Sunday, February 24, 2008

ஷில்பாஸ் யோகா!


யோகாசனங்களுக்குப் புதுப்பெயர் வைத்திருக்கிறார்கள் லண்டன்வாசிகள். அப்பெயர் "ஷில்பாஸ் யோகா'. டிவிடி மூலம் ஷில்பா ஷெட்டி யோகா சொல்லிக் கொடுக்கிறார் என்றால் அந்தப் பெயரை லண்டன்வாசிகள் வைக்கத்தானே செய்வார்கள்?
"பிக்பிரதர்' நிகழ்ச்சி சர்ச்சைக்குப் பிறகு லண்டன் மக்கள் ஹாலிவுட் படவாய்ப்புகள் உட்பட பல்வேறு வாய்ப்புகளை வாரிக் கொடுக்க அங்கேயே செட்டிலாகி விட்டார் ஷெட்டி. அங்கு செல்கிற இடமெங்கும் அவருக்கு அதிக வரவேற்பு கொடுப்பதுடன், அவர் செய்கிற காரியங்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. "பாம்பே ட்ரீம்ஸ்' என்கிற நாடகம் ஒன்றில் நடித்தார். அதன் கதை தொடர்பாக சர்ச்சையாகி அந்த நாடகமும் அவருக்கு அதிகப் புகழைத் தேடிக் கொடுத்தது. இப்போது அவரே வெளியிட்டிருக்கிற யோகா டிவிடியும் அதிகப் புகழை அவருக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால் இதில் எவ்வித சர்ச்சையும் ஏற்படவில்லை என்பது வியப்பு! சினிமாவில் நடிப்பதுபோல யோகா செய்வதுபோல டிவிடி வெளியிடுவதற்காக நடித்திருக்கிறாரா?
பாபா ராம்தேவ் நடத்திய யோகா பயிற்சி முகாம் ஒன்றில் ஷில்பா இதற்குப் பதில் சொன்னார்: ""கழுத்து எலும்பில் எனக்குத் தேய்மானம் ஏற்பட்டபோதுதான் யோகா செய்யத் தொடங்கினேன். போகப்போகப் தேய்மானப் பாதிப்பு நீங்கியதுடன், என்னைச் சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருக்க வைத்தது. அதிலிருந்து தொடர்ந்து தினமும் யோகா செய்து வருகிறேன்.'' ஷில்பா சொன்னது உண்மை என்பதைக் கச்சிதமான அவர் உடலைப் பார்த்தும் நம்பாதவர்கள், டிவிடியில் அவர் யோகா செய்வதைப் பார்த்தால் நிச்சயம் நம்புவார்கள்.

"இந்தியா முழுவதும் சுற்றக் கூடியவராக நீங்கள் இருக்கலாம்; அல்லது உலகம் முழுவதும் சுற்றக்கூடிய நபராக இருக்கலாம். உங்களுடனே ஒரு ஜிம்மைச் சுமந்துகொண்டு போக முடியுமா? முடியாது. வாங்க.. 15 நிமிடம் குயிக் பிக்ஸ் ப்ரோகிராம்... ஆளே மாறிடுவீங்க'' என்ற ஸ்கை ப்ளு வண்ண ஆடையில் சிரித்தபடியே அழைக்கிறார்.
அடுத்தநொடி. உடலோடு ஒட்டிய சிவப்பு உடற்பயிற்சி பனியனோடு தோன்றுகிறார். யோகாசனங்கள் செய்யத் தொடங்குகிறார். ஷில்பா செய்யச் செய்ய, பின்னணியில் அந்தப் பயிற்சிகளுக்கு ஒருவர் விளக்கம் அளிக்கிறார்.
தியானநிலை ஆசனங்கள், நின்றநிலையில் செய்கிற ஆசனங்கள். உட்கார்ந்த நிலையில் செய்கிற ஆசனங்கள். படுத்துகொண்டு செய்கிற ஆசனங்கள் என்று ஒவ்வொரு ஆசனமாக அமைதியாக நேர்த்தியாகச் செய்துகாட்டுகிறார். "எனக்கு யோகா செய்யத் தெரியாது. ஷில்பாஸ் டிவிடியைப் பார்த்தபோது நானே யோகா செய்தது போன்ற அமைதியையும் சுறுசுறுப்பையும் பெற்றேன்'' என்று இணைய வாசகர் ஒருவர் எழுதியிருந்தார். அவர் எழுதியிருப்பதுபோலத்தான் ரம்மியமாய் எடுக்கப்பட்டிருக்கிறது.
டீச்சர் வேடத்தில் நடிகைகள் நடிக்கிறபோதே, அதில் கவர்ச்சியைப் புகுத்திவிடுகிறவர்கள் ஒரு நடிகை யோகா சொல்லிக் கொடுக்கிறார் என்றால் எப்படி விளையாடி இருப்பார்கள்?

தவறான சலனத்தை ஏற்படுத்தாத வகையில் எடுத்திருக்கிறார்கள். கேரளத்தின் ஆற்றங்கரையோரங்களில் உள்ள பசும்புல்வெளிகளில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இயற்கையின் அழகில் கவனம் திரும்பிடக்கூடாது என்ற எண்ணத்தில் காமிரா ஷாட்டுகள் எல்லாமே குளோஸ் அப்பிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.

குப்புறப்படுத்து, கால்களைக் கைகளால் வளைத்துப்பிடித்து, வயிற்றுப் பகுதியை ஊன்றி வில்லைபோல் வளைகிற தனுராசனம், மல்லாந்து படுத்து இரண்டு கைகளையும், இரண்டு கால்களை ஊன்றி உடலை மட்டும் உயர்த்துகிற சக்ராசனம் போன்ற சிரமமான ஆசனங்களையும் விட்டு வைக்காமல் பெரும்பாலான ஆசனங்களைச் செய்து காட்டியுள்ளார் ஷில்பா.

"யோகாவைத் தொடர்ந்து செய்து வந்தால் செதுக்கி வைத்ததுபோன்ற உடலமைப்பைப் பெறலாம். மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் நோய்கள் அண்டாத வண்ணம் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். மனச்சோர்வு நீங்கும், சுறுசுறுப்பு அதிகரிக்கும்' என்று சொல்லும் இந்த டிவிடி இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை.
ஷில்பா இங்கு வெளியிடாவிட்டாலும் இணையம் வழியே இங்கு வந்துவிட்டது! http://www.tumtube.com/ என்ற முகவரிக்கு இணையத்தில் சென்றால் இலவசமாய் ஷில்பாஸ் யோகா டிவிடியைப் பார்க்கலாம். கட்டாயம் யோகா செய்ய வலியுறுத்தும்!

இந்த டிவிடியைப் பாராட்டி நிறைய "கமெண்ட்'கள் இணையத்தின் நிறைய blogspot- களில் இருக்கின்றன. இதற்கு எதிர்மறையாக http://www.lovebollywood.blogspot.com/ கார்டூன் வடிவில் அடித்துள்ள ஒரு கமெண்ட்:


"யோகாசனம் எனக்கு முன்பே தெரியும்... இப்போது நான் செய்வது பப்ளிசிட்டியாசனம்!'



Monday, February 18, 2008

தலைகீழ்- ஷில்பா!





"சாவரியா...சாவரியா' என்ற ஹிந்தி பாடலை யாராவது பாடுகிற சத்தம் கேட்டால் சுற்றும் முற்றும் தேடிப் பாருங்கள். பாடுவது -விஜய் டிவியில் "அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சி மூலம் பலரைப் பேட்டி காணும் ஷில்பாவாக இருக்கலாம். அடிக்கடி அவர் முணுமுணுக்கும் பாடலாம் இது. ஹிந்துஸ்தானி இசையில் பாடுவதற்குப் பயிற்சி பெற்று வரும் கேரளப் பெண்ணான அவரை ஓர் இசைவேளையில் சந்தித்தோம்.

பேட்டி எடுப்பது சிரமமா? பேட்டிக் கொடுப்பது சிரமமா?

கொடுப்பதுதான். எடுக்கிறபோது கேள்விதான் கேட்கப்போகிறோம். நம் இஷ்டம்போல் கேட்கலாம். ஆனால், பேட்டி கொடுக்கிறபோது அப்படியில்லை. யோசித்துப் பேசவேண்டும். சொல்கிற தகவல் தவறாகிவிடக் கூடாது. அதேசமயம் சுவாரஸ்யமாகவும் பேச வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பேட்டிக் கொடுப்பதுதான் சிரமம்.

கல்லூரியில் படித்த காலத்திலிருந்த இயல்பிற்கும் இப்போது தொகுப்பாளினியாக இருப்பதற்கும்
ஏதாவது மாற்றத்தை உணர்கிறீர்களா?

இல்லை. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். கலகலப்பான காரெக்டர் என்னுடையது. என் முகத்தில் எப்போதும் புன்னகை இருந்துகொண்டே இருக்கும். அந்தக் கலகலப்பும் புன்னகையும்தான் "ரேடியோ ஒன்'னில் பணியாற்றவும், ஜெயா டிவியில் "உங்க ஏரியா உள்ளே வாங்க' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் உதவியது என்று நினைக்கிறேன். இப்போது விஜய் டிவியில் "அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கும் இதுதான் உதவுகிறது. இதனால் என்னளவில் எவ்வித இயல்பு மாற்றமும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை.

"அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியில் பலரைப் பேட்டி எடுத்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த பிரபலத்தின் பேட்டி?

பிரபலங்களிடம் எடுத்த அனைத்துப் பேட்டிகளுமே சுவாரஸ்யமான அனுபவமாகவே இருந்தன. இதில் நான் மிகவும் விரும்பி எடுத்தது நடிகர் மாதவனுடைய பேட்டி. பிரமிப்புடனே அவருடன் பேட்டி எடுத்தேன். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் பேசத் தொடங்கிய பிறகு அந்தப் பயம் போய்விட்டது. பெரிய பிரபலம்போல் பேசாமல் வெகு இயல்பாகப் பேசினார். "ஸ்கூல் போகிற பெண்போல இருக்கிறாய்' என்று என்னைக் கேலியும் செய்தார். மாதவனுடன் நான் எடுத்த பேட்டிக்குத் தோழிகள் மத்தியில் அதிகப் பாராட்டு கிடைத்தது. அதுவே என்னைக் கவர்ந்த பேட்டியும்.

ஹிந்துஸ்தானி இசை கற்றுவருகிறீர்கள்... திரைப்பாடல் பாட விருப்பமிருக்கிறதா?

ஹிந்துஸ்தானி இசை எனக்கு உயிர். செüம்யா மதன்கோபாலிடம் நாலைந்து வருடங்களாகக் கற்று வந்தேன். இப்போது ராமமூர்த்தியிடம் கற்றுவருகிறேன். இருப்பினும் முழுதாய் கற்றோம் என்கிற எண்ணம் எனக்கு வரவே இல்லை. இசை என்பது கடல். கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். திரைப்படப் பாடல்கள் பாட விருப்பம் உள்ளது. யாரிடமும் இதுவரை வாய்ப்பு கேட்கவில்லை. நிச்சயம் பாடுவேன்.

நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததா?

சீரியலில் நடிப்பதற்கு இரண்டு பேர் அழைத்தார்கள். எனக்குத்தான் விருப்பமில்லை. எதையும் முழு ஆர்வத்துடன் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். நடிப்பதற்கு எனக்கு ஆர்வமே இருந்ததில்லை. தொகுத்து வழங்குவது என்பது நடிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. நன்றாகப் பேசுகிறோம் என்பதற்காக நடிக்கமுடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. திரைத்துறையிலிருந்து அழைப்பு வந்தாலும் நிச்சயம் நடிக்கப் போகமாட்டேன்.

வேறெதில் ஆர்வம்?

இசை...இசை..இசைதான். வேறெதிலும் ஆர்வமில்லை. ஹிந்துஸ்தானி இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். திட்டமிட்டு பயிற்சி பெற்று வருகிறேன். சாதிப்பேன்.

பிடித்தது கேரள வாசமா? சென்னையா?

கேரளாவை எல்லோருக்கும் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் "கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கிறளவுக்குப் பார்க்கிற இடமெங்கும் பசுமையைப் போர்த்திக்கொண்டிருப்பதுதான். எனக்குப் பிடிக்காததற்கு முக்கியக் காரணமும் அதுதான். அழகழகான கட்டடங்கள் இருக்கிற இடம்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். அதன்படி எனக்கு சென்னைதான் மிகவும் பிடிக்கும். நான் எல்லாவற்றிலும் தலைகீழ்!

Wednesday, February 13, 2008

நாக் அவுட் - டான்ஸ்!



படத்தில் காணும் இந்தப் பெண்ணின் கையால் உங்களுக்கு அடி வாங்க விருப்பம் இருக்கிறதா? "வாங்க... க்ளவுஸ் எடுத்து மாட்டிக்கிங்க... பாக்ஸிங் பண்ணுங்க.. ஆனால், இவரின் முதல் குத்திலேயே உங்கள் மூக்கு உடைந்துபோனால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை...'
ஹரிஷா ஒரு பாக்ஸர். ஸ்டேஜில் ஏறி இவர் பாக்ஸிங் செய்யத் தொடங்கினால் அதிரடியாக எதிரியின் மீது குத்துகள் இறங்கும். மூன்று நான்கு ரவுண்டுகளிலேயே எதிரியை நாக்-அவுட் செய்துவிடுவார். இப்போது ஹரிஷா பாக்ஸிங் இல்லாத வேறொரு ஸ்டேஜிலும் ஏறி வருகிறார். அது வெஸ்டர்ன் டான்ஸ் ஆடும் ஸ்டேஜ்.
அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் அவரை ஒரு காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்:

""கிரிக்கெட், புட்பால் உள்பட பெரும்பாலான விளையாட்டுகள் குழுக்களாகச் சேர்ந்து விளையாடக் கூடியவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட விளையாட்டுகளில் சிறு வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஒருவரின் தனித்திறமையை வெளிப்படுத்துகிற வகையிலான விளையாட்டாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தபோது எனக்கு பாக்ஸிங் மீது ஆர்வம் வந்தது.
"பெண்ணாக இருந்துகொண்டு பாக்ஸிங் எல்லாம் செய்யக்கூடாது' என்று அப்பாவும், அம்மாவும் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒரே பெண் என்பதால், அடம்பிடித்தப் பிறகு ஒத்துக் கொண்டார்கள். அவர்கள் ஒத்துக் கொண்டதற்கு இன்னொரு முக்கியமான காரணம், பாக்ஸிங் கற்றுக் கொண்டால் பெண் தைரியமாக இருப்பாள் என்பதற்காகவும்.
விளையாடத் தொடங்கிய ஆரம்பத்தில் பயிற்சியாளர்கள் சிலரிடம் பயிற்சி பெற்றேன். இப்போது யாரிடமும் பயிற்சி பெறவில்லை. நானேதான் பயிற்சி செய்கிறேன். காலையில் ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரையும், அதேபோல மாலையில் ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரையும் பயிற்சி செய்கிறேன். பாக்ஸிங் செய்வதற்கு கை பலமும் கால் பலமும் அதிக முக்கியம். கால் பலத்திற்கு ஜாக்கிங்கும், கை பலத்திற்கு மணல் மூட்டையில் குத்தியும் பயிற்சி செய்கிறேன். மனப்பலத்திற்குத் தியானம் செய்வேன்.
பிரபல வீரர்கள் மோதுவதை சி.டி.யில் போட்டுப் பார்ப்பதுண்டு. ஆனால், அவர்களின் ஆட்ட முறைகள் எதையும் நான் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு விளையாடுவதில்லை. இயல்பாக எனக்கு எப்படி மோத முடிகிறதோ அப்படித்தான் மோதுவேன். அதேசமயம் இக்கட்டான சிலநேரங்களில் அவர்களின் யுக்தி பயன்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் போட்டியில் மோதுகிறபோது முதல் சுற்றில் தடுப்பாட்டம்தான் ஆடுவேன். போகப்போகத்தான் அதிரடியாகத் தாக்குதல் தொடுப்பேன். இதுதான் என் யுக்தி. இதே யுக்தியை எல்லா ஆட்டங்களிலும் கடைப்பிடித்துக் கொண்டிருக்க முடியாது. எதிரில் விளையாடுகிறவர்கள் எப்படி விளையாடுகிறார்களோ அதற்கு தகுந்தாற்போல்தான் நாம் விளையாட முடியும். முதல் சுற்றிலேயே ஒருவர் அதிரடியாகத் தாக்கத் தொடங்கிவிட்டார் என்றால் அதற்கு தகுந்தாற்போல்தான் நாம் ஆட வேண்டியிருக்கும். அப்போது நாம் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருக்க முடியாது. அதற்காக நாம் அதிகமாக டென்ஷனாகவும் கூடாது. அதை எதிரில் விளையாடுகிறவர்கள் சாதகமாக்கிக் கொள்வார்கள். "கூலா'க இருந்துகொண்டே தாக்குதல் தொடுக்க வேண்டும்.
மேடையில் ஏறிய பிறகு நீயா? நானா? என்பதிலேதான் மனது குறியாக இருக்கும். குத்தும்போது அவருக்கு அடிப்பட்டுவிடுமே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. குத்தி நாக்-அவுட் செய்வதற்காகத்தானே மேடையில் ஏறியிருக்கிறோம்?
இப்போது 65 கிலோ பிரிவில் நான் மோதுகிறேன். 2005-ம் ஆண்டு, ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்ற போட்டியிலும், மதுரையில் நடைபெற்ற போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன். அப்போது 60 கிலோ பிரிவில் இடம்பெற்றிருந்தேன். தற்போது மாநில அளவிலேயேதான் சாதித்து வருகிறேன். போகப்போக தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சாதிப்பேன்.
பாக்ஸிங்கில் எனக்கு எவ்வளவு ஆர்வமோ, அதைப்போல வெஸ்டர்ன் டான்ஸிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அதையும் முறையாகக் கற்றிருக்கிறேன். அதிலும் புதியமுறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது'' என்கிறார் ஹரிஷா.
-பாக்ஸிங், டான்ஸ் இரண்டிலுமே நாக்-அவுட் உண்டு. பாக்ஸிங் செய்யும்போது ஹரிஷா நாக்-அவுட் செய்வது ஒருவரை... டான்ஸ் ஆடும்போது பலரை..!

Tuesday, February 12, 2008

வெளிச்சக் கதவுகள்




* உதடுகள் நீட்டி
உறைப்பைத்
தணித்துக் கொண்டன
நீ
தொடுகையில் மிளகாய்கள்

மிருகம் கலவாத
மோகமலர்களாய்
என்னை
மலர்த்துகிறது
உன்
மென் வருடல்கள்

உன்னால்
நேரும்
விபத்துகள்
திறக்கக் காத்திருக்கும்
வெளிச்சக் கதவுகள்.


* வானவில்லிலிருந்து
ஒரு
வண்ணத்தை
உருவியதுபோல
தேடுகிறேன்
அழகானச் சொற்களை

ஒரு
முறை
திரும்பிப் பாரேன்.


* விழுந்த
நட்சத்திரங்களைப்
பொறுக்கிக்கொண்டே
வந்தேன்
நீ
கூந்தல் தட்டுகிற
தாளத்தோடு செல்கிறாய்

மனப்புழுக்கத்தில்
சாளரம் சாத்துகிறது
தென்றலின் மனைவி

கடல் தாண்டி...
நிலம் தாண்டி...
ஓடிய வானம்
உன்னைத்
தொட்டு நின்றது.


* மின்னல்கள்
பதுங்கி ரசிக்கும்
தும்பியின்
சிறகுகளோடு நீ

உயிர்த்துக்கொள்ள
உவமைகள்
உன்னை
உட்கார அழைக்கின்றன

நீ
சூட நினைத்த நொடி
பூக்களைப்
பகையில் வைதன செடிகள்.


* உன்
பெயர்களிலுள்ள
எழுத்துக்களுக்கிடையே
உரிமைக்காக
நடக்கிறது
வெட்டு குத்து

என்
ஏக்கமூச்சுகளின்
இழைகளால்
உன்னுள்
வலை பின்னுகிறது
காதல் சிலந்தி

தெருவெங்கும்
நடந்து
காணுகிற கண்களிலெல்லாம்
நம்
வெட்கத்தை விதைப்போம்.


* தேனடைகளின்
ஒவ்வொரு
துளைதோறும்
நாம்

கைகளில்
சிக்காத காற்று
உயிர்களில்
கூடு கட்டுவதுபோல
காதலுக்கு
நாம்

விண்ணிலுமில்லை
இந்த
மண்ணிலுமில்லை
நம்
உள்ளத்தில் உலவும் சந்தோஷம்.

Friday, January 11, 2008

நாங்கள் மனிதர்கள் இல்லையா?


லிவிங் ஸ்மைல் வித்யா பேட்டி!

"பாம்பு தன் சட்டையை உரித்தெறிவதுபோல இந்த என் உடம்பைக் கழட்டி எறிய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? என் சுயம், என் அடையாளம், என் உணர்வுகள், என் கனவுகள், என் உயிர், எப்படி மீட்கப் போகிறேன்? ஆயிரம் அவமானங்கள், கோடி ரணங்கள். கிண்டல்களில் எத்தனை முறை செத்து மீண்டிருக்கிறேன்! அனைத்தையும் மீறி நீண்ட என் பயணத்துக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். எனக்குப் பொருத்தமான உடலை நான் கண்டெடுத்துவிட்டேன்!'' -திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் எழுத்து இது.

"நான், வித்யா' என்ற நூலில் தன் வாழ்வின் உருக்கமான போராட்டங்களை இவ்வாறு எழுதியுள்ளார். கிழக்குப் பதிப்பகம் இந்நூலை தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட்டிருக்கிறது. எம்.ஏ.மொழியியல் படித்திருக்கும் வித்யாவுக்கு எழுத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி? எதிர்நோக்கும் சங்கடங்கள் என்ன? எதிர்பார்க்கும் அங்கீகாரம் என்ன?

"எழுத்தின் மீது எனக்குப் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லை. சில நேரங்களில் என் சோகத்திற்கான வடிகாலாக எழுத்துகள் இருக்கின்றன. நண்பர் பாலபாரதி உதவியால் இணையத்தில், http://www.livingsmile.blogspot.com/ என்ற பெயரில் வலைப்பூவை நடத்தி வருகிறேன். இதில் திருநங்கைகள் சந்திக்கக்கூடிய சங்கடங்கள், அவர்களின் உணர்வுகள், உலக அளவில் அவர்களின் நிலை பற்றியெல்லாம் எழுதி வந்தேன். இதற்கு வலைப்பூ வாசகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததுடன், பலரிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது எனலாம். இதைப்போல சரவணன் என்ற பெயரை லிவிங் ஸமைல் வித்யா என்று மாற்றிக் கொள்ள முயற்சித்தேன். அதற்காகத் தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுலவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்திருந்தேன். இது ஏற்க மறுக்கப்பட்டு "இங்கு மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றப்படும்' என்கிற குறிப்புடன் வந்தது. அப்படியானால் நாங்கள் மனிதர்கள் இல்லையா? சம்மட்டியில் அடித்ததுபோல் உணர்ந்தேன். வழக்கறிஞர் ரஜினி மூலம் வழக்குத் தொடர்ந்தேன். இதன் மூலம் பத்திரிகைகளில் எனக்கு அறிமுகம் கிடைத்தது. ஆனால் எந்த நோக்கத்திற்காக வழக்குத் தொடர்ந்தேனோ... அது மட்டும் இன்னும் நிறைவேறவே இல்லை. நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கட்டாயம் மாற்றவேண்டும் என்று உத்தரவிடவில்லை.
"மாற்றுவதற்குப் பரிசீலிக்கவும்' எனப் பரிந்துரை மட்டும்தான் செய்திருப்பதாகச் சொல்லி என் பெயரை மாற்றித் தர மறுக்கிறார்கள். நான் இன்னும் இதற்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். அப்பா, மற்றும் என் உறவினர்கள் என்னைப் புரிந்து கொள்ளாமல் ஏற்படுத்தி, உணர்வு ரீதியாக நான் சந்தித்த வலி, சமூக ரீதியாகச் சந்தித்த வலியைவிட இந்த வலி எனக்குச் சற்று அதிகமாகவே இன்றைக்கும் இருக்கிறது.
திருநங்கைகளுக்கு உதவுவதாகச் சொல்கிற அரசு, பெயர் மாற்றம், கல்லூரியில் திருநங்கைகளாக அங்கீகரித்து சேர்ப்பது உட்பட அனைத்திற்கும் உதவ வேண்டுமா? இல்லையா? ஒரு சில பேருக்கே குடும்ப அட்டை கொடுத்து இருக்கிறார்கள். அந்த அட்டையால் ஒரு பயனும் கிடைப்பதில்லை. அரிசி, சர்க்கரையும், மண்ணெண்ணெய் கிடைப்பது மட்டுமே திருநங்கைகளுக்கான விடியலாக இருக்காது.

பால்மாற்றுச் சிகிச்சையை இப்போது இலவசமாகச் செய்கிறது அரசாங்கம். இது முறையான அறுவைச் சிகிச்சையாக இல்லை. புனேவில் நான் திருட்டுத்தனமாய் செய்துகொண்டேன். மரத்துப் போவதற்காக முதுகுத் தண்டில் ஒரு ஊசி போட்டார்கள். வலக்கையில் நரம்பைத் தேடி குளூக்கோஸ் போட்டார்கள். கத்தியை எடுத்து என் அடிவயிற்றில் முதல் கீறலைப் போட்டபோது முழுமையாக மரத்துப் போகாததை உணர்ந்தேன். அலறினேன். இன்னொரு ஊசியைப் போட்டார்கள். அப்போதும் உயிர்போகிற வலி தெரிந்தது அந்த வலியோடே எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதற்கு மாறான புதிய முறையில் எதுவும் அரசாங்க மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்வதில்லை. ஒரு சில டெஸ்ட்டுகளைத் தவிர அவசியம் எடுக்க வேண்டிய எந்த டெஸ்டுகளையும் எடுப்பதே இல்லை. இது முற்றிலும் கொடுமையானது. இதற்கு எதற்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்ய வேண்டும்? நாலாயிரம் ஐந்தாயிரம் கொடுத்துத் திருட்டுத்தனமாகச் செய்துகொள்ளலாமே? உண்மையைச் சொன்னால் மருத்துவர்களுக்கே பாலின ஊனம் குறித்துச் சரியான விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பால்மாற்றுச் சிகிச்சையை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஒருவரை திருநங்கையாக அங்கீகரித்துச் சிகிச்சை செய்வதற்கு முன் பல்வேறு மருத்துவ, உளவியல், சூழலியல், உடற்கூறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இந்தப் பரிசோதனை ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடக்கும். பரிசோதனையின் அடிப்படையில் மனநல மருத்துவர் ஒருவரும், மகப்பேறு மருத்துவர் ஒருவரும் திருநங்கையாக ஒருவரை அங்கீகரிப்பார்கள். அதன் பிறகே அறுவைச் சிகிச்சை செய்யப்படும். அதைப்போல் எல்லாம் இங்கு செய்வதில்லை. "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணவறையில் வை' என்பதாகத்தான் செய்கிறார்கள்.
அதைப்போல திருநங்கையாகவே அங்கீகரித்த ஒருவரை முழுமையான பெண்ணாகவே மாற்றக்கூடிய வசதியெல்லாம் வெளிநாடுகளில் இருக்கிறது. எந்த அரசாங்கத்திற்குமே இது தெரிவதில்லை. அல்லது தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. குறைந்தபட்சம் அரசாங்கம் பால்மாற்று சிகிச்சை கொடுக்கிறபோது திருநங்கைகளின் பெற்றோர்களை அழைத்தாவது கவுன்சிலிங் கொடுக்கவேண்டும். அப்போதுதான் ஓரளவு திருநங்கைகள் வாழ்வதற்கான சமூகச் சூழல் அமையும்.

திருநங்கைகள் விஷயத்தில் என்னை அதிகம் கோபம் கொள்ள செய்கிறவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தார்தான். திருநங்கைகளை வைத்து அவர்கள் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள், வருமானம் பார்க்கிறார்கள் அவ்வளவுதான். காசு கொடுத்து அவர்களைக் கருத்தரங்குக்கு அழைத்துச் செல்பவர்கள் "பாதுகாப்பான பாலுறவு' என்றுதான் சொல்வார்களே தவிர, அவர்களின் மறுவாழ்வுக்காக ஏதாவது செய்கிறார்களா என்றால் இல்லை. அவர்களை ஒரு தவறான நடத்தை உள்ளவர்களாகவே காட்ட விரும்புகிறார்கள்.

"திருநங்கைகளையும் மனிதர்களாகவே பார்க்கவேண்டும்' என்கிற விளம்பரத்தை எங்கேயாவது பார்த்து இருக்கிறீர்களா? இதைச் செய்யவேண்டியது யாருடைய கடமை? அரசாங்கத்தினுடையதும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடையதும்தானே? ஏன் செய்ய மறுக்கிறார்கள்? அவர்களுக்கு இன்னும் தெளிவான விழிப்புணர்வு இல்லை.
திருநங்கைகளும் சமூகத்துக்குப் பயந்துகொண்டே விலகி இருக்கக்கூடாது. என்னைப்போல் போராட வேண்டும்.

திருநங்கைகளைப் பற்றிய படங்களைத் தொகுத்து இருமுறை திரைப்படவிழா நடத்தியிருக்கிறேன். இன்னும் பல படங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். திருநங்கைகளைப் பற்றிய முழு தகவல்களும் அடங்கிய ஒரு வெப்சைட் நடத்தவேண்டும் என்பது விருப்பம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அதைப்போல திருநங்கைகளுக்கு உதவக்கூடிய வகையில் சட்ட ஆலோசனை அமைப்பு ஒன்றையும் அமைக்க விருப்பம் உள்ளது'' என்கிற வித்யா காதில் சே குவரா கம்மல்!

Tuesday, January 8, 2008

மூடு மணல்

சிறுகதை
த.அரவிந்தன்

உள்வாங்கிக் கொள்ள தாமதமானது. நிமிட நேரத்திற்கு முன்தான் நடந்திருக்கவேண்டும். எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இரத்தம் தெறித்திருக்கிறது. மாட்டியப் புத்தகப் பையோடு பாதிச்சாலையில் கிடக்கிறான். பள்ளிக்கூடம் போகிற வழியில் அடிபட்டிருக்கிறான். உச்சந்தலையில் அடி. கசிகிற இரத்தம் முகத்தில் ஓடி உடலையே நனைத்திருக்கிறது. வெள்ளைச்சீருடை என்பதற்கான அடையாளம் சிறிதும் தெரியவில்லை. சிறு முனகல்கூட இல்லை. ஓடுகிற இரத்தத்தையும், வராத சத்தத்தையும் வைத்து பார்க்கிறபோது தவறாக நினைக்கத் தோன்றுகிறது. நெருங்கிப் பார்த்தால் தவறாக நினைத்ததற்காக மனம் நெருடுகிறது. வயிறு ஏறி இறங்குகிறது. கழுத்து நரம்பில் துடிப்பு தெரிகிறது. மூச்சுக்காற்றால் போராடுகிறான். உயிரினும் மேலாய் தன் உயிருக்குப் போராடுகிறான். அந்தப் போராட்டத்தின் வலியை அவன் பெற்றோர்களால்தான் உணர முடியும். அலற முடியும். பெருங்குரலெடுத்து அழமுடியும். ஒவ்வொரு துளி இரத்தத்தையும் இழக்கும் வலியையும் பார்ப்பவர்களுக்கு உணர்த்த முடியும். புழுதியில் புரண்டுஉருண்டு மண்வாரி இறைத்து அடித்துப் போட்டு போனவனுக்குச் சாபமிட முடியும். மற்றவர்களால் முடியாது.
உயிரிலிருந்து உணர்ச்சியைப் பிரித்து பதுக்கி வைக்க எல்லோரும் பழகிக்கொண்டார்கள். தேவைப்படுகிறபோது பதுக்கியதைப் புதுப்பித்து பயன்படுத்துகிற சாமர்த்தியமும் இருக்கிறது. தன் இரத்தங்கள் என்று இவர்கள் கருதிக் கொண்டிருப்பவர்களுக்காக மட்டும் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். சுயநிகழ்வுகளை மட்டும் பின்நோக்கிப் பார்ப்பவர்கள், இரத்தத்தின் பரிணாம வளர்ச்சியைப் பின்னோக்கிப் பார்ப்பதில்லை. அந்தச் சாமர்த்தியம் என்னிடமும் இருக்கும் என்று ஒருநாளும் நினைத்துப் பார்த்ததே இல்லை. மனிதநேயம் செத்துப்போய்விட்டதாகவும் அது என்னிடமே கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டிருப்பதாகவும் நினைத்திருந்தேன். நேரடிக் களத்தில் எனது மனிதநேயத்தின் உயிருக்கும் ஊசலாட்டம். முன்பே தெரிந்திருந்தால் இந்த வழியாக வந்திருக்கமாட்டேன். போக்குவரத்து இல்லாத குறுக்குச்சாலைகளின் வழியாக வருவதுதான் வழக்கம். குறுக்குச்சாலைக்கு வழியே இல்லாத வழியில் வந்து மாட்டிக் கொண்டேன். இறுதிநிலையில் இருந்த மனிதநேயம் அடிபட்டவனைப் பார்த்ததும் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த வைத்துவிட்டது. எட்டுமாதக் கர்ப்பமாய் இருக்கும் எனது தங்கையை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்கிறேன். மருத்துவமனையில் காண்பித்து, தங்கையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு விரைய வேண்டும். அலுவலகத்திற்குத் தாமதமாகவோ, திடீரென விடுப்போ எடுக்கமுடியுமா? ஆடம்பரச் செலவுகள் செய்கிறளவிற்குச் சம்பாதிக்கிற, தூசி படாத ஆடைகளை அணிகிற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கால் நீட்டியிருக்கிற தனியார் துறை அலுவலகத்தின் சாதாரண அடிமைதானே நான். என்ன செய்ய? பாசாங்கு பதைப்புடன் நிற்கிற கூட்டத்தில் ஒருவனாய் நின்றுகொண்டேன்..
குட்டிக்கரணம் போடும் குரங்கைப் பார்ப்பதற்குக் கூடுவதுபோல கூட்டம் கூடுகிறதே ஒழிய அடிபட்டவனைத் தூக்குவதற்கு யாரும் முன்வரவில்லை. தலையை நுழைத்து கூட்டத்தில் எட்டிப் பார்க்கின்றனர். சோக இழையோடு பதிவு செய்து வைத்திருப்பதுபோல "அச்சச்சோ ' சத்தம் எழுப்புகின்றனர். உடனே நழுவிவிடுகின்றனர். போக்குவரத்துக் காவலர்கள் யாரும் அருகில் இருப்பதாகவும் தெரியவில்லை. விபத்து நடக்கிற இடங்களில் எல்லாம் நின்றிருந்தால் அவர்களால் அரசாங்கத்திற்கு நட்டம் வரலாம். கைகளோடு கைகள் பேசி வருமான உறவுகள் அதிகரிக்கிற இடமாகப் பார்த்துதான் நின்றிருப்பார்கள். அடிபட்டவனுடைய பள்ளிச் சீருடையைப் பார்த்தாவது அவன் படிக்கும் பள்ளியை அறியலாம். எதிர்வீட்டுக்காரனின் பெயரே தெரியாமல் நகர வாழ்க்கை வாழ பழகிக்கொண்டுவிட்டேன். அறியாத இடத்தில் எந்தப் பள்ளிக்கூடம் என்பதை மட்டும் எப்படிக் கண்டுபிடிப்பேன்? அருகில் உள்ள கடைக்காரர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். வெளியில் வந்துகூட அவர்களால் பார்க்கமுடியவில்லை. போகிற வருகிறவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்கிற அளவுக்கு பொட்டலம் மடிக்கிற அவசரம் அவர்களுக்கு. எதிரில் உள்ள அஞ்சலகத்திற்குத் தினமும் வருகிறவர்களுக்கும், அங்கு பணியாற்றுகிறவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. தொலைதூர உறவினர்களின் கடிதத்திற்குப் பசை ஒட்டுவதைவிட இதுவொன்றும் பெரிய விஷயமில்லை. மனிதநேயத்தை வெளிப்படுத்துவதற்கு அச்சச்சோ சத்தத்தைத் தூரத்திலிருந்து எழுப்பிவிட்டால் போதும் என்பது அவர்கள் நினைப்பு. அடிபட்டவனின் சட்டைப்பையில், புத்தகப்பையில் தேடினால் அவனைப் பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தேடி எடுக்கிறளவு எனக்குத் துணிவு இல்லை. இளங்காலை வெயில் வேறு வியர்வையின் வழியே கூட்டத்தில் நிற்பவர்களில் குளித்தவன் யார்? குளிக்காதவன் யார்? என்பதைக் காட்டிக்கொடுக்கிறது. வண்டியில், பேருந்தில் போகிறவர்கள் எல்லாம் ஏதோ பார்க்கமுடியாத அவசரத்தில் இருப்பதற்காக வருத்தப்படுவதுபோல அச்சச்சோ சத்தம் எழுப்பி சன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு போகிறார்கள். "நடிக்காதீங்கடா' என்று எல்லோரையும் பார்த்து கத்த வேண்டும்போல் இருக்கிறது.
என் உள்மனது உடனே என் பக்கம் திரும்பிக்கொண்டது. "முதல்ல நீ நடிக்கிறத விடுடா' என்று குரைக்கத் தொடங்கிவிட்டது. இந்த உள் மனதிற்கு வேலையே இல்லை. உள்ளேயிருந்து குரைக்கத்தான் அதற்குத் தெரியும். எல்லாம் முடிந்தபிறகு சொல்லிச் சொல்லி காட்டி வருத்தத் தெரியும். வேறு ஒன்றும் அதற்குத் தெரியாது. நிகழ்வு நடக்கிறபோதே தவறாக நடக்காமல் தடுத்து நிறுத்தி சரியாகச் செயல்பட வைக்கிற எண்ணம் அதற்கு ஒருநாளும் இருந்ததாகத் தெரியவில்லை. என்ன செய்வதெனப் புரியாமல் தவிக்கிற எனக்கு ஒருவழியைக் காட்ட வேண்டுமா? இல்லையா? அதைவிட்டு கடப்பாரையைக் கொண்டு இப்போதே குத்தத் தொடங்கிவிட்டால்? உள்மனதோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறளவுக்கு இப்போது எனக்குப் பொறுமையும் இல்லை. இரத்தத்தைக் கண்டாலே எனக்கு மயக்கம் வேறு வரும். இதோடு என் தம்பி இதுபோல எங்காவது அடிபட்டு கிடக்கிறானோ என்கிற பயம் வேறு புதிதாய்ச் சேர்ந்துகொண்டது. அவனோடு தொடர்புகொண்டு பேசிவிடலாம். இருக்காதென உடனே நம்பிக்கையும் பிறக்கிறது. வீட்டில் வேறு யாராவது அடிபட்டிருப்பார்களோ?... குழப்பம். ஒரே குழப்பம். சிறப்பு அனுமதி பெற்று ஏதோ இருட்டிருவில் மூளைக்குள் இதுவரை சந்திக்காத புதுவித குழப்பம் புகுந்துவிட்டது போல இருக்கிறது. ஏதோ பழைய கட்டடத்தை இடிக்க வெடிகுண்டு வைத்து வெடிக்கையில் சுவர்களெல்லாம் பொலபொலத்துக் கொட்டுவதுபோல உடலுறுப்புகள் எல்லாம் உடைந்து விழுவது போலவும் இருக்கிறது. எல்லோரையும்போல் கூட்டத்திலிருந்து விலகி வாகனத்தை எடுத்துக் கொண்டு போய்விடலாம். தெரிந்த முகம் எதுவும் இல்லை. மனிதநேயம் பற்றி பிறகு எங்காவது வீராவேசமாய் பேசுகிறபோது இதை உதாரணமாகக் காட்டிப் பழிப்பதற்குச் சாட்சிகள் இல்லை. மனசாட்சியும் தங்கையும் மட்டுமே சாட்சிகள். மனசாட்சி என்பது இருட்டுப் பிரதேசத்தில் பறக்கிற சிறுசிறு மின்மினிப் பூச்சிகள்தானே. இந்தப் பூச்சிகளின் கடுகளவு வெளிச்சத்தைப் பார்த்து ரசிக்கலாமே தவிர, அந்த வெளிச்சத்தைக் கொண்டு பகலைப் படைத்துவிட முடியாது. மேலும் மனசாட்சியைக் கட்டுப்படுத்திப் பொய் சொல்லவைக்கவும் தெரியும் என்கிறபோது வேறு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது. தங்கை எங்கும் காட்டிக்கொடுக்க மாட்டாள். முழு நம்பிக்கை இருக்கிறது. கிளம்பிவிடலாம். முடிவுசெய்துவிட்டேன். நழுவுகிற வித்தையா தெரியாது. வாகனத்தில் ஏறச் சொல்லி தங்கையைப் பார்க்கிறேன் . அழுதுகொண்டிருக்கிறாள். இரத்தவெளியாய் கண்கள் சிவக்க கண்ணீர் விடுகிறாள்.
"" பாவமா இருக்குப்பா ... சின்னப் பையன்.... புத்தகப் பையோடு கிடக்கிறான்... ஏதாவது செய்ப்பா... செத்துடப் போறான். ஏதாவது செய்ப்பா.''
வயிற்றிலிருக்கும் பிள்ளை கொடுக்கும் உணர்ச்சி. எல்லோரின் வறட்சிநேயங்களைத் தாண்டி அவளை அழ வைத்துவிட்டது. பிறக்கப்போகிற தன் பிள்ளை, தன் கணவன், தன் அண்ணன், தன் தம்பி இதுபோல் எங்காவது அடிபட்டு தூக்குவதற்கு நாதியற்று கிடப்பார்களோ என்று நினைத்துப் பார்த்திருக்கலாம் அவளும். என்ன செய்வதெனப் புரியாமல்தானே நானும் தவிக்கிறேன். யாராவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால் பணம் கொடுக்கக்கூடத் தயாராக இருக்கிறேன். என்னைவிட வயதில் மூத்தவர்கள் எல்லாம் நிற்கிறபோது நான் எப்படி முன்னால் போய் நிற்கமுடியும். இதுபோல வேறு எங்கும் மூத்தவர்களுக்காக விட்டுக்கொடுத்ததில்லை என்கிற நினைவு வேறு என்னை இடையில் வந்து மிரட்டிச் செல்கிறது. ஒருவேளை நான் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தால் வழக்கு விசாரணை என்று நாளை நீதிமன்றத்திற்கு அலையவேண்டும். யார் அடித்துப் போட்டு போனார்கள்? வாகனத்தின் எண் என்ன? எவ்வளவு வேகத்தில் வாகனம் வந்தது? யார் மீது தப்பு? அடிபட்டவன் வலதுபுறமாக வந்தானா? இடது புறமாக வந்தானா? என்று நீதிபதிகள் கேள்வி மேல் கேள்வி கேட்கலாம். எனக்கு ஒன்றுமே தெரியாதே. வழக்கு விசாரணைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டுதான் போகமுடியும். நீதிமன்றம் செல்கிறேன். விடுப்பு வேண்டும் என்று நிறுவனத்தாரிடம் கேட்கமுடியாது. ஏதோ கொலை குற்றம் செய்துவிட்டு நான் நீதிமன்றத்திற்குப் போவதாக நினைக்கக்கூடும். நீதிமன்றத்திற்குச் செல்வதால் நிறுவனத்தின் மானம் போய்விட்டதாக எனது பகையாளிகள் யாராவது நிறுவனத்தாரிடம் புகார்கூறி பழி தீர்த்துக்கொள்ள கூடும். என் வேலை பறிபோகும். நினைக்கவே பயமாக இருக்கிறது. கிளம்பு. சீக்கிரம் கிளம்பு. இடத்தைவிட்டு என் தங்கை நகர்வதாக இல்லை. முன்பைவிட அதிக சத்தத்துடன் அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அழுவதைப் பார்த்து ஓடி வந்த ஒரு பூக்காரக் கிழவியும் மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள்.
""யாரு பெத்த புள்ளையோ தெரியலையே... படிக்கப்போற புள்ளைய அடிச்சிப் போட்டுட்டு போயிருக்கானே... நாசமாப் போறவன்... யப்பா இரத்தம் போய்க்கிட்டே இருக்கு.. புள்ளையத் தூக்குங்கப்பா... பக்கத்துல கோமதி ஆஸ்பத்திரி இருக்குப்பா. தூக்குங்கப்பா...."'
ஒரு பயலும் அசையவில்லை தூக்கச் சொல்லி என் தங்கை என்னைத் தள்ளிவிட்டுவிட்டாள். மேடையில் தள்ளிவிடப்பட்டவன் தனக்குத் தெரிந்த முறையில், குரலில் ஏற்ற இறக்கத்தைச் சரியாக வெளிப்படுத்த முடியாவிட்டாலும் கத்தி கூச்சல்போட்டு நடிக்க முயலுவதுபோல சமாளிக்கத் தொடங்கினேன்.
""தள்ளி நில்லுங்க... காத்த விடுங்க... யப்பா ஆட்டோ...ஆட்டோ'' கைதட்டி அழைத்தேன்.கூடிநின்ற கூட்டத்துக்கு இப்போதுதான் உயிர் வந்தது போலிருக்கிறது. ஆட்டோவை அழைப்பது சுலபமான வேலையாக நினைத்திருக்கலாம்.
""ஆட்டோ...ஆட்டோ'' எல்லோரும் சேர்ந்து கலவரக்குரல் கொடுத்தார்கள். அருகில் வருவதும், அடிபட்டவனைப் பார்த்ததும் ஏதோ தாக்க வருபவர்களிடம் இருந்து தப்பித்துப் போவதுபோல மிரண்டு தலைதெறிக்க ஆட்டோக்காரர்கள் பறப்பதுமாக இருந்தனர். வராத சில ஆட்டோக்காரர்களை ஆவேசம்கொண்டு அடிக்கவும் ஓடியது இதுவரை அமைதியாக இருந்த கூட்டம். மிரட்டல் எதுவும் பயனளிக்கவில்லை. இந்த நேரத்தில் தானாகவே முன்வந்த அந்த ஆட்டோக்காரன் எனக்குக் கதாநாயகனாகவே தெரிந்தான்.
அவனிடம் பதற்றம் எதுவும் தென்படவில்லை. மாட்டிக்கொண்டோமே என்கிற தவிப்பும் தெரியவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் யார் பணம் தருவார்கள் என்பதையெல்லாம் அவன் யோசித்ததாகத் தெரியவில்லை. ""தூக்குங்க... யார் கூட வர்றது...'' என்றான். ஆட்டோக்காரர்களை மிரட்டினீர்களே வாங்கப் பார்க்கலாம் என்பதுபோல இருந்தது அவன் பேசியது.வாயடைத்துப் போனது கூட்டம்.
ஒரு சிலர் நழுவினர். "வா' என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்கிற மிதப்புடன் சிலர் நின்றிருந்தனர். இப்போதுதான் சரியாய் கவனிக்கிறேன். கூட்டத்தில் ஒரு பையன் நிற்கிறான். முன்பே ஒருமுறை கண்ணில் தென்பட்டான். அவன் செய்கையை உள்ளாழ்ந்து யோசிக்கவில்லை. முன்னால் நிற்பவர்களின் தலைகள் தன் தலையை மறைத்துவிடும் என்கிற நம்பிக்கையுடன் மறைந்து நின்று எக்கிஎக்கிப் பார்க்கிறான். பயத்தில் முகமெல்லாம் வியர்த்துப் போயிருப்பது தெரிகிறது. நான் கவனிப்பதைப் பார்த்ததும் மேலும் பயப்படுவதை அவன் கண்கள் காட்டுகின்றன. ஒருவேளை இவன்தான் அடித்துப்போட்டிருப்பானோ? சின்னப் பையனாக வேறு இருக்கிறான். கூட்டத்திலிருந்து நழுவ எத்தனிக்கிறான். தலைகள் அசையக்கூடியவை. அவற்றை நம்பி பின்னால் நிற்கக்கூடாது என்பதை இப்போது அந்தச் சிறுவன் தெரிந்திருப்பான். சிறுவனுக்கு முன்னால் நின்ற மூன்று பேர் கலைந்து போயினர். சிறுவன் முழுதாய் தென்பட்டான். இப்போது புரிந்தது அவன் பயந்ததிற்கான காரணம். அடிபட்டவனும், அவனும் ஒரே பள்ளிச்சீருடை போட்டிருந்தனர். இருவரும் ஒரே பள்ளி ஒரே வகுப்பாக இருக்க வேண்டும். விபத்தில் யாராவது பாதிக்கப்பட்டு, அதற்குக் காரணமானவன் ஆரோக்கியமாக இருக்கிறபட்சத்தில் பெரும்பாலும் அந்த இடத்தில் இருக்கமாட்டான். மனிதநேயம் உள்ளவன்தான் இருப்பான். அடிபட்டவனைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்ப்பான். இல்லாதவன் இடத்தைவிட்டு முதலில் ஓடிவிடுவான். அந்தப் பையனைப் பார்த்தால் விபத்தை ஏற்படுத்தியவன் போல் தெரியவில்லை. அவன் சட்டையில் இரத்தக்கறை எதுவும் தெரியவில்லை. அதேசமயம் அவனுக்கு என்ன நடந்தது? எப்படி நடந்தது? என்று தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் பயப்படுகிறான். இப்போது விசாரித்துக் கொண்டிருக்க முடியாது. பாதி பொய் கலந்த உண்மைதான் வெளிப்படும். உடலிலிருந்து உறவை முறித்துக் கொள்ள அவசரப்படுகிறது அடிபட்டவனின் உயிர். சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினால், அடிபட்டவன் யார் என்றே தெரியவில்லை என ச் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
""உன் ஃப்ரெண்டுதான... ஏறி ஆட்டோவுல உட்காரு ஆஸ்பத்திரிக்குப் போவோம்.'' இருவரையும் முன்பே தெரிந்ததுபோல சற்று மிரட்டல் தொனியில் சொன்னேன்.
"" பள்ளிக்கூடம் போகணும்...''நான் பேசவில்லை. கூட்டம் பேசியது."" ஏறுடா... பள்ளிக்கூடத்துல நாங்கச் சொல்லிக்கிறோம்.'' எல்லோரும் கத்திச் சொல்ல மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடாய் பயந்து ஏறினான்.""ஆர்.கே.புரம் மெட்ரிகுலேஷன் ஸ்கூல். ஒன்பதாம் வகுப்பு. ஏ செக்ஷன்.'' தகவல் சொல்லிவிடும்படி ஒருவரிடம் சொன்னான்.
பூக்காரக் கிழவியும் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.அடிபட்டவனின் ஒரு கையை நான் பிடித்துக் கொண்டேன். கோடுபோட்ட பழுப்பு நிறச் சட்டை அணிந்த ஒருவர் மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டார். ஆட்டோக்காரர் கால்கள் இரண்டையும் பிடித்துக்கொண்டார். இரத்தக்கறை என் சட்டையில் பட்டுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு தூக்கும்போது மிகுதியாக இருந்தது. இதே உணர்வுடன்தான் மற்ற இருவரும் தூக்குகிறார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. இருக்கையில் கிழவியும் சிறுவனும் உட்கார்ந்திருக்க அவர்கள் கால்கள் வைத்திருந்த இடத்தில் அடிபட்டவனைத் தூக்கி வைத்தோம். வைத்தோம் என்பது பொய். போட்டோம் என்பது டங்கென்று தலை மோதிய சத்தம் கேட்டபோதுதான் தெரிந்தது. ""நீங்க வரலையா...'' ஆட்டோக்காரர் கேட்டார்.""கோமதி ஆஸ்பத்திரிக்குத்தான் நானும் வர்றேன். வேகமா போங்க.. பின்னாலேயே வர்றேன்'' என்றேன். என் தங்கையின் எட்டுமாத வயிற்றைப் பார்த்து அவர் நம்பியிருக்க வேண்டும். என்னைப்போலவே பழுப்பு நிறச் சட்டைக்காரரும் அவரது வண்டியில் வந்துவிடுவதாகச் சொன்னார். பெரிய சத்தத்துடன் ஆட்டோ பறந்தது. வண்டியை எடுக்கிறபோது அடிபட்டவன் கிடந்த இடத்தைப் பார்த்தேன். அவன் எப்படிக் கிடந்தானோ, அதே உருவில் இரத்தம் தரையில் கசிந்து கிடக்கிறது.
இரத்தத்தில் வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள் என்பது எது? உள் மனத்திலிருந்து ஒரு மருத்துவமாணவன் விழித்தெழுந்து கேட்டான். சிவப்பு நிறம் மாறி இரத்தம் கறுப்பாக உறைந்துபோகிறது. தங்கையை உட்கார வைத்து வண்டியில் போகிற போது மருத்துவமாணவன் மறைந்து ஒரு கவிஞன் விழித்துக்கொண்டான். "வெள்ளையணுக்களின் சிவப்பணுக்களின் வீதியில் தன் உருவத்தில் தானே மிதந்தான்' என்று ஒரு கவிதையின் கடைசி வரி துளிர்த்தது. இது இடைப்பட்ட வரியாகவும் முதல் வரியாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்ற வரிகளை அமைப்பதற்கு மூளையின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஒட்டடையாய் ஒட்டிக்கிடக்கும் வார்த்தைகளைத் தேடத் துவங்கி சிறிது தூரம் சென்றதும் எனக்கு நானே அருவருப்பாகிப் போனேன். இறுதி மூச்சை விடயிருப்பவனைக் காப்பாற்ற முயற்சிக்காமல் அவன் இரத்தத்தை நிரப்பி எழுத நினைத்ததற்காக பெரிதும் வருந்தினேன். என்னுடைய தலையில் நானே கொட்டிக் கொள்ளவேண்டும் போலிருந்தது. பழுப்புச் சட்டைக்காரர் என்னைக் கடந்து மருத்துவமனைக்குப் போனார். வேகமாக வண்டியை இயக்கினேன். மருத்துவமனை வாசலில் தங்கையை இறக்கி அவளது மருத்துவரிடம் காட்டச் சொல்லிவிட்டு வண்டியை நிறுத்துவதற்கு இடம் தேடினேன். குறுக்கு சந்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற ஏகப்பட்ட இருசக்கர வாகனங்களுக்குள் ஓர் இடத்தைப் பிடிப்பதற்குச் சிரமமாக இருந்தது. இடத்தைப் பிடித்து பதற்றத்தில் வண்டியை நிறுத்த முயற்சித்தபோது நான் தடுமாற, வாகனம் தவறி விழ, பக்கத்தில் நின்ற மற்ற வாகனங்கள் விழுந்துவிட்டது. யாரும் கவனிக்காததால் திட்டு வாங்காமல் ஒவ்வொன்றாய் எடுத்து நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாய் வாயிலில் நுழைகையில் மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிற நிலையில் நிற்கிறது ஆட்டோ. பூக்காரக் கிழவி கீழே பழுப்புச்சட்டைக்காரரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அடிபட்டவன் இறந்து போயிருப்பானோ... உயிரைப் பிசைகிறது தெரிந்து கொள்வதற்குள்ளான இடைப்பட்ட நேரம்.""ஆக்ஸிடெண்ட் கேஸ்லாம் இங்கப் பார்க்க மாட்டாங்கலாம். ராகேஷ் மருத்துவமனைக்கு எடுத்துப் போகச் சொல்லுறாங்க..'' பூக்காரக் கிழவி சொன்னாள்."பிணத்தையா எடுத்துப் போகச் சொல்லுறாங்க...' கோபம் என்னை நெட்டித் தள்ளியது. நெஞ்செலும்பு வெடித்துச் சிதறிவிடும் போலிருக்கிறது. மருத்துவமனையையே அடித்து நொறுக்கினேன். சாகக்கிடக்கிறவனுக்கு முதலுதவி சிகிச்சையைக்கூட அளிக்காத மருத்துவமனை எதற்கு இருக்கவேண்டும்? அடிபட்டவனைத் தூக்காத பொதுமக்களை விட மருத்துவர்கள் கொடியவர்கள். அரக்கர்கள். மருத்துவர்களை நாலாபுறமும் ஓடஓட விரட்டி வெட்டியும் கொன்றேன்.
""ராகேஷ் ஆஸ்பத்திரிக்குப் போவோம். நீங்க வர்றீங்களா சார்? '' என்று ஆட்டோக்காரன் பழுப்புச் சட்டைக்காரரைக் கேட்டபோது என் கற்பனை கலைந்தது. வருகிறேன் என்கிற பாவத்துடன் அவரும் தலையை அசைத்தார். தங்கையை மருத்துவமனையில் விட்டிருப்பதால் நான் வரமாட்டேன் என்று நினைத்தானா? இல்லை என் முகத்தைப் பார்த்தே தெரிந்துகொண்டானா? என்று தெரியவில்லை. என்னை எதுவும் கேட்கவில்லை. தனியாக தங்கையை விட்டுவிட்டு போகமுடியாது. திரும்பி வீட்டிற்குப் போகவும் அவளுக்குத் தெரியாது. பூக்காரக்கிழவியும் ஆட்டோவில் ஏறாமலேயே நின்றிருந்தாள். ""ஏறி உட்காரு..'' என்று கிழவியைச் சொன்னான் ஆட்டோக்காரன்.""இல்ல... கடைய அப்படியே போட்டுட்டு வந்துட்டேன்''என்று இழுத்தாள். ""அதுக்கு என்ன பண்ணுறது உட்காரு...'' கோபமாய்ச் சொன்னான். இவளையும் விட்டுவிட்டால் சாட்சிக்கு என்ன செய்வது என்று நினைத்தானோ என்னவோ தெரியவில்லை. தயங்கியபடியே கிழவி ஏறி உட்கார்ந்தாள். கூடப் படிக்கிற சிறுவன் கொஞ்சம் பயம் தெளிந்து உட்கார்ந்திருந்தான்.
"அடிபட்டவன் தண்ணி கேட்டால் வாங்கிக் கொடுத்துடாதீங்க... ஏற்கனவே இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கு' என்று சொல்லி, பணம் ஏதாவது கொடுக்கலாம் என்று நினைத்தேன். நான் வராததற்காக ஆட்டோக்காரன் என்னை அடித்தாலும் அடிப்பான் என்று பயந்து எதுவும் கேட்காமல் நின்றுகொண்டிருந்தேன். கோபத்தோடு போவது ஆட்டோ புறப்பட்டு போன வேகத்திலேயே தெரிந்தது.
பழுப்பு நிறச் சட்டைக்காரரும் அவரது வண்டியை எடுப்பதற்குப் போனார். என்னுடைய மனிதநேயம் கோமதி மருத்துவமனையோடு முடிந்துபோனதற்காக உள்ளுக்குள்ளே நான் அவமானப்பட்டுக்கொண்டேன். இந்த அவமானம் கொடுக்கிற வலியைத் தூக்குத்தண்டனை கிடைத்தவர்கள்கூட அனுபவித்திடாத வலியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். யார் என்றே தெரியாத அந்தப் பழுப்புச் சட்டைக்காரர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று உள்நாக்கு உச்சரித்தது. முக்கால் மணிநேரத்திற்குப் பிறகு தங்கை மருத்துவரிடம் காண்பித்து விட்டு வந்தாள். ராகேஷ் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றிருப்பதைப் பற்றிய விவரத்தைச் சொல்லிவிட்டு வண்டியை எடுக்கப் போனேன். அங்கு வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தார் பழுப்பு நிறச் சட்டைக்காரர். தூக்கி வாரிப் போட்டது. இவரும் போகவில்லையா? அடப் பாவமே. என்னைப் போல இவரும் இந்த மருத்துவமனைக்கு ஏதாவது ஒரு காரியத்திற்காக வந்து ஏதோ அடிபட்டவன் மீது இரக்கம் கொண்டிருப்பது போலவே நடித்திருப்பாரா?"
" ராகேஷ் ஆஸ்பத்திரிக்குப் போனீங்களா சார்...'' ""போனேன். அங்கேயும் பாக்கமுடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். வேறு ஏதோவொரு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்களாம். அது எந்த ஆஸ்பத்திரின்னு தெரியல.'' என்று வெடுக்கெனச் சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார். அவர் சொல்வதை வைத்து பொய்யா? மெய்யா? என்று எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அது எந்தவிதத்திலும் தேவையும் இல்லாத ஒன்று. வருத்தத்தோடு தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன்..
பூக்காரக் கிழவி வேறு ஏதாவது மருத்துவமனையோடு திரும்பியிருப்பாளோ... ஆட்டோக்காரனும் அந்தச் சிறுவனும் என்ன செய்வதெனத் தெரியாமல் எங்கேயாவது தண்டவாளத்திலோ, குப்பைமேட்டிலோ அடிபட்டவனைத் தூக்கிப் போட்டிருப்பார்களோ..."
" அந்தப் பையன் செத்திருப்பான் இல்லப்பா...'' என்ற தங்கைக்குப் பதில் எதுவும் சொல்லாமல் வண்டியில் திரும்பி வரும்போது சாலையில் அடிபட்டவன் கிடந்த இடத்தைப் பார்த்தேன். உறைந்து கிடந்த அவன் இரத்த உருவத்தில் யாரோ பொறுப்பாய் மணல் அள்ளிப் போட்டிருந்தார்கள்.

Saturday, January 5, 2008

ஒரே பஞ்ச்!




"கோபம் வந்துவிட்டால் என்னுடைய அண்ணன் தம்பிகளுக்குள் வித்தியாசமாகச் சண்டை நடக்கும். கண்டவாறு அடித்துக் கொள்ளமாட்டார்கள். கிளவுஸ் எடுத்து மாட்டிக் கொண்டு பாக்ஸிங் போடுவார்கள்'' என்று சிரித்துக் கொண்டே சொல்லும் பர்வீனும் குத்துச்சண்டை வீராங்கனை. இவரின் அண்ணன் கலிம் அஹமது, தம்பிகள் ரஹ்மான், கமால் பாஷா ஆகியோரும் தேசிய அளவில் சாதித்து வரும் குத்துச் சண்டை வீரர்கள். இவர்கள் எல்லோரும் தேசிய அளவில் குத்துச்சண்டைக்காக வாங்கிய விருதுகள் சென்னை தங்க சாலையில் உள்ள இவர்களது வீட்டில் நிறைந்து இருக்கின்றன.
"வீட்டில் எல்லோருமே பாக்ஸர்களாக இருந்தாலும் நான்தான் பெஸ்ட். இப்படிச் சொல்வதால் அண்ணன் தம்பிகள் யாரும் குத்துச்சண்டை போட வரமாட்டார்கள். ஏனென்றால் தேசிய அளவிலான போட்டி ஒன்றில் தமிழகம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க அண்ணனும், தம்பியும் நானும் தேர்வானோம். இது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. குடும்பமே கிளம்பி வந்துவிட்டீர்களா? என்றெல்லாம் கேட்டார்கள். போட்டியின் முடிவில் நான் மட்டுமே வெற்றி பெற்று வெண்கலம் பரிசு வாங்கி வந்தேன்'' எனும் பர்வீனிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவரின் நாக்-அவுட் பதில்களும்:

அழகு போய்விடும் என்று பயந்துகொண்டு பெரியளவில் பெண்கள் பங்கேற்காத குத்துச்சண்டை போட்டிக்கு வர உங்கள் அண்ணன், தம்பிகள்தான் காரணமா?
உண்மைதான். என்னுடைய அப்பா ரயில்வேயில் வெல்டராக வேலை பார்க்கிறார். அவர் வெயிட் லிஃப்டர். அவர் கொடுக்கிற ஊக்கம்தான் நாங்கள் இப்படி உடல்ரீதியான போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம். 99-ஆம் ஆண்டு நான் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கத் தொடங்கினேன். நான் தொடங்கியபோது தமிழ்நாட்டில் ஒரு சில வீராங்கனைகளே இருந்தனர். அப்போது நானும் முழுமையாகப் பயிற்சி எதுவும் பெற்றிருக்கவும் இல்லை. அறிமுகப் போட்டி ஒன்றில் அப்பா ஸ்டேஜில் ஏற்றியபோது எதிரிலிருந்த பெண் என்னை நையப் புடைத்துவிட்டார். அந்த அடிக்குப் பிறகு இனி யாரிடமும் இப்படி அடி வாங்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். பயிற்சியும் பெறத் தொடங்கினேன். அதற்குப் பிறகு அடி வாங்குவது இல்லை. இப்போது அடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அழகு போய்விடும், முகம் பெயர்ந்துவிடும் என்பதெல்லாம் பொய் என்றே எனக்குத் தோன்றுகிறது. பயிற்சி பெறாத ஒருவர் முகத்தில் அடிபடுகிற போதுதான் முகம் கிழிந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடிபடுகிறளவுக்கு பயிற்சி பெற்ற யாரும் முகத்தைக் காட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

உங்கள் பயிற்சியாளர்கள்?
முதலில் மதிவண்ணன் என்பவரிடம் பயிற்சி பெற்றேன். அவர் தேசிய வீரர். இப்போது குமார் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறேன். உலகத்தர வீரர்களுக்குக் கொடுப்பது போன்ற பயிற்சியை எனக்குக் கொடுத்து வருகிறார். தடுக்கவேண்டிய கட்டம் எது? தாக்க வேண்டிய கட்டம் எது? எதிரில் உள்ளவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு தாக்குவது எப்படி என்பது பற்றியெல்லாம் சொல்லிக்கொடுக்கிறார். இதைப்போல கருணாகரன் என்பவரும் பல்வேறு நுட்பங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்.

ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் பயிற்சி பெறுகிறீர்கள்?
காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரையும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறரை மணி வரையும் பயிற்சி பெறுகிறேன். உடல் பலம்தான் குத்துச்சண்டைக்குப் பிரதானம் என்பதால், தங்க சாலையில் இருந்து மெரீனா கடற்கரை வரை ஓடுவோம். வெயிட் லிஃப்ட் பயிற்சி செய்வோம். மணல் பையைக் குத்திப் பயிற்சி எடுப்போம். எங்களுக்குள்ளாகவே பயிற்சி போட்டிகள் நடத்திக் கொள்ளுவோம். இதில் சிலநேரம் ஆண்களோடும் மோதுவோம்.

ஆண்களோடு பெண்களால் மோதமுடியுமா?
முடியாது என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். என்னைக் கேட்டால் ஆண்களைவிட பெண்கள்தான் பாக்ஸிங்கில் பலம் வாய்ந்தவர்கள் என்பேன். பஞ்ச் செய்வதில் பெண்களே பலம் வாய்ந்தவர்கள். மன அளவில் ஆண்களைவிட பெண்கள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பது போன்றுதான் இது. பயிற்சி போட்டிகளில் நாங்கள் பல ஆண் வீரர்களைத் தோற்கடித்து இருக்கிறோம்.

முதலில் தடுப்பாட்டம் ஆடி எதிரில் விளையாடுகிறவர் பலமிழந்துவிட்டார் என்று தெரிகிறபோது அதிரடி ஆட்டம் ஆடக்கூடியவர் முகமது அலி. உங்கள் நுட்பம் என்ன?
முகமது அலிதான் என்னுடைய ஹீரோ. அழகாக, நேர்த்தியாக மோதக்கூடியவர். எல்லாக் கட்டங்களிலும் கூலாகவே விளையாடிக்கொண்டிருப்பார். இந்த ஆட்டம்தான் எனக்குப் பிடிக்கும் என்றாலும், எதிரில் உள்ளவர்களின் நிலைக்கேற்பவும் என்னுடைய உடல்நிலைக்கேற்பவும்தான் முடிவெடுப்பேன். உடல் ஒத்துழைக்கக்கூடிய நிலையில் இருந்தால் எடுத்தவுடனே அதிரடியாகத் தாக்கத் தொடங்கி விடுவேன். அதேநேரம் டைசன்போல் விளையாட மாட்டேன். அவர் எந்த விதியையும் கடைபிடிக்க மாட்டார். ரிங்கிற்குள் வந்ததும் கண்மண் தெரியாமல் தாக்கத் தொடங்கி விடுவார். இதில் எதிரிகள் நிலைகுலைந்து எப்போது ரிங்கை விட்டு இறங்கலாம் என்று இருப்பார்கள். அதுபோன்ற ஆட்டம் எனக்குப் பிடிப்பதில்லை.

அதிரடித் தாக்குதல் யார் மீதும் நீங்கள் தொடுத்ததில்லையா?
திட்டமிட்டுத் தாக்கியது இல்லை. உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு போட்டியில் ஒரு பெண்ணின் மீது பல்வேறு பஞ்ச்களைப் பதித்துவிட்டேன். அந்தப் பெண் பொத்பொத்தென்று விழுந்துகொண்டிருந்து. அந்தப் பெண்ணினுடைய கோச் என்னிடம் வந்து பச்சைக் குழந்தையை ஏம்மா இப்படி அடிக்கிற என்று சொன்னார். ரிங்கிற்குள் வந்தால் அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.
உங்கள் உடம்பைப் பார்க்கிறபோது குத்துச் சண்டை போடுகிற உடம்பாகத் தெரியவில்லையே?
குண்டாக இருப்பவர்கள்தான் பாக்ஸிங் செய்பவர்கள் என்று அர்த்தமில்லை. முன்பு 42 கிலோ பிரிவில் கலந்துகொண்டிருந்தேன். இப்போது 52 கிலோ பிரிவில் கலந்துகொள்கிறேன். 52 கிலோவின் பலத்தையும் கைகளில் கொண்டு வந்து தாக்கத் தெரிந்தால் போதும். குண்டாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

வாங்கிய விருதுகள்?
தேசிய அளவில் சீனியர் பிரிவில் வெள்ளி, வெண்கலம் என்று ஏழு பதக்கங்கள் பெற்றிருக்கிறேன். இவையில்லாமல் மாநில அளவிலான போட்டிகள், மண்டல அளவிலான போட்டிகள் என்று பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறேன். சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறவேண்டும் என்பது என் ஆசை. இந்த ஆசைகள் நிறைவேற எனக்கு மனபலத்தைவிட பணப் பலம் தேவை. அதற்கு முதலில் ஓர் அரசாங்க வேலை தேவை என்று நினைக்கிறேன்.