Monday, May 17, 2010

நடனத்திற்குப் பிறகு

லியோ டால்ஸ்டாய் சிறுகதை






""நன்மை எது, தீமை எது என்று ஒரு மனிதன் தானாகவே முடிவு செய்ய முடியாது, அது சூழ்நிலையைப் பொறுத்த விஷயம் } மனிதன் சூழ்நிலையால் படைக்கப்படுகிறான் } என்று நீங்கள் சொல்கிறீர்கள். எல்லாமே தற்செயலான சந்தர்ப்பங்களைப் பொறுத்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். என்னைப் பற்றி நான் சொல்கிறேன். கேளுங்கள்...''
தனி நபரை முன்னேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக மனிதர்கள் வாழ்கின்ற நிலைமைகளை, சூழ்நிலைகளை மாற்ற வேண்டிய அவசியத்தைப் பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். அந்த விவாதம் முடிவடையும் தறுவாயில் எங்கள் மதிப்புக்குரிய நண்பர் இவான் வசீலியெவிச் மேலே கூறிய கருத்தைத் தெரிவித்தார். நன்மை, தீமையைப் பற்றி ஒருவர் தானாகவே முடிவு செய்வது இயலாத காரியம் என்று யாருமே சொல்லவில்லை. ஆனால் விவாதத்தினால் தூண்டிவிடப்பட்ட தன்னுடைய சொந்தச் சிந்தனைகளுக்குப் பதிலளிப்பது இவான் வசீலியெவிச்சினுடைய பழக்கம். அந்தச் சிந்தனைகளுக்கு ஏற்ற முறையில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை அவர் விவரிப்பார். பெரும்பாலும் கதையில் அதிகமாக ஈடுபட்டுவிடுவதால் (அதிலும் அவர் எப்பொழுதுமே மிகவும் உணர்ச்சியாகவும் உண்மையாகவும் பேசுவார்) அந்தக் கதையைச் சொல்ல வந்த காரணத்தை மறந்துவிடுவார்.
இந்தத் தடவையும் அப்படியே நடந்தது.
""என்னைப் பற்றியாவது இதைச் சொல்ல முடியும். என்னுடைய வாழ்க்கை சூழ்நிலையாலோ வேறு எந்தச் சக்தியாலோ உருவாக்கப்படவில்லை. அது முற்றிலும் வேறு ஒன்றினால் உருவாக்கப்பட்டது.''
""அது என்ன?'' என்று நாங்கள் கேட்டோம்.
""அது ஒரு நீண்ட கதை. நான் முழுக் கதையையும் சொன்னால்தான் நீங்கள் அதைப் புரிந்து கொள்ள முடியும்.''
""அப்படியானால் சொல்லுங்கள்.''
இவான் வசீலியெவிச் ஒரு வினாடி சிந்தித்தார். பிறகு தலையை அசைத்தார்.
""சரி. சொல்கிறேன். என்னுடைய வாழ்க்கை முழுவதுமே ஒரு இரவில், சரியாகச் சொல்வதென்றால் ஒரு காலைப் பொழுதில் மாறி விட்டது.''
""ஏன்? என்ன நடந்தது?''
""நான் அப்பொழுது அதிகமாகக் காதலில் சிக்கியிருந்தேன். அதற்கு முன்பு நான் அடிக்கடிகாதல் வயப்பட்டதுண்டு. ஆனால் இந்தத் தடவை இது ஆழமான காதலாக இருந்தது. இது நெடுங்காலத்துக்கு முன்பு நடந்தது } அவளுடைய பெண்களுக்கு இப்பொழுது திருமணம் முடிந்திருக்கும். அவள் பெயர் பி... ஆம், வாரென்கா பி... என்பது அவள் பெயர்.'' இவான் வசீலியெவிச் அவளுடைய குடும்பப் பெயரைக் கூறினார். ""ஐம்பது வயதில் கூட அவள் இன்னும் மிக அழகாக இருந்தாள். ஆனால் அவளுடைய இளமையில், பதினெட்டு வயதில் அவள் ஒரு அற்புதக் கனவு! உயரம், ஒல்லியான உடல், நளினம், கம்பீரம் } ஆம், கம்பீரம்தான். தன்னால் வளைய முடியாது என்பதைப் போல அவள் எப்பொழுதுமே நிமிர்ந்த நடையோடிருந்தாள். அவளுடைய தலை லேசாகப் பின்னால் சாய்ந்திருக்கும். அவள் வெறும் எலும்பு என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகவும் ஒல்லியாக இருந்தாலும், அதுவும் அவளுடைய அழகும் உயரமும் அவளுக்கு ஒரு ராணியின் மிடுக்கைக் கொடுத்தன. அவளுடைய உல்லாசமான, வசீகரமான புன்சிரிப்பு, அழகான வாய், ஒளி வீசும் பிரகாசமான கண்கள், உடல் முழுவதும் இளமையின் பொலிவும் கவர்ச்சியும் இல்லையென்றால் அவளுடைய மிடுக்கான தோற்றமே மற்றவர்களைப் பயமுறுத்தியிருக்கும்.''
""இவான் வசீலியெவிச் அடுக்கிக் கொண்டே போகிறாரே!''
""நான் எவ்வளவுதான் அடுக்கிக் கொண்டு போனாலும் அவள் உண்மையிலேயே எவ்வளவு அழகாக இருந்தாள் என்பதை உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. ஆனால் அது வேறு விஷயம். நான் சொல்லப் போகும் சம்பவம் நாற்பதுகளில் நடைபெற்றது. அப்பொழுது நான் ஒரு மாகாணப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தேன். அது நல்ல விஷயமா அல்லது கெட்ட விஷயமா என்பது எனக்குத் தெரியாது; ஆனால் அந்தக் காலத்தில் எங்கள் பல்கலைக்கழகத்தில் இப்பொழுது இருக்கின்ற மாதிரி ஆராய்ச்சி வட்டங்கள், தத்துவ விவாதங்கள் கிடையாது. நாங்கள் இளைஞர்கள். இளைஞர்களைப் போல வாழ்க்கை நடத்தினோம், அதாவது படித்தோம், உல்லாசமாகப் பொழுது போக்கினோம். நான் மிகவும் மகிழ்ச்சியான, சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தேன். போதாததற்குப் பணக்காரனாகவும் இருந்தேன். என்னிடம் வேகமான குதிரை இருந்தது. கோச்சு வண்டியில் பெண்களை வெளியே கூட்டிக்கொண்டு போவேன் (அந்தக் காலத்தில் சறுக்கும் பைத்தியம் இன்னும் ஏற்படவில்லை). என்னோடு படித்த மாணவர்களோடு சேர்ந்து குடிப்பதுண்டு (அந்தக் காலத்தில் நாங்கள் ஷாம்பேனைத் தவிர வேறு எதையும் குடிப்பதில்லை. பணம் இல்லையென்றால் குடிக்காமலிருப்போம். இப்பொழுதிருப்பதைப் போல நாங்கள் ஒருக்காலும் வோட்கா குடிக்க மாட்டோம்.). நான் விருந்துகளையும் நடனங்களையும் அதிகமாக ரசித்தேன். நான் நன்றாக நடனமாடுவேன். என்னை அழகில்லாதவன் என்றும் சொல்ல முடியாது.''
""இவ்வளவு அடக்கம் வேண்டாமே'' என்றாள் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு பெண், ""உங்கள் படத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம். இளமையில் மிகவும் அழகாக இருந்திருக்கிறீர்கள்.''
""ஒருவேளை அப்படி இருந்திருக்கலாம், ஆனால் நான் உங்களிடம் சொல்ல விரும்பியது அதுவல்ல. என்னுடைய காதல் உச்சகட்டத்திலிருந்த பொழுது குளிர்காலத் திருவிழாவின்போது மேன்மக்கள் மார்ஷல் நடத்திய நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அவர் நல்ல சுபாவத்தைக் கொண்ட கிழவர், செல்வந்தர், கேளிக்கைகளில் ஈடுபாடுடையவர். அவரைப் போலவே இனிய குணத்தைக் கொண்ட அவருடைய மனைவி அவரோடு நின்று கொண்டு எங்களை வரவேற்றாள். அவள் வெல்வெட் கவுன் அணிந்திருந்தாள். தலையில் வைர கீரிடம். அவளுடைய வயோதிகமான கழுத்தும் தோள்களும் சதைப் பிடிப்போடு வெண்மையாக இருந்தன. சக்கரவர்த்தி யெலிஸவேத்தா பெத்ரோவ்னாவின் உருவப் படங்களில் இருப்பதைப்போல அவளுடைய கழுத்தும் தோள்களும் மூடப்படாமல் தெரிந்தன. அது மிக அற்புதமான நடன நிகழ்ச்சி. நடனம் நடைபெற்ற அறை அழகாக இருந்தது. பிரபலமான பாடகர்களும் இசைக் குழுவினரும் அங்கே இருந்தார்கள். அவர்கள் பண்ணையடிமைகள். இசைப் பிரியரான ஒரு நிலவுடைமையாளருக்குச் சொந்தமானவர்கள். உணவு ஏராளமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
ஷாம்பேன் மது ஆறாக ஓடியது. எனக்கு ஷாம்பேன் மிகவும் பிடிக்கும். எனினும் நான் குடிக்கவில்லை. எனக்குக் காதல் மயக்கம் ஏற்பட்டிருந்தது. கீழே விழுகின்றவரை நடனமாடினேன். குவாட்ரில், பிறகு வால்ட்ஸ், பிறகு போல்கா நடனமாடினேன். பெரும்பாலான நடனங்களை } இயன்றவரை } வாரென்காவுடன் நடனமாடினேன் என்று சொல்லத் தேவையில்லை. அவள் வெள்ளை உடை அணிந்து அதன் மேல் இளஞ் சிவப்பு நிறத்தில் நாடாவைக் கட்டியிருந்தாள். ஆட்டுத்தோலில் செய்யப்பட்ட வெள்ளைக் கையுறைகளையும் } அவை அவளுடைய ஒல்லியான, கூர்மையான முழங்கைகளை எட்டவில்லை } வெள்ளை ஸôட்டின் காலணிகளையும் அணிந்திருந்தாள். அனீசிமவ் என்ற ஒரு பாழாய்ப்போன பொறியியலாளர் நான் அவளோடு மஸýர்க்கா நடனமாட முடியாதபடி என்னை ஏமாற்றிவிட்டார். அதற்காக நான் அவரை ஒருக்காலும் மன்னிக்கவில்லை. அவள் நடன அறைக்குள் நுழைந்தவுடனே அவர் அவளைத் தன்னோடு நடனமாட அழைத்தார். கையுறைகள் வாங்குவதற்காக முடி அலங்கரிப்பவனைத் தேடிச் சென்றதில் எனக்குக் காலதாமதமாகிவிட்டது. அதனால் அவளோடு மஸýர்க்கா நடனமாடுவதற்குப் பதிலாக ஒரு காலத்தில் நான் காதலித்த ஜெர்மன் பெண்ணோடு அந்த நடனமாடினேன். ஆனால் அன்று அந்தப் பெண்ணை நான் மிகவும் அலட்சியமாக நடத்தினேன் என்று நினைக்கிறேன். நான் அவளிடம் பேசவில்லை, அவளைச் சரியாகப் பார்க்கக்கூட இல்லை. ஏனென்றால் இளஞ்சிவப்பு நாடா தைக்கப்பட்ட வெள்ளை உடையணிந்த, பிரகாசமான, நாணத்தால் சிவப்படைந்த, கன்னங்களில் குழிவும் மென்மையான, அன்பு ததும்பும் கண்களும் கொண்ட உயரமான, ஒல்லியான பெண்ணுக்காகவே என் கண்கள் அன்று காத்திருந்தன. அவளை நான் மட்டுமே போற்றியதாகச் சொல்ல முடியாது. எல்லோரும் அவளைக் கவனமாகப் பார்த்தார்கள், அவள் அழகைப் பாராட்டினார்கள், ஆண்களும் பெண்களும்தாண். இத்தனைக்கும் அவள் அங்கேயிருந்த எல்லாப் பெண்களையும்விட அழகாக இருந்தாள், அவர்களால் அவளைப் போற்றாமல் இருக்க முடியவில்லை.
""மஸýர்க்கா நடனத்தில் முறைப்படி நான் அவளுடைய ஜோடி அல்ல. ஆனால் உண்மை என்னவென்றால் அந்த நடனத்தில் குறைந்தபட்சம் அதன் பெரும் பகுதியில் நான் அவளோடு நடனமாடினேன். அவள் சிறிதுகூட கூச்சமின்றி அந்தப் பெரிய அறை நெடுகிலும் என்னோடு சேர்ந்து நடனமாடினாள். அவளோடு நடனமாடுவதற்கு அழைப்பில்லாமலேயே நான் துள்ளிக் குதித்து அவளுக்கு முன்னால் போய் நின்றபொழுது அவள் விருப்பத்தை நான் ஊகித்ததற்காக அவள் புன்சிரிப்புடன் நன்றி தெரிவித்தாள். முதலில் அவளுக்கு முன்னால் நான் சென்ற பொழுது அவள் என்னுடைய தகுதியைப் புரிந்து கொள்ளவில்லை. தன்னுடைய ஒல்லியான தோள்களை லேசாகக் குலுக்கிவிட்டு வேறொருவரை நோக்கித் தன் கையை நீட்டினாள். தன் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவிப்பதைப்போல என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.
""மஸýர்க்கா நடனமாடி வால்ட்ஸ் நடனம் ஆரம்பமான பொழுது நான் அவளொடு நெடு நேரம் நடனமாடினேன். அவள் மூச்சுக்கூட விட முடியாமல் சிரித்தாள். "மறுபடியும்' என்று முணுமுணுத்தாள். நான் என் உடலைப் பற்றியே நினைக்காமல் } அது காற்றால் செய்யப்பட்டிருப்பதைப் போலக் கருதிக் கொண்டு } மேலும் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தேன்.''
""உடலைப் பற்றி நினைக்கலாமா? அவளுடைய இடையைச் சுற்றி உங்கள் கையை வளைத்திருந்த பொழுது, உங்களுடைய உடலைப் பற்றி மட்டுமல்லாமல் அவளுடைய உடலைப் பற்றியும் மிகவும் அதிகமாக நினைத்தீர்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்'' என்று அங்கேயிருந்த விருந்தினர்களில் ஒருவர் கூறினார்.
உடனே இவான் வசீலியெவிச்சின் முகம் சிவந்தது. அவர் உரத்த குரலில் பேசினார்:
""அது நவீன இளைஞர்களாகிய உங்களுக்குப் பொருந்தலாம். நீங்கள் உடலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் காலத்தில் நாங்கள் வேறு விதமாக இருந்தோம். ஒரு பெண்ணை நான் எவ்வளவு அதிகமாகக் காதலிக்கிறேனோ அவ்வளவுக்கு அவள் உடலைப் பற்றி மறந்துவிடுவேன். இன்று நீங்கள் கால்கள், கணுக்கால்கள் இன்னும் மற்றவைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் காதலிக்கும் பெண்களைக் கற்பனையில் நிர்வாணமாக்கிவிடுகிறீர்கள். ஆனால் அல்ஃபோன்ஸ் கார் } அவர் சிறந்த எழுத்தாளர் } கூறியதைப் போல என் காதலுக்கு உரியவள் எப்பொழுதுமே வெண்கல உடைகளை அணிந்திருப்பாள். நாங்கள் உடலை வெளிக்காட்ட முயற்சிக்கவில்லை. நோவாவின் நன் மகனைப் போல நிர்வாணத்தை மறைப்பதற்கே முயற்சி செய்தோம். ஆனால் உங்களுக்கு இதெல்லாம் புரியாது...''
""அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் கதையைத் தொடர்ந்து சொல்லுங்கள்'' என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் கூறினார்.
""சரி. நான் அவளோடுதான் அதிகமாக நடனமாடினேன் நேரமாகிவிட்டதைக் கவனிக்கவில்லை. பாடகர்கள் மிகவும் களைத்துவிட்டார்கள். நடனத்தின் முடிவில் எப்பொழுதுமே அப்படித்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மஸýர்க்கா நடனத்துக்கு வாசித்துக் கொண்டிருந்தார்கள். உபசரிக்கும் அறையில் சீட்டாடிக் கொண்டிருந்த அப்பாக்களும் அம்மாக்களும் இரவு உணவு சாப்பிட நாற்காலிகளிலிருந்து எழுந்து கொண்டிருந்தார்கள். வேலைக்காரர்கள் எதையோ எடுத்துக் கொண்டு எங்களை வேகமாகக் கடந்து சென்றார்கள். அப்பொழுது மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. எஞ்சியிருக்கும் சில நிமிடங்களை நாங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் மறுபடியும் அவளை நடனமாடக் கூப்பிட்டேன்; நாங்களிருவரும் நூறாவது தடவையாக அந்த அறை நெடுகிலும் நடனமாடினோம்.
"" "இரவு உணவுக்குப் பிறகு குவாட்ரில் நடனத்துக்கு உங்களுடைய ஜோடியாக நான் இருக்கலாமா?' என்று அவளை மறுபடியும் இருக்கைக்குக் கூட்டிக் கொண்டு சென்றபொழுது கேட்டேன்.
"" "ஓ! சரி. என்னை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகாமலிருந்தால்' என்று அவள் சிரித்துக்கொண்டே கூறினாள்.
"" "நான் போக மாட்டேன்' '' என்றேன்.
"" "என்னுடைய விசிறியைக் கொடுங்கள்' '' என்றாள்.
"" "அதை உங்களிடம் திருப்பிக் கொடுக்க எனக்கு வருத்தமேற்படுகிறது' '' என்று சொல்லிக் கொண்டு அவளுடைய மலிவான வெள்ளை, விசிறியை அவளிடம் கொடுத்தேன்.
"" "அப்படியானால் வருத்தப்படாமலிருப்பதற்காக இதை வைத்துக் கொள்ளுங்கள்' '' என்று சொல்லிக் கொண்டு அந்த விசிறியிலிருந்து ஒரு இறகைப் பிடுங்கி என்னிடம் கொடுத்தாள்.
""நான் அந்த இறகைப் பெற்றுக் கொண்டேன். என்னுடைய பரவசத்தையும் நன்றியையும் ஒரு பார்வையால் மட்டுமே என்னால் வெளிப்படுத்த முடிந்தது. நான் குதூகலமாகவும் நிறைவுடனும் இருந்தது மட்டுமல்ல, மகிழ்ச்சியாக இருந்தேன், பேரின்பத்தை அனுபவித்தேன். பரந்த உள்ளத்தோடிருந்தேன். அப்பொழுது நான் நானாக இருக்கவில்லை. இந்த உலகத்தைச் சேராத ஏதோ ஒரு பிறவியைப் போல, தீமை என்னவென்றே அறியாத நன்மையைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாத பிறவியைப் போல நான் உணர்ந்தேன். நான் அந்த இறகை என் கையுறையில் சொருகிக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்து செல்ல முடியாதவனாக, அந்த இடத்திலேயே ஆணியடிக்கப்பட்டதைப் போல நின்று கொண்டிருந்தேன்.
"" "அங்கே பாருங்கள்! அவர்கள் அப்பாவை நடனமாடச் சொல்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டு கதவுக்குப் பக்கத்தில் விருந்தளிப்பவருடைய மனைவியோடும் மற்றும் சில பெண்களோடும் நின்று கொண்டிருந்த தன் தகப்பனாரைச் சுட்டிக் காட்டினாள். அவர் உயரமான, கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட மனிதர், கர்னல், தோள்பட்டைகளில் வெள்ளியில் பதவிச் சின்னங்களை அணிந்திருந்தார்.
"" "வாரென்கா! இங்கே வா!' என்று வைர கிரீடம் அணிந்த, விருந்தளிக்கும் அம்மையார் கூப்பிட்டாள்.
""வாரென்கா கதவை நோக்கிச் சென்றாள். நான் அவளைப் பின்தொடர்ந்தேன்.
"" உன்னோடு நடனமாடுமாறு உன் தகப்பனாரைக் கூப்பிடு. பியோத்தர் விளதிஸ்லாவிச்! தயவு செய்து நடனமாடுங்கள்' என்று அந்தச் சீமாட்டி கர்னலைக் கேட்டுக் கொண்டாள்.
""வாரென்காவின் தகப்பனார் உயரமாக, அழகாக, கம்பீரமாக இருந்தார். அவர் வயதானபோதிலும் இளமையான தோற்றத்தைக் கொண்டிருந்தார். சிவந்த முகம், நரைத்த மீசையை முதலாம் நிக்கலாய் பாணியில் முறுக்கிவிட்டிருந்தார். கன்னத்தில் வளர்ந்திருந்த கிருதா அந்த மீசையோடு சேர்ந்து கொண்டது. தலைமுடி நெற்றியின் மீது விழும்படியாகச் சீவியிருந்தார். அவர் தன் மகளைப் போலவே அன்பும் மகிழ்ச்சியும் ததும்பச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் கண்களும் உதடுகளும் பளிச்சிட்டன. திடகாத்திரமான உடல், அகன்ற இராணுவ பாணியில் முன்னால் துருத்திக் கொண்டிருந்தது. சில இராணுவப் பதக்கங்கள் மார்பை அலங்கரித்தன. வலுவான தோள்கள் நீளமான, நேர்த்தியான கால்கள். அவர் பழைய ரகத்தைச் சேர்ந்த அதிகாரி; நிக்கலாயைப் பின்பற்றும் இராணுவ பாணி.
""நாங்கள் கதவை நெருங்கிய பொழுது நடனத்தை மறந்து நெடுங்காலமாகிவிட்டதென்று கர்னல் மறுத்துப் பேசிக் கொண்டிருந்தார். எனினும் அவர் புன்சிரிப்போடு உறையிலிருந்து வாளை எடுத்து, அவருக்குச் சேவை செய்ய ஆர்வத்தோடு நின்ற இளைஞனிடம் நீட்டினார். வலது கையில் தோல் கையுறையை மாட்டிக்கொண்டