Sunday, November 13, 2011

தீர்ப்பு - ஃப்ரனஸ் காஃப்கா





ஆங்கில மொழிபெயர்ப்பு : வில்லா - எட்வின்மூர்
தமிழில்: சி.மோகன்




அது, வசந்த காலம் உச்சத்திலிருந்த ஒரு ஞாயிறு காலை. இளம் வியாபாரியான ஜார்ஜ்பெந்தெமன், ஆற்றின் அருகே பரந்து விரிந்திருந்த, பராமரிப்பின்றிப் பழுதடைந்திருந்த, நீண்ட வரிசையிலான சிறிய வீடுகளொன்றின் முதல் மாடியில் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். உயரத்தாலும் வண்ணத்தாலும் மட்டுமே வித்தியாசப்பட்டு, மற்றபடி
ஒன்றுக்கொன்று துளி வேறுபாடுமின்றி அந்த வீடுகள் அமைந்திருந்தன. தற்சமயம் வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் தன் பழைய நண்பனுக்கு அவன் அப்போதுதான் கடிதமொன்றை எழுதி முடித்துவிட்டு, கனவுப் பாங்கான பாணியில், மிக மெதுவாக, அதற்கான உறையில் அதைப் போட்டுவிட்டு, எழுது மேஜை மீது முழங்கைகளை ஊன்றியபடி, ஜன்னல்களின் வழியாக ஆற்றையும் பாலத்தையும் தொலைதூரக் கரையில் இ
ளம்பசுமையோடு காணப்பட்ட குன்றுகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சொந்த நாட்டில் தனக்கு இருக்கக்கூடிய எதிர்கால வாய்ப்புகள் குறித்த அதிருப்தி காரணமாக, சில வருடங்களுக்கு முன்பு, ரஷ்யாவுக்கு ஓடிப் போய்விட்ட தன் நண்பனைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் புரிந்துவரும் தொழிலானது, ஆரம்பத்தில் செழித்திருந்தபோதிலும் பல காலமாக இறங்குமுகத்தில்தான் இருக்கிறதென்று, அவன் வருகையின் இடைவெளி அதிகரித்து, அவன் வருவதே
அபூர்வமாகிவிட்ட தருணங்களில் குறைப்பட்டுக் கொண்டது விரயமாகிவிட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து ஜார்ஜ் நன்கு அறிந்திருந்த அவன் முகம், புதிதாய் வளர்த்திருந்த முழுமையான தாடியில் புதைந்து போகவில்லை என்றாலும் வித்தியாசமான தோற்றமளித்தது. உள்ளுறைந்திருக்கும் ஒரு நோயின் தடயமாக, அவனின் தோல் நிறம் மிகவும் மஞ்சளாக மாறிவிட்டிருந்தது. தனக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பிரம்மச்சாரி வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கென்றே தன் சகநாட்டவர் வசிக்கும் காலனியுடன் சீரான தொடர்பு வைத்துக் கொள்ளாததோடு, ரஷ்யக் குடும்பங்களோடும் நெருங்கிய உறவேதும் கொள்ளாமல் தனித்திருப்பதாக அவன் கூறியிருந்தான்.

பக்கத்துணைகளின்றிப் பரிதவிக்கும் அத்தகையதோர் மனிதனுக்கு ஒருவன் என்னதான் எழுத முடியும்? அத்தகைய மனிதனுக்கு அனுதாபம் காட்டலாமே தவிர அவனுக்கு உதவி செய்ய முடியாது. சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து வேரூன்றிக் கொள்வதோடு, மீண்டும் பழைய நட்புகளைப் புதுப்பித்துக் கொண்டு - அவ்வாறு அவனைச் செய்ய விடாமல் தடுக்கக் கூடியதாக எதுவுமில்லை - நண்பர்கள் உதவியைச் சார்ந்திருக்கும்படி அவனுக்கு ஒருவன்
ஆலோசனை கூற முடியுமா? ஆனால் அப்படிச் சொல்வதானது, அவன் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் திசை தப்பிவிட்டதால், வழி தவறிச் சென்று மனம் திருந்தித் திரும்பி வந்தவனாக அவனை எல்லோரும் வியந்து பார்ப்பதை ஏற்றுக்கொண்டு, சொந்த நாட்டிலேயே வெற்றிகரமானவர்களாகவும் குடும்ப வாழ்வைச் செம்மையாக நடத்துபவர்களாகவும் இருக்கும் தராதரம் அறிந்த அவனுடைய நண்பர்களின் வழிகாட்டுதலின்படி, வளர்ந்துவிட்ட பெரியதோர் குழந்தையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு நடந்துகொள்ள வேண்டுமெனச் சொல்வதாக ஆகிவிடும். இதை மிகக் கனிவாகச் சொன்னாலும் கடுமையாகவே தெரியும். இதெல்லாம் ஒருபுறமிக்க, அந்த அளவுக்குச் சிரமமெடுத்து அவனை வற்புறுத்தினாலும் அந்த நோக்கம் நிறைவேறும் என்பது என்ன நிச்சயம்? அவனைத் தன் சொந்த நாட்டுக்கு வர வைப்பதே கூட சாத்தியமில்லாமல் போகலாம்; தன் சொந்த நாட்டின் வணிகப் போக்கோடு தற்சமயம்தான் தொடர்பிழந்துவிட்டதாக அவனே சொல்லியிருக்கிறான். அதன்பிறகு, அவன் வெளி
நாட்டில் ஒரு அந்நியனாகவே தனித்து விடப்படுவதோடு மட்டுமல்லாமல், நண்பர்களின் ஆலோசனைகளினால் மனம் நொந்துபோய், நட்பு பாராட்டிய அவர்களிடமிருந்து முன்னைவிடவும் ஒதுங்கும் படியாக வேறு ஆகிவிடும். ஆனால், அவர்களின் ஆலோசனையை அவன் ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, ஒருவேளை அவனால் சொந்த
நாட்டில் முரண்டு காரணமாக என்றில்லை, சந்தர்ப்பங்களின் ஆற்றல் காரணமாகத் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாது போய்விடுமானால், நண்பர்களோடு ஒத்துப்போகவும் முடியாமல் அவர்களிடமிருந்து ஒதுங்கவும் முடியாமல் அவமானத்துக்கு ஆளாகி விடுவானென்றால், இனி ஒருபோதும் தனக்கென்று நாடோ நண்பர்களோ
இல்லையென்று உணரும்படி ஆகிவிடுமென்றால், அவன் இப்போது இருக்கிறபடியே வெளிநாட்டில் இருந்துவிடுவது அவனுக்கு உகந்ததாகாதா? இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் சொந்த நாட்டில் அவன் வெற்றிகரமானதோர் வாழ்க்கையை நடத்துவான் என ஒருவனால் எப்படி நிச்சயமாகக் கருத முடியும்?

இத்தகைய காரணங்களினாலேயே, அவனோடு தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பும் ஒருவனால், மிக லேசாகத் தெரிந்த ஒருவரிடம் சொல்ல முடிவது போலக்கூட எத்தகைய உண்மையான செய்திகளையும் அவனுக்குத் தெரியப்படுத்தமுடியாது. அவன் கடைசியாக வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கு அவன், ரஷ்யாவின் அரசியல் நிலைமை மிகவும் ஸ்திரமற்றியிருக்கிறது என்றும் லட்சக்கணக்கான ரஷ்யர்களை வெளி
நாடுகளுக்கு அமைதியாகப் பயணம் செய்ய அனுமதிக்கும் அதேசமயம் ஒரு மிகச் சிறிய வியாபாரியைச் சில நாள்களுக்கு வெளியில் செல்லக்கூட அனுமதிக்கவில்லை என்றும் நொண்டிச் சமாதானம் சொன்னான். ஆனால் இந்த மூன்று வருடங்களில் ஜார்ஜின் வாழ்நிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்பு
அவனுடைய அம்மா இறந்துவிட்டாள்; அதிலிருந்து அவனும் அவன் தந்தையும் வீட்டைச் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்கள். இவ்விஷயம் அவனுடைய நண்பனுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவனும் தன் அனுதாபத்தை வறட்டுத்தனமான வார்த்தைகளால் அமைந்த ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தான். அப்படியான ஒரு சம்பவம் தரக்கூடிய வேதனையைத் தூரதேசத்திலிருந்து உணர முடியாது என்ற முடிவுக்கே இதிலிருந்து வர முடிகிறது. அந்தச்
சமயத்திலிருந்து, எது எப்படியிருந்தபோதிலும், வியாபாரத்திலும் சரி, மற்ற எல்லா விஷயங்களிலும் சரி, ஜார்ஜ் மிகுந்த முனைப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

ஒருவேளை, அம்மா உயிரோடிருந்த வரை தொழில்ரீதியான ஒவ்வொரு விஷயத்திலும் தனதான வழிமுறைகளைத் தந்தை வலியுறுத்திக் கொண்டிருந்ததால், சுயமாய் முயற்சிகளெடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்ள அவனுக்கு முடியாமல் போயிருக்கலாம். அம்மா இறந்ததற்குப் பிறகு, தந்தை தொழிலில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் அவரின் தீவிரம் மட்டுப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம்; ஒருவேளை அது, பெரும்பாலும், தற்செயலாகக் கூடிவந்த நல்ல காலத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். அநேகமாக இதுதான் அதிகப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும், இந்த இரண்டு வருடங்களில் தொழில் சற்றும் எதிர்பாராத வகையில் வளர்ச்சி அடைந்தது; பணியாளர் எண்ணிக்கை இரு மடங்காகியது; விற்பனை ஐந்து மடங்காகப் பெருகிறது; மேலும் அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியங்கள் அண்மையில் இருக்கின்றன- சந்தேகமே இல்லை.

ஆனால், இந்த வளர்ச்சி பற்றிய எவ்வித முகாந்திரத்தையும் ஜார்ஜின் நண்பன் அறிந்திருக்கவில்லை. முந்தையை வருடங்களில், கடைசி முறையாக அது அவனின் அனுதாபக் கடிதத்திலாக இருக்கலாம் - ஜார்ஜை ரஷ்யாவுக்கு வந்துவிடும்படி அவன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். குறிப்பாக, ஜார்ஜின் தொழிற்கிளை அங்கு வெற்றிகரமாக
அமைவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக முன்வைத்திருந்தான். ஜார்ஜ் தற்சமயம் எட்டியிருக்கும் எல்லையோடு ஒப்பிடும்போது, அவன் எடுத்துக்காட்டியிருந்த கணக்குகள் கடுகளவே. எனினும், தன் தொழிலின் வெற்றி குறித்து நண்பனுக்குத் தெரியப்படுத்த அவன் தயங்கினான். நடந்து முடிந்தவற்றை இப்போது தெரியப்படுத்தினால் அது நிச்சயம் விசித்திரமாகவே படும்.

ஆக, அமைதியான ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவன் எதையாவது சும்மா யோசித்துக் கொண்டிருக்கும்போது, மேலெழுந்த வாரியாக எழும் நினைவுகளான, முக்கியத்துவமற்ற வம்பு விவகாரங்களையே தன் நண்பனுக்குத் தெரிவிப்பதென்று அவன் வரையறுத்துக் கொண்டிருந்தான். தன் நண்பன், தனது சொந்த ஊர் பற்றி, இந்த நீண்ட இடைவெளியில், தன் விருப்பத்திற்கேற்ப எப்படியெல்லாம் கற்பனைக் கோட்டை எழுப்பியிருப்பானோ அதற்குக்
குந்தகம் நேராமல் பார்த்துக் கொள்வதையே அவன் விரும்பினான். அதற்கேற்ப அவன், தன் நண்பனுக்கு, சற்றே விரிவாக எழுதிய மூன்று வெவ்வேறு கடிதங்களில் எவ்வித முக்கியத்துவமுமற்ற ஒருவனுக்கும், அது போன்றதொரு பெண்ணுக்கும் ஏற்பாடாகியிருந்த நிச்சயதார்த்தம் குறித்து மூன்று முறையும் எழுதினான். இதுவரையான அவனது தீ
ர்மானங்களுக்கு முற்றிலும் மாறாக, அவனுடைய நண்பன் இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி குறித்துக் கொஞ்சம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான்.

எனினும், ஜார்ஜ் இப்படியான விஷயங்களை எழுத முன் வந்தானே தவிர, ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென் ஃபெல்டு என்ற வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு தனக்கு ஒரு மாதத்துக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதைத் தெரிவிக்க முன்வரவில்லை. அவன், தன் மணப்பெண்ணிடம், இந்த நண்பனைப் பற்றியும்
பரிமாற்றங்களின் மூலம் அவர்களுக்கிடைய உருவாகியிருந்த விசித்திரமான உறவு பற்றியும் அவ்வப்போது பகிர்ந்துகொண்டான். "ஆக, அவர் நம்முடைய திருமணத்துக்கு வரமாட்டார்'' என்றாள் அவள். "எனினும், உங்கள் நண்பர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு உரிமை இருக்கிறது.'' "என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்'' ஜார்ஜ் பதில் சொன்னான். "நான் அவனுக்குத் தொந்தரவு தர விரும்பவில்லை. ஒருவேளை அவன் வரக்கூடும், குறைந்தபட்சம் நான் அப்படி நினைக்கவாவது செய்கிறேன். ஆனால் தன்னைப்
பிடித்து இழுத்து வந்துவிட்டதாகத்தான் அவன் நினைப்பான். மேலும், அவன் அதற்காக வருத்தப்படுவான்; ஒருவேளை அவன் என்மீது பொறாமை கொள்ளவும் கூடும்; நிச்சயம் அவன் அதிருப்தி கொள்வான். தன் அதிருப்தி குறித்து எதுவும் செய்ய இயலாத நிலையில் அவன் தனியனாகவே திரும்பிப் போக வேண்டியிருக்கும். தனியன் - அதற்கு என்ன அர்த்தமென்று உனக்குத் தெரியுமா?'' "அதுசரி, ஆனால் நம் திருமணம் பற்றி வேறு எந்த
வகையிலாவது அவர் கேள்விப்படமாட்டாரா?'' "எனனால் அதைத் தடுக்க முடியாது என்பதென்னவோ உண்மைதான்; ஆனால் அவன் வாழும் விதத்தைப் பார்க்கும்போது அநேகமாக அப்படியேதும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.'' "உங்கள் நண்பர்கள் அப்படியிருக்கும்பட்சத்தில், ஜார்ஜ், நீங்கள் ஒருபோதும், நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருக்கக்கூடாது.'' "அது சரி, ஆனால் அதற்கு நம் இருவரையும் தானே குறை சொல்ல வேண்டும். இப்போது என்னால் வேறொன்றும் செய்ய முடியாது.'' அதன் பிறகு, அவனின் முத்தங்களால் வேகவேகமாக மூச்சு வாங்கிய அவள், "எல்லாமே ஒன்றுதான்; நானும்கூட மனம் குலைந்துதான் இருக்கிறேன்.'' ஒருவேளே, தானே தன்
நண்பனுக்குத் தகவல் தெரிவித்தாலும் அதனால் தனக்கொன்றும் தொந்தரவு வந்துவிடாது என்று அவன் நினைத்தான். "என் சுபாவம் அப்படி, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் அவன் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். "அவனுக்கு ஏற்றபடி என்னை நான் வேறுவிதமாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.''

ஆனால், உண்மை என்னவென்றால், அந்த ஞாயிற்றுக்கிழமை காலை, அவன் எழுதிய நீண்டதோர் கடிதத்தில் தன் நிச்சயதார்த்தம் பற்றித் தன் நண்பனுக்கு இத்தகைய வார்த்தைகளில் தெரியப்படுத்தி இருந்தான்: "ஒரு நல்ல செய்தியைக் கடைசியாக எழுதலாமென்று இருந்தேன். ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென்ஃபெல்டு என்ற வசதியான
குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு எனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நீ ஊரை விட்டுப் போய் வெகு காலத்துக்குப் பின் இங்கு வசிக்க வந்தவள் அவள். எனவே, அவளைப் பற்றி உனக்கு எதுவுமே தெரிந்திருக்காது. அவளைப் பற்றி மேலும் பல விஷயங்களைச் சொல்ல பின்னர் அவகாசமிருக்கும். நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை மட்டும் இன்று சொல்கிறேன். உன்னையும் என்னையும் பொறுத்தவரை நம் உறவில் ஏற்பட்டிருக்கும் ஒரே மாறுதல், மிகச் சாதாரணமானவனாய் இருந்ததற்குப் பதிலாக, ஒரு சந்தோஷமான நண்பனாக இன்று நான் உன்னில் இருக்கிறேன் என்பதுதான். இது ஒருபுறமிருக்க, நான் மணக்கவிருக்கும் பெண், தன் உளம் கனிந்த வாழ்த்துகளை உனக்குத் தெரிவிக்கிறாள். மேலும், அவளே உனக்கு வெகு விரைவில் கடிதம் எழுத இருக்கிறாள். இதன் மூலம் நீ ஒரு
உண்மையான தோழியைப் பெறுகிறாய். ஒரு பிரமச்சாரிக்கு இதைவிட வேறென்ன வேண்டும். எங்களைப் பார்ப்பதற்கு உன்னால் வர முடியாது என்பதற்கான பல்வேறு காரணங்களையும் நான் அறிவேன். ஆனால் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு நீ இங்கு வருவதற்கு இது ஒரு சரியான தருணமாக அமையாதா? எனினும்,
என்னவாகவும் இருக்கட்டும், உன்னுடைய சொந்த நலன்களைத் தவிர வேறெதையும் பொருட்படுத்தாது, உனக்கு எது நல்லதென்று படுகிறதோ அதையே செய்.''

ஜார்ஜ் இக் கடிதத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு, எழுது மேஜையின் முன் முகம் ஜன்னலைப் பார்த்துத் திரும்பியிருக்க, வெகுநேரம் உட்கார்ந்திருந்தான். தெருவில் கடந்துபோன அறிமுகமான ஒருவர் அவனைப் பார்த்துக் கையசைத்ததை அவன் வெறுமனே புன்சிரிப்பின்றி ஏற்றுக்கொண்டான்.

கடைசியாக அவன், அந்தக் கடிதத்தைத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அறையைவிட்டு வெளியேறி, சிறிய தாழ்வாரத்தைக் கடந்து, பல மாதங்கள் அவன் நுழைந்திராத, தன் தந்தையின் அறைக்குள் சென்றான். அவன் தினமும்
வியாபார ஸ்தலத்தில் தன் தந்தையைப் பார்ப்பதாலும், அவர்கள் இருவரும் ஒரு உணவு விடுதியில் ஒன்றாகவே மதிய உணவைச் சாப்பிடுவதாலும் உண்மையில் அங்கு செல்ல அவனுக்கு எந்தவித அவசியமும் இருக்கவில்லை. மாலை நேரத்தை அவர்கள் தங்கள் விருப்பப்படி கழிப்பார்கள். பெரும்பாலும் , ஜார்ஜ் தன் நண்பர்களோடு வெளியில் செல்வான். சமீப நாட்களாக அவன் தன் மணப் பெண்ணைச் சந்திக்கச் சென்றான். மற்றபடி, பொதுவாக
அவர்கள், வீட்டின் பொது அறையில் அவரவரின் செய்தித்தாளோடு சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.

சூரிய வெளிச்சம் நிறைந்த அந்தக் காலை நேரத்தில்கூட, தந்தையின் அறை இருட்டாக இருந்தது ஜார்ஜ்க்கு வியப்பளித்தது. குறுகலான வராந்தாவுக்கு மறுபுறமிருந்த உயரமான சுவரும் சேர்ந்து அந்த அறையில் இருளை நிரப்பியிருந்தது. ஜார்ஜின் இறந்துபோன அம்மாவின் பல்வேறு ஞாபகார்த்தச் சின்னங்களைத் தாங்கிய ஜன்னலருகே ஒரு மூலையில் உட்கார்ந்தபடி அவனுடைய தந்தை பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். பார்வைக் கோளாறைச் சமாளிக்கும் வகையில் அவர் அந்தப் பத்திரிகையைத் தன் கண்களினருகே ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்துக் கொண்டிருந்தார். மேஜையின் மீது அவரின் காலை உணவு, அதன் பெரும்பகுதி சாப்பிடப்படாமல் மிச்சம்
வைக்கப்பட்டிருந்தது.

"ஆ, ஜார்ஜ்'' என்றபடி அவனுடைய தந்தை அவனைச் சந்திப்பதற்காக சட்டென எழுந்தார். அவர் நடந்து வந்தபோது, அவருடைய கனத்த அங்கி பிரிந்து அசைந்தாடியபடி அவரைச் சூழ்ந்தது. "என் தந்தை இப்போதுகூட ஒரு பிரும்மாண்டமான மனிதர்தான்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"இங்கு இருள் சகிக்க முடியாதபடி இருக்கிறது'' என்று அவன் சத்தமாகச் சொன்னான்.
"ஆம், இருட்டாகத்தான் இருக்கிறது'' அவனுடைய தந்தை பதில் சொன்னார்.
"மேலும் நீங்கள் ஜன்னலை வேறு சாத்தியிருக்கிறீர்கள்.''
"அது அப்படி இருப்பதையே நான் விரும்புகிறேன்.''

ஏதோ தான் முன்னர் சொன்னதன் தொடர்ச்சியாகவே சொல்வதுபோல, "நல்லது, வெளியே மிகவும் கதகதப்பாக இருக்கிறது'' என்று கூறியபடி ஜார்ஜ் உட்கார்ந்தான்.

அவனுடைய தந்தை காலை உணவுத் தட்டுகளை அப்புறப்படுத்தி அவற்றை உரிய இடத்தில் அடுக்கி வைத்தார்.

அந்த வயதான மனிதரின் சலனங்களை வெறுமையாகத் தொடர்ந்து கவனித்தபடி ஜார்ஜ் சொல்லத் தொடங்கினான்: "என் நிச்சயதார்த்தம் பற்றிய தகவலை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு நான் இப்போது தெரியப்படுத்த இருப்பதை உங்களிடம் சொல்லிவிடவே உண்மையில் நான் விரும்பினேன்.'' தன் பாக்கெட்டிலிருந்து கடிதத்தத்தைச் சற்றே
வெளியிலெடுத்துவிட்டு மீண்டும் அதை உள்ளேவிட்டுக் கொண்டான்.

"செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கா?'' தந்தை கேட்டார்.

"அங்குள்ள என் நண்பனுக்கு.'' தந்தையின் கண்களைச் சந்திக்க முயற்சித்தவாறு ஜார்ஜ் சொன்னான். வியாபார நேரங்களில் அவர் முற்றிலும் வேறு மாதிரி இருப்பார் என்று அவன் நினைத்தான். தன் கைகளை குறுக்காக மடித்துக்கொண்டு எவ்வளவு நிதானமாக அவர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்.

"ஓ, அப்படியா. உன் நண்பனுக்கா'' என்று அவனுடைய தந்தை விநோதமான அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.

"ஆம், தந்தையே. என் நிச்சயதார்த்தம் குறித்து முதலில் நான் அவனுக்குச் சொல்ல விரும்பவில்லை. அவன் நிலைமையைக் கணக்கில் கொண்டதுதான் இதற்கான ஒரே காரணம். அவன் அசாதரணமான மனிதன் என்பது உங்களுக்கே தெரியும். என் நிச்சயதார்த்தம் பற்றி வேறு யாரேனும் அவனுக்குச் சொல்லி விடுவார்கள் என்று
எண்ணினேன். அது அப்படி நடக்க முடியாத அளவுக்கு அவன் அசாத்தியமான நபர் என்ற போதிலும் - அப்படி நடப்பதை என்னால் தடுக்க முடியாது - நானாக அவனிடம் சொல்லப் போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.''

"நீ இப்போது உன் மனதை மாற்றிக்கொண்டுவிட்டாய், இல்லையா?'' என்றபடி அவனுடைய தந்தை, தனது கனத்த செய்தித்தாளை ஜன்னல் விளிம்பில் வைத்துவிட்டு அதன் மீது தன் கண்ணாடியை வைத்து அதை ஒரு கையால் பொத்திக் கொண்டார்.

"ஆம், அதுபற்றி நான் மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். அவன் என்னுடைய நல்ல நண்பனாக இருக்கும்பட்சத்தில், என் நிச்சயதார்த்தம் எனக்கு சந்தோஷம் தந்திருப்பதுபோல அவனையும் சந்தோஷப்படுத்தும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எனவே, இனியும் அவனுக்குத் தெரியப்படுத்துவதை நான் தள்ளிப் போடக்கூடாது. ஆனால் அதை அஞ்சல் செய்வதற்கு முன்னால் உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டுமென விரும்பினேன்''

"ஜார்ஜ்'' தன் பொக்கை வாயை விரித்தபடி, அவனுடைய தந்தை சொன்னார். "நான் சொல்வதைக் கேள்! இந்த விஷயம் குறித்து என்னுடன் கலந்து பேச நீ வந்திருக்கிறாய். நீ வைத்திருக்கும் மதிப்பை அது உணர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீ என்னிடம் முழு உண்மையையும் சொல்லாத பட்சத்தில் இது ஒரு விஷயமே இல்லை
சும்மா இருப்பதைவிட இது மோசமானது. இங்குக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லாத விஷயங்களை எல்லாம் நான் கிண்டிக் கிளற விரும்பவில்லை. நம் அன்பான அம்மா இறந்து போனதற்குப் பிறகு, முறையற்ற பல காரியங்கள் நடந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி நாம் பேசவேண்டிய நேரம் வரும். நாம் எதிர்ப்பார்ப்பதை விடவும் சீக்கிரமாகவே அது வரக்கூடும். எனக்குத் தெரியவராமல் வியாபாரத்தில் பல காரியங்கள் நடக்கின்றன; என் முதுகுக்குப்
பின்னால் அவை நடக்காமல் இருக்கலாம். என் முதுகுக்குப் பின்னால் நடக்கின்றன என்று நான் சொல்லப்போவதில்லை. இனியும் என்னால் காரியங்களோடு போட்டி போட்டுக்கொண்டிருக்க முடியாது; என் ஞாபக சக்தியும் மங்கி வருகிறது. இனி மேற்கொண்டு பல்வேறு காரியங்களை என்னால் கண்காணிக்க முடியாது. அதற்குக் காரணம், முதலாவதாக இயற்கையின் கதி; இரண்டாவதாக, நம் அன்பான அம்மாவின் மரணம் உன்னைவிடவும் என்னை அதிகமாகப் பாதித்திருக்கிறது என்பது. ஆனாலும் நாம் இதைப் பற்றி, இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். ஜார்ஜ், என்னை ஏமாற்றாதே. உனக்கு அப்படியொரு நண்பன் உண்மையிலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருக்கிறானா?''

தர்மசங்கடத்துக்குள்ளான நிலையில் ஜார்ஜ் எழுந்தான். "என் நண்பர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். ஓராயிரம் நண்பர்கள் சேர்ந்தாலும் என்னைப் பொறுத்தவரை, அவர்கள் என் தந்தைக்கு ஈடாக மாட்டார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களைக் கவனித்துக் கொள்வதில் போதுமான
அக்கறை காட்டுவதில்லை. ஆனால் முதுமையில் கண்டிப்பாகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இல்லாமல் என்னால் வியாபாரத்தைக் கவனிக்க முடியாது; அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் அந்த வியாபாரம் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் என்றால் நாளைக்கே அதை ஒரேடியாக இழுத்து மூடிவிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படப் போவதில்லை. உங்கள்
வாழ்க்கை முறையில் நாம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியாக வேண்டும். ஒரு தீவிரமான மாறுதல். நீங்கள் இங்கு இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள். வரவேற்பறையில் இருந்தால் போதுமான வெளிச்சம் கிடைக்கும். உங்களின் வலிமையை முறையாகப் பேணுவதற்குப் பதில் காலை உணவாக ஏதோ கொஞ்சம் கொறிக்கிறீர்கள். ஜன்னலை மூடிவிட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். ஆனால் காற்று உங்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கும், இல்லை அப்பா! நான் மருத்துவரை வரவழைக்கிறேன். நாம் அவர் சொல்லுகிறபடி கேட்போம். நாம் உங்கள் அறையை மாற்றுவோம். நீங்கள் முன்னறைக்குச் சென்று விடுங்கள்; நான் இங்கு வந்துவிடுகிறேன். உங்களுக்கு மாற்றம் தெரியாது; உங்கள் பொருள்களனைத்தும் உங்களோடு வந்துவிடும். ஆனால் அதையெல்லாம் செய்யப் பின்னர் அவகாசமிருக்கிறது.
இப்போது கொஞ்ச நேரம் உங்களைப் படுக்க வைக்கிறேன். உங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு அவசியம். வாருங்கள், உங்கள் பொருள்களை எடுத்துக்கொள்ள நான் உதவி செய்கிறேன். என்னால் அதைச் செய்ய முடிவதை நீங்கள் பார்க்கலாம். அல்லது, உடனடியாக நீங்கள் முன்னறைக்குப் போவதாக இருந்தால், இப்போதைக்கு அங்கு நீங்கள் என் படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். அதுதான் மிகச் சரியானதாக இருக்கும்.''

குலைந்து கிடந்த நரைமுடிகளோடு தலை தாழ்த்தியிருந்த தந்தைக்கு நெருக்கமாக ஜார்ஜ் நின்றுகொண்டிருந்தான்.

சற்றும் அசையாமல், மெதுவான குரலில், "ஜார்ஜ்'' என்றார் தந்தை.

உடனடியாக ஜார்ஜ் தந்தைக்கருகே மண்டியிட்டான். சோர்வுற்றிருந்த அந்த வயதான மனிதரின் முகத்தை அவன் பார்த்தபோது, மிகப் பெரிய கருவிழிகள் கண்களின் ஓரங்களிலிருந்து தன்னை நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.

"உனக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஒரு நண்பன் இருக்கிறான். நீ எப்போதுமே காலை வாரி விடுபவன்; என் காலை வாரவும் நீ தயங்கவில்லை. உனக்கு அங்கு எப்படி ஒரு நண்பன் இருக்க முடியும்! நான் அதை நம்பவில்லை.''

"பழையவற்றைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், அப்பா'' என்றான் ஜார்ஜ். நாற்காலியிருந்து அவரை எழும்பி நிற்கச் செய்து, அவருடைய அங்கியைச் கழற்றியபோது அவர் பலஹீனமாய் நின்றுகொண்டிருந்தார். "என்னுடைய நண்பன் கடைசியாக நம்மைப் பார்க்க வந்து அநேகமாக மூன்று வருடங்களாகப் போகின்றன. உங்களுக்கு அவனை
அவ்வளவாகப் பிடிக்காது என்பது எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு முறையாவது, உண்மையில் அவன் அப்போது என்னோடு என் அறையில்தான் இருந்தான் என்றபோதிலும், அவனைப் பார்க்க விடாது உங்களைத் தடுத்திருக்கிறேன். அவனை உங்களுக்குப் பிடிக்காது என்பதை நான் மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருந்தேன்; என் நண்பனுக்கென்று சில சுபாவங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் பிறகு, பிந்தைய நாட்களில் நீங்கள் அவனோடு மிக நன்றாகவே பழகினீர்கள். நீங்கள் அவன் சொல்வதைக் கேட்டபடி தலையசைத்தது மட்டுமல்லாமல், அவனிடம் கேள்விகளும் கேட்டபோது நான் பெருமிதமடைந்தேன். நீங்கள் மறுபடியும் யோசித்துப் பார்த்தால் நிச்சயம் அது உங்கள் நினைவுக்கு வரும். ரஷ்யப் புரட்சி பற்றி மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய கதைகளை அவன் நமக்குச் சொல்வது வழக்கம். உதாரணமாக ஒரு முறை அவன் வியாபார நிமித்தமாக கீவ்வுக்குப் போனபோது அங்கு கலவரம் தொடங்கியிருந்தது. ஒரு மதகுரு பால்கனியில் நின்றுகொண்டு, தன் உள்ளங்கையில் ஒரு பெரிய சிலுவையைக் கீறி, ரத்தம் தோய்ந்த கையை உயர்த்தி, ஜனத்திரளிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்தது.
அதற்குப் பின்னர், நீங்களேகூட அந்தக் கதையை ஓரிரு முறை கூறியிருக்கிறீர்கள்.''

இதற்கிடையே, ஜார்ஜ் தன் தந்தையைத் திரும்பவும் மெதுவாகத் தாழ்த்தி உட்கார வைத்துவிட்டான். மேலும், லினன் உள்ளாடைக்கு மேலாக அவர் அணிந்திருந்த கம்பளி உள்ளாடைகளையும், காலுறைகளையும் கவனமாகக் கழற்றினான். அந்த உள்ளாடை சுத்தமாக இல்லாததற்கு தனது உதாசீனமே காரணமென்று தன்னைத்தானே கடிந்து கொண்டான். தன் தந்தை உள்ளாடைகளை மாற்றிக்கொள்ளும் வகையில் கவனம் எடுத்துக் கொள்வதைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் தன் தந்தைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி அவன் தன் மணப்பெண்ணிடம் இதுவரை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவில்லை.

அந்த வயதான மனிதர் அந்தப் பழைய வீட்டிலேயே தொடர்ந்து தனியாக வசிப்பார் என்று அவர்கள் தங்களுக்குள்ளாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது, எதிர்காலத்தில் தான் குடிபுக இருக்கும் தன்னுடைய இடத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டுமென அவன் தீர்மானமான உடனடி முடிவொன்றை எடுத்தான். அங்கே தன் தந்தையை வெகுவாகச் சீராட்டிப் பராமரிக்க வேண்டுமென்று அவன் எடுத்த முடிவானது மிக
உன்னிப்பாக அவதானித்தபோது, காலம் கடந்து எடுக்கப்பட்டதாகவே கிட்டத்தட்ட தோன்றியது.
அவன் தன் தந்தையைப் படுக்கைக்குத் தூக்கிச் சென்றான். அந்த வயதான மனிதரைத் தன் நெஞ்சோடு தாங்கி, படுக்கையை நோக்கி சில எட்டுகள் தூக்கிச் சென்றபோது, அவர் தன் கடிகாரம் செயினுடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்த அவன் அச்சமடைந்தான். அவரைப் படுக்கையில் கிடத்த அவனால் ஒரு கணம் முடியாமல் போகுமளவுக்கு அவர் கடிகாரச் செயினை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் படுக்கையில் படுத்துவிட்ட உடனே, எல்லாமே நல்லபடியாக நடந்துவிட்டதுபோல் தோன்றியது. அவர் தன்னைப் போர்த்திக் கொண்டதோடல்லாமல், போர்வையை வழக்கத்துக்கு மாறாக, தோளுக்கு மேலாக இழுத்து விட்டுக்கொண்டார். ஜார்ஜை நிமிர்ந்து கடுமையின்றிப் பார்த்தார்.

"நீங்கள் என் நண்பனை இப்போது நினைவுபடுத்திக் கொண்டிருப்பீர்கள் இல்லையா?'' என்று அவரை உற்சாகப்படுத்தும் வகையில் தலையசைத்தவாறே ஜார்ஜ் கேட்டான்.

கால்கள் சரியாகப் போர்த்தப்பட்டிருக்கின்றனவா என்பதைத் தன்னால் பார்க்க முடியாமலிருக்கிறது என்பதுபோல, "இப்போது நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை கேட்டார்.

"ஆக, படுக்கையின் கதகதப்பை உணரத் தொடங்கிவிட்டீர்கள்'' என்றான் ஜார்ஜ். மேலும், கம்பளியை அவரைச் சுற்றி இன்னும் நெருக்கமாகப் போர்த்திவிட்டான்.''

"நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை ஏதோ அதற்கான பதிலில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது என்பதுபோல மீண்டுமொரு முறை கேட்டார்.

"கவலைப்படாதீர்கள். நீங்கள் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறீர்கள்.''

"இல்லை!'' என்று கத்தியபடி அவனுடைய தந்தை, ஜார்ஜை பதில் பேசவிடாமல், ஒரு நொடியில் எல்லாவற்றையும் பறக்கடிக்கும் வகையில், கம்பளிகளைப் பலமாக உதறி எறிந்து விட்டு, குதித்தெழுந்து படுக்கையில் நிமிர்ந்து நின்றார். அவரை ஸ்திரப்படுத்துவதற்காக ஒரே ஒரு கை மட்டும் லேசாக உத்தரத்தைத் தொட்டது.

"எனக்குத் தெரியும், என் இளம் குருத்தே! நீ என்னை மூடி விட விரும்புகிறாய். ஆனால் நான் மூடப்படுவதற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது. ஒருவேளை, இதுதான் என் கடைசித் துளி பலமென்றாலும் கூட உன்னைச் சமாளிக்க இதுவே அதிகம். உன் நண்பனை எனக்குத் தெரியும் என்பது உண்மைதான். அவன் எனக்கு மகனாகப் பிறந்திருக்க வேண்டும் என்று நான் மனதார நினைக்கிறேன். அதனால்தான் நீ இவ்வளவு வருடங்களாக அவனோடு
ஒரு பொய்யான விளையாட்டு விளையாடி வந்திருக்கிறாய். வேறென்னவாக இருக்க முடியும்? அவனுக்காக நான் வருத்தப்படவில்லை என்று நீ நினைக்கிறாய்? அதன் காரணமாகத்தான் உன்னையே நீ உன் அலுவலகத்தில் பூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று - தலைமையாளர் மிகவும் முக்கியமான அலுவலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது - அப்போதுதானே உன்னால் பொய்யான சிறு கடிதங்களை ரஷ்யாவுக்கு எழுத முடியும். ஆனால், நல்ல வேளையாக, மகனின் உள்நோக்கங்களை அறிந்துகொள்ள ஒரு அப்பாவுக்கு எவரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது அவனைக் கீழே தள்ளிய பிறகு, எந்த அளவுக்குத் தள்ளினால் அவன்மீது அமர்ந்து கொண்டு அவனை நகரவிடாமல் செய்ய முடியுமோ அந்த அளவுக்குத் தள்ளிவிட்ட பிறகு, என் அருமை மகன் திருமணம் செய்து கொள்ளத் தன் மனதைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.''

தந்தை தன் மந்திர சக்தியால் உருவாக்கிய பிசாசை ஜார்ஜ் வெறித்துப் பார்த்தான். செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் அவனுடைய நண்பன் - திடீரென அவனை அவனுடைய தந்தைக்கு நன்கு தெரிந்திருந்தது - முன் எப்போதும் தோன்றியிராத வகையில் இப்போது கற்பனையில் தெரிந்தான். ரஷ்யாவின் விரிந்து பரந்த பரப்பில் தோற்றுப் போனவனாகத் தெரிந்தான். சூறையாடப்பட்டுக் காலியாகக் கிடந்த கிடங்கின் வாசலில் அவனைக் கண்டான். சரக்கு
அலமாரிகளின் சேதங்களுக்கிடையே, சிதறிக் கிடந்த மிச்சமீதி சரக்குகளுக்கிடையே வாயுக் குழாய்கள் நொறுங்கி வீழ்ந்துகொண்டிருக்க அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். இவ்வளவு தொலை தூரத்துக்கு அவன் ஏன் போயிருக்க வேண்டும்!

"முதலில் நான் சொல்வதைக் கேள்!'' அவனுடைய தந்தை கத்தினார். எல்லாவற்றையும் எடுத்து வைப்பதற்காகப் படுக்கையை நோக்கி ஓடிய ஜார்ஜ், கிட்டத்தட்ட தடுமாறிய நிலையில், பாதி வழியில் நிற்க வேண்டியதாயிற்று.

"அவள் தன் பாவாடையைத் தூக்கியதற்காக'' அவன் தந்தை மீண்டும் தொடங்கினார்.

"அவள், அந்த அசிங்கமான பிறவி, தன் பாவாடையை இப்படித் தூக்கியதற்காக.'' அவளைப் போன்று பாவனை செய்தபடி, யுத்தத்தின்போது அவருக்குத் தொடையில் ஏற்பட்டிருந்த காயத்தை ஒருவரால் பார்க்க முடியுமளவுக்கு, தன் சட்டையை மிக
உயரமாகத் தூக்கினார்.

"அவள் தன் பாவாடையை இப்படித் தூக்கியதும் நீ அவளிடம் மயங்கியதோடு
மட்டுமல்லாமல் அவளோடு எவ்விதத் தொல்லையுமின்றி சுதந்திரமாக சல்லாபம் செய்வதற்காக உன் அம்மாவின் ஞாபகார்த்தத்துக்கு ஊறு விளைவித்ததோடு, உன் நண்பனுக்கும் துரோகம் இழைத்தாய்; உன் அப்பாவையும், அவரால் எழுந்து நடமாட முடியாதபடி படுக்கையில் கிடத்தினாய், ஆனால் அவரால் நடமாட முடியும்; முடியாதா
என்ன?''

எவ்வித உறுதுணையுமின்றி அவர் எழுந்து நின்று தன் கால்களை உதறிக் கொண்டார். அவரின் உள்ளொளி அவரைப் பிரகாசிக்கச் செய்தது.

ஜார்ஜ் ஒரு மூலையில், தந்தையிடமிருந்து எந்த அளவுக்கு விலகி நிற்க முடியுமோ அந்த அளவு தள்ளி, ஒடுங்கி நின்றான். மறைமுகத் தாக்குதலின்போது-பின்னாலிருந்தோ, மேலிருந்தோ நிகழும் திடீர்ப் பாய்ச்சலின்போது - தான் திகைத்துப் போய்விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு சிறு அசைவையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பழகி
க்கொள்ள வேண்டுமென வெகு காலத்துக்கு முன்பு அவன் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டிருந்தான். இந்தக் கணத்தில் அவன் தன் பழைய மறந்துபோன தீர்மானத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து திரும்பவும் மறந்து போனான் - ஊசிமுனையில் நூல் கோக்கும் ஒருவனைப் போல.

"ஆனால் அப்படியெல்லாம் உன் நண்பனுக்குத் துரோகம் இழைக்கப்பட்டு விடவில்லை'' என்று கத்தியபடியே அவனுடைய தந்தை அதை வலியுறுத்தும் வகையில் தன் ஆள்காட்டி விரலால் குத்திக் குத்திக் காட்டினார். "இங்கு, இந்த இடத்தில் அவனுக்குப் பதிலாக நானிருக்கிறேன்.''

"இதென்ன கோமாளித்தனம்.'' நறுக்கென்று பதில் சொல்வதை ஜார்ஜால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் கணமே நடந்துவிட்ட தவறை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டான். அவன் கண்களில் பயம் தெரிந்தது. வேதனையில் முழங்கால்கள் தள்ளாடின.

"ஆம், நான் கோமாளித்தனம்தான் புரிகிறேன். கோமாளித்தனம்! அது ஒரு சரியான வெளிப்பாடு! மனைவியை இழந்துவிட்ட ஒரு பாவப்பட்ட கிழவனுக்கு வேறென்ன சௌகர்யம் எஞ்சியிருக்க முடியும்? சொல் - நீ பதில் சொல்லும்போது, உயிரோடிருக்கும் என் மகனாகவே இருந்து சொல் - விசுவாசமற்ற ஊழியர்களால் பீடிக்கப்பட்டு, எலும்பும் சதையுமாக வற்றிப்போய், பின்புற அறையில் கிடக்கும் எனக்கு வேறென்னதான் மிச்சமிருக்கிறது? ஆனால் என் மகனோ இந்த உலகினூடே பகட்டாய் நடைபோட்டு, நான் அவனுக்காகத் தயாரித்துக் கொடுத்திருந்த வணிக ஒப்பந்தங்களை முடித்துவிட்டு, வெற்றிக் களிப்பில் எக்காளமிட்டபடி, ஒரு மரியாதைக்குரிய வர்த்தகப் பிரமுகரின் இறுகிய முகத்தோடு தன் தந்தையிடமிருந்து கம்பீரமாக விலகிச் செல்கிறான்! நான் உன்னை நேசிக்கவில்லை என்றா நீ நினைக்கிறாய். நானா! நீ யாரிடமிருந்து குதித்து வந்தாய்?''

இப்போது அவர் முன்பக்கமாகச் சாய்ந்து விடுவார் என்று ஜார்ஜ் நினைத்தான். அப்படியே குப்புற விழுந்து அவர் தன்னைத் தானே சிதைத்துக் கொண்டால் என்ன! இந்த வார்த்தைகள் அவன் மனதிற்குள் சீறும் சப்தமாய் நுழைந்தன.

அவன் தந்தை முன்பக்கமாகச் சாய்ந்தபோதிலும் குப்புற விழவில்லை. அவர் எதிர்பார்த்தபடி ஜார்ஜ் கொஞ்சம்கூட அருகில் வராததால் தானாகவே தன்னை நிமிர்த்திக் கொண்டார்.

"நீ இருக்குமிடத்திலேயே இரு, உன் உதவி எனக்குத் தேவையில்லை! என்னருகே வருவதற்குரிய பலம் உனக்கிருப்பதாகவும், உன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பின்னால் நின்று கொண்டிருப்பதாகவும் நீ நினைக்கிறாய். ரொம்பவும் நினைத்துக் கொள்ளாதே! நம் இருவரில் இப்பவும் நான்தான் அதிக பலசாலி. நான் மட்டுமே தனியாக இருந்திருந்தால் ஒதுங்கி வழி விட்டிருப்பேன்; ஆனால் உன் தாயார் அவளுடைய சக்தி முழுவதையும் எனக்குத் தந்திருப்பதால் நான் உன் நண்பனுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதோடு, உன் வாடிக்கையாளர்களையும் இங்கே என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.''

"அவர் தன் சட்டையில்கூட பாக்கெட்டுகள் வைத்துக் கொண்டிருக்கிறார்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான். மேலும், இந்தக் குறிப்பின் மூலம் உலகின் முன் அவரை ஒன்றுமில்லாதவராக ஆக்கிவிட முடியுமென்று நம்பினான். ஆனால் எல்லாவற்றையும் அவன் உடனுக்குடன் மறந்து கொண்டிருந்ததால், ஒரு கணம்தான் அப்படி
யோசித்தான்.

"நீ மட்டும் உன் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு என் வழியில் குறுக்கிட முயற்சி செய், பார்க்கலாம்! உன்னிடமிருந்தே அவளை ஒதுக்கித் தள்ளிவிடுவேன். எப்படி என்பது உனக்குத் தெரியாது!''

நம்பிக்கையின்றி ஜார்ஜ் முகம் சுளித்தான். தன் வார்த்தைகளின் உண்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஜார்ஜ் இருந்த திசையை நோக்கி அவனுடைய தந்தை தலையை மட்டும் அசைத்தார்.

"உன் நிச்சயதார்த்தம் பற்றி உன் நண்பனுக்குத் தெரிவிக்கலாமா என்று என்னிடம் கேட்பதற்கு வந்ததாக நீ இன்று என்னிடம் எப்படி ஒரு விளையாட்டுக் காட்டினாய். அவனுக்கு முன்பே தெரியும்; முட்டாளே, அவனுக்கு எல்லாமே தெரியும்! நான் அவனுக்கு எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் - என்னிடமிருந்து என் எழுதுபொருள்களை
எடுத்துவிட நீ மறந்துவிட்டாய். அதனால்தான் அவன் வருடக்கணக்காக இங்கு வரவில்லை; உனக்குத் தெரிந்திருப்பதை விட அவனுக்கு எல்லாமே நூறு மடங்கு நன்றாகத் தெரியும். தன் வலது கையில் என் கடிதங்களைப் படிப்பதற்காகப் பிடித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், தன் இடது கையால் அவன் உன் கடிதங்களைப்
பிரிக்காமலேயே கசக்கி எறிவான்!''

உற்சாக மிகுதியில் தன் தலைக்கு மேலாகக் கையை அசைத்தாட்டினார்.

"அவனுக்கு எல்லாமே ஆயிரம் மடங்கு நன்றாகத் தெரியும்!'' அவர் கத்தினார்.

"பத்தாயிரம் மடங்கு'' என்று தந்தையைக் கேலிக்குள்ளாக்கும் நினைப்பில் ஜார்ஜ் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவன் நாவிலேயே மிகவும் மனப்பூர்வமானவையாக உருமாறி விட்டன.

"இது போன்றதொரு கேள்வியோடு நீ வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்தேன்! நான் வேறெதிலாவது என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன் என்று நீ நினைக்கிறாயா? நான் என் பத்திரிகைகளைப் படிக்கிறேன் என்றா நீ நினைக்கிறாய்? பார்!'' அவர் எப்படியோ தன்னோடு படுக்கைக்கு எடுத்துக்கொண்டு வந்திருந்த ஒரு பத்திரிகைத் தாளை ஜார்ஜிடம் எறிந்தார். அதன் பெயரைக்கூட ஜார்ஜ்
கேள்விப்பட்டிராத அளவுக்கு அது ஒரு பழைய பத்திரிகை.

"நீ வளர்ந்து ஆளாவதற்குத்தான் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாய்! உன் அம்மா, சந்தோஷமான நாளைப் பார்க்காமலேயே இறக்க வேண்டியதாயிற்று. ரஷ்யாவில் உன் நண்பன் தூள் தூளாக நொறுங்கிக் கொண்டிருக்கிறான்; மூன்று வருடங்களுக்கு முன்பே தூக்கியெறிப்படும் அளவு மஞ்சளாகி விட்டிருந்தான். என்னைப் பொறுத்தவரை, நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை நீயே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இதையெல்லாம் பார்க்க உனக்கு உன் தலையில் கண்கள் இருக்கின்றன!''

"ஆக, படுத்தபடியே எனக்காகக் காத்துக் கொண்டு இருந்திருக்கிறீர்கள்!'' ஜார்ஜ் கத்தினான்.

அவன் தந்தை இரக்கத்தோடு, முன்தீர்மானம் ஏதுமின்றிச் சொன்னார் : "நீ இதை விரைவில் சொல்ல விரும்புகிறாய் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அது ஒரு விஷயமில்லை.'' பின்னர் உரத்த குரலில் : "ஆக உன்னைத் தவிரவும் உலகில் வேறென்ன எல்லாம் இருக்கின்றன என்பதை இப்போது நீ அறிந்து கொண்டிருப்பாய்; இவ்வளவு காலமும் நீ உன்னைப் பற்றி மட்டுமே தெரிந்து கொண்டிருந்தாய்! ஒன்றுமறியாக் குழந்தை! உண்மைதான், நீ அப்படித்தான். ஆனால் அதை விடவும் பேருண்மை நீ ஒரு மனிதப் பிசாசாக இருந்திருக்கிறாய் என்பது. எனவே நீ குறித்துக் கொள்; நீரில் மூழ்கி நீ உயிர்விட வேண்டுமென நான் தீர்ப்பு வழங்குகிறேன்.''

அறையை விட்டு உடனடியாக வெளியேறி விட அவன் மனம் பரபரத்தது. அவனுக்குப் பின்னால் அவனுடைய தந்தை பொத்தென்று படுக்கையில் விழுந்த சப்தம், அவன் வெளியேறிய போது காதுகளில் விழுந்திருந்தது. படிக்கட்டுகளில் அவன், ஏதோ அந்தப் படிகள் சரிவான தளம் கொண்டிருப்பதைப் போல இறங்கியபோது, காலை
நேர சுத்தப்படுத்தலுக்காக மாடி அறையை நோக்கி மேலேறிக் கொண்டிருந்த அவனுடைய வேலைக்காரியைக் கடந்தான். 'ஏசுவே' என்று கத்தியபடி அவள் முகப்புத் துணியால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். ஆனால் அதற்குள் அவன் சென்றுவிட்டிருந்தான். முன்வாசல் வழியாக, சாலையைக் கடந்து, தண்ணீரை நோக்கி உந்தப்பட்டு அவன் விரைந்தான். ஏற்கெனவே அவன் பாலத்தின் கிராதிகளை, பசியால் வாடும் மனிதன் உணவை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதுபோல, பற்றியிருந்தான். ஒரு உடற்பயிற்சி வித்தைக்காரனைப் போல - அவனே அப்படியான ஒரு ஆளாக தன் இளமையில் ஒரு சமயம், பெற்றோர்கள் பெருமிதப்படும்படி இருந்திருக்கிறான் - அவன் அதன்மீது ஊசலாடினான். பிடிமானம் தளர்ந்து, அவன் இன்னமும் பற்றிக் கொண்டிருந்த சமயத்தில், பஸ் ஒன்று வருவதை,
அவன் விழுவதால் ஏற்படும் சத்தத்தை அது சுலபமாக அமுக்கி விடுமென்பதை, கிராதிகளுக்கிடையே ரகசியமாக அறிந்ததும், தாழ்ந்த குரலில் : "அன்புப் பெற்றோரே, நான் எப்போதுமே உங்களை நேசித்திருக்கிறேன் - ஒரே மாதிரியாக'' என்று கூறியபடி குதித்தான்.

இந்தச் சமயத்தில் பாலத்தின்மீது முடிவுறாத போக்குவரத்து தொடர்வரிசையாக தன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருந்தது.



ஃப்ரன்ஸ் காஃப்கா (1883 - 1924)




இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய படைப்பாளி காஃப்கா. பகட்டுகளற்ற, ஆனால் புதிர்கள் நிறைந்த மொழி இவருடையது.

1883- ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி செக்கோஸ்லோவாகியா நாட்டின் தலைநகரான ப்ராகில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். யூதர், தாய்மொழி ஜெர்மன். அவருடைய மொழி செக் நாட்டவரிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தியது. அவரின் இனமும் மதமும் ஜெர்மானியர்களிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தின. 'தனிமை', அவருடைய
படைப்புலக ஆதாரங்களில் ஒன்று.

ரகசியம், பயம், குழப்பம், அதிகாரம், குற்றம், தோல்வி, தனிமை, காதல் என தன் வாழ்வில் அனுபவித்த பிரத்யேக நிலைகளினூடாகவே தம் படைப்புலகை உருவாக்குகிறார். அதன் மூலம் தம் கால மனித வாழ்வில், அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களைப் படைப்பில் உறைய வைக்கிறார். இந்த முகங்களில் தெரியும்
தன்னுடைய சாயல்களை, அவருடைய படைப்புலகோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாய் உணர்கிறான்.

1917-ஆம் ஆண்டு அவரை பீடித்த எலும்புருக்கி நோய் காரணமாக, 1924 - ஜூன் 3-இல் இறந்தார். அவருடைய வாழ்நாளில் சிறிய படைப்புகள் மட்டுமே வெளிவந்திருந்தன. முற்றுப் பெறாத மூன்று நாவல்களும் அவரின் மரணத்திற்குப் பின்னரே வெளிவந்தன.

'தீர்ப்பு' - காஃப்காவின் முழுமையான முதல் படைப்பு. இக்கதையை, 1912-ஆம் வருடம் செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிவரை ஒரே மூச்சி எழுதி முடித்தார். இது, அவருடைய படைப்புலகின் அடிப்படை அம்சங்களனைத்தும் ஒன்று திரண்டு அடர்த்தியாக உருக்கொண்ட கதை. மேலும் இக்கதையில் அவரின் படைப்புலகப் பிரச்சனைகளில் ஒன்றான "தந்தை - மகன் போராட்டம்' அதன் ஆழத்தைத் தொட்டிருக்கிறது.

காஃப்காவுக்கும் அவரின் தந்தைக்கும் இடையேயான நிஜ உலக உறவின் தன்மைகள் இப்புனைவில் இலக்கிய முகம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, காஃப்காவுக்கு மிகவும் பிடித்த கதை இது.

காஃப்காவின் மற்றொரு கதையான 'கிராம மருத்துவர்', நனவுலகும் கனவுலகும் முயங்கி முகிழ்த்த பிரத்யேகமான காஃப்கா உலகக் கதை. 1919-ஆண்டு எழுதப்பட்டது.

- சி.மோகன்

நூல்: கதையின் திசைகள் (10 உலகச் சிறுகதைகள்) - தமிழில் சி.மோகன்

வெளியீடு: அகல்
விலை ரூ.90

No comments: