Monday, March 22, 2010

ஜூலியோ கொத்தஸார் சிறுகதை


ஜூலியோ கொத்தஸார்
1940-ஆம் ஆண்டு கோடையில் ஒரு மதியம். புயனஸ் அயர்ஸிலிருந்து ரகசியமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியரை ஓர் இளைஞன் சந்திக்கிறான். அவனுடைய முதல் சிறுகதையை அவரிடம் கொடுக்கிறான். இதழ் ஆசிரியர் பத்து தினங்கள் கழித்து வந்து அவரைப் பார்க்கும்படிச் சொல்கிறார். பத்து தினங்கள் கழித்து இளைஞன் மீண்டும் வருகிறான். இதழ் ஆசிரியர் கதை பிடித்திருப்பதாகவும், அச்சுக்குக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார். 'ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடு' என்னும் தலைப்பைக் கொண்டுள்ள அச்சிறுகதை நோரா போர்ஹஸின் கோட்டோவியங்களோடு அவ்விதழில் பிரசுரமாகிறது. வருடங்களுக்குப் பிறகு அவ்விதழ் ஆசிரியரைச் சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை வேண்டி அந்த இளைஞன் அணுகுகிறான். அப்போது அக்கதையைப் பிரசுரித்ததற்கான காரணத்தை அவ்விதழ் ஆசிரியர் எழுதுகிறார். அச்சிறுகதையைப் பிரசுரித்த இதழ் ஆசிரியர் பெயர்: ஜோர்ஜ் லூயி போர்ஹே. அந்த இளைஞனின் பெயர் ஜூலியோ கொத்தஸார். இங்கு பிரசுரமாகியுள்ள இச்சிறுகதை ஜூலியோ கொத்தஸாரின் Blow up and other stories என்னும் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடு

ஜூலியோ கொத்தஸார்

தமிழில்: ராஜகோபால்


நாங்கள் அந்த வீட்டை விரும்பினோம், ஏனெனில் அதன் பழைமையும் விஸ்தாரமான இடமும் நீங்கலாக, அது (இப்பொழுதெல்லாம் பழைய வீடுகளின் கட்டுமானப் பொருட்கள் ஏலத்தில் அதிக விலைக்குப் போகின்றன) எங்களுடைய முன்னோரின், தந்தை வழி பாட்டனாரின், பெற்றோரின், எங்களுடைய குழந்தைப் பருவ ஞாபகங்களைத் தன்னுள்ளே கொண்டிருந்தது.
ஒருவருடைய வழியில் மற்றவர் குறுக்கிடாமல் எட்டு மனிதர்கள் வரை தாராளமாகப் புழங்கும் வசதியுடைய வீடு அது. அதில்தான் நானும் ஐரினும் வசிக்கப் பழகியிருந்தோம். உண்மையில் அது வினோதமானதே. காலையில் ஏழு மணிக்கு விழித்தெழும் நாங்கள் வீட்டைத் துப்புரவு செய்யத் தொடங்குவோம். பதினோரு வாக்கில் சுத்தம் செய்யப்படாத அறைகளை ஐரினிரின் பொறுப்பில் விட்டுவிட்டு நான் சமையலறைக்குச் செல்வேன். துல்லியமாக மதியம் பன்னிரெண்டு மணிக்கு நாங்கள் மதிய உணவிற்கு அமருவோம். பின, கழுவ வேண்டிய சில எச்சில் தட்டுகளைத் தவிர பிற வேலையேதும் மிஞ்சியிருக்காது. வெறுமை சூழ்ந்து, அமைதி தவழும் அவ்வீட்டோடு உறவாடியபடி உணவருந்துவது எங்களுக்கு உவப்பான விஷயம். மேலும், அவ்வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் எங்களுக்கு எளிதாகத்தான் இருந்தது. எது எங்களைத் திருமணம் செய்துகொள்ளவிடாமல் தடுத்தது என்று யோசிக்கும் வேளையிலெல்லாம் நாங்கள் யோசிப்பதை நிறுத்திக்கொள்வோம். ஐரின், குறிப்பிடத்தக்க காரணங்கள் ஏதுமின்றி இரண்டு காதலர்களை நிராகரித்திருந்தாள். என்னை விட்டுச்சென்ற மரியா எஸ்தரோ, நாங்கள் ஒருவாறு சமாளித்து நிச்சயம் கொள்வதற்கு முன்னமே என் கரங்களில் மரித்தாள். எங்கள் முன்னோர்களால் நிறுவப்பட்ட குலத்தொடர்ச்சி உடைய இவ்வீட்டில் பகிர இயலாத மெüனம் நிறைந்து வழிந்தது. முதலில் தங்கை தமையனான எங்களுடைய எளிய திருமணத்தின் மூலம் இந்த மெüனம் முடிவுற்றுவிடும் என்ற எண்ணம் எங்களுக்கு நிலவியது. ஆனால் நாங்களோ சோர்வுற்றபடி நாற்பதுகளில் நகர்ந்துகொண்டிருந்தோம். என்றேனும் நாங்கள் மரிக்கலாம்; நாங்கள் அறியாத எங்கள் தூரத்து உறவினர்கள் இவ்விடத்தை மரபுரிமையாகப் பெற்று, இவ்விடத்தைச் சிதைத்து, செங்கற்களை விற்று, இம்மனையின் மூலம் வசதி பெறலாம் அல்லது நாங்களேகூட இதைச் சிறப்பாகச் சிதைத்து விற்கலாம்.
ஐரின் எவரையும் தொந்தரவு செய்வதில்லை. காலையில் வீட்டு வேலைகள் முடிந்தவுடன் எஞ்சிய மணித்துளிகளைப் படுக்கறையில் உள்ள சாய்விருக்கையில் அமர்ந்தவாறு பின்னல் வேலையில் ஈடுபட்டபடி கழிக்கத் தொடங்குவாள். அவள் ஏன் பின்னல் வேலையில் அதிகம் ஈடுபட்டாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. செய்வதற்கு வேலைகள் ஒன்றும் இல்லாதபோது இது பெரிய தப்பித்தலாக இருப்பதைப் பெண்கள் கண்டறிந்திருக்கலாம். ஆனால் அவள் அப்படிப்பட்ட பெண் அல்ல. தேவைகளின் பொருட்டே குளிர்காலத்துக்கு ஏற்ற கம்பளிகள், கால் உறைகள், காலையில் அணிவதற்கு ஏற்ற மேலங்கிகள், அவளுக்கென்று சில படுக்கை உறைகள் போன்றவற்றை நெய்து வந்தாள். சில சமயம் அவள் மேலங்கி ஒன்று பின்னத் தொடங்குவாள். மனதிற்கு உவப்பற்ற விஷயத்தை அதில் பார்த்தவுடன் நெய்வதை நிறுத்திவிடுவாள். போரில் தோல்வியைடந்ததுபோல் குவியலாக காட்சியளிக்கும் அந்தக் கம்பளியிழைகள் அதன் மெய் உருவை அடைவதற்கு முயன்றுகொண்டிருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கும். சனிக்கிழமைகளில் நான் கம்பளியிழைகள் வாங்குவதற்கு வெளியில் செல்வது வழக்கம். ஐரினுக்கு என்னுடைய ரசனைகளில் மிகுந்த நம்பிக்கை இருந்தது. நான் தேர்ந்தெடுத்த வண்ணங்கள் அவளுடைய மனத்திற்கு உவப்பூட்டியுள்ளதால் நான் ஒரு நூற்கண்டைக் கூடத் திருப்பியளிக்க நேர்ந்ததில்லை. இப்படி வெளியில் செல்வதைப் பயன்படுத்தி புத்தகங்கள் ஏதேனும் அவர்களிடம் உள்ளதா என்று கேட்பதும் என்னுடைய வழக்கமாக இருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தி ஒன்பதுக்குப் பிறகு அர்ஜென்டினாவிலிருந்து குறிப்பிடும்படியாக ஒன்றும் வெளிவரவில்லை.
ஆனால் இவ்வீட்டைப் பற்றித்தான் நான் பேச விரும்புகிறேன். குறிப்பாக ஐரின் பற்றியும் வீடு பற்றியுமே. இங்கு நான் முக்கியமில்ல. இப்பின்னல் வேலைகள் இல்லையென்றால் ஐரின் என்ன செய்திருப்பாள்? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒரு புத்தகத்தை ஒருவரால் திரும்பவும் வாசிக்க முடியும். ஆனால், ஒரு கம்பளிச் சட்டையைப் பின்னி முடித்த பிறகு அதை மீண்டும் பின்ன இயலாதே. இயலுமாயின் அது ஒருவகை மடத்தனமே. ஒருநாள், நிலைப்பெட்டியின் கீழ் அடுக்கு கற்பூர உருண்டைகளாலும் பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு நிற சால்வைகளாலும் நிறைந்து கிடப்பதைப் பார்த்தேன். கற்பூர வாசனைக்கு மத்தியில் அவை குவியலாகக் கிடந்ததைப் பார்த்தபோது அதுவொரு கடைபோல் காட்சியளித்தது. இவற்றைக் கொண்டு அவள் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாள் என்பதைக் கேட்கும் துணிச்சலை நான் இழந்திருந்தேன். நாங்களோ பொருள் ஈட்ட வேண்டிய அவசியமற்று இருந்தோம். ஒவ்வொரு மாதமும் பண்ணையிலிருந்து அதிக வருமானம் வந்துகொண்டிருந்தது. பணமும் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. ஆனால் ஐரினோ பின்னல் வேலையில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தாள். அவளிடம் அசாத்தியத் திறமையிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே என் நேரம் கழிந்து கொண்டிருந்தது. குறும்புக்காரச் சிறுவனை ஒத்த வெண்ணிறக் கைகளும் , பிரகாசமான ஊசிகளும் தரையில் கிடக்கும் ஓரிரு பின்னற் கூடைகளும், உருண்டோடும் நூலிழைகளும் பார்ப்பதற்குக் கவித்துவமானதுதான் இல்லையா?
அவ்வீட்டின் வடிவமைப்பை எப்படி நினைவுகூராமல் இருக்க முடியும்? சமையலறை, திரைச்சீலைகளோடு கூடிய வரவேற்பறை, மற்றும் ஒரு நூலகம். பின்கட்டிலுள்ள மூன்று படுக்கையறைகளில் ஒன்று ரோட்டி ரிகிஸ் பினோவைப் பார்த்திருக்கும். நடைக்கூடத்திலுள்ள பெரிய கருவாலி மரக் கதவு வாயிற் முகப்பை அவ்விடத்திலிருந்து பிரிக்கும். முன்கட்டில்தான் குளியலறை, சமையலறை, கூடம் மற்றும் எங்களுடைய படுக்கையறைகள் அமைந்துள்ளன. இனாமல் பூச்சு கொண்ட, டைல்கள் பதிக்கப்பட்ட முன்னறையின் வழியாக ஒருவர் மெல்லிரும்பு கொண்ட கிராதிக் கதவு தம்மை வரவேற்பறைக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க முடியும். முன்னறையின் வழியாக நுழைந்து வரவேற்பறையைக் கடந்தால் எங்கள் படுக்கையறைகளுக்குச் செல்லும் கதவுகளை இருபுறத்திலும் பார்க்கலாம். அதற்கு எதிர்ப்புறத்திலுள்ள நடைக்கூடம் வீட்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்லும். அந்நடைக்கூடம் வழியாகவே சென்று எதிர்ப்படும் கருவாலி மரக் கதவைத் திறந்தால் வீட்டின் மற்றொரு பகுதிக்குச் சென்றடைந்துவிடலாம். அக்கதவிற்குச் சற்றுமுன் தென்படும் இடப்புற வழி சமையலறைக்கும் குளியலறைக்கும் இட்டுச் செல்லும். அக்கதவு திறந்திருக்கும்பொழுதுதான் வீட்டின் விஸ்தீரணத்தை ஒருவரால் உணரமுடியும். அக்கதவு மூடியிருப்பின் இப்போதெல்லாம் கட்டப்படுகிற, நகருவதற்குப் போதுமான அறைகள் அற்ற அடுக்குமாடிக் குடியிருப்பை ஞாபகமூட்டும். ஐரினும் நானும் வீட்டின் இப்பகுதியில்தான் எப்போது வசித்து வந்தோம். அரிதாகத்தான் இக்கருவாலி மரக்கதவைத் தாண்டியச் செல்வோம்; அதுவும்கூட இடத்தைச் சுத்தம் செய்வதற்காகத்தான். தட்டுமுட்டுச் சாமான்களில் படியும் தூசியின் அளவு நம்ப முடியாத அளவிற்கு இருக்கும். புயனஸ் அயர்ஸ் சுத்தமான நகரமாக இருக்கலாம். அது மக்கள் தொகையோடு சரி. காற்றில் தூசி நிரம்பி வழிகிறது. சலைவக் கல் தளத்தின் மேற்புறத்திலும்; வைர வடிவங்கொண்ட தோற்கருவியினால் ஆன மேஜைத் தொகுதியின் மேற்புறத்திலும் மெல்லிய இளங்காற்றானது தூசியை வாரி இறைக்கிறது. சிறகுகளாலான துடைப்பானைக் கொண்டு இவற்றைச் சுத்தம் செய்வதற்கு மிகுந்த உழைப்பு தேவைப்படும். காற்றில் தூசிகள் மேலெழுந்து பறக்கும். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பியோனோவின் மேலும் தட்டுமுட்டுச் சாமான்களின் மேலும் தூசி படிந்துவிடும்.
இப்படிப்பட்ட ஞாபகங்கள் எப்போதும் என்னிடம் உண்டு. காரணம் இவை எவ்வித அமளியும் இல்லாமல் எளிதாக நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. ஐரின் அவளுடைய படுக்கையறையில் இருந்தவாறு பின்னிக்கொண்டிருந்தாள். அப்போது இரவு எட்டு மணியிருக்கும். திடீரென்று "மாட்' பானம் அருந்தலாம் என்று தீர்மானித்தேன். மாட் பானம் தயாரிக்க தண்ணீர் தேவைப்பட்டது. நடைக்கூடம் வழியாக கருவாலி மரக்கதவு நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவு சிறிது திறந்திருந்தது. கூடத்தில் நுழைந்து சமையலறை நோக்கி நூலகத்திலிருந்தோ சமையலறையிலிருந்தோ சப்தம் கேட்கும் மட்டும் நடந்துகொண்டிருந்தேன்; ஒரு நாற்காலி கார்பெட்டின் மேல் நகர்த்தப்படுவதுபோல அல்லது கீழ்ஸ்தாயியில் முணுமுணுக்கப்படும் ஓர் உரையாடல் போலவோ அச்சப்தம் தெளிவற்றுக் கேட்டது. அந்நேரமோ அல்லது அந்நேரத்திற்குப் பிறகோ அவ்விரண்டு அறைகளிலிருந்தும் விலகிக் கதவை நோக்கிச் செல்லும் நடைக்கூடத்தின் முடிவில் அதை நான் மீண்டும் கேட்டேன். உடன் என்னையே கதவிற்கு எதிராக எறிந்துகொண்டு, உடல் எடையின் துணைகொண்டு கதவைச் சாத்தி மூடினேன். அதிர்ஷ்டவசமாக சாவி எங்களுடைய பகுதியிலிருந்தது. மேலும் பாதுகாப்பின் பொருட்டு அவ்விடத்தில் பெரிய தாழ்ப்பாள் ஒன்றையும் போட்டேன்.
சமையலறைக்குத் திரும்பி கொதிகலத்தைக் கொதிக்கவிட்டு மாட் இலை வடிசலைத் தட்டில் வடித்தபடி அறைக்குத் திரும்பியபோது நான் ஐரினிடம் சொன்னேன்:
""நடைகூடத்திற்குச் செல்லும் கதவை மூட வேண்டியதாயிற்று. அவர்கள் பின்கட்டை ஆக்கிரமித்துவிட்டார்கள்.''
பின்னல் வேலையைக் கைவிட்டவள் சோர்வுற்ற கூர்மையான கண்களால் என்னைப் பார்த்தாள்.
""உறுதியாகத் தெரியுமா?''
ஆமோதித்தேன்
""அப்படியென்றால் ...?'' ஊசிகளைத் திரும்பவும் எடுத்தவள்,
""இனி இப்பகுதியில் தான் நாம் வாழ வேண்டும்'' என்றாள்.
மிகுந்த கவனத்தோடு மாட் பானத்தைப் பருகத் தொடங்கினேன். ஆனால் அவளோ வேலையை மீண்டும் தொடங்கியிருந்தாள். ஒரு சாம்பல் நிறச் சட்டையை அவள் பின்னிக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. அச்சட்டையை நான் மிகவும் விரும்பினேன்.
முதலில் ஒரு சில தினங்கள் துயரம் தருவதாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் இருவரும் பல பொருட்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் விட்டுவிட்டு வந்திருந்தோம். உதாரணத்திற்கு என்னுடைய பிரெஞ்சு இலக்கியத் தொகுதிகள் அந்நூலகத்தில்தான் இருக்கின்றன. ஐரினோ பல பொருட்களோடு, அவளுடைய ஒரு ஜோடிக் காலணிகளையும் விட்டுவிட்டு வந்துவிட்டாள். பனிக்காலத்தில் அவற்றைத் தான் அவள் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். நான் காட்டு ரோஜாவில் செய்யப்பட்ட புகைக் குழாயை இழந்ததற்கும் ஐரின் பழைமையேறி ஹேஸ் பிரிடின் குப்பியை இழந்ததற்குமாக வருந்திக்கொண்டிருந்தோம். இவை தொடர்ச்சியாக நிகழத் தொடங்கியது. (ஆனால், முதல் ஒரு சில தினங்கள் மட்டுமே இவை நிகழ்ந்தன.) நாங்கள் ஏதேனும் மேஜையையோ, இழுப்பறை பெட்டியையோ மூடும்போது ஒருவரை ஒருவர் சோகத்தோடு பார்த்துக்கொள்வது வழக்கமாயிற்று.


""இது இங்கில்லை''
நாங்கள் இழந்தவற்றோடு மேலும் ஒன்று சேர்ந்துகொள்ளும். ஆனால் இதிலும் சில அனுகூலங்கள் இருந்தன. வீட்டைச் சுத்தம் செய்வது எளிதாயிற்று. நாங்கள் நேரம் கழித்து விழித்தெழுந்தாலும்... உதாரணத்திற்கு ஒன்பதரை மணிக்கு அல்லது பதினோரு மணிக்கு எழுந்தாலும் கைகளைக் கட்டியபடி வெறுமனே உட்கார்ந்திருப்போம். ஐரின் மதிய உணவு தயாரிக்க உதவும்பொருட்டு என்னோடு சமையலறைக்கு வரத் தொடங்கினாள். நாங்கள் சிலவற்றைப் பற்றி ஆலோசித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தோம். நான் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருக்கும்போது, மாலையில் நாங்கள் உணவு அருந்துவதற்கு ஏற்ற உணவு வகைகளை ஐரின் தயாரிக்க வேண்டும். இவ்வேற்பாட்டின் வழி எங்களுக்கு மகிழ்ச்சி திரும்பியது. காரணம், சாயுங்கால வேளைகளில் படுக்கையறைகளை விட்டுவந்து சமைக்கத் தொடங்குவது எப்போதும் தொல்லை தருவதாகவே இருந்தது. இப்போது ஐரினின் அறையிலுள்ள மேஜையில்தான் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான விஷயங்களால் ஐரினின் பின்னல் வேலைகளுக்கு அதிக நேரம் கிடைத்தது. அவன் மனநிறைவோடிருந்தாள். என்னுடைய புத்தகங்களால் சிறிது ஈர்ப்புணர்விற்கு நான் ஆட்பட்டிருந்தேன். இருப்பினும் அவற்றை என் சகோதரியின் மீது திணிக்கவில்லை. என் தந்தையுடைய தபால்தலைச் சேகரிப்புகளை ஒழுங்குபடுத்தத் தொடங்கினேன். அது என்னுடைய நேரத்தைக் கொல்லத் தொடங்கியது. அதிக வசதிகளை உடைய ஐரினின் படுக்கையறையில் நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கு ஒருவர் அவரவர் பிரத்யேக விஷயங்களால் மனநிறைவு அடையும்படி எங்களுக்கு நாங்களே மகிழ்ச்சியூட்டிக் கொண்டோம். எப்போதாவது ஐரின் இப்படிச் சொல்வாள்:
""இந்த வடிவத்தைப் பார், இப்போதுதான் கண்டுபிடித்தேன். இது கிளாவர் போல் இருக்கிறது இல்லையா?''
ஓரிரு கணங்களுக்குப் பின், சிறிய சதுர வடிவக் காகிதத்தை அவள் முன் தள்ளுவேன். அதன் வழி ஏதேனும் ஒரு ஸ்டாம்பையோ அல்லது யுப்பன் இட் மல்மேடிலிருந்தோ வந்த மற்றொன்றின் சிறப்பையோ அவள் பார்ப்பாள். நாங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம்.சிறிது சிறிதாக, சிந்திப்பதை நிறுத்திக்கொண்டோம். சிந்திக்காமலும் உங்களால் வாழ முடியுமே.
(எப்போதெல்லாம் ஐரின் உறக்கத்தில் முணுமுணுக்கத் தொடங்குகிறாளோ அப்போதெல்லாம் நான் உடன் விழித்துக்கொள்கிறேன். பின் விழித்தபடிதான் நேரம் கழியும். தொண்டையில் இருந்தல்ல கிளியிடமிருந்தோ சிலையிடமிருந்தோ வெளிப்படும் ஒரு குரலிற்கு அல்லது கனவிலிருந்து வெளிப்படும் ஒரு குரலிற்கோ நான் பழக்கப்பட்டவன் அல்லன். ஐரினோ, உறக்கத்தில் நான் கட்டிலையும் படுக்கை விரிப்புகளையும் அபரிமிதமாக உலுக்குவதாகத் தெரிவிக்கிறாள். எங்களுக்கிடையில் வரவேற்பறை ஒன்று இருந்தபோதும் எங்களால் வீட்டில் நிகழும் யாவற்றையும் கேட்க முடிகிறது. இருவராலும் உறங்க முடிவதில்லை என்பதால் ஒருவருக்கு ஒருவர் மற்றவரின் சுவாசத்தையும் இருமலையும் வெளிச்சம் வேண்டி ஒருவர் விளக்கு போடச் செல்வத்தையும் பார்க்க முடிகிறது.
இரவிற்குரிய சப்தங்களைத் தவிர்த்துவிட்டால் வீடானது அமைதியோடிக் கிடக்கும். பகலிலோ, ஒரு வீட்டிற்குரிய சப்தங்களோடு பின்னல் வேலையில் ஈடுபடும் உலோக ஊசியின் சப்தம், ஸ்டாம்பு ஆல்பத்தைப் புரட்டுவதால் ஏற்படும் சலசலப்பொலி போன்றவற்றை ஒருவரால் கேட்க இயலும். அந்தக் கருவாலி மரக் கதவோ மிகப் பெரியது. இதை முன்பே உங்களிடம் தெரிவிக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை ஒட்டியுள்ள சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ நாங்கள் உரக்கப் பேச முற்படுவது வழக்கம். ஐரின் தாலாட்டுப் பாடல்களைப் பாடத் தொடங்குவாள். எப்போதும் அதிக சப்தங்களால் நிறைந்திருக்கும் சமையலறையில், தட்டுகளின், குவளைகளின் சப்தங்களோடு பிற சப்தங்களின் குறுக்கீடும் இருக்கும். அபூர்வமாகத்தான் நாங்களும் அங்கு மெüனத்தைக் கைக்கொள்வோம். ஆனால் எங்கள் அறைகளுக்கோ வரவேற்பறைக்கோ திரும்பும் சமயம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தோடு மிக மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து நடக்கும்போது மங்கிய வெளிச்சத்தில் வீடு அமைதியில் மூழ்கிக் கிடக்கும். ஐரின் அவளுடைய உறக்கத்தில் முணுமுணுக்கத் தொடங்கியவுடன் தவிர்க்க இயலாமல் நான் விழித்துக்கொள்கிறேன்.)
விளைவுகளைத் தவிர்த்துவிட்டால், இது ஒரே ஒரு காட்சி மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கு ஒப்பானதே. அன்றைய இரவில் நான் மிகுந்த தாகத்தோடு இருந்தேன். நாங்கள் உறங்கச் செல்வதற்கு முன் ஒரு குவளைத் தண்ணீருக்காகச் சமையலறைக்குப் போகிறேன் என்பதை ஐரினிடம் தெரிவித்தேன். படுக்கையறைக் கதவுக்கு அருகிலிருந்த (அவள் பின்னிக் கொண்டிருந்தாள்) சமலையலறையிலிருந்து ஒரு சப்தம் வெளிப்பட்டது. சமையலறையாக இல்லாவிடின் அது குளியலறையாக இருக்கலாம். நடைக் கூடத்தின் அமைப்பு, சப்தத்தைத் தெளிவற்றதாக்கி இருந்தது. திடீரென்று நான் தயங்கி நிற்பதை ஐரின் கவனித்தாள். சபதம் ஒன்றும் எழுப்பாமல் என்னருகில் வந்து நின்றாள். நாங்கள் அச்சப்தத்தைக் கவனிக்கத் தொடங்கினோம். எங்கள் பகுதியில் கருவாலி மரக் கதவிற்கு அருகில் அவர்கள் நிற்கிறார்கள் என்பதை ருசுப்படுத்துவதற்கு ஏற்ப சப்தம் மேலும்மேலும் வலுக்கத் தொடங்கியது. சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ அல்லது நடைக்கூடத்தின் வளைவிலோ நான் நின்று கொண்டிருந்தேன். ஏறக்குறைய எங்களுக்கு மிக அருகில்தான் அவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட அவகாசமில்லை. வலுக்கட்டாயமாக ஐரினின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு எஃகுக் கிராதிக் கதவை நோக்கி ஓடினேன். எங்களுக்குப் பின்னே உள்ளடங்கிய ஆனால் வலுத்த சப்தத்தை ஒருவரால் கேட்க முடியும். இரும்புக் கிராதியை அறைந்து சாத்தினேன். கூடத்திற்கு வந்த பிறகே நாங்கள் ஓட்டத்தை நிறுத்தினோம். இப்போது ஒன்றும் கேட்கவில்லை.
""அவர்கள் நம் பகுதியை ஆக்கிரமித்துவிட்டார்கள்'' என்றாள் ஐரின். பின்னற்கூடை அவளுடைய கைகளிலிருந்து நழுவி விழுந்தது. நூலிழைகள் கதவை நோக்கி ஓடி மறைந்தன. நூல் பந்துகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கிடப்பதைப் பார்த்த அவள், அவற்றைச் காணச் சகிக்காமல் பின்னுவதைக் கைவிட்டாள்.
""எதையேனும் எடுப்பதற்கு நேரம் உள்ளதா?'' நம்பிக்கையற்றவாறுதான் கேட்டேன்.
""இல்லை. ஒன்றுமில்லை.''
எங்கள் கைகளில் இருந்ததுதான் எங்களுக்கு மிஞ்சியது. என் படுக்கையறை அலமாரியில் பதினைந்தாயிரம் பிசோக்கள் இருந்ததை நினைகூர்ந்தேன். இப்போது நேரம் கடந்துவிட்டது.
மிஞ்சியிருந்த என் கைகடிகாரத்தைப் பார்த்தேன். மணி இரவு பதினொன்று ஆகிவிட்டிருந்தது. ஐரினின் இடையைச் சுற்றி அணைத்துக்கொண்டேன் (அவள் அழுதுகொண்டிருந்தாள் என்று நினைக்கிறேன்). இப்படித்தான் நாங்கள் தெருவுக்கு வந்து சேர்ந்தோம். அவ்விடத்தை விட்டுக் கிளம்பியபோது என் உடல் ஒரு கணம் நடுங்கியது. முன்கதவை இறுக்கமாகத் தாழிட்டுச் சாவியை சாக்கடையை நோக்கி எறிந்தேன். அந்நேரம் மட்டும் அப்படி ஒரு சாத்தான் நுழைந்து வீட்டை ஆக்கிரமித்துக்கொள்ளாவிட்டால் நான் இதைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது.


நூல்: இந்த நகரத்தில் திருடர்களே இல்லை (லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்) தமிழில்: ராஜகோபால். விலை ரூ.80

ஜோர்ஜ் லூயி போர்ஹே, கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ், ஃபிலிஸ் பெர்டோ ஹெர்னாண்டெஸ், ஜுலியோ ரோமன் ரிபியோரா, லூயிஸô வெலின்சுலா, ஆல்பெர்தோ சிம்மல் போன்றோர் சிறுகதைள் உள்ளடக்கிய நூல்.

வெளியீடு: நிழல்
12/28 இராணி அண்ணாநகர்
கே.கே.நகர்
சென்னை - 78
தொலைபேசி: 9444484868

Wednesday, March 10, 2010

அவனது இரகசியம்



யூரிப் நகீபின்

தமிழில்: க.சுப்பிரமணியம்



முதல் நாள் இரவில் கடும்பனி பெய்திருந்தது. ஆகவே உவாரவ்காவிலிருந்து பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குறுகிய நடைபாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரே ஓர் உருவம் மட்டுமே மங்கிய நிழல்போல் அதில் தென்பட்டது. வெகு எச்சரிக்கையுடன் ஆசிரியை அப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள். எங்கேயாவது பனிக்குவியலுக்குள் கால் புதைந்துவிடும்போல் தெரிந்தால், சடையுரோம ஓரங் கட்டிய சிறிய மேல்ஜோடுகளுக்குள்ளிருந்த தன் பாதத்தை உடனே பின்னால் இழுத்துக்கொள்வதற்குத் தயாராயிருந்தாள்.

ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் நடந்து செல்லும் தொலைவில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. எனவே அவள் குட்டையான உரோம மேல்சட்டை அணிந்து, மெல்லிய கம்பளிக் குட்டையால் தனது தலையை மூடியிருந்தாள். குளிர் கடுமையாக இருந்தது. வெண்பனிக் குவியல்களின் உச்சியில் புதிதாகப் பெய்திருந்த பனிச் சிதர்களைக் காற்று வாரி இறைக்கவே, அவை அவளது தலையிலிருந்து கால் வரை தெறித்தன. பள்ளி ஆசிரியை இருபத்து நான்கு வயதுள்ள யுவதி. ஆகவே, கன்னங்களையும், மூக்கையும் கிள்ளிய கடுங்குளிரும் மேல்சட்டையும் ஊடுருவிக்கொண்டு சுரீரென்று பாய்ந்த காற்றும் அவளுக்குப் பிடித்திருந்தன. காற்றின் புறமாக முதுகைத் திருப்பிக்கொண்டு, கூரிய நுனியுள்ள தனது மேல்ஜோடுகளின் நெருக்கமான அடிச்சுவடுகளைப் பார்த்தாள். அவை ஒரு பெரிய மிருகத்தின் காலடித் தடங்களைப் போன்றிருந்தன. அவையும் அவளது மனதிற்குப் பிடித்திருந்தன.

ஜனவரி மாதத்துக் காலையின் உற்சாகமூட்டும் ஒளி, வாழ்க்கையைப் பற்றியும், தன்னைப் பற்றியும் சந்தோஷமான எண்ணங்களை அவள் மனதில் எழுப்பியது. இரண்டு வருடங்களுக்கு முன்தான் அவள் கலாசாலைப் படிப்பை முடித்து ஆசிரியைத் தொழிலை மேற்கொண்டாள். அதற்குள்ளாகவே அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள ஆசிரியை என்று பெயர் பெற்றுவிட்டாள். உவாரவ்கா, குஸ்மீன்கி, சொர்னி யார் ஆகிய பக்கத்துக் குடியிருப்புகளிலுள்ள ஜனங்களுக்கு எல்லாம் அவளைத் தெரியும். அவர்கள் அவளை வெறுமே அன்னாவென்று அழைக்காமல், உயர்வாகவும் மரியாதையுடனும் அன்னா வசீலியெவ்னா*1என்று அழைத்தார்கள்.

தொலைவிலுள்ள காட்டின் ஒழுங்கற்ற விளிம்புகளுக்கு மேலே சூரியன் கிளம்பினான். அவனுடைய கதிர்கள் பனியின் மேல் தோன்றிய நீல நிழல்களை இன்னும் அதிக நீலமாகச் செய்தன. இந்த நிழல்கள் வெகு தூரத்திலிருந்த பொருள்களையும் ஒன்டொன்று இணைத்துக் காட்டின. பழங்கால மாதா கோவிலின் சிகரம் உவாரவ்கா கிராம சோவியத்தின் காரியாலய வாசல்வரை நீண்டு விளங்கியது. நதியின் எதிர்க் கரை மேலிருந்த பைன் மரங்களின் நிழல் இக்கரையின் சரிவின் மேலிருந்த பைன் மரங்களின் நிழல் இக்கரையின் சரிவின் மேல் தவழ்ந்து சென்றது. பள்ளிப் பருவநிலைக் கூடத்தின் மேலிருந்த காற்றுதிசை காட்டுக் கருவியின் நிழல், வயல் நடுவே வந்துகொண்டிருந்த அன்னா வசீலியெவ்னாவின் காலடியில் சுழன்று கொண்டிருந்தது.

வயலின் குறுக்கே எதிராக ஒரு மனிதன் வந்து கொண்டிருந்தான். "அவன் வழி விடாவிட்டால் என்ன செய்வது? எதிரெதிராக இரண்டு பேர் போக முடியாத, ஒடுக்கமான பாதையாயிற்றே. ஓர் அடி விலகினாலும் கழுத்தளவு பனியில் புதைய வேண்டியதுதான்' என்று அவள் விளையாட்டான பயத்துடன் நினைத்துக்கொண்டாள். அந்தச் சுற்று வட்டாரத்தில் அவளுக்கு வழிவிட மாட்டேன் என்று சொல்லும் ஒரு மனிதனும் கிடையாது என்பது அவளுக்குத் தெரியாமலில்லை.

அவர்கள் இருவரும் எதிர் எதிரே நெருங்கி விட்டனர். குதிரைப் பண்ணையில் பயிற்சியாளனாகவிருந்த பிரலோவ் என்பவன் அவன்.

""வணக்கம், அன்னா வசீலியெவ்னா!'' என்று தனது உரோமக் குல்லாயை எடுத்து அசைத்துக்கொண்டு, கட்டையாகக் கத்தரிக்கப்பட்டிருந்த அடர்த்தியான தலைமுடி தெரியும்படி நின்றான்.

"அடேடே, குல்லாயை ஏன் எடுத்துவிட்டீர்கள்? மிகக் குளிராயிருக்கிறது. உடனே போட்டுக் கொள்ளுங்கள்'' என்றாள் அவள்.

பிரேலோவுக்கும் குல்லாயைச் சட்டென்று போட்டுக்கொள்ள ஆவல்தான். ஆனால் இந்தக் குளிர் தனக்கு ஒரு பொருட்டில்லை என்று காட்டிக் கொள்வதற்காகச் சிறிது தாமதித்தான். அவனுடைய ஒற்றை நாடியான உடம்பிற்கு அவன் அணிந்திருந்த ஆட்டுத்தோல் மேல்சட்டை மிகப் பொருத்தமாயிருந்தது. தன்னுடைய வெள்ளை "வாலென்கி'*2 களை மெல்லிய பாம்பு போன்ற குதிரைச் சவுக்கால் அடித்துக்கொண்டு, ""எங்கள் லியோஷா எப்படியிருக்கிறான்? மிகவும் துஷ்டனத்தனம் செய்வதில்லை என்று நம்புகிறேன்'' என மிகவும் மரியாதையாகக் கேட்டான்.

"துஷ்டத்தனம் செய்யத்தான் செய்கிறான். ஆரோக்கியமாயுள்ள குழந்தைகள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். ஆயினும் அவர்கள் ஒரு கட்டிற்குள்ளிருக்கிறார்கள். அதை மீறுவதில்லை'' என்று ஆசிரியத் தொழிலின் நுட்பந் தெரிந்தவளாகப் பதிலளித்தாள் அவள்.

பிரலோவ் சிரித்துக்கொண்டான்.

"லியோஷா சாதுப்பையன், தகப்பனாரைப் போல'' என்றான்.

அவன் ஒரு பக்கம் விலகினானோ இல்லையோ, முழுங்கால் வரை வெண்பனியில் புதைந்து, சிறிய பள்ளிக்கூடப் பையன்போல் குட்டையாகிவிட்டான். அன்னா வசீலியெவ்னா அவனைப் பரிவுடன் நோக்கித் தலையசைத்துவிட்டுத் தன் வழியே போய்விட்டாள்.

இரண்டு மாடியுடைய பள்ளிக்கூடக் கட்டடம் ரஸ்தாவினருகே ஒரு தாழ்ந்த வேலிக்குப் பின்னால் இருந்தது. அதன் பெரிய ஜன்னல்கள் உறைபனியின் சித்திர வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. கட்டடத்தின் மேல் விழுந்த வெயில் ஒளியில் பிரதிபலித்த செங்கற் சுவரின் நிறம், சாலை வரை பனி மணலையும் செந்நிறமாய்க் காட்டியது. உவாரவ்காவிலிருந்து சிறிது தூரத்தில் இப்பள்ளிக்கூடம் கட்டப்பட்டிருந்தது. ஏனெனில் பக்கத்துக் கிராமங்கள், குதிரைப் பண்ணைக் குடியிருப்பு, எண்ணெய்த் தொழிலாளர் ஆரோக்கிய விடுதி, பீட் நிலக்கரி சேகரிக்கும் தொழிலாளிகளின் குடியிருப்பு ஆகிய இடங்களிருந்து சுற்றுப் பிரதேசத்திலுள்ள குழந்தைகள் எல்லாம் அங்குதான் படிக்க வந்தார்கள். அந்தப் பெரிய ரஸ்தாவின் இரு திசைகளிலிருந்தும் தலையங்கிகள், தலைக்குட்டைகள், குல்லாய்கள் காது மூடிகள் ஆகியவை அனைத்தும் பள்ளிக்கூட வாசலை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தன.

"வணக்கம், அன்னா வசீலியெவ்னா'' என்று அவர்களது வணக்க மொழிகள் முடிவற்ற நீரோடைபோல் கலகலத்தன. அவ்வார்த்தைகள் சில வேளைகளில் மணியொலியைப் போல் தெளிவாகவும், இன்னும் சில வேளைகளில் கழுத்திலிருந்த கண்வரை இறுக்கிச் சுற்றியிருந்த தலைக்குட்டைகளின் காரணமாகவும் மந்தமாகவும் கேட்டன.

அன்று அன்னா வசீலியெவ்னா ஐந்தாவது வகுப்பிற்கு முதலாவதாகப் பாடம் எடுக்க வேண்டும். பள்ளிக்கூட ஆரம்ப மணி அடித்த ஓசை அடங்கு முன்பே, அவள் வகுப்பு அறைக்குள் நுழைந்துவிட்டாள். மாணவர்கள் அனைவரும் ஒருங்கே எழுந்து வணக்கம் கூறிவிட்டு, மீண்டும் தங்கள் இடங்களில் அமர்ந்தனர். சத்தங்களெல்லாம் மெதுவாய் அடங்கின. சாய்வு மேஜைகளைப் "படார்' என்று மூடுவதும், பெஞ்சுகள் "கிரீச்' என்று ஓலமிடுவதும், யாரோ ஒருவன் தனது அருமையான, கவலையற்ற காலை நேரச் சுதந்திரத்திற்கு முடிவு வந்துவிட்டதே என்று வருத்தத்துடன் பெருமூச்சு விடுவதுமாகிய சத்தங்களெல்லாம் சிறிது சிறிதாக ஓய்ந்துவிட்டன.

"இன்று சொற்களின் வகையைப் பற்றிப் படிப்போம்...'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.

வகுப்பில் ஒரே நிசப்தம் குடிகொண்டது. ஒரு பெரிய லாரி ரஸ்தாவில் போய்க்கொண்டிருந்த உரத்த ஓசை வெகு தெளிவாய்க் கேட்டது.

சென்ற வருடத்தில் இப்பாடம் நடத்தும்போது, தான் எவ்வளவு பரபரப்புடன் இருந்தாள் என்பதை அன்னா வசீலியெவ்னா ஞாபகப்படுத்திக்கொண்டாள். பரீட்சை எழுதப் போகும் பள்ளிச் சிறுமியைப் போல் "பெயர்ச் சொல் என்பது பெயரைக் குறிக்கும்' என்று வாய்க்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததும், குழந்தைகள் இதைப் புரிந்துகொள்வார்களோ என்ற, வேதனை நிறைந்த ஒரு சந்தேகமும் அவளுக்கு நினைவு வந்தன.

பழைய நினைவு வந்ததும் ஒரு புன்சிரிப்பு அவள் முகத்தில் தவழ்ந்தது. தனது அடர்ந்த தலைமுடியில் செருகியிருந்த கொண்டையூசியைச் சரிப்படுத்திக் கொண்டாள். அமைதியுணர்ச்சி அவள் உள்ளம் முழுவதும் இதமான கதகதப்பைப் போல பரவியது. அடங்கிய குரலில் பாடத்தைத் தொடங்கினாள்.

"பெயர்சொல் என்பது ஒரு பொருளின் பெயரைக் குறிக்கும் சொல்லாகும். "யார் அது? அது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதிலாக வரக்கூடிய எந்தப் பொருளும், எந்த ஆளும் இலக்கணத்தில் பெயர்ச்சொல் என்று கூறப்படும் உதாரணமாக, "யார் அது?' "மாணவன்', அல்லது "அது என்ன?' - "புத்தகம்'...''





"நான் உள்ளே வரலாமா?''

பாதி திறந்திருந்த கதவின் பக்கம், குளிரில் அடிபட்டு, சீனிக் கிழங்கைப்போல் சிவந்து கிடந்த முகத்துடனும், பனித்தூசி படிந்த புருவங்களுடனும் ஒரு சிறிய உருவம் நின்று கொண்டிருந்தது. காலுக்குச் சற்றே பெரிதாயிருந்த "வாலென்கி'களுக்கு மேலே தங்கியிருந்த வெண்பனிச் சிதர்கள் உருகி ஒளியிழந்துகொண்டிருந்தன.

"மறுபடியும் நேரம் கழித்துத்தான் வருகிறாய், ஸôவுஷ்கின்?'' } அநேக இளம் ஆசிரியர்கள்போல் அன்னா வசீலியெவ்னாவும் கண்டிப்பாக இருக்க விரும்பினாள். ஆனால் இப்போது அவளுடைய கேள்வி பரிதாபம் மிகுந்து ஒலித்தது.

அவளது வார்த்தைகளைக் கேட்டதும், தனக்கு உள்ளே வர அனுமதி கிடைத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு, ஸôவுஷ்கின் விரைவில் தன்னுடைய இடத்திற்கு நழுவி விட்டான். சாய்வு மேஜையின் கீழ் அவன் தனது தோல் பைக்கட்டைத் தள்ளியதையும், தலையைத் தூக்காமல் அடுத்த பையனிடம் ""என்ன நடந்துகொண்டிருக்கிறது?'' என்று அவன் மெதுவாகக் கேட்டுக்கொண்டிருந்ததையும் அன்னா வசீலியெவ்னா கவனித்துவிட்டாள்.

ஸôவுஷ்கின் நேரம் கழித்து வந்தது அவளுக்குத் தடுமாற்றத்தையளித்தது. நன்றாக ஆரம்பித்திருந்த பாடத்தை அது கெடுத்துவிட்டது. இரவில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிபோன்று, வயதால் வாடிய தோற்றமுடைய பூகோள ஆசிரியையும்கூட ஸôவுஷ்கின் சரியாக வருவதில்லை என்பது பற்றிப் புகார் செய்திருந்தாள். வகுப்பில் கவனமின்மை, சத்தம் ஆகியவை பற்றியும் அவள் கூறியிருந்தாள்... ""பள்ளிக்கூடம் ஆரம்பித்ததும் பாடங்கள் தொடங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது' என்று அவள் பெருமூச்சு விடுவாள். "ஆம், பிள்ளைகளை அடக்கி வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும், பாடங்களைக் கவர்ச்சியுள்ளவையாகப் போதிக்கத் தெரியாதவர்களுக்கும் கஷ்டம்தான்' என்று அன்னா வசீலியெவ்னா தன்னம்பிக்கையுடன் எண்ணியிருந்தாள். அவ்வாசிரியையுடன் பாடங்களை மாற்றிக்கொள்வதாகக் கூடச் சொல்லியிருந்தாள். இப்பொழுது, தான் அவ்வயது சென்ற ஆசிரியையிடம் கூறியது தவறு என்று அவளுக்குப்பட்டது. ஏனென்றால் தான் சகஜமாகப் பேசிய அவ்வார்த்தைகள் அவளைப் போட்டிக்கிழுப்பது போலவும், கண்டிப்பதுபோலவும் அந்த ஆசிரியைக்குத் தோன்றியிருக்கும் அல்லவா?

"தெரிந்துகொண்டீர்களா?'' என்று அன்னா வசீலியெவ்னா குழந்தைகளைக் கேட்டாள்.

"தெரிந்துகொண்டோம்'' என்று பலரும் ஒருமித்துக் கிளப்பிய குரல் கேட்டது.

"நல்லது, அப்படியானால் நீங்களே உதாரணங்கள் கொடுங்கள், பார்க்கலாம்.''

ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை. பிறகு யாரோ தயக்கத்தோடு ""பூனை'' என்று சொன்னான்.

"நீ சொல்லியது சரி'' என்றாள் அன்னா வசீலியெவ்னா. சென்ற வருடமும் குழந்தைகள் முதலில் ""பூனை'' என்றே சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. இவ்வாறு முதல் ஆரம்பம் ஆகிவிட்டது.

"ஜன்னல், மேஜை, வீடு, ரஸ்தா'' என்று குழந்தைகள் சொல்லிக்கொண்டு போனார்கள். "சரி, சரி'' என்று அன்னா வசீலியெவ்னா தொடர்ந்து சொல்லி வந்தாள்.

மிகுந்த குதூகலத்துடன் விளங்கியது வகுப்பு. பழக்கமான பொருள்களின் பெயர்களைச் சொல்வதில் குழந்தைகள் எவ்வளவு சந்தோஷம் அடைகின்றனர் என்பதை வியப்போடு அவள் அறிந்துகொண்டாள். இந்தப் பொருள்களைக் குழந்தைகள் இதற்கு முன் கண்டிராத ஒரு புதிய நோக்குடன் காண்பதுபோல் அவளுக்குப் புலப்பட்டது. மேலும் பல பொருள்களின் பெயர்களை அவர்கள் சொல்லி வந்தார்கள். முதல் சில நிமிடங்கள் மிகவும் பழகிய பொருள்கள், சாமான்களின் பெயர்களே வந்தன, "சக்கரம், டிராக்டர், கிணறு, பறவைக்கூடு'' என்று.

கடைசிச் சாய்வு மேஜையிலிருந்த கொழுத்த வாஸ்யா ""ஆணி, ஆணி'' என்று கீச்சுக்குரலில் மீண்டும், மீண்டும் பிடிவாதமாகக் கத்தினான்.

பிறகு யாரோ சிறிது பயத்துடன், "நகரம்'' என்றான்.

"சரி'' என்று அதை அங்கீகரித்தாள் அவள். பனிக்கட்டி மழை போன்று விரைவில் கேட்டன, ""தெரு, பாதாள ரயில், டிராம் வண்டி, சினிமா'' என்ற சொற்கள்.

"போதும், உங்களுக்குப் புரிந்துவிட்டது'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.

ஓரளவு தயக்கத்துடன் சத்தமெல்லாம் ஓய்ந்தது. கட்டுக்கட்டான வாஸ்யா மட்டுமே இன்னும் அங்கீகரிக்கப்படாமலிருந்த தனது "ஆணியை' உச்சரித்துக்கொண்டிருந்தான். திடீரென்று ஸôவுஷ்கின் கனவிலிருந்து விழித்தவன்போல் எழுந்து நின்று கணீரென்று ஒலிக்கும் குரலில், "பனிக்கால "ஓக்' மரம்'' என்று கூவினான்.

பிள்ளைகளெல்லாம் சிரித்தனர்.

"சத்தம் போடாதீர்கள்'' என்று அன்னா வசீலியெவ்னா உள்ளங்கையால் மேஜையைத் தட்டிக்கொண்டு கூறினாள்.

பிள்ளைகளின் சிரிப்பையும், ஆசிரியையின் உத்தரவையும் சிறிதும் கவனியாது, மறுபடியும், "பனிக்கால "ஓக்' மரம்'' என்றான் ஸôவுஷ்கின். அவன் பேசிய விதமும் மிக விசித்திரமாகயிருந்தது. அவனுடைய இருதயத்திலிருந்து வருவதே போன்றிருந்தன அச்சொற்கள். எதையோ ஒப்புக்கொள்வது போலவும் அவனால் அடக்க முடியாதபடி தானாக வழிந்து வேகமாய் வெளிவரும் ஓர் இன்ப இரகசியத்தைப் போலவுமிருந்தன அவை.

அவனுடைய விந்தையான கிளர்ச்சியைச் சிறிதும் அறியாது, அன்னா வசீலியெவ்னா தனது சிடுசிடுப்பை அடக்க முடியாதவளாய், "ஏன், "பனிக்கால' என்பதைச் சேர்க்கிறாய்? "ஓக்' மரம் என்றால் மட்டும் போதுமே'' என்று கூறி முடித்தாள்.

"ஓக்' மரம் என்று மட்டும் சொன்னால் அதற்கு ஒரு பொருளுமில்லை. பனிக்கால "ஓக்' மரம் என்றால்தான் சரியான பெயர்ச்சொல்'' என்று பையன் அவனை மடக்கினான்.

"ஸôவுஷ்கின், இடத்தில் உட்காரு! நேரத்தில் வராததினால் ஏற்படுகிறதைப் பார்த்தாயா? "ஓக்' மரம் என்பது பெயர்ச்சொல். "பனிக்கால' என்பது என்ன சொல் என்ற விஷயத்திற்கு நாம் இன்னும் வரவில்லை. தயவு செய்து, மதியம் இடை நேரத்தில் ஆசிரியர் அறையில் என்னை வந்து பார்'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.

பின் பெஞ்சியிலிருந்த ஒருவன் "பனிக்கால "ஓக்' மரத்திலிருந்து கிடைக்கும் பலன் இதுதான்'' என்று ஏளனம் செய்தான்.

ஆசிரியையின் கண்டிப்பு வார்த்தைகளால் சிறிதும் கலங்காதவனாய், தனது உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஓர் எண்ணத்தில் மகிழ்ச்சியுற்றவனாய், புன்சிரிப்புடன் தனது இருப்பிடத்தில் அமர்ந்தான் ஸôவுஷ்கின். ""இவனைச் சரிப்படுத்துவது கஷ்டம்தான்'' என்று அன்னா வசீலியெவ்னா நினைத்தாள்.

பாடம் தொடர்ந்து நடந்தது...

***

ஸôவுஷ்கின் ஆசிரியர் அறைக்கு வந்ததும். "உட்காரு'' என்று சொன்னாள் அன்னா வசீலியெவ்னா.

கை வைத்த மிருதுவான நாற்காலியில் வெகு சந்தோஷத்துடன் உட்கார்ந்துகொண்டு அதனுடைய வில் கம்பிகளின் மேல் பல தடவை அமுக்கிக் குதித்தான் அவன்.

"நீ எப்பொழுதும் ஏன் நேரம் கழித்து வருகிறாய். சொல்லேன்'' என்று அன்னா வசீலியெவ்னா கேட்டாள்.

"எனக்குத் தெரியாது, அன்னா வசீலியெவ்னா'' என்று வயது வந்தவனைப்போல் தோள்களைக் குலுக்கிக்கொண்டு கூறத் தொடங்கினான். "வகுப்பு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே நான் வீட்டை விட்டுப் புறப்பட்டு விடுகிறேன்.''

மிகச் சிறிய விஷயங்களில்கூட உண்மையை வருவிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! எத்தனையோ பிள்ளைகள் ஸôவுஷ்கினைவிட அதிகத் தொலைவில் வசிக்கிறார்கள். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்து வர வேண்டியதில்லையே.

"நீ குஸ்மீன்கியில்தானே இருக்கிறாய்?''

"இல்லை, ஆரோக்கிய விடுதியில் இருக்கிறேன்.''

"ஒரு மணி நேரத்திற்கு முன்னமேயே புறப்பட்டு விடுகிறேன் என்று சொல்ல உனக்கு வெட்கமாயில்லையா? ஆரோக்கிய விடுதியிலிருந்து பெரிய ரஸ்தாவிற்கு வரப் பதினைந்து நிமிடமாகும். ரஸ்தாவின் வழியே பள்ளிக்கூடம் வந்தால் அரை மணி நேரமாகும்.''

"நான் ரஸ்தா வழியே ஒரு பொழுதும் வருவதில்லை. நேராளமாகக் காட்டின் குறுக்காகத்தான் நடந்து வருகிறேன்'' என்று தனக்கே புரியாமல், இவ்விஷயம் முழுவதும் ஆச்சரியத்தைக் கொடுப்பதுபோன்ற ஒரு தோற்றத்துடன் கூறினான் ஸôவுஷ்கின்.

"நேராளமாக இல்லை, நேராக'' என்று அவனைத் திருத்தினாள்.

குழந்தைகள் பொய் சொல்லும்பொழுது சகஜமாக ஏற்படுவதுபோல, துக்கமும், வெறுப்பும் அவளுக்கு உண்டாயிற்று. ஸôவுஷ்கின் ஏதாவது காரணம் சொல்வான் என்ற நம்பிக்கையில் பேசாமலிருந்தாள். ""அன்னா வசீலியெவ்னா! நான் மிகவும் வருந்துகிறேன். மற்றப் பையன்களுடன் பனிப்பந்து விளையாடினேன்...' என்றோ இதுபோல ஏதாவதோ சொல்வான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் தனது பெரிய சாம்பல நிறக் கண்களால் அவளை வழித்துப் பார்த்தான். "நல்லது, எல்லாம் சொல்லியாகி விட்டதே; இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?' என்று கேட்பதுபோலிருந்தது அவன் பார்வை.

"இது மோசம், ஸôவுஷ்கின், மிகவும் மோசம். நான் இதைக் குறித்து உன் பெற்றோர்களைப் பார்க்க வேண்டி வரும்.''

"எனக்குத் தாயார் மட்டும்தான் இருக்கிறார்கள், அன்னா வசீலியெவ்னா!'' என்று ஸôவுஷ்கின் புன்சிரிப்புடன் கூறினான்.

"குளிப்பாட்டும் தாதி'' என்று ஸôவுஷ்கின் தனது தாயாரைக் குறிப்பிட்டதால் அவளைப் பற்றி நினைத்துப் பார்க்கும்பொழுது, அன்னா வசீலியெவ்னாவின் முகம் சிவந்தது. ஆரோக்கிய விடுதியில் தண்ணீர்ச் சிகிச்சை அறையில் அவள் வேலை பார்த்து வந்தாள். அவள் மிகவும் நொய்ந்துபோன பெண்பிள்ளை. எப்போதும் சுடுதண்ணீரில் பட்டு வந்ததால் அவள் கைகள் வெளுத்து துணியாலானவைபோலத் தொளதொள வென்றிருக்கும். மாபெரும் தேசபக்த யுத்தத்தில் அவளது கணவன் இறந்து போகவே, இந்தக் கோல்யாவோடு இன்னும் மூன்று குழந்தைகள் அவள் தனியாகவே வளர்த்து வந்தாள்.

ஸôவுஷ்கினுடைய தாயாருக்கு எத்தனையோ தொல்லைகள், கவலைகள் உண்டு என்பது நிச்சயம்; எனினும் அன்னா வசீலியெவ்னா அவளைப் பார்ப்பது அவசியமாயிருந்தது.

"நான் போய் உன் தாயாரைப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.''

"கட்டாயமாக, அன்னா வசீலியெவ்னா! அம்மா மிகவும் சந்தோஷப்படுவார்கள்.''

"ஆனால் நான் சொல்லப்போவதைக் கேட்டு அவர்களுக்குச் சந்தோஷம் உண்டாகாது. எந்த ஷிப்டில் உன் தாயார் வேலை செய்கிறார்கள்?''

"மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது ஷிப்டில் அவர்களுக்கு வேலை.''

"மிகவும் நல்லது. இரண்டு மணிக்கு என் வேலை முடிகிறது. நீ என்னை உன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகலாம்.''

ஸôவுஷ்கின் அன்னா வசீலியெவ்னாவைக் கூட்டிக்கொண்டு சென்ற வழி பள்ளிக்கூடத்திற்குப் பின்னாலிருந்த மைதானத்திலிருந்து ஆரம்பித்தது. அவர்கள் காட்டிற்குள்ளே நுழைந்ததும் பனி மூடியிருந்த தேவதாரு மரங்களின் கிளைகள் அவர்களை வெளியே தெரியாமல் மறைத்தன. உடனேயே அமைதியும் சாந்தமும் நிலவுகின்ற வேறோர் அற்புத உலகிற்கு வந்துவிட்டதுபோல அவர்களுக்குத் தோன்றிற்று. மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு பறந்து சென்ற காக்கைகளும் மற்றப் பறவைகளும் கிளைகளை அசைத்துப் பைன் நெற்றுகளை உலுக்கிவிட்டன, அல்லது உலர்ந்து தொங்கிக்கொண்டிருந்த சுள்ளிகளைக் கீழே விழச் செய்தன. ஆனால் இதனாலெல்லாம் அவ்விடத்தில் சத்தமே உண்டாகவில்லை.

எங்குப் பார்த்தாலும் ஒரே வெண்மை நிறம். காற்றிலடிபட்டு அழுதுகொண்டிருந்த "பிர்ச்' மரங்களின் உச்சிகளில்தான் கருமை தென்பட்டது. அம்மெல்லிய கிளைகள் ஆகாயத்தின் தெள்ளிய நீல நிறத்தின்மீது இட்ட கறுப்புக் கோடுகள் போல் விளங்கின.

அவர்கள் நடந்துபோன பாதை ஓர் ஓடையின் ஓரமாக வளைந்து சென்றது. சில சமயங்களில் கரையையொட்டித் திரும்பியதும், மற்றும் சில வேளைகளில் மேலே மேட்டில் ஏறியும் சென்றது அப்பாதை.

சிற்சில சமயங்களில் மரங்கள் விலகும்; அப்போது சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்த அழகிய வெளிகள் கண்ணுக்குப் புலனாகும். அவற்றில், குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற முயல்களின் கால் தடங்கள் கடிகாரச் சங்கிலிகள்போல் தோன்றின. ஒரு மிருகத்தின், மூவிலை போன்ற காலடிச் சுவடுகளையும் அவர்கள் கண்டார்கள். அச்சுவடுகள் காட்டின் நடுப்பகுதியை நோக்கிச் சென்றன.

அன்னா வசீலியெவ்னா இத்தடங்களில் கருத்துள்ளவளாய் இருக்கிறாள் என்பதைக் கண்டதும், ஸôவுஷ்கின் தனது பழகிய நண்பன் ஒருவனைப் பற்றிப் பேசுவதுபோல, ""கடம்பை மான் இங்கு வந்து போயிருக்கிறது'' என்றான். அவள் காட்டை நோக்கிப் பார்த்ததைக் கண்டு, அவளுக்குத் தைரியமூட்டுவதுபோல், ""பயப்பட வேண்டாம், கடம்பைகள் ரொம்பச் சாதுவானவை'' என்று மேலும் கூறினான்.

"நீ எப்போதாவது கடம்பையைப் பார்த்திருக்கிறாயா?'' என்று அன்னா வசீலியெவ்னா ஆர்வத்துடன் கேட்டாள்.

"உயிருள்ள கடம்பையையா?'' என்று கேட்டுவிட்டு ஸôவுஷ்கின் பெருமூச்சு விட்டான், ""இல்லை. அது போட்டுவிட்டுப் போயிருந்தவற்றைத்தான் பார்த்திருக்கிறேன்'' என்று கூறினான்.

"அப்படி என்றால்?''

"ஓ, அதனுடைய விட்டைகள்'' என்று வெட்கத்துடன் விளக்கினான். பாதை கமான்போல வளைந்திருந்த ஒரு மரத்தின் கீழ் சென்று மறுபடியும் ஓடைக்கு வந்தது. அவ்வோடை அநேக இடங்களில் அடர்ந்த பனிமணலால் மூடப்பட்டிருந்தது; வேறு சில இடங்களில் மழமழப்பான பனிக்கட்டிச் சல்லடம் அதைப் பிணித்திருந்தது. இன்னும் சில இடங்களில் இவை இரண்டிற்குமிடையே நல்ல, கரு நிறமான தண்ணீர் கண்ணில் பட்டது.

"ஏன் எங்கும் பனிக்கட்டியாகவில்லை?'' என்று அன்னா வசீலியெவ்னா கேட்டாள்.

"இங்கு சுடுதண்ணீர் ஊற்றுகள் இருக்கின்றன. அதோ பாருங்கள்! ஒரு நீர்ப்பீலி'' என்றான் பையன்.

அந்தத் தண்ணீர்ப் பாகத்தின் மேல் குனிந்து பார்த்தாள் அன்னா வசீலியெவ்னா. அடியிலிருந்து தண்ணீர் நூலிழை போல மேலே வந்துகொண்டிருந்தது. நீர்மட்டத்துக்குக் கீழே அது குமிழிகளாக வெடித்தது. இக்குமிழிகளும், அடியிலுள்ள காம்பு போன்ற நீர்த் தாரையும் வெண்குவளைப் புஷ்பத்தைப் போலிருந்தன.

"இந்தப் பக்கத்தில் ஏராளமான நீருற்றுகள் இருக்கின்றன'' என்று ஸôவுஷ்கின் உணர்ச்சியுடன் கூறினான். "வெண் பனியின் கீழ் உயிரோட்டத்தோடு தானிருக்கிறது நீரோடை.''

மேலாக இருந்த வெண்பனியை அவன் அகற்றியவுடன் கன்னங்கரேலென்றிருந்த தெளிவான தண்ணீர் தென்பட்டது.

வெண்பனி தண்ணீருக்குள் விழுந்தவுடன் கரைந்து விடாமல் கட்டியாகி, பசுமையான நீர்ப்பாசிபோல் அதில் மிதப்பதை அன்னா வசீலியெவ்னா கண்டாள். இது அவளுக்குப் பிரியமான விளையாட்டாக இருந்தது. மேலும்மேலும் வெண்பனியைத் தனது மேல்ஜோடுகளால் தண்ணீருக்குள் தள்ளிவிட்டாள். ஒரு பெரிய வெண்பனித் துண்டு ஓடைக்குள் விழுந்து வேடிக்கையான உருவத்தில் தோன்றியதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இதிலேயே முழுவதும் ஈடுபட்டிருந்ததினால் ஸôவுஷ்கின் தனக்கு முன்பே நடந்து சென்று ஓடையின் குறுக்கே வளைந்து நின்ற ஒரு மரக்கிளையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்பதை அவள் முதலில் கவனிக்கவில்லை. வேகமாக அவனைத் தொடர்ந்து சென்றாள். சுடு நீருற்றுகள் பின்தங்கின. இங்கே உள்ள தண்ணீரின் மேல் மெல்லிய பனிக்கட்டித் தகடு மூடியிருந்தது. அதன் பளிங்கு போன்ற மிருதுவான மேற்பரப்பில் விரைந்து சரிந்து செல்லும் நிழல்கள் தோன்றி மறைந்தன.

"இங்கே பனிக்கட்டி எவ்வளவு மெல்லிதாக இருக்கிறது பார், தண்ணீர் ஓட்டங்கூட அல்லவா தெரிகிறது!'' என்றாள்.

"அது தண்ணீரில்லை, அன்னா வசீலியெவ்னா! நான் ஆட்டிய கிளையின் நிழல் அது'' என்றான் சிறுவன்.

அன்னா வசீலியெவ்னாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இங்கே காட்டில், தான் ஒன்றும் சொல்லாமலிருப்பதே நல்லது என்று தீர்மானித்துக் கொண்டாள்.

ஸôவுஷ்கின் மறுபடியும் முன் சென்றான். சிறிது குனிந்துகொண்டும், கூர்மையாகக் கவனித்துக்கொண்டும் இப்போது நடந்தான்.

காடு மேலும் மேலும் போய்க்கொண்டேயிருந்தது. அதன் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற நெருக்கமான இடைவெளிகளின் ஊடே அவர்கள் சென்றார்கள். அங்கே குடிகொண்டிருந்த அமைதிக்கும், வெண்பனிக்கும் குவைகளுக்கும், மரங்களுக்கும் முடிவென்பதே தோன்றவில்லை. இங்கு மங்குமுள்ள வெளிகளினூடே அந்தி வெயில் பாய்ந்து வந்தது.

திடீரென்று மரங்களின் அடர்த்தி குறைந்துகொண்டே சென்று, நீலிநிறமான ஓர் இடைவெளி முன்னே தென்பட்டது. ஒளி நிறைந்ததும், காற்றோட்டமாயும் இருந்தது. முதலில் குறுகிய இடைவெளியாகத் தோன்றிய அது, போகப்போக சூரிய வெளிச்சத்தில் பிரகாசிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப்போல் மின்னுகின்ற பனித்திடல்களைக் கொண்ட பெரும் பரப்பாகக் காட்சியளித்தது.

ஒரு கொட்டை மரத்தைச் சுற்றிப் பாதை சென்றது. காடு பின்னடைந்தது. இவ்விடைவெளியின் நடுவே, பளபளவென்று ஜொலிக்கும் வெண்பனி போர்த்து, மாதா கோவிலைப்போல் பெரிதாகவும், கம்பீரமாகவும் நின்றது ஓர் "ஓக்' மரம். மற்ற மரங்களெல்லாம் தங்களுடைய இந்த அண்ணன் நன்கு விரிந்து வளர்ந்து வரவேண்டுமென்பதற்காக, அவ்விடத்தை விட்டு விலகி அப்பாற் போயிருந்ததுபோல் தோன்றியது. இவ்விடைவெளியின் மேல் பந்தல் போட்டிருந்தாற்போல் "ஓக்' மரத்தின் அடிக்கிளைகள் காட்சியளித்தன. மூன்று மனிதர்கள் சேர்ந்தாலும் தழுவ முடியாத அவ்வளவு பருமனாக இருந்தது அதன் அடிமரம். அதன் பட்டைகளுக்கு ஊடே ஆழமான பிளவுகளில் பனி நிறைந்து கிடந்தது, அம்மரத்தில் வெள்ளிக் கம்பி இழைத்திருந்தது போல் காணப்பட்டது. அதன் பருத்த இலைகள் முழுவதும் உதிர்ந்து விடவில்லை. மேல் உச்சி வரை பனியடர்ந்த இலைகளால் அது மூடப்பட்டிருந்தது.

"ஓ, இதுவா உன்னுடைய பனிக்கால "ஓக்' மரம்!''

அன்னா வசீலியெவ்னா தயக்கத்துடன் ஓர் அடி முன் சென்றாள். அக்காட்டின் காவற்காரனாக விளங்கிய அவ்விருட்சம் வெகு கம்பீரமாக அவளை நோக்கித் தனது கிளைகளை அசைத்தது.

ஆசிரியை என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்பதைச் சற்றும் அறியாத ஸôவுஷ்கின் தனது முதிய நண்பனின் காலடியில் பரபரப்புடன் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.

"அன்னா வசீலியெவ்னா! இதோ பாருங்கள்'' என்றான்.

பிறகு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, ஒரு பெரிய வெண்பனிக் குவையை அகற்றினான். அதனடியில் மண் தூள்களைத் தெளித்தது போலிருந்தது. மக்கிப்போன புல்லின் துண்டுகளும் தென்பட்டன. அதற்குக் கீழ் ஒரு துவாரத்தில் அழுகிய இலைகளாலான வலையால் சுற்றப்பட்டிருந்த ஒரு சிறிய பந்து கிடந்தது. கூர்மையான, ஊசிபோன்ற முனைகள் அந்த இலைகளினூடே நீட்டிக் கொண்டிருந்தன. அது ஒரு முட்பன்றி என்று அன்னா வசீலியெவ்னா கண்டுகொண்டாள்.

"அது எப்படிச் சுருட்டிக்கொள்கிறது, பாருங்கள்'' என்று இலைக் கம்பளியால் அதற்கு மறுபடியும் போர்த்துக்கொண்டு கூறினான் ஸôவுஷ்கின். பிறகு அடுத்த வேரின் பக்கமாகப் பனியைத் தோண்டினான். ஒரு சிறிய குகை காணப்பட்டது. அதன் ஓரங்கள் பனிக்கட்டித் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அட்டையில் வெட்டப்பட்ட விளையாட்டுப் பொம்மைபோல பழுப்பு நிறமான தவளை ஒன்று அங்கே உட்கார்ந்திருந்தது. விறைத்திருந்த அதன் தோல் மிகப் பளபளப்பாக இருந்தது. ஸôவுஷ்கின் அதைத் தொட்ட பொழுது அது அசையவில்லை.

"செத்துப் போனதுபோல் பாசாங்கு பண்ணுகிறது; சூரியன் எட்டிப் பார்த்தவுடன் உயிர்பெற்று விடும்'' என்று சொல்லிக்கொண்டே சிரித்தான் ஸôவுஷ்கின்.

தன்னுடைய சிறிய ராஜ்யத்திலுள்ளவை எல்லாவற்றையும் அவன் ஆசிரியைக்குக் காட்டினான். "ஓக்' மரத்தின் அடியில் அநேக உயிர்கள் இடங்கொண்டு வாழ்ந்தன; வண்டுகள், பல்லிகள், பூச்சிகள். சில வேர்களின் கீழேயும், வேறு சில பட்டைகளின் இடுக்குகளிலும் தங்கி வாழ்ந்தன. குளிர்காலத் தூக்கத்தில் வீழ்ந்து கிடந்த அப்பிராணிகள் ஒட்டி உலர்ந்து போய், வெறும் பொள்ளலாயிருப்பதுபோல் காணப்பட்டன. இந்தப் பெரிய "ஓக்' மரம் தன்னிடத்தே அதிக கதகதப்பைக் கொண்டிருந்தது. ஆகவே, இப்பிராணிகள், தங்குவதற்கு இதைவிடச் சிறந்த இடத்தைக் கண்டுகொண்ட முடியாது. மிகுந்த உற்சாகத்துடன், தனக்குப் புதிதான இக்காட்டில் மறைந்து கிடந்த உயிர்களைப் பார்த்து, அவற்றில் ஈடுபட்டிருந்தாள் அன்னா வசீலியெவ்னா. திடீரென்று ஸôவுஷ்கின் கலவரத்துடன் ஏதோ சொன்னது அவள் காதில் விழுந்தது. "அடேடே, அம்மாவை நாம் பார்க்க முடியாது போலிருக்கிறதே!'' என்றான் அவன்.

உடனே கைக்கடிகாரத்தை உயர்த்திப் பார்த்தாள். மணி மூன்றே கால் ஆகிவிட்டது. "அகப்பட்டு விட்டோம்' என்ற உணர்ச்சியுண்டாயிற்று. தான் சொல்லப் போவதற்குத் தன்னை மன்னிக்கும்படி "ஓக் மரத்தை மனத்துள் வேண்டிக்கொண்டு, "இதோ பார், ஸôவுஷ்கின், சுருக்கு வழிகளை எப்போதும் நம்ப முடியாது. நீ இனிமேல் ரஸ்தாவின் வழியாகவே வா'' என்று கூறினாள்.

ஸôவுஷ்கின் பதில் ஒன்றும் சொல்லவில்லை. தலையைக் குனிந்துகொண்டு நின்றான்.

"கடவுளே! நமது பேடித் தனத்தைக் காட்டுவதற்கு வேறு என்ன செய்ய வேண்டும்?' என்று அன்னா வசீலியெவ்னா வேதனையுடன் நினைத்துக்கொண்டாள். அன்று அவள் பாடம் நடத்தியதையும், மற்றைய நாட்களில் நடத்தியதையும் நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு உற்சாகமற்று, வறட்சியுடன் நாம் வார்த்தைகளையும், பாஷையையும் பேசி வந்திருக்கிறோம். மொழியென்பது இல்லாவிட்டால் மனிதன் உணர்சியற்ற ஊமை மாதிரிதானே! வாழ்க்கை எவ்வாறு அழகும், கருணையும் கூடியதோ, அதேபோல் எப்பொழுதும் தாய்மொழியும், புதுமையும் அழகும் நிறைந்து விளங்குகிறது.

இந்த அழகில்தான் திறமைவாய்ந்த ஆசிரியை என்று வேறு எண்ணம்! ஆசிரியத் தொழில் என்ற பாதையை நன்கு தெரிந்துகொள்ள ஆயுள் முழுவதும் முயன்றாலும் காலம் போதாது; தானே அப்பாதையில் இன்னும் ஓர் அடி எடுத்து வைக்கவில்லை. தவிர, அப்பாதைதான் எங்கே? அது அவ்வளவு இலேசாகக் கண்டுபிடித்துக்கொள்ளக் கூடியதா என்ன? மாய நகைப் பெட்டிக்குச் சாவி கண்டுபிடிப்பதே போல் அவ்வளவு கஷ்டமானதல்லவா அது! ஆனால் குழந்தைகள் "டிராக்டர், கிணறு, பறவைக்கூடு' என்றெல்லாம் குதூகலத்துடன் கூறியபொழுது, வருங்காலத்தின் மங்கலான தோற்றம் ஒருவாறு காணக் கிடைத்தது என்பதை அவள் உணர்ந்துகொண்டாள்.

"நல்லது, ஸôவுஷ்கின். இங்கே அழைத்து வந்ததற்காக உனக்கு மிக வந்தனம். நீ இந்தப் பாதையாக வரவேண்டுமென்று விரும்பினால் வரலாம்'' என்று கூறினாள்.

ஸôவுஷ்கினுடைய முகம் சிவந்தது. இனிமேல், தான் காலந்தவறாது வந்துவிடுவதாக வாக்களிக்க விரும்பினான். ஆனால் அது பொய்யாகுமே என்ற பயத்தினால் நிறுத்திக் கொண்டான். கழுத்துப் பட்டையை உயர்த்திக்கொண்டு உரோமக் குல்லாயை இழுத்துவிட்டான்.

"உங்களை வீடுவரை கொண்டு விடுகிறேனே...''

"பரவாயில்லை, ஸôவுஷ்கின்; நான் தனியாகப் போய்க்கொள்வேன்.''

அவன் சந்தேகத்துடன் ஆசிரியையைப் பார்த்தான். குச்சி ஒன்றெடுத்து, அதன் வளைந்த நுனியை முறித்து எரிந்துவிட்டு, அதை அன்னா வசீலியெவ்னாவிடம் கொடுத்தான்.

"கடம்பை எதிர்ப்பட்டால் இதைக்கொண்டு முதுகில் ஓர் அடி கொடுங்கள்; அது உடனே ஓடிவிடும். குச்சியை இலேசாக அசைத்தாலே போதும்; அதுதான் நல்லது. இல்லாவிட்டால் அது கோபங்கொண்டு நம் காட்டை விட்டே ஓடிப்போய்விடும்'' என்றான்.

"ஆகட்டும், ஸôவுஷ்கின். நான் அதை அடிக்க மாட்டேன்.''

சிறிது தூரம் சென்ற பிறகு அன்னா வசீலியெவ்னா திரும்பிப் பார்த்தாள். அஸ்தமன சூரியனது ஒளியில் இந்த "ஓக்' மரம் சிவப்பாயும், வெண்மையாயும் தோன்றியது. அதனடியில் ஒரு சிறிய, கறுத்த உருவம் தென்பட்டது. ஸôவுஷ்கின் இன்னும் போகவில்லை. அந்தத் தொலைவிலிருந்து, தனது ஆசிரியைக்குக் காவல் காத்துக்கொண்டிருந்தான். திடீரென்று அன்னா வசீலியெவ்னாவுக்கு, இந்தக் காட்டில் மிகவும் அதிசயமாகவுள்ளது அந்தப் பனிக்கால "ஓக்' மரமல்ல, தாய்நாட்டிற்காகப் போரில் உயிர் நீத்த வீரத் தகப்பனும், ""குளிப்பாட்டும் தாதி''யாக வேலைப் பார்க்கும் தாயும் பெற்றெடுத்த, புரிந்துகொள்வதற்கே இயலாத, இவ்வதிசயமான சிறிய மனிதன்; எதிர்காலப் பிரஜையாகிய இந்த ஸôவுஷ்கின்தான் என்ற உண்மை புலனாயிற்று.

அவனை நோக்கிக் கையை அசைத்து வழியனுப்பினாள். பிறகு வளைந்து செல்லும் நடைபாதை வழியே நிதானமாக நடந்து சென்றாள்.


----------------------

* 1. மரியாதையைக் காட்டுவதற்கு முழுப் பெயரையும் கூறுவது ருஷ்யர்களின் வழக்கம்.

* 2. "வாலென்கி' என்பது ஒரு வகைக் கம்பளிச் செருப்பு.



நூல்: சுங்கான்
வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்


ரூ.50

சிறுகுறிப்பு: எத்தனை முறைப் படித்தாலும் சலிக்காத சிறுகதை "அவனது ரகசியம்'. இச்சிறுகதையோடு 'சுங்கான்' என்கிற குறுநாவலும், "வெற்றியாளன்' என்கிற சிறுகதையும் உள்ளன. 'வெற்றியாளன்' சிறுகதையும் எல்லாப் போட்டிக் களத்திற்கும் பொருந்தக்கூடிய உலகச் சிறுகதை.

Monday, March 8, 2010

வில்லி ஸோரன்ஸன் - சிறுவர் விளையாட்டு - சிறுகதை

தமிழில்: நகுலன்

ஒரே தாய் தகப்பன்மாருக்குப் பிறந்த விசேஷத்தினால் சகோதரர்களான அவ்விரு சிறுவர்கள், அதே முறையில் பொதுவாக ஒரு மாமனையும் பெற்றிருந்தார்கள். சிறுவர்களுடைய மாமனுக்கு ஒரு காலை முறிக்கவேண்டிய அவசியமேற்பட்டது. இதனால் அவ்விரு சிறுவர்களும், தங்கள் மாமனைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். சிறுவர்களுடைய பரபரப்பைச் சாந்தப்படுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்கு இது விஷயமாக விஞ்ஞான ரீதியாக விஷயத்தை விளக்கிக்காட்ட வேண்டுமென்று நிச்சயித்தார்கள். அதற்காக அவர்கள் சிறுவர்களிடம் இவ்வாறு சொன்னார்கள். அவர்களுடைய மாமாவுடைய கட்டை விரலில் ஒரு ஓட்டை விழுந்துவிட்டது. அதன் மூலம் ஏராளமான பூச்சிகள் ஏறி கால் முழுவதும் பரவிவிட்டன. இவை கண்ணுக்குத் தெரியாத சிறு கிருமிகள். அவர்களுடைய தகப்பனார் இவைகளைப் பாக்டீரியா என்றும், தாயார் பாஸில்லை என்றும் விவரித்தார்கள்; பாக்டில்லா என்றும், இளையவன் பாட்டரிகள் என்றும், பெயர் சொல்லி நினைவில் வைத்துக் கொண்டார்கள். இந்த விசித்திரப் பூச்சிகள் ஒரு சிவந்த கோடு கிழித்த மாதிரி மாமாவின் கால் மீது சாரியாகச் செல்ல ஆரம்பித்தன; அவை மாமாவின் தேகம் முழுவதும் வியாபித்து விட்டால், மாமா செத்துப்போய் விடுவார். எனவே அவரைக் காப்பாற்ற அவர் காலை வெட்டும்படி நேர்ந்தது. ஆனால், இப்பொழுது நிஜக்காலைப் போலவே ஒரு பொம்மைக் காலை வைத்துக்கொண்டு, உயிரோடு உலாவி வருகிறார். இவ்வாறு தாங்கள் விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டதால் சிறுவர்கள் பரபரப்புத் தீர்ந்திருக்கும் என்றும் பெற்றோர்கள் நினைத்தார்கள்.

ஒரு சிறு பையன் வெற்றுக்காலுடன் ஒரு குதிரை வண்டியின் அருகில் ஓடிவந்து கொண்டிருந்தான். நாலுகால் இருந்தும் குதிரை எவ்வாறு ஓட முடிகிறது என்பதை அறிய அவன் முயன்று கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று தான் எப்படி ஓடவேண்டுமென்பது அவனுக்கு மறந்துவிட்டது. எதிர்பாராத விதம் அவனுக்குக் கால்கட்டை விரலில் பொறுக்க முடியாத வலி ஏற்பட, தேகம் முழுவதும் அவனுக்கு அந்த வேதனை மயமாகிவிட்டது. அவன் ஒரு காலால் நொண்டிக்கொண்டு "ஊ' என்று ஊளையிட்டுக்கொண்டு, தன் துளி முகத்தைச் சுளித்துக்கொண்டான். அவன் தன்னுடைய கட்டைவிரலை, ஒரு பாறாங்கல்லில் தட்டிக்கொண்டதனால், அதிலிருந்து ஒரு துளி ரத்தம் பீறி சாக்கடையில் சிந்தியது... சிந்தியதைப் பார்த்துக்கொண்டு அவனைவிடச் சற்றுப் பெரிய, மேற்கூறிய, இரு சகோதரர்களும் வந்தார்கள்.

"ஐயோ இவனுக்கு ரத்தம் நாறி விஷமாகிவிட்டது, உடனே, பையா, நீ உடனே போய் ஒரு டாக்டரிடம் இதைக் காண்பிக்க வேண்டும்'' என்று இளைய சகோதரன் அவனிடம் கூறினான்.

"மாட்டேன்! டாக்டர் கிட்ட நான் போகமாட்டேன்!''

"உனக்கு ஒன்றும் தெரியாதுபோலத் தோன்றுகிறது. உன்கால் கட்டை விரலில் நீ ஒரு ஓட்டை வருத்தி வைச்சிண்டிருக்கே; இதிலிருந்து பல பூச்சிகள் பரவி கால்வரை ஏறிடும்!''

அந்தச் சிறு பையன் தன் கால் பெரு கட்டை விரலைச் சுவாரஸ்யமாக ஏதோ காணாததைக் கண்டததைப்போல பார்த்துக்கொண்டிருந்தான்.

"நீ என்னைச் சும்மா கேலி செய்யறே. என் கட்டை விரலில் ஒரு பூச்சியும் இல்லை.''

"ஆமாம், இருக்காது. அவை ரொம்ப ரொம்ப சின்ன பூச்சிகள். கண்ணுக்குத் தெரியாத சின்னப் பூச்சிகள். இதைப் பாட்டரிகள் என்று சொல்லுவார்கள்!''

"இல்லை, பாக்டில்லா'' என்று மூத்தவன் புத்திசாலித்தனமாக இளையவனைத் திருத்தினான். மேலும் அவன் தொடர்ந்தான்: ""இந்தப் பூச்சிகள் உன் உடல் பூரா வந்தா, நீ செத்துப்போயிடுவே. அதனாலே காலை வெட்டிவிடவேண்டும்.''

"எனக்கு என் கால் வேணும். என்னுடைய கால் எனக்குத்தான் சொந்தம்'' என்று கூறிக்கொண்டு அப்பையன் தன் காலைத் தன் இரு கைகளாலும் பிடித்துக்கொண்டான்.

"உனக்குச் சாகணும் என்று ஆசையா இருக்கா?''

"ஆமாம்'' என்று அந்தச் சிறுபையன் சொன்னான். மற்றவர்களைப்போல் அவனும் சாவு எப்படி இருக்கும் என்று பரிக்ஷித்துப் பார்த்ததே இல்லை. ஆதலால் அவனுக்கு அது அவ்வளவு முக்கியமாகத் தோன்றவில்லை.

"இவனுக்குச் சாகிறது என்றால் என்ன என்று தெரியாது. வெறும் அசடு, செத்தா, அப்புறம் உயிரோடு இருக்க முடியாது; இதுகூட உனக்குத் தெரியாதா?''

"இருக்க முடியாவிட்டால் வேண்டாம்!''

"நீ உயிரோடு இல்லாவிட்டால் உன்னாலே சாப்பிட முடியாது; விளையாட முடியாது.''

"அப்படியானால் பரவாயில்லை; நான் குதிரை!''

"செத்துப் போயிட்டா, நீ குதிரையாகக்கூட இருக்க முடியாது.''

"நான் சாகல்லையே.''

"நீ சுத்த முட்டாள். உன் காலை வெட்டி எடுக்காவிட்டால், நீ செத்துப் போய்விடுவாய். உன் ரத்தம் நாறி விஷமாயிடுத்து. இப்பவே ஏராளமாகப் பாக்டில்லா வெல்லாம் உன் முழங்கால் வரை பரவியிருக்கும். நீ டாக்டர் கிட்டப்போய், உன் காலை வெட்டிவிட வேண்டும்.''

"நான் டாக்டர் கிட்டப்போகமாட்டேன். அவர் ஊசி போடுவார்.''

"டாக்டர் ரொம்ப கெட்டிக்காரர். பாட்டரிகளால் உனக்கு ஆபத்து வராமல் இருக்க அவர் உன் காலை முறித்துவிடுவார்'' இவ்வாறு இளையவன் தொடர்ந்தான்.

"பாட்டரிகள் இல்லை, பாக்டில்லா'' என்று மூத்தவன் அவனைத் திருத்தினான்.

இதற்குள், அந்தச் சிறுவனுடைய கால்கட்டை விரலில் ரத்தம் கசிவது நின்றுவிட்டது. ஆனால் பையன் மிகவும் பயந்துவிட்டான். அவன் தன் தலையை உள்ளே போகும் அளவிற்குத் தன் வாயைப் பிளந்துகொண்டு, உரக்க ஊளையிட ஆரம்பித்துவிட்டான். மற்ற இரு பெரிய பையன்களும் } அவர்களை விடப் பெரிய சிறுவர்கள் பக்கத்தில்தான் அவர்கள் சிறு பையன்கள் என்ற உணர்வு அவர்களுக்குத் தோன்றும் } அவனுக்காக இரக்கப்பட்டார்கள்.

"பரவாயில்லை. நாங்களே செய்துவிடுகிறோம். இவனை நாம் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய், இவன் காலை முறித்துவிடலாம். நம்முடைய சிறிய அரம் இதற்குப் போதும்'' என்று மூத்தவன் சொன்னான்.

"ஆனால்... நம்மால் எப்படிச் செய்ய முடியுமா?'' என்று இளையவன் தயங்கினான்.

"ஏன், நாம் தாராளமாகச் செய்யலாம். நேற்று அந்த மரத்தின் அடிப்பாகத்தை அவ்வளவு லாகவமாக அறுத்த எனக்கு, இந்த ஒல்லிக்காலை அறுப்பதா கஷ்டம்? ஏன் தம்பி, உன் பெயரென்ன?''

"பீட்டர்'' என்று அந்தப் பையன் சொன்னான். அவன் அழுத அழுகையில் அவனால் பேசக்கூட முடியவில்லை.

"சரி, பீட்டர், நீ என்னோடே வா. நீ டாக்டர் கிட்டப் போகவேண்டாம். உனக்காக நானே உன் காலை முறித்து விடுகிறேன்.''

"எனக்கு என் கால் வேணும்'' என்று அந்தப் பையன் உரக்கக் கத்தினான்.

"எனக்கு உன் கால் கூட வேணும்; ஏன் என்றால், நான் ஒரு குதிரை!''

"உன் கால் உன் கிட்டத்தான் இருக்கும். அதைத் தவிர உனக்கு நிஜக்கால் மாதிரியே ஒரு பொம்மைக்கால் கூடக் கிடைக்கும். உனக்கு ஆக மொத்தம் மூணு கால் கிடைக்கும். ஆனால் நாம் சீக்கிரம் போக வேண்டும்; ஏனென்றால் இந்தப் பாக்டில்லாப் பூச்சிகள் ரொம்ப சீக்கிரம் உன் மாதிரிப் பையன்களுடைய சின்னக்கால் முழுவதும் பரவிவிடும்.''

"ஆனால், என் காலை, நானே வைத்துக்கொள்ளலாமா?''

"ஆமாம். அதற்கென்ன சந்தேகம். ஏன், நீ அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்று, அதனுடன் விளையாடக்கூடச் செய்யலாம்.''




""நான் பெரியவனானால் ஒரு குதிரையாகப் போவேன்'' என்று அந்தச் சிறு பையன் அவ்விருவர்களுடன் சுவாதீனமாகப் பேசிக்கொண்டு சென்றான். ""ஒரு குதிரை எவ்வளவு வேகமாக ஓடும் தெரியுமா?''

பெரிய பையன்கள் இருவரும் அவனுடன் ஆமோதித்தார்கள்; இவ்வாறு செய்வதில் அவர்கள் தாங்கள் என்னவோ அவனைக் கெüரவித்த மாதிரி கர்வம் அடைந்தார்கள்.

""நமது இருவருடைய பெயர்களையும் பத்திரிகைகளில் பிரசுரிப்பார்கள்'' என்று மூத்தவன் இளையவனிடம் ரகசியமாகச் சொன்னான்.

அதிர்ஷ்டவசமாக, அவர்கள் சென்றபொழுது வீட்டில் ஒருவருமில்லை. அவர்கள் பீட்டரைச் சமையலறை மேஜை மேல் கிடத்தினார்கள். பிறகு பெரியவன் அரத்தைத் தேடிக்கொண்டு எடுத்துவரச் சென்றான். பீட்டர் குதிரைகள் எவ்வளவு வேகமாக ஓடும் என்பதைப் பற்றி வார்த்தைகளைக் கொட்டி அளந்துகொண்டிருந்தான்; இளையவன் அவன் நிக்கரை அவிழத்தபொழுதும், பெரியவன் அரத்தை எடுத்துக்கொண்டு தன் வேலைக்கு ஆயத்தமானபோதும்கூட அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் அரத்தினுடைய கூர்மையான பற்கற் அவன் காலில் உரசின பொழுதுதான் வீட்டுக்குப் போக வேண்டுமென்று கூக்குரலிட்டுக் கத்த ஆரம்பித்தான். மற்ற இரு பையன்களாலும் அவனை என்ன சொல்லியும் சாந்தப்படுத்த முடியவில்லை. எனவே, அவனைத் துணி உலர்த்துவதற்குக் கட்டியிருந்த கயிற்றைக் கொண்டு மேஜையுடன் சேர்த்துக் கட்ட வேண்டி வந்தது. சின்னப் பையனாக இருந்தாலும் அவனிடம் அதிசயிக்கும்படியான பலம் இருந்தது. அவன் தேகம் முழுவதும் கயிற்றைக் கட்டிப் பிடித்துப் பிறகு அவன் தேகத்தை அசையாமல் மேஜையில் வைத்துக் கட்டுவதற்கு ஒரு கற்பாந்த காலம் என்று சொல்லும்படி அதிக நேரம் பிடித்தது. கடைசியாக அங்குமிங்கும் நகர முடியாதபடி அவனைக் கட்டிவிட்டார்கள். சிறுவன் பிரமை பிடித்தவன் மாதிரி அலறிக்கொண்டிருந்தான். அவன் எழுப்பின கூக்குரலில் பெரியவன் சின்னவனுக்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதைச் சின்னவனால் கேட்க முடியவில்லை. எனவே கடைசியாக அவன் அப்பையனின் சப்தத்தை அடக்குவதற்கு அவன் அலறிக் கொண்டிருக்கும் வாயில் ஒரு கைக்குட்டையைத் திணிக்க வேண்டி வந்தது. அவன் இவ்வாறு செய்கையில் அவன் கைகளை அந்தச் சிறுவன் கடித்தகடியில் அவன் விரல்களிலிருந்து ரத்தம் பொத்துக்கொண்டு வெளியே வந்தது. ஆனால் அந்தப் பையன் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அவன் திடசாலி.

அச்சிறுவன் முழங்காலுக்கு மேல், அவன் காலில் அதிரும்படி நன்றாக அரத்தை அழுத்தி வைத்தான். அவ்வளவு சிறிய காலிலிருந்து அவ்வளவு அதிகமாக ரத்தம் வந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; ஆனால் சகோதரர்கள் இருவரும் ரத்தம் முழுவதும் எவ்வளவு விரைவாக விஷம் பரவிவிட்டது என்பதற்கு அத்தாட்சியாக அதைக் கருதினார்கள். இனிமேலும் விஷம் பரவாமல் சீக்கிரம் தடுக்க வேண்டும். அவன் அரத்தால் காலை அறுத்துக் கொண்டிருந்தான்; ரத்தம் தோய்ந்த சதை துண்டு துண்டாகப் பிய்த்துக் கொண்டு, அவன் அறுத்த இடத்திலிருந்து வந்துகொண்டு இருந்தது. அறுத்த இடம் சரியாக இல்லாமல் சற்றுக் கோணலாகவே இருந்தது.

""ப்பா; ராவுவதற்கு இசையாது போலிருக்கு, இது; நீ சற்று ராவிப் பார்'' இவ்வாறு மூத்தவன் இளையவனிடம் சொன்னான்.

தம்பி, ஒரு நிச்சயமில்லாத, மனதுடன், வேலையைத் தொடங்குவதற்கு ஆரம்பித்தான். ஏனென்றால் இதற்கு முன்னர் அவன் அண்ணன் அந்த அரத்தைக் கடனுக்குக்கூட அவனுக்குக் கொடுக்க மாட்டான். அவனுக்கு அரங்கொண்டு அறுத்துப் பழக்கமில்லாததால், ""அரத்தைக் கொண்டு ராவுவது சுவாரஸ்யமாக இருக்கிறது'' என்றான்.

""ஆனால் உன்னாலே ஒன்றும் பண்ண முடியாதுபோல் இருக்கு. நீ மாறு; நானே செய்து பார்க்கட்டும்.''

பெரியவன் மீண்டும் அரத்தைக் கொண்டு ராவ ஆரம்பித்தான்; சின்னவன் சந்தோஷத்தால் ரத்தக் களரியான அந்த அறையின் தரை மீது அங்குமிங்குமாக பிலம் சாடிக் கொண்டிருந்தான்.

""இது ஒரு உதவாக்கரைக் கால்... அறுத்து எடுக்க வராது போலிருக்கு'' என்று பெரியவன் சொன்னவுடன் சின்னவனுக்கு அது பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது.

""என்னிடம் அரத்தைக் கொடு; நான் பார்க்கட்டும்.''

அவனிடம் ஒன்றும் பேசாமல் பெரியவன் அரத்தைக் கொடுத்தான். ரத்தம் மழை மாதிரி விடாமல் தரையில் சொட்டிக் கொண்டிருந்தது. கொட்டின ரத்தம் பெரிய பாம்பு மாதிரி தரை மீது வளைந்து சென்றது.

""அம்மா வருவற்குள் நாம் இதையெல்லாம் சரிப்படுத்திவிட வேண்டும்.''

சின்னவன் அரத்தால் அறுப்பதை நிறுத்திவிட்டுத் தன் அண்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தான். அண்ணன் தேகம் வியர்த்துக் கொட்டுவதை அவன் கண்டான்.

""ஆனால்... அவன் ரத்தம் விஷமாய் விடாதா?''

""ஆனால், எனக்கென்ன?அப்பா வீட்டுக்கு வந்ததும், நம்மை அடிப்பார்.''

""பிறகு, நமது பெயர் பத்திரிகையில் வராதா?''

""நம்மைத் தூங்கப் போகச் சொல்லுவார்கள்.'' சின்னவன் மூக்குத் துறுதுறுவென்றது. அவன் அரத்தைக் கீழே போட்டான். அது விழுந்து ரத்தத்தை அவர்கள் மீது வாரி இறைத்தது.

""கால் ஓட்டை, இப்பொழுது அந்தப் பாட்டரியே வெளியே வரக்கூடிய அளவிற்குப் பெரிதாய்விட்டது, இல்லையா?''

அவன் பீட்டரின் காலில் இருந்த குழம்பிக்கிடந்த காயத்தைச் சுட்டிக்காட்ட முயற்சி செய்தான். ஆனால் அவன் தோள் ஒரே கனமாக இருந்ததால் அவனால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

இப்பொழுது இந்தக் காரியத்தில் சுவாரஸ்யத்தையிழந்த அண்ணன், ""இருக்கலாம்'' என்று பதில் சொன்னான். அவன் பீட்டரின் வாயிலிருந்து கைக்குட்டையை முரட்டுத்தனமாக வெளியிலே எடுத்தான்; ஆனால் பீட்டரின் வாய் மறுபடியும் மூடிக் கொள்ளவில்லை. அந்தச் சிறுவன் கண்கள் உத்தரத்தை நோக்கிப் பார்த்தவண்ணம் கிடந்தான்; அவன் தன் வாயை மூடிக் கொள்ளக்கூடக் கஷ்டப்படவில்லை.

""வெறும் முட்டாள் மாதிரி இல்லையா பார்க்க இருக்கிறான்'' என்று பெரியவன் மிக வெறுப்புடன் கூறினான்.

""ஆனால் அவன் அசடுதானே, அவன் குதிரையைப் பற்றிப் பேசினதெல்லாம்...''

""நீ இப்பொழுது வீட்டுக்குப் போகலாம். வேண்டிய அளவு உன் காலை முறித்தாகி விட்டது?'' என்று பெரியவன் பீட்டரிடம் சொன்னான்.

""ஆனால் நாம் முதலில் அவன் கட்டை அவிழ்க்க வேண்டும்.''

""அவன் என்ன சின்னக் குழந்தையா?'' தன்னைத்தானே அவனால் தன்னுடைய கட்டை அவிழ்த்துக் கொள்ள முடியாதா?''

பெரியவன் பீட்டர் கட்டப்பட்ட கயிற்றை வெகு கெட்டியாக இழுத்தான். அது அவனையும் பீட்டரையும் சுற்றி ஒரு பிடி கயிறு மாதிரி வளைத்துக்கொண்டது. அவன் கோபத்தில் ஒரு மிகக் கெட்ட வசவு வார்த்தையைச் சொல்வதைக் கேட்ட, அவன் தம்பி அவனைப் பெருமை பொங்கி மிளிரும் கண்களுடன் பார்த்தான். கடைசியாக அவர்கள் கட்டை அவிழ்த்தார்கள்; ஆனால் பீட்டர் தன் ஓட்டை கண்களுடன் பிளந்த வாயுடனும் மேஜை மீது கிடந்தான்.

""அவன் அசையக்கூட மாட்டேங்கறானே'' என்று இளையவன் ஒரு புரியாத குரலில் கூறினான்.

""அவன் ஏன் அசைவான். அவன் செத்து விறைச்சுன்னா கிடக்கான்.''

""நிஜம்மா... அவன் செத்துட்டானா?''

""அவன் செத்தாச்சு என்பது என்னவோ வாஸ்தவம். அவன் மாத்திரம் அசையாமல் இருந்திருந்தான் ஆனால்... நாம்ப அவனை } அந்த முட்டாளை மேஜையுடன் சேர்த்துக்கட்டுகிற வரையில் பாக்டில்லா சும்மாக் காத்திண்டுருக்குமோ?''

""ஆனா...இன்னமே அவன் பிழைக்கமாட்டானா?''

""ரத்தம் விஷமாகிச் செத்தவன் எங்கெயாவது பிழைத்து எழுந்திருப்பானா? மேஜை மேலேயும், இங்கு அறை இருக்கிற கோலத்தையும் பாரேன்.''

சின்னவன் பார்த்தான். பார்த்த உடனே அவன் அரையிலேயே மூத்திரம் பெய்துவிட்டான். அவன் மூத்திரம் அவன் கால் மீது ஒழுகி, ஒரே தரை மீது உள்ள ரத்தத்தில் சொட்டிக் கலந்தது. இதைத் தன் அண்ணனிடமிருந்து மறைக்க, அவன் பலமாக அழ ஆரம்பித்தான்.

""சரிதாண்டா, நிறுத்து, அம்மா வரத்துக்கு முன்னாடி இதெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும்; பையனை எடுத்து தெருவிலே போடு; இன்னமே அவனால ஒருத்தருக்கும் உபயோகமில்லை. நான் தரையை மெழுகிச் சுத்தம் படுத்தணும். உன்னாலே அதைச் செய்ய முடியாது.''

""ஆனா, நான் அவனைத் தனியாத் தூக்க முடியாதே... நீதானே இதை ஆரம்பிச்சே... உன்னுடைய அரம்தானே...''

""வாயை மூடுடா, அழுகுணி, காலைப் பிடிச்சு, இழுத்துண்டு போ. ஆனா ஒருத்தரும் ஒன்னைப் பார்க்காமே கவனிச்சுக்கோ... பார்த்தா நாம்பதான் அனைக் கொன்னுட்டோம்னு நினைப்பார்கள்... அப்புறம் நம்மை ஜெயிலுக்கு அனுப்பிச்சிடுவார்கள்.''

""ஆனா... அவன் ரத்தம் விஷமானதால் அல்லவா இறந்தான்.''

""அது அவாளுக்குப் புரியும் என்று நீ நினைக்கிறாயா? சரி, ஆரம்பி வேலையை.''

அவன் மேஜை மீதிருந்த சவத்தை எடுத்தான். அது தரையில் விழுந்ததால், ரத்தம் சுவரின் மீது பட்டையாக விழுந்தது; அவன் பயத்தினால் அலறினான்.

""வக்குத் தெரியாத கழுதை'' என்று சின்னவன் அவனை நோக்கிக் கத்தினான்.

""இவ்வளவுதானா?'' என்று அவன் திரும்பி வந்ததும் தன் அண்ணனை நோக்கிக் கேட்டான். அவன் சகோதரன் குனிந்து தரையை அழுத்திச் சுத்தம் செய்துகொண்டிருந்தான்.

""நான் இப்பொழுது என்ன செய்வது?'' இதைச் சொன்னவுடன் பெரியவன் குரல் துடித்தது. அவன் கண்களில் அழுகை முட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்தா சின்னவன் உள்ளம் வெற்றியுணர்ச்சியுடன் துள்ளிற்று.

""என்னை ஒருத்தரும் பார்க்கவில்லை. நான் அவனைத் தெருவில் வீசி எறிந்துவிட்டேன். அவன் ஒன்றுமே பேசவில்லை. ஆனால் அவன் குதிரைகளைப் பத்தி அசட்டுப் பிசட்டு என்று பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டே நிற்பதற்கு நான் என்ன சின்னக் குழந்தையா என்ன?''

அவர்கள் ரத்தம் படிந்த ஜலம் இருந்த வாளியை ஜலதாரையில் கவிழ்க்க எடுத்தார்கள். அப்பொழுது வாசற் கதவை யாரோ தட்டுவது அவர்கள் காதில் கேட்டது.

""நாம்ப திறக்கக் கூடாது!'' சின்னவனுக்கு மறுபடியும் அரையோடு மூத்திரம் வந்துவிடவே, அவன் தன் அண்ணனைப் பரிதாபமாகப் பார்க்க, அவனும் அரையுடன் விஸர்ஜனம் செய்தான். ஆனால் கதவை வெளியிலிருந்து தட்டுவது ஓயவில்லை. சின்னவன் போய் ஜன்னல் திரைகள் மூலம் எட்டிப் பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்தான். ""வந்து...வந்து போலீஸ்காரன்.''

""உன்னிடம் நான் என்ன சொன்னேன்?'' என்று அவன் அண்ணன் பல்லைக் கடித்துக்கொண்டு பலமாக உறுமினான். இவ்வாறு கோணி விகாரமுற்ற வாயுடன் தோன்றிய தன் சகோதரன்தான் அதுவரையில் கண்டிராத ஒரு புதுச் சகோதரனாக அவனுக்குத் தோன்றியது.

""நம்மைத்தான் அவர்கள் சந்தேகிப்பார்கள்.''

அவன் சகோதரன் பதில் பேசவில்லை. அவன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

""நாம் இதை அப்புறப்படுத்த வேண்டும்'' என்று திடீரென்று சொல்லிக்கொண்டு, அவன் மீண்டும் தரை மீது அப்பிப் பிடித்திருந்த ரத்தக் கறையை பேய் பிடித்தவன் மாதிரி தேய்த்து அழிக்கப் பாடுபட்டான்.
வெளியில் வாசலில் தட்டுவது நின்றபாடில்லை.

""அவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். கதவை உடைத்துக்கொண்டு வருவார்கள்.'' தன் தம்பியைச் சமையலறையிலிருந்து வெளியே தள்ளிக்கொண்டு வந்து, பிறகு, சமையலறைக் கதவை நன்றாக அழுத்திச் சாத்தினான்.


***


""கடவுள் புண்ணியம்'' என்று அவர்கள் தாயார் அவர்களைப் பார்த்ததும் வாய்விட்டுச் சொல்லி, அவர்களை உச்சி மோந்தாள். அப்பொழுதுதான் அவள் மீதும் கொஞ்சம் ரத்தம் படிந்தது.

""எவ்வாறு நீங்கள் இந்தக் கோலத்தில் நிற்கிறீர்கள்?'' என்று அவன் அவர்களைக் கேட்டாள். பையன்கள் ஒன்றும் பேசவில்லை.

""நீங்கள் ஏன் ஒரே ரத்த மயமாக இருக்கிறீர்கள். என்ன நடந்தது... காயம் பட்டு வலிக்கிறதா?''

பையன்கள் அவள் கேட்டதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை.

""என்னிடம் சொல்லுங்கள்; நீங்கள் உயிரோடெ இருக்கிறீர்களா?... உங்கள் மேலேதான் கார் ஏறினதா?''

""ஆமாம், ஆமாம்'' என்று பெரியவன் சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தான்.

""என் மேலேயும் ஏறிடுத்து அம்மா, நன்னா ஏறிடுத்து'' என்று சின்னவனும் சொல்லிட்டு அவனும் அழ ஆரம்பித்தான்.

""இரண்டு பேரும் என்னோடெ வாங்கோ; நான் உங்களைக் குளிப்பாட்டி விடுகிறேன்.''

அவர்களுடைய தாயார் சமையலறைக் கதவைத் தள்ளித் திறந்தாள். அவள் காலைச் சுற்றிலும் ரத்தம் குளம் கட்டி நின்றது; சுவரெல்லாம் ரத்தம் கட்டிப் பிடித்திருந்தது.

""இங்கேயா கார் உங்க மேலே ஏறினது?''

""ஆமாம், அம்மா!'' என்று சொல்லிப் பெரியவன் அழுதான்.

""இரண்டு பேர் மேலயும் ஒரே சமயத்தில் ஏறிவிட்டது அம்மா'' என்று சின்னவன் அழுதான்.

கதவருகில் திடீரென்று அந்தப் போலீஸ்காரன் வந்து சேர்ந்தான், அவன் கையில் அவர்கள் அரம் இருந்தது. ""இது என்ன?''

""எனக்கு என்ன தெரியும்? சரி, நான் இவர்களைக் குளிப்பாட்டட்டும்'' என்று அந்தத் தாயார் சொன்னாள்.
அவள் அவர்களைத் தெய்வத்தைப் போல் தூய்மையாகும்படி நீராட்டி, அவர்கள், "பயந்தபடி' அவர்களைத் தூங்க வைத்தாள். என்றாலும் அடுத்த நாள் பத்திரிகைகளில் அவர்கள் இருவரின் பெயரும் வந்துவிட்டது.

Saturday, March 6, 2010

சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்

தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.

1. சுஜாதா சிறுகதை விருது: சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு

2. சுஜாதா நாவல் விருது: சிறந்த நாவலுக்கு

3. சுஜாதா கவிதை விருது: சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு

4. சுஜாதா உரைநடை விருது: சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு

5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு(blog) அல்லது இணைய தளத்திற்கு(web site)

6. சுஜாதா சிற்றிதழ் விருது: சிறந்த சிறுபத்திரிகைக்கு

விதிமுறைகள்

1. முதல் நான்கு பிரிவுகளில் 2008-2009 ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ பதிப்பாளரோ, அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.

2. 5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த இணைய தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய முகவரி: sujathaawards@gmail.com

3. 6 ஆவது பிரிவில் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து பிரதிகள் அனுப்பப்படவேண்டும். அந்த ஆண்டில் குறைந்த பட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் ஒரு பிரதி வீதம் அனுப்பினால் போதுமானது.

4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முண்ணனி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும். தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.

5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31, 2010

6. விருதுகள் மே. 3, 2010ஆந்தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

சுஜாதா விருதுகள், உயிர்மை,11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018,

மின்னஞ்சல்:sujathaawards@gmail.com தொலைபேசி:91-44-24993448

Wednesday, March 3, 2010

இடாலோ கால்வினோ - சிறுகதை - ஒரு தம்பதியின் சிக்கல்கள்




தொழிலாளி ஆர்த்துரோ மஸொலோரி ஒரு தொழிற்சாலையில் காலை ஆறு மணிக்கு முடிவுறும் ஷிப்டில் வேலை செய்தான். வீட்டைச் சென்றடைய அவன் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. நல்ல சீதோஷ்ணத்தில் அவன் இத்தூரத்தை சைக்கிளிலும் மழை மற்றும் குளிர் காலத்தில் ட்ராம் வண்டியிலும் கடந்து சென்றான். ஆறே முக்காலிலிருந்து ஏழு மணிக்குள் ஏதோ ஒரு நேரத்தில் அவன் வீட்டை அடைந்தான். பொதுவாக அவன் மனைவி எலைட்டை எழுப்ப கடியாரத்தின் அலாரம் ஒலிப்பதற்கு சில சமயங்களில் முன்பாகவும் சில வேளைகளில் பின்பும் வீட்டிற்குள் நுழைவான்.

பல சமயங்களில் இரண்டு சப்தங்கள் - அலாரம் மற்றும் உள்ளே நுழையும் அவனுடைய காலடிச் சத்தம் எலைட்டின் மூளையில் ஒன்றின் மேல் ஒன்றாகப் பதியும். தலையணையில் முகம் புதைந்து மேலும் ஒரு சில விநாடிகளுக்குக் கச்சிதமான காலை நேர உறக்கத்தைப் பிழிந்தெடுக்க முயலும் அவளுடைய உறக்கத்தின் ஆழத்தை அத்தகைய சப்தம் சென்றடைந்தது. அவள் சடக்கென்று படுக்கையிலிருந்து எழுந்து, தன்னிச்சையாகத் தனது கைகளை உடையினுள் நுழைத்துக்கொண்டு கண்ணை மறைத்து விழுந்திருந்த முடியை ஒதுக்கிக்கொண்டாள். சமையலறைக்குள் நுழைந்திருந்த ஆர்த்துரோவின் எதிரில் அவள் அந்தத் தோற்றத்திலேயே காட்சியளித்தாள். அவன் தான் வேலைக்கு எடுத்துச் செல்லும் பையிலிருந்து காலி பாத்திரங்களான சாப்பாடு டப்பி, பிளாஸ்கை வெளியே எடுத்து கழுவுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியினுள் வைத்தான். அதற்குள்ளாகவே அவன் ஸ்டவ்வைப் பற்ற வைத்து காபி தயாரிக்க ஆரம்பித்திருந்தான். அவன் அவளைப் பார்த்ததும் அவள் இயல்பாக ஒரு கையால் தலைமுடியைக் கோதிக் கொண்டு கண்களை அகலத் திறந்தாள்.

தன் கணவன் வீட்டிற்கு வந்ததும் காணும் முதல் காட்சியாக, எப்போழுதுமே தாறுமாறான பாதி உறக்கத்தைத் தேக்கியவாறு தன் முகம் அமைந்ததற்காக அவள் ஒவ்வொரு முறையும் வெட்கப்படுவதைப்போலத் தோன்றியது. இருவர் இணைந்து உறங்கியிருந்தால் அது வேறு மாதிரி } காலையில் இருவரும் அதே தூக்கத்திலிருந்து விழிப்பின் மேல் தளத்தைத் தொடும்போது ஒரே சமனின் இருப்பார்கள். சில சமயங்களில் அவன் அலாரம் ஒலியெழுப்புவதற்குச் சற்று முன்பாகவே அவளை எழுப்ப, ஒரு சிறிய கோப்பை காப்பியுடன் படுக்கையறைக்குள் வருவான். பிறகு எல்லாமே மிக இயல்பாகப்படும். தூக்கத்திலிருந்து வெளிப்படும் போதிருக்கும் முகச்சுளிப்பு ஒருவிதமான சோம்பலான இனிமையாக மாறிப்போகும். சோம்பல் முறிக்க நீளும் நிர்வாணமான கைகள் அவன் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்ளும்.

எலைட் அவனைத் தழுவிக் கொண்டாள். ஆர்த்துரோ மழை புகாத மேல் கோட் ஒன்றை அணிந்திருந்தான். அவனை அவ்வளவு நெருக்கமாக உணரும்போது வானிலை எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் எந்த அளவிற்கு நனைந்தும் ஜில்லிட்டுப் போயும் இருக்கிறான் என்பதைப் பொறுத்து, வெளியே மழையா அல்லது பனிமூட்டமா அல்லது பனி விழுகிறதா என்பதை அவள் புரிந்துகொள்வாள். ஆனாலும் அவள் அவனைக் கேட்டாள்: "சீதோஷ்ண நிலை எப்படியிருக்கிறது?''

அவன் வழக்கமான பாணியில் முணுமுணுப்போடு எதிர்கொண்ட சிரமங்களையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, பாதி கேலியுடன் கடைசியிலிருந்து துவங்கி சொல்ல ஆரம்பித்தான்: சைக்கிளில் செய்த பயணம், தொழிற்சாலையிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட வானிலை, இதற்கு முந்தைய மாலையிலிருந்த சீதோஷ்ணத்திற்கும் இதற்குமிருந்த வேறுபாடு, வேலையின் கஷ்டங்கள்,வேலைப் பிரிவில் உலவும் வதந்திகள் இப்படியாக.

அந்நேரத்தில் வீடு சிறிதளவே சூடாக்கப்பட்டிருந்தது. ஆனால் எலைட் முழுவதுமாக ஆடைகளைக் களைந்து சிறிய குளியலறையில் குளிக்கத் துவங்கியிருந்தாள். பிறகு அவன் சந்தடியின்றி உள்ளே நுழைந்து ஆடைகளைக் களைந்து தொழிற்சாலையின் தூசு மற்றும் கிரீஸ் பிசுக்கினை மெதுவாகத் தேய்த்து அகற்றியபடி குளிக்க ஆரம்பித்தான். இருவரும் ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாய், சிறிது மரத்துப் போய், ஒருவரையொருவர் சமயங்களில் இடித்துக்கொண்டு ஒருவரிடமிருந்து ஒருவர் சோப்பு, பற்பசையை வாங்கியபடி நின்றுகொண்டிருந்தனர். பரிமாறிக் கொள்ளப்பட வேண்டிய செய்திகளைக் கூறும்போது நெருக்கத்தின் க்ஷணம் உருவானது. ஒருவர் முதுகை ஒருவர், ஒருவர் மாற்றி ஒருவர் உதவிகரமாகத் தேய்த்து விடும்போது ஒரு சிறு தழுவல் இடைப்புகுந்து பிறகு அணைப்பில் முடிந்தது.

ஆனால் திடீரென எலைட் உரத்த குரலில் கத்தினாள். "கடவுளே! நேரம் என்னவாயிற்று பாருங்கள்.'' அவள் தனது காலுறை கட்டும் பெல்ட்டையும் பிரஷ்ஷால் நீவி சீராக்கிக்கொண்டு, கொண்டை ஊசிகளை உதடுகளுக்கிடையில் பிடித்தபடி முகம் பார்க்கும் கண்ணாடிக்குத் தன் முகத்தைக் காட்டினாள். ஆர்த்துரோ அவன் பின்னால் வந்தான். ஒரு சிகரெட் அவன் வாயில் புகைந்து கொண்டிருந்தது. நின்றபடி அவன் புகைத்துக் கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். தான் ஒரு உதவியும் செய்ய முடியாத நிலையிலிருப்பதை நினைத்து சில சமயங்களில் சங்கடமாக உணர்ந்தான். எலைட் தயாராகி, நடைவழியில் மேல் கோட் ஒன்றை அணிந்தவுடன் இருவரும் ஒரு முத்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். அப்புறம் அவள் கதவைத் திறந்து படிகளில் இறங்கி ஓடிச்செல்வது கேட்டது.

ஆர்த்துரோ தனியனாக இருந்தான். படியிறங்கிச் செல்லும் அவளது காலடிச் சத்தத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்தான். அவளது காலடிச் சத்தத்தை இனியும் கேட்க முடியாதுபோது, அவளை அவன் எண்ணங்களில் பின் தொடர்ந்தான். அவளது அந்த விரைவான சிற்றடிகளை முற்றத்தின் வழியாகக் கட்டிடத்தின் வெளிக் கதவின் வழியாக, நடைபாதை மீது, ட்ராம் நிறுத்தம் வரை தொடர்ந்தான். இதற்கு மாறாக, ட்ராமின் சப்தத்தை அவனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ட்ராம் க்ரீச்சொலியிட்டபடி நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு பயணியும் படியை மிதித்து ஏறும் சப்தத்தைக் கேட்டான். அதோ அவள் ட்ராமைப் பிடித்து விட்டாள் என நினைத்தான். அவளைத் தினந்தோறும் தொழிற்சாலைக்கு இட்டுச்செல்லும் பதினொன்றாம் நெம்பர் ட்ராமில் ஆண்கள், பெண்கள், தொழிலாளர் கும்பல்களுக்கு மத்தியில் தன் மனைவி, ட்ராம் கைப்பிடியைத் தொற்றிக்கொண்டு நிற்பதை அவனால் காட்சிப்படுத்த முடிந்தது. அவன் சிகரெட் துண்டை அணைத்த பின் ஜன்னல் ஷட்டர்களை இழுத்து மூடி, அறையை இருட்டாக்கி, படுக்கையில் விழுந்தான்.

எலைட் எழுந்தபோது, எப்படி விட்டுச்சென்றாளோ அப்படியே இருந்தது படுக்கை. ஆனால் அவனுடைய படுக்கைப் பகுதி மட்டும் இப்போதுதான் விரிக்கப்பட்டது போல கசங்கலில்லாமல் இருந்தது. அவன் படுக்கையின் தனது பகுதியில் சரியாகப் படுத்துக் கொண்டான். ஆனால் சிறிது நேரத்தில் படுக்கையில் தன் மனைவி விட்டுச் சென்ற, வெதுவெதுப்பு நிலைத்திருந்த பகுதிக்கு ஒரு காலை அவன் நீட்டினான். பிறகு இன்னொரு காலையும் அங்கே நீட்டினான். எனவே, சிறிது சிறிதாக அவன் எலைட் படுத்திருந்த பகுதிக்கு, இன்னமும் அவளுடைய உடலின் வடிவத்தைத் தக்க வைத்துக்கொண்டிக்கிற அந்தக் கதகதப்பின் குழிவிற்குள் முழுவதுமாக நகர்ந்தான். எலைட்டின் தலையணைக்குள் அவளுடைய வாசத்திற்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டே அவன் உறங்கிப் போனான்.

எலைட் மாலையில் வீடு திரும்புகிற நேரத்தில் ஆர்த்துரோ சுறுசுறுப்பாக வீட்டில் வளைய வந்துகொண்டிருந்தான். ஸ்டவ்வைப் பற்றவைத்துவிட்டு எதையோ சமைத்துக்கொண்டிருந்தான். படுக்கையை ஒழுங்குபடுத்துவது, வீட்டைப் பெருக்குவது, அழுக்குத் துணிகளை ஊற வைப்பது போன்ற சில வேலைகளை இரவு உணவிற்கு முன்பாக அவன் செய்து முடிப்பான். இவை எல்லாவற்றையும் எலைட் விமரிசிப்பாள். ஆனால் ஆர்த்துரோ, உண்மையில் இந்த வேலைகளைச் செய்ய மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. மாறாக அவன் அவளுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் செய்யும் ஒருவிதச் சம்பிரதாயங்கள் அவை, வீட்டின் சுவர்களுக்குள் இருந்தபடியே அவளை அவன் பாதி வழியில் எதிர்கொண்டு சந்திப்பதைப் போன்று. மாலையில் கடைகளுக்குச் செல்ல முடிகிற பெண்கள் வசிக்கும் அந்தச் சுற்று வட்டாரத்தின் தெருவிளக்குகள் எரியத் தொடங்கும்போது, தாமதமாகத் துவங்கிய பரபரப்பான சூழலினூடே, எலைட் கடைகளைக் கடந்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஆரத்துரோ இவ்வேலைகளைச் செய்வான்.

இறுதியில் மாடிப்படிகளில் ஏறும் அவளுடைய காலடிச் சத்தத்தை அவன் கேட்டான். இச்சத்தம் காலையில் இருந்ததைவிட முற்றிலும் வேறாக கனமாகக் கேட்டது. ஏனெனில், எலைட் ஒரு நாளைய உழைப்பிற்குப் பின் களைத்துப் போயும் கடைகளில் வாங்கிய பொருட்களின் கனத்தைச் சுமந்தபடியும் மாடிப்படியேறி வந்தாள். ஆர்த்துரோ மாடிப்படிகளின் மட்டப் பகுதிக்குச் சென்று பொருட்கள் நிறைந்த பையை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு பேசியவாறே அவளுடன் வீட்டினுள் நுழைந்தான். எலைட் தன் கோட்டைக் கூட கழற்றாமல் சமையலறையின் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தாள். அவன் பையிலிருந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தான். பிறகு எலைட் ""சரி, நாமிருவரும் சற்று சுதாரித்துக்கொள்வோம்'' என்றாள். அவன் எழுந்து நின்று மேல் கோட்டைக் கழற்றி வீட்டினுள் அணியும் அங்கியைப் போட்டுக்கொண்டாள். அவர்கள் உணவைத் தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்களிருவருக்குமான இரவு உணவு, தொழிற்சாலையில் இரவு ஒரு மணி இடைவேளையில் அவன் சாப்பிட எடுத்துச் செல்லும் உணவு மற்றும் அவன் தூங்கி எழும்போது தயாராக இருக்கப்போகும் காலை பலகாரம் ஆகியவற்றைத் தயாரித்தனர்.

அவன் விட்டுவிட்டுச் சிறுசிறு வேலைகளைச் செய்தபின் சற்று நேரம் நாற்காலியில் உட்கார்ந்து அவன் என்ன வேலை செய்ய வேண்டும் எனக் கூறினாள். இதற்கு மாறாக அவனைப் பொறுத்தவரை அவன் ஓய்வாக உணர்ந்தான். தீர்மானத்தோடு காரியங்களைச் செய்தான். ஆனால் எப்போதுமே சிறிய மறதியாய், அவன் மனது பிற விஷயங்களில் ஈடுபட்டவாறிருந்தது. இத்தகைய சமயங்களில் ஒருவர் மற்றவரை எரிச்சலடையச் செய்து, கடுமையான வசைகளைப் பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனெனில் அவன் செய்யும் காரியங்களில் மேலும் அதிக கவனம் கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினாள். அல்லது அவன் தன்னிடம் மேலும் பிணைப்பாகவும், நெருக்கமாகவும் இருந்து தன்னை அதிகப்படியாக ஆறுதல்படுத்த வேண்டுமென்று அவள் விரும்பினாள். ஆனால் எலைட் வீட்டிற்குள் நுழைந்த போதிருந்த முதல் உத்வேகத்திற்குப்பிறகு, அவனுடைய மனம் அதற்குள்ளாகவே வீட்டிற்கு வெளியே அலை பாய்ந்தது. அவன் சிறிது நேரத்தில் வேலைக்குச் சென்றாக வேண்டியிருப்பதால் தன்னைத் துரிதப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தான்.

உணவருந்துவதற்கான மேசையைத் தயார் செய்து, பின்னர் அவர்கள் மேசையிலிருந்து எழவேண்டியில்லாதபடிக்கு, சமைக்கப்பட்ட உணவுகளைக் கைக்கெட்டும் தூரத்தில் மூழ்கடித்த கணம். இருவரும் சேர்ந்திருக்கும் நேரம் மிகக்குறைவானது என்ற சிந்தனையினாலும் அவ்விடத்திலேயே இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துகொள்ள வேண்டுமென்ற தவிப்பினாலும் உணவு நிரம்பிய ஸ்பூனை வாயருகே கொண்டு செல்வது கூடச் சிரமமாக இருந்தது.

ஆனால் பாத்திரத்தில் காபி பொங்கி வழிவதற்கு முன்பாகவே அவன் தன் சைக்கிளினருகே சென்று எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். பிறகு இருவரும் இறுகத் தழுவிக் கொண்டனர். அப்போதுதான், தன் மனைவி எவ்வளவு மிருதுவாகவும் கதகதப்பாகவும் இருக்கிறாளென்பதை ஆர்த்துரோ உணர்ந்த மாதிரி தோன்றியது. ஆனால் உடனே அவன் சைக்கிளைத் தோளில் சுமந்து எச்சரிக்கையுடன் படியிறங்கிப் போனான்.

எலைட் பாத்திரங்களைக் கழுவினாள். வீடு முழுவதையும் மேற்பார்வையிட்டாள். மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்து ஆர்த்துரோ செய்துவிட்டுச் சென்ற வேலைகளை மறுபடியும் சீர்படுத்தினாள். இப்பொழுது அவன் விளக்குகள் குறைவான தெருக்களின் வழியே விரைந்து சென்று கொண்டிருந்தான். ஒருவேளை அவன் அதற்குள்ளாக காஸ் டாங்கைக் கடந்து சென்றிருக்கக் கூடும்.




எலைட் படுக்கையில் படுத்து விளக்கையணைத்தாள். தனது பகுதியில் படுத்திருந்த அவள் கணவனுடைய கதகதப்பைத் தேடி, ஒரு காலை அவன் படுக்கும் பகுதிக்கு நகர்த்தினாள். ஆனால் ஒவ்வொரு முறையும் தான் உறங்கும் இடம்தான் அதிக கதகதப்பாக இருப்பதை உணர்ந்தாள். ஆர்த்துரோவும் அங்கே உறங்கியதற்கான அடையாளத்தினால் அவள் பெரும் மன நெகிழ்ச்சியை உணர்ந்தாள்.

நூல்: மஞ்சள்பூ
(இடாலோ கால்வினோ, டொனால்ட் பார்த்தெல்மே, இஸபெல் ஆலெண்டே, கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ், ஜூலியோ கொர்த்தஸôர் சிறுகதைகள்)

தொகுப்பு: தளவாய்சுந்தரம்

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

Sunday, February 28, 2010

ஆல்பெர் காம்யு - விருந்தாளி - சிறுகதை




ஆல்பெர் காம்யு பற்றி க.நா.சு எழுதியது:

பிரான்ஸ் நாட்டின் சிந்தான வரலாற்றில் மறுக்க முடியாத ஓர் இடத்தைப் பெறுபவர் ஆல்பெர் காம்யு. ழான் பால் சார்த்தரின் இருத்தலியல் (Existentialism) கோட்பாட்டுடன் இவரது சிந்தனைகள் பெரிதும் பிணைக்கப்பட்டிருந்தாலும், "தான் ஒரு கலைஞன்' என்று மட்டும் இவர் உணர்த்திக்கொண்டேயிருந்தார். மனிதம் சிதைந்து தன் மேன்மையை இழந்து வந்த ஒரு காலகட்டத்தில் வாழ்வை அதன் சகல பரிமாணங்களிலும் தீவிரமாக வாழ்ந்துவிட முனைந்த இந்த மனிதன் ஒரு கலைஞனாகவும் ஒரு தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர்.

1913-ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் ப்ரெதன் - ஸ்பானிஷ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தார். முப்பது ஆண்டுகள் அல்ஜீரியா எனப்படும் வட ஆப்பிரிக்காவில் பல்வேறு தொழில்கள் செய்து (அல்ஜீரியர்ஸ் கால்பந்துக் குழுவிற்கு கோல் கீப்பராக இருந்ததும் இதில் அடங்கும்- வாழ்ந்து வந்தார்.

பிரான்ஸில் குடியேறிய பின்னர் ஜெர்மானிய ஆதிக்கத்தின் போது எழுந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிர பங்காற்றினார். "Combat' என்ற ரகசிய வெளியீட்டுப் பத்திரிகையின் ஆசிரியரானார். பின்னர் பத்திரிகைத் துறையை விட்டு விலகி முழுதுமாய் எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1937}இல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. அந்நியன் (þThe outsider 1942) இவரது முதல் நாவல். தொடர்ந்து வீழ்ச்சி (þthe fall) "பிளேக்' (The plague) என்ற நாவல்களும், காலிகுலா (Caligula) முதலிய நாடகங்களும் சிசிபஸின் புராணம் (The myth of sysyphus) புரட்சிக்காரன்(The Rebel) போன்ற தத்துவக் கட்டுரைகளும் இவரது முக்கியமான படைப்புகளாகும்.

இன்றைய மனிதனின் மனசாட்சிப் பிரச்னைகளுக்கு தீர்மானமான கலை வடிவம் தந்தவர் என்ற அடிப்படையில் 1957-ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது நாற்பது.

இலக்கியவாதியாகவும், தத்துவவாதியாகவும் வாழ்ந்த காம்யு சிறந்த நாடக ஆசிரியரும், நாடக இயக்குநரும்கூட. 1940-ல் பாரிஸ் நகரில் அரங்கேறிய பல உன்னத நாடகங்களில் இவரது பங்கும் குறிப்பிடத்தக்கது.

ஆல்பெர் காம்யுவின் மொத்த சிந்தனா அமைப்பையும் புரிந்துகொள்ள நீண்ட தேடல் அவசியம். சில நேரங்களில் முரண்பாடுகளின் உச்சியில் தன் படைப்புகளில் காணக் கிடைக்கும் காம்யு சில நேரங்களில் அவநம்பிக்கை வாதியாகவும் (Pessimist) தோன்றுகிறார். என் பால்ய கால வறுமை எனக்குத் துரதிருஷ்டவசமாக இருந்ததில்லை என்று சொல்லியபோதும் வறுமை காம்யுவின் சிந்தனையைப் பாதித்த ஒரு முக்கியமான வாழ்நிலை உண்மை. இந்த வறுமைதான் அவரை அவநம்பிக்கைவாதியாக நமக்குக் காண்பிக்கிறது. எனினும் இதையெல்லாம் தாண்டி நிற்கும் இவரது தீவிரமான வாழ்வும், கலையும்தாண் இந்த நூற்றாண்டின் "மேற்கத்திய மனசாட்சி'யைப் பிரதிபலிக்கிறது.





- விருந்தாளி -

(THE GUEST
)


தமிழில்: க.நா.சுப்ரமண்யம்


சரிவான பாதையிலே தூரத்தில் தன்னை நோக்கி ஏறி வந்த இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றார் ஆசிரியர். ஒருவன் குதிரை மேல் வந்தான்; மற்றொருவன் நடந்து வந்தான். இன்னும் செங்குத்தான குன்றை அவர்கள் அடையவில்லை. அதைத் தாண்டியே அவர்கள் பள்ளிக்கூடத்தை அடைய முடியும். ஏறி வருவது சிரமமான காரியம்தான். பனி வேறு பெய்ததால் சற்று மெதுவாகவே வந்தனர் அவர்கள். மனித சஞ்சாரமேயற்ற சரிவு அது. காலடியிலிருந்த கற்களில் குதிரை அடிக்கடி இடறிற்று. காதில் எதுவும் விழவில்லை - ஆனால் குதிரையின் மூச்சுக்காற்று வெண்மையான பனிப்படலமாகத் தெரிந்தது. ஒருவனுக்கு வழி தெரியும்போல இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னரே பனிக்கடியில் பாதை மூடிவிட்டது. எனினும் பாதை தெரிந்தே வந்தனர் அவர்கள். குன்றேறி வர அவர்களுக்கு அரைமணி நேரமாவது ஆகும் என்று எண்ணினார் ஆசிரியர். குளிராக இருந்ததால் உள்ளே போய், தனக்கு அணிந்துகொள்ள ஒரு ஸ்வெட்டர் எடுத்து வந்தார். குளிர்ந்து காலியாக இருந்த வகுப்பறையைத் தாண்டினார். கரும்பலையில் நாலு வர்ணங்களில் ஃபிரான்சு தேசத்து நாலு நதிகளும் மூன்று நாட்களாகக் கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. எட்டு மாதங்களாக மழையோ, மேகமோ இல்லாதிருந்தது - திடீரென்று மூன்று நாட்களுக்கு முன் பனிப்புயல் வீசியது - அக்டோபர் மத்தியில் சுற்று வட்டத்து மலைச்சரிவுகளிலே வசித்த இருபது மாணவர்களும் வருவதையே நிறுத்தி விட்டார்கள். பனி ஓய்ந்த பின் அவர்கள் வருவார்கள். தனக்கு வசிக்க இருந்த ஒரே அறையில் மட்டும் கணப்பு மூட்டி உஷ்ணமாக்கி வைத்திருந்தார் ஆசிரியர் டாரு. வகுப்பறைக்குப் பக்கத்து அறை அது. மலைமேல் போக கிழக்கே வாசல் இருந்தது. வகுப்பறை ஜன்னல்கள் போலவே அவர் அறை ஜன்னல்களும் தெற்கு நோக்கியிருந்தன. பனியில்லாத தெளிவான நாட்களில் மலைத்தொடருக்கப்பால் பாலைவனம் போகும் பள்ளத்தாக்கு தெரியும் - அந்த ஜன்னல் வழியாக.

அறையில் உஷ்ணக் கதகதப்பு ஏறியதும் டாரு முதலில் அந்த இரண்டு மனிதர்களைக் கண்ட ஜன்னலுக்குத் திருப்பினார். அவர்கள் இப்போது கண்ணில் படவில்லை. கடைசிக் குன்று ஏறத் தொடங்கியிருப்பார்கள். வானம் அவ்வளவு இருட்டாக இல்லை - பனி விழுவது சற்றே நின்றிருந்தது. அழுக்குப் படிந்த ஒளியோடு தொடங்கிய காலைப் பொழுது, மேகங்கள் அகன்றும் இருட்டாகவே தான் இருந்தது - ஒளி கூடவில்லை. மாலை இரண்டு மணிக்கும் கூட அப்போதுதான் பொழுது விழுந்ததுபோல இருந்தது. ஆனாலும் முந்திய மூன்று நாட்களையும் விட இது தேவலை. இருளும் அடர்ந்து பனியும் விழுந்து கொண்டிருந்தது அந்த மூன்று நாட்களும். காற்றும் விட்டுவிட்டு விசிறி விசிறி அடித்துக் கொண்டிருந்தது. தன் அறையிலேயே நெடுநேரம் டாரு முடங்கிக் கிடக்க வேண்டியதாக இருந்தது - வேறு எதுவும் செய்வதற்கில்லை. அவசியமானால் கணப்புக்குக் கரி கொணரவோ அல்லது கோழிக்குஞ்சுகளுக்குத் தீனி வைக்கவோ போனார் கொட்டகைக்கு. அதிருஷ்டவசமாக டாஜ்டிட்டிலிருந்து சாமான்கள் கொண்டு வரும் ட்ரக் இரண்டு நாட்களுக்கு முன்தான் வந்து போயிருந்தது. வடக்கே அருகிலுள்ள கிராமம் டாஜ்டிட்தான். இன்னும் இரண்டு நாள் கழித்து டிரக் மேலும் தேவையான சாமான்களைக் கொண்டு வரும்.

தவிரவும் அங்கு ஒரு முற்றுகை நேர்ந்துவிட்டால் கூடச் சமாளித்துக் கொள்வதற்கும் போதுமான உணவுப் பண்டங்கள் இருந்தன. மழை பெய்யாத காரணத்தால் விளைச்சல் காணவில்லை. விளைச்சல் காணாது பட்டினி கிடக்க வேண்டி வந்துவிட்ட அவர் மாணவர்களின் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு என்று பள்ளி ஆசிரியருக்கு அரசாங்கம் தந்திருந்த கோதுமை மூட்டைகள் அந்தச் சின்ன அறையிலே அங்குமிங்குமாக அடைத்துக் கொண்டு கிடந்தன. உண்மையில் அவர்கள் எல்லோருமே ஏழைகள் என்பதனால் பஞ்சத்திலடிக்கப்பட்டவர்கள்தான். ஒவ்வொரு நாளும் டாரு குழந்தைகளுக்குத் தானியத்தை அளந்து - இவ்வளவென்று - தருவார். இந்த மூன்று நாட்களும் அது கிடைக்காததால் அவர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள். யாராவது பெற்றவனோ, சகோதரனோ தானியம் வேண்டும் என்று மாலையில் வந்தாலும் வருவான். அடுத்த அறுவடை வரையில் அவர்கள் சமாளிக்க வேண்டுமே! கப்பல் கப்பலாக ஃபிரான்சிலிருந்து கோதுமை வந்தது. பஞ்சத்தின் மோசமான நாட்கள் தீர்ந்து விட்டன. ஆனால் அந்தக் கடும் ஏழ்மையை மறப்பது என்னவோ சிரமம்தான். சூரிய ஒளியிலே கந்தலாடை உடுத்தி கண்குழி விழுந்த பட்டினிப் பட்டாளத்தை மறக்க இயலுமா? மழையில்லாமல் தீய்ந்து கருகிய நிலமும், புழுதி எழுப்பிய வயல்களும் காலடியிலே கல்லு கூடப் பொடியாகும் நிகழ்ச்சியும் மறப்பதற்கில்லை. ஆயிரக்கணக்கான ஆடுகள் இறந்தன. சில மனிதர்களும்தான் -எத்தனை, எங்கே என்று ஒருவருக்கும் தெரியாது.

இந்த ஏழ்மையோடு ஒப்பிடும்போது இத்தனை தனிமையான இடத்தில் பள்ளிக்கூடம் நடத்திக்கொண்டிருந்த தன்னை ஒரு பிரபு என்றுதான் சொல்ல வேண்டும். தனக்குக் கிடைத்தது,இருந்தது போதுமென்ற மனத்துடன் வாழ்ந்தார் அவர். இந்தக் கடினமான வாழ்வு அவருக்கு உகந்ததாக இருந்தது. அவர் சுவர்கள் வெள்ளை வைத்திருந்தன. படுத்து உறங்க குறுகிய கட்டில் - வர்ணம் தீட்டாத மர அலமாரிகள் -பின் பக்கத்துக் கிணறு - வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களும் குடிநீரும் - இதுதான் அவர் வாழ்வு . திடீரென்று பனிபெய்யத் தொடங்கியது - மழை என்கிற சுவடேயில்லாமல். இந்தப் பிராந்தியமே அப்படித்தான். இங்கு வாழ்க்கை மகா கடினமானது. மனிதர்களும் மோசந்தான். அவர்கள் இருப்பதால் இப்பிரதேசத்து வாழ்வு சுலபமாகி விடுவதில்லை. ஆனால் டாரு இந்த வாழ்க்கைக்கே பிறந்தவர் - அவர். மற்றவர்களைத்தான் அந்நியப் பேர்வழிகளாக உணர்ந்தார்; வேறு இடத்துக்குப் போனால் தன்னை அந்நியனாக உணர்ந்தார்.

பள்ளிக் கட்டிடத்து வெளி வராண்டாவில் வந்து நின்றார் அவர். குன்றில் பாதிவழி ஏறி வந்து கொண்டிருந்தனர் இருவரும். குதிரை மேல் வந்தது பால்டுச்சி - போலீஸ்காரன். அவனை வெகுநாட்களாகவே அவருக்குப் பழக்கமுண்டு. இரண்டாவது பேர்வழி ஒரு அராபியன் - அவனைக் கயிற்றில் பிணைத்துக் கயிற்றின் ஒரு கோடியைத் தன் கையில் பிடித்திருந்தான் பால்டுச்சி; அராபியனின் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன; தலை குனிந்தபடியே குதிரைக்குப் பின் நடந்து வந்தான் அவன். டாருவைப் பார்த்துக் கையை ஆட்டினான் போலீஸ்காரன் - அதற்குப் பதில் சைகை செய்யவில்லை அவர். வெளிரிட்ட நீல ஜெல்லாபா சட்டை அணிந்து, காலில் செருப்புகளுடன், ஆனால் கனமான கம்பளி ஸôக்ஸ் அணிந்து தலையில் சேச்சே முண்டாசு கட்டியிருந்த அந்த அராபியனையே பார்த்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவராக நின்றார் டாரு. அவர்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். அராபியனை வேகமாக இழுத்துக் குதிரை துன்புறுத்தாத வண்ணம் அதை அடக்கிப் பிடித்துக்கொண்டு மெதுவாகவே வந்தான் போலீஸ்காரன்.

கூப்பிடு தூரத்தில் வந்ததும் பால்டுச்சி உரக்கச் சொன்னான். ""எல் அமேரிலிருந்து இந்த மூன்று கிலோ மீட்டர்களையும் கடக்க ஒரு மணி நேரமாயிற்று'' என்று கூவினான். டாரு பதில் தரவில்லை. தடித்த ஸ்வெட்டரை அணிந்துகொண்டு குள்ளமாக, சற்று தூரமாகக் காட்சியளித்தபடி நின்ற அவர் அவர்கள் தன்னை அணுகுவதைக் கவனித்துக் கொண்டே நின்றார். அராபியன் ஒரு தடவை கூடத் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. பள்ளிக் கட்டிட வாசலை அவர்கள் அடைந்ததும், ""ஹலோ'' என்றார் டாரு. ""உள்ளே வாருங்கள். குளிருக்கு அடக்கமாக, கதகதப்பாக இருக்கும்'' என்றார். கையில் பிடித்திருந்த கயிறு முனையை விட்டுவிடாமல் கீழே குதித்தான் பால்டுச்சி. அவன் கால்களில் வலி கண்டிருந்தது போலும். குத்திட்டு நின்ற மீசைக்குக் கீழே அவன் உதடுகள் டாருவைக் கண்டு புன்சிரிப்பால் மலர்ந்தன. பழுப்பேறிய நெற்றிக்குக் கீழே சிறிய இருண்ட கண்கள். முகவாய்க்கட்டை உதடுகளைச் சுற்றி பல சுருக்கங்கள் விழுந்திருந்தன. தோற்றத்தில் அவன் ஒரு ஆராய்ச்சி மாணவன். புஸ்தகப்புழு என்று கூடச் சொல்லலாம் போல இருந்தது. டாரு குதிரை லகானைப் பிடித்து அதைப் பின்பக்கம் கொட்டகைக்கு இழுத்துச் சென்றார். பிறகு வந்து இருவருடனும் பள்ளியில் அறையில் சேர்ந்து கொண்டார். பின்னர் அவர்களைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். ""வகுப்பறையை உஷ்ணமாக்குகிறேன். இதைவிட அது செüகரியமாக இருக்கும் நமக்கு'' என்றார். மீண்டும் அவர் தன் அறைக்குள் வந்தபோது, பால்டுச்சி ஆசனத்தில் வீற்றிருந்தான். அராபியனுடன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டிருந்தான். அராபியன் கணப்பருகில் குந்தியிருந்தான். அவன் கைகள் இன்னமும் கயிற்றால் கட்டப்பட்டேயிருந்தன. "சேச்சே' முண்டாசை சற்று மேலுக்குச் சாய்ந்தாற் போலத் தள்ளியிருந்தான். ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் டாருவின் கண்களில் பட்டது அவனுடைய தடித்த உதடுகள்தான். வழுவழுப்பாக நீக்ரோ உதடுகள் போலத் தடித்திருந்தன அவை. முண்டாசுக்குக் கீழே இருந்த நெற்றி அவன் பிடிவாதக்காரன் என்பதை அறிவுறுத்தியது. குளிரால் வர்ணம் சற்றுப் போன தடித்ததோல், அவன் முகத்திலே ஒரு அமைதியின்மையும், புரட்சி பாவமும் இருந்தது என்று டாரு கவனித்தார். தன்னை நேருக்கு நேர் நிமிர்ந்து அந்த அராபியன் பார்த்தபோது அப்படித்தான் டாருவுக்குத் தோன்றியது.

""அடுத்த அறைக்குப் போ''.

""நான் உனக்குக் கொஞ்சம் மிண்ட் தேநீர் தயாரித்துத் தருகிறேன்'' என்றார் டாரு.

""தாங்க்ஸ்'' என்றான் பால்டுச்சி. ""என்ன தொல்லை இந்த வேலையிலே? எப்படா ரிடையர் ஆகப் போகிறேன் என்று இருக்கிறது.'' தனது கைதியை நோக்கி அராபிய மொழியில் கூறினான். ""வா! வா! நீயும்தான்'' என்றான்.

அராபியினும் எழுந்தான்; மெதுவாகக் கட்டப்பட்ட தன் கைகளை முன்னால் நீட்டிக் கொண்டு வகுப்பறைக்குள் சென்றான். தேநீருடன் டாரு ஒரு நாற்காலியையும் கொண்டு வந்தார். ஆனால் பால்டுச்சி மிகவும் அருகிலிருந்த ஒரு மாணவனுடைய சரிவு மேசையின் மேல் வீற்றிருந்தான் -கணப்பைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். கணப்போ மேஜைக்கும் ஜன்னலுக்கும் இடையில் இருந்தது. கைதியின் பக்கம் தேநீரை நீட்டுகிறபோது டாரு அவன் கட்டப்பட்ட கைகளைக் கண்டு சற்று தயங்கினார்.

""கட்டை அவிழ்த்துவிடலாமே!''

""அவிழ்த்துவிடலாம். பிரயாணத்தை உத்தேசித்துக் கட்டியதுதான்'' என்றான் பால்டுச்சி.

அவன் எழுந்திருக்க முயன்றான். அதற்குள் டாரு அந்த அராபியன் பக்கத்தில் மண்டியிட்டு, தேநீர்க் கோப்பையைத் தரையில் வைத்துவிட்டு, கைகளைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டார். ஒரு வார்த்தையும் பேசாமல், ஜுரம் அடித்தவனுடையது போன்ற கண்களுடன் அராபியன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். கைகள் விடுவிக்கப்பட்டதும் கட்டின் இறுக்கத்தால் வீங்கியிருந்த மணிக்கட்டுகளைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான். தேநீர்க் கோப்பையை எடுத்து சூடான தேநீரை அவசர அவசரமாக விழுங்கினான்.

""நல்லது'' என்றார் டாரு. ""நீ எங்கே கிளம்பினாய்?'' தேநீர்க் கோப்பையிலிருந்து மீசையை வெளியே எடுத்தான் பால்டுச்சி.

""இங்கேதான் ஐயனே!''

""வேடிக்கையான மாணவர்கள்தான்! இரவு இங்கு தங்குவீர்களா?'' ""இல்லை. நான் அல்மேருக்குத் திரும்பிப் போகிறேன். ஆசாமியை நீ டாஜ்டிட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவனைப் போலீஸ் தலைமைக் காரியாலயத்தில் எதிர்பார்க்கிறார்கள்.''

பால்டுச்சி டாருவைப் பார்த்து ஒரு தோழமையுடன் சிரித்தான் ""இது என்ன கதை இது? என்னிடம் விளையாடுகிறாயா நீ?'' என்றார் டாரு.

""இல்லை ஐயனே! எனக்குக் கிடைத்த உத்தரவு இதுதான்.''

""உத்தரவா! யாருக்கு? எனக்கா?'' டாரு தயங்கினார். அந்தக் கிழட்டுக் கார்ஸிகன் போலீஸ்காரனுக்கும் வருத்தம் தர அவர் விரும்பவில்லை. ""அதாவது, அது என் வேலையில்லையே!''

""என்ன? அப்படியென்றால் என்ன அர்த்தம்? யுத்த காலத்தில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியதுதான்.''

""யுத்த காலம் வரும் வரையில் நான் காத்திருக்கிறேன்.''

பால்டுச்சி தலையை ஆட்டினான்.

""அது சரி. ஆனால் உத்தரவு இருக்கிறது - உன் அளவிலும்தான். ஏதோ விசேஷம் இருக்கிறது என்று தோன்றுகிறது. புரட்சி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு அம்சத்தில் யுத்த காலம்தான்.''

டாரு இன்னமும் பிடிவாதமாகவே காணப்பட்டார்.

""கேளும் ஐயனே!'' பால்டுச்சி சொன்னான். "" எனக்கு உன்னைப் பிடிக்கும், இருந்தாலும் நீ விஷயத்தைப் புரிந்து கொள்ள முயலவேண்டும். எல் அமேரில் நாங்கள் ஒரு டஜன் பேர்வழிகள்தான் இருக்கிறோம். பொறுப்பு பூராவும் எங்களுடையது. ஆகவே நான் அதிகநேரம் அங்கிருந்து அப்பால் போய்விட முடியாது. இந்த மனிதனை உன்னிடம் ஒப்புவித்து விட்டு தாமதமன்னியில் திரும்பச் சொல்லி எனக்கு உத்தரவு. அங்கு அவனை வைத்திருக்க இயலாது - அவன் கிராமத்தவர் அசையத் தொடங்கிவிட்டனர். அவனை விடுவித்துக் கொண்டு போக அவர்கள் தயாராக இருந்தனர். நாளை மாலைக்குள் அவனை டாஜ்டிட்டில் கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டும். உன்னைப் போல பலசாலிக்கு இருபது கிலோ மீட்டர்கள் பற்றிக் கவலை என்ன வந்தது? அதற்குப் பிறகு உன் மாணவர்களை நாடி உன் செüக்கியமான வாழ்வுக்குத் திரும்பிவிடலாம்.''

சுவருக்கு அப்பால் குதிரை கனைப்பதும், பூமியைக் காலால் உதைப்பதும் காதில் விழுந்தது. டாரு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். பனி மூட்டம் விலகி, மலைகள் மேல் வெய்யில் ஒளிபடரத் தொடங்கிவிட்டது. பனிப்புயல் அகன்றுவிடும். பனியெல்லாம் உருகிய பின்னர், மீண்டும் சூரியன் ஆட்சி தொடங்கிவிடும். மனிதன் வரமுடியாத பிரதேசமாகி விடும் அது மீண்டும்.

""அது சரி - அவன் என்ன செய்தான்?'' என்று பால்டுச்சியைப் பார்த்துக் கேட்டார் டாரு. ஆனால், போலீஸ்காரன் பதில் சொல்ல வாயைத் திறக்கும்முன், ""அவன் ஃபிரெஞ்சு பேசுவானா?'' என்றார்.
""தெரியாது - ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அவனை ஒரு மாதமாகத் தேடிக் கொண்டிருந்தோம். } அவன் கிராமத்தார் அவனை ஒளித்து வைத்திருந்தனர். அவன் தனது உறவினன் ஒருவனைக் கொன்றுவிட்டான்.''

""நமக்கு எதிரியா அவன்?''

""இல்லை என்று எண்ணுகிறேன். ஆனால் இதெல்லாம் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.''

""எதற்காகக் கொன்றான்?''

""ஏதோ குடும்பத் தகராறு. ஒருவன் மற்றவனுக்குத் தானியம் தர வேண்டுமாம். அப்படி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு அரிவாளால் சீவிவிட்டான் - கழுத்தை வெட்டிவிட்டான். "சதக்' என்று ஆட்டின் கழுத்தைச் சீவுவதைப் போல.''

தன் கழுத்தில் கை வைத்து எப்படி என்று இழுத்துக் காட்டினான் பால்டுச்சி. இதைக் கண்ட அராபியன் கவலையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். டாருவுக்குத் திடுதிப்பென்று கோபம் வந்தது - அழுகிப் போன வஞ்சம் என்றும், சகமனிதனிடம் வெறுப்பு என்றும், ரத்த வெறி கொண்டும் செயல்படுகிற மனிதர்கள் மேல் வெறுப்புத் தோன்றியது.

ஆனால் அடுப்பின் மேலே கெட்டில் பாடியது. பால்டுச்சிக்கு மேலும் தேநீர் தந்தார். சற்றுத் தயங்கி விட்டு அரேபியனுக்கும் மீண்டும் தேநீர் தந்தார். இரண்டாவது தடவை கிடைத்த தேநீரையும் அவசரம் அவசரமாகப் பருகினான் அந்த அராபியன். அவன் கைகளைத் தூக்கியபோது சட்டை விலக, அவனுடைய மெலிந்த தசைநார் வலுவான மார்பு பிரதேசத்தையும் டாரு பார்த்தார்.

""தாங்க்ஸ் ஐயனே! நான் கிளம்புகிறேன் இப்போது'' என்றான் பால்டுச்சி.

எழுந்து அந்த அராபியனை அணுகியபடியே தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு கயிரை எடுத்தான்.

""என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார் டாரு அமுத்தலாக. பால்டுச்சி தடுமாறியவனாகத் தன் கையிலிருந்த கயிறைத் தூக்கிக் காட்டினான்.

""வேண்டாம். கட்டாதே.''

""உன் இஷ்டம். உன்னிடம் துப்பாக்கியிருக்கிறதா?''

""என் ஷாட்டுகன் இருக்கிறது.''

""எங்கே?''

""என் பெட்டியில் இருக்கிறது.''

""படுக்கையருகே தயாராக வைத்திருக்க வேண்டும் நீ அதை.''

""எதற்காக? நான் எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?''

""பைத்தியக்காரன் நீ! புரட்சி வந்துவிட்டால் ஒருவரும் ஆபத்தில்லாதவர்கள் இல்லை. எல்லோருக்கும் ஒரு கதிதான்.''

""என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். அவர்கள் அணுகுவதை வெகு தூரத்துக்கப்பாலிருந்தே நான் காண முடியும்.''

பால்டுச்சி சிரிக்க ஆரம்பித்தான். பிறகு தன் மீசையால் தன் பற்களைக் கெட்டியாக மூடிக் கொண்டான். ""நேரம் இருக்குமா?'' அதுசரி. அதைத்தான் சொன்னேன் நானும். நீ அரைப் பைத்தியம். அதனால்தான் உன்னிடம் நான் பிரியம் வைத்திருக்கிறேன். என் மகன் கூட அப்படித்தான் இருந்தான்.''

அதேசமயம் அவன் தன் ரிவால்வரை எடுத்து மேசைமேல் வைத்தான். ""இதை வைத்துக்கொள். இங்கிருந்து எல் அமேர் போவதற்கு இரண்டு துப்பாக்கி எனக்குத் தேவையில்லை.''

கறுப்பு வர்ணம் அடித்திருந்த மேஜை மேல் ரிவால்வர் பளபளத்தது. போலீஸ்காரன் தன் பக்கம் திரும்பியபோது பள்ளி ஆசிரியர் தோல், குதிரை இவற்றின் வாடையை உணர்ந்தார்.

""கேள் பால்டுச்சி'', என்றார் டாரு திடீரென்று, ""இந்த விஷயத்தில் எதுவும் எனக்குக் கசப்புத் தராதது இல்லை. இந்த அராபியனைக் கண்டாலே எனக்குக் கரிக்கிறது. ஆனால் அவனை நான் போலீஸ் காரியாலயத்தில் கொண்டு போய் விடமாட்டேன். சண்டை போட வேண்டுமா - அவசியமானால் போடுகிறேன். அது மட்டும் வேண்டாம், பாவம்!''

கிழட்டு போலீஸ்காரன் அவர் எதிரில் நின்று அவரைக் கடுமையாகப் பார்த்தான்.

""நீ முட்டாள்'' என்றான் மெதுவாக. ""எனக்கு மட்டும் அவனைப் பிடித்து ஒப்படைக்கப் பிடிக்கிறதா? எனக்கும் பிடிக்கவில்லைதான். ஒரு மனிதனைக் கட்டிப் போடுவது என்பது எத்தனை வருஷம் பழக்கமானாலும் பிடிக்காத விஷயம்தான் - வெட்கமாகக்கூட இருக்கிறது. ஆனால் அதற்காக அவர்கள் இஷடப்படி நடக்கவும் விட்டுவிட முடியாதே?''

""நான் அவனைக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைக்க மாட்டேன்'' என்றார் டாரு மீண்டும் ஒரு தரம்.

""அது ஒரு உத்தரவு. நான் திருப்பிச் சொல்கிறேன் உத்தரவை. அவ்வளவுதான்.''

""அது சரி நான் சொன்னதை அவர்களிடம் சொல்லிவிடு; நான் அவனைக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைக்க மாட்டேன்.''

சிந்திக்க முயன்றான் பால்டுச்சி. அராபியனைத் திரும்பிப் பார்த்தான். டாருவைப் பார்த்தான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். ""மாட்டேன். நான் அவர்களுக்கு எதையும் சொல்ல மாட்டேன். உன்னைக் காட்டித் தர மாட்டேன். கைதியை இங்கு கொணர்ந்து உன்னிடம் விடச் சொல்லி எனக்கு உத்தரவு. அதை நடத்திவிட்டேன். இதோ இதில் கையெழுத்துப் போட்டுக் கொடு.''

""அதற்கு அவசியமில்லை. நீ உன் உத்தரவை நிறைவேற்றிவிட்டாய் என்பதை நான் மறைக்கவே மாட்டேன்.''

""என்னிடம் கோபித்துக் கொள்ளாதே! நீ உண்மையைச் சொல்வாய் என்று எனக்குத் தெரியும். நீ இந்தப் பக்கத்து மனிதன் - அதுவும் ஆண்மகன். ஆனால் கையெழுத்திட்டுத் தா } சட்டம் இதுதான்'' என்றான் பால்டுச்சி.

அதற்கு மேல் ஆட்சேபிக்கவில்லை டாரு. தனது மேஜை டிராயரை இழுத்து ஒரு சதுர உருவமான இங்க் புட்டியை எடுத்து, கையெழுத்து எழுதிக்காட்ட வைத்திருந்த பெரிய பேனாவினால் பர்பிள் மசியால் கையெழுத்திட்டுக் கொடுத்தார். போலீஸ்காரன் பால்டுச்சி அந்தக் கடிதத்தை மடித்துத் தன் தோல் பைக்குள் சொருகிக் கொண்டான். வாசல் பக்கம் நகர்ந்தான்.

""இரு வந்து வழியனுப்புகிறேன்'' என்றா டாரு.

""வேண்டாம்'' என்றான் பால்டுச்சி. ""நீ என்னை அவமதித்துவிட்டாய். இப்போது மட்டும் மரியாதை என்ன வந்தது?''

இருந்த இடத்திலேயே அசையாது கிடந்த அந்த அராபியனை ஒரு விநாடி திரும்பிப் பார்த்தான். முகத்தை சிணுக்கிக் கொண்டே மூக்கை இழுத்தான். வாசல் பக்கம் திரும்பினான். ""வரேன் மகனே'' என்றான். கதவைத் திறந்து சாத்திக் கொண்டு வெளியே போனான். ஜன்னல் வழியாக ஒரு கணம் கண்ணில் பட்டான்; பிறகு மறைந்துவிட்டான். பனி கிடந்த பாதையிலே அவன் காலடிச் சத்தம்கூடக் கேட்கவில்லை. சுவருக்கப்பால் குதிரைக் குளம்பொலி கேட்டது. சில கோழிக்குஞ்சுகள் சிறகடித்து வழியை விட்டுப் பறப்பதும் காதில் விழுந்தது. அடுத்த விநாடி ஜன்னலுக்கு வெளியே பால்டுச்சி மறுபடியும் கண்ணில் பட்டான். குதிரையை லகானால் பிடித்துக் கொண்டு வந்தான். சிறு குன்றுப் பக்கம் குதிரை பின்தொடர நடந்து, ஒரு தரம்கூடத் திரும்பிப் பார்க்காமல் நகர்ந்து விட்டான். உருட்டிவிடப்பட்டு ஒரு பெரிய கல் பாதையிலிருந்து கீழே உருண்டோடுவது காதில் விழுந்தது. டாரு கைதியின் பக்கம் திரும்பி நடந்து அவனை அணுகினார். அவரை விட்டுக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த கைதியிடம், ""இரு'' என்று அரபி மொழியில் சொல்லிவிட்டுத் தன் படுக்கையறைக்குள் போனார். கதவைத் தாண்டும்போது வேறு ஒரு யோசனை வரவே திரும்பி வந்து மேஜை மேல் கிடந்த ரிவால்வரை எடுத்துத் தன் சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே போனார். திரும்பிப் பார்க்காமல் தன் அறைக்குள் சென்றார்.

சிறிது நேரம் தனது படுக்கையில் படுத்து வானம் இருண்டு வந்து மூடிக் கொள்வதைக் கவனித்தார். மெüனத்தை ரசித்தார். யுத்தத்துக்குப் பிந்திய முதல் நாட்களில் இந்த மெüனம்தான் அவருக்குச் சகிக்க முடியாததாக இருந்தது. பாலைவனத்திலிருந்து உயரமான பீடபூமியைப் பிரிக்கும் பள்ளத்தாக்கு நகர் எதிலாவது உத்தியோகம் வேண்டுமென அவர் கேட்டார். அங்கு பாறையாலான குன்றுகள் வடக்கே பச்சையும், கறுப்புமாக, தெற்கே இளஞ்சிவப்பும் லவண்டருமாக நித்தியமான கோடைக்கு அரண் செய்யும். பீடபூமி மேட்டிலேயே வடக்கே வெகு தூரத்துக்கப்பால் அவருக்கு வேலை உத்தரவாகியது. ஆரம்பத்தில் இந்த வீணான பிரதேசங்களில் பெரும்பாறைகள் தவிர வேறு உயிர்ல்லாத இடத்தில் மெüனமாக இருப்பது சிரமமாக இருந்தது அவருக்கு. சில சமயம் பாறைகள் எங்காவது ஓரிடத்தில் வெட்டப்பட்டிருக்கும் - பயிரிடுவதற்காக அல்ல. வீடு கட்ட ஒருவிதக் கல் அங்கு கிடைத்ததால் வெட்டப்பட்டிருந்தது. இங்கு பயிராவது கற்பாறைகள் மட்டும்தான். சிறுசிறு கிராமத்துத் தோட்டங்களில் மண் வேண்டி மலை சரிவிலே சேர்ந்த கொஞ்ச மண்ணையும் தோண்டி எடுத்துப் போய் விடுவார்கள். இந்தப் பிராந்தியத்துக்குப் போக்கு இதுவே; முக்கால்வாசிப் பகுதியில் கற்கள்தான் நிறைந்திருந்தன. சில நகரங்கள் தோன்றின. சில நாட்கள் வளர்ந்தன. பிறகு மறைந்துவிட்டன. மனிதர்கள் இப்படி அப்படி வந்தவர்கள், ஒருவரை ஒருவர் நேசித்தார்கள், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டார்கள்; பின் இறந்து போனார்கள். அல்லது மறைந்து போனார்கள். தானோ தனது விருந்தாளியோ பற்றி இந்த நாட்டுக்கு பாலைவனத்துக்குச் சிறிதும் கவலை கிடையாது. அவர்கள் எவ்விதத்திலும் முக்கியஸ்தர்கள் அல்ல. இருந்தும்... இருந்தும் இந்தப் பாலைவனத்துக்கு அப்பால், இதற்கு வெளியே அவர்களால் உயிர் வைத்துக் கொண்டிருந்திருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கை இதுதான்.

அவர் எழுந்தபோது பள்ளி அறையில் சப்தமேயில்லை. அராபியன் ஓடிப் போயிருக்கலாம் என்கிற எண்ணம் அவருக்கு மகிழ்ச்சியையே அளித்தது - கலப்பற்ற மகிழ்ச்சி அது என்று உணர்ந்தார். அவன் ஓடிப்போயிருந்தால் எவ்விதத் தீர்மானமும் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு இராது. ஆனால் கைதி அங்கேயேதான் இருந்தான். மாணவன் மேஜைக்கும், கணப்புக்கும் இடையே கால் நீட்டிக் கொண்டு அவன் படுத்துக்கொண்டிருந்தான். கண்கள் திறந்திருந்தன - அரைக் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்படிக் கிடந்த அவன் உதடுகள் அதிகமாகக் கவனிக்கத் தக்கவையாகத் தெரிந்தன. கனமான உதடுகள் பிதுங்குகிற மாதிரி இருந்தன. ""வா'' என்று டாரு கூப்பிட்டார். அராபியன் எழுந்து அவர் பின் வந்தான். தன் படுக்கையறையில் ஜன்னலுக்கடியில் இருந்த மேஜையருகில் கிடந்த நாற்காலியை டாரு காண்பித்தார். டாருவை விட்டுக் கண்களை எடுக்காமலே அராபியன் உட்கார்ந்தான்.

""பசிக்கிறதா?''

""ஆமாம்'' என்றான் கைதி.

டாரு இருவருக்கும் மேசை மேல் உணவு எடுத்து வைத்தார். மாவும், எண்ணெயும் எடுத்து வட்டிலில் ஒரு கேக் செய்தார். புட்டியிலிருந்த காஸ் அடுப்பைப் பற்ற வைத்தார். கேக் வெந்து கொண்டிருக்கும்போது அவன் பக்கம் கொட்டகைக்குள் சென்று சீஸ், முட்டைகள், பேரீச்சை, கண்டென்ஸ்ட் பால் முதலியன எடுத்து வந்தார். கேக் வெந்ததும் அது குளிர ஜன்னல் படியில் வைத்தார். பாலைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சினார். சில முட்டைகள் உடைத்துப் போட்டு ஆம்லெட் செய்தார். ஒரு சமயம் அவர் கை வலது சட்டைப்பையில் இருந்த ரிவால்வரில் பட்டது. கையிலிருந்த கிண்ணத்தை வைத்து விட்டுத் தன் படிப்பு அறைக்குப் போய் ரிவால்வரைத் தன் மேஜை டிராயரில் வைத்துவிட்டு வந்தார். அவர் அறைக்குள் திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டது. விளக்கைப் போட்டு விட்டு, அராபியனுக்கு உணவு எடுத்துக் கொடுத்தார். ""சாப்பிடு'', என்றார். கேக்கில் ஒரு பகுதியை அவசரம் அவசரமாக எடுத்த அராபியன் அதை வாயில் போட்டுக் கொள்ளும்முன் நிதானித்து, ""நீங்கள்?'' என்றான்.

""சாப்பிடு. நானும் உன்னோடு சாப்பிடுவேன்'' என்றார்.

தடித்த உதடுகள் சற்றே திறந்தன - ஏதோ சொல்ல. உடனே மூடின. கேக்கை வாயில் போட்டு மென்றான் அராபியன்.

சாப்பாடு முடிந்ததும், அராபியன் டாருவை நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்; ""நீங்கள்தான் நீதிபதியா?''

""இல்லை. இல்லை. நான் நாளை வரை உன்னை இங்கு வைத்திருப்பேன். அவ்வளவுதான்.''

""எதற்காக என்னோடு உணவருந்தினீர்கள்?''

""எனக்கும் பசித்தது.''

அராபியன் மெüனமானான். டாரு எழுந்து வெளியே போனார். கொட்டகையிலிருந்து ஒரு மடக்குக் கட்டிலை மேஜைக்கும், கணப்புக்கும் இடையில் போட்டார் - தன் படுக்கையை ஒட்டின மாதிரி ஒரு பெரிய பெட்டியிலிருந்து இரண்டு கம்பளிகளை எடுத்துக் கட்டிலில் விரித்தார். வேறு என்ன? வேறு எதுவும் செய்வதற்கில்லை. தன் படுக்கையில் உட்கார்ந்து கைதியைப் பார்த்தார். அந்த அராபியனின் முகம் கோபத்தால் பெருகி கொலை வெறியால் மாறுவதைக் கற்பனை செய்ய முயன்றார் - பார்த்தபடியே; முடியவில்லை. மிருகத்தின் வாய் போன்ற உதடுகளையும், கறுத்துப் பளபளத்த கண்களையும் தவிர வேறு எதையும் அவரால் காண இயலவில்லை.

""அவனை எதற்காக நீ கொன்றாய்?'' - தன் குரலில் இருந்த அதட்டல் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அராபியன் வேறு பக்கம் பார்த்தான். "" அவன் ஓடி விட்டான். அவனைத் துரத்திக் கொண்டு ஓடினேன்.''

""உனக்குப் பயமாக இருக்கிறதா?''

நிமிர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான் அராபியன்.

""செய்து விட்டது குறித்து வருந்துகிறாயா நீ?''

வாய்ப்பிளக்க அராபியன் அவரையே பார்த்தான். உண்மையில் டாருவினுடைய கேள்வி அவனுக்குப் புரியவில்லை என்பது தெரிந்தது. டாருவுக்கு எரிச்சலாக இருந்தது - எரிச்சல் வளர்ந்தது. அதே சமயம் இப்படி உட்கார்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது பற்றி வெட்கமாகவும், என்னவோபோலவும் இருந்தது.

""அங்கே படு'' என்றார். ""அதுதான் உனக்குப் படுக்கை.''

அராபியன் அசையவில்லை. அவன் டாருவை, ""எனக்குச் சொல்லுங்கள் ஐயா'' என்றான்.

ஆசிரியர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

""போலீஸ்காரன் நாளை வருவானா?''

""எனக்குத் தெரியாது.''

""நீங்கள் எங்களோடு வருவீர்களா?''

""அதுவும் தெரியாது ஏன்?''

கைதி எழுந்து கம்பளி மேல் படுத்தான். ஜன்னல் பக்கம் அவன் காலிருந்தது. டாருவின் கால்மாட்டில் இருந்தது அவன் படுக்கை. விளக்கு ஒளி அவன் கண்களில் பட்டது. உடனே கண்களை மூடிக்கொண்டான்.

""ஏன்?'', என்று தன் படுக்கையருகில் நின்றபடியே கேட்டார் டாரு.

விளக்கு ஒளி கண்ணில் பட கண்களைத் திறந்தான் அராபியன். கண்ணைச் சிமிட்டாமல் இருக்க முயன்று கொண்டே ""எங்களோடு வந்து விடும்'' என்றான்.

நள்ளிரவு ஆகிவிட்டது. டாருவால் தூங்க இயலவில்லை. துணிகளை எடுத்துப் போட்டு விட்டு வழக்கப்படியே நிர்வாணமாகத் தூங்க முயன்றார் டாரு. நிர்வாணமாக இருப்பது அசெüகரியமாக இருக்குமோ என்று நள்ளிரவில் தயங்கினார். பிறகு எதிரி சண்டைக்கு வந்தால் அவனைத் தோற்கடிக்க ஒரு விநாடியில் தன்னால் இயலும் என்று எண்ணிப் பார்த்தார். துணிகளை அணிந்து கொள்ளலாமா என்று ஒரு கணம் யோசித்தார். பிறகு அது குழந்தைத்தனம் என்று அந்தச் சிந்தனையிலிருந்து ஒதுங்கி விட்டார். தன் படுக்கையிலிருந்த படியே கைதி கண்களை மூடிக் கொண்டிருப்பதை அவர் காண முடிந்தது. டாரு விளக்கை அணைத்தபோது இருட்டு கவ்விக் கொண்டதுபோல இருந்தது. பின்னர் ஜன்னலில் இரவு உருவெடுத்திருப்பது தெரிந்தது - நட்சத்திரங்களற்ற இரவு மெதுவாகப் புரண்டு கொடுப்பது போல இருந்தது. சிறிது நேரத்தில் காலடிக் கட்டிலில் உருவம் கிடந்தது, டாருவின் கண்களுக்குப் புலனாயிற்று. அராபியன் இன்னும் அசையவில்லை - அவன் கண்கள் திறந்திருந்தன போலும். பள்ளியைச் சுற்றி இலேசாகச் காற்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காற்று மேகங்களை விரட்டி விடலாம் - சூரியன் மீண்டும் நாளை தோன்றலாம்.

இரவிலே நேரம் ஆக ஆகக் காற்றின் ஊளை வேகம் அதிகரித்தது. கோழிகள் படபடத்து அடங்கின அராபியன் தன் கட்டிலில் டாருவுக்கு முதுகுப்பக்கம் தெரியப் புரண்டு படுத்தான். அவன் லேசாக முனகுவது டாருவின் காதில் விழுந்தது. தன் விருந்தாளியின் தூக்க மூச்சு ஒழுங்காக, கனமாக வருவதைக் கவனித்தார் டாரு. அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டே தூங்க மாட்டாமல் திணறினார். இந்த அறையில் ஒரு ஆண்டுக்கும் அதிகமாக அவர் மட்டுமே தனியாகத் தூங்கித்தான் அவருக்குப் பழக்கம். அராபியன் அருகில் இருப்பது அவரை என்னவோ செய்தது. இந்தக் கால அளவில் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரு சகோதரத்தவத்தை அவன் அருகில் இருப்பது தன் மேல் திணிப்பதாக அவர் உணர்ந்தார். ஒரே அறையில் படுத்துறங்க வேண்டிய சகோதரத்தவத்தை அவர் பழக்கப்பட்டவர்தான் - போர் வீரர்கள், கைதிகள் ஒரே அறையில் படுத்துறங்கும்போது, ஒரு கனவுலக, களைப்புலக சகோதரத்தவத்தை ஏற்கின்றனர். டாரு அந்த நினைவுகளிலிருந்து தன்னை உதறி அகற்றிக் கொண்டார். இப்படி நினைப்பது பிடிக்கவில்லை - தூங்குவதும் அவருக்கு அவசியம்.

சிறிது நேரம் கழித்து அராபியன் லேசாக அசைந்த போதும் அவர் தூங்கிய பாடில்லை. கைதி இரண்டாவது அசைவு காட்டியதும் கவனமாக இருந்தார் - உஷாரானார். தூக்கத்தில் நடப்பவன் போல அவன் படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து டாரு பக்கம் தலையைத் திருப்பாமல் ஏதோ கவனித்துக் கேட்பவன் போல உற்றுக் கவனித்தான். டாரு அசையவில்லை; தன் மேஜை டிராயரில் ரிவால்வர் இருந்தது நினைவுக்கு வர டாருவுக்கு உடனே எழுந்து ஏதாவது செய்வது நல்லது என்று தோன்றியது. ஆனாலும் கைதியைக் கவனித்துக் கொண்டே படுத்திருந்தார். சப்தமே செய்யாமல் கைதி காலைக் கீழேவிட்டு எழுந்து நின்று மறுபடியும் கவனித்தான். டாரு குரல் கொடுக்கலாம் என்று எண்ணுகிற விநாடியில், மிகவும் சாவதானமாக, சப்தமே செய்யாமல் அராபியன் நடக்கத் தொடங்கினான். அறைக் கோடியிலிருந்த கொட்டகைக்குள் போகும் கதவுப்பக்கம் நகர்ந்தான். ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்துகொண்டு கதவைத் தனக்குப் பின்னால் மூடித் தாளிட்டு விடாமல் வெளியே போனான். டாரு அசையவில்லை. ""அவன் ஓடிப்போகப் போகிறான்'' என்று எண்ணினார் அவர். ""சனியன் தொலைந்தது.'' இருந்தும் கவனித்துக் கேட்டார். கோழிகள் படபடக்கவில்லை. கைதி குன்றின் மேல் போயிருக்க வேண்டும். ஏதோ நீர் சப்தம் கேட்டது. அது என்ன என்று முதலில் புரியவில்லை. பிறகு கதவு வழியாக அராபியன் சப்தமே செய்யாமல் வருவதைக் கண்ட பிறகுதான் புரிந்தது. கதவை ஜாக்கிரதையாகச் சாத்திவிட்டு வந்து சப்தமே செய்யாமல் படுத்துவிட்டான் கைதி. பிறகு "டாருவும் திரும்பிப் படுத்துச் தூங்கிவிட்டார். தூக்கத்திலே ஏதோ காலடிச் சப்தம் கேட்டதுபோல இருந்தது. "நான் கனவு காண்கிறேன். நான் கனவு காண்கிறேன்' என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டார்.

அவர் கண் விழிக்கும்போது, வானம் தெளிந்துவிட்டது. ஜன்னல் வழியாகக் காலை ஒளியும், இளஞ் சீரிய கிரணங்களும் உள்ளே வந்தன. அராபியன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் வாய் திறந்திருந்தது. கவலை எதுவும் அற்றவன் போலத் தூங்கினான், அவன். ஆனால் டாரு அவனை உலுக்கி எழுப்பியபோது தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. மிகவும் பயந்தவன் மாதிரி, டாரு யார் என்று அறியாதவன் மாதிரி மிரள மிரள விழித்தான். டாரு நாலடி பின் வாங்கி, ""பயப்படாதே. நான் நீ சாப்பிட வேண்டாமா?'' என்றதும் அந்த அராபியன் தலையை ஆட்டினான். ""ஆமாம் சாப்பிட வேண்டும்'' என்றான். அவன் முகத்தில் அமைதி கண்டது. ஆனால் அவன் "பாவம்' ஒரு தினுசாக எதிலும் ஈடுபாட்டில்லாததாகத்தான் இருந்தது.

காபி தயாராகியது. கேக் துண்டுகளை மென்று கொண்டே தங்கள் படுக்கைகளில் உட்கார்ந்தபடியே காபியை அருந்தினர். பின்னர் டாரு அராபியனை கொட்டகைக்குள் அழைத்துச் சென்று குழாய் இருந்த இடத்தைக் காட்டினார். அவன் கழுவிக் கொண்டான். தன்னறைக்குள் போய்க் கம்பளிகளை எடுத்து மடித்து வைத்துவிட்டுத் தன் படுக்கையையும் சீர் செய்தார். வகுப்பறை வழியாக வெளியே திறந்த மேடைக்குச் சென்றார். நீலவானத்தில் சூரியன் தோன்றி உயர ஏறிக் கொண்டிருந்தது. மனித சூன்யமான மேடான பீடபூமியிலே பிரகாசமான ஒளி படர்ந்து கொண்டிருந்தது. குன்றுச் சரிவுகளில் பல இடங்களில் பனி உருகத் தொடங்கிவிட்டது. கற்கள் மீண்டும் தோன்றத் தொடங்கிக் கொண்டிருந்தன. தன் மேடையில் பதுங்கியபடியே மனித சூன்யமான அந்தப் பிரதேசத்தைப் பார்த்தார் டாரு. பால்டுச்சியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். அவனுக்கு வருத்தம் தந்துவிட்டது பற்றி டாரு வருந்தினார். யாருக்கும் வருத்தம் தர அவர் விரும்பவில்லை. போலீஸ்காரன் விடைபெற்றுக் கொண்டுபோன விதம் அவரைத் துயரத்தில் ஆழ்த்தியது அப்படி யாருக்கும் விரோதியாக இருக்க அவர் விரும்பியதேயில்லை. தன்னுள் எதுவும் இல்லாமல் காலியாகிய மாதிரி உணர்ந்தார் அவர். தன்னை யாரோ காயம் பண்ணிவிட்ட மாதிரி உணர்ந்தார். அதே சமயம் உள்ளேயிலிருந்து கைதி இருமுவது காதில் விழுந்தது. தன்னையும் அறியாமலே டாரு அதைக் கவனித்தார். கோபம் கோபமாக வந்தது அவருக்கு. அவருள் கோபம் பிரமாதமாக எழுந்து வளர்ந்தது. ஒரு கூழாங்கல்லை எடுத்துக் கை கொண்ட மட்டும் விசிறி எறிந்தார். அது தூரத்தில் போய்ப் பனிச்சகதியில் அமுங்குவதைப் பார்த்தார். அந்த மனிதனுடைய அசட்டுத்தனமான குற்றம் அவரை எரிச்சல் கொள்ளச் செய்தது - ஆத்திரத்தை அவருக்கு ஊட்டியது. ஆனால் அதற்காக அவனைப் போலீஸôரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது தன் மதிப்பு உகக்காத விஷயம். தன் தாழ்வையும், பலஹீனத்தையும் உணரச் செய்ததும் அந்தக் காரியம் பற்றிய சிந்தனையே. இந்த அராபியனைத் தன்னிடம் அனுப்பி வைத்த தன் மக்களைச் சபித்தார் - அத்துடன் ஒரே மூச்சில் கொலை செய்யத் துணிந்து, தப்பித்துக் கொள்ளாமல் மாட்டிக்கொண்ட அராபியனையும் சபித்தார் டாரு. எழுந்து வளையமாக மேடை மேல் நடந்து வந்தார். பிறகு பள்ளிக் கட்டிடத்திற்குள் சென்றார்.

கொட்டகையில் சிமெண்டுத் தரையில் குனிந்து வாய்க்குள் இரண்டு விரல்களை விட்டுப் பல் தேய்த்துக் கொண்டிருந்தான் அராபியன். டாரு அவனைப் பார்த்து ""வா'' என்றார். கைதிக்கு முன் நடந்து அறையை அடைந்தார். தன் மேல் ஒரு வேட்டைக்காரன் சட்டையை அணிந்து கொண்டார். நின்றார். அராபியன் தனது "சேச்சே' குல்லாயைத் தலையிலும், செருப்புக்களைக் காலிலும் போட்டுக் கொள்ளும் வரை காத்திருந்தார். வகுப்பறைக்கு இருவரும் சென்றனர். வெளியே போகும் வழியைக் காட்டி, ""போ'' என்றார். அவன் நகரவில்லை. ""நானும் வருகிறேன்'', என்றார் டாரு. அதற்குப் பிறகுதான் கைதி கிளம்பினான். அராபியன் வெளியேறியதும் டாரு தன் அறைக்குள் போய் பிஸ்கெட்டுகள், பேரீச்சம்பழம், சர்க்கரை முதலியவற்றை எடுத்துப் பொட்டலம் கட்டினார். ""அதுதான் வழி'' என்று சுட்டிக் காட்டினார். கிழக்கு நோக்கிக் கிளம்பினார் - கைதி பின் தொடர கொஞ்ச தூரம் போனதும் பார்த்தார். ஏதோ சப்தம் கேட்பதுபோல இருக்கிறது என்று சுற்றிலும் பார்த்தார். நிர்மானுஷ்யமாகவே இருந்தது. யாரும், எதுவும் கண்ணில் படவில்லை. புரியாதவன் மாதிரி அவரையே கவனித்துக் கொண்டு நின்றான் அராபியன். ""வா, போவோம்'' என்றார் டாரு.

ஒரு மணிநேரம் நடந்திருப்பார்கள். ஒரு செங்குத்தான சுண்ணாம்புக்கல் ஒன்றின் ஓரத்திலே சிறிது நேரம் தங்கி இளைப்பாறினார்கள். பனி அதிவேகமாக உருகி மறைந்து கொண்டிருந்தது } சூரிய வெப்பத்திலே பனி உருகிய ஈரமும், சிறு குட்டைகளும் மிகத் துரிதமாகக் காய்ந்து கொண்டிருந்தன.

மேலான பீடபூமி முழுவதுமே சூரியவொளி தாக்கியது - காற்றைப் போலவே அதிலும் உஷ்ணம் ஏறிக்கொண்டிருந்தது. அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கியபோது, காலடியில் "விண்விண்' என்று கட்டாந்தரையாக ஒலித்தது. ஆனந்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு எப்போதாவது ஒரு பறவை அவர்கள் முன் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது. விடியற்காலை ஒளியைப் பார்த்தவாறே டாரு இன்பத்துடன் நகர்ந்தார். பழக்கமான அந்தப் பரப்பிலே ஒரு பரவசம் உண்டாகியது டாருவுக்கு. நீலவான வளைவும் அடியில் மஞ்சள் நிற மணலும், கல்லும் - ஆஹா என்ன அற்புதம்! மேலும் ஒரு மணிநேரம் நடந்தனர் - தெற்கு நோக்கிச் சரிவிலே இறங்கினர். காலடியிலே பொடியான கரளைக்கற்கள் நிறைந்த சம நிலத்தை எட்டினர். அதற்குப்பால் கிழக்கு நோக்கிச் சரிவு இறங்கிற்று. தாழ்ந்த சமவெளி வரும் - அதிலே இலை அதிகமில்லாத முறுக்கேறிய மரங்கள் தோன்றும்; தெற்கே பார்த்தால் ஒரே குழப்பமான சித்திரம் போல கற்கள் காட்சி அளிக்கும்.

டாரு இரண்டு பக்கமும் பார்த்தார். வானத்தைத் தவிர, அடி வானம் பூமியை எட்டும் வரை எந்தப் பக்கத்திலும் யாரும் இல்லை. அராபியனைப் பார்த்தார். தன் கையிலிருந்த பொட்டலத்தை அவனிடம் தந்தார். ""எடுத்துக் கொள். அதில் பேரீச்சை, ரொட்டி, சர்க்கரை இருக்கிறது. இரண்டு நாளுக்குக் காணும். இதோ ஒரு ஆயிரம் பிராங்குகளும் இருக்கின்றன'' - அராபியன் இரண்டையும் வாங்கிக் கொண்டான். ஆனால் அவற்றை என்ன செய்வது என்று அறியாதவன் போல மார்போடு தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றான்.

""இதோ பார்'' என்றார் டாரு. கிழக்குப் பக்கம் கையைக் காட்டினார்; ""அதோ அந்தப் பக்கம் போனால் டிங்கியூட் - இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். அங்கே நீ போனால் போலீஸ் காரியாலயம், நீதிபதி எல்லாம் இருப்பதைக் கண்டு கொள்வாய். அவர்கள் உன்னை எதிர்பார்க்கிறார்கள்.''

அராபியன் கிழக்கு நோக்கிப் பார்த்தான். அவன் கையில் மார்போடு அணைக்கப்பட்டு டாரு தந்த பணமும், பொட்டலமும் இருந்தன. டாரு அவன் தோள்பட்டையைப் பிடித்து தெற்கு நோக்கி அவன் முகத்தைத் திருப்பினார். குன்றின் அடிவாரத்திலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதை தெற்கே ஓடுவது லேசாகத் தெரிந்தது. ""அந்தப் பாதை வழியே நீ பீடபூமியைக் கடக்கலாம். ஒரு நாள் நடந்தாயானால் புல்வெளிகளையும், அராபியர்களையும் சந்திப்பாய் நீ! அவர்கள் நீதிப்படி உன்னை வரவேற்பார்கள்.''

அராபியன் இப்போது "டாரு'வைத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களிலே ஒரு பீதி குடி கொண்டிருந்தது தெரிந்தது அவருக்கு. ""கேளுங்கள்'' என்று அவன் ஆரம்பித்தான்.

""சும்மா இரு! நீ சொல்வதை நான் கேட்கப் போவதில்லை'' என்று அவனை அதட்டினார் டாரு. ""பேசாதிரு. நான் உன்னை இங்கே விட்டு விட்டுப் போகப் போகிறேன்.''

உடனேயே திரும்பி, இரண்டு நீள எட்டு எடுத்து வைத்தார். அவர்கள் வந்த வழியிலே குழப்பத்துடன் நின்ற அராபியனை சற்றே திரும்பிப் பார்த்தார். மீண்டும் வேகமாகத் திரும்பி வந்த வழியே தன் பள்ளிக்கூடம் நோக்கிக் கிளம்பினார். சில நிமிஷங்கள் வரை அவர் காலடிச் சப்தத்தைத் தவிர வேறு சப்தம் கேட்ட போதும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால், இன்னும் ஒரு நிமிஷம் கழித்துத் திரும்பிப் பார்த்தார். அந்த அராபியன் அவர் விட்டு வந்த இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கைகள் பொட்டலம், பணத்துடன் தொங்கவிட அவன் டாருவையே பார்த்துக் கொண்டு நின்றான். "டாரு'வின் தொண்டையை ஏதோ அடைப்பது போல இருந்தது. ஆனால், பொறுமையற்றவராக உலகையெல்லாம் சபித்துக் கொண்டே, தன் கையைத் தூக்கி ஆட்டிவிட்டு மீண்டும் கிளம்பித் தன் வழி நடந்தார். சிறிது தூரம் போய்விட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது அராபியன் அங்கில்லை - எந்தப் பாதையிலோ நகர்ந்து விட்டான்.

டாரு தயங்கினார். வானத்திலே உச்சியை எட்டி விட்டது சூரியன். சூரிய உஷ்ணம் நேராக அவர் தலையைத் தாக்கியது. முதலில் தயங்கியவராக, மெதுவாகத் திரும்பி நடந்தார். பிறகு வேகமாக நடந்து கைதியை விட்டுவிட்டு வந்த குன்றின் உச்சியை அடைந்தார். மூச்சு வாங்கியது அவருக்கு. நீலவானத்தை முட்டிய கற்குன்றுகள் தெற்கே கிடந்தன. கிழக்கு நோக்கின பாதையிலே. பனிப்படலம் போலவே ஒளிப்படலமும் ஒரு மறைவுத் திரையாகக் கிடந்தது. அந்தப் பாதையிலேயே சிறையையும் நீதிபதிகளையும் போலீஸ்காரனையும் நோக்கித்தான் அராபியன் நடந்துகொண்டிருந்தான் என்று கனக்கும் உள்ளத்துடன் கவனித்தார் டாரு. மெதுவாகவே நடந்துகொண்டிருந்தான் அவன்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு டாரு தன் படிப்பு அறையில், ஜன்னலில் வெளியே பார்த்துக்கொண்டு நின்றார். பீடபூமி பூராவும் சூரியவெளியிலே குளித்துக் கொண்டிருந்தது - அதை அவர் கவனித்தார் என்று சொல்ல இயலாது. ஃபிரான்சு தேசத்து நதிகள் வளைந்து வளைந்து செல்லும், கலர் சாக்கால் எழுதிய நதிகளுக்கிடையே சற்று முன் அவர் படித்த புதிய வார்த்தைகள் காணப்பட்டன. ""நீ எங்கள் சகோதரனைப் போலீஸில் ஒப்படைத்தாய். அதற்கான தண்டனை உனக்குண்டு. நாங்கள் உன்னைக் கவனித்துக் கொள்வோம்'' என்று கோணல்மாணலாக எழுதியிருந்தது. டாரு வானத்தை அண்ணாந்து பார்த்தார்; பீடபூமியை நேராகப் பார்த்தார். கண்ணுக்கெட்டாத பல பிரதேசங்கள் அதற்கப்பால் இருந்தன. இந்தப் பரந்த நிலப்பரப்பிலே அவர் தனியானவர்; ஒருத்தர்.

வெளியீடு: ஞானச்சேரி; வருடம்: 1989


தமிழில் வெளியாகியுள்ள ஆல்பெர் காம்யு நூல்கள்:

1. அந்நியன் - (தமிழில்: வெ.ஸ்ரீராம்) க்ரியா பதிப்பகம்

2. கொள்ளை நோய் - (தமிழில்: ச.மதனகல்யாணி) ஆனந்தா பதிப்பகம், புதுச்சேரி

3. நியாயவாதிகள் (நாடகம்) - சந்தியா பதிப்பகம்

4. மரண தண்டனை என்றொரு குற்றம் - (தமிழில் } வி.நடராஜ்) வெளியீடு: பரிசல்


சிறு குறிப்பு:

இரண்டு முறை இச்சிறுகதையைப் படித்திருந்த நிலையில் என்னுடைய "குழிவண்டுகளின் அரண்மனை' - கவிதை நூலுக்கு மதிப்புரை கேட்டு கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் தயக்கத்துடன், ""நீங்கள் சிறுகதை எழுதியிருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். எழுதிக் கொண்டிருந்ததாகவும், ஆல்பெர் காம்யுவின் "விருந்தாளி' சிறுகதையைப் படித்ததில் இருந்து, "எழுதினால் இதைப்போன்றதொரு சிறுகதையை எழுத வேண்டும்' என்று விட்டுவிட்டதாகவும் கூறினார். (ஆல்பெர் காம்யுவின் வேறுபல சிறுகதைகளை ஆங்கிலத்தில் படித்திருப்பதாகவும் சுகுமாரன் கூறினார்.)அன்றிலிருந்து ஆல்பெர் காம்யுவோடு சேர்ந்தவிட்ட பிம்பமாகவே எனக்குள் கவிஞர் சுகுமாரனும் இருந்து வருகிறார். ஆல்பெர் காம்யு பெயரை எழுதுகிறபோதுகூட அவர் நினைவும் வந்துவிடுகிறது. சுகுமாரன் குறிப்பிட்டதற்குப் பிறகு இன்னும் கூடுதல் கவனத்துடன் இந்தச் சிறுகதையைப் படித்து வருகிறேன்.