Thursday, December 20, 2007

இலக்கணத்தை உடைப்பதே இலக்கு - ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி!





"கேட்ட முதல் நாளே' -எல்லார் மனதையும் கொள்ளையடிக்கும் பாடல்களைத் தருபவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
"இருக்கிறவர்களில் இவர் சிறப்பு என்று சொல்வதற்கில்லை. இவர் இசையமைப்பதே சிறப்பு' என்று சொல்லத்தக்க சினிமா இசையமைப்பாளர்களில் ஒருவர்.
"மின்னலே' படம் தொடங்கி "வேட்டையாடு விளையாடு' படம் வரை, இவர் இசையமைத்த பாடல்கள், படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றி.
மேற்கத்திய இசையிலும் மெல்லிசைப் பாடல்கள்; துள்ளலிசையிலும் வார்த்தைகளை விழுங்காத லாவகங்கள் -இவர் வெற்றியின் ரகசியம்!
"ஒரு மாலை இளவெயில் நேரம். அழகான இசைக்குயில்கள்
பாடும்' -இடம்: கே.கே.நகரில் உள்ள ஹாரிஸ் ஸ்டுடியோ! அங்கு அவரைச் சந்தித்தோம்.
பேட்டியில்: "கண்ணும்கண்ணும் நோக்கியா' பாடல் போல -அதிரடியும் உண்டு.
"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?' பாடல் போல -ஆர்ப்பாட்டமும் உண்டு.
"வசீகரா என் நெஞ்சினிக்க' பாடல்போல -அசத்தும் வசீகரமும் உண்டு.

இசையால் எப்போது ஈர்க்கப்பட்டீர்கள்?

இசைக் குடும்பத்தில் பிறந்தவன். என் தந்தை எஸ்.எம். ஜெயக்குமார். கிடார் இசைக் கலைஞர். சினிமாவில் பல இசை அமைப்பாளர்களுக்குக் கிடார் இசைத்திருக்கிறார். இப்போது கிறித்துவப் போதகராக இருக்கிறார். இதனால், இயல்பாகவே சிறு வயதிலிருந்தே இசை மீது எனக்குத் தணியாத தாகம். உலக இசைகள் பலவற்றைக் கேட்டேன். மேற்கத்திய இசை உட்பட சிலவற்றைக் கற்றேன். இவை என் ஆர்வத்தை மேலும் தூண்டியதால் இப்போது நான் சினிமா இசையமைப்பாளர்.

இசையமைப்பாளர் ஆவதற்கான உங்களின் போராட்டம்?

போராட்டம் என்பதெல்லாம் இல்லை. முதலில் இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு இருந்ததில்லை. இசைக்கலைஞனாக வரவேண்டும் என்பதுதான் என் அப்போதைய ஆசை. கீபோர்டு பலருக்கு வாசித்துக்கொண்டிருந்தேன். கடவுளின் கிருபையால் தற்செயலாய் கிடைத்தது "மின்னலே' படத்திற்கான வாய்ப்பு. இசையமைப்பாளரானப் பிறகு என்னை அடையாளப்படுத்திக்கொள்ள எனக்கென உருவாக்கிக் கொண்டேன் தனிபாணி.

திகட்டாமல் கொடுக்க வேண்டும் என்பதற்குதான் அதிகப் படங்களுக்கு ஒத்துக்கொள்வதில்லையா?
மூன்று படங்களுக்கான உழைப்புதான் என்னுடைய ஒரு படம். ஒரு படத்துக்கான உழைப்புதான் என்னுடைய ஒரு பாடல். நேரம், உழைப்பு போன்றவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்கிறேன். இதனால்தான் கிடைக்கிறது வெற்றி. திகட்டாமல் கொடுக்கவேண்டும் என்பதற்காக தாமதிப்பதில்லை. முப்பத்தைந்து படங்களுக்கு இசைக்கக் கூடிய வாய்ப்பு வந்தால், அதில் இரண்டு மூன்று படங்களுக்குத்தான் சொல்கிறேன் சம்மதம்.
எந்தவகையான படங்களுக்கு உங்களின் சம்மதம்?
நல்ல கதையம்சம். விருப்பம்போல் இசையமைப்பதற்கான வாய்ப்பு இருந்தால் சம்மதிக்கிறேன். பாடல்களை ரசிகர்கள் கேட்டு ரசிக்கிறார்கள். படத்தைக் கேட்டும் பார்த்தும் ரசிக்கிறார்கள். இதனால் என்னோடு பணியாற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் முக்கியமான ஒன்று. இயக்குனர் யார்? மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்? என்பதையெல்லாம் தெளிவுபடுத்திக் கொண்ட பிறகே சம்மதிக்கிறேன். இதற்கே எனக்கு வருஷக்கணக்கில் ஆகிறது. 2008-ல் வரவுள்ள படத்துக்கு இப்போது சம்மதம் சொல்லியுள்ளேன். கடந்த ஆண்டு "அந்நியன்', "கஜினி'க்கு இசையமைத்தேன். இந்த ஆண்டு "வேட்டையாடு விளையாடு'. மூன்றுமே மெகா ஹிட். எனக்கு முக்கியமானது பணமல்ல; தரம்.

படங்களைத் தேர்வு செய்வதே நீங்கள்தான் என்கிறபோது, கிராமச்சூழலுடனான படங்களை ஏன் தேர்வு செய்வதில்லை?
கிராமச்சூழலுடன் பலர் கதை சொல்கிறார்கள். ஆனால் அவை சரியானக் கதைகளாக இருப்பதில்லை. நல்ல கதையுடன் வந்தால் கண்டிப்பாக இசைப்பேன். இப்போது பெரும்பாலும் நகர்ப்புறக் கதைதான் படமாக்கப்படுகிறது. கிராமத்துக் கதைகளுக்கு அவ்வளவு வரவேற்பும் இல்லை.

மேற்கத்திய இசை அமைத்தாலும் உங்கள் ரசனை மெலடியின் பக்கமே இருக்கிறதே?
மேற்கத்திய இசை என்பதே தவறான விஷயமல்ல. அதிலும் நான் இசைக்கிற எல்லாமே மேற்கத்திய இசை அல்ல. எந்த இசை வடிவத்துக்குள்ளும் என் இசை சிக்குவதில்லை. ஜனரஞ்சகமான, சினிமாத்தனமானதே என் இசை. தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்கத்திய இசைக்கு எப்போதுமே வரவேற்பு இருந்ததில்லை. மேல்தட்டு மக்களிலும் சிலர்தான் ரசிப்பார்கள். "வசீகரா' பாடல் மேற்கத்திய இசை என்று சொல்ல முடியாது. அது இன்னிசை. "சுட்டும் விழி சுடரே' வேண்டுமானால் புதுச் சத்தமாக இருக்கலாம். அதற்கு பெயர் சொல்லத் தெரியாமல் மேற்கத்திய இசை என்கிறார்கள்.
மேற்கத்திய இசையிலும் சில பாடல்கள் இசைத்திருக்கிறேன். இசைக்கவில்லை என்று சொல்லமாட்டேன். எந்த இசையாக இருந்தாலும்,
என்னுடைய விருப்பமாக எப்போதும் இருப்பது மெலடி வகையான பாடல்கள்தான். படத்தின் கடைசிக்கட்டக் காட்சிகளில் யாரும் மெலடிப் பாடல்களைப் போடமாட்டார்கள். நான் அதையெல்லாம் பார்ப்பதில்லை. இலக்கணங்களை உடைப்பது என்பதுதான் என் இலக்கு. கடைசிக் காட்சிகளிலும் மெலடிப் பாடல்களை வைத்திருக்கிறோம். வெற்றி பெற்றிருக்கிறது. "வெண்மதிவெண்மதியே நில்லு' மின்னலே படத்தின் கடைசிக் கட்டக் காட்சியில் வரும் பாடல்தான்.

"ஒமஹசியாஓஹீயாஹா' போன்ற வித்தியாசமான ஓசைகளைப் பாடல்களுக்கு முன்னால் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களே?
இந்த ஓசைகளுக்கு மொழி கிடையாது. அர்த்தம் கிடையாது. அது என்னுடைய உருவாக்கும். பாடலுக்கு நான் போடுகிற கையெழுத்துப் போல். என் பாடல்கள் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காக வித்தியாசமான ஓசைகளைக் கொடுக்கிறேன். "அந்நியனி'ல் "ரண்டக்க ரண்டக்க' ஓசை. அதற்கும் அர்த்தம் கிடையாது. இதுபோல வந்தால் சின்னக்குழந்தைகள் கேட்டவுடனே பாடுவார்கள். எல்லாரும் தலை வாரி வந்திருக்கிற இடத்தில், ஒருவர் மட்டும் தலைகலைஞ்சி வந்தால், யாரைப் பார்ப்போம்? தலைகலைஞ்சி இருப்பவரைத்தானே?. அப்படித்தான் இந்த வித்தியாசமான ஓசைகள்.

பாடல்கள் மட்டுமே இசை என்பதுபோல திரைத்துறையில் நிலைமை மாறி வருகிறதே?
இசையமைப்பாளர்களுக்கான அறிமுகத்தைக் கொடுப்பதாக இருப்பது பாடல்கள். கதைகளில் சில குறைகள் இருந்தாலும் பாடல்களால் வெள்ளிவிழா கண்ட படங்கள் உண்டு. இதனால், திரைப்படங்களில் பாடல்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில் தவறில்லை.

கே.வி.மகாதேவனுக்கு ஒரு "சங்கராபரணம்', எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஓர் "அபூர்வ ராகங்கள்' இளையராஜாவுக்கு ஒரு "சிந்து பைரவி' போல, இப்போதுள்ள இசையமைப்பாளர்களுக்கு முழுக்க முழுக்க இசையால் பெயர் வாங்கித் தரக்கூடிய படங்கள் வராதது ஒரு துரதிருஷ்டம்தானே?
இசையை மட்டும் மையமாகக் கொண்டவை அல்ல நீங்கள் சொன்ன படங்கள். இசையுடன்கூடிய கதையை மையமாகக் கொண்டுள்ள படங்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இசையை மையமாகக் கொண்ட படங்கள் வந்திருக்கின்றன. வெற்றிதான் பெறவில்லை. இசை என்பது கலை. கலையை மட்டும் வைத்து படமெடுத்தால் போரடிக்கும். கதையோடு பொருந்தினாலே இசை வெற்றிபெறும். அப்படிப்பட்ட படத்திற்கு இசையமைக்க நிச்சயம் எனக்கு வாய்ப்பு வரும்.

நிசப்தங்கள்கூட சில நேரங்களில் இசையாவது உண்டு. ஹாலிவுட் படங்களில்கூட இந்த மாதிரியான யுக்திகள் பயன்படுத்துகிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நல்ல விஷயம்தான் நிசப்தம். அதற்காக நிசப்தமாகவே கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடே செய்தால் தப்பாக இருக்கும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், முன்பு வந்த படங்களில் பின்னணி இசை இல்லாமல்கூட படத்தை ஓட்டலாம். கதை கட்டமைப்பு வலுவாக இருந்தது. நடிப்பும் அப்படி இருந்தது. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. பின்னணி இசைக்கு வருகிறபோதே படம் திருப்திகரமான நிலையில் வருவதில்லை.
படம் வெளியாவதற்கு முன் கடைசியாகச் செய்கிற வேலை இந்தப் பின்னணி இசை. படத்தை மெருகேற்றுகிறவராக இசையமைப்பாளர் முன்பு இருந்த நிலைபோய், இன்றைக்கு பல திருப்தியில்லாத விஷயங்களை "ரிப்பேர்' செய்கிறவராக இருக்கவேண்டியிருக்கிறது. இந்தக் கட்டத்தில் நான் நிசப்தத்தைக் கையாண்டேன் என்றால், படம் பார்ப்பவர்கள் எழுந்து போய்விடுவார்கள். எந்தப் படமாக இருந்தாலும் அதில் உள்ள ஓட்டையை அடைப்பதற்கான வழியைத்தான் என் இசை மூலமாகச்

செய்கிறேன்.

வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்புக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
என் இசையில் எண்பது சதவிகித பங்களிப்பு அவர்களுடையதுதான்.

விஜய் டிவியில் "சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி மூலமாகத் தேர்வானவருக்கு எந்தப் படத்தில் பாட வாய்ப்பு அளிக்கிறீர்கள்?
"ஜூலைக் காற்று', "சிலந்தி', "சென்னையில் ஒரு மழைக்காலம்', "பீமா' போன்ற படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் படங்களில் எந்தப் படத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாடுகிற மாதிரியான வாய்ப்பு வருகிறதோ, அதில் கண்டிப்பாகப் பாடவைப்பேன்.

பல இசையமைப்பாளர்கள் பாடி வருகிறார்கள். உங்களுக்கு விருப்பமில்லையா?
எனக்குப் படங்களுக்கு இசையமைப்பதற்கே நேரம் போதவில்லை. இதில் நான் பாடுவது பற்றி சிந்திக்கவே இல்லை. அதற்கு மனரீதியாகவும் தயாராகவில்லை. எனக்குத் தெரிந்து நான் ஒரு நல்ல பாடகரும் இல்லை. ஒருவேளை நான் மனரீதியாகத் தயாரானால் பாடுவேன்.

"வசீகரா' பாடல் தொடங்கி, இப்போது "பார்த்த முதல் நாளே' பாடல் வரை தொடர்ந்து எல்லாப் படங்களிலும் பாடுவதற்கு பாம்பே ஜெயஸ்ரீக்கு வாய்ப்பு கொடுப்பது ஏன்?
வசீகராவுக்குப் பயன்படுத்தியபோது அந்தக் குரல் கேட்காத குரல். வித்தியாசமான குரல். இதைத் தொடர்ந்து "மஜ்னு'வில் "முதல் கனவே'வுக்கும் வாய்ப்பு கொடுத்தேன். இப்போது இயக்குநர்களும் தொடர்ந்து அவருக்கு ஒரு பாட்டாவது கொடுக்கச் சொல்கிறார்கள். ஒரு பாடலின் வெற்றி என்பது நல்ல இசை, நல்ல பாடல் வரிகள் என்பது மட்டுமல்ல. நல்ல பாடகியைத் தேர்வு செய்வதிலும்கூட இருக்கிறது. பாம்பே ஜெயஸ்ரீ விஷயத்தில் "பார்த்த முதல் நாளே' வரை அது சரியாகவே இருந்திருக்கிறது.

இளையராஜா, "திருவாசக'த்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், "குணங்குடி மஸ்தான் சாகிபு' பாடல்களுக்கு இசையமைத்து வருகிறார். உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது உள்ளதா?
சின்ன வயதிலிருந்தே ஓர் ஆசை உண்டு. கிறித்துவப் பாமாலைகளுக்கு இசை அமைக்கவேண்டும் என்று. விரைவிலேயே செய்வேன்.

இசையில்லாது வேறு எதில் ஆர்வம்?
நகைச்சுவையான மேடை நாடகங்கள் மிகவும் பிடிக்கும்.
இசைத்துறையில் சாதிக்கவேண்டும் என்று நீங்கள் வைத்திருக்கும்


எதிர்காலத் திட்டம்?
ஒன்றும் இல்லை. நாளை என்ன செய்யவேண்டும் என்பது பற்றி யோசிப்பதே இல்லை. யோசிப்பது புத்திசாலித்தனம் என்றும் தோன்றவில்லை. இன்றைக்கு செய்வதைச் சரியாகச் செய்கிறேன்.

No comments: