Saturday, March 21, 2009

கல்யாணத்துக்குப் போகையில்...

பேருந்தில் இடம்பிடித்து
வைத்திருப்பதுபோல
வாழ்த்து அட்டையில்
இடம் ஒதுக்கி
நண்பர்கள் காத்திருக்கிறார்கள்

மண்டபத்திற்குள் நுழைவதற்குள்ளே
மாலையிலிருந்து கொட்டிய
இதழ்களெல்லாம் திரும்ப அறிவிக்கிறார்கள்
'இவர் கவிஞர்
கவிதை எழுதப் போகிறார்'

வியர்த்து சிரித்து
காற்புள்ளியைக்கூட
இட இயலாது திணறுகிறபோது
கண்டுகொள்கிறோம்
என்னை அவர்களும்
கவிதையை நானும்
அவர்களைக் கவிதையும்.
நன்றி: உயிரோசை

Friday, March 20, 2009

வகிடுப் பயணம்


நடு வகிடோ
கோணல் வகிடோ எடுத்து
நேற்றுவரை
சீவிக்கொண்டிருந்த கண்ணாடி
மார்பளவு புகைப்படத்தைக்
கணினியில் கொடுத்துவிட்டு
சுழல்நாற்காலியில் அமர்ந்து
இமைகளில் கண்களைச் சாய்த்து
காத்திருக்கிறது
கத்தரிக்கோலின் புதுப் பயணத்திற்கு.

நன்றி: உயிரோசை

Wednesday, March 11, 2009

முதல் ஆட்டம்








வேப்பஞ்சாறின் கசப்புக்குள்


புன்முறுவலோடு


தாய்ப்பால்


இ


னி


ப்


பு


பதுங்கிக்கொள்ள


அழுகையோடு குழந்தை


அதைத் தேடத் தொடங்கியது


தன்


முதல்


கண்ணாமூச்சு ரே ரேயில்.


நன்றி: உயிரோசை

வெள்ளை ஓணான்




அந்தியில் நேர்ந்த மோதலுக்கிடையே

யாரோ

என் தலையில்

ஒரு வெள்ளை ஓணானை

விரட்டி விட்டிருக்கிறார்கள்

காலையில் கண்ணாடி முன்

நின்று கவனித்ததிலிருந்து

பிடிப்பதற்குப் போராடுகிறேன்

என்னை ஏ

மாற்றி ஏ

மாற்றி

கறுத்த வேலியில்

அது

எளிதாகத் தப்பிப் போகிறது.


நன்றி: உயிரோசை

Friday, February 13, 2009

பூசணித் தாதி


விட்ட மழையிலிருந்தது
ஒதுங்கும் காடு
காக்கி கால்சட்டை அணிந்த சிறுவன்
பச்சை மிளிரலிலிருந்த
ஒரு பூசணிக் கொடியைக் கண்டான்
அதன் கொடிகளில் விழுந்து படர்ந்திருந்த
மின்னல் அவன் கண்களில் அடிக்க
ஒரு தாதியைப் போல் செயல்படத் தொடங்கினான்
இரு கைகளாலும்
அந்தப் பச்சிளம் பூசணிக் குழந்தையின்
கால் பகுதியைப் பிடித்தான்
குலுங்கி வலியால் துடித்த
தாயின் சத்தத்தைக் கவனியாது
வெடுக்கென இழுத்தான்
அதன் பிசுபிசுப்பான ஈரத் தலையை
மார்போடு அணைத்து
வீட்டிற்கு விரைந்தான்
அவன் அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு
அவன் கண்களில்
அவன் தந்தையாக ஏறிநின்று
பகிர்வளித்த சந்தோஷத்தில் குதித்தான்.
நன்றி:வார்த்தை

Monday, January 26, 2009

குழிவண்டு என்று ஒன்றிருந்தது தெரியுமா?


சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிவதேயில்லை தெரியுமா? கரிச்சான்குருவிகளைப் பார்க்க முடிவதேயில்லை தெரியுமா?
கம்பளிப்பூச்சுகளைக்கூட அவ்வளவாகக் காணவில்லை தெரியுமா?
ரயில்பூச்சிகளைக்கூட அவ்வளவாகக் காணவில்லை தெரியுமா?
குழிவண்டு என்று ஒன்றிருந்தது தெரியுமா?
மலஉருட்டி என்று ஒன்றிருந்தது தெரியுமா?
மூஞ்சுறுகள் அரிதாகி வருகிறது தெரியுமா?
பன்றிகள் அரிதாகி விட்டன தெரியுமா?
ஓணான்கள் நிற்க இடமில்லாமல் தலைமறைவு ஓட்டத்திலேயே இருக்கிறது தெரியுமா?
அரணைகளும் அப்படியேதான் தெரியுமா?
ஈக்கள்கூட எப்போதாவதுதான் வருகிறது தெரியுமா?
புழுக்கள்கூட எப்போதாவதுதான் கண்ணில் படுகிறது தெரியுமா?
இரவில் படைபோல சூழ்ந்து ஒலியெழுப்பிய பூச்சிகளில் பாதியைக் கூட இப்போது காணவில்லை தெரியுமா?
கருக்கலில் ஒரேயொரு மரத்திலிருந்துகூட ஆயிரக்கணக்கான பட்சிகளின் முதல் சிறகடிப்போசையை முன்னெல்லாம் கேட்கலாம் தெரியுமா?-
மிதிபட்டு செத்த எறும்புகளின் சிரிப்புகளோடு
சிற்றுண்டி உரையாடல் முடிந்தது.
நன்றி: கனவு

Tuesday, December 30, 2008

உறங்குவதற்கு மட்டும் வரும் ஜெகதா



இரவுச்சுவர்களைத் தகர்த்துக்கொண்டு

எங்கிருந்தாலும் வந்துவிடுவாள் ஜெகதா

அவனோடு உறங்குவதற்கு மட்டும்

இலவம் பஞ்சுறுத்தாத தளும்புகிற

மெத்தையிலாது போனால்

அவள் இமைகளின் இருள் தாழ்ப்பாள்

தாழிடாது துன்புறுத்தும்

நினைவுகளை விழிகளாக்கி

அழுதழுது அவன்

அந்தச் சதுர அறையைக் குளமாக்குவான்

அதிலும் அலை மலையூதலிலாத

நீர் மெத்தையாகப் பார்த்து

ஒருக்களித்து மெல்லுடல் சாய்ப்பாள்

அவள் தலையணை விருப்பம் அறிந்து

முன்வந்து நெஞ்சு புடைத்துக் காட்டுவான்

துருப்பிடிக்காத பழைய விழிக் குத்தீட்டியை இறக்கி

அவன் இதயத்தைப் பிடுங்கி இரண்டாய் வகுந்து

ஒன்றைத் தலைக்கும்

மற்றொன்றைக் காலிடுக்கிலும் வைத்துக்கொள்வாள்

உள்ளங்கால்களிலிருந்து தலை வரை

நிகழ்நிகழ்வாய் உரித்தெடுத்த அவனின் தீராவலியைப்

போர்வையாக அவளுக்குப் போர்த்தி

கேவல்களால் விரல்களுக்குச் சொடுக்கெடுப்பான்

பிறழ்ந்த அவன் பெருமூச்சுகளின்

ஏக்க மூச்சின் சுகத் தாலாட்டில்

மிதந்துறங்கிப் போகிறவள்

அவள் சுவடுகள் குத்திக் கிழிக்கக் கிழிக்க

பின்னால் நடந்த அவன் கால்களின் வெடிப்புகளில்

ஈர்க்குச்சிகளை நுழைத்துநுழைத்து

ஆழம் பார்த்து கனவில் சிரிப்பாள்

பலவருட புளிப்பேறிய

அவள் பழரசச் சிரிப்பை

மிடறுமிடறாய் விழுங்கி

அவன் போதையில் பிதற்றுவான்.


நன்றி: உயிரோசை