Saturday, December 8, 2007

"என்ன கொடுமை சார்' நாயகர்கள்கிரிக்கெட்டுக்கு பை..பை..பில்லியர்ட்ஸ்க்கு ஹாய்..ஹாய்..!


என்ன கொடுமை சார் இது. அதுக்காக இப்படியா ஒரு முடிவு எடுக்கும்
சென்னை -600028' டீம்?

என்ன முடிவு?

இனிமேல் கிரிக்கெட்டைப் பற்றியே நினைக்க மாட்டார்களாம். இனிமேல் அவர்கள் உயிர், மூச்சு எல்லாமே பில்லியர்ட்ஸ் விளையாட்டுதானாம். (கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுண்டம் போனானாம்னு முனகுவது கேட்கிறது.)

எதுக்காக இந்த முடிவு எடுத்தார்கள்?
அதுக்கான காரணத்தைக் கடைசிப் பத்தியில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பில்லியர்ட்ஸயாவது அவர்கள் ஒழுங்காக விளையாடுகிறார்களா என்று பார்ப்பதற்காக சலூன் கடைக்குச் சென்றிருந்தேன்.

நிறுத்து... நிறுத்து... இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை? முடிவெட்ட போகிற இடத்துல பில்லியர்ட்ஸ் எப்படி விளையாட முடியும்?

போட்டி உலகமாகிவிட்டதால் எல்லோரும் பாட்டையை மாற்றிதான ஆகணும்? அதான் நேச்சுரல்ஸ் அழுகு நிலையத்தினரும் பாட்டையை மாற்றி அமைத்துள்ளனர்.சலூனில் முடிவெட்டுவதற்காகக் காத்திருப்பவர்கள் பழைய தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருப்பதைத் தினசரி பார்த்த இவர்கள், விளையாட்டுச் சாதனங்களுடன் கூடிய அழகு நிலையத்தை அசோக் நகரில் அமைத்துள்ளனர். மொத்தம் 2,800 சதுர அடி. இதில் 800 சதுர அடி விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. பில்லியர்ட்ஸ், செஸ், ஸ்கராம்பிள், விடியோ கேம்ஸ் என இங்கு எல்லாம் உண்டு. தலையைக் கொடுப்பதற்குக் காத்திருக்கும் நேரத்தில் மேற்படி விளையாட்டுகளில் கவனம் செலுத்தலாம்.

"இந்தச் சலூன்லதான் சென்னை-28 டீம் முடிவெட்ட வந்தாங்களா? மன்னிக்கவும் பில்லியர்ட்ஸ் விளையாட வந்தாங்களா? எப்படி விளையாடினார்கள்?' என்றுதானே கேட்கிறீர்கள்?

"தப்பா பேசக் கூடாது. இந்தச் சலூனைத் திறந்து வைத்ததே தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தலைமையிலான சென்னை -28 டீம்தான்.''
"அப்ப ஏகப்பட்ட கலாட்டாவா இருந்திருக்குமே?'
சென்னை டீம் பற்றி அறிமுகப்படுத்தச் சொல்லி "என்ன கொடுமை சார்' டயலாக் பிரேம்ஜியை அழைத்தார்கள். எழுந்தவர், எல்லோரையும் அறிமுகப்படுத்துவதுபோல பாவனை காட்டிவிட்டு "நன்றி வணக்கம்' என்று சொல்லி அமர்ந்துவிட்டார். அடுத்து சிவாவை இழுஇழு என்று இழுத்துவந்து டீமை அறிமுகப்படுத்தச் சொன்னார்கள். அவர் செய்த சுவீட்டான அறிமுகப் படலம்:

"விஜய் இருக்கான்னே. ரொம்ப ஸ்டெடி பார்ட்டி. இருபத்தி நாலு மணிநேரமும் எப்போதும் டபுள் ஸ்டெடியாக இருப்பார். எங்களுக்கு எப்பாவது ஸ்டெடி இல்லாதபோது அவரிடம்தான் ஸ்டெடியைப் பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.
பொண்ணுங்க என்றாலே சத்யா, அலர்ஜின்னு சொல்லுவாரு. மத்தபடி பொண்ணுங்களதான் அவர் அதிகம் பார்ப்பாரு.
நம்ம பிரேம்ஜிக்கு வீட்டில் பொண்ணு பார்க்கிறாங்க. அதனாலதான் இங்கு வந்திருக்காரு. தலையில கலர் அடிச்சிட்டுப் போகப்போறாரு. அப்பதான் பொண்ணுங்க பார்த்திட்டு பயந்து திரும்பிடுவாங்க என்று நம்புறார்'' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,"ப்ளு கலர் இருந்தால் இப்போதே அடித்துக் கொள்கிறேன்'" என்று எழுந்தார் பிரேம்ஜி. ப்ளூ கலர் இருக்காது என்று நினைத்தார் போலிருக்கிறது பிரேம். நேச்சரல் நிறுவனத்தார் உடனே ப்ளு கலரை ஸ்பிரே செய்வதற்கு எடுத்து வந்துவிட்டார்கள்.

"அய்யோ... ஸ்பிரே பண்ணினால் போகாதே'' என்று அலறினார் பிரேம்ஜி.
"குளித்தால் போய்விடும்'' என்றனர் நேச்சரல் நிறுவனத்தார். "குளிக்கணும்னா ரொம்ப சிரமமாச்சே'' என்று அனைவரும் கோரஸôகக் கத்த, நழுவிவிட்டார் பிரேம்ஜி.

இந்தப் படலங்களுக்குப் பிறகுதான் பில்லியர்ட்ஸ் பக்கம் படையெடுத்தது அந்த டீம். "சும்மா அதிருதில்ல' கணக்காக இதிலாவது விளையாடுவார்கள் என்று பார்த்தால் அம்புட்டுப் பேருக்கும் பில்லியர்ட்ஸ் குச்சிப் பிடிக்கக்கூட தெரியலைங்கண்ணோவ்! சும்மா போட்டோவுக்குப் போஸ் கொடுத்திட்டு போகப்போகக் கற்றுக் கொள்கிற எண்ணம் இருக்கிறதாம். இதில் விஜயலட்சுமி அந்தக் குச்சியைப் பிடித்துக்கூட அடிக்க முடியாத நிலையில் டிரஸ் போட்டுக் கொண்டு வந்துவிட்டார். சிறிது நேர வற்புறுத்தலுக்குப் பிறகு அடிப்பதுபோல குச்சியைப் பிடித்துப் போஸ் கொடுத்தார்.

சரி.. சரி கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று அவர்கள் முடிவு எடுக்க காரணம் என்ன என்றுதானே கேட்கிறீர்கள். அது ஒன்றுமில்லை. "சென்னை-600028' படத்தின் வெற்றிவிழாவையொட்டி சென்னையில் உள்ள கிரிக்கெட் டீம்களுக்கிடையே ஒரு போட்டி நடத்தினார்கள். அதில் வெற்றிபெற்ற டீமோடு சென்னை-28 டீமும் மோதியது. அதிலும் தோல்விதான் கிடைத்ததாம் சென்னை - 28 டீமுக்கு. இதுக்குப் பிறகுதான் இந்த முடிவாம்.


"என்ன கொடுமை சார் இது!''
சரோஜா டீம்ல என்ன விளையாடப் போறாங்களோ?

No comments: