Sunday, March 6, 2011
பூத உடல்
26
"புகழ்வாய்ந்த என் நண்பா! நீ எப்படியேனும் கஷ்டப்பட்டு சீக்கிரம் செத்துப்போய்விடு. உன்னை என் நண்பனோடு வந்து ஒரு முறை சந்தித்திருக்கிறேன். நீ என் நண்பனோடு பேசும்போது என்னையும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாய். என் நண்பன் உன்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டபோது இரு பக்கத் துணைக்காக என்னையும் அழைத்து என் தோள் மீது கை போட்டுக் கொண்டு நின்றாய். எனக்கு இவையே போதும். இப்போது எனக்கு உன் பூத உடல் அவசியம் தேவைப்படுகிறது. அதனால் நீ சீக்கிரம் செத்துப் போய்விடு. உன் வீட்டார் உன் பூத உடலை எரித்தாலும், நான் எரிக்காமல் போகுமிடமெல்லாம் பத்திரமாக அதைத் தூக்கிப் போவேன். பின் தேதியிட்டு சொல்ல வேண்டிய என் புகழ்பாடும் பல நூறு கதைகள் உன்னிடம் சொல்வேன். அந்தக் கதைகளையெல்லாம் நீ என்னைப் புகழ்ந்து சொன்னதாக நம்ப வேண்டும். யாரையாவது சந்திக்கும் நேரங்களில் அவ்வப்போதைய நிகழ்ச்சிகளுக்கேற்ப கற்பனையை விரிவாக்கி அந்தக் கதைகளை நீட்டிச் சொல்லிக் கொண்டே செல்வேன். நீயும் சமத்துப் பிணமாய்ச் சிறு முகக் கோணலையும் காட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இதில் முக்கியமாய் நான் சிரிக்கிற நேரத்தில் நீயும் சிரிக்க வேண்டும். அதுவும் இருவர் சிரிப்பும் ஒரேமாதிரியான
உதடுகள் பிளப்பதுபோல இருக்க வேண்டும். அய்யோ... இது சிரமமாயிற்றே என்று கவலைப்படாதே. பிணம்போல சிரிக்க பல நாள்களாகவே நான் பழகி வருகிறேன்.''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment