Tuesday, December 4, 2007

கனிமொழி கருணாநிதியின் சில கருத்துகள்!



'கருத்த'ம்மா!


"கருவறை வாசனை' தொகுப்பு மூலம் கவிதை மொழி பேசியவர் கனிமொழி. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் என்ற சிறகை அணிந்து பறக்காமல் தனக்கென தனித்துவமான பாதையில் சிறகடிப்பவர். கனிமொழியின் கருத்துக் குரல்கள்!

கருத்துச் சுதந்திரம்:

ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருக்கவேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. ஒருவருக்குக் கருத்து சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறதோ..அதேபோல அந்தக் கருத்தை எதிர்த்து கருத்துத் தெரிவிக்கவும் ஒருவருக்கு உரிமை இருக்கிறது. அப்படி எதிர்த்துக் கருத்து தெரிவிக்கும்போது அதை எப்படித் தெரிவிக்கவேண்டும் என்பதும் மிக முக்கியம்.

அப்பா:

என்னுடைய கருத்துகளை வெளிப்படையாகப் பேசுவதற்கு முழு உரிமை அளிக்கிறார். அந்த உரிமையைப் பறிக்காததே பெரிய விஷயமாக நினைக்கிறேன். திமுக தலைவர் பல்வேறு போராட்டங்களுக்கு நடுவிலும், இவ்வளவு பெரிய கட்சியைக் கட்டிக் காக்கும் பெரிய ஆற்றலையும், கடின உழைப்பையும் மதிக்கிறேன்.

அம்மா:
என் வாழ்க்கைப் பாதையின் எல்லா நிலையிலும் எனக்கு உறுதுணையாக இருப்பவர்.
சட்டம்:
சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பது உண்மைதான். ஆனாலும் நல்ல பல சட்டங்கள் இருக்கின்றன. அந்தச் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தப்படாதபோது அச்சட்டங்கள் தோல்வியைக் காண நேரிடுகின்றன.

உடைக் கட்டுப்பாடு:

ஒரு பொருளாகப் பெண்ணைப் பார்க்கிற நிலை மாறவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் உடன் படிக்கிற மாணவர்கள் தன்னுடன் படிக்கும் பெண்ணைத் தோழியாகப் பார்க்கும் ஆரோக்கியமான பார்வை வரவேண்டும்.

மரணதண்டனை:

மரணதண்டனை என்பது சரியான ஒன்றல்ல. எத்தனையோ வழக்குகளில் தீர்ப்புகள் சரியாக வழங்கப்படுவதில்லை. சரியாக மரணதண்டனையை நிறைவேற்றுவதாக இருந்தாலும்கூட ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்படி நியாயமாக முடியும்?

ஆதிக்கம்:
ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், சாதி ஆதிக்கம் என எந்த வகையிலான ஆதிக்கமும் இருக்கக்கூடாது.

சினிமா:

தமிழ்ச் சினிமா கேலிக்குரிய ஒரு விஷயமாகவே மாறி வருகிறது. நிஜத்தைவிட்டு விலகிப்போகிறது. சிந்திக்க வைக்கிற விஷயங்களை மறந்துவிட்டு, வெறும் பொழுதுபோக்கு அம்சங்களையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.

தமிழ்:

எல்லோருக்கும் அவரவர் தாய் மொழி மீது பற்று இருக்கவேண்டும். தமிழ் மொழியின் பெருமையை உணரவேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்கும் தமிழ்மொழியின் பெருமைகளைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

No comments: