Monday, March 7, 2011
சென்ற ஞாயிற்றுக்கிழமை சந்தித்த புலி
27
புராதானத் துப்பாக்கி சேகரிப்பாளன் வீட்டிற்குச் சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தேன். ஒவ்வோர் அறையாக அழைத்துச் சென்று "இது திப்புச்சுல்தான் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி. இது முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி. இது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி' என்று சேகரிப்பாளன் ஒவ்வொரு துப்பாக்கியாக அறிமுகப்படுத்தியபோது அந்தந்தத் துப்பாக்கியால் கொல்லப்பட்ட மனிதர்களும், விலங்குகளும் என்னோடு கைகுலுக்க கைகளையும் கால்களையும் நீட்டின. எனக்கு எப்போதுமே செத்தவையோடு உறவு வைத்துக்கொள்ளவே பிடித்ததில்லை. அது போகிற போக்கில் சும்மா ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுப் போகிற அளவில் இருப்பினும்கூட. அதனால் உங்களையெல்லாம் மீண்டும் சுட்டுவிடுவேன் என்பதுபோல முகத்தை விறைப்பாய் வைத்துக் கொண்டு வேறோர் அறைக்கு வந்தேன். எனக்குத் தேநீர் எடுத்து வருவதற்காகச் சேகரிப்பாளன் மற்றோர் அறைக்குச் சென்றான். தனியாகவே நான் துப்பாக்கிகளைப் பார்த்தேன். அப்போது என்னை ஓர் இரட்டை வெடிகுழல் வேட்டைத் துப்பாக்கி அதிகம் கவர்ந்தது. அந்தத் துப்பாக்கியைத் தூக்கி அதன் வெடிகுழல்களைப் பார்க்க வேண்டும் என்று ஓர் உந்துதல் ஏற்பட்டது. ஏனென்றால் இரட்டை வெடிகுழல் வேட்டைத் துப்பாக்கியில் மான், பறவை போன்ற மென்மையானவற்றைச் சுடப் பயன்படும் வலப்பக்க வெடிகுழாய் கச்சிதமாக வழுக்கிப் போகும் ஓர் உருளையாக நீளும். சிங்கம் புலி போன்றவற்றைச் சுடப் பயன்படும் இடப்பக்க வெடிகுழாய் பாறையைக் குடைந்து போன்ற உருளையாக நீளும். இந்த வெடிகுழல்களில் கண் வைத்துப் பார்க்கும்போது ஒரு யானை காட்டில் நெடும்பயணம் மேற்கொள்வதுபோன்ற துள்ளலைக் கொடுக்கும். அதற்காகவே அந்தத் துப்பாக்கியின் வெடிகுழல்களுக்குள்ளும் கண் வைத்து பார்த்தேன். வலப்பக்க வெடிகுழலில் பார்த்தபோது யாத்திரிகனாக காலத்தின் நீண்ட தொலைவுக்குப் போய் வந்திருந்தேன். இடப்பக்க வெடிகுழலில் பார்த்தபோது ஒரு புலி உயிரோடு படுத்துக்கொண்டு என்னைப் பார்த்து உறுமியது. பேரதிர்ச்சியோடு, "எப்படிக் குழலுக்குள் உயிரோடு இருக்கிறாய்? எத்தனை ஆண்டுகளாய் இப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டேன். அதற்குப் புலி "பல ஆண்டுகளாக என்னை யாருமே சுட முயற்சிக்கவில்லை. அதனால் நேராக நானே குழலுக்குள் வந்து கிடக்கிறேன். அப்போதும் யாரும் சுடவில்லை'' என்றது. எனக்குள் தன்மான உணர்ச்சி, வீர உணர்ச்சி, வேட்டைப் புத்தி எல்லாம் சேர்ந்து அசுர வேகமெடுத்தது. குறி வைப்பதற்கு அவசியமில்லாததால் தோட்டாவைப் பூட்டி அழுத்தானை அழுத்தினேன். வெளிப்பட்ட தோட்டாவில் தேநீர் கொண்டு வந்த சேகரிப்பாளன் இரத்தம் தெறித்துச் செத்தான். வெடிப்பு சத்தத்தைவிட சத்தமாய்க் கதறியவாறே துப்பாக்கியைத் தூர எறிந்துவிட்டு சேகரிப்பாளனை நான் தூக்கப்போனபோது, குழலிலிருந்து கீழே குதித்திருந்த புலி சிந்தியிருந்த தேநீரை மெதுவாகக் குடித்துவிட்டு "இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தோற்கிறார்கள்'' என்றவாறே எங்கோ சென்று மறைந்தது. என்னைக் கொலைக்காரனாக மாற்றிவிட்ட அந்தப் புலியைக் கொல்ல வேண்டும் என்று எதிர்கொண்ட ஒவ்வொரு தினத்திலும் தேடித்தேடி கடைசியில் அதைக் கண்டும்பிடித்தேன். ஆனால் அதை நெருங்கிக் கொல்ல முடியாதளவு அது சென்ற ஞாயிற்றுக்கிழமையிலேயே ஒளிந்திருக்கிறது.
Sunday, March 6, 2011
பூத உடல்
26
"புகழ்வாய்ந்த என் நண்பா! நீ எப்படியேனும் கஷ்டப்பட்டு சீக்கிரம் செத்துப்போய்விடு. உன்னை என் நண்பனோடு வந்து ஒரு முறை சந்தித்திருக்கிறேன். நீ என் நண்பனோடு பேசும்போது என்னையும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாய். என் நண்பன் உன்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டபோது இரு பக்கத் துணைக்காக என்னையும் அழைத்து என் தோள் மீது கை போட்டுக் கொண்டு நின்றாய். எனக்கு இவையே போதும். இப்போது எனக்கு உன் பூத உடல் அவசியம் தேவைப்படுகிறது. அதனால் நீ சீக்கிரம் செத்துப் போய்விடு. உன் வீட்டார் உன் பூத உடலை எரித்தாலும், நான் எரிக்காமல் போகுமிடமெல்லாம் பத்திரமாக அதைத் தூக்கிப் போவேன். பின் தேதியிட்டு சொல்ல வேண்டிய என் புகழ்பாடும் பல நூறு கதைகள் உன்னிடம் சொல்வேன். அந்தக் கதைகளையெல்லாம் நீ என்னைப் புகழ்ந்து சொன்னதாக நம்ப வேண்டும். யாரையாவது சந்திக்கும் நேரங்களில் அவ்வப்போதைய நிகழ்ச்சிகளுக்கேற்ப கற்பனையை விரிவாக்கி அந்தக் கதைகளை நீட்டிச் சொல்லிக் கொண்டே செல்வேன். நீயும் சமத்துப் பிணமாய்ச் சிறு முகக் கோணலையும் காட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இதில் முக்கியமாய் நான் சிரிக்கிற நேரத்தில் நீயும் சிரிக்க வேண்டும். அதுவும் இருவர் சிரிப்பும் ஒரேமாதிரியான
உதடுகள் பிளப்பதுபோல இருக்க வேண்டும். அய்யோ... இது சிரமமாயிற்றே என்று கவலைப்படாதே. பிணம்போல சிரிக்க பல நாள்களாகவே நான் பழகி வருகிறேன்.''
Saturday, March 5, 2011
கலையும் பொழுது
25
செத்துப்போன கண்களோடு ஒரு பொழுது, அவன் கண்களுக்குள் ஊடுருவிப் பேசியது:
"வெறுக்கத்தக்க புழுவாக ஒரு வீட்டு வாசலில் துடைப்பத்தால் இப்போது நீ அடி வாங்குகிறாய். மரக்கிளையில் உட்கார்ந்து ஒரு குருவி உன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் மனிதன்.''
"இல்லை. இப்போது நீ ஆப்கனில் வெடிகுண்டு வெடித்துச் சிதறிக்கிடக்கிறாய். உன் குழந்தைக்காக நீ வாங்கியிருந்த புதுச்சட்டையில் இரத்தம் ஊறிக்கொண்டிருக்கிறது.''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் இந்தியன். என் பெயர் ஞாயிறு. எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை.''
"இல்லை. இப்போது நீ ஒரே சமயத்தில் இருவரோடு விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறாய். உன்னைப் பிடிக்க காவலர்கள் படியேறி வந்துகொண்டிருக்கிறார்கள்.''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் ஆண். ''
"இல்லை. இப்போது நீ ஒரு கோயில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாய். பல நாளாய் யாருக்கும் தெரியாமல் அழுக்குக் கோணியில் நீ சேர்த்து வைத்திருந்த கோடி ரூபாயைப் பறிக்க உன்னை ஒருவன் நெருங்கி வருகிறான்.''
"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் கணித நிபுணன்.''
"ஆமாம்''
"ஆமாம். ஆமாம். நான் உன் முன்னால்தான் உட்கார்ந்திருக்கிறேன். என் பெயர் ஞாயிறு. நான் கணித நிபுணன்.''
"இல்லை. இப்போது நீ ஒரு கோழிக்குஞ்சு. ஒரு பருந்து அதிவேகத்தில் உன்னை நோக்கி இறங்கிக்கொண்டிருக்கிறது.''
"...''
"...''
Friday, March 4, 2011
சிரிப்புவெட்டி
24
இரும்பில் வேண்டாம் என்று தங்கத்தில் எனக்காக ஒரு கோடாலி செய்துவைத்திருக்கிறான் என் அருமை நண்பன். என் சிரிப்புச் சத்தம் அவனுக்கும் மட்டும் எப்படியோ கேட்கும். கோடாலியோடு வருவான். ஓங்கி என் உதட்டில் ஒரு வெட்டு வெட்டுவான். ஒரு முறை வெட்டிய இடத்தில் மறுமுறை வெட்டுவதில்லை. இவ்விதிமுறையோடு வெட்டிவெட்டியே மேலுதடையும் கீழுதடையும் முற்றாய்த் துண்டித்து முடித்து, முகத்தின் மற்ற உறுப்புகளையும் சிதைத்து விட்டான். தீரா வலியெல்லாம் ஒருபுறமிருக்க ஒவ்வொரு முறை அவன் சிதைக்கையிலும் எனக்குத் தோன்றும் ஒரே ஆச்சரியம் அவன் எப்படி என் சிரிப்பைக் கண்டறிகிறான் என்பதுதான். ஏனெனில் அவன் எப்போதும் கடலின் நீர்மட்டத்தின் மேலேயே அலையாய் அலைந்துகொண்டிருக்கிறான். நான் அவனைச் சிறிதும் கவனிக்காமல் கடலின் அடியாழத்திலேயே வாழ்கிறேன். எனக்கும் அவனுக்கும் நான்காயிரம் மீட்டர் ஆழத் தூரம் இடைவெளி. இத்தூரத்தில் என் சிரிப்புச் சத்தம் எப்படிக் கேட்கும்? அதுவும் நான் சிரிக்கவே சிரிக்காதபோதும். மீனின் மூச்சுமுட்டைகள் போல என் சுழிப்பு ஏதாவது கீழிருந்து மேலே வளையமாகப் போகிறதா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. சுழிப்புக்காக என் உதட்டில் அவன் முதல்முறையாய் வெட்டியபோதிலிருந்தே அவன் அறியாமைக்குப் பயந்துகொண்டு காட்டெருமையின் தோலைப் போல எல்லாப் பாகங்களையும் இறுக்கமாய் முறுக்கிக்கொண்டுதான் இருக்கிறேன். இவற்றையெல்லாம் தவிர வேறு வழிகளும் இல்லாதபோது எப்படி அவன் மட்டும் என் சிரிப்புச் சத்தத்தைத் துல்லியமாய் அறிகிறான் என்றுதான் தெரியவில்லை. இப்போதும்கூடப் பாருங்கள். ஏதோ அவன் எழுதியிருப்பான்போல. மேலே அலையும் அவனுக்கு என் சிரிப்புச் சத்தம் கேட்டிருக்கிறது. இறங்கி வந்தவன் பல நாளாய் அடியாழத்திலேயே அழுகிக் கிடக்கும் என் பிண உடலை ஆவேசத்தோடு சிதைத்துவிட்டுப் போகிறான். என் அழுகலின் தெறிப்பு உங்கள் மேலும் பட்டிருக்கலாம். துடைத்துக் கொள்ளுங்கள்.
Wednesday, March 2, 2011
தோட்டாக்களின் புறப்பாடு
23
இந்த விபரீதத்தை முயற்சிக்காதீர்கள் என்று அவன் சொல்லியதை நான் கேட்கவில்லை. இருட்டறையில் உட்கார்ந்து கண்களை மூடினேன். தீவிரவாதிகள் தங்கியிருக்கும் கட்டடத்தை இராணுவத்தினர் சுற்றி முற்றுகையிடுவதுபோல என் மூளையிலிருந்து முழு குவிப்பையும் இறக்கி என் வலக்காலின் கட்டைவிரலை ஆக்கிரமிக்கச் செய்தேன். அந்த விரல் நகத்தின் அடி நுனியையும் குவிப்புகள் முழுமையாய்ச் சுற்றி வளைத்து முடித்த பிறகு இடக்கையின் நடுவிரல் நகம், வலக்கை மூட்டு, இடக்கால் மூட்டு, வலத் தொடை எலும்பு என்று ஒவ்வொன்றாய் ஆக்கிரமிக்க வைத்துப் பார்த்தேன். ஒன்றுமாகாமல் வெகு இயல்பாக இருந்தது. அப்போதுதான் அந்த விபரீதத்தையும் முயற்சித்துப் பார்த்துவிடுவது என்று எண்ணி முயன்றேன். மூளையிலிருந்து குவிப்பை இறக்காமல் அதை முழுமையாய் மூளைக்குள்ளேயே செலுத்திப் பார்த்தேன். எல்லை ஆரம்பத்தைக் கடந்து சிறு தூரம் சென்றதும் மூளை குழம்புவதுபோல் உணர்ந்தேன். உடனே பயந்து குவிப்பைத் திரும்பப் பெற்றேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் குவிப்பைச் செலுத்தினேன். பாதித் தூரத்தில் மீண்டும் மூளை குழம்பியது. அவசரமாக உடனே திரும்பப் பெற்றேன். மூன்றாம்முறை பயத்தைவிட்டு திரும்பப்பெறாமல் மூளைக்குள் குவிப்பைச் செலுத்திக் கொண்டே இருந்தேன். முற்றிலும் மூளை குழம்பிப்போனது. தற்போது நிர்வாணப் பைத்தியக்காரனாகத் தெருவில் அலைந்துகொண்டிருக்கும் என்னைக் கேட்டால், துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வரிசையாய்ப் புறப்பட்டு உயிர்களை எப்படிப் பறிக்கி
ன்றன என்கின்ற கதையைத் தெளிவாகச் சொல்வேன்.
Subscribe to:
Posts (Atom)