Saturday, July 4, 2009

கோடில்லாத நோட்டின் கோணல் எழுத்துகள்


பேசாதவைக்கு எல்லாம்
பிள்ளைகளோடு பேசுவதுதான் பேறு.
கைப்பிடித்து அழைத்து வந்து
மூன்றாம் வகுப்பு 'பி' பிரிவு கனகாவின்
கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு
நாலு வரி நோட்டுச் சொன்னது:

'வா... செல்ல மகளே
எழுத்தோடு
நாலு சக்கர நடைவண்டியால் பழகுவோம்
சீவின இந்தப் பென்சிலை
கைப்பிடியாகப் பிடித்துக்கொள்
மெல்ல துவங்கி வா
அப்படித்தான்...அப்படித்தான்
முதல் சக்கரத்தையும் நான்காம் சக்கரத்தையும்
நன்றாகக் கவனி
பாதையைத் தாண்டிப் போகவிடாதே
நேராக...நேராக...நேராக வா...
அவ்வளவுதான் மகளே.'

ஃபைவ் ஸ்டார் சுவைத்துக்கொண்டிருந்த
நான்காம் வகுப்பு 'டி' பிரிவு கேசவனின்
முதுகைத் தடவிக் கொடுத்தபடியே
இரட்டை வரி நோட்டுச் சொன்னது:

'சாக்லெட் சுவைத்துவிட்டாயா...கண்ணே
ஊதுகுழல் பிணைத்த பென்சிலாலான
உன்னுடைய காலணியை அணிந்து கொள்
எழுத்துக்குப் புவி ஈர்ப்புவிசையைக் கொடுப்பதற்காக
காத்திருக்கும் சிறு இடைவெளி விட்ட
என் இரு கோடுகளைப் பார்
நேராய் நில்
நிற்கிற நேரிலேயே
மென்மையூடே அவற்றிற்கிடையில் அழுத்திப் பதித்து வா...
ஊதுகுழல் மனனம் செய்து பாடத் தொடங்கிவிட்டன
நீயும் சத்தமாய் எழுத்தைப் போற்றி வா
கொஞ்சம் வேகமாய்....போதும்...போதும்...
அழகு கண்ணே... நேர் கொண்ட அழகு கண்ணே...'

புழுதி காலை கழுவி வர வைத்து
பயத்தோடு உட்கார்ந்திருந்த
ஆறாம் வகுப்பு 'ஏ' பிரிவு கோகிலாவிடம்
கோடில்லாத நோட்டுச் சொன்னது:

'பாதுகாப்புக்கு
ஒரு கோடும் இல்லாததற்காகத் திகைக்காதே
வளர்ந்த பிள்ளையே...
மேலூரிலிருந்து கீழூருக்கும்
கீழூரிலிருந்து மையவூருக்கும்
நெளிந்து போகுமென்பதற்காகப் பதறாதே
கண்ணாடி ஸ்கேலாக உன் பார்வையை வை
வலக் கண்ணால் மேல் கோடு வரை
இடக் கண்ணால் கீழ் கோடு வரை
கோணலில்லாத மனதை
எழுதுகோலுக்கு மையாயூட்டி
எழுத்தை எழுப்பி அழைத்து வா...
வரிவரியாய் வந்துகொண்டே இரு
மண்ணை உழுதெழும்
மண்புழுக்கள் போல.'
நன்றி: வார்த்தை

2 comments:

மதன் said...

சில காலமாகவே உங்களைப் படித்து வருகிறேன். புகழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. Your kavidhai's are truly Inspiring. நன்றிகள் பல!

த.அரவிந்தன் said...

பகிர்வுக்கு நன்றி