Monday, April 28, 2008

சாதனை: 25 பேர்... 50 மணிநேரம்!


"ஒவ்வொரு பூவுமுமே சொல்கிறதே வாழ்வென்றால் கோமகன் வாழ்வே! ஒவ்வொரு மெட்டும் சொல்கிறதே பாட்டென்றால் கோமகன் பாட்டே!' -"ஆட்டோகிராஃப்' படத்தில் இடம்பெற்ற "ஒவ்வொரு பூக்கள்' பாட்டை இப்படி மாற்றியும் பாடலாம். பார்வையற்றவரான கோமகனின் வாழ்க்கை உண்மையில் போர்க்களம்தான். அதையெல்லாம் தாண்டி அவருடைய "ராகப்பிரியா பார்வையற்றோர் இசைக்குழு' 50 மணிநேரம் தொடர்ச்சியாகப் பாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. சாதனை நாயகனோடு சிலநேரங்கள்:

உங்கள் குடும்பம்?
அப்பா மோகன், சினிமா பட ஸ்டண்ட் மாஸ்டர். "காவல்காரன்', "இருகோடுகள்' உட்பட பல்வேறு படங்களில் பணியாற்றி இருக்கிறார். எம்.ஜி.ஆர். படங்களில்தான் அதிகம் பணியாற்றி இருக்கிறார். இரண்டு அக்காக்கள். ஒரே மகன் நான். என்னுடைய சின்ன வயதிலேயே அப்பா இறந்து போய்விட்டார். அம்மா வளர்ப்பு நான். எம்.ஏ., எம்.ஃபில். சமூகவியல் படித்திருக்கிறேன். 97-ல் திருமணம் செய்துகொண்டேன். காதல் திருமணம். என்னுடைய மனைவி பெயர் அனிதா. பார்வையற்றவர் அல்ல அவர். பி.ஏ. முடித்திருக்கிறார். தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் ஆசிரியராக இருக்கிறார். அந்தச் சங்கத்தில் சேர்ந்து நான் அங்கு போய் வந்து கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. சந்தோஷமாக வாழ்கிறோம். இப்போது எனக்கு இரண்டு மகன்கள்.

பாடுகிற ஆர்வம் எப்படி வந்தது?
சிறு வயதில் இருந்தே எனக்குப் பாட்டு வந்தது. ரிக்கார்டரில் ஓடுகிற பாட்டை கேட்டு எந்தக் குறிப்புகளும் இல்லாமல் அப்படியே பாடுவேன். பள்ளிகள், கல்லூரிகளில் நடந்த போட்டிகளில் நிறைய பரிசு பெற்றேன். இந்தக் காலகட்டத்தில் எல்லாம் கேள்வி ஞானத்தாலேயே பாடி வந்தேன். பிறகு இரண்டு வருடங்கள் இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு படிப்பும் படித்தேன். பல இசை வாத்தியங்களை இசைப்பதற்கும் பின்னர் கற்றுக்கொண்டேன்.

ராகப்பிரியா இசைக்குழுவை எப்போது தொடங்கினீர்கள்?
நண்பர் கொடுத்த தன்னம்பிக்கை காரணமாகத்தான் இசைக்குழுவைத் தொடங்கினேன். ஒன்பது பேர் கொண்ட குழுவாகத்தான் முதலில் தொடங்கினேன். எல்லாருமே பார்வையற்றவர்கள். தொடங்கப்பட்ட 91-ஆம் ஆண்டில் இருந்து 93-ம் ஆண்டு வரை நாங்கள் படாதபாடு பட்டுவிட்டோம். வாய்ப்புகள் குறைவாகத்தான் கிடைக்கும். மாதத்திற்கு ஒன்றிரண்டு கிடைத்தாலே பெரிய விஷயம். அதுவும் நிகழ்ச்சி நடத்துவதற்கு கிடைக்கும் தொகை வெறும் இரண்டாயிரம் மூவாயிரம் ரூபாய்தான். இதைவைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டோம். இசைக்குழுவை நிறுத்திவிடலாம் என்றுகூட நினைத்தோம். ஆனால், முன்வைத்த காலை பின் வைக்கக்கூடாது என்று எங்களை நாங்களே திடப்படுத்திக் கொண்டு தொடர்ந்து நடத்தினோம். ஓரளவு வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

"ஆட்டோகிராஃப்' படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது?
எங்கள் இசைக்குழுவைப் பற்றி தெரிந்து சேரன் சார் என்னை அழைத்துப் பேசினார். நானும் என் மனைவியும் டிஸ்கஷனுக்குச் சென்றிருந்தோம். முதலில் "ஒவ்வொரு பூக்கள்' பாட்டை கடற்கரையில் எங்கள் இசைக்குழு பாடி பிச்சை கேட்பதாகவும், நாங்கள் பாடுவதைப் பார்த்து சினேகா எங்கள் குழுவில் வந்து பாடுவதாகவும்தான் காட்சி வைத்திருந்தார். எனக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருந்தது.
"பார்வையற்றோர் பிச்சை கேட்பதுபோன்று பல படங்கள் காட்டுகின்றன. இது எங்களை இழிவுப்படுத்துவதுபோல நினைக்கிறேன். ஒரு மன்றத்தில் டிக்கெட் கொடுத்து பாடுவது போல ஏன் அமைக்கக்கூடாது?' என்று கேட்டேன். அப்போது அவர், அந்தக் காட்சியை நாங்கள் முடிவுசெய்து கடற்கரையில் நடத்துவதற்கு அனுமதி வாங்கி பதினைந்தாயிரம் ரூபாய் கட்டணமாகக் கட்டியுள்ளோம். இப்போது மாற்ற முடியாது. இருந்தாலும் யோசித்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று எங்களை காரில் கொண்டு எங்கள் வீட்டில் விட்டுப் போனார். கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாக என்னுடைய மனைவி கோபப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு சேரனே என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். நான் கூறிய யோசனையை அவர் யோசித்ததாகவும், அது தனக்கும் சரி என்று பட்டதாகவும் தெரிவித்தார். கட்டிய பணம் போனாலும் பரவாயில்லை. நீங்கள் சொல்லியபடியே காட்சியை அமைப்போம் என்று சொல்லி ஜெர்மன் ஹாலில் எடுத்தார். நன்றாக வந்தது. எங்கள் இசைக்குழுவுக்கு அதிகம் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இதன்பிறகு "முதல்முதலாய்' என்ற படத்திற்கு இசையமைப்பாளராகப் பணியாற்றினேன். தெலுங்கில் வந்த "ஆட்டோகிராஃப்' படத்திலும் நடித்தேன். இந்தப் படத்தில் ரவிதேஜா கதாநாயகனாக நடித்திருந்தார். "பசுபதி' என்ற படத்திலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.


50 மணிநேரம் தொடர்ந்து பாடி எப்படி கின்னஸ் சாதனை செய்ய முடிந்தது?
99-ம் ஆண்டு எங்கள் இசைக்குழுவில் 16 பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். பதினாறு மணிநேரம் தொடர்ந்து பாடி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றோம். இந்தச் செய்தி பத்திரிகை வாயிலாக வந்து இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் இந்தச் சாதனையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 262 பேர் கொண்ட இசைக்குழுவினர் 48 மணிநேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை செய்தார்கள். இவர்கள் எல்லோருமே பார்வையுடையவர்கள். இதை முறியடிக்கும் வகையில்தான் 50 மணிநேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை செய்திருக்கிறோம். ஹங்கேரி இசைக்குழு நிகழ்ச்சியை நடத்தியபோது 262 பேரில் 42 பேர் முடியாமல் வெளியேறிவிட்டார்கள். ஆனால் 25 பேர் கொண்ட எங்கள் குழுவில் ஐந்து பேர் மட்டுமே பெண்கள். இதில் ஒரு பெண் மட்டுமே போட்டியிலிருந்து வெளியேறினார். இரண்டு நாள்கள் ஓய்வெடுக்காமல், தூங்காமல் பாடியதால் காய்ச்சல் ஏற்பட்டு வெளியேறினார். சாதனை முடிந்துபிறகுதான் சில ஆண் உறுப்பினர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்தார்கள். இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்காக மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் பயிற்சி பெற்றோம். ஹங்கேரி குழுவை விட நாங்கள் சாதித்ததில் ஒரு சிறப்பு என்னவென்றால் அவர்கள் நோட்ஸ்களை எடுத்து வைத்துக்கொண்டுதான் பாடினார்கள். நாங்கள் நோட்ஸ்களே எடுக்காமல் தொடர்ச்சியாய் பாடினோம். அதைப்போல ஒவ்வொரு பாடலுக்கும் இடையிலும் மூன்று வினாடிகள் மட்டும் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி. அதைக்கூட முழுதாய் எடுத்துக்கொள்ளாமல் இரண்டு வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டோம். ஏனென்றால் ஒரு வினாடி அதிகமானால் கூட கின்னஸ் சாதனை வாய்ப்பை இழக்க நேரிடும். இதனால் இரண்டு வினாடிக்கு மேல் ஓய்வு எடுத்துக் கொள்ளவே இல்லை. சாதனையை முடித்துவிட்டு வீட்டிற்கு போய் உறங்கி இரண்டு நாள்கள் கழித்துத்தான் எழுந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தளவுக்கு உடல் வலி. உறக்கமின்மை. இரண்டு நாள்கள் சாப்பிடக்கூட இல்லை.
பார்வையற்றோர் எல்லாத்துறையிலும் சாதித்தாலும், பெரும்பாலும்
எல்லோரும் பாடகர்களாக இருப்பதற்குக் காரணம் என்ன? ரோட்டில் பிச்சை எடுத்தபடியே பாடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஏதாவது ஒரு குறை உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு நிறை இருக்கும். பார்வையற்றோருக்கு ஞாபகச் சக்தி அதிகம். சுற்றிலும் நிகழ்கிறவற்றை அப்படியே உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் காரணமாகத்தான் பெரும்பாலோர் பாடகர்களாக முடிகிறது என்று நினைக்கிறேன். பிச்சை எடுத்தபடியே பாடுவது தவறு என்று நினைக்கிறேன். தங்களுக்கு இருக்கிற திறமை வெளி உலகிற்குக் காட்டி சாதிக்க வேண்டும். இசையில் ஆர்வமுடைய பார்வையற்ற எல்லோரையும் என்னுடைய இசைக்குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

கின்னஸ் சாதனையும் செய்து முடித்தபிறகு உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறபோது உங்களுக்குப் பெரு உதவியாய் இருந்தவர்கள் யார்?
எங்கள் இசைக்குழுவோடு சேர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி, இசைவாத்தியக் கருவிகள் வாங்குவதற்கு உட்பட எங்கள் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான். மற்றொருவர் கதாசிரியர் ராஜூ.
படங்கள்: ஏ.எஸ்.கணேஷ்
ராகப்பிரியா இசைக் குழுவைத் தொடர்புகொள்ள தொலைபேசி எண்:98411-80649

No comments: