Sunday, February 27, 2011

சந்திர யானை



22



தும்பிக்கையை மேலே தூக்கி; காற்றை உள்ளிழுத்து; தட்பவெப்பநிலையை வழக்கம்போல்தான் அன்றும் ஆராய்ந்தது அந்தக் காட்டு யானை. ஆனால் அதன் இழுவிசையில் சந்திரன் பெயர்ந்து வந்து தும்பிக்கைக்குள் ஓடிப்போய் வாய்க்குள் வந்துவிட்டது. அதிர்ச்சியோ ஆச்சரியமோ கொள்ளாமல் அந்த யானை சந்திரனைக் கடித்துக்கடித்து ஒளிநீராக்கி தும்பிக்கையை மேலே உயர்த்திப் பீய்ச்சியடித்தது. ஒளியூற்று மிகவும் பிரகாசமாக நீண்ட தூரம் மேலே போய் மீண்டும் தரைக்கு வந்தது. இதில் அதீத மகிழ்ச்சிக்கு ஆட்பட்டு அது மீண்டும்மீண்டும் ஒளிநீரை உறிஞ்சியும் மேலே பீய்ச்சியடித்தும் ரசித்தது. ஓயாத ரசிப்பின் ஒரு நிலையில் வழக்க பழக்கத்தில் ஒளிநீரை உறிஞ்சி அதன் முதுகின் மேலேயே பீய்ச்சிக் கொண்டது. முதுகெங்கும் வழிந்த ஒளிநீரை மீண்டும் அது உறிஞ்ச முனைந்தபோது உருண்டு திரண்டு சேர்ந்திருந்த சந்திரன் யானை முதுகில் பாகனைப்போல உட்கார்ந்துகொண்டு அதனை விரட்டியது. மிரண்டு மேலேமேலே சென்ற அந்தப் பெரிய கறுப்பு யானை முகத்தையும் வாலையும் மறைத்துக் கொண்டு இன்றும் பாகனைச் சுமந்து அந்தரத்தில் அலைகிறது.

Thursday, February 24, 2011

எரிப்பு




21


மூட்டப்பட்டிருந்த தீயில் அவர்கள் போட்டப் பனம்பழங்கள் எரிந்துகொண்டிருந்தன. அந்தக் காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்கள் எவருக்கும் தீயில் எரிவது பனம்பழங்கள்போலவே தெரியவில்லை. மனிதத் தலைகள் எரிவதுபோலத் தெரிந்தன. ஆனாலும் அவர்கள் யாரும் யாருக்கும் தாங்கள் பார்த்த காட்சியைப் பற்றிச்
சொல்லிக்கொள்ளவே இல்லை. அதேசமயம் எரிந்த அந்த மனிதத் தலைகளைச் சுட்ட பனம்பழங்கள் என்று சொல்லி தின்றும் முடித்தார்கள்.

Thursday, February 17, 2011

தும்பியின் கண்கள்




20



ஒரு புல்லில். அங்கிருந்து வேலியில். அங்கிருந்து செம்பருத்திச் செடியில். அங்கிருந்து மரக்கட்டையில் எனத் தும்பி உட்கார்ந்த இடத்திலெல்லாம் மகன் கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் குவித்து வாலைப் பிடிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான். மகனின் இந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அப்பா தும்பியின் பின்னால்
நின்று உள்ளங்கையை விசிறியைப்போல் வீசிப் பிடிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்தார். புழுவை விழுங்கும் மீன்போல் எளிதாக வித்தையைக் கற்ற மகன், அவன் பிடித்த யானைத் தும்பி, ஊசித் தும்பி, ஹெலிகாப்டர் தும்பி என எல்லாவகை தும்பிகள் வாலிலும் நூலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பறக்கவிட்டு விளையாடினான். ஒரு நாள் தும்பி ஒன்று நூலை அதிகம் இழுத்துப் பறப்பதாக உணர்ந்தபோது அதன் வாலைப் பிய்த்துப் போட்டான். வாலறுந்த தும்பி துடித்து நகர்ந்ததையே பார்த்துக்கொண்டிருந்தபோது விளையாட்டைவிட வன்முறையில் ரசிக்கத் தக்கவை அதிகம் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அன்று முதல் பிடிக்கப்பட்ட எல்லாத் தும்பிகளின் வயிறுகளும் கிழிக்கப்பட்டு குடல்கள் பிதுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. அதில் சலிப்பு தட்டியபோது தலைகள் கிள்ளப்பட்டு அது சிறுநேரம் நீர் சுவடாகத் தெரியும் வரை தரையில் உருட்டி நசுக்கப்பட்டன. அதற்கு மேல் சலிப்பு தட்டி வேறுவகையான வன்முறையில் தும்பியிடம் ஈடுபட புதிய முறை எதையும் அவனால் கண்டறிய முடியவில்லை. அதைப்போல அவனால் தும்பியிடம் இன்னொன்றையும் கண்டறிய முடியவில்லை. ஒவ்வொரு முறை தலை கிள்ளும்போதும் தும்பியின் கண்களில் பயத்தைப் பார்க்க அவன் துடிப்பான். அந்தச் சிறுமகன் நேற்று மதியம் புதுவெள்ளம் அடித்துப் போய்க்கொண்டிருந்த ஆற்றின் கரையில் இலந்தையில் செடியில் உட்கார்ந்த ஒரு தும்பியைப் பிடித்துத் தன் பேரனோடு தலையைக் கிள்ளிக் கொண்டிருந்தபோதும் பயத்தைப் பார்க்க முடியவில்லை. எப்போதும்போல் அன்றும் தும்பி அவன் கையைக் கடிக்காமல் விடவில்லை.

Wednesday, February 16, 2011

பேரலறல்



19



தூக்குப் போட்ட கண்களாக நரம்புகளில் இரத்தங்கள் இறுக்குமளவு அவள் வாயை ஒருவன் அழுத்திப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் அவளைத் திமிற விடாமல் பிடித்து மூட்டையாகத் தூக்கிக் கொண்டு வந்து, பகலில்கூட யாரும் வராது அந்தப் பாழ் கட்டடத்திற்குள் செடிகள் முளைத்திருந்த தரையில் போட்டார்கள். மூச்சிரைக்க எழுந்தவள் அங்கிருந்து மிரட்சியோடு ஓட முயன்றாள். அவளை எட்டிப் பிடித்த ஒருவன், "விபச்சாரமாடி செய்ற... தேவடியா'' என்று அடித்து நொறுக்கி அவள் புடவையைத் தூக்கி குறியைச் செலுத்தி நின்றவாகிலே இயங்கினான். அவனை
அவள் தள்ள முயற்சித்தபோது இன்னொருவன் பின்னால் வந்து அவள் முதுகு பழுக்க அடித்துப் பிருட்டத்தைப் பிளந்து அவன் குறியைச் செலுத்தி இயங்கினான். இரண்டு காட்டெருமைகளிடம் மாட்டிக்கொண்டதுபோல அவள் திமிறிக் கொண்டிருந்தபோது மற்றொருவன் அவள் இடக்கையையும் வேறொருவன் அவள் வலக்கையையும்
கல்லாலேயே தாக்கி அவர்கள் குறிகளைப் பிடித்துக்கொள்ளச் செய்து இயங்கினார்கள். நால்வரின் வெறிச் சத்தத்தால் ஒதுங்கி நின்ற ஐந்தாமவன் கிளர்ச்சியுற்று உடைந்திருந்திருந்த இரண்டு சுவர் பக்கங்களிலும் கால்களை வைத்து ஏறி வந்து அவள் கன்னத்திலேயே அறைந்தறைந்து வாயைத் திறந்து குறியைச் செலுத்தி இயங்கினான். மிருகக் கழிவை ஒவ்வொருவாய் வெளியேற்றிவிட்டு அவர்கள் கிளம்பியபோது ஒருவன், 'பாவம். போனாப் போகுது' என்று ஓர் ஐம்பது ரூபாய்த் தாளை அவள் முகத்தில் வீசியடித்தான். கீறல் இரத்தங்களைத் துடைத்துக்கொண்டே ஆவேசத்தோடு அந்தத் தாளை எடுத்தவள், "உங்களை நீங்களே ஒழுத்துக்கொண்டதற்கு எனக்கெதற்குக் காசு?'' என்று அதைத் தூக்கியெறிந்தாள். அதற்குப் பிறகு அந்தப் பாழ் சுவர்களிலிருந்து கீறிப்பிள்ளை, ஓணான்கள், பல்லிகள் எல்லாம் அதிர்ந்து ஓட ஒரேயொரு பேரலறல்தான் கேட்டது.

Monday, February 14, 2011

எரிநட்சத்திரம்



18


இரவில் அவன் கடற்கரையில் நின்றிருந்தான். அப்போது எரிநட்சத்திரம் ஒன்று கடலில் எங்கோ தொலை தூரத்தில் விழுந்து கொண்டிருந்தது. அந்த எரிநட்சத்திரத்தைப் பிடிக்க முயற்சிப்பதைப் போன்ற மடத்தனம் வேறெதுவும் இல்லையென அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இரண்டு கைகளையும் ஏந்தியவாறு ஓடிப் பாய்ந்தான். இதைப்போல சென்றமுறை அவன் ஓடி பாய்ந்ததில்தான் ஒரு பாறையில் வெட்டுப்பட்டு முன்நெற்றியில் பதினெட்டுத் தையல்களுடன் மருத்துவமனையில் சுயநினைவின்றிக் கிடந்தான்.

Sunday, February 13, 2011

தலைஞாயிறு




17


பனி கொட்டிய அதிகாலை கருக்கலில் அவன் கடப்பாரையோடு வந்தான். ஓரடி அகலத்தில், ஒன்றரை அடி ஆழத்தில் வலப்புறச் சாலையோரமாகப் பள்ளம் தோண்டிக் கொண்டே போனான். கடப்பாரையை ஒவ்வொரு முறை அவன் இறக்கியபோதும் சந்தோஷப் பூரிப்போடு மண் பிளந்துகொண்டு அவனை உற்சாகம் மூட்டிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் கிழக்கு திக்கில் போவதை எதேச்சையாய்க்
கவனித்தேன். சிறு வட்ட நெருப்பாய்ப் புறப்பட்ட சூரியன் மேலே செல்லச் செல்ல பிரம்மாண்டக் கோளமாகி மீண்டும் தூரம் செல்லச் செல்ல சிறுவட்டமாகி கிழக்கு வானை மஞ்சள் ஒளியால் எரிக்கத் தொடங்கி மேற்குத் திக்காக நகரத் தொடங்கியது. எல்லாவற்றிற்கும் விடுப்புச் சொல்லிவிட்டு அவனையே பின் தொடர்ந்து சென்று கவனித்தேன். அவனின் ஒவ்வொரு நகர்தலுக்கேற்பவே சூரியனின் நகர்தலுமிருந்தது. உச்சுக்குச் சூரியன் வந்திருந்தபோது ஒரு வீட்டார் அவர்கள் வாசல் பக்கம் பள்ளம் தோண்டக் கூடாது என்று சண்டை போட்டார்கள். அவன் பதிலேதும் சொல்லாமல் கடப்பாரையை அங்கேயே போட்டுவிட்டு ஓர் ஓலைக் குடிசைக்குள் சென்றான். எங்கிருந்தோ திரண்டு வந்த மேகங்கள் அவசரஅவசரமாகச் சூரியனை மறைத்துக்கொண்டன. நீராகாரம் குடித்து முடித்து அவன் வெளியில் வரும்வரை மேகங்கள் தங்கள் உடும்புப் பிடியை விடவே இல்லை. மீண்டும் வந்து அவன் கடப்பாரையை எடுத்து குறுக்காகத் தோண்டிக் கொண்டுபோனபோது அசுர வேகத்தோடு மேகங்கள் கலைந்து போயிருந்தன. குறுக்கில் முடித்து இடப்புறச் சாலையோரமாகக் கடப்பாரையை இறக்கிக் கொண்டிருந்தபோது மேற்குத் திக்கில் சூரியன் சரிந்து நகர்ந்தது. நெடுகத் தெருவெங்கும் தோண்டி முடித்து மாலை கருக்கலில் கடப்பாரையைத் தோளில் தூக்கிக்கொண்டு போனபோது அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அதே கிழிப்பின் இடைப்பட்ட பகுதி வழியே நிலவும் சிறு வெண்ணொளிப் புள்ளியாய்ப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.

Saturday, February 12, 2011

மயக்கம்



16


எரியும் வெயிலில் சிறுவர்கள் ஓணான் தேடி புதர்புதராய் குச்சிகளால் தட்டிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவர்களைத் தேடி கத்திகளோடும் உருட்டுக் கட்டைகளோடும் வீடுவீடாய்த் தட்டிக்கொண்டிருந்தார்கள். முள் செடியிலிருந்து தப்பியோடிய ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தபோது அவர்களும் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை முற்றுகையிட்டார்கள். ஓணான் வாயில் புகையிலையைத் திணித்து கீழே விட்டதும் அது மரண மயக்கத்திற்குப் போய் பேயாட்டம் ஆடுவதைச் சிறுவர்கள் ரசித்துக்கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவன் கணவனின் வயிற்றைக் கத்தியால் குத்திக் கிழித்துக்கொண்டிருக்க மற்றொருவன் கணவனின் தலையைக் கட்டையால் அடித்து நொறுக்கினான். ஆட்டத்திற்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஓணானின் வாலைப் பிடித்து ஒரு சிறுவன் இராட்டினம்போல் சுற்றித் தரையில் அடித்தபோது அவர்கள் அவளிடமிருந்து பச்சிளம் குழந்தையைப் பறித்து சுவரில் அடித்துத் தெறிக்க வைத்தார்கள். இரத்தம் வெளியேறி குடல் பிய்ந்து போயும் ஓணானை விடாமல் கற்பிதங்களால் ஏறியிருந்த வெறியோடு சிறுவர்கள் மிதித்துமிதித்து அதை மண்ணாக்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் அவள் முகத்தைச் சிதைத்து, முலையைச் சிதைத்து, யோனியையும் சிதைக்க நம்பிக்கையை உருவினார்கள்.