போய்விடும். ஒரு நாவலின் பல்வேறு பரிமாணங்களை தஸ்தயேவஸ்கி விஸ்தீரணம் செய்ய விரும்புகிறார். அந்த விஸ்தீரணத்தைக் குறைப்பதற்கு மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. சில பதிப்பகங்கள் கேட்பதாலும், சின்ன புத்தகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்கின்றனர்.அயல் மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் அளவு, தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாதது, ஏன்?

அதற்கான முயற்சி எடுக்காதது காரணமாக இருக்கலாம். வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்வதற்கான ஆற்றலைப் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக இருக்கலாம். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி நிறைய தமிழ் படைப்புகளை வங்காள மொழிக்குக் கொண்டு சென்றார். இதற்கு பன்மொழி ஆளுமை தேவையாக இருக்கிறது. அதனால் படைப்பாளிகளோ அல்லது மொழிபெயர்ப்பு செய்பவர்களோ அந்த ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறு மொழி தெரிந்தவர்களுக்கு படைப்பு ஊக்க மனநிலை இருக்க வேண்டும். மொழியாக்கம் செய்வதும் ஒரு படைப்புப் பணிதான். இந்த மனநிலை உள்ளவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.


குற்றமும் தண்டனையும், அசடன் இதில் எதன் மொழியாக்கம் சிரமமாக இருந்தது?

அசடனோடு ஒப்பிடும்போது, குற்றமும் தண்டனையும் சிறியதுதான். இது நேர்ப்போக்கில் போகும் கதை. குற்றம் செய்துவிட்டு, அது தொடர்பாக ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்லும் கதை. அதை 8 மாதத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஆனால் அசடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் எடுத்தது. அது திருகலான படைப்பு. நிறைய பாத்திரங்கள். மனச்சிக்கல்கள். நிறைய பிரெஞ்சு சொற்றொடர்கள் இருந்தன. அதனால் நிறைய பணியாற்ற வேண்டியது இருந்தது. ஆனால் குற்றமும் தண்டனையுமுக்குத்தான் நிறைய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். வாசகர் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்பு இருந்தாலும், அசடனே என்னை விருதுகள் பெறும் வரை அழைத்துச் சென்றது.

Sunday, November 8, 2015

ஒயர் கூடையை இழுக்கும் வீடுஐந்தாவது மாடியிலிருந்து
நரம்புக் கயிற்றில் ஒயர் கூடையைக் கட்டி
கீழே இறக்கி
மேலே இழுக்கிறாள்
மாடு மேய்ந்து
சினை தள்ளி
கன்று ஈன்று
பால் சுரக்கிறது
காபி வேண்டியவருக்குக் காபி
டீ வேண்டியவருக்கு டீ
தயிர் வேண்டியவருக்குத் தயிர்
நெய் வேண்டியவருக்கு நெய்
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
செடி முளைக்கிறது
மரம் செழிக்கிறது
அரிசி, பருப்பு, காய், கனி நிறைக்கிறது
புலாவ் கேட்டவர்களுக்குப் புலாவ்
சாம்பார் கேட்டவர்களுக்குச் சாம்பார்
கொழுக்கட்டை கேட்டவர்களுக்குக் கொழுக்கட்டை
கனிச்சாறு கேட்டவர்களுக்குக் கனிச்சாறு
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
சகலத்தையும் சுமந்து
செய்தித்தாள் வருகிறது
கொலை விரும்பியவர்களுக்குக் கொலை
கொள்ளை விரும்பியவர்களுக்குக்
கொள்ளை
கற்பழிப்பு விரும்பியவர்களுக்குக்
கற்பழிப்பு
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
ரகசியம் சேர்த்து
அஞ்சலில் பொட்டலம் வருகிறது
பரிசு ஆர்வலருக்குப் பரிசு
புத்தக ஆர்வலருக்குப் புத்தகம்
கூடையை இறக்கி
மேலே இழுக்கிறாள்
அட்டைப்பெட்டி நிரம்ப
ஆம்புலன்ஸ் விளக்கு அலற
மாத்திரை வருகிறது
கூடை தேவையுள்ளோருக்குக் கூடை
கயிறு தேவையுள்ளோருக்குக் கயிறு.


நன்றி: சொல்வனம்

Friday, November 6, 2015

மொழியைக் கடத்தும் எழுத்தாளன்! - நாஞ்சில்நாடன்
சங்கப் பாடல்கள் தற்கால வாழ்க்கைச் சூழலுக்கு பொருந்தக் கூடியதா?

வாழ்க்கையின் நுட்பமான உணர்வுகளைத் தற்காலத்தில் படிப்படியாக இழந்து வருகிறோம்.
அந்த நுட்பமான உணர்வுகளை மீண்டும் மீட்டெடுக்க சங்கப் பாடல்கள் உதவும்.
சங்கக் கால வாழ்க்கை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. மனிதத்தைப் போதித்தவை.
எனவே மனிதகுல மதிப்பீடுகளைத் தற்காலத்துக்குத் தோதாக அந்தப் பாடல்கள் மூலம் மீட்டெடுக்க முடியும்.
போர்கள் அப்போது நடந்த போதிலும் சங்கக் காலப் புலவன் போருக்கு எதிராகவே பாடியுள்ளான். இந்தக் கருத்தோட்டங்கள் தற்காலத் தமிழனுக்கும் உதவும்; படைப்பாளிக்கும் உதவும்.நவீன படைப்புகளைப் படைக்க விரும்பும் ஓர் எழுத்தாளன், சங்கப் பாடல்களில் ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியமா?
ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் குறைந்தபட்ச அறிவையாவது பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மொழிக்கு 3 ஆயிரம் வருடத் தொன்மை உண்டு. அந்தத் தொன்மையைச் சுமையாக நினைக்கும் ஆள்கள் தமிழில் இருந்தார்கள். அவர்களின் காலம் முடிந்துவிட்டது. ஆனால் நான் தொன்மையைப் பலமாக நினைப்பவன். தமிழ் மரபுகளையும், செல்வங்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்றால் ஒரு படைப்பாளி, 3 ஆயிரம் வருடத்துக்கு முன்பான மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்ற அறிவைப் பெற்றிருப்பது முக்கியம். இந்த அறிவையும், பெரும் சொற்செல்வங்களையும் சங்க இலக்கியத்தில் இருந்தே ஒரு படைப்பாளி பெறமுடியும்.
சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவிட்டால், அது புரிந்துவிடுகிறது. அதனால் ஆங்கிலத்திலேயே படித்துக் கொள்கிறோம் என்பவர்கள் பற்றி?
முத்தொள்ளாயிரம் முழுவதையும் ம.இலெ.தங்கப்பா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பென்குவின் பதிப்பாக வெளியாகியுள்ளது. சங்க இலக்கியத்தின் 18 நூல்களையும் முழுமையாக மொழிபெயர்க்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். திருக்குறளுக்குப் பல ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளன. இது தமிழர்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படும் என்பது சந்தேகமாக உள்ளது. மொழியாக்கம் என்பது தமிழ் தெரியாவர்களுக்காக செய்வதாகும். தமிழகத்திலேயே வாழ்ந்து, தமிழிலே கல்வி கற்ற பின்னும், சங்கப் பாடல்கள் புரியவில்லை என்பவர்கள் ஷெல்லி, பெர்னாட்ஷாவை மட்டும் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?சங்கப் பாடல்களைப் பாடப் புத்தகத்திலாவது படிக்கும் ஒரு தலைமுறை இருந்தது. தற்போது அந்தத் தலைமுறையும் இல்லை என்ற நிலை உள்ளதே?
இதற்கு அரசியல்தான் காரணம். பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெறுகிறவர்கள் பெரும்பாலும் அரசியல் சார்புடைய பேராசிரியர்களாகவே உள்ளனர். திராவிட இயக்கம் உள்பட எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பாரதிதாசன் முக்கியமான கவிஞராக உள்ளார். அல்லது இயக்கத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் முக்கியமானவர்களாக உள்ளனர். நான் தமிழில் எம்.ஏ. படித்தவன் இல்லை. ஆனால் தமிழை ஒரு மொழியாகக் கற்றவன். நான் படித்தபோது இருந்த மனப்பாடச் செய்யுளான கம்பனோ, தேம்பாவணியோ, சீறாப்புராணமோ, திருவருட்பாவோ, தாயுமானவர் பாடல்களோ தமிழ் மீது ஒரு காதலை உருவாக்கின. இன்றைக்கு அமைக்கப்படும் மனப்பாடப் பாடல்கள் முறையாக பண்டிதத் தமிழ் படித்தவர்களால்கூட மனப்பாடம் செய்ய முடியாதவை. மனப்பாடம் செய்வதற்கு என்று சில வகைகள் உள்ளன. ஆனால் இங்குள்ள மனப்பாடச் செய்யுள்கள் மாணவர்களைக் கொடுமைப்படுத்துவதாக உள்ளன. கம்பராமாயணத்தையே எரிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு அரசியல் சார்புடையவர்கள் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யும்போது, மொழிக்குப் பெரிய தீங்கு விளைகிறது.
இதுபோன்ற காரணங்களால்தான் மொழி மீதான கவர்ச்சியை மாணவர்கள் இழந்துவிடுகின்றனர். மொழியைச் சுமையாகக் கருதுகின்றனர். அதற்கு நாம்தான் பொறுப்பு. மாணவர்கள் இல்லை.
சங்க இலக்கியத்தால் சாதிக்க முடியாத ஒன்றை, நவீன இலக்கியம் ஏதாவது ஒன்றிலாவது சாதித்துவிட்டது என்று சொல்ல முடியுமா?
அப்படி ஒப்பிடவே முடியாது. 3 ஆயிரம் வருட மரபு கொண்டது நமது இலக்கியம் என்றால் ஒவ்வொரு நூற்றாண்டிலும், அந்த மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு புலவனே கடத்துகிறான். மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்துபவர்களாகப் படைப்பிலக்கியவாதிகளே உள்ளனர்.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை பாடியவர்கள் அதைத் தொடர்ந்து பதிணென்கீழ் கணக்கு எழுதிய புலவர்கள், ஐம்பெரும் காப்பியங்கள் எழுதிய புலவர்கள், அதைத் தொடர்ந்து வரும் ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன், சிற்றிலக்கியங்கள் படைத்தவர்கள். அதைத் தொடர்ந்து பாரதி என அவரவரும் தன்னுடைய மொழி ஆளுமையால் அடுத்த நூற்றாண்டுக்கு மொழியைக் கடத்தியுள்ளனர். இப்போது தீவிரமாக எழுதி வரும் எழுத்தாளர்கள், ஏற்கெனவே உள்ள மொழியைத் தக்க வைத்துக் கொள்வதுடன், அடுத்த நூற்றாண்டுக்கு மொழியைக் கடத்தவும் செய்கின்றனர். இது ஒருவகையில் ரிலே ரேஸ் ஓடுவதுபோல. சங்கப் புலவர்கள் அவர்களால் முடிந்த தூரத்துக்கு ஓடினர். பிறகு அந்தக் கோலைச் சமயக்குரவர்கள் வாங்கிக் கொண்டு ஓடினர். அப்புறம் பாரதி ஓடினார். அதன் பிறகு நவீன எழுத்தாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படித்தான் மொழி தன் இருப்பையும், உயிரையும் தக்கவைத்துக் கொள்கிறது.
ஆனால் மொழியைக் கடத்தும் படைப்பிலக்கியவாதியை எந்த அரசியல் இயக்கமும் பொருள்படுத்துவதுகூட இல்லை.
மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் படைப்பாளிகள் யாரும் செயல்படவில்லை. ஆனால் எங்கள் செயல்பாட்டின் விளைவுகள் அவை.
எனவே சங்க காலப் புலவனை விட, நவீன இலக்கியவாதிகள் மேம்பாட்டவர்களா என்ற ஒப்பீடு தேவையில்லை.

Wednesday, November 4, 2015

வாசகன் என்பவன் துணை எழுத்தாளன் - எஸ்.ராமகிருஷ்ணன்
2014-ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின்போது தினமணிக்காக எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், சா.கந்தசாமி, அம்பை, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், குடவாயில் பாலசுப்பிரமணியன், இந்திரன், எம்.ஏ.சுசீலா, பழ.அதியமான், அழகியபெரியவன் ஆகியோரிடம் பேட்டி எடுத்தேன்.
சா.கந்தசாமி தவிர்த்து மற்ற அனைவரிடமும் தொலைபேசி வாயிலாகவே கேட்டுப் பெற்றேன்.
தொடக்கநிலை வாசகர்களின் மனவோட்டத்துக்கான கேள்விகளே அனைவரிடமும் எழுப்பப்பட்டன.
ஆனால், எல்லா நிலை வாசர்களுக்குமான பதில்களே கிடைத்தன.


பேட்டி:எஸ்.ராமகிருஷ்ணன்

ஓர் இலக்கியப் படைப்புக்கு நோக்கம் இருக்க வேண்டுமா?

நோக்கம் கட்டாயம் தேவை. அது வெளிப்படையாகவும் இருக்கலாம், மறைமுகமாகவும் இருக்கலாம். அனுபவம், அன்பு, உணர்ச்சி, கற்பனை, வரலாறு ஆகியவற்றைப் பகிர்வதுதானே நோக்கம்.
ஓர் எழுத்தாளன் தான் கற்றதை, தான் பார்த்த உலகத்தை இன்னொருவரோடு பகிர விரும்புகிறான். இந்தப் பகிர்வு இல்லாத இலக்கியப் படைப்புகளே இல்லை. அதேசமயம் நோக்கம் என்பதற்கு கூடுதலாக வேறோர் எண்ணமும் இருக்கிறது. ஒரு கருத்தை, தத்துவத்தை, கோட்பாட்டை, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற விஷேசமான எண்ணமும் எழுத்தாளனுக்கு இருக்கலாம். இதுவும் ஒரு நோக்கம்தான். என்னைப் பொருத்தவரை எந்தப் படைப்புமே நோக்கம் எதுவும் அற்று எழுதப்படுவது இல்லை. சமூகத்தின் மீதான எதிர்வினையை பற்றி எழுதும்போதுகூட ஒரு நோக்கம் வரத்தானே செய்கிறது.
உலகத் தரத்தை தமிழ் நாவல்கள் எட்டிவிட்டன என்று நினைக்கிறீர்களா?


உலகத் தரம் என்ற ஒன்றே இல்லை. எல்லா நாடுகளின் இலக்கியத் தரமும் ஒன்று சேர்ந்துதான் உலகத் தரத்தை உருவாக்குகிறது. இது வணிகச் சந்தையில்லை. ரஷ்ய மக்களுடைய கலாசாரம், சமூகப் பொருளாதாரம், அரசியல் பின்புலங்கள் சார்ந்து படைக்கப்படும் படைப்புகள், அந்நாட்டு இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளாக இருக்கின்றன. இதுபோல ஒவ்வொரு நாட்டினரும், அவரவர் நாட்டுப் படைப்புகளை முக்கிய படைப்பாகக் கூறுகின்றனர். அந்தப் படைப்புகளுக்கு உலகு தழுவிய வாசகர்களும் கிடைக்கின்றனர். தமிழில் நாவல் என்ற வடிவம் உருவாகி, நூறு வருடங்கள்தான் ஆகின்றன. இந்த நூறு வருடங்களில் கணக்கு எடுத்துக் கொண்டாலே, தமிழின் முக்கியமான நாவல்களாக நாற்பதைக் குறிப்பிட முடியும். தமிழரின் வாழ்க்கையை, தமிழ் உலகை இந்த நாவல்கள் சொல்லியிருக்கின்றன. புனைவு இலக்கியத்தின் பல்வேறு சாத்தியக்கூறுகளைத் தமிழ் நாவலாசிரியர்கள் பரிசோதித்து பார்த்துள்ளனர். இது பெரிய வெற்றி என்றே கூறுவேன். தமிழ் நாவல்கள் ஆங்கிலத்தில் வெளியாகி, உலக அளவில் வாசிப்பு வரும்போதுதான், உலக அளவில் இந்த நாவல்களுக்கு என்ன இடம் இருக்கிறது என்பதைச் சொல்ல முடியும்.
ஆனால் தமிழ் நாவல்கள் இந்திய அளவில்கூட இன்னும் சரியாகப் போகவில்லை.
உலகின் முக்கியமான 13 மொழிகளில் தமிழ் நாவல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டால்தான், பரந்த வாசிப்புக்கு உள்ளாகும். அந்தத் தளத்துக்குத் தமிழ் நாவல்கள் இன்னும் செல்லவில்லை.


ஜனரஞ்சகப் படைப்புக்கும், இலக்கியத் தரத்துக்கும் என்ன வேறுபாடு? இரண்டு படைப்புகளைப் படிக்கும்போதும் கண்ணீர் வருகிறதே?


ஜனரஞ்சக எழுத்தின் நோக்கமே பொழுதுபோக்குக்காகவும், படித்து மறப்பதற்காகவும் எழுதுவதாகும். பொழுதுபோக்குகளுக்கு இடையே பாப்கார்ன் சாப்பிடுவதுபோலதான். ஆனால் பாப்கார்னையே உணவாகச் சாப்பிட முடியாது. உணவு என்பதும் தேவைதான். ஆனால் எல்லா நேரத்திலும் உணவை மட்டுமே சாப்பிட முடியாது.
எனவே இரண்டுக்குமான களமே வேறுவேறு. அதேநேரத்தில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று எதிரானது என்று சொல்ல மாட்டேன். தஞ்சாவூரில் இருப்பவர்களுக்கு தஞ்சை பெரிய கோயில் ஓர் இடம். அந்த இடத்தைப் பார்த்தவாறே கடந்து போவார்கள். ஆனால் இத்தாலியிலிருந்து விமானம் பிடித்து, அந்தக் கோயிலை நேரில் பார்த்து, கல்வெட்டுகளை ஆராய்ந்து, மெய்சிலிர்த்துப் போகிறவனுக்கு அந்தக் கோயிலின் அருமை தெரியும். இதைப்போலத்தான் மக்களும் எப்போதும் செவ்விலக்கியத்துக்கு இடம் கொடுக்காமலே உள்ளனர். அருமை தெரிந்தவர்களுக்கே, செவ்விலக்கியத்தின் முக்கியத்துவம் தெரியும்.


