Monday, May 19, 2008

மானாட...மயிலாட... சண்டை எப்போது?


"டான்ஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படுவதைவிட "அக்கா' என்று அழைப்பதையே விரும்புகிறேன். அக்கா என்பதிலேயே இடைவெளி இல்லாத நெருக்கம் இருக்கும்'' என்கிறார் கலா. மனோரமாவை திரையுலகில் ஆச்சி என்று அழைப்பது போல, நடன இயக்குனர் கலாவை எல்லோரும் அக்கா என்றே அழைக்கிறார்கள்!


"புதுப்புது அர்த்தங்கள்' படம் தொடங்கி ஆயிரத்து 350 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி உள்ள அவரை ஏவி.எம். ஸ்டூடியோவில் சந்தித்தோம்.


"ஆடத் தெரியாதவன் அரை மனிதன்' என்பதுபோன்ற ஒரு நிலை இப்போது ஏற்பட்டுள்ளதே?
இது வரவேற்கத்தக்க நிலை. சினிமா பாட்டுக்கு ஆடுவதை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிற நிலைதான் முன்பு இருந்தது. அடியோடு இப்போது மாறியிருக்கிறது. இதற்கு ஊடகங்களின் உறுதுணை முக்கிய காரணம். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. பரதம் ஆடுகிறவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கிறார்களோ, அதே அளவிற்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

வழிபாட்டுக்கு உரியவர்கள்போல் டான்ஸ் மாஸ்டர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். பெரிய நடிகர், நடிகைகளெல்லாம் கூட அவர்கள் காலில் விழுந்து வணங்குகிறார்களே?
எல்லோரும் இதைத் தவறாகப் பார்க்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது தவறில்லை. குருவிற்கு வணக்கம் செலுத்துவது போன்ற செய்கைதான். ஒவ்வொரு நாளும் நான் வீட்டிலிருந்து புறப்படும்போது நாட்டியக் கடவுளான நடராஜர் காலைத் தொட்டுக் கும்பிட்டுத்தான் கிளம்புவேன். அவருடைய நாட்டியத்தில் பாதியையாவது நான் கற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். அதேபோலத்தான் டான்ஸ் மாஸ்டர் காலைத் தொட்டு வணங்குகிறவர்களும் நினைக்கிறார்கள்


நடிகர், நடிகைகளால் போற்றப்பட்டாலும், பரதம் சொல்லிக் கொடுக்கிறவர்களுக்கு நிகரான மரியாதையை திரைப்படத் துறையில் நடனம் அமைக்கும் மாஸ்டர்களுக்கு சமூகம் கொடுக்கவில்லையே?
உண்மைதான். ஆனால், இந்த நிலை மாறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் பார்க்கப் போனால் பரதம் உட்பட எல்லா ஆட்டங்களையும்விட சினிமாவிற்கு ஆடுவதுதான் மிகவும் சிரமமானது.


மெல்லிசை பாடல்கள் போய் துள்ளல் இசை பாடல்களாக ஆனது போல சினிமா ஆட்டங்களும் அதிரடியாக இருக்கிறது. ஆட்டத்திற்கேற்ப பாட்டு மாறியதா? அல்லது பாட்டிற்கேற்ப ஆட்டம் மாறி இருக்கிறதா?
இசை, பாட்டிற்கேற்ப மாறிய மாற்றம்தான். கால மாற்றத்திற்கேற்பதான் எல்லாமே இருக்கும்.


ஆட்டம் என்ற பெயரில் பாடல்களில் ஆபாசம் வெளிப்படுத்துவதற்கு டான்ஸ் மாஸ்டர்கள்தான் காரணம் என்றால் ஒத்துக் கொள்வீர்களா?
பாடலைப் பொறுத்தவரை டான்ஸ் மாஸ்டர்கள் பங்களிப்பு அதிகம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆபாச ஆட்டங்களுக்கு டான்ஸ் மாஸ்டர்கள்தான் பொறுப்பு என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. இசை, பாடலுக்கேற்ப நாங்கள் ஓர் ஆட்டம் வைத்திருப்போம். அதை அப்படியே இயக்குநர்கள் அங்கீகரிப்பார்கள் என்று சொல்லமுடியாது. அவர்களுடைய விருப்பத்திற்கே கமர்ஷியலாக மாற்றி அமைக்கச் சொல்லுவார்கள்.
உதாரணத்துக்குச் சொல்கிறேன். "கொக்கரக்கர கிரிகிரி' பாடல். அதற்கு நான் ஒரு வகையில் நடன அசைவுகளை அமைத்திருந்தேன். அது இயக்குநருக்குப் பிடிக்கவில்லை. மாற்றி அமைக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியாக மும்தாஜ் காலைத் தூக்கி வைக்க, அவர் காலுக்கு அடியில் பிரசாந்த் புகுந்து வருவதுபோல மாற்றி அமைத்தேன். உடனே ஓ.கே. ஆகிவிட்டது. இந்தப் பாடலுக்கு வெகுவான பாராட்டு கிடைத்தது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.


கதாநாயகிகளைப் போல கதாநாயகர்களும் ஆடவேண்டும் என்பதாக மாறிவிட்டது. இதனை மாற்றியமைத்த பெருமை யாரைச் சாரும் என்று நினைக்கிறீர்கள்?
காலமாற்றத்தால் விளைந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதற்காக இப்போதுதான் நாயகர்கள் ஆடுகிறார்கள் என்று சொல்லமுடியாது. சந்திரபாபு சார், நாகேஷ் சார், ரவிச்சந்திரன், சிவக்குமார் என பலர் டான்ஸ் செய்திருக்கிறார்கள். இப்போது நகைச்சுவை நடிகர், வில்லன், கதாநாயகன் என எல்லாருமே ஆடவேண்டிய கட்டாயம் இருக்கிறது.


நீங்கள், உங்கள் தங்கை என ஒரு சிலரே இந்தத் துறையில் நிலைத்து இருக்கிறீர்கள். பெண்கள் இந்தத் துறைக்கு அதிகம் வருகிறார்களா?
பெண்கள் அதிகளவில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் நிலைத்திருக்க விரும்புவதில்லை. திருமணம் வரைக்கும் இருப்போம் என்கிற நினைப்போடு வந்து போய்விடுகின்றனர். இந்தத் துறையில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். முன்புபோல இந்தத் துறைக்கு வந்தால் ஏழ்மையாகவே இருப்பார்கள் என்பதெல்லாம் இல்லை.


ஒரு பாடலுக்கான ஆட்டத்தை நடிகர்களை வைத்து தீர்மானிப்பீர்களா? அல்லது தீர்மானித்ததற்கேற்ப நடிகர்களை ஆட வைப்பீர்களா?
நடிகர்களுக்கேற்ப தீர்மானிப்பதுதான் என்னுடைய ஸ்டைல். அப்படித் தீர்மானித்தால்தான் நடிகர்களால் ஆடமுடியும். பிரபுதேவா ஆட்டத்தை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. யாராருக்கு எப்படி ஆடமுடியுமோ அப்படிக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.


நன்றாக ஆடக்கூடியவர்களாக நீங்கள் கருதும் நடிகை, நடிகர்?
நடிகை சிம்ரன். பிரமாதமா ஆடுவா. ரம்பா ஹிப் மூவ்மெண்ட் சூப்பரா செய்வா. உணர்ச்சியை வெளிப்படுத்தி ஆடுவதில் ஜோதிகா. நடிகர்களை இப்படி வரையறுக்க முடியாது. விஜய், அஜித், சூர்யா என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும்.


"மானாட.. மயிலாட' நிகழ்ச்சியில் ஆர்த்தியைச் சேர்க்க எப்படி முடிவு எடுத்தீர்கள். முன்பே அவர் ஆடுவார் எனத் தெரியுமா?
குண்டாக இருப்பதற்கும் ஆடுவதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் யார் வேண்டுமானாலும் ஆடலாம். ஆர்த்தியைத் தேர்வு செய்தபோது, "அவர் எப்படி ஆடுவார்?' என்றுதான் எல்லோரும் கேட்டார்கள். ஆனால், இப்போது பார்க்கிறபோது அவரைப்போல உணர்ச்சியை வெளிப்படுத்தி ஆடுவதற்கு யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரபு அண்ணன் குண்டாகத்தான் இருக்கிறார். அவர் ஆடவில்லையா?... குஷ்பு. என்ன ஆட்டம் ஆடுகிறார். எனவே ஆடுவதற்கு மனம்தான் தேவை.


இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இடம்பெறும் ஜட்ஜ்களிடையே சண்டை நடப்பது இப்போதைய ட்ரென்ட். உங்கள் மூவரிடையே எப்போது சண்டை?
டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக சிலர் இப்படிச் செய்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு நான்தான் இயக்குனர். என் நிகழ்ச்சியில் இந்த ஏமாற்று செய்கை இருக் காது. குஷ்பு, ரம்பா, நான் மூவருமே நல்ல தோழிகள். எங்களிடையே சண்டையே வராது!


ஜட்ஜ் என்றால் கறாராக இருக்க வேண்டாமா? இரக்கப்பட்டுக் கொடுப்பது போல பத்து மதிப்பெண்களை ரம்பா அடிக்கடி வழங்குகிறாரே?
ஷூட்டிங்கிற்கு வருவது வீட்டிற்குப் போவது என்று வளர்ந்த பெண் ரம்பா. அவருக்கு வெளி உலகம் தெரியாது. யாரும் தோற்பதை அவர் விரும்பவில்லை. தோற்றுப் போகிறவர்களுக்குக்கூட அவருடைய சொந்த செலவில் பரிசு கொடுப்பவர். வேறு யாரும் அப்படிக் கொடுப்பதில்லை. இப்போது கறாராகத்தான் கொடுக்கிறார்.

2 comments:

PPattian said...

எல்லாம் சரி.. ஆனா, டான்ஸே ஆடாம ஆர்த்தியும் கணேசும் சும்மா பாவ்லா காட்டியே 10ம், 9ம் வாங்குவது, கடினப்பட்டு குழுவோட ஆடி 8ம், 7ம் வாங்கும் மற்ற போட்டியாளர்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் சும்ம்மா கண்துடைப்புதாங்க..

கிரி said...

//பரதம் உட்பட எல்லா ஆட்டங்களையும்விட சினிமாவிற்கு ஆடுவதுதான் மிகவும் சிரமமானது//

நான் அவ்வாறு கருதவில்லை. திரை துறையில் நாட்டியம் தெரியாதவர்கள் கூட எப்படியாவது கேமரா உதவியுடன் ஒப்பேற்ற முடியும்.

பரதம் போன்ற கலைகளில் முறையான பயிற்ச்சி இருந்தால் மட்டுமே ஆட முடியும். சும்மா ஜங் ஜங்குன்னு குதிப்பதெல்லாம் நடனம் ஆகி விடுமா?