Friday, December 7, 2007

"கனா காணும் காலங்கள்' - நாயக நாயகிகளின் கனா!






"ஜானி ஜானி - எஸ் பாபா; ஈட்டிங் சுகர் - நோ பாபா' -என்று எண்பது வயது கட்டிளம் காளை ஒருவர் பள்ளிக்கூடத்துக்குப் போய் கடைசி பெஞ்சா பார்த்து உட்கார்ந்து பாட முடியுமா?

இது கொஞ்சம் ஓவர் இமேஜினேஷன்!

டென்டல் காலேஜ்ல படிக்கிற ஒரு பொண்ணு... லயோலாவுல பி.எஸ்ஸி. படிக்கிற ஒரு பையன் மீண்டும் புத்தக மூட்டையைத் தூக்கிட்டு ஸ்கூலுக்குப் போய் படிக்க முடியுமா?

இதுவும் ஓவர் இமேஜினேஷன்னு சொல்ல வந்திங்கின்னா... தப்பு தப்பு கன்னத்துல போட்டுக்குங்க..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "கனா காணும் காலங்கள்' தொடரில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் கதாபாத்திரங்கள் சில உண்மையாகவே கல்லூரியில் படிக்கின்றன!

"கிச்சுகிச்சு சண்டை, தில்லுமுல்லு சந்தோஷம், பக்கவிளைவு இல்லாத பொறாமை, பார்வையோடு முடிந்த காதல், பரிவோடு வரும் காதல், மிட்டாய்க்காக முறியும் நட்பு, "கலாச்சல்' கவிதை, சின்னச்சின்னக் காலித்தனம், ருசிக்கும் திருட்டு டிபன் பாக்ஸ், மாலையில் பிரியும் சோகம், காலை பரீட்சை கொடுக்கும் கலக்கம், ஊதாரி அரட்டை, ஊறுகாய் படிப்பு' என்று எல்லாம் கலந்த இனிமையின் முகவரியான பள்ளிக்கூடத்தின் அனைத்துத் துடிப்புகளையும் காட்டுகிறார்கள்.
இதைப் பார்க்கிற எண்பது வயது கட்டிளம் காளையும் "ஜானி ஜானி எஸ் பாபா' என்று கனவில் மிதக்கத்தானே செய்யும்?!

இதுபோன்ற கனவுகளை இலவசமாக நமக்கு வழங்கி இம்சிக்கும் "கனா காணும் காலங்கள்' கதாபாத்திரங்களின் கனாக்கள்தான் என்ன?

""பச்ச... பச்ச... ''
""வணக்கம் சார்.''
கேரக்டர் பச்சயின் நிஜப் பெயர்: மது

எல்லா ஆசைகளையும் மனசுக்குள்ளே வைத்துக்கொண்டு அழும் "காதல் கொண்டேன்' தனுஷ் கேரக்டர். பரம சாதுவாய் நடித்து எல்லோரையும் கொள்ளை கொள்ளும் இவரின் நிஜ வாழ்க்கையும்: இவரின் கனவும்:

""எனக்குச் சொந்தவூர் கோயமுத்தூர்ங்கோ. அப்பா அம்மா பூ வியாபாரம் பண்றாங்க. பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேனுங்க. சின்ன வயசிலிருந்தே சினிமாவுல நடிக்கிறதுதானுங்க என் கனவு. கோயமுத்தூர்ல பூங்குயில் கலைக் குழுன்னு ஒண்ணு இருக்குங்க. இதுல நான் சின்ன வயசிலிருந்தே நடிச்சிட்டுதானுங்க இருந்தேன். அதுல நான் நடிச்சித பாத்துட்டு கானா காணும் காலங்கள்ல நடிக்கக் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தாங்க. நான் படிக்கிறபோது எப்படியிருந்தேனோ அதே மாதிரியாதானுங்க என் கேரக்டரும். அதுல ஒண்ணும் மாத்தமில்ல. படிக்கிறப்ப வால் தனமெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லீங்க. ஆனா சீரியல்ல வர்றா மாதிரி ஒன்பதாவது படிக்கிறப்ப ஒரு பொண்ண லவ் பண்ணுணதெல்லாம் உண்மைதானுங்க. மாயாவி, கண்ணாடிப் பூக்கள் உட்பட 9-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கேன். பல படங்கள்ல நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்துகிட்டு இருக்குங்க. ஒரு பெரிய நடிகனா வரணும்ங்கிங்கிறதுதானுங்க என் கனவு. நிச்சயம் நிறைவேறும். என் வெற்றிக்கு முக்கிய காரணம் இயக்குநர் பிரபு கண்ணன், தயாரிப்பாளர் ராம்ஜி தானுங்கோ''

"ஜோ...ஜோ...''

"உள்ளேன் ஐயா''
கேரக்டர் ஜோவின் நிஜப் பெயர்: பாலாஜி
வாத்தியார் உட்பட எல்லோரையும் கலாய்த்து கலாய்த்தே ஓட வைக்கும் கேரக்டர். கன்னிப்பெண் கண்சிமிட்டினாலும் கண்டுகொள்ள மாட்டாராம் இந்த ஜோ. இவரின் நிஜ வாழ்க்கையும் இவரின் கனவும்:
சொந்தவூர் சென்னைதான். லயோலாவுல பி.எஸ்.ஸி. படிக்கிறேன். அப்பா பிசினஸ் பண்ணுறார். சின்ன வயசிலிருந்தே டான்ஸ்தான் எனக்கு எல்லாமும். மாஸ்டர்கள் யார்கிட்டயும் போய் டான்ஸ் கத்துக்கில. நானேதான் பண்ணேன். எங்க காலேஜ்ல நடந்த கல்ச்சுரல் ஃபங்ஷன்ல டான்ஸ் ஆடுனேன். இது பாத்துட்டுதான் கனா காணும் காலங்களில் நடிக்க அழைப்பு கிடைத்தது. "பிக்கப், டிராப், எஸ்கேப்'தான் இளமையின் தத்துவம். இதே தத்துவமான கேரக்டரிலதான் நடிக்கிறேன். பொண்ணுங்கள்ட்ட பேசணும், பழகணும்.. லவ்னு வர்றப்ப எஸ்கேப்பாகி ஓடி வந்துடணும். தினமும் சூட்டிங்கிலேயே இருப்பதால் காலேஜுக்கு ஒன்லி அட்டெனன்ஸ்தான். காலேஜ் போறப்ப "ஏ... ஜோ... வர்றாரு வர்றாரு'னு கத்துவாங்க. நான் கண்டுக்காமலேயே வந்துக்கிட்டு இருப்பேன். இது பெரிய சந்தோஷமா? இதுபோல படத்திலேயும் நடித்து பேரும் புகழும் பெறணும்ங்கிறதுதான் என் ஆசை. எல்லோரையும் கலாய்க்கிற செயல் சின்ன வயசிலிருந்தே வருது. செயின்ட்மேரிஸ் ஸ்கூல்ல படிக்கிறப்ப ஒரு வாத்தியாரு என்னைக் கலாய்ச்சாரு. நானும் கலாய்ச்சேன். இது முத்திப்போய் வாத்தியாரையே விட்டேன் ஒரு அறை.''

"அய்யய்யோ ஆளவிடு''

"பாண்டி... பிளாக் பாண்டி''

"இருக்கேன் ஐயா''

கேரக்டர் பாண்டியின் நிஜப்பெயர் லிங்கேஷ்.
ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். நடிப்பது காமெடி கேரக்டர்தான். எல்லோரையும் சிரிக்க வைக்கும் இவருக்குப் பின்னால் இருக்கிறது பல சோகம். இவரின் நிஜவாழ்க்கையும் கனவும்:

"சொந்தவூர் மதுரை. எங்க குடும்பம் சென்னை வந்து 20 வருஷத்துக்கு மேல ஆகுது. அப்பா இசையமைப்பாளர். இறந்துவிட்டார். தாத்தா நாடகங்களில் பப்பூன் வேஷம் போட்டவர். எம்.ஜி.ஆர், தியாகராஜ பாகவதருக்கெல்லாம் நல்ல நெருக்கம். இந்த இரத்தம் என் உடம்பிலும் இருப்பதாலோ என்னவோ எனக்கும் காமெடி நடிப்பு ஒட்டிக்கொண்டது. பத்தாவது பெயிலாகிவிட்டேன். வறுமையின் காரணமாகத்தான் என்னால் ஒழுங்காகப் படிக்கமுடியவில்லை. தொடரவும் முடியவில்லை. நடிப்பைத் தொடர வந்துவிட்டேன். எனக்குப் பிடித்த காமெடி நடிகர் சந்திரபாபு. அவரைப் போல பெரிய நகைச்சுவை நடிகராக ஆகவேண்டும் என்பதுதான் என்னுடைய இலட்சியம். ஆட்டோகிராஃப் உள்பட பல படங்களில் சின்ன வயதிலிருந்து நடித்து வருகிறேன். எனக்கும் மியூசிக் தெரியும். கீ போர்டு நன்றாக வாசிப்பேன். பலருக்கு கீ போர்டு கத்துக் கொடுக்கிறேன். இதில் வருகிற வருமானத்தை வைத்துதான் என் குடும்பம் ஓடுகிறது. நடிகை சுஹாசினி, சிவக்குமார் போன்றோர் எங்கள் குடும்பத்துக்குத் தொடர்ந்து உதவி வருகிறார்கள். அவர்கள் செய்கிற உதவிக்கு நான் செய்யப் போகும் நன்றிக் கடனாக இருக்கப்போவது நான் பெரிய நடிகனாக உயர்ந்து காட்டுவதுதான்.''

"ராகவி... ராகவி''
"எஸ் சார்''
கேரக்டர் ராகவியின் நிஜப்பெயர்: ஹேமலதா.

சாது கதாநாயகி. யார் பேசினாலும் ஒரு வார்த்தையில்தான் பதில் வரும். பாட்ஷா படத்தில் குழந்தை வயது நக்மா பாத்திரத்தில் நடித்தவர். இப்போது ஒரு படத்தில் கதாநாயகி. இவரின் நிஜ வாழ்க்கையும் கனவும்:
""சொந்தவூர் பர்மா. இங்கு வந்து பல வருஷம் ஆகுது. அப்பா பிசினஸ் செய்கிறார். சின்ன வயசிலிருந்து தொடர்ந்து நடிக்கிறதால படிப்பைத் தொடர முடியல. பத்தாவது கரஸ்ல படிக்கப் போறேன். பெரிய நடிகையா வரணும்ங்கிறதுதான் என்னுடைய ஆசை. சின்ன வயசிலிருந்து ஏகப்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கேன். இப்போது "காதல் துரோகி'ங்கிற படத்துல கதாநாயகியா நடிச்சுக்கிட்டிருக்கேன். இந்த படம் வெற்றிபெற்றால் ஒரு ரவுண்ட் வருவேன். என்னுடைய ரியல் லைஃப்லயும் நான் ரொம்ப சாஃப்ட்தான். அதிர யாருக்கிட்டயேயும் பேச மாட்டேன். கனா காணும் காலங்களில் வருகிற மாதிரி காதல் பத்தியெல்லாம் படிக்கிறப்ப பேசுனது இல்லை. என்னுடைய கல்யாணம் அரேன்ஜ்ட் மேரேஜாத்தான் இருக்கும்.''

"சங்கவி... சங்கவி''
"பிரஸன்ட் சார்''

கேரக்டர் சங்கவியின் நிஜப்பெயர்: மோனிஷா

தத்தெடுக்கப்பட்ட தங்கை மீது பொறாமை கொண்டு, அதிகாரப் பேச்சு; அனல் வீச்சுதான் இவர் கேரக்டர். இன்னும் 6 மாதங்களில் டென்டல் மருத்துவராகப் போகிற இவரின் வாழ்க்கையும்; கனவும்:
"சென்னை அண்ணாநகரில் வீடு. அப்பா கண் டாக்டர். என்னுடைய சின்ன வயதில் இருந்தே டென்டல் டாக்டராக வேண்டும் என்பதுதான் என் கனவு. மீனாட்சி டென்டல் காலேஜில் ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டு இருக்கேன். நடிக்க எல்லாம் எனக்கு விருப்பமில்லை. விரும்பிக் கேட்டுக்கொண்டதற்காக கனா காணும் காலங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நடிப்பையே விட்டுவிடுவேன். ரஜினி, சூர்யா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் கூட நடிக்க மாட்டேன். நிஜவாழ்க்கையில்
நான் அதிரப் பேசக்கூடிய கேரக்டர் அல்ல. கிடைத்த கேரக்டரைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதற்காக அப்படி நடிக்கிறேன். எதுவும் தெரியாமல் இருக்கக்கூடாது. எதையும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்பதை நான் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அதைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். எல்லாரும் பரதம், குச்சிப்புடி போன்றவற்றை கற்றுக்கொள்ளும்போது பாலே டான்ûஸ நான் கற்றுக்கொண்டதும் அப்படித்தான்''
மாணவர்கள்தான் கட் அடிப்பார்கள் என்றில்லை. சில நேரங்களில் ஆசிரியர்களும் கட் அடிப்பதுண்டு.
வுடு ஜூட்!

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நிறைய நேர்காணல்கள் வெளியிடுகிறீர்களே? இவை, நீங்களே எடுத்ததா வேறு இதழ்கள், தளங்களில் வெளி வந்ததா என்று அறிய ஆவல்

Unknown said...

ஆமாங்க...சீரியல்னு இத மட்டும்தான் பாக்கிறேன் இப்பல்லாம். வடிவேலுத் தன காமெடி, நிறத்தை வைத்துக் காமெடி போல சில விஷயங்கள விட்டுட்டுப் பாத்தா நல்லாத்தான் இருக்கு!!

த.அரவிந்தன் said...

நானே எடுத்து இதழ்களில் வந்ததுதான்