Friday, June 12, 2009

நிலவோடு நண்டு



நிலவுக்கும்

மூன்று லட்சத்து
எண்பத்தி நாலாயிரத்து
நானூற்று மூன்று கி.மீ.
தூ
மி
ரு
க்
கு
ம்

நண்டுக்கும்
இடையேயிருப்பது
பகையா?
உறவா?

நிலவு பூரணமாயிருக்கையில்
இது சதையிலாது கூடாக மேய்கிறது
நண்டு முழுதாய்க் கொழுத்து அலைகையில்
அது பிறையுமிலாது இருளாய்க் கரைகிறது

ஆளுகைக்கு வருகையில்
மாறிமாறி அழித்துக்கொள்கின்றனவா?
அல்லது..
ஆபத்துக் காலங்களில்
சிபி சக்கரவர்த்திபோல தங்களை
அறுத்து கொடுத்துக் கொள்கின்றனவா?

இரண்டிற்குமிடையில்
ஏதோ இருந்துவிட்டுப் போகட்டும்
என் விருப்பம்
பௌர்ணமியில் நிலவு
அமாவாசையில் நண்டு
நன்றி: நவீன விருட்சம்

Thursday, June 11, 2009

நீர்மாலை

நிசி விறைத்த பனியில்
மூழ்கிக்கிடந்தது
வேலிக்கம்பிகளுக்குள் காலி மனை
அதில் சற்றுமுன் முளைவிட்ட
நெல்விதையொன்று
உள் பரவும் காற்றில்
தன் சகங்களின் வாடையை நுகரத் துடித்தது
வேரில் சுழலும் ஊற்றில்
தன் சகங்களின் உறிஞ்சோசையைக் கேட்கத் துடித்தது
ஏதும் உணராததில் சுணங்கி
இருளை நகர்த்தித் தள்ளத் தொடங்கி
துவண்டு
வெளிச்சத்துக்கு வழிவிட இறைஞ்சியது
விடி சிறகோசைகளில்
மேலும் சிறு துளிர்த்த உயரத்திலிருந்து எக்கி
பிஞ்சு பச்சையம் பதற
முன்னும்பின்னுமாக வலமும் இடமுமாக
அசைவற்ற பார்வையால் தேடித்தேடிப்பார்த்து
பெருகின தன் அடர்காடு காணாது தவித்தது
அசை செடி முட்கள்
நெருங்கி வந்துபோன திகைப்பில்
தானேவொரு களையாய் வேரிடுவதாகத் துணுக்குற்றது
அதைச் சீந்தாது கால்கள் கடந்ததும்
தனித்து உயிர்க்காது
சவத்தின் இறுதி நீராடலுக்கு
நிரப்பி வரும் நீர்போல
துளிதுளியாய் ஊற்றை
உள்ளுக்குச் சுமக்கத் துவங்கியது.
நன்றி : வடக்கு வாசல்

Tuesday, June 9, 2009

எல்லாம் காற்றுவாழ்வனவே...

காற்றின் நுண் ஆய்வாளனெனக் கைகுலுக்கியவன்
தோள் மாட்டி பை முழுவதும்
எண்ணிறாத பறவைகளின்
வண்ணவண்ண இறக்கைகள் பறந்தன
காற்றில் ஒற்றையில் அலைந்து
இறக்கை எழுதும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை என்றவன்
நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் என்று
கண்டறிந்ததாய்ச் சொன்னவை:
தாமரைக்கொடியின் காற்றைச் சுவாசிக்கும்
மீன்கள் அதிகம் ருசிக்கும்
வேப்ப மரக்காற்றைச் சுவாசித்து உறங்கினால்
தீரா நோயனைத்தும் திரும்பிப் பாராமல் நடை கட்டும்
ஆலமரக் காற்றைச் சுவாசித்து உறங்கினால்
ஆயுள் கொடுக்கும் செல்கள் வீர்யம் கொள்ளும்
அரச மரத்துக் காற்றால்
மூளையின் அறைகளில் புது ஊட்டம் பிறக்கும்
அழகிய பெண் சுவாசித்தைச் சுவாசித்த மரம்
அதீதமாய்ப் பூத்துக் குலுங்கும்
மரங்களில் முட்கள் முளைப்பதற்கு
முரடர்கள் சுவாசக் காற்றே காரணம்
பூச்செடி, கொடிகளில் முட்கள் முளைப்பதற்கு
முரட்டுப்பெண்ணின் சுவாசம் காரணம்
சற்று நிறுத்தியவன் தொடர்ந்து சொன்னவை:
பறத்தல் எனும் வினை
தேர்ந்த கண்கட்டு வித்தை
காற்றின் ஆழத்தில் எல்லாமே மூழ்கிக் கிடக்கின்றன
எல்லாம் காற்றுவாழ்வனவே...
துடுப்புகள் பிணைந்த பறவைகள் மிதந்தே செல்கின்றன
துடுப்படிக்காது பறவைகள் கடக்கிற இடங்களில்
பிரபஞ்ச ரகசியத்தின் பிடிபடலிருக்கும்
களைப்பைப் போக்க
கடலைச் சில்லறைத் துளிகளாக்கி
அதன் ஈரப்பதத்தில் காற்று சாய்வு கொள்ளும்
உயர மிதக்கும் பறவையின் நிழலைக்
காற்று கீழே பிரதிபலிக்கவிடுவதில்லை
ஓரிடத்தில் பறவைகள்
அதிகம் குவிவதால் நேரும் சரிவால் புயல்
பெருமூச்சுகளின் வெப்பம் கூடுவதால்தான் வெக்கை
சுவாசித்தலுறவை முறித்துக் கொள்ளும் எதையும்
காற்று கரைத்து இன்மையாக்கிக் கொள்ளும்.
நன்றி: நவீன விருட்சம்

Monday, June 8, 2009

சீழ்க்கை வளையம்


பனி பூத்த குளத்தில்
கல்லெறிந்து போகிற சிறுமியாக
கருக்கல் தெளிவில்
சீழ்க்கையடித்து பறக்கிறது
முதல் குருவி

கலங்கிய மேகம்
சீழ்க்கையைக் கடத்தி
வானமெங்கும் போகிறது
வளையம்
வளையமாய்.
நன்றி: உயிரோசை

Friday, June 5, 2009

புணர் சிற்பம்


உச்சத்தை எட்ட
நூற்றாண்டு பலவாய்
முடிவுறாத
முயங்கலில் இருக்கின்றன
அச் சிற்பங்கள்

தாங்க முடியாத முனகல்கள்
புறாக்களாகப் பெருகிப் பறக்கின்றன

கிளை பிரிந்து
பரவும் வியர்வைகள்
கரும்பாறைச் சுவரை
சில்லிடும்
மென் மஞ்சமாக்குகின்றன

தரிசனத்துக்கு வருபவர்கள்
இயல்பு உடைந்து
விந்து ஊறும் விழியால்
தொய்வடையா சிற்ப உறுப்புகளை
மேலும் நீவி விடுகிறார்கள்

உருவிக்கொண்டு
தரையிறங்கி வரும் சிற்பங்கள்
இடைஞ்சல் புரியும்
பெருமூச்சுகளைக் களைந்து
புணர்ந்துபோட்டுவிட்டு
மீண்டும் போய்
முயங்கத் தொடங்குகின்றன.
நன்றி: உயிரோசை



Thursday, June 4, 2009

மாம்பழ எழுத்துகள்


மாம்பழத்திலிருந்து
வடியும் பால்
என்னைப் பார்த்து
ஏதோ ஒன்றை
அழுத்தமாக எழுதுகிறது
உறுதியாய் தெரியும்

அது
என்னைப் பார்த்துத்தான்
எழுதுகிறது

வண்டின் ரீங்காரத்தால்
எப்படியும்
அதைப் படிப்பேன்.
நன்றி: உயிரோசை

Tuesday, June 2, 2009

பூனையின் உலக இலக்கியம்

எலி சாப்பிடாத
ஒரு பூனையை எனக்குத் தெரியும்

வீட்டிற்கு வரும்
லியோ டால்ஸ்டாய், அன்ரன் செக்கோவ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி
காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே
மரீயா லூயிஸô பொம்பல், மார்கெரித் யூர்ஸ்னார்,
இஸபெல் அலெண்டே, நவ்வல் அல் ஸôதவி
நதீன் கோர்டிமர், ஆல்பெர் காம்யூ, ஆஸ்கர் ஒயில்ட் - எனச்
சகலரின் எழுத்தையும் படிக்கும்

மழையில் நனையும்
ஒரு பூனைக்குட்டி மீது
பரிதாபம் கொள்ளும் பெண் பற்றி
எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய
'மழையில் பூனை'* சிறுகதையை
ஒரு குளிர்காலத்தில் சொன்னதிலிருந்து
அந்தப் பூனைக்குக் கட்டுப்படாத
பூனைகளே இல்லையாம்

உச்சிவெயில் ஒழுகிக்கொண்டிருந்த
சன்னலோரம் ஒருநாள்
சினுவா ஆச்சிபி "சிதைவுகள்' நாவலின்
இருபதாம் அத்தியாயத்தைப்
படித்துக் கொண்டிருந்தபோது
எதேச்சையாய் அதனிடம் கேட்டேன்:
'திருட்டுத்தனமாய் நீ எலிகளைச் சாப்பிடுகிறாயாமே'

வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டது.
நன்றி: நவீன விருட்சம்