Monday, March 7, 2011
சென்ற ஞாயிற்றுக்கிழமை சந்தித்த புலி
27
புராதானத் துப்பாக்கி சேகரிப்பாளன் வீட்டிற்குச் சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தேன். ஒவ்வோர் அறையாக அழைத்துச் சென்று "இது திப்புச்சுல்தான் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி. இது முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி. இது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி' என்று சேகரிப்பாளன் ஒவ்வொரு துப்பாக்கியாக அறிமுகப்படுத்தியபோது அந்தந்தத் துப்பாக்கியால் கொல்லப்பட்ட மனிதர்களும், விலங்குகளும் என்னோடு கைகுலுக்க கைகளையும் கால்களையும் நீட்டின. எனக்கு எப்போதுமே செத்தவையோடு உறவு வைத்துக்கொள்ளவே பிடித்ததில்லை. அது போகிற போக்கில் சும்மா ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுப் போகிற அளவில் இருப்பினும்கூட. அதனால் உங்களையெல்லாம் மீண்டும் சுட்டுவிடுவேன் என்பதுபோல முகத்தை விறைப்பாய் வைத்துக் கொண்டு வேறோர் அறைக்கு வந்தேன். எனக்குத் தேநீர் எடுத்து வருவதற்காகச் சேகரிப்பாளன் மற்றோர் அறைக்குச் சென்றான். தனியாகவே நான் துப்பாக்கிகளைப் பார்த்தேன். அப்போது என்னை ஓர் இரட்டை வெடிகுழல் வேட்டைத் துப்பாக்கி அதிகம் கவர்ந்தது. அந்தத் துப்பாக்கியைத் தூக்கி அதன் வெடிகுழல்களைப் பார்க்க வேண்டும் என்று ஓர் உந்துதல் ஏற்பட்டது. ஏனென்றால் இரட்டை வெடிகுழல் வேட்டைத் துப்பாக்கியில் மான், பறவை போன்ற மென்மையானவற்றைச் சுடப் பயன்படும் வலப்பக்க வெடிகுழாய் கச்சிதமாக வழுக்கிப் போகும் ஓர் உருளையாக நீளும். சிங்கம் புலி போன்றவற்றைச் சுடப் பயன்படும் இடப்பக்க வெடிகுழாய் பாறையைக் குடைந்து போன்ற உருளையாக நீளும். இந்த வெடிகுழல்களில் கண் வைத்துப் பார்க்கும்போது ஒரு யானை காட்டில் நெடும்பயணம் மேற்கொள்வதுபோன்ற துள்ளலைக் கொடுக்கும். அதற்காகவே அந்தத் துப்பாக்கியின் வெடிகுழல்களுக்குள்ளும் கண் வைத்து பார்த்தேன். வலப்பக்க வெடிகுழலில் பார்த்தபோது யாத்திரிகனாக காலத்தின் நீண்ட தொலைவுக்குப் போய் வந்திருந்தேன். இடப்பக்க வெடிகுழலில் பார்த்தபோது ஒரு புலி உயிரோடு படுத்துக்கொண்டு என்னைப் பார்த்து உறுமியது. பேரதிர்ச்சியோடு, "எப்படிக் குழலுக்குள் உயிரோடு இருக்கிறாய்? எத்தனை ஆண்டுகளாய் இப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டேன். அதற்குப் புலி "பல ஆண்டுகளாக என்னை யாருமே சுட முயற்சிக்கவில்லை. அதனால் நேராக நானே குழலுக்குள் வந்து கிடக்கிறேன். அப்போதும் யாரும் சுடவில்லை'' என்றது. எனக்குள் தன்மான உணர்ச்சி, வீர உணர்ச்சி, வேட்டைப் புத்தி எல்லாம் சேர்ந்து அசுர வேகமெடுத்தது. குறி வைப்பதற்கு அவசியமில்லாததால் தோட்டாவைப் பூட்டி அழுத்தானை அழுத்தினேன். வெளிப்பட்ட தோட்டாவில் தேநீர் கொண்டு வந்த சேகரிப்பாளன் இரத்தம் தெறித்துச் செத்தான். வெடிப்பு சத்தத்தைவிட சத்தமாய்க் கதறியவாறே துப்பாக்கியைத் தூர எறிந்துவிட்டு சேகரிப்பாளனை நான் தூக்கப்போனபோது, குழலிலிருந்து கீழே குதித்திருந்த புலி சிந்தியிருந்த தேநீரை மெதுவாகக் குடித்துவிட்டு "இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தோற்கிறார்கள்'' என்றவாறே எங்கோ சென்று மறைந்தது. என்னைக் கொலைக்காரனாக மாற்றிவிட்ட அந்தப் புலியைக் கொல்ல வேண்டும் என்று எதிர்கொண்ட ஒவ்வொரு தினத்திலும் தேடித்தேடி கடைசியில் அதைக் கண்டும்பிடித்தேன். ஆனால் அதை நெருங்கிக் கொல்ல முடியாதளவு அது சென்ற ஞாயிற்றுக்கிழமையிலேயே ஒளிந்திருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமையான புனைவு
Post a Comment