வாசக மனப்பான்மையைக் கருத்தில் கொண்டு எழுத வேண்டுமா?

வாசகன் என்பவன் முகம் தெரியாதவன். அந்த வாசகனுக்கு வயது, பாலினம் போன்றவை கிடையாது. எந்த நிலையில் படிக்கிறான் என்பதும் தெரியாது. ஆனால் அந்த வாசகனுக்கும் எனக்கும் இடையில் ஓர் உறவு இருக்கிறது. புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த உடனேயே, அவன் என்னை நம்பத் தொடங்குகிறான். என்னோடு இணைந்து பயணம் செய்கிறான். பல நேரங்களில் என்னைப் போலவே, அவனும் இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியாகிவிடுகிறான். அதனால் வாசகனை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், ஒரு வாசகன் என்பவன் புத்தகத்தினுடைய இணை எழுத்தாளன்.
அவன் வாசித்தலின் வழியாக எழுத்தாளனாகிறான். நான் எழுதுதலின் வழியாக எழுத்தாளனாகிறேன். இந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது. அதனால் வாசகனைத் தனிப்பட்ட ஆளாகப் பார்க்க முடியாது.
மேலும் என் மனதில் எப்போதும் ஒரு வாசகனைக் கூடவே வைத்துள்ளேன்.
நான் வளரும்போது என்னோடு சேர்ந்து அவனும் வளர்ந்து வருகிறான். இருவரும் இடைவெளியற்று விவாதம் செய்கிறோம். பரஸ்பரம் தெளிவு பெறுகிறோம். எஜமானன், பணியாள் உறவுபோல எழுத்தாளன் வாசகன் இடையே உறவு இருக்க முடியாது.குற்றம் புரிந்தவன் தன் அனுபவத்தின் வாயிலாகவே திருந்தாதபோது, புத்தக வாசிப்பின் வழியாக மட்டும் திருந்திவிடுவானா?

அனுபவங்கள் என்பது எப்போதும் எல்லோருக்கும் நடக்கக்கூடியதாகத்தான் இருக்கும். சந்தர்ப்பம் என்பது வேறு.
தன்னிலையை உணர்தல் என்பது வேறு. பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. இருக்கையில் நானும் அமர்ந்திருந்தேன். ஒரு கை மட்டும் ஜன்னலுக்கு வெளியே நீண்டு, கொய்யா வியாபாரி கூடையில் இருந்து ஒரு பழத்தை எடுத்துவிட்டது. "திருடன்' என்று தொடங்கி,வாயில் வந்ததையெல்லாம் திட்டியபடியே, பேருந்துக்குள்ளே வந்த வியாபாரி அதிர்ந்து போனார். ஏனெனில் கொய்யாவை எடுத்தது, ஒரு நாலு வயது குழந்தை. வியாபாரிக்கு பெரிய குற்ற உணர்ச்சி வந்துவிட்டது.
பஸ்ஸில் இருந்த யாருமே அவரைக் குற்றம் சாட்டவில்லை. உடனே அவரே இன்னொரு கொய்யாவை குழந்தையிடம் வெட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இதுதான் தன்னிலை உணர்தல். குழந்தையைத் தவிர வேறு யாராக இருந்தாலும், அந்த இடத்தில் பெரிய கைகலப்பு ஏற்பட்டிருக்கும்.
இதை நான் படைப்பில் பதிவு செய்தால், அந்த வியாபாரியின் இடத்தில், வாசிப்பவன் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்வான்.
தன் குற்றத்தை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதவனும், இந்தப் பதிவின் மூலம் தன் முகத்தையும் அகத்தையும் திரும்பிப் பார்த்துக் கொள்வான். தன்னிலையை உணர்ந்து திருந்துவான்.
Thursday, November 17, 2011

நதியின் மூன்றாவது கரை - ஜோவோ கிமேரஸ் ரோஸா
ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன்
தமிழில்: ஆர்.சிவகுமார்


கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை அவர் மற்றவர்களைவிடவும் சற்று அதிகம் அமைதியானவராக இருந்திருக்கலாம். எங்கள் வீட்டை ஆண்டது அம்மாதான், அப்பா இல்லை. என்னையும், என் சகோதரியையும் என் சகோதரனையும் அம்மா தினமும் திட்டினாள். ஒரு நாள் அப்பா ஒரு படகுக்கு ஆர்டர் கொடுத்தார். அப்பா அது குறித்து மிகவும் தீவிரமான அக்கறையோடு இருந்தார். அந்தப் படகு பிரத்யேகமான அவருக்கு மட்டும் துவரை இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் கட்டைகளால் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார். இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குத் தாங்கக்கூடிய அளவுக்கு உறுதியாகவும், ஒரு ஆளுக்கான இடவசதி உடையதாகவும் அது இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். அம்மா அது பற்றி மிகவும் புலம்பிக் கொண்டேயிருந்தாள். திடீரென்று அவளுடைய கணவன் மீனவனாகப் போகிறானா? அல்லது ஒரு வேட்டைக்காரனாக? அப்பா எதுவும் சொல்லவில்லை. எங்கள் வீடு நதியிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது. அந்த நிதி ஆழமானது; அமைதியானது; நதியின் அந்தக் கரையைப் பார்க்க முடியாத அளவுக்கு அகலமாகவும் இருந்தது.

அந்தத் துடுப்புப் படகு அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்பா மகிழ்ச்சியையோ அல்லது வேறு எந்த உணர்ச்சியையோ வெளிக் காண்பிக்கவில்லை. எப்போதும் செய்வது போன்று தொப்பியைத் தலையில் வைத்துக்கொண்டு, எங்கள் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டார். உணவையோ
அல்லது வேறு எந்தப் பொருளையுமோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அம்மா ஆர்ப்பாட்டம் செய்து கத்துவாள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவள் அப்படி ஒன்றும் செய்யவில்லை. அவள் வெளிறிப் போயிருந்தாள்; உதட்டைக் கடித்துக் கொண்டாள். 'நீங்கள் வெளியே போவதானால் அங்கேயே தங்கி விடுங்கள். எப்போதும் திரும்பி வர வேண்டாம்' என்று மட்டுமே அம்மா சொன்னாள்.

அப்பா பதிலொன்றும் பேசவில்லை. என்னை மென்மையாகப் பார்த்துத் தன்னுடன் வரும்படி சைகை செய்தார். அம்மாவின் கோபத்திற்கு நான் பயந்தாலும், அப்பா சொன்னதை ஆர்வத்துடன் செய்தேன். இருவரும் ஒன்றாக நதியை நோக்கி நடந்தோம். 'அப்பா, என்னையும் உங்கள் படகில் அழைத்துப் போகிறீர்களா?' என்று கேட்குமளவிற்கு
நான் தைரியமும் கிளர்ச்சியும் அடைந்திருக்கிறேன்.

அப்பா என்னை ஒரு கணம் வெறுமனே பார்த்துவிட்டு ஆசீர்வாதம் செய்து, ஒரு சைகையின் மூலம் திரும்பிப் போகச் சொன்னார். அவர் சொன்ன மாதிரி செய்வதாகப் போக்குக் காட்டிவிட்டு, அவர் திரும்பியதும், சில புதர்களுக்குப் பின்னால் குனிந்து என்னை மறைத்துக்கொண்டு அவரைக் கவனித்தேன். அப்பா படகில் ஏறி உட்கார்ந்து துடுப்பு
போட்டுக்கொண்டு போய்விட்டார். படகின் நீளமான அமைதியான நிழல் ஒரு முதலையைப் போல நீரின் குறுக்காக நழுவிச் சென்றது.

அப்பா திரும்பி வரவில்லை. அதேசமயம் வேறெங்கும் போய்விடவுமில்லை. நதியின் குறுக்காகவும், சுற்றியும் துடுப்பு போட்டுக்கொண்டும் மிதந்து கொண்டுமிருந்தார். எல்லோரும் திகைத்துப் போனார்கள். எது எப்போதும் நடந்ததில்லையோ, எது அநேகமாக நடக்க முடியாததோ அது நடந்துகொண்டிருந்தது. எங்கள் உறவினர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் இந்த முக்கிய நிகழ்வை விவாதிக்க வந்தனர்.

அம்மா அவமானமடைந்தாள். கொஞ்சமாகவே பேசினாள்; மிகுந்த அமைதியுடன் நடந்து கொண்டாள். அப்பாவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதென்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் யாரும் இதை வெளியே சொல்லவில்லை. கடவுளுக்கோ அல்லது யாரோ ஒரு புனிதருக்கோ கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றத்தான் அப்பா இப்படிச் செய்வதாகச் சிலர் சொல்லிக்கொண்டார்கள். அல்லது அவருக்குத் தொழுநோய் போன்ற ஏதோ ஒரு
நோய் இருந்ததனால், குடும்ப நன்மை கருதி வெளியேற முடிவு செய்து அதே சமயம் குடும்பத்திற்கு அருகிலேயும் இருக்கத்தான் அப்பா அப்படிச் செய்தார் என்றும் சிலர் சொன்னார்கள்.

இரவிலும் சரி, பகலிலும் சரி அப்பா நிலத்தில் கால் வைப்பதே கிடையாது என்று நதியில் பயணம் செய்பவர்களும், நதியின் இரண்டு கரைகளில் வசிப்பவர்களும் சொன்னார்கள். ஒரு கைவிடப்பட்டவர் மாதிரி தனியாக எந்த இலக்கும் இன்றி அவர் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டே இருந்தார். படகில் அப்பா மறைத்து வைத்திருக்கும் உணவு நிச்சயம்
சீக்கிரம் தீர்ந்துவிடும்; அதன் பிறகு நதியை விட்டு நீக்க வேறெங்காவது சென்று விடுவார்; அல்லது செய்த தவறுக்கு வருந்தி வீடு திரும்புவார் என்று அம்மாவும் உறவினர்களும் நம்பினார்கள். அவர் வேறெங்காவது சென்றுவிடுவது வீடு திரும்புவதை விடவும் கொஞ்சம் கெüரவமானது என்றும் அவர்கள் சொன்னார்கள்.

உண்மைக்கும் அவர்கள் நினைத்ததற்கும் எவ்வளவு தூரம்! அப்பாவுக்கு உணவு கிடைப்பதற்கு ஒரு ரகசிய வழி இருந்தது: அது நான்தான். ஒவ்வொரு நாளும் உணவைத் திருடி அதை அவருக்குக் கொண்டு சென்றேன். அவர் சென்றுவிட்ட முதல் இரவு நாங்கள் அனைவரும் கரையில் தீமூட்டி வழிபட்டு அவரை அழைத்தோம். நான் ஆழ்ந்த
வேதனையுற்றேன். மேலும் ஏதாவது செய்யவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். சோள ரொட்டித்துண்டு ஒன்று, ஒரு சீப்பு வாழைப்பழம், பழுப்புச் சர்க்கரைக் கட்டிகள் ஆகியவற்றுடன் அடுத்த நாள் நதிக்கரைக்குச் சென்றேன். நீண்ட நேரம் பொறுமையுடன் காத்திருந்தேன். பிறகு, தூரத்தில் தனியாக நதியின் இழைவான போக்கில், அநேகமாக பார்க்க முடியாத அளவுக்கு மெல்ல நகர்ந்து வரும் படகைக் கண்டேன். அப்பா படகின் ஒரு கோடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்துவிட்ட பிறகும், என்னை நோக்கி படகைச் செலுத்தவோ அல்லது சைகை செய்யவோ இல்லை. அவரிடம் உணவைக் காண்பித்துவிட்டு, நதிக்கரையிலிருந்த ஒரு பாறையின் இடுக்கில் அதை வைத்தேன். மிருகங்கள், மழை, பனி ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் உணவு அந்த இடத்தில்
பாதுகாப்பாக இருக்கும். நான் இதை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்தேன். நான் செய்து கொண்டிருந்தது அம்மாவுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். நான் எளிதாகத் திருடக்கூடிய இடத்தில் அவள் உணவை வைத்தாள். வெளிக் காண்பிக்கப்படாத பல உணர்ச்சிகள் அவளுக்கு இருந்தன.

பண்ணையையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ள அம்மா தன் சகோதரனைக் கூப்பிட்டுக் கொண்டாள். ஆசிரியரை வீட்டிற்கே அழைத்து வந்து நாங்கள் இழந்து விட்ட பாடங்களை சொல்லித்தரச் செய்தாள். ஒரு நாள் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, பாதிரியார் சமய உருப்புக்களை அணிந்து கொண்டு நதிக்கரைக்குச் சென்று அப்பாவின் உடம்பில் நுழைந்துவிட்ட பேய்களை விரட்ட முயற்சி செய்தார். புனிதமற்ற பிடிவாதத்தை அப்பா கைவிடவேண்டுமென்று பாதிரியார் கத்தினார். வேறொரு நாள் அம்மா இரண்டு சிப்பாய்களுக்கு ஏற்பாடு செய்து அவரை பயமுறுத்த முயற்சி செய்தாள். எதுவும் பயனளிக்கவில்லை. அப்பா தூரமாகப் படகைச் செலுத்திக் கொண்டு போய்விடுவார்; சில சமயங்களில் அவரைப் பார்க்கவே முடியாத தூரத்திற்குச் சென்றுவிடுவார். அவர் யாருக்கும் ப
தில் சொல்லவில்லை; யாரும் அவர் அருகில் போகவும் இல்லை. ஒரு சமயம் ஒரு பத்திரிகையாளர்கள் அவரைப் படம்பிடிக்க விசைப்படகில் சென்றபோது, அப்பா படகை நதியின் அடுத்த கரைக்கு இயக்கிச்சென்று சில சதுப்பு நிலப்பகுதிகளில் மறைந்து கொண்டார். தன்னுடைய உள்ளங்கையை அவருக்கு எப்படித் தெரியுமோ அந்த அளவுக்கு அவருக்கு அந்த இடங்களைத் தெரியும்; ஆனால் மற்றவர்கள் அந்த இடங்களில் எளிதில் வழிதவறி விடுவார்கள். பல மைல் நீளத்திற்கு விரிந்திருந்த அந்த குழப்பமான இடம் அவருக்கே சொந்தமானது. தலைக்கு மேலே அடர்த்தியான சிலைகளுடன் கூடிய செடிகளுடனும், நாலா பக்கமும் நாணற்புதர்களும் மண்டியிருந்த அந்த இடத்தில் அவர் பாதுகாப்பாக இருந்தார்.

அப்பா நதியிலேயே வாழ்ந்து வருவது என்கிற கருத்துக்கு எங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது - ஆனால் எங்களால் அது முடியவில்லை. எப்போதும் முடியவும் முடியாது. அப்பா எதை விரும்பினார், எதை விரும்பவில்லை என்று நான் ஒருவன் மட்டும்தான் ஓரளவுக்குப் புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தான் அனுபவித்த துன்பத்தை அவர் எப்படி தாங்கிக்கொண்டார் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ளவே
முடியவில்லை. வாரக்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக, தலையில் ஒரு பழைய தொப்பியோடு, குறைச்சலான ஆடையோடு, வீணாகவும் வெறுமையாகவும் கழிந்து கொண்டிருந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படித்தான் இரவிலும் பகலிலும், வெய்யிலிலும் மழையிலும், பயங்கர குளிரிலும் அவர் வாழ்ந்து வந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நிலத்திலோ புல்தரையிலோ, தீவிலோ, கரையிலோ
அவர் கால் பதிக்கவே இல்லை. ஆனால் சில சமயங்களில், ஒரு ரகசிய இடத்தில், ஏதோ ஒரு தீவின் முனையில் படகைக்கட்டி விட்டுத் தூங்கினார். எப்போதும் அவர் தீ உண்டாக்கியதே இல்லை; ஒரு நெருப்புக்குச்சியைக் கூடக் கிழித்ததில்லை. அவரிடம் ஒரு டார்ச் விளக்குகூட இல்லை. பாறை இடுக்கில் நான் வைக்கும் உணவில் கொஞ்சம் மட்டுமே அவர் எடுத்துக்கொண்டார். அது, அவர் உயிரோடு இருக்கத் தேவையான அளவாக எனக்குத்
தோன்றவில்லை. அவர் உடல்நலம் எப்படி இருந்திருக்கும்? படகைக் கட்டுப்படுத்த துடுப்புகளைத் தள்ளியும் இழுத்தும் அவருடைய சக்தி எப்படி வடிந்து போயிருக்கும்? வருடாந்திர வெள்ளத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து ஆபத்தான பொருள்களான மரக்கிளைகளையும் இறந்த மிருகங்களின் உடல்களையும் நதி அடித்துச் சென்றபோது
அவற்றை எப்படிச் சமாளித்தார்? அவை அவருடைய படகின் மீது திடீரென்று மோதினால் என்னவாகியிருக்கும்?

யாருடனும் அவர் பேசவில்லை; நாங்களும் அவரைப் பற்றிப் பேசவே இல்லை. அவரைப் பற்றி நினைத்துக்கொண்டு மட்டுமே இருந்தோம். அப்பாவை மனதிலிருந்து எங்களால் எப்போதும் நீக்கவே முடியவில்லை. எப்போதாவது நாங்கள் அவரைப் பற்றி கொஞ்ச நேரம் நினைக்காமலிருப்பதாகத் தோன்றினால் அது ஒரு சிறு இடைவெளிதான். அப்பா இருக்கும் அச்சுறுத்தும் சூழலைப் பற்றிய உணர்தல் திடீரென்று எங்களை அந்த இடைவெளியிலிருந்து
கூர்மையாக விடுபடச் செய்யும்.

என் சகோதரிக்குத் திருமணம் நடந்தது; ஆனால் அம்மா திருமண விருந்து வேண்டாமென்று சொல்லிவிட்டாள். அது ஒரு சோகமான நிகழ்வாகப் போயிருக்கும். ஏனென்றால் நல்ல உணவைச் சாப்பிடும் போதெல்லாம் நாங்கள் அப்பாவை நினைத்துக் கொண்டோம். குளிரும் கடும் மழையும் நிறைந்த இரவில் படகில் சேரும் நீரை தன் கைகளாலும் ஒரு சுரைக் குடுக்கை மூலமாகவும் மட்டுமே வாரி வெளியே இறைத்துக் கொண்டிருக்கும் அப்பாவை
எங்களுடைய செüகரியமான படுக்கைகளில் படுத்துக் கொண்டு நினைத்துக் கொள்வோம். அவ்வப்போது யாராவது ஒருவர் நான் அப்பா மாதிரியே தோற்றம் கொண்டு வளர்ந்து வருவதாகச் சொல்வார். அந்த நேரத்தில் அப்பாவின் தலைமுடியும் தாடியும் பறட்டையாக மாறியும், நகங்கள் நீண்டும் வளர்ந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். முடியாலும் சூரிய வெப்பத்தாலும் கறுத்துப்போய் ஒல்லியாகவும் நோய்வாய் பட்டவராகவும் தோற்றமளிக்கும்
அப்பாவை, நான் எப்போதாவது அவருக்காக உடைகளை விட்டுச் சென்றும்கூட அநேகமாக நிர்வாணமாகவே இருக்கும் அப்பாவை நான் கற்பனை செய்து கொள்வேன்.

அவர் எங்களைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்பட்டதாகத் தோன்றவில்லை. ஆனால் அவர் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருந்தது. நான் ஏதாவது நல்லது செய்ததனால் பாராட்டப்படும்போது, என்னுடைய அப்பாதான் அப்படி நடந்துகொள்ள எனக்குச் சொல்லிக்கொடுத்தார் என்று கூறிக்கொண்டேன். நான் அப்படிச் சொன்னது முற்றிலும் சரியல்ல; ஆனால் அது மாதிரியான உண்மை சார்ந்த பொய் நான் முன்பே சொன்ன மாதிரி அப்பா எங்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தோன்றவில்லை. பின் ஏன் அவர் அங்கேயே தங்கிவிட்டார்? நாங்கள் அவரைப் பார்க்க முடியாத மாதிரியும் நதியின் மேல் எல்லைக்கோ அல்லது கீழ் எல்லைக்கோ ஏன் அவர் செல்லவில்லை? அவருக்கு மட்டுமே இதற்கான விடை தெரிந்திருக்கும்.

என் சகோதரிக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அப்பாவுக்கு அவருடைய பேரனைக் காட்ட வேண்டுமென்று அவள் மிகவும் வற்புறுத்தினாள். ஓர் இனிமையான நாளில் நாங்கள் அனைவரும் நதிக்கரைக்குச் சென்றோம்; என் சகோதரி அவளுடைய வெண்மை நிற திருமண உடையில் இருந்தாள். அவள் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள், அவள்
கணவன் அவர்கள் இரண்டு பேருக்கும் மேலே ஒரு குடை பிடித்தார். நாங்கள் அப்பாவைக் கத்தி அழைத்து விட்டுக் காத்திருந்தோம். அவர் வரவே இல்லை. என் சகோதரி அழுதாள்; நாங்கள் அனைவரும் ஒவ்வொருவரின் கைகளப் பிடித்துக் கொண்டு அழுதோம். என் சகோதரியும் அவளுடைய கணவனும் தொலைவான இடத்துக்குச் சென்றுவிட்டனர். என் சகோதரன் ஒரு நகரத்துக்கு வசிக்கச் சென்றுவிட்டான். காலங்கள், அவற்றின் வழக்கமான
சூட்சும வேகத்தோடு மாறிவிட்டன. கடைசியாக அம்மாவும் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாள், வயதாகிவிட்டதால் தன் மகளோடு அவள் வாழச் சென்றுவிட்டாள். நான் மட்டுமே மிச்சமாக அங்கேயே தங்கிவிட்டேன். திருமணம் செய்து கொள்வது பற்றி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையின் இடர்ப்பாட்டோடு நான் அங்கேயே தங்கிவிட்டேன். துணையற்று தனியாக நதியில் அலைந்து கொண்டிருந்த அப்பாவுக்கு நான் தேவைப்பட்டேன். அவர் ஏன் அப்படிச் செய்து கொண்டிருக்கிறார் என்று என்னிடம் எப்போதும்
சொன்னதில்லையாயினும் அவருக்கு நான் தேவைப்பட்டேன். அப்பா ஏன் அப்படிச் செய்கிறார் என்று வலியுறுத்தியும் மழுப்பலின்றியும் சிலரிடம் நான் கேட்டபோது, படகைச் செய்து கொடுத்தவரிடம் எல்லாவற்றையும் அவர் சொல்லியிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த ஆள் இறந்துவிட்டதால் யாருக்கும் எதுவும் தெரியுமில்லை; நினைவிலுமில்லை. மழை தொடர்ந்தும் கடுமையாகவும் பெய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு முட்டாள்தனமான பேச்சு பரவியது. அதாவது, நோவாவைப் போல அறிவுக்கூர்மையோடு அப்பா ஒரு பெரும் வெள்ளத்தை எதிர்பார்த்து ஒரு படகைச் செய்துகொண்டிருந்தார் என்றார்கள். மக்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு மங்கலாக நினைவில் உள்ளது. எப்படியிருப்பினும், அவர் செய்து கொண்டிருந்ததை நான் கண்டிக்கவில்லை. என் தலைமுடி நரைக்க ஆரம்பித்தது.

சோகமான விஷயங்கள் மட்டுமே எனக்குச் சொல்ல இருக்கின்றன. நான் எந்தத் தீங்கைச் செய்தேன்? என் மிகப் பெரிய குற்றம் எது? அப்பா எப்போதும் தொலைவிலும் அவருடைய இராமை எப்போதும் என்னுடனும். அந்த நதி, முடிவேயில்லாமல் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அந்த நதி. எப்போதும் அந்த நதியேதான். அரை உயிரோடு வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருந்த முதுமையின் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்தேன். நோயும் கவலையும் என்னைத் தாக்கின. ஓயாது தொல்லைப்படுத்தும் கீல்வாதமும் எனக்கு வந்தது. அவர், ஏன், ஏன் அதைச் செய்துகொண்டிருக்கிறார்? மிக வயதானால் அவர் கடுமையாக அவதிப்பட்டுக்கொண்டிருந்திருப்பார். வலிமை குறைந்து கொண்டிருப்பதால் ஒரு நாளைக்கு படகை அவர் கவிழ்த்து விடலாம்; அல்லது படகை நீரின் போக்கோடு போக விட்டு, நதியின் இறங்கு முகத்தில் தொடர்ந்து போய் நீர்வீழ்ச்சி மூலம் கொந்தளிக்கும் பாதாளத்தில் வீழ்ந்து விடலாம்; அல்லது படகை நீரின் போக்கோடு போகவிட்டு, நதியின் இறங்கு முகத்தில் தொடர்ந்து போய் நீர்வீழ்ச்சி மூலம் கொந்தளிக்கும் பாதாளத்தில் வீழ்ந்து விடலாம். இந்த நினைவு என் இதயத்தை அழுத்தியது. அங்கே வெளியே அவர்; அமைதியைப் பறிகொடுத்துவிட்டு நான். என்னவென்று தெரியாத குற்றமொன்றைச் செய்துவிட்ட உணர்வு எனக்கு; என் துயரம் எனக்குள்ளே ஒரு ரத்தம் கசியும் காயம். சூழ்நிலைகள் வேறாக இருப்பின், ஒருவேளை இந்தச் சிக்கலை நான் புரிந்து கொள்ளலாம். என்ன தவறு நடந்ததென்று நான் யூகிக்க ஆரம்பித்தேன்.

அப்பா வெளியேறியதின் காரணமாக தெரிந்தே ஆக வேண்டும். நான் பைத்தியமாகிப் போனேனா? இல்லை. இத்தனை ஆண்டுகளாகவும் அந்த வார்த்தை எங்கள் வீட்டில் உச்சரிக்கப்பட்டதேயில்லை. யாரும் யாரையும் பைத்தியம் என்று கூப்பிட்டதேயில்லை; காரணம் யாரும் பைத்தியமில்லை. அல்லது ஒருவேளை எல்லோருமே பைத்தியமாக இருந்திருக்கலாம். நதிக்கரைக்குச் சென்று, அவர் என்னைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் ஒரு கைக்குட்டையை அசைத்தேன். நான் செய்ததெல்லாம் இதுதான். என் உணர்ச்சிகளை முழுக்க அடக்கிக்கொண்டு காத்திருந்தேன். கடைசியாக தொலைவில், மறுகரையில், படகின் பின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த தெளிவற்ற உருவம் ஒன்று தோன்றியது. அவரை நோக்கி சிலமுறை கூப்பிட்டேன். முறையாகவும் ஆர்வத்தோடும் ஒரு சபதம் போன்று நான் சொல்ல விரும்பியதைச் சொன்னேன். எவ்வளவு உரக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு
உரக்கச் சொன்னேன், "அப்பா நீங்கள் நெடுங்காலம் அங்கே இருந்து விட்டீர்கள். உங்களுக்கு வயதாகிவிட்டது... திரும்ப வாருங்கள்; இனிமேலும் நீங்கள் அங்கே இருக்க வேண்டாம்.... நீங்கள் திரும்ப வாருங்கள்; உங்களுக்குப் பதிலாக நான் போகிறேன்; நீங்கள் விரும்பினால் இப்போதே. எப்போது வேண்டுமானாலும் சரி, நான் படகில் ஏறிக்கொள்கிறேன்; நான் இதைச் சொல்லி முடித்ததும் என் இதயம் மேலும் உறுதியுடன் துடித்தது. நான் சொன்னதை
அவர் கேட்டார். எழுந்து நின்றார். என்னை நோக்கி படகைச் செலுத்தினார். என் விருப்பத்தை அவர் ஏற்றுக்கொண்டார். திடீரென்று நான் உடல் முழுக்க நடுங்கினேன். ஏனெனில், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அவர் கையைத் தூக்கி அசைத்தார். நான் நிலையிழந்தேன். திகிலில் மயிர்க்கூச்செறிய நான் ஓடினேன். மூர்க்கத்தனமாக ஓடினேன். ஏனென்றால் வேறொரு உலகத்திலிருந்து அவர் வருவதாகத் தோன்றியது. நான் மனமார மன்னிப்பை வேண்டிக்கொண்டே, வேண்டிக்கொண்டே இருக்கிறேன்.

கொடிய பயத்தில் பிறக்கும் அந்தப் பயங்கரக் குளிர் உணர்வை நான் அனுபவித்தேன். என் உடல் நலங்கெட்டது. யாரும் அவரை மீண்டும் பார்க்கவோ அவரைப் பற்றிக் கேள்விப்படவோ இல்லை. அத்தகைய ஒரு தோல்விக்குப் பின் நான் ஒரு மனிதன்தானா? எப்போதும் இருந்திருக்கக் கூடாத ஒன்றாக நான் இருக்கிறேன். அமைதியாக எது
இருக்க வேண்டுமோ அதுவாக நான் இருக்கிறேன். காலங்கடந்து விட்டதென்று எனக்குத் தெரியும் என் வாழ்க்கையின் எல்லையிடப்படாத சமவெளிகளிலும் பாழ்நிலங்களிலும் நான் தங்க வேண்டும். இந்தத் தங்குதலை நான் குறுக்கிக் கொள்வேன் என்று பயப்படுகிறேன். ஆனால் சாவு எனக்கு நேரும்போது, இரு நீண்ட கரைகளுக்கிடையே இடையறாமல் ஓடும் இந்த நீரில் ஒரு சிறிய படகில் நான் வைக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். நான்
நதியில் ஆழத்தில், நதியில் மறைந்து போய், நதியின் உள்ளே.... நதி.

ஜோவோ கிமேரஸ் ரோஸா

ரோஸா (1908-67) பிரேஸில் நாட்டவர். நாவலாசிரியர்; சிறுகதையாளர். மருத்துவப் பயிற்சிக்குப் பின் கிராமப்புறத்தில் பணிபுரிந்தவர். தான் பணிபுரிந்த கிராமப் பகுதியின் நாட்டுப்புறக்கதைகளைச் சேகரித்துத் தொகுத்தவர். பிரேஸிலின் அயல்நாட்டு உளவுத்துறையில் பணியாற்றியவர். இவருடைய மிகப் பிரபலமான நாவலான 'The Devil to pay in the backlands'படங் ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.