Friday, January 11, 2008

நாங்கள் மனிதர்கள் இல்லையா?


லிவிங் ஸ்மைல் வித்யா பேட்டி!

"பாம்பு தன் சட்டையை உரித்தெறிவதுபோல இந்த என் உடம்பைக் கழட்டி எறிய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? என் சுயம், என் அடையாளம், என் உணர்வுகள், என் கனவுகள், என் உயிர், எப்படி மீட்கப் போகிறேன்? ஆயிரம் அவமானங்கள், கோடி ரணங்கள். கிண்டல்களில் எத்தனை முறை செத்து மீண்டிருக்கிறேன்! அனைத்தையும் மீறி நீண்ட என் பயணத்துக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். எனக்குப் பொருத்தமான உடலை நான் கண்டெடுத்துவிட்டேன்!'' -திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் எழுத்து இது.

"நான், வித்யா' என்ற நூலில் தன் வாழ்வின் உருக்கமான போராட்டங்களை இவ்வாறு எழுதியுள்ளார். கிழக்குப் பதிப்பகம் இந்நூலை தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட்டிருக்கிறது. எம்.ஏ.மொழியியல் படித்திருக்கும் வித்யாவுக்கு எழுத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி? எதிர்நோக்கும் சங்கடங்கள் என்ன? எதிர்பார்க்கும் அங்கீகாரம் என்ன?

"எழுத்தின் மீது எனக்குப் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லை. சில நேரங்களில் என் சோகத்திற்கான வடிகாலாக எழுத்துகள் இருக்கின்றன. நண்பர் பாலபாரதி உதவியால் இணையத்தில், http://www.livingsmile.blogspot.com/ என்ற பெயரில் வலைப்பூவை நடத்தி வருகிறேன். இதில் திருநங்கைகள் சந்திக்கக்கூடிய சங்கடங்கள், அவர்களின் உணர்வுகள், உலக அளவில் அவர்களின் நிலை பற்றியெல்லாம் எழுதி வந்தேன். இதற்கு வலைப்பூ வாசகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததுடன், பலரிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது எனலாம். இதைப்போல சரவணன் என்ற பெயரை லிவிங் ஸமைல் வித்யா என்று மாற்றிக் கொள்ள முயற்சித்தேன். அதற்காகத் தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுலவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்திருந்தேன். இது ஏற்க மறுக்கப்பட்டு "இங்கு மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றப்படும்' என்கிற குறிப்புடன் வந்தது. அப்படியானால் நாங்கள் மனிதர்கள் இல்லையா? சம்மட்டியில் அடித்ததுபோல் உணர்ந்தேன். வழக்கறிஞர் ரஜினி மூலம் வழக்குத் தொடர்ந்தேன். இதன் மூலம் பத்திரிகைகளில் எனக்கு அறிமுகம் கிடைத்தது. ஆனால் எந்த நோக்கத்திற்காக வழக்குத் தொடர்ந்தேனோ... அது மட்டும் இன்னும் நிறைவேறவே இல்லை. நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கட்டாயம் மாற்றவேண்டும் என்று உத்தரவிடவில்லை.
"மாற்றுவதற்குப் பரிசீலிக்கவும்' எனப் பரிந்துரை மட்டும்தான் செய்திருப்பதாகச் சொல்லி என் பெயரை மாற்றித் தர மறுக்கிறார்கள். நான் இன்னும் இதற்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். அப்பா, மற்றும் என் உறவினர்கள் என்னைப் புரிந்து கொள்ளாமல் ஏற்படுத்தி, உணர்வு ரீதியாக நான் சந்தித்த வலி, சமூக ரீதியாகச் சந்தித்த வலியைவிட இந்த வலி எனக்குச் சற்று அதிகமாகவே இன்றைக்கும் இருக்கிறது.
திருநங்கைகளுக்கு உதவுவதாகச் சொல்கிற அரசு, பெயர் மாற்றம், கல்லூரியில் திருநங்கைகளாக அங்கீகரித்து சேர்ப்பது உட்பட அனைத்திற்கும் உதவ வேண்டுமா? இல்லையா? ஒரு சில பேருக்கே குடும்ப அட்டை கொடுத்து இருக்கிறார்கள். அந்த அட்டையால் ஒரு பயனும் கிடைப்பதில்லை. அரிசி, சர்க்கரையும், மண்ணெண்ணெய் கிடைப்பது மட்டுமே திருநங்கைகளுக்கான விடியலாக இருக்காது.

பால்மாற்றுச் சிகிச்சையை இப்போது இலவசமாகச் செய்கிறது அரசாங்கம். இது முறையான அறுவைச் சிகிச்சையாக இல்லை. புனேவில் நான் திருட்டுத்தனமாய் செய்துகொண்டேன். மரத்துப் போவதற்காக முதுகுத் தண்டில் ஒரு ஊசி போட்டார்கள். வலக்கையில் நரம்பைத் தேடி குளூக்கோஸ் போட்டார்கள். கத்தியை எடுத்து என் அடிவயிற்றில் முதல் கீறலைப் போட்டபோது முழுமையாக மரத்துப் போகாததை உணர்ந்தேன். அலறினேன். இன்னொரு ஊசியைப் போட்டார்கள். அப்போதும் உயிர்போகிற வலி தெரிந்தது அந்த வலியோடே எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதற்கு மாறான புதிய முறையில் எதுவும் அரசாங்க மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்வதில்லை. ஒரு சில டெஸ்ட்டுகளைத் தவிர அவசியம் எடுக்க வேண்டிய எந்த டெஸ்டுகளையும் எடுப்பதே இல்லை. இது முற்றிலும் கொடுமையானது. இதற்கு எதற்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்ய வேண்டும்? நாலாயிரம் ஐந்தாயிரம் கொடுத்துத் திருட்டுத்தனமாகச் செய்துகொள்ளலாமே? உண்மையைச் சொன்னால் மருத்துவர்களுக்கே பாலின ஊனம் குறித்துச் சரியான விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பால்மாற்றுச் சிகிச்சையை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஒருவரை திருநங்கையாக அங்கீகரித்துச் சிகிச்சை செய்வதற்கு முன் பல்வேறு மருத்துவ, உளவியல், சூழலியல், உடற்கூறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இந்தப் பரிசோதனை ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடக்கும். பரிசோதனையின் அடிப்படையில் மனநல மருத்துவர் ஒருவரும், மகப்பேறு மருத்துவர் ஒருவரும் திருநங்கையாக ஒருவரை அங்கீகரிப்பார்கள். அதன் பிறகே அறுவைச் சிகிச்சை செய்யப்படும். அதைப்போல் எல்லாம் இங்கு செய்வதில்லை. "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணவறையில் வை' என்பதாகத்தான் செய்கிறார்கள்.
அதைப்போல திருநங்கையாகவே அங்கீகரித்த ஒருவரை முழுமையான பெண்ணாகவே மாற்றக்கூடிய வசதியெல்லாம் வெளிநாடுகளில் இருக்கிறது. எந்த அரசாங்கத்திற்குமே இது தெரிவதில்லை. அல்லது தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. குறைந்தபட்சம் அரசாங்கம் பால்மாற்று சிகிச்சை கொடுக்கிறபோது திருநங்கைகளின் பெற்றோர்களை அழைத்தாவது கவுன்சிலிங் கொடுக்கவேண்டும். அப்போதுதான் ஓரளவு திருநங்கைகள் வாழ்வதற்கான சமூகச் சூழல் அமையும்.

திருநங்கைகள் விஷயத்தில் என்னை அதிகம் கோபம் கொள்ள செய்கிறவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தார்தான். திருநங்கைகளை வைத்து அவர்கள் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள், வருமானம் பார்க்கிறார்கள் அவ்வளவுதான். காசு கொடுத்து அவர்களைக் கருத்தரங்குக்கு அழைத்துச் செல்பவர்கள் "பாதுகாப்பான பாலுறவு' என்றுதான் சொல்வார்களே தவிர, அவர்களின் மறுவாழ்வுக்காக ஏதாவது செய்கிறார்களா என்றால் இல்லை. அவர்களை ஒரு தவறான நடத்தை உள்ளவர்களாகவே காட்ட விரும்புகிறார்கள்.

"திருநங்கைகளையும் மனிதர்களாகவே பார்க்கவேண்டும்' என்கிற விளம்பரத்தை எங்கேயாவது பார்த்து இருக்கிறீர்களா? இதைச் செய்யவேண்டியது யாருடைய கடமை? அரசாங்கத்தினுடையதும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடையதும்தானே? ஏன் செய்ய மறுக்கிறார்கள்? அவர்களுக்கு இன்னும் தெளிவான விழிப்புணர்வு இல்லை.
திருநங்கைகளும் சமூகத்துக்குப் பயந்துகொண்டே விலகி இருக்கக்கூடாது. என்னைப்போல் போராட வேண்டும்.

திருநங்கைகளைப் பற்றிய படங்களைத் தொகுத்து இருமுறை திரைப்படவிழா நடத்தியிருக்கிறேன். இன்னும் பல படங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். திருநங்கைகளைப் பற்றிய முழு தகவல்களும் அடங்கிய ஒரு வெப்சைட் நடத்தவேண்டும் என்பது விருப்பம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அதைப்போல திருநங்கைகளுக்கு உதவக்கூடிய வகையில் சட்ட ஆலோசனை அமைப்பு ஒன்றையும் அமைக்க விருப்பம் உள்ளது'' என்கிற வித்யா காதில் சே குவரா கம்மல்!

1 comment:

Mangai said...

உங்கள் போராட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

உங்கள் உருவத்துக்கும் சரவணன் என்ற பெயருக்கும் ஆன பொருதமின்மை புரிகிறது.

உங்களது இந்த பதிவை பதிவுலகுக்கு வருகை தராத ஏன் நண்பர்களுக்கு மின் அஞ்சலில் அனுப்ப உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.
அப்படி செய்வதன் மூலம் வேகமாகப் பரவும். பலருக்கு திரு நங்கைகள் கஷ்டம் புரியும். ஏதாவது உபயோகம் கிடைக்குமா என்று பார்க்கலாம்.
ஆனால் ஏதாவது மோசமான பின் விளைவுகள் இருக்குமா என்று எனக்குத் தெரியாது.

உங்கள் பிரச்சனைகள் உங்களுக்கே அதிகம் தெரியும் என்பதால் உங்கள் அனுமதி இல்லாமல் நான் செய்ய விரும்பவில்லை