Wednesday, December 29, 2010

பாண்டியன் நிலக்கிழார்



பாண்டியன் நிலக்கிழார்
என அச்சடிக்கப்படாத
ரோஸ், மஞ்சள் நிறத்திலான
ஒரு திருமண அழைப்பிதழையும்
அந்த ஊரில்
நீங்கள் தேடிப் பிடிக்க முடியாது.
சோத்துக்குச் சிங்கியடித்த
அடுத்தடுத்து வீட்டு
பங்காளி மகன்களெல்லாம்
அப்ராடு போய் வந்து
கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு
தொழிலதிபர்களாக
காரில் பறப்பதைப் பார்த்து
நிலத்தையும், வீட்டையும் விற்று
ஒரே மகன் புகழேந்தியை
கிழார் அப்ராடு அனுப்பிவைத்தார்.
முதல்நாள்
கிரேனில் ஏத்தி
நாற்பதாவது மாடி கண்ணாடியைத்
துடைக்கச் சொன்னபோது
புகழேந்தி
கீழே பார்க்காமல்
கொஞ்சம் பயத்தைவிட்டுத் துடைத்திருக்கலாம்.
பாவம்
காளியாத்தா
மாரியாத்தாயென
எந்த ஆத்தாவைக் கூப்பிடுவதெனவும் தெரியாமல்
கிரேனிலிருந்தே ஊரைப் பார்த்துவிட்டான்.

நன்றி:உயிரோசை

No comments: