Wednesday, March 10, 2010
அவனது இரகசியம்
யூரிப் நகீபின்
தமிழில்: க.சுப்பிரமணியம்
முதல் நாள் இரவில் கடும்பனி பெய்திருந்தது. ஆகவே உவாரவ்காவிலிருந்து பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குறுகிய நடைபாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரே ஓர் உருவம் மட்டுமே மங்கிய நிழல்போல் அதில் தென்பட்டது. வெகு எச்சரிக்கையுடன் ஆசிரியை அப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள். எங்கேயாவது பனிக்குவியலுக்குள் கால் புதைந்துவிடும்போல் தெரிந்தால், சடையுரோம ஓரங் கட்டிய சிறிய மேல்ஜோடுகளுக்குள்ளிருந்த தன் பாதத்தை உடனே பின்னால் இழுத்துக்கொள்வதற்குத் தயாராயிருந்தாள்.
ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் நடந்து செல்லும் தொலைவில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. எனவே அவள் குட்டையான உரோம மேல்சட்டை அணிந்து, மெல்லிய கம்பளிக் குட்டையால் தனது தலையை மூடியிருந்தாள். குளிர் கடுமையாக இருந்தது. வெண்பனிக் குவியல்களின் உச்சியில் புதிதாகப் பெய்திருந்த பனிச் சிதர்களைக் காற்று வாரி இறைக்கவே, அவை அவளது தலையிலிருந்து கால் வரை தெறித்தன. பள்ளி ஆசிரியை இருபத்து நான்கு வயதுள்ள யுவதி. ஆகவே, கன்னங்களையும், மூக்கையும் கிள்ளிய கடுங்குளிரும் மேல்சட்டையும் ஊடுருவிக்கொண்டு சுரீரென்று பாய்ந்த காற்றும் அவளுக்குப் பிடித்திருந்தன. காற்றின் புறமாக முதுகைத் திருப்பிக்கொண்டு, கூரிய நுனியுள்ள தனது மேல்ஜோடுகளின் நெருக்கமான அடிச்சுவடுகளைப் பார்த்தாள். அவை ஒரு பெரிய மிருகத்தின் காலடித் தடங்களைப் போன்றிருந்தன. அவையும் அவளது மனதிற்குப் பிடித்திருந்தன.
ஜனவரி மாதத்துக் காலையின் உற்சாகமூட்டும் ஒளி, வாழ்க்கையைப் பற்றியும், தன்னைப் பற்றியும் சந்தோஷமான எண்ணங்களை அவள் மனதில் எழுப்பியது. இரண்டு வருடங்களுக்கு முன்தான் அவள் கலாசாலைப் படிப்பை முடித்து ஆசிரியைத் தொழிலை மேற்கொண்டாள். அதற்குள்ளாகவே அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள ஆசிரியை என்று பெயர் பெற்றுவிட்டாள். உவாரவ்கா, குஸ்மீன்கி, சொர்னி யார் ஆகிய பக்கத்துக் குடியிருப்புகளிலுள்ள ஜனங்களுக்கு எல்லாம் அவளைத் தெரியும். அவர்கள் அவளை வெறுமே அன்னாவென்று அழைக்காமல், உயர்வாகவும் மரியாதையுடனும் அன்னா வசீலியெவ்னா*1என்று அழைத்தார்கள்.
தொலைவிலுள்ள காட்டின் ஒழுங்கற்ற விளிம்புகளுக்கு மேலே சூரியன் கிளம்பினான். அவனுடைய கதிர்கள் பனியின் மேல் தோன்றிய நீல நிழல்களை இன்னும் அதிக நீலமாகச் செய்தன. இந்த நிழல்கள் வெகு தூரத்திலிருந்த பொருள்களையும் ஒன்டொன்று இணைத்துக் காட்டின. பழங்கால மாதா கோவிலின் சிகரம் உவாரவ்கா கிராம சோவியத்தின் காரியாலய வாசல்வரை நீண்டு விளங்கியது. நதியின் எதிர்க் கரை மேலிருந்த பைன் மரங்களின் நிழல் இக்கரையின் சரிவின் மேலிருந்த பைன் மரங்களின் நிழல் இக்கரையின் சரிவின் மேல் தவழ்ந்து சென்றது. பள்ளிப் பருவநிலைக் கூடத்தின் மேலிருந்த காற்றுதிசை காட்டுக் கருவியின் நிழல், வயல் நடுவே வந்துகொண்டிருந்த அன்னா வசீலியெவ்னாவின் காலடியில் சுழன்று கொண்டிருந்தது.
வயலின் குறுக்கே எதிராக ஒரு மனிதன் வந்து கொண்டிருந்தான். "அவன் வழி விடாவிட்டால் என்ன செய்வது? எதிரெதிராக இரண்டு பேர் போக முடியாத, ஒடுக்கமான பாதையாயிற்றே. ஓர் அடி விலகினாலும் கழுத்தளவு பனியில் புதைய வேண்டியதுதான்' என்று அவள் விளையாட்டான பயத்துடன் நினைத்துக்கொண்டாள். அந்தச் சுற்று வட்டாரத்தில் அவளுக்கு வழிவிட மாட்டேன் என்று சொல்லும் ஒரு மனிதனும் கிடையாது என்பது அவளுக்குத் தெரியாமலில்லை.
அவர்கள் இருவரும் எதிர் எதிரே நெருங்கி விட்டனர். குதிரைப் பண்ணையில் பயிற்சியாளனாகவிருந்த பிரலோவ் என்பவன் அவன்.
""வணக்கம், அன்னா வசீலியெவ்னா!'' என்று தனது உரோமக் குல்லாயை எடுத்து அசைத்துக்கொண்டு, கட்டையாகக் கத்தரிக்கப்பட்டிருந்த அடர்த்தியான தலைமுடி தெரியும்படி நின்றான்.
"அடேடே, குல்லாயை ஏன் எடுத்துவிட்டீர்கள்? மிகக் குளிராயிருக்கிறது. உடனே போட்டுக் கொள்ளுங்கள்'' என்றாள் அவள்.
பிரேலோவுக்கும் குல்லாயைச் சட்டென்று போட்டுக்கொள்ள ஆவல்தான். ஆனால் இந்தக் குளிர் தனக்கு ஒரு பொருட்டில்லை என்று காட்டிக் கொள்வதற்காகச் சிறிது தாமதித்தான். அவனுடைய ஒற்றை நாடியான உடம்பிற்கு அவன் அணிந்திருந்த ஆட்டுத்தோல் மேல்சட்டை மிகப் பொருத்தமாயிருந்தது. தன்னுடைய வெள்ளை "வாலென்கி'*2 களை மெல்லிய பாம்பு போன்ற குதிரைச் சவுக்கால் அடித்துக்கொண்டு, ""எங்கள் லியோஷா எப்படியிருக்கிறான்? மிகவும் துஷ்டனத்தனம் செய்வதில்லை என்று நம்புகிறேன்'' என மிகவும் மரியாதையாகக் கேட்டான்.
"துஷ்டத்தனம் செய்யத்தான் செய்கிறான். ஆரோக்கியமாயுள்ள குழந்தைகள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். ஆயினும் அவர்கள் ஒரு கட்டிற்குள்ளிருக்கிறார்கள். அதை மீறுவதில்லை'' என்று ஆசிரியத் தொழிலின் நுட்பந் தெரிந்தவளாகப் பதிலளித்தாள் அவள்.
பிரலோவ் சிரித்துக்கொண்டான்.
"லியோஷா சாதுப்பையன், தகப்பனாரைப் போல'' என்றான்.
அவன் ஒரு பக்கம் விலகினானோ இல்லையோ, முழுங்கால் வரை வெண்பனியில் புதைந்து, சிறிய பள்ளிக்கூடப் பையன்போல் குட்டையாகிவிட்டான். அன்னா வசீலியெவ்னா அவனைப் பரிவுடன் நோக்கித் தலையசைத்துவிட்டுத் தன் வழியே போய்விட்டாள்.
இரண்டு மாடியுடைய பள்ளிக்கூடக் கட்டடம் ரஸ்தாவினருகே ஒரு தாழ்ந்த வேலிக்குப் பின்னால் இருந்தது. அதன் பெரிய ஜன்னல்கள் உறைபனியின் சித்திர வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. கட்டடத்தின் மேல் விழுந்த வெயில் ஒளியில் பிரதிபலித்த செங்கற் சுவரின் நிறம், சாலை வரை பனி மணலையும் செந்நிறமாய்க் காட்டியது. உவாரவ்காவிலிருந்து சிறிது தூரத்தில் இப்பள்ளிக்கூடம் கட்டப்பட்டிருந்தது. ஏனெனில் பக்கத்துக் கிராமங்கள், குதிரைப் பண்ணைக் குடியிருப்பு, எண்ணெய்த் தொழிலாளர் ஆரோக்கிய விடுதி, பீட் நிலக்கரி சேகரிக்கும் தொழிலாளிகளின் குடியிருப்பு ஆகிய இடங்களிருந்து சுற்றுப் பிரதேசத்திலுள்ள குழந்தைகள் எல்லாம் அங்குதான் படிக்க வந்தார்கள். அந்தப் பெரிய ரஸ்தாவின் இரு திசைகளிலிருந்தும் தலையங்கிகள், தலைக்குட்டைகள், குல்லாய்கள் காது மூடிகள் ஆகியவை அனைத்தும் பள்ளிக்கூட வாசலை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தன.
"வணக்கம், அன்னா வசீலியெவ்னா'' என்று அவர்களது வணக்க மொழிகள் முடிவற்ற நீரோடைபோல் கலகலத்தன. அவ்வார்த்தைகள் சில வேளைகளில் மணியொலியைப் போல் தெளிவாகவும், இன்னும் சில வேளைகளில் கழுத்திலிருந்த கண்வரை இறுக்கிச் சுற்றியிருந்த தலைக்குட்டைகளின் காரணமாகவும் மந்தமாகவும் கேட்டன.
அன்று அன்னா வசீலியெவ்னா ஐந்தாவது வகுப்பிற்கு முதலாவதாகப் பாடம் எடுக்க வேண்டும். பள்ளிக்கூட ஆரம்ப மணி அடித்த ஓசை அடங்கு முன்பே, அவள் வகுப்பு அறைக்குள் நுழைந்துவிட்டாள். மாணவர்கள் அனைவரும் ஒருங்கே எழுந்து வணக்கம் கூறிவிட்டு, மீண்டும் தங்கள் இடங்களில் அமர்ந்தனர். சத்தங்களெல்லாம் மெதுவாய் அடங்கின. சாய்வு மேஜைகளைப் "படார்' என்று மூடுவதும், பெஞ்சுகள் "கிரீச்' என்று ஓலமிடுவதும், யாரோ ஒருவன் தனது அருமையான, கவலையற்ற காலை நேரச் சுதந்திரத்திற்கு முடிவு வந்துவிட்டதே என்று வருத்தத்துடன் பெருமூச்சு விடுவதுமாகிய சத்தங்களெல்லாம் சிறிது சிறிதாக ஓய்ந்துவிட்டன.
"இன்று சொற்களின் வகையைப் பற்றிப் படிப்போம்...'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.
வகுப்பில் ஒரே நிசப்தம் குடிகொண்டது. ஒரு பெரிய லாரி ரஸ்தாவில் போய்க்கொண்டிருந்த உரத்த ஓசை வெகு தெளிவாய்க் கேட்டது.
சென்ற வருடத்தில் இப்பாடம் நடத்தும்போது, தான் எவ்வளவு பரபரப்புடன் இருந்தாள் என்பதை அன்னா வசீலியெவ்னா ஞாபகப்படுத்திக்கொண்டாள். பரீட்சை எழுதப் போகும் பள்ளிச் சிறுமியைப் போல் "பெயர்ச் சொல் என்பது பெயரைக் குறிக்கும்' என்று வாய்க்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததும், குழந்தைகள் இதைப் புரிந்துகொள்வார்களோ என்ற, வேதனை நிறைந்த ஒரு சந்தேகமும் அவளுக்கு நினைவு வந்தன.
பழைய நினைவு வந்ததும் ஒரு புன்சிரிப்பு அவள் முகத்தில் தவழ்ந்தது. தனது அடர்ந்த தலைமுடியில் செருகியிருந்த கொண்டையூசியைச் சரிப்படுத்திக் கொண்டாள். அமைதியுணர்ச்சி அவள் உள்ளம் முழுவதும் இதமான கதகதப்பைப் போல பரவியது. அடங்கிய குரலில் பாடத்தைத் தொடங்கினாள்.
"பெயர்சொல் என்பது ஒரு பொருளின் பெயரைக் குறிக்கும் சொல்லாகும். "யார் அது? அது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதிலாக வரக்கூடிய எந்தப் பொருளும், எந்த ஆளும் இலக்கணத்தில் பெயர்ச்சொல் என்று கூறப்படும் உதாரணமாக, "யார் அது?' "மாணவன்', அல்லது "அது என்ன?' - "புத்தகம்'...''
"நான் உள்ளே வரலாமா?''
பாதி திறந்திருந்த கதவின் பக்கம், குளிரில் அடிபட்டு, சீனிக் கிழங்கைப்போல் சிவந்து கிடந்த முகத்துடனும், பனித்தூசி படிந்த புருவங்களுடனும் ஒரு சிறிய உருவம் நின்று கொண்டிருந்தது. காலுக்குச் சற்றே பெரிதாயிருந்த "வாலென்கி'களுக்கு மேலே தங்கியிருந்த வெண்பனிச் சிதர்கள் உருகி ஒளியிழந்துகொண்டிருந்தன.
"மறுபடியும் நேரம் கழித்துத்தான் வருகிறாய், ஸôவுஷ்கின்?'' } அநேக இளம் ஆசிரியர்கள்போல் அன்னா வசீலியெவ்னாவும் கண்டிப்பாக இருக்க விரும்பினாள். ஆனால் இப்போது அவளுடைய கேள்வி பரிதாபம் மிகுந்து ஒலித்தது.
அவளது வார்த்தைகளைக் கேட்டதும், தனக்கு உள்ளே வர அனுமதி கிடைத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு, ஸôவுஷ்கின் விரைவில் தன்னுடைய இடத்திற்கு நழுவி விட்டான். சாய்வு மேஜையின் கீழ் அவன் தனது தோல் பைக்கட்டைத் தள்ளியதையும், தலையைத் தூக்காமல் அடுத்த பையனிடம் ""என்ன நடந்துகொண்டிருக்கிறது?'' என்று அவன் மெதுவாகக் கேட்டுக்கொண்டிருந்ததையும் அன்னா வசீலியெவ்னா கவனித்துவிட்டாள்.
ஸôவுஷ்கின் நேரம் கழித்து வந்தது அவளுக்குத் தடுமாற்றத்தையளித்தது. நன்றாக ஆரம்பித்திருந்த பாடத்தை அது கெடுத்துவிட்டது. இரவில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிபோன்று, வயதால் வாடிய தோற்றமுடைய பூகோள ஆசிரியையும்கூட ஸôவுஷ்கின் சரியாக வருவதில்லை என்பது பற்றிப் புகார் செய்திருந்தாள். வகுப்பில் கவனமின்மை, சத்தம் ஆகியவை பற்றியும் அவள் கூறியிருந்தாள்... ""பள்ளிக்கூடம் ஆரம்பித்ததும் பாடங்கள் தொடங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது' என்று அவள் பெருமூச்சு விடுவாள். "ஆம், பிள்ளைகளை அடக்கி வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும், பாடங்களைக் கவர்ச்சியுள்ளவையாகப் போதிக்கத் தெரியாதவர்களுக்கும் கஷ்டம்தான்' என்று அன்னா வசீலியெவ்னா தன்னம்பிக்கையுடன் எண்ணியிருந்தாள். அவ்வாசிரியையுடன் பாடங்களை மாற்றிக்கொள்வதாகக் கூடச் சொல்லியிருந்தாள். இப்பொழுது, தான் அவ்வயது சென்ற ஆசிரியையிடம் கூறியது தவறு என்று அவளுக்குப்பட்டது. ஏனென்றால் தான் சகஜமாகப் பேசிய அவ்வார்த்தைகள் அவளைப் போட்டிக்கிழுப்பது போலவும், கண்டிப்பதுபோலவும் அந்த ஆசிரியைக்குத் தோன்றியிருக்கும் அல்லவா?
"தெரிந்துகொண்டீர்களா?'' என்று அன்னா வசீலியெவ்னா குழந்தைகளைக் கேட்டாள்.
"தெரிந்துகொண்டோம்'' என்று பலரும் ஒருமித்துக் கிளப்பிய குரல் கேட்டது.
"நல்லது, அப்படியானால் நீங்களே உதாரணங்கள் கொடுங்கள், பார்க்கலாம்.''
ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை. பிறகு யாரோ தயக்கத்தோடு ""பூனை'' என்று சொன்னான்.
"நீ சொல்லியது சரி'' என்றாள் அன்னா வசீலியெவ்னா. சென்ற வருடமும் குழந்தைகள் முதலில் ""பூனை'' என்றே சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. இவ்வாறு முதல் ஆரம்பம் ஆகிவிட்டது.
"ஜன்னல், மேஜை, வீடு, ரஸ்தா'' என்று குழந்தைகள் சொல்லிக்கொண்டு போனார்கள். "சரி, சரி'' என்று அன்னா வசீலியெவ்னா தொடர்ந்து சொல்லி வந்தாள்.
மிகுந்த குதூகலத்துடன் விளங்கியது வகுப்பு. பழக்கமான பொருள்களின் பெயர்களைச் சொல்வதில் குழந்தைகள் எவ்வளவு சந்தோஷம் அடைகின்றனர் என்பதை வியப்போடு அவள் அறிந்துகொண்டாள். இந்தப் பொருள்களைக் குழந்தைகள் இதற்கு முன் கண்டிராத ஒரு புதிய நோக்குடன் காண்பதுபோல் அவளுக்குப் புலப்பட்டது. மேலும் பல பொருள்களின் பெயர்களை அவர்கள் சொல்லி வந்தார்கள். முதல் சில நிமிடங்கள் மிகவும் பழகிய பொருள்கள், சாமான்களின் பெயர்களே வந்தன, "சக்கரம், டிராக்டர், கிணறு, பறவைக்கூடு'' என்று.
கடைசிச் சாய்வு மேஜையிலிருந்த கொழுத்த வாஸ்யா ""ஆணி, ஆணி'' என்று கீச்சுக்குரலில் மீண்டும், மீண்டும் பிடிவாதமாகக் கத்தினான்.
பிறகு யாரோ சிறிது பயத்துடன், "நகரம்'' என்றான்.
"சரி'' என்று அதை அங்கீகரித்தாள் அவள். பனிக்கட்டி மழை போன்று விரைவில் கேட்டன, ""தெரு, பாதாள ரயில், டிராம் வண்டி, சினிமா'' என்ற சொற்கள்.
"போதும், உங்களுக்குப் புரிந்துவிட்டது'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.
ஓரளவு தயக்கத்துடன் சத்தமெல்லாம் ஓய்ந்தது. கட்டுக்கட்டான வாஸ்யா மட்டுமே இன்னும் அங்கீகரிக்கப்படாமலிருந்த தனது "ஆணியை' உச்சரித்துக்கொண்டிருந்தான். திடீரென்று ஸôவுஷ்கின் கனவிலிருந்து விழித்தவன்போல் எழுந்து நின்று கணீரென்று ஒலிக்கும் குரலில், "பனிக்கால "ஓக்' மரம்'' என்று கூவினான்.
பிள்ளைகளெல்லாம் சிரித்தனர்.
"சத்தம் போடாதீர்கள்'' என்று அன்னா வசீலியெவ்னா உள்ளங்கையால் மேஜையைத் தட்டிக்கொண்டு கூறினாள்.
பிள்ளைகளின் சிரிப்பையும், ஆசிரியையின் உத்தரவையும் சிறிதும் கவனியாது, மறுபடியும், "பனிக்கால "ஓக்' மரம்'' என்றான் ஸôவுஷ்கின். அவன் பேசிய விதமும் மிக விசித்திரமாகயிருந்தது. அவனுடைய இருதயத்திலிருந்து வருவதே போன்றிருந்தன அச்சொற்கள். எதையோ ஒப்புக்கொள்வது போலவும் அவனால் அடக்க முடியாதபடி தானாக வழிந்து வேகமாய் வெளிவரும் ஓர் இன்ப இரகசியத்தைப் போலவுமிருந்தன அவை.
அவனுடைய விந்தையான கிளர்ச்சியைச் சிறிதும் அறியாது, அன்னா வசீலியெவ்னா தனது சிடுசிடுப்பை அடக்க முடியாதவளாய், "ஏன், "பனிக்கால' என்பதைச் சேர்க்கிறாய்? "ஓக்' மரம் என்றால் மட்டும் போதுமே'' என்று கூறி முடித்தாள்.
"ஓக்' மரம் என்று மட்டும் சொன்னால் அதற்கு ஒரு பொருளுமில்லை. பனிக்கால "ஓக்' மரம் என்றால்தான் சரியான பெயர்ச்சொல்'' என்று பையன் அவனை மடக்கினான்.
"ஸôவுஷ்கின், இடத்தில் உட்காரு! நேரத்தில் வராததினால் ஏற்படுகிறதைப் பார்த்தாயா? "ஓக்' மரம் என்பது பெயர்ச்சொல். "பனிக்கால' என்பது என்ன சொல் என்ற விஷயத்திற்கு நாம் இன்னும் வரவில்லை. தயவு செய்து, மதியம் இடை நேரத்தில் ஆசிரியர் அறையில் என்னை வந்து பார்'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.
பின் பெஞ்சியிலிருந்த ஒருவன் "பனிக்கால "ஓக்' மரத்திலிருந்து கிடைக்கும் பலன் இதுதான்'' என்று ஏளனம் செய்தான்.
ஆசிரியையின் கண்டிப்பு வார்த்தைகளால் சிறிதும் கலங்காதவனாய், தனது உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஓர் எண்ணத்தில் மகிழ்ச்சியுற்றவனாய், புன்சிரிப்புடன் தனது இருப்பிடத்தில் அமர்ந்தான் ஸôவுஷ்கின். ""இவனைச் சரிப்படுத்துவது கஷ்டம்தான்'' என்று அன்னா வசீலியெவ்னா நினைத்தாள்.
பாடம் தொடர்ந்து நடந்தது...
***
ஸôவுஷ்கின் ஆசிரியர் அறைக்கு வந்ததும். "உட்காரு'' என்று சொன்னாள் அன்னா வசீலியெவ்னா.
கை வைத்த மிருதுவான நாற்காலியில் வெகு சந்தோஷத்துடன் உட்கார்ந்துகொண்டு அதனுடைய வில் கம்பிகளின் மேல் பல தடவை அமுக்கிக் குதித்தான் அவன்.
"நீ எப்பொழுதும் ஏன் நேரம் கழித்து வருகிறாய். சொல்லேன்'' என்று அன்னா வசீலியெவ்னா கேட்டாள்.
"எனக்குத் தெரியாது, அன்னா வசீலியெவ்னா'' என்று வயது வந்தவனைப்போல் தோள்களைக் குலுக்கிக்கொண்டு கூறத் தொடங்கினான். "வகுப்பு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே நான் வீட்டை விட்டுப் புறப்பட்டு விடுகிறேன்.''
மிகச் சிறிய விஷயங்களில்கூட உண்மையை வருவிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! எத்தனையோ பிள்ளைகள் ஸôவுஷ்கினைவிட அதிகத் தொலைவில் வசிக்கிறார்கள். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்து வர வேண்டியதில்லையே.
"நீ குஸ்மீன்கியில்தானே இருக்கிறாய்?''
"இல்லை, ஆரோக்கிய விடுதியில் இருக்கிறேன்.''
"ஒரு மணி நேரத்திற்கு முன்னமேயே புறப்பட்டு விடுகிறேன் என்று சொல்ல உனக்கு வெட்கமாயில்லையா? ஆரோக்கிய விடுதியிலிருந்து பெரிய ரஸ்தாவிற்கு வரப் பதினைந்து நிமிடமாகும். ரஸ்தாவின் வழியே பள்ளிக்கூடம் வந்தால் அரை மணி நேரமாகும்.''
"நான் ரஸ்தா வழியே ஒரு பொழுதும் வருவதில்லை. நேராளமாகக் காட்டின் குறுக்காகத்தான் நடந்து வருகிறேன்'' என்று தனக்கே புரியாமல், இவ்விஷயம் முழுவதும் ஆச்சரியத்தைக் கொடுப்பதுபோன்ற ஒரு தோற்றத்துடன் கூறினான் ஸôவுஷ்கின்.
"நேராளமாக இல்லை, நேராக'' என்று அவனைத் திருத்தினாள்.
குழந்தைகள் பொய் சொல்லும்பொழுது சகஜமாக ஏற்படுவதுபோல, துக்கமும், வெறுப்பும் அவளுக்கு உண்டாயிற்று. ஸôவுஷ்கின் ஏதாவது காரணம் சொல்வான் என்ற நம்பிக்கையில் பேசாமலிருந்தாள். ""அன்னா வசீலியெவ்னா! நான் மிகவும் வருந்துகிறேன். மற்றப் பையன்களுடன் பனிப்பந்து விளையாடினேன்...' என்றோ இதுபோல ஏதாவதோ சொல்வான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் தனது பெரிய சாம்பல நிறக் கண்களால் அவளை வழித்துப் பார்த்தான். "நல்லது, எல்லாம் சொல்லியாகி விட்டதே; இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?' என்று கேட்பதுபோலிருந்தது அவன் பார்வை.
"இது மோசம், ஸôவுஷ்கின், மிகவும் மோசம். நான் இதைக் குறித்து உன் பெற்றோர்களைப் பார்க்க வேண்டி வரும்.''
"எனக்குத் தாயார் மட்டும்தான் இருக்கிறார்கள், அன்னா வசீலியெவ்னா!'' என்று ஸôவுஷ்கின் புன்சிரிப்புடன் கூறினான்.
"குளிப்பாட்டும் தாதி'' என்று ஸôவுஷ்கின் தனது தாயாரைக் குறிப்பிட்டதால் அவளைப் பற்றி நினைத்துப் பார்க்கும்பொழுது, அன்னா வசீலியெவ்னாவின் முகம் சிவந்தது. ஆரோக்கிய விடுதியில் தண்ணீர்ச் சிகிச்சை அறையில் அவள் வேலை பார்த்து வந்தாள். அவள் மிகவும் நொய்ந்துபோன பெண்பிள்ளை. எப்போதும் சுடுதண்ணீரில் பட்டு வந்ததால் அவள் கைகள் வெளுத்து துணியாலானவைபோலத் தொளதொள வென்றிருக்கும். மாபெரும் தேசபக்த யுத்தத்தில் அவளது கணவன் இறந்து போகவே, இந்தக் கோல்யாவோடு இன்னும் மூன்று குழந்தைகள் அவள் தனியாகவே வளர்த்து வந்தாள்.
ஸôவுஷ்கினுடைய தாயாருக்கு எத்தனையோ தொல்லைகள், கவலைகள் உண்டு என்பது நிச்சயம்; எனினும் அன்னா வசீலியெவ்னா அவளைப் பார்ப்பது அவசியமாயிருந்தது.
"நான் போய் உன் தாயாரைப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.''
"கட்டாயமாக, அன்னா வசீலியெவ்னா! அம்மா மிகவும் சந்தோஷப்படுவார்கள்.''
"ஆனால் நான் சொல்லப்போவதைக் கேட்டு அவர்களுக்குச் சந்தோஷம் உண்டாகாது. எந்த ஷிப்டில் உன் தாயார் வேலை செய்கிறார்கள்?''
"மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது ஷிப்டில் அவர்களுக்கு வேலை.''
"மிகவும் நல்லது. இரண்டு மணிக்கு என் வேலை முடிகிறது. நீ என்னை உன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகலாம்.''
ஸôவுஷ்கின் அன்னா வசீலியெவ்னாவைக் கூட்டிக்கொண்டு சென்ற வழி பள்ளிக்கூடத்திற்குப் பின்னாலிருந்த மைதானத்திலிருந்து ஆரம்பித்தது. அவர்கள் காட்டிற்குள்ளே நுழைந்ததும் பனி மூடியிருந்த தேவதாரு மரங்களின் கிளைகள் அவர்களை வெளியே தெரியாமல் மறைத்தன. உடனேயே அமைதியும் சாந்தமும் நிலவுகின்ற வேறோர் அற்புத உலகிற்கு வந்துவிட்டதுபோல அவர்களுக்குத் தோன்றிற்று. மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு பறந்து சென்ற காக்கைகளும் மற்றப் பறவைகளும் கிளைகளை அசைத்துப் பைன் நெற்றுகளை உலுக்கிவிட்டன, அல்லது உலர்ந்து தொங்கிக்கொண்டிருந்த சுள்ளிகளைக் கீழே விழச் செய்தன. ஆனால் இதனாலெல்லாம் அவ்விடத்தில் சத்தமே உண்டாகவில்லை.
எங்குப் பார்த்தாலும் ஒரே வெண்மை நிறம். காற்றிலடிபட்டு அழுதுகொண்டிருந்த "பிர்ச்' மரங்களின் உச்சிகளில்தான் கருமை தென்பட்டது. அம்மெல்லிய கிளைகள் ஆகாயத்தின் தெள்ளிய நீல நிறத்தின்மீது இட்ட கறுப்புக் கோடுகள் போல் விளங்கின.
அவர்கள் நடந்துபோன பாதை ஓர் ஓடையின் ஓரமாக வளைந்து சென்றது. சில சமயங்களில் கரையையொட்டித் திரும்பியதும், மற்றும் சில வேளைகளில் மேலே மேட்டில் ஏறியும் சென்றது அப்பாதை.
சிற்சில சமயங்களில் மரங்கள் விலகும்; அப்போது சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்த அழகிய வெளிகள் கண்ணுக்குப் புலனாகும். அவற்றில், குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற முயல்களின் கால் தடங்கள் கடிகாரச் சங்கிலிகள்போல் தோன்றின. ஒரு மிருகத்தின், மூவிலை போன்ற காலடிச் சுவடுகளையும் அவர்கள் கண்டார்கள். அச்சுவடுகள் காட்டின் நடுப்பகுதியை நோக்கிச் சென்றன.
அன்னா வசீலியெவ்னா இத்தடங்களில் கருத்துள்ளவளாய் இருக்கிறாள் என்பதைக் கண்டதும், ஸôவுஷ்கின் தனது பழகிய நண்பன் ஒருவனைப் பற்றிப் பேசுவதுபோல, ""கடம்பை மான் இங்கு வந்து போயிருக்கிறது'' என்றான். அவள் காட்டை நோக்கிப் பார்த்ததைக் கண்டு, அவளுக்குத் தைரியமூட்டுவதுபோல், ""பயப்பட வேண்டாம், கடம்பைகள் ரொம்பச் சாதுவானவை'' என்று மேலும் கூறினான்.
"நீ எப்போதாவது கடம்பையைப் பார்த்திருக்கிறாயா?'' என்று அன்னா வசீலியெவ்னா ஆர்வத்துடன் கேட்டாள்.
"உயிருள்ள கடம்பையையா?'' என்று கேட்டுவிட்டு ஸôவுஷ்கின் பெருமூச்சு விட்டான், ""இல்லை. அது போட்டுவிட்டுப் போயிருந்தவற்றைத்தான் பார்த்திருக்கிறேன்'' என்று கூறினான்.
"அப்படி என்றால்?''
"ஓ, அதனுடைய விட்டைகள்'' என்று வெட்கத்துடன் விளக்கினான். பாதை கமான்போல வளைந்திருந்த ஒரு மரத்தின் கீழ் சென்று மறுபடியும் ஓடைக்கு வந்தது. அவ்வோடை அநேக இடங்களில் அடர்ந்த பனிமணலால் மூடப்பட்டிருந்தது; வேறு சில இடங்களில் மழமழப்பான பனிக்கட்டிச் சல்லடம் அதைப் பிணித்திருந்தது. இன்னும் சில இடங்களில் இவை இரண்டிற்குமிடையே நல்ல, கரு நிறமான தண்ணீர் கண்ணில் பட்டது.
"ஏன் எங்கும் பனிக்கட்டியாகவில்லை?'' என்று அன்னா வசீலியெவ்னா கேட்டாள்.
"இங்கு சுடுதண்ணீர் ஊற்றுகள் இருக்கின்றன. அதோ பாருங்கள்! ஒரு நீர்ப்பீலி'' என்றான் பையன்.
அந்தத் தண்ணீர்ப் பாகத்தின் மேல் குனிந்து பார்த்தாள் அன்னா வசீலியெவ்னா. அடியிலிருந்து தண்ணீர் நூலிழை போல மேலே வந்துகொண்டிருந்தது. நீர்மட்டத்துக்குக் கீழே அது குமிழிகளாக வெடித்தது. இக்குமிழிகளும், அடியிலுள்ள காம்பு போன்ற நீர்த் தாரையும் வெண்குவளைப் புஷ்பத்தைப் போலிருந்தன.
"இந்தப் பக்கத்தில் ஏராளமான நீருற்றுகள் இருக்கின்றன'' என்று ஸôவுஷ்கின் உணர்ச்சியுடன் கூறினான். "வெண் பனியின் கீழ் உயிரோட்டத்தோடு தானிருக்கிறது நீரோடை.''
மேலாக இருந்த வெண்பனியை அவன் அகற்றியவுடன் கன்னங்கரேலென்றிருந்த தெளிவான தண்ணீர் தென்பட்டது.
வெண்பனி தண்ணீருக்குள் விழுந்தவுடன் கரைந்து விடாமல் கட்டியாகி, பசுமையான நீர்ப்பாசிபோல் அதில் மிதப்பதை அன்னா வசீலியெவ்னா கண்டாள். இது அவளுக்குப் பிரியமான விளையாட்டாக இருந்தது. மேலும்மேலும் வெண்பனியைத் தனது மேல்ஜோடுகளால் தண்ணீருக்குள் தள்ளிவிட்டாள். ஒரு பெரிய வெண்பனித் துண்டு ஓடைக்குள் விழுந்து வேடிக்கையான உருவத்தில் தோன்றியதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இதிலேயே முழுவதும் ஈடுபட்டிருந்ததினால் ஸôவுஷ்கின் தனக்கு முன்பே நடந்து சென்று ஓடையின் குறுக்கே வளைந்து நின்ற ஒரு மரக்கிளையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்பதை அவள் முதலில் கவனிக்கவில்லை. வேகமாக அவனைத் தொடர்ந்து சென்றாள். சுடு நீருற்றுகள் பின்தங்கின. இங்கே உள்ள தண்ணீரின் மேல் மெல்லிய பனிக்கட்டித் தகடு மூடியிருந்தது. அதன் பளிங்கு போன்ற மிருதுவான மேற்பரப்பில் விரைந்து சரிந்து செல்லும் நிழல்கள் தோன்றி மறைந்தன.
"இங்கே பனிக்கட்டி எவ்வளவு மெல்லிதாக இருக்கிறது பார், தண்ணீர் ஓட்டங்கூட அல்லவா தெரிகிறது!'' என்றாள்.
"அது தண்ணீரில்லை, அன்னா வசீலியெவ்னா! நான் ஆட்டிய கிளையின் நிழல் அது'' என்றான் சிறுவன்.
அன்னா வசீலியெவ்னாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இங்கே காட்டில், தான் ஒன்றும் சொல்லாமலிருப்பதே நல்லது என்று தீர்மானித்துக் கொண்டாள்.
ஸôவுஷ்கின் மறுபடியும் முன் சென்றான். சிறிது குனிந்துகொண்டும், கூர்மையாகக் கவனித்துக்கொண்டும் இப்போது நடந்தான்.
காடு மேலும் மேலும் போய்க்கொண்டேயிருந்தது. அதன் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற நெருக்கமான இடைவெளிகளின் ஊடே அவர்கள் சென்றார்கள். அங்கே குடிகொண்டிருந்த அமைதிக்கும், வெண்பனிக்கும் குவைகளுக்கும், மரங்களுக்கும் முடிவென்பதே தோன்றவில்லை. இங்கு மங்குமுள்ள வெளிகளினூடே அந்தி வெயில் பாய்ந்து வந்தது.
திடீரென்று மரங்களின் அடர்த்தி குறைந்துகொண்டே சென்று, நீலிநிறமான ஓர் இடைவெளி முன்னே தென்பட்டது. ஒளி நிறைந்ததும், காற்றோட்டமாயும் இருந்தது. முதலில் குறுகிய இடைவெளியாகத் தோன்றிய அது, போகப்போக சூரிய வெளிச்சத்தில் பிரகாசிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப்போல் மின்னுகின்ற பனித்திடல்களைக் கொண்ட பெரும் பரப்பாகக் காட்சியளித்தது.
ஒரு கொட்டை மரத்தைச் சுற்றிப் பாதை சென்றது. காடு பின்னடைந்தது. இவ்விடைவெளியின் நடுவே, பளபளவென்று ஜொலிக்கும் வெண்பனி போர்த்து, மாதா கோவிலைப்போல் பெரிதாகவும், கம்பீரமாகவும் நின்றது ஓர் "ஓக்' மரம். மற்ற மரங்களெல்லாம் தங்களுடைய இந்த அண்ணன் நன்கு விரிந்து வளர்ந்து வரவேண்டுமென்பதற்காக, அவ்விடத்தை விட்டு விலகி அப்பாற் போயிருந்ததுபோல் தோன்றியது. இவ்விடைவெளியின் மேல் பந்தல் போட்டிருந்தாற்போல் "ஓக்' மரத்தின் அடிக்கிளைகள் காட்சியளித்தன. மூன்று மனிதர்கள் சேர்ந்தாலும் தழுவ முடியாத அவ்வளவு பருமனாக இருந்தது அதன் அடிமரம். அதன் பட்டைகளுக்கு ஊடே ஆழமான பிளவுகளில் பனி நிறைந்து கிடந்தது, அம்மரத்தில் வெள்ளிக் கம்பி இழைத்திருந்தது போல் காணப்பட்டது. அதன் பருத்த இலைகள் முழுவதும் உதிர்ந்து விடவில்லை. மேல் உச்சி வரை பனியடர்ந்த இலைகளால் அது மூடப்பட்டிருந்தது.
"ஓ, இதுவா உன்னுடைய பனிக்கால "ஓக்' மரம்!''
அன்னா வசீலியெவ்னா தயக்கத்துடன் ஓர் அடி முன் சென்றாள். அக்காட்டின் காவற்காரனாக விளங்கிய அவ்விருட்சம் வெகு கம்பீரமாக அவளை நோக்கித் தனது கிளைகளை அசைத்தது.
ஆசிரியை என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்பதைச் சற்றும் அறியாத ஸôவுஷ்கின் தனது முதிய நண்பனின் காலடியில் பரபரப்புடன் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.
"அன்னா வசீலியெவ்னா! இதோ பாருங்கள்'' என்றான்.
பிறகு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, ஒரு பெரிய வெண்பனிக் குவையை அகற்றினான். அதனடியில் மண் தூள்களைத் தெளித்தது போலிருந்தது. மக்கிப்போன புல்லின் துண்டுகளும் தென்பட்டன. அதற்குக் கீழ் ஒரு துவாரத்தில் அழுகிய இலைகளாலான வலையால் சுற்றப்பட்டிருந்த ஒரு சிறிய பந்து கிடந்தது. கூர்மையான, ஊசிபோன்ற முனைகள் அந்த இலைகளினூடே நீட்டிக் கொண்டிருந்தன. அது ஒரு முட்பன்றி என்று அன்னா வசீலியெவ்னா கண்டுகொண்டாள்.
"அது எப்படிச் சுருட்டிக்கொள்கிறது, பாருங்கள்'' என்று இலைக் கம்பளியால் அதற்கு மறுபடியும் போர்த்துக்கொண்டு கூறினான் ஸôவுஷ்கின். பிறகு அடுத்த வேரின் பக்கமாகப் பனியைத் தோண்டினான். ஒரு சிறிய குகை காணப்பட்டது. அதன் ஓரங்கள் பனிக்கட்டித் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அட்டையில் வெட்டப்பட்ட விளையாட்டுப் பொம்மைபோல பழுப்பு நிறமான தவளை ஒன்று அங்கே உட்கார்ந்திருந்தது. விறைத்திருந்த அதன் தோல் மிகப் பளபளப்பாக இருந்தது. ஸôவுஷ்கின் அதைத் தொட்ட பொழுது அது அசையவில்லை.
"செத்துப் போனதுபோல் பாசாங்கு பண்ணுகிறது; சூரியன் எட்டிப் பார்த்தவுடன் உயிர்பெற்று விடும்'' என்று சொல்லிக்கொண்டே சிரித்தான் ஸôவுஷ்கின்.
தன்னுடைய சிறிய ராஜ்யத்திலுள்ளவை எல்லாவற்றையும் அவன் ஆசிரியைக்குக் காட்டினான். "ஓக்' மரத்தின் அடியில் அநேக உயிர்கள் இடங்கொண்டு வாழ்ந்தன; வண்டுகள், பல்லிகள், பூச்சிகள். சில வேர்களின் கீழேயும், வேறு சில பட்டைகளின் இடுக்குகளிலும் தங்கி வாழ்ந்தன. குளிர்காலத் தூக்கத்தில் வீழ்ந்து கிடந்த அப்பிராணிகள் ஒட்டி உலர்ந்து போய், வெறும் பொள்ளலாயிருப்பதுபோல் காணப்பட்டன. இந்தப் பெரிய "ஓக்' மரம் தன்னிடத்தே அதிக கதகதப்பைக் கொண்டிருந்தது. ஆகவே, இப்பிராணிகள், தங்குவதற்கு இதைவிடச் சிறந்த இடத்தைக் கண்டுகொண்ட முடியாது. மிகுந்த உற்சாகத்துடன், தனக்குப் புதிதான இக்காட்டில் மறைந்து கிடந்த உயிர்களைப் பார்த்து, அவற்றில் ஈடுபட்டிருந்தாள் அன்னா வசீலியெவ்னா. திடீரென்று ஸôவுஷ்கின் கலவரத்துடன் ஏதோ சொன்னது அவள் காதில் விழுந்தது. "அடேடே, அம்மாவை நாம் பார்க்க முடியாது போலிருக்கிறதே!'' என்றான் அவன்.
உடனே கைக்கடிகாரத்தை உயர்த்திப் பார்த்தாள். மணி மூன்றே கால் ஆகிவிட்டது. "அகப்பட்டு விட்டோம்' என்ற உணர்ச்சியுண்டாயிற்று. தான் சொல்லப் போவதற்குத் தன்னை மன்னிக்கும்படி "ஓக் மரத்தை மனத்துள் வேண்டிக்கொண்டு, "இதோ பார், ஸôவுஷ்கின், சுருக்கு வழிகளை எப்போதும் நம்ப முடியாது. நீ இனிமேல் ரஸ்தாவின் வழியாகவே வா'' என்று கூறினாள்.
ஸôவுஷ்கின் பதில் ஒன்றும் சொல்லவில்லை. தலையைக் குனிந்துகொண்டு நின்றான்.
"கடவுளே! நமது பேடித் தனத்தைக் காட்டுவதற்கு வேறு என்ன செய்ய வேண்டும்?' என்று அன்னா வசீலியெவ்னா வேதனையுடன் நினைத்துக்கொண்டாள். அன்று அவள் பாடம் நடத்தியதையும், மற்றைய நாட்களில் நடத்தியதையும் நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு உற்சாகமற்று, வறட்சியுடன் நாம் வார்த்தைகளையும், பாஷையையும் பேசி வந்திருக்கிறோம். மொழியென்பது இல்லாவிட்டால் மனிதன் உணர்சியற்ற ஊமை மாதிரிதானே! வாழ்க்கை எவ்வாறு அழகும், கருணையும் கூடியதோ, அதேபோல் எப்பொழுதும் தாய்மொழியும், புதுமையும் அழகும் நிறைந்து விளங்குகிறது.
இந்த அழகில்தான் திறமைவாய்ந்த ஆசிரியை என்று வேறு எண்ணம்! ஆசிரியத் தொழில் என்ற பாதையை நன்கு தெரிந்துகொள்ள ஆயுள் முழுவதும் முயன்றாலும் காலம் போதாது; தானே அப்பாதையில் இன்னும் ஓர் அடி எடுத்து வைக்கவில்லை. தவிர, அப்பாதைதான் எங்கே? அது அவ்வளவு இலேசாகக் கண்டுபிடித்துக்கொள்ளக் கூடியதா என்ன? மாய நகைப் பெட்டிக்குச் சாவி கண்டுபிடிப்பதே போல் அவ்வளவு கஷ்டமானதல்லவா அது! ஆனால் குழந்தைகள் "டிராக்டர், கிணறு, பறவைக்கூடு' என்றெல்லாம் குதூகலத்துடன் கூறியபொழுது, வருங்காலத்தின் மங்கலான தோற்றம் ஒருவாறு காணக் கிடைத்தது என்பதை அவள் உணர்ந்துகொண்டாள்.
"நல்லது, ஸôவுஷ்கின். இங்கே அழைத்து வந்ததற்காக உனக்கு மிக வந்தனம். நீ இந்தப் பாதையாக வரவேண்டுமென்று விரும்பினால் வரலாம்'' என்று கூறினாள்.
ஸôவுஷ்கினுடைய முகம் சிவந்தது. இனிமேல், தான் காலந்தவறாது வந்துவிடுவதாக வாக்களிக்க விரும்பினான். ஆனால் அது பொய்யாகுமே என்ற பயத்தினால் நிறுத்திக் கொண்டான். கழுத்துப் பட்டையை உயர்த்திக்கொண்டு உரோமக் குல்லாயை இழுத்துவிட்டான்.
"உங்களை வீடுவரை கொண்டு விடுகிறேனே...''
"பரவாயில்லை, ஸôவுஷ்கின்; நான் தனியாகப் போய்க்கொள்வேன்.''
அவன் சந்தேகத்துடன் ஆசிரியையைப் பார்த்தான். குச்சி ஒன்றெடுத்து, அதன் வளைந்த நுனியை முறித்து எரிந்துவிட்டு, அதை அன்னா வசீலியெவ்னாவிடம் கொடுத்தான்.
"கடம்பை எதிர்ப்பட்டால் இதைக்கொண்டு முதுகில் ஓர் அடி கொடுங்கள்; அது உடனே ஓடிவிடும். குச்சியை இலேசாக அசைத்தாலே போதும்; அதுதான் நல்லது. இல்லாவிட்டால் அது கோபங்கொண்டு நம் காட்டை விட்டே ஓடிப்போய்விடும்'' என்றான்.
"ஆகட்டும், ஸôவுஷ்கின். நான் அதை அடிக்க மாட்டேன்.''
சிறிது தூரம் சென்ற பிறகு அன்னா வசீலியெவ்னா திரும்பிப் பார்த்தாள். அஸ்தமன சூரியனது ஒளியில் இந்த "ஓக்' மரம் சிவப்பாயும், வெண்மையாயும் தோன்றியது. அதனடியில் ஒரு சிறிய, கறுத்த உருவம் தென்பட்டது. ஸôவுஷ்கின் இன்னும் போகவில்லை. அந்தத் தொலைவிலிருந்து, தனது ஆசிரியைக்குக் காவல் காத்துக்கொண்டிருந்தான். திடீரென்று அன்னா வசீலியெவ்னாவுக்கு, இந்தக் காட்டில் மிகவும் அதிசயமாகவுள்ளது அந்தப் பனிக்கால "ஓக்' மரமல்ல, தாய்நாட்டிற்காகப் போரில் உயிர் நீத்த வீரத் தகப்பனும், ""குளிப்பாட்டும் தாதி''யாக வேலைப் பார்க்கும் தாயும் பெற்றெடுத்த, புரிந்துகொள்வதற்கே இயலாத, இவ்வதிசயமான சிறிய மனிதன்; எதிர்காலப் பிரஜையாகிய இந்த ஸôவுஷ்கின்தான் என்ற உண்மை புலனாயிற்று.
அவனை நோக்கிக் கையை அசைத்து வழியனுப்பினாள். பிறகு வளைந்து செல்லும் நடைபாதை வழியே நிதானமாக நடந்து சென்றாள்.
----------------------
* 1. மரியாதையைக் காட்டுவதற்கு முழுப் பெயரையும் கூறுவது ருஷ்யர்களின் வழக்கம்.
* 2. "வாலென்கி' என்பது ஒரு வகைக் கம்பளிச் செருப்பு.
நூல்: சுங்கான்
வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
ரூ.50
சிறுகுறிப்பு: எத்தனை முறைப் படித்தாலும் சலிக்காத சிறுகதை "அவனது ரகசியம்'. இச்சிறுகதையோடு 'சுங்கான்' என்கிற குறுநாவலும், "வெற்றியாளன்' என்கிற சிறுகதையும் உள்ளன. 'வெற்றியாளன்' சிறுகதையும் எல்லாப் போட்டிக் களத்திற்கும் பொருந்தக்கூடிய உலகச் சிறுகதை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிகச் சிறப்பான கதையைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி அரவிந்தன்.
Post a Comment