Saturday, November 15, 2008

என் மகளின் புனித நதி


நிலையான முகவரியில் நில்லாது
என் ஒரு வயது மகள் பெருக்கும்
புனித உப்பு நதியில் மிதக்கிறதென் வீடு
சுழன்றடித்துப் போவதும்
சற்று வற்றித் தரை தட்டிக் கிடப்பதும்
பின்பு பெருக்கெடுத்துப் போவதும் அந்நதியின் விளையாட்டு
நீர் புகுந்தும் மூழ்காது
இழுத்துக் கிளம்புகையிலும் தரை
தட்டுகையிலும் குலுங்கி குதூகலிக்கும் வீட்டில்
தலையணை, படுக்கையிலிருந்து
பொருள்கள் எல்லாமே நதியின் நேசிப்புக்குரியவை
கரை தெரியாதளவு பிரவாகமெடுத்து
என் புத்தகங்களில் ஓடிக்கொண்டிருக்கும்
பல காட்டாறுகள்
எப்போதேனும் மகளின் நதியில்
சங்கமித்துப் புனிதம் பெறுகின்றன
உப்புப் பூத்த ஆடை
உப்பு மொய்த்த சுவாசத்துடன்
வெளியில் போவதற்கு
நான் கவலையுற்றதே இல்லை
பிரத்தியேகக் கவனத்துடனிருந்தாலும்
துள்ளித் தெறித்துவிடுகிற துளிகளின் கலப்
பால் சமையல் சுவை கரித்துப்போவதே இல்லை
முகம்சுளிக்காது காத்திருந்தால்
மிதந்து வரும் என் வீடு
என்றாவது ஒரு நாள்
உங்கள் வீட்டு வாசலில் தரை தட்டலாம்.
நன்றி: ஆனந்தவிகடன்

Friday, November 14, 2008

விரல் மிருகங்கள்


நிழல் மேல் விரையும் வெயிலாக
கள்வமிலாது கடந்து சென்றவை
என் பார்வைகள் என்பதை
உங்களுக்கெப்படிப் புரியவைப்பேன் தாயே...

சீவப்பட்ட குருத்துகளானாலும்
கள் வடியாதவை
என் சிரிப்புகள் என்பதை
உங்களுக்கெப்படி உணர்த்துவேன் தாயே...

இருபுற சிறகுகள் பிய்க்கப்படுகிற பறவையாய்
நீங்கள் துடித்து
மராப்பைத் துணைக்கு இழுத்தபோது
இரத்தணுக்களிலெல்லாம் அவமானம் சொருகிச்சொருகி
நான் கொலையுண்டேன் என்பதை
உங்களிடமெந்தக் காகம் சொல்லும் தாயே...

அழிப்பான்கள் எதனாலும் அழிக்கமுடியாத
நீங்கா நடுக்கத்தையே
நரை நுரைக்கும் பருவச்சுருக்கத்திலும் கொடுக்க
இடிபாடுகளின் அசந்தர்ப்பங்களில்
விரல்களிலிருந்து பாயும் கொடிய மிருகங்களிடமிருந்து
எங்கும்
உங்களையெப்படிக் காப்பேன் தாயே...

நன்றி: ஆனந்த விகடன்

Thursday, November 13, 2008


கொதிமழை
------------
காய்கறிகளோடு
மணதார
பழைய நினைவால்
கொதிக்கிறது
குழம்புச் சட்டியில் மழை.
நன்றி: உயிரோசை

தொட்டுக்கொள்ள...
----------------------
பண்டைய மனிதர்கள்
பண்டைக் காலத்தை
பழம் ஜாடியில்
ஊறுகாய்ப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
நன்றி: உயிரோசை

Wednesday, November 12, 2008

மீதமிருக்கும் பத்து சொற்கள்
------------------------------------
அறிமுகித்த பத்து நிமிடங்களில்
இருவரும் சலித்து
அறுபது சொற்கள் உதிர்த்தனர்
அதில் பிடிபடலும் தப்பித்தலும்
பிடிபடலும் தப்பித்தலுமாய்
மறதிக்காட்டுக்குள் பூச்சிகளாகி மறைந்துவிட்டன
முப்பத்திரண்டு
ஞாபக வரிசையில்
ஊதாரிகளாய் நிற்கின்றன
பதினெட்டு
மீதமிருக்கும் பத்து சொற்களின்
கைகளை அழுந்த பிடித்துக்கொண்டு
வாக்கியங்களின் வழியே
வேக நடையில்
இருவரும் போய்க்கொண்டிருக்கிறார்கள்
இவன் அறியாத அவன் ஊருக்கும்
அவன் அறியாத இவன் ஊருக்கும்

நன்றி: உயிரோசை

Tuesday, November 11, 2008


தந்தைப்பால்
--------------
தளிர் விரல்களால்
குழந்தை வருடி
உடன் திகைத்துப் பின்வாங்குகிறது
சற்று நேரம் கழித்து
திரும்பவும் வந்து தடவி
ஏமாந்து வெறிக்கிறது
திரண்ட இரத்தங்கள் கட்டி
தகப்பனுக்கு
நெஞ்சு வலிக்கிறது.