Friday, November 14, 2008

விரல் மிருகங்கள்


நிழல் மேல் விரையும் வெயிலாக
கள்வமிலாது கடந்து சென்றவை
என் பார்வைகள் என்பதை
உங்களுக்கெப்படிப் புரியவைப்பேன் தாயே...

சீவப்பட்ட குருத்துகளானாலும்
கள் வடியாதவை
என் சிரிப்புகள் என்பதை
உங்களுக்கெப்படி உணர்த்துவேன் தாயே...

இருபுற சிறகுகள் பிய்க்கப்படுகிற பறவையாய்
நீங்கள் துடித்து
மராப்பைத் துணைக்கு இழுத்தபோது
இரத்தணுக்களிலெல்லாம் அவமானம் சொருகிச்சொருகி
நான் கொலையுண்டேன் என்பதை
உங்களிடமெந்தக் காகம் சொல்லும் தாயே...

அழிப்பான்கள் எதனாலும் அழிக்கமுடியாத
நீங்கா நடுக்கத்தையே
நரை நுரைக்கும் பருவச்சுருக்கத்திலும் கொடுக்க
இடிபாடுகளின் அசந்தர்ப்பங்களில்
விரல்களிலிருந்து பாயும் கொடிய மிருகங்களிடமிருந்து
எங்கும்
உங்களையெப்படிக் காப்பேன் தாயே...

நன்றி: ஆனந்த விகடன்

Thursday, November 13, 2008


கொதிமழை
------------
காய்கறிகளோடு
மணதார
பழைய நினைவால்
கொதிக்கிறது
குழம்புச் சட்டியில் மழை.
நன்றி: உயிரோசை

தொட்டுக்கொள்ள...
----------------------
பண்டைய மனிதர்கள்
பண்டைக் காலத்தை
பழம் ஜாடியில்
ஊறுகாய்ப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
நன்றி: உயிரோசை

Wednesday, November 12, 2008

மீதமிருக்கும் பத்து சொற்கள்
------------------------------------
அறிமுகித்த பத்து நிமிடங்களில்
இருவரும் சலித்து
அறுபது சொற்கள் உதிர்த்தனர்
அதில் பிடிபடலும் தப்பித்தலும்
பிடிபடலும் தப்பித்தலுமாய்
மறதிக்காட்டுக்குள் பூச்சிகளாகி மறைந்துவிட்டன
முப்பத்திரண்டு
ஞாபக வரிசையில்
ஊதாரிகளாய் நிற்கின்றன
பதினெட்டு
மீதமிருக்கும் பத்து சொற்களின்
கைகளை அழுந்த பிடித்துக்கொண்டு
வாக்கியங்களின் வழியே
வேக நடையில்
இருவரும் போய்க்கொண்டிருக்கிறார்கள்
இவன் அறியாத அவன் ஊருக்கும்
அவன் அறியாத இவன் ஊருக்கும்

நன்றி: உயிரோசை

Tuesday, November 11, 2008


தந்தைப்பால்
--------------
தளிர் விரல்களால்
குழந்தை வருடி
உடன் திகைத்துப் பின்வாங்குகிறது
சற்று நேரம் கழித்து
திரும்பவும் வந்து தடவி
ஏமாந்து வெறிக்கிறது
திரண்ட இரத்தங்கள் கட்டி
தகப்பனுக்கு
நெஞ்சு வலிக்கிறது.

Friday, October 10, 2008


கடந்து போதல்...
---------------------
பிஞ்சுச் சுவடுகளைக்
கவிதைகளாகப் பதிக்கும்
செல்ல மகள் ஆளுமை பற்றிக் கேட்க
நண்டின் கால்களால் எழுதி
கடற்கரை சொன்னது:
"கடலைக் கடந்ததே கவிதை'

காகிதக் கத்திக்கப்பலில் பயணித்து
அபாய எதிரலைகளில் உருக்கொள்ளும்
வெள்ளைத் தாள்களையெல்லாம்
கிழித்தெழுதி போவதைப்
பார்த்து கடல் சொன்னது:
"ஆகாயம் கடந்ததே கவிதை'

குளிர்ச்சியைப்போல் மழையை
வீட்டிற்குள் அழைத்து
வரமுடியாத கோபத்தில்
ஈசல் உதிர்த்துப் போன சிறகுகளால் பறந்து
வார்த்தைகளைப் பால்வீதியில்
தனித்தனிக் கிரகமாய் மிதக்கவிட
ஆகாயம் சொன்னது:
"சூரியனைக் கடந்ததே கவிதை'

Thursday, October 9, 2008

கவிதை

கற்பனையிடம் கையெழுத்து




வேர் விரித்து, கிளைத்து, பூத்து, காய்த்து, கனிந்த
அந்தக் கவிதை மரத்தை
ஆழ் யோசிப்புக் குழி பற்றுதலில் உயிர்க்கிறவாறே
பெயர்த்தெடுத்துக் காகிதத்தில் நிறையாய் நடமுடிவதில்லை
எனினும்
அதன் சல்லிவேர்கள்
முதல் சுனையாய் என்னை உறிஞ்ச முனைந்ததுமே
செல் சுவர்களால் வளர்ந்த
அதன் பாடுபொருளுக்கு நன்றி நவின்று விழா நடத்துவேன்
பட்டுப்போன பழைய களைப்புற்ற வார்த்தைகள்
கிளை மேடையிலேயே உறங்க
துருதுரு மிளாறு புனைவார்த்தைகள்
உற்சாகப் போதையில் கைதட்டி ஆரவாரிக்கும்
இந்த மரத்தில் இடம்பிடிக்க இயலாத
பழுத்தயிலை வார்த்தைகளை எல்லாம் திரட்டி
பாடுபொருளுக்கு நான் மாலையிடுவேன்
தலைகுனிந்தவாறே ஏற்கையிலது
முந்தைய பாடுபொருள்களில் எல்லாம்
வேடன் நிர்ப்பந்தித்து தரித்த
என் அக்கறை வலையில் அந்நியப்பட்டு
கிளைகளெதிலும் உட்காராமல் போன
ஒரு நிமிடம் நினைத்து வெட்கும்
அகன்று யோசிக்க நேரமளிக்காது
உச்சிப் பொருள்பூவிலிருந்து உருவிய
மகரந்தத் தலைப்பு விருதைக்
காற்றின் சிலிர்ப்பு உணர்ச்சியால்
கொடுத்து விழாவை முடிக்கையில்
என் கற்பனையிடம் கையெழுத்து வாங்க
வேறு சில பாடுபொருள்கள் முட்டிமோதும்.


த.அரவிந்தன்