யுவராணி
வெளிநாட்டில் குடியேறியிருக்கும் நடிகைகள் விமானத்திற்கு டிக்கெட் எடுக்கிற கையோடு சீரியலில் நடிப்பதற்கும் கால்ஷீட் கொடுத்துவிட்டுதான் தமிழ்நாட்டிலேயே கால் பதிப்பார்களோ?. கடந்தவாரம் மலேசியாவில் இருந்து திரும்பி இருக்கும் யுவராணியின் வசமும் சன் டி.வி.யின் "சூர்யவம்சம்', "திருவிளையாடல்' சீரியல்கள். பெயருக்கேற்றாற்போல முன்பைவிட இளமையாகத் திரும்பியிருக்கும் "யுவ'ராணியுடன் ஒரு சந்திப்பு:
கோடை விடுமுறையில் வந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?
இல்லை. மலேசியாவில் இருந்து குடும்பத்தோடு இங்கேயே வந்துவிட்டேன். மலேசியாவிற்குப் போகும்போதே ஐந்து வருடங்கள் கழித்து திரும்பி வந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுதான் சென்றோம். விஷ்ணு, நித்தின் என எனக்கு இரண்டு மகன்கள். அவர்களை இங்குதான் படிக்க வைக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். விஷ்ணு இப்போது முதல் வகுப்பு செல்ல இருக்கிறான். அவனுக்காக இங்கேயே வந்துவிட்டோம்.
மலேசியாவில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
உங்களுக்குப் பிடித்திருப்பது மலேசியாவா? சென்னையா?
இரண்டும் பிடித்த இடங்கள்தான் என்றாலும் சென்னைக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். நடிப்பு என்பது எனக்கு உயிர் போன்றது. எப்போதும் நடித்துக் கொண்டிருக்கவே விரும்புகிறேன். அதற்கு ஏற்ற இடமாக சென்னைதான் இருக்கிறது. மலேசியாவில் அதற்கான வாய்ப்பு இல்லை.
இங்கு வந்த உடனே நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?
வந்தபிறகு ராதிகாவைச் சந்தித்தேன். அவருடைய ராடன் நிறுவனம் தயாரிக்கும் "சூர்யவம்சம், திருவிளையாடல்'களில் நடிக்க வேண்டும் என்றும் சொன்னார். நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"சித்தி'யில் இருந்து தொடர்ச்சியாய் ராதிகாவுடைய சீரியல்களில் நடிக்கக் காரணம்?
எங்கள் இருவர் குடும்பங்களுக்கும் இடையேயும் நல்ல நட்பு இருக்கிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு பெரிய நிறுவனத்தை திறமையாய் நடத்துவது உட்பட பல விஷயங்களில் எனக்கு ராதிகாவை ரொம்பப் பிடிக்கும். அவருடைய நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பிரமாதமாக நடிப்பார். சினிமாவிலும் அவரோடு சேர்ந்து நடித்திருக்கிறேன். "சித்தி' சீரியலில் கிடைத்த வரவேற்புக்குப் பிறகு தொடர்ச்சியாய் வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இரண்டு சீரியல்களிலும் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள்?
"சூர்யவம்சம்' சீரியலில் குடும்பப் பெண் வேடத்தில் நடிக்கிறேன். "திருவிளையாடல்' சீரியலில் இந்திராணி வேடத்தில் நடிக்கிறேன். இரண்டும் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்.
நீங்கள் நடிக்க விரும்புகிற கதாபாத்திரம் ஏதாவது இருக்கிறதா?
அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. இப்போது இந்திராணி வேடத்தில் நடிப்பதன் மூலம் அது நிறைவேறி இருப்பதாக எடுத்துக் கொள்கிறேன்.
சீரியல்கள் அனைத்திலும் பெண்களை வில்லத்தனம் நிறைந்தவர்களாகவே காட்டுகிறார்களே... அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வில்லத்தனமான பெண்களைக் காட்டினாலும் நல்லவிதமாய் இருக்கக்கூடிய ஹீரோயின் கதாபாத்திரத்தையும் காட்டுகிறார்கள். இருப்பினும் இப்படிக் காட்டுவதைக் காலத்தோடு பொருந்தாததாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கிற பெண்கள் நன்றாகப் படிக்கிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். அதன் காரணமாக இப்போது இருக்கிற பெண்களிடம் குறுகிய மனப்பான்மையையோ, பொறாமையையோ இருப்பதாக நான் கருதவில்லை. எல்லோரும் விசால மனம் படைத்தவர்களாகவே இருக்கிறார்கள்.
எல்லா நடிகைகளும் ஏதாவது ரியல் ஷோவைத் தொகுத்து வழங்குகிறார்கள். உங்களுக்குத் தொகுத்து வழங்க விருப்பமா?
இப்போதுதான் நான் சென்னை வந்திருக்கிறேன். தொகுத்து வழங்க வாய்ப்பு எதுவும் வரவில்லை. கிடைத்தால் செய்வேன்.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததா?
இல்லை. திருமணத்திற்கு முன்பு படங்களில் நடிப்பது என்பது வேறு. திருமணத்திற்கு பின்பு நடிப்பது என்பது வேறு. வணிகரீதியாகத்தான் படங்கள் எடுக்கிறார்கள். நடிக்க ஒத்துக்கொண்டால் இந்த டிரஸ் போடமாட்டேன்... அந்த டிரஸ் போடமாட்டேன் என்றெல்லாம் சொல்லமுடியாது. இதனால் எனக்கு ஏற்புடைய கதாபாத்திரத்தில் நடிப்பது என்கிற முடிவில் இருக்கிறேன்.
நடிப்பு தவிர வேறு ஏதாவது முயற்சியில் ஈடுபடுகிறீர்களா?
ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளது. ஆனால் இப்போது இல்லை. நிச்சயம் தயாரிப்பேன்.
"யுவ'ராணியாகவே எப்படி இருக்க முடிகிறது?
முன்பு கொஞ்சம் குண்டாக இருந்தேன். இப்போது குறைத்துவிட்டேன். அதற்காக ஜிம்முக்குப் போனேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் கண்ட்ரோலாக இருந்தேன், அவ்வளவுதான். குண்டாக இருந்தால் நமக்கே கஷ்டம்தானே!
No comments:
Post a Comment