Friday, November 23, 2007

அரசியலுக்கு மாற்று வழி!

அரசியலுக்கு மாற்று வழி!
(நடைவண்டிச் சாலைகள் -9)

அரசியல்-சாக்கடை. இந்தச் சொற்றொடரை உச்சரிக்காத உதடுகள் குறைவு. சாக்கடை எப்படி உருவாகிறது? ஓடும் நதியை மக்கள் பயன்படுத்தாத நிலையிலேயே, நதி-கூவம்.
அரசியலால், அரசியல்வாதிகளால் இந்தியா குப்பைமேடாய் மாறுகிறது என்று வாதத்துக்கு எடுத்துக் கொள்வோம். அப்படியெனில், அரசியலுக்கு மாற்று வழி? அரசியல் முறை இல்லாத இந்தியா எப்படி இருக்கும்?இந்தியா பல துண்டுகளாகச் சிதறும்; குறுநில மன்னர்கள் தோன்றுவார்கள்; அடிமை முறை உயிர்த்தெழும்; ஆளுக்கொரு நீதி சொல்கிற, கட்டப் பஞ்சாயத்து நீதிபதிகள் வலம் வருவார்கள். இப்போது இருப்பதைவிட பன்மடங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அதிகரிக்கும்; பேச்சுரிமை, எழுத்துரிமை, மனித உரிமைகள் மறுக்கப்படும்; பசி, பட்டினியால் மனிதனை மனிதனே சாப்பிடுகிற அவலம் ஏற்படும். இத்தகைய இந்தியாவிலா நாம் வாழ விரும்புகிறோம்?
சமத்துவமான, சகோதரத்துவமான, ஊழலின் ஊற்றுக்கண் இல்லாத, வறுமைக்கோட்டிற்குக் கீழ் மக்கள் வாழாத எழுச்சியுற்ற இந்தியாவில் அல்லவா வாழ விரும்புகிறோம். இதனைப் பெற்றுத்தர நமக்கு வழிகாட்டும் சமுதாயப் பேராசிரியர்கள்தான் அரசியல்வாதிகள். ஆனால் இங்கு அரசியல்வாதிகள் பேராசிரியர்களின் எதிர்ப்பதம்.
சுயநலம், உணர்வு ஏய்ப்பு, உரிமை ஏய்ப்பு, வாக்கு பெற மட்டும் வாய்ச் சவடால், துக்கச் செய்தியிலும் அரசியல் செய்கிறவர்கள்தான் இங்கு அரசியல்வாதிகள். இவர்களின் செயல்முறைக்கு நாமும் பலவகையில் உறுதுணை. வீட்டில் குழந்தைக்குப் பால் வாங்க பணம் இல்லாவிட்டாலும் கட்சித் தலைவனுக்குப் பொன்னாடை போர்த்துகிற தொண்டர்கள் இருந்தால், அரசியல்வாதிகள் எப்படித் தங்களை மாற்றிக் கொள்வார்கள்? ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் செய்வதினால் மட்டுமே நாம் நல்லரசைப் பெற்றிட முடியும் என்பது மடமை.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பள உயர்வு உட்பட எல்லாத் தேவைகளையும் அவ்வப்போது கேட்டுப் பெறுகிற வாய்ப்பு எளிது. இவற்றிற்கு மட்டும் கட்சி பாகுபாடின்றி எல்லா உறுப்பினர்களின் குரலும் ஒருமித்தே ஒலிக்கிறது. ஆனால், பொதுமக்கள் தங்கள் தேவைகளைக் கேட்டு பூர்த்திச் செய்து கொள்கிற வாய்ப்பு மட்டும் குதிரைக் கொம்பு.
தேர்தலுக்குப் பின், மக்களுக்கும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான இடைவெளி பலகாத தூரம். மக்களின் பிரதிநிதியாகவே உறுப்பினர்கள் சபையில் காலெடுத்து வைத்தாலும் அவர்களின் குரல் மக்களின் குரலாக இல்லை. அரசியல் ரீதியான வாத, பிரதிவாதங்களே. உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிற நிலையிலும் இதே நியதியே.
அரசாங்கத் திட்டங்கள்கூட, ஆளுங்கட்சியின் அரசியல் லாபம் ஈட்டுகிற எண்ணங்களாகவே அமைகிறது. இது எல்லாத் தரப்பு மக்களுக்கும் திருப்தி அளிக்கக்கூடியதல்ல. மேலும் பயன்பாட்டுக்கு வரும் திட்டங்கள், சலுகைகளை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே பயன்பெறும் வகையில் உறுப்பினர்கள் வழிவகுத்துக் கொடுக்கின்றனர். இதனால் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல; எக்கட்சியையும் சாராதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதைக் களைவதற்கு பல வழிமுறைகள், சட்டத்திட்டங்கள் இருந்தாலும் நடைமுறையில் அவை கட்டுப்படுத்தக்கூடியதாக இல்லை. இந்நிலையை மாற்ற, "மக்கள் சேவை கண்காணிப்பு' ஆணையம் என்று அமைக்கலாம். இந்த ஆணையம், தேர்தல் ஆணையத்தின் உப ஆணையமாகச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
தேர்தலோடு முடிவது தேர்தல் ஆணையப் பணி. தேர்தலுக்குப் பின் தொடங்குவது "மக்கள் சேவை கண்காணிப்பு' ஆணையப் பணி. இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர், ஐ.ஏ.எஸ்.அதிகாரி, சுதந்திரப் போராட்டத் தியாகி அல்லது ஓய்வுபெற்ற இராணுவ வீரர், சமூக ஆர்வலர், மூத்த பத்திரிகையாளர் ஆகியோர் உறுப்பினர்கள். எதிர்க்கட்சித் தலைவர் இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து எடுக்கிற முடிவே இறுதியானதாகும்.
எதிர்க் கட்சி தலைவர்கள் என்பவர் ஆளுங்கட்சியை எதிரிக் கட்சியாக நினைத்து செயல்படாதவராக இருக்க வேண்டும். அப்படி எவரும் கிடைக்கமாட்டார்கள் என்பது உண்மைதான். எதிர்க் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் இருந்தால்தான் மக்களுடைய உண்மையான குறைகள் தெரிய வரும், ஊழல் ஊற்றெடுக்காமலும் இருக்கும். ஒரு திட்டம் நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு எடுக்கும்போது இத்தாலி நாட்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருபது பேர் இருக்கிறார்கள் என்றால், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் 20 பேர்தான் இருப்பார்கள். மற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் உண்மையாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். அந்தவகையில்தான் இதையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.இந்த ஆணையத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் 20 பேர் கொண்ட குழுவை நியமிக்கலாம். அந்தக் குழுக்கள் தொகுதிகளில் களப்பணியில் ஈடுபட்டு, மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, உடனடித் தேவைகளை முன்னிலைப்படுத்தி, அதனை நிறைவேற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதிகள் சரியான முறையில் சரியான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா? எல்லாத் தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறதா? என்பதைக் கண்டறிந்து ஆய்வறிக்கை சமர்பிக்க வேண்டும். இதைப்போல ஆண்டுக்கொரு முறை தொகுதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து "மறுமதிப்பீடு' செய்ய வேண்டும்.
தொகுதி உறுப்பினர் குறித்து பொதுமக்களிடம் நேரிடையாகக் கருத்து கேட்டு, அந்தக் கருத்துகளின் தொகுப்பினை, உறுப்பினர்களுக்கு உணர்த்துடன் செய்தி ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம். ஓர் உறுப்பினர் இரண்டு ஆண்டுகளாகத் தொகுதி மக்களின் நம்பிக்கையிழந்தவராக இருப்பின், சபாநாயகர் துணையுடன் மக்கள் சேவை கண்காணிப்பு ஆணையம் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு வழிவகை காணலாம். இதன்பின் அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இதன்மூலமேனும் வாக்களித்த மக்கள் ஏமாந்து போகாத நிலை வரும். அரசியல்வாதிகளும் கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் பணியாளர்களாக மாறுவார்கள். எனவே அரசியலுக்கு மாற்றுவழி காண்பதைவிட, அரசியலை மாற்றுகிற வழியைக் காண்பதே சிறப்பு.
(இந்த வழி தவறென்றும். இதைவிட சிறந்த மாற்றுவழி இருக்கிறது என்று எண்ணுகிறவர்களும், எந்த வழிவந்தாலும் குறுக்குவழியை அரசியல்வாதிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்றும் கருதுகிறவர்களும் இருந்தால் பதில் எழுதுங்கள். கலந்துரையாடலாம்)

Thursday, November 22, 2007

நெஞ்சத்துக் கர்ப்பம் (2)



* நீ
என்னை
புளியமரம் போல்
உலுக்கி
சந்தோஷத்தைப் பொறுக்கிறாய்

விழுகிற பழத்துள்
முளைக்கிற இதயம்.

***

* மையச்சாலையில்
பிரிவின்
வேதனையுடன்
கிடக்கும்
ஒற்றைச் செருப்பாக
எங்கோ
கழன்று
விழுந்துவிட்டது
என் மனம்.
***
* வீதியில்
நடந்து
வரங்கள் கேட்காமலே
என்னுள்
அழகாய்க் கட்டினாய்
பிரமிடு

திசைதவறி
என்றேனும் வந்தால்
எட்டிப் பார்

சவமாய்க் கிடக்கிறது
கருத்தரித்த
பருவச் சொல்
***
(விடாது அலைவோம்)

Wednesday, November 21, 2007

சாம்பல் செடி (சிறுகதை)


சாம்பல் செடி


பொன்வாசநல்லூர். ஒரே தெருவிலான சிறுகிராமம். கற்போடு அலையும் காற்று. கப்பிக்கற்கள் வழியாக நடந்தால் முதலில் குளம் வரவேற்கும். குளத்தில் சிறிய படித்துறை. ஒருபக்கச் சுவர் வெடித்து வாய் பிளந்து ஆகாயம் வெறிக்கும். மக்கள் நீந்தாத நீர்நிலையில் வெங்காயத் தாமரை தன் அழகைக் காட்டும். படித்துறை பகுதியைக் குளிக்கப் பயன்படுத்துவர். எதிர்ப்புறக் கரையில் மாடுகளைக் குளிப்பாட்டுவர். அதற்கு அடையாளமாக தேய்க்கப்பட்ட கைகொத்தளவிலான வைக்கோலின் திட்டுத்திட்டான மிதவைகள். எண்ணிப் பார்த்தால் பத்து அல்லி மொட்டுக்கள். வட்டமிட்ட மீன் கொத்தி ‘சர்க்’கென்று பறந்து தண்ணீருக்குள் அலகைப் பாய்ச்சி, கிடைத்த கெண்டைக் குஞ்சை துடிக்க, தூக்கி காணாமல் போகிறது.எண்பது வயதிலும் பொட்டுக் கொடுத்த கிழவி, யாருடைய உதவியுமின்றி பாசி படர்ந்த படிகளில் இறங்கி இந்தக் குளத்தில்தான் குளித்து வருகிறாள். கிழவி, கணவர் இறந்த போது, ‘என் பொட்ட கொடுத்துட்டேனே... ஆ...ங்ங்’ என்று வயசுக்கு வந்த மகளைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்தது ஊரையே கண்ணீரில் ஆழ்த்தியது. ஊனத்தையே பழகப்பழக நண்பர்கள் பரிகாசம் புரிவதுபோல கிழவியின் ஒப்பாரி விடலைப் பசங்களால் பின்னர் கேலிக் குள்ளாகி ‘பொட்டுக் கொடுத்த கிழவி’ன்னு நாளடைவில் பெயர் நிலைத்துவிட்டது. ஆரம்பத்தில் விடலைப் பசங்கள் ‘பொட்டுக் கொடுத்த கிழவி’ன்னு கூப்பிடும்போது, ‘ஒழுக்கெடுத்த நாய்ங்களே’ என்று எம்பி எம்பி கிழவி அடிக்க ஓடுவாள். பசங்களும் பயந்து ஓடுவதுபோல சிரித்துக் கொண்டே ஓடுவார்கள். இதைக்கண்டு ஊரே ‘கொல்’லென்று சிரிக்கும். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, கிழவியும் பெயரை ஏற்றுக்கொண்டு யார் கூப்பிட்டாலும் அமைதியாகவே பேசக் கற்றுக் கொண்டாள். அழுக்கேறிய நைந்த நைலக்ஸ் சேலையை முழங்காலுக்குக் கீழ்வரை சுற்றியிருப்பாள். சேலை யார் உபயம் தெரியவில்லை. ஜாக்கெட், உள்பாவாடை கிடையாது. காய்ந்த மட்டை காற்றில் கிழிந்து தொங்குவதுபோல சுருங்கிய மார்பகம். கிழவி தாங்கித் தாங்கி நடப்பதற்கு ஏதுவாய் அஷ்டகோணலாய்க் கால்கள் வளைந்து இருக்கும். தலையில் வலப்புற முடியை இடப்புறம் போட்டு, இடப்புற முடியை வலப்புறம் போட்டு சீவாமல் நடுவில் கொத்தாக செருகிக் கொள்வாள். கேட்டால், கொண்டையென தின்ற அரிசி உதட்டோரம் ஒட்டிக்கிடக்க, வெற்றிலைக் கறை தெரிய ‘போங்கடா போக்கெடுத்த பசங்களா’ என்பாள். முகத்தில் மட்டும் கவலை முள் குத்துவது தெளிவாகத் தெரியும். புருஷன் தனியாய்த் தவிக்க விட்டுப் போன துக்கமா? ஆதரவாய் இருந்த மகளும் சர்க்கரை ஆலை ஆய்வு அதிகாரியோடு பட்டணத்துக்கு ஓடிப்போன கவலையான்னு கிழவிக்கே விளங்கும். வயதாகிவிட்டதால் கிழவிக்கு எந்தச் சொந்தமும் ஆதரவுக்கரம் நீட்டவில்லை. இருப்பதற்குக் கூட இடம் இல்லாமல் தவித்த வேளையில் சாமித்துரை வீட்டுத் திண்ணையில் தஞ்சமடைந்தாள். சாமித்துரை குடும்பம் வாழ்ந்து கெட்ட குடும்பம். வாழ்ந்ததற்கு அடையாளமாக இருபுறத்திலும் திண்ணைகள் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். கெட்டதற்கு அடையாளமாக ஓடுகள் சரிந்து விழுந்து சூரியன் வீட்டிற்குள் புகுந்து உரல் இருளையும் விரட்டும். சாமித்துரை தன்னைப்போல்தானே கிழவியும் எனத் திண்ணையில் அவளைத் தங்க அனுமதித்தாலும் அவருக்கு லாபமில்லாமல் இல்லை. பாதி வீட்டு வேலையைக் கிழவி இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். கிழவி இருப்பது சாமித்துரை மனைவி அம்புஜத்திற்கும் சந்தோஷம். கல்லடுப்பை மூட்டி நெல் அவிக்க, உலக்கையைத் தூக்கி உரலில் நெல்குத்த என கிழவி உதவியால் வேலை சுலபமாக முடிந்து விடுகிறது. கிழவிக்குப் பயன் இல்லாமல் இல்லை. அம்புஜம் இருப்பதற்கேற்ப பழைய சோறுடன் துவையல் அல்லது சுடு சோறுடன் புளிக்குழம்பு கொடுப்பதுடன், அரிசி, நெல்லும் கொடுப்பாள். சோறைவிட கிழவி அரிசி, நெல்லே விரும்புவாள். கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பதைச் சேர்த்து திண்ணைக்கு மேல் உள்ள மரப்பலகை இடுக்கில் கந்தல் துணிகளில் கொட்டி முடிச்சிட்டு தனித் தனியாய் வைத்திருப்பாள்; யார் வீட்டுக் களத்திற்காவது சென்று பயிர் பொறுக்கி அதையும் முடிச்சிட்டு வைத்திருப்பாள். சிறு மூட்டைகளை யாரையும் தொடவிடமாட்டாள். யாரும் தொடுவதில்லை. இதைப்போல எல்லோர் வீட்டிற்கும் வேலை செய்து கிழவி அரிசி, நெல் பெறுவாள். ஒருநாள் உச்சி வெயிலில் வேப்பங்கொட்டை பொறுக்கிக் கொண்டு ‘பகவான் கூப்பிட மாட்டுறானே’ என்று தன் நிலையை நினைத்து சுயபச்சாதாபத்தில் அழுது கொண்டே கிழவி தாங்கி தாங்கி திண்ணைக்கு வந்தாள். அப்போது சாமித்துரை பெயரன் அன்பரசு மர இடுக்கில் மூட்டையை எடுக்க எக்கிக்கொண்டிருந்தான். கிழவிக்கு அழுகையும் ஆத்திரமும் முட்டிக்கொண்டது. ‘ஒழுக்கெடுத்த நாயே...’ என்று ஏகவசனத்தில் பேசி அவன் காலில் வேகமாக கிள்ளினாள். அன்பரசு அலறி துடித்தான். வீட்டிற்குள் இருந்த சாமித்துரை பெயரன் சத்தம் கேட்டு ஓடிவந்தார். பெயரன் அழுவதைப் பார்த்து “ஏ... நாயே, என் பேரன் மேலயா கைய வைக்கிற” என்று கோபம் தெறிக்க கைகால்களை ஆட்டி சாமித்துரை கிழவியைக் கத்தினார்.“என் உசுருப்போல பாதுகாத்திட்டு... வரேன்... இத... ஏன் திருடப் பார்த்தான்” என்று உள்ளூர அதிர்ந்து பயந்து போனாலும் தயங்கித் தயங்கிக் கிழவி கேட்டாள்.“அதை ஏன்டா... எடுக்கப் போன...” சாமித்துரை, பெயரன் அன்பரசு பக்கம் கோபத்துடன் திரும்பி கன்னத்தில் ‘பளாரென’ ஒரு அறைவிட்டு கேட்டார். அன்பரசு முன்பைவிட வேகமாக அலறி அழுதான்.“பேரனை அடிக்காதீங்க... விடுங்க...” கொல்லைப் புறத்தில் பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த அம்புஜம் ஓடிவந்து சாமித்துரை கையை வேகமாக உதறி விட்டாள். “விட்டுடுங்க...” பிரச்சனை பெரிசாகி விடுமோ என்ற பயத்தில் கிழவியும் கம்மிய குரலில் சொன்னாள். “எதுக்குடா எடுத்த?” விடவில்லை சாமித்துரை.“மூட்டை மூட்டையா இருக்கே என்னன்னு பார்க்கத் தான்” கண்ணை கசக்கிக் கொண்டே அன்பரசு சொன்னான். துருதுரு வயது பிள்ளைகளுக்கு இது போன்ற ஆர்வம் எழுவது சகஜமான ஒன்று என்று நினைத்து சாமித்துரை பெயரனை இழுத்து சமாதானம் செய்ய முற்பட்டார். அன்பரசு சாமித்துரை கையை தள்ளிவிட்டு பாட்டி அம்புஜத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான். “அதுல அப்படி என்னதான் வைச்சிருக்கேன்னு அப்படி குதியோ குதின்னு குதிக்கிற” சாமித்துரை இப்போது கிழவி பக்கம் திரும்பி பொரிந்தார். தப்பு செய்துவிட்டோமோன்னு கிழவிக்கு உறுத்த பயந்து கொண்டே, “பட்டணத்துல இருக்கிற என் பேரனுக்கு மோதிரம் வாங்கிக் கொடுக்க அரிசி, நெல்லை சேர்த்துக்கிட்டு வரேன்”என்று இரக்கமாய் சொன்னாள். கிழவியின் செய்கையிலும் தப்பு இருப்பதாக சாமித்துரைக்கு தெரியவில்லை. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆமாம்... பேரன் பேரன்னு நீதான் உசுர விடுற. இது வரைக்கும் உன் பொண்ணோ, மருமகனோ, பேரனோ வந்து பார்த்ததில்லை. நீ எப்படி இருக்கேன்னு கேட்டு லட்டரும் போட்டது இல்ல. ஆறு மாசத்துக் கொரு தடவை பேரன பார்க்கப் போறேன்னு பட்டணத்துக்குப் போற. என்னையும்தான் ஒருதடவ அழைச்சிட்டு போனே... எங்க உன் மருமகனும், உன் பொண்ணும்... பேரன பார்க்க விட்டாங்களா... உன்னையே தெரியாததுபோல் காட்டிக் கிட்டாங்க. அழுதுகிட்டே திரும்பி வந்துட்ட... கசம்புடிச்ச பாட்டி வேணான்டா. உங்க அப்பா பார்த்தா அடிப்பார்ன்னு உன் பொண்ணே பேரன்கிட்ட சொன்னதா சொல்லியிருக்கே...” சாமித்துரை எகத்தாளமாக கிழவியிடம் சொன்னார்.கிழவிக்கு அழுகை பீறிட்டது. சமாளித்து அடக்கிக் கொண்டாள். “பார்த்துக்கிட்டே இருங்க என் பேரன்தான் எனக்கு கொள்ளிவைக்கப் போறான்... அப்புறம் சொல்லுங்க... சரி... சரி... இதோ வரேன்”னு சொல்லி வெயிலில் இறங்கி வேகமாக நடந்தாள். ஒருமணிநேரம் கழித்து மீண்டும் கிழவி வந்தாள். கையில் வைத்திருந்த பெரிய சொம்பை சாமித்துரையிடம் நீட்டினாள். வாங்கிப் பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்.“ஏது இவ்வளவு கெண்டை குஞ்சு.”“பேரனுக்காக புடிச்சிட்டு வந்தேன்.”“ஊத்தா, துண்டு எதுவுமே இல்லாம போனீயே, எப்படி புடிச்சே?”“ம்... முந்தாணி அவுத்துத்தான்” கிழவி சொல்ல எல்லோரும் சிரித்தனர்.எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சமாளித்து விட்டோமேயென கிழவிக்கு உள்ளுக்குள் பெருமிதம் பொங்கியது. இதன்பிறகு ஆறே மாதங்களில் அன்பரசும் கிழவியிடம் ஒட்டிக்கொண்டான். பேரன்... பேரன்னு கிழவியும் கொஞ்சியது. அவனும் ஆச்சி... ஆச்சின்னு சுற்றி வந்தான்.ஒருநாள் மதியம் மூணு மணியளவில் களத்து மேட்டுக்கு போயிட்டு வந்த கிழவி கையில் செத்துப்போன குருவியோடு வந்தாள்.“எப்படி ஆச்சி குருவிய புடிச்ச...” அன்பரசு சந்தோஷத்தில் குருவியைத் தொட, கூசி உடனே கையை இழுத்துக்கொண்டே கேட்டான்.“நான் எங்க புடிச்சேன்... செத்துக்கிடந்தது. எடுத்துட்டு வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே கிழவி வைக்கோல் குவித்து கொளுத்தி குருவியை போட்டுச் சுட்டாள்.“ஆச்சி இந்தக் குருவித்தான் உனக்கு உலக்கையைத் தூக்கி குத்துற அளவுக்குப் பலத்த கொடுக்குதா?” சிரித்தபடியே அன்பரசு கேட்டான்.‘ஆமாம்’ என்பதுபோல சிரித்துக்கொண்டே கிழவி தலை யசைத்தாள். அதற்குள் நெருப்பில் குருவி இறக்கைகள் எரிந்து காணாமல் போயிருந்தன. சின்ன குச்சியால் நெருப்பில் குருவியைப் போட்டுப் புரட்டினாள். வெந்ததற்கான பதம் கிழவிக்கு தெரிந்ததும் நெருப்பை அணைத்து சுடச்சுட சுட்ட குருவியை எடுத்தாள்.அன்பரசுக்கு பார்ப்பதற்கு ஆசையாகவும், குருவியைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.“நீயும் சாப்பிடுறீயா?” சுட்டக் குருவியை அக்குஅக்காக பிய்த்து வயிற்றுப் பகுதி சதையை சாப்பிட்டுக்கொண்டே கிழவி கேட்டாள்.“உவ்வே” கிழவி சாப்பிடுவதை பார்த்து நாக்கில் எச்சில் ஊறினாலும் குமட்டுவதுபோல் செய்கைக் காட்டி ஓடினான். கிழவி பெரிய விருந்துண்ட மகிழ்ச்சியில் தூங்கிப் போனாள்.குருவியோ, மடையானோ, நண்டோ கிழவியிடம் எப்படியும் சிக்கிவிடுகின்றன. இதில் கிழவி சந்தோஷமாக இருந்தாலும் பட்டணத்து பேரனை நினைத்து அவ்வப்போது அழவும் செய்வாள். அப்போதெல்லாம் அன்பரசை பார்ப்பதில் கிழவிக்கு ஆறுதல்.திடீரென கிழவி ஒருநாள் இறந்துபோனாள். இந்த அதிர்ச்சி ஊரையே உலுக்கியது. குளத்தில் குளிக்கப்போன கிழவி பாசிபடர்ந்த படிகளில் வழுக்கி விழுந்து இறந்து மிதந்திருக்கிறது. பார்த்தவர்கள் தூக்கிக்கொண்டு வந்து சாமித்துரை வீட்டுத் திண்ணையில் கிடத்தியிருந்தார்கள்.சாமித்துரை, கிழவி மருமகன், பொண்ணுக்கு பட்டணத்துக்கு தகவல் அனுப்பினார். காத்திருந்ததுதான் மிச்சம். கடைசி வரை வரவில்லை. “கிழவிய கடைசி நேரத்திலேயாவது பார்க்கணும்னு எண்ணமில்லாத பொண்ணு... என்னய்யா பொண்ணு? இரக்கமில்லாம? காசு செலவாகுமோன்னு வராம இருப்பாங்கய்யா. நாமே தூக்கிடுவோம்” ஊர் தலையாரி பாண்டியன் எடுத்துக்கொடுக்க எல்லோரும் ஆமோதித்தனர். சாமித்துரைக்கும் சரியென்று பட்டது.“என் பேரனே கிழவிக்கு கொள்ளி வைக்கட்டும்” யார் ஆலோசனையும் தேவையில்லை என்பதுபோல சாமித்துரை சொன்னார். அதன்படி சுடுகாட்டில் கிழவிக்கு அன்பரசு கொள்ளி வைத்தான். எல்லாம் முடிந்ததும் அனைவரும் சோகத்துடன் திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்தனர்.மூன்று நாட்கள் கழித்து அன்பரசு, கிழவி இருந்த திண்ணையையே அழாத குறையாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்படியே மர இடுக்கில் இருந்த மூட்டைகளையும் பார்த்தான்.“தாத்தா... இந்த மூட்டைய என்ன பண்ணுறது.”

“முன்னேயே ஞாபகமிருந்தா கிழவியோட போட்டு எரிச்சிருக்கலாம். சரி இப்ப மண்ண வெட்டித்தான் புதைக்கணும்” என்று சாமித்துரை அடிக்குரலில் சொன்னார்.

“அத எடுங்க... கிழவி என்னத்தைதான் வைச்சிருக்கும்னு பார்ப்போம்” அம்புஜம் சொன்னாள். சாமித்துரையும் அன்பரசுவை எடுக்கச் சொன்னார். அன்பரசு எக்கி சிறுசிறு மூட்டையை இறக்கினான். அதை சாமித்துரை வாங்கி முடிச்சுகளை அவிழ்த்து பார்த்தார்.அரிசி, நெல்லு, பயிறு என தனித்தனியாக இருந்தது. எதேச்சையாய் பயிறை தடவியபோது சிறிய கல்லுப்போல கையில் தென்பட்டது. அதை தடவி கண்டுபிடித்து சாமித்துரை பார்த்தார்.“பார்த்தீங்களா கிழவி எவ்வளவு ஆசையா... அது பேரனுக்கு மோதிரம் வாங்கி வைச்சிருக்கு” என்று சோகத்துடன் அம்புஜம் சொன்னாள்.“இந்த மோதிரத்த பட்டணத்துல உள்ள கிழவி பேரனிடம் போய் கொடுத்துட்டு வந்துடுறேன்.அப்பத்தான் கிழவி ஆத்மா சாந்தியடையும்” சாமித்துரை ஒரு பணியை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதுபோல சொன்னான்.“அதெல்லாம் வேண்டாம். அதுங்க கிழவி செத்ததுக்கே வரல... இத கொண்டு போய் கொடுப்பாங்களா? கொள்ளிப் போட்ட நம்ம பேரன் கையிலேயே போட்டுடுங்க...” அம்புஜம் சொல்ல சாமித்துரை சிறிதுநேர யோசிப்புக்கு பிறகு தலையாட்டினார்.அன்பரசை மோதிர விரலை காட்டச்சொல்லி, மோதிரத்தை போட்டுவிட்டார். அவன் ஏற்கெனவே மூட்டையை பார்த்ததற்காக வாங்கிய அடியை நினைத்துக்கொண்டே தயங்கித் தயங்கி போட்டுக் கொண்டார்.ஒரு மாதம் கழித்து கிழவி எரிக்கப்பட்ட இடத்தைப் பார்த்தபோது சாம்பலில் இருந்து சிறு செடி துளிர்த்திருந்தது.


த. அரவிந்தன்

Monday, November 19, 2007

நெஞ்சத்துக் கர்ப்பம் (கவிதை)


* உச்சிக்கிளை
உயரத்தை
அளந்துகொண்டா
முளைக்கத் தொடங்கும்
விதை?

சங்கமிக்கும்
வழியைக்
கண்டுகொண்டா
மலையிலிருந்து
விழத்தொடங்கும்
நதி?

உருண்டு தொடர்கிறது
என்
உயிர்
உன்
பாதத்தை....

***

* என்
ஆசைகளை
நெருப்பில் சேமிக்கிறேன்

உன்
வெட்கத்தை ஊதி
விளக்கை அணைக்கிறேன்

பேச்சொலி தேய
மூச்சொலி மேய்கிறது.

***

* வானவில்லிலிருந்து
ஒரு வண்ணத்தை மட்டும்
உருவியதைப்போல்
தேடுகிறேன்
அழகான சொற்களை

ஒருமுறை
திரும்பிப் பாரேன்.

***

(விடாமல் அலைவோம்)

Sunday, November 18, 2007

நடைவண்டிச் சாலைகள் (8)


விளம்பரங்களுக்கும் தணிக்கைக் கத்திரி!
"ஒரு பொருளின் மற்ற அம்சங்கள் மாறாமலிருக்கும்போது அந்தப் பொருளின் விலை குறைந்தால் தேவை (demand) அதிகரிக்கும். விலை அதிகரித்தால் தேவை சுருங்கும்' - இது பொருளாதார நிபுணர் மார்ஷல் தரும் "தேவை' இலக்கணம்.விலையைப்போலவே பொருட்களின் தரமும் ஒரு காலகட்டத்தில் தேவையை நிர்ணயித்தன. தற்போது போட்டி உலகம். குப்பைமேனி கீரை விற்பது முதல், விமானப் பொருட்கள் விற்பது வரை போட்டி நிலவுகிறது.போட்டியைச் சமாளிக்க விற்பனையாளர்கள் விளம்பரங்களைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். விளம்பர மகுடிகளுக்கு ஆடும் பாம்புகளாக நுகர்வோரும் மாறி, பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் தற்போது விளம்பரங்கள் பொருட்களின் தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளாகிவிட்டன.தூர்தர்ஷன் காலத்தில் திரைப்பட ஒளிபரப்பின்போது, நாற்பத்தைந்து நிமிடங்களுக்கொரு முறை ஐந்து நிமிடங்கள் விளம்பரங்கள் வரும். இதற்கே பார்வையாளர்கள் சலித்துக் கொள்வார்கள். விளம்பரங்கள் வரும்போது எழுந்துவிடுவார்கள்.தற்போதைய தனியார் தொலைக்காட்சிக் காலத்தில் பத்து நிமிடங்களுக்கொரு முறை, விளம்பரங்கள். ஆனால் பார்வையாளர்கள் படங்களைவிடவும் விளம்பரங்களையே விரும்பிப் பார்க்கிறார்கள். காரணம் நகைச்சுவையைத் தூண்டும் சில விளம்பரங்கள்.இந்த விளம்பரங்கள் கொடுப்பதிலும் விற்பனையாளர்களிடையே போட்டி ஏற்பட்டதனாலோ என்னவோ விளம்பரங்களில் ஆபாசம் அதிகரித்து உள்ளன.ஆபத்தான உடலுறவு, உயிரையே அணுஅணுவாய் உறிஞ்சிக் கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகத்துடன் அல்லது, உருக்குலைந்த ஒரு மனிதரைக் காட்டி ஆணுறை அணியுங்கள் என்று எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் விளம்பரம் இருக்கவேண்டும். இதைவிடுத்து ஆங்கிலப் படங்களையே மிஞ்சும் ஆபாச உடலுறவுக் காட்சிகளைக் காட்டி இதுபோன்ற இன்பம் நீடிக்க ஆணுறை அணியுங்கள் என்று காட்டப்படுகிறது. இந்த விளம்பரங்களைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கவேண்டிய சூழல் எல்லோருக்கும் இருக்கிறது.பள்ளிகளிலேயே பாலியல் கல்வி வைக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. எனவே இதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். பள்ளியில் பாலியல் கல்வியைத்தான் சேர்க்கச் சொல்கிறார்களே தவிர, பாலியலை யாரும் சொல்லிக் கொடுக்கப்போவதில்லை. ஆணுறை விளம்பரங்கள் மட்டுமல்ல; அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் குறித்த விளம்பரங்களிலும் ஆபாசக் காட்சிகளின் அரங்கேற்றம்தான்.கேபிள் டி.வி. சட்டத்தின்படி காலை ஆறு மணி முதல் இரவு பதினொரு மணிவரை ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது. இதைக் கண்காணிக்கிற பொறுப்பு காவல்துறை அதிகாரிகளுடையதாகும். ஆனால் அவர்கள் படங்கள், நாடகங்கள் போன்றவற்றையே கண்காணிக்கிறார்களே தவிர விளம்பரங்களைக் கண்டு கொள்வதில்லை.ஆபாச விளம்பரங்களுடன் பெண்ணைப் போகப் பொருளாகச் சித்திரிக்கும விளம்பரங்கள் எண்ணற்றவை. ஆண்கள் அணியும் பனியன் விளம்பரங்களுக்கும் பெண்கள்தான் கருப்பொருள். இதைப் பெண்ணிய அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை.ஓரிடத்தில் ஈவ்டீசிங் நடக்கும்போதே, பாலியல் பலாத்காரத்துக்குப் பெண் உள்ளாகும்போதோ ஓங்கிக் குரல் கொடுக்கும் பெண்ணிய அமைப்புகள், அதற்கு மூலவேர்களாக விளங்குகின்றவற்றை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புவது முக்கியம்.இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் பெண்களைப் பார்க்கும்போது, பெண்ணைக் கொண்டே பெண்ணைச் சிதைக்கிற ஆண்களின் தந்திரம் வெட்டவெளிச்சமாகிறது. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களில் மட்டும்தான் இந்த ஆபாசம் என்றில்லை. சென்னை நகரின் முக்கிய சாலைகளில் பெரிய பேனர்களில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் இதே அலங்கோலம்தான். இந்த விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவர்களால் நிகழ்ந்த விபத்துகளைச் சொல்லி மாளாது.மேற்குவங்க மாநிலத்தில் சினமாச் சுவரொட்டிகள்கூட மாநிலத் தணிக்கைச் (சென்சார்) குழு ஒப்புதல் பெற்ற பிறகே ஒட்ட இசை அளிக்கப்படுகிறது.ஆனால் இங்கு நாம் காணும் நிலை வேறு வகை. எனவே ஈவ்டீசிங், பாலியல் பலாத்காரம், ஆபாசக் காட்சிகளைக் கட்டுப்படுத்த விளம்பரங்களுக்கும் தணிக்கைக் கத்தரிக்கோல் அவசியம் தேவை.' - இது பொருளாதார நிபுணர் மார்ஷல் தரும் "தேவை' இலக்கணம்.விலையைப்போலவே பொருட்களின் தரமும் ஒரு காலகட்டத்தில் தேவையை நிர்ணயித்தன. தற்போது போட்டி உலகம். குப்பைமேனி கீரை விற்பது முதல், விமானப் பொருட்கள் விற்பது வரை போட்டி நிலவுகிறது.போட்டியைச் சமாளிக்க விற்பனையாளர்கள் விளம்பரங்களைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். விளம்பர மகுடிகளுக்கு ஆடும் பாம்புகளாக நுகர்வோரும் மாறி, பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் தற்போது விளம்பரங்கள் பொருட்களின் தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளாகிவிட்டன.தூர்தர்ஷன் காலத்தில் திரைப்பட ஒளிபரப்பின்போது, நாற்பத்தைந்து நிமிடங்களுக்கொரு முறை ஐந்து நிமிடங்கள் விளம்பரங்கள் வரும். இதற்கே பார்வையாளர்கள் சலித்துக் கொள்வார்கள். விளம்பரங்கள் வரும்போது எழுந்துவிடுவார்கள்.தற்போதைய தனியார் தொலைக்காட்சிக் காலத்தில் பத்து நிமிடங்களுக்கொரு முறை, விளம்பரங்கள். ஆனால் பார்வையாளர்கள் படங்களைவிடவும் விளம்பரங்களையே விரும்பிப் பார்க்கிறார்கள். காரணம் நகைச்சுவையைத் தூண்டும் சில விளம்பரங்கள்.இந்த விளம்பரங்கள் கொடுப்பதிலும் விற்பனையாளர்களிடையே போட்டி ஏற்பட்டதனாலோ என்னவோ விளம்பரங்களில் ஆபாசம் அதிகரித்து உள்ளன.ஆபத்தான உடலுறவு, உயிரையே அணுஅணுவாய் உறிஞ்சிக் கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகத்துடன் அல்லது, உருக்குலைந்த ஒரு மனிதரைக் காட்டி ஆணுறை அணியுங்கள் என்று எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் விளம்பரம் இருக்கவேண்டும். இதைவிடுத்து ஆங்கிலப் படங்களையே மிஞ்சும் ஆபாச உடலுறவுக் காட்சிகளைக் காட்டி இதுபோன்ற இன்பம் நீடிக்க ஆணுறை அணியுங்கள் என்று காட்டப்படுகிறது. இந்த விளம்பரங்களைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கவேண்டிய சூழல் எல்லோருக்கும் இருக்கிறது.பள்ளிகளிலேயே பாலியல் கல்வி வைக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. எனவே இதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். பள்ளியில் பாலியல் கல்வியைத்தான் சேர்க்கச் சொல்கிறார்களே தவிர, பாலியலை யாரும் சொல்லிக் கொடுக்கப்போவதில்லை. ஆணுறை விளம்பரங்கள் மட்டுமல்ல; அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் குறித்த விளம்பரங்களிலும் ஆபாசக் காட்சிகளின் அரங்கேற்றம்தான்.கேபிள் டி.வி. சட்டத்தின்படி காலை ஆறு மணி முதல் இரவு பதினொரு மணிவரை ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது. இதைக் கண்காணிக்கிற பொறுப்பு காவல்துறை அதிகாரிகளுடையதாகும். ஆனால் அவர்கள் படங்கள், நாடகங்கள் போன்றவற்றையே கண்காணிக்கிறார்களே தவிர விளம்பரங்களைக் கண்டு கொள்வதில்லை.ஆபாச விளம்பரங்களுடன் பெண்ணைப் போகப் பொருளாகச் சித்திரிக்கும விளம்பரங்கள் எண்ணற்றவை. ஆண்கள் அணியும் பனியன் விளம்பரங்களுக்கும் பெண்கள்தான் கருப்பொருள். இதைப் பெண்ணிய அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை.ஓரிடத்தில் ஈவ்டீசிங் நடக்கும்போதே, பாலியல் பலாத்காரத்துக்குப் பெண் உள்ளாகும்போதோ ஓங்கிக் குரல் கொடுக்கும் பெண்ணிய அமைப்புகள், அதற்கு மூலவேர்களாக விளங்குகின்றவற்றை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புவது முக்கியம்.இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் பெண்களைப் பார்க்கும்போது, பெண்ணைக் கொண்டே பெண்ணைச் சிதைக்கிற ஆண்களின் தந்திரம் வெட்டவெளிச்சமாகிறது. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களில் மட்டும்தான் இந்த ஆபாசம் என்றில்லை. சென்னை நகரின் முக்கிய சாலைகளில் பெரிய பேனர்களில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் இதே அலங்கோலம்தான். இந்த விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவர்களால் நிகழ்ந்த விபத்துகளைச் சொல்லி மாளாது.மேற்குவங்க மாநிலத்தில் சினமாச் சுவரொட்டிகள்கூட மாநிலத் தணிக்கைச் (சென்சார்) குழு ஒப்புதல் பெற்ற பிறகே ஒட்ட இசை அளிக்கப்படுகிறது.ஆனால் இங்கு நாம் காணும் நிலை வேறு வகை. எனவே ஈவ்டீசிங், பாலியல் பலாத்காரம், ஆபாசக் காட்சிகளைக் கட்டுப்படுத்த விளம்பரங்களுக்கும் தணிக்கைக் கத்தரிக்கோல் அவசியம் தேவை.

Saturday, November 17, 2007

நடைவண்டிச் சாலைகள் (7)


சினிமாத்தனமான சிநேகிதமா?

உலகமொழிகள் எல்லாவற்றிலும் சிநேகிதம் என்ற சொல்லுக்குத் தனிச்சிறப்பு உண்டு. எல்லா உறவுமுறைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சிநேகிதம் முதன்மைக் கொடியைத் தூக்கிக் கொண்டு பயணிக்கிறது. 'அன்னையர் தினம்' போல் 'தந்தையர் தினம்' அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் 'சிநேகிதர்கள் தினம்' விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அப்படியிருக்கையில் சிநேகிதம் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?பூக்களுக்குக் காம்புகள்போல், ஒவ்வொரு மனிதருக்கும் சிநேகிதன் அடித்தளமாக இருக்க வேண்டும். தூய்மை, தியாகம், தன்னம்பிக்கை கொண்ட பிணைப்பு, தவறுகளுக்கு பாவமன்னிப்பு கேட்கத் தகுதி உடையவராக இருக்க வேண்டும். இத்தகைய பண்புகள் உள்ள சிநேகிதன் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. இதனால் ஒருவரோடு பழக வாய்ப்பு ஏற்படுவதாலேயே சிநேகத்தை உருவாக்கிக் கொள்கிறோம். பழகியபின். அவர் தவறை நாமோ, நம் தவறை அவரோ திருத்த முயற்சிப்பதே இல்லை. இது மேலே ஏறுகிற நண்டை, கீழே இழுக்கிற நண்டு கதையாகவே விபரீதத்தில் போய் முடியும். எனவே சிநேகிதன் தேர்வு என்பது விருப்பப்பாடத்தைத் தேர்வு செய்வதைவிட முக்கியமானது.வாழ்க்கையில் புதிய புதிய பரிணாமங்களை எடுத்து வைக்க விரும்புகிற நம் இலட்சியச் சிறகைத் துண்டிக்க விரும்பாத சிநேகிதனையே தேர்வு செய்ய வேண்டும். இதையெல்லாம் கழித்துவிட்டு இன்றைய சிநேகிதம் என்பது பல வழிகளில் தவறான பாதைகளில் போகிறவையாகவே உள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது. இதற்கு இன்றைய சினிமாக்களும் ஒருவகையில் சாமரம் வீசுகிறது என்பதுதான் வேதனை. முதுமையிலும் உதிர்ந்துவிடாத சிநேகிதத்தை, இளமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதுபோல் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. இளமை தொடர்பானவற்றிலும் ஆரோக்கியமான விஷயங்கள் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அப்படிப்பட்டதாக இல்லை, இன்றைய சினிமாக்கள். சிநேகிதன் என்றால் காதலுக்குத் துணை நிற்பவன், ஏதேனும் குட்டிச் சுவரில் அமர்ந்துகொண்டு போகிற பெண்களைக் கேலி புரிகிறவன், சங்கேத மொழிகளில் பேசுகிறவன், வாழ்க்கையைப் போதைக்கு விற்க வழிகாட்டுபவன், ஐந்து பேரோடு சேர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறவன் என்றுதான் பல சினிமாக்கள் சித்தரிக்கின்றன. இது அன்றாட வாழ்க்கையிலும் உள்ள சங்கதிதான் என்பதை மறுப்பதற்கும் இல்லை. உல்லாசமாக ஊர் சுற்றுவது, காட்டுக்கூச்சலுடன் அரட்டை அடிப்பது, தேர்வில் தோற்றால்கூட விருந்து என்ற பெயரில் உற்சாகப் பானம் அருந்துவது-இப்படித்தான் பலர் இளமையைக் கழிக்கின்றனர். இதுபோன்றவர்களால் எழுச்சியுள்ள சமுதாயத்தை எப்படி உருவாக்கிட முடியும்? இவர்களால் நல்லவர் சிலரும் பாதிப்புக்குள்ளாக வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே எட்டாத சிகரங்களை எட்ட விரும்புகிறவர்கள், சினிமாத்தனமாக நடந்துகொள்ளும் சிநேகிதர்களைத் திருத்தப் பாருங்கள். எண்ணற்ற முறை முயன்றும் திருந்தாவிடில், அவர்களிடமிருந்து ஒதுங்கியிருத்தலே நலம்.

நடைவண்டிச் சாலைகள் (6)


தும்பியைத் துரத்தட்டும்

நாணல்களோடு விளையாடியவாறே நதிகள் சுழித்தோட, காணும் மரங்களெல்லாம் பூத்துச் சிரிக்க, கொத்துக் கொத்தாய் தொங்கும் கனிகளைக் குயில்கள் கொத்தி மகிழ, செல்லுமிடமெங்கும் பசுமை நிறைந்து, நெற்கதிகள் வாசனை மணத்தை வருட-இத்தகைய ரம்மியச் சூழல் நிலவும் காலகட்டத்தை வசந்தகாலம் என்போம். ஆனால் மாணவர்களின் வசந்தகாலம் கோடைகாலம்.பெரியோர்களுக்குத்தான் கோடை வெயில் ஒரு கொடிய மிருகம் போல. மாணவர்கள், இதற்கு மாற்று எண்ணம் உடையவர்கள். அவர்களுக்குக் கொளுத்தும் வெயில் பற்றியோ, உதிரும் இலைகள் பற்றியோ கவலையிராது. பல மைல் தூரம் பாரம் இழுக்கும் மாடுகள் ஓய்வு நேரத்தை எவ்வளவு ஆசையோடு எதிர்கொள்ளுமோ அதைப்போலவே கோடை விடுமுறையை மாணவர்கள் வாஞ்சையோடு வரவேற்கிறார்கள்."காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு-என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா" என முண்டாசுக் கவிஞன் பாரதி பாடினான். ஆனால் இங்குள்ள மாணவர்களுக்கு மாலை நேரம்மறைவதே தெரிவதில்லை. பள்ளிகளில் வகுப்புகள் முடிந்த பின்னரும், சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இவை முடிவதற்கே இரவு ஏழு மணியாகிவிடும். பின்னர் மாணவர்கள் எப்படி மாலை நேரத்தை விளையாட்டிற்கெனச் செலவிட முடியும்?
ஒரு திராட்சைப் பழத்தைச் சுமக்கும் காம்புகள் ஆப்பிளைச் சுமக்க நேர்ந்தால், எப்படிக் காம்பு அறுந்து விழுந்துவிடுமோ, அப்படித்தான் மாணவர்களும் சுமக்க முடியாமல் களைத்து விடுகிறார்கள். இந்தக் களைப்பைப் போக்கி, துள்ளித் திரிய வைக்கும் காலமாகத்தான் கோடைக்காலத்தை மாணவர்கள் எண்ணி மகிழ்கிறார்கள். முன்பெல்லாம் கோடை விடுமுறை தொடங்கியதும், தூரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கோ, உறவினர் வீட்டிற்கோ மாணவர்களை அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் மனித உறவுகள் பலப்பட்டது. இப்போது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்புவது குறைந்துவிட்டது. இதனால் நகரத்து மாணவர்களுக்கு உறவுமுறைகளின் பெயர்கள்கூட தெரிவதில்லை.இந்தக் கோடை மாதத்தையும் படிப்பிற்கெனவே பெற்றோர்கள் செலவிட விரும்புகிறார்கள். விடுமுறை விட்டதுமே, ஏதாவது பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள். இதற்கெனவே பருவகாலத் தொழில் போல கோடைகாலப் பயிற்சிகள் ஏராளம் இருக்கின்றன. முன்பு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களை உடனே தட்டச்சுப் பயிற்சியில் சேர்த்து விடுவார்கள். இப்போது தட்டச்சுப் பயிற்சிக்கு மவுசு இல்லை. எல்லாம் கணிப்பொறி மயம். இதனால் முன்றாம் வகுப்பு முதலே, கணிப்பொறிப் பயிற்சி வகுப்பில் சேர்க்கிறார்கள். இதோடு விட்டால் பரவாயில்லை. அடுத்த வகுப்பிற்கான புத்தகத்தையும் இப்போதே படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.மேலும் சில தனியார் பள்ளிகள் விடுமுறை காலமான மே மாதம் முடிவதற்குள்ளாகவே பள்ளியைத் திறந்து விடுகிறார்கள். தங்கள் பள்ளி, கல்விக்கு¢ முக்கியத்துவம் கொடுப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக இப்படிச் செய்கிறார்கள். இந்த ஒரு மாதகால விடுமுறையில் பெரும் கல்வி இழப்பு எதுவும் வந்துவிடப் போவதில்லை. ஒன்பதாம் வகுப்பிலிருந்து, பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் பதினொன்றாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் மே மாதத்திலேயே சிறப்புப் பயிற்சி தொடங்குகிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளலாம். அதைவிட்டு நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களையும் கோடை விடுமுறையிலும் வதைப்பது என்பது தவறு.சில பெற்றோர் மட்டும் கோடை விடுமுறையில் மாணவர்களைப் படிப்பு தொடர்பாக தொந்தரவு செய்வதில்லை. கோடை விடுமுறையிலும் விளையாட அனுமதிக்காவிட்டால், பள்ளி தொடங்கும்போதும் விளையாட்டு நினைவோடே இருந்து படிப்பில் கோட்டை விட்டுவிடுவார்களோ என்ற எண்ணத்திலும் அனுமதிக்கின்றனர். இது ஆரோக்கியமான ஒன்று. எனினும் விளையாட்டு என்பதும் இன்று இயந்திரமயமாகி விட்டது. வீட்டிற்குள்ளேயே அமர்ந்து வீடியோ கேம்ஸோ, கணிப்பொறியிலோ தான் விளையாட அனுமதிக்கிறார்கள். இதையும் மாணவர்கள் விரும்பவில்லை. ஓடி ஆடி விளையாடவே விரும்புகிறார்கள். இதில் தவறேதுமில்லை. மாணவ வயதில் ஓடி ஆடி தும்பியைத் துரத்தட்டுமே, வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து அதன் வண்ணங்களை ரசிக்கட்டுமே, செடிகளோடு பேசட்டுமே.பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பதில் தவறில்லை. கோடைவிடுமுறையிலும் இரவு பகலாகப் படிக்கச் சொல்லி வதைப்பதைச் சற்று குறையுங்கள்.விதைகளுக்கு அளவுக்கு அதிகமாகவும், அளவுக்குக் குறைவாகவும் நீர் ஊற்றுவது சிறந்த அணுகுமுறையாகாது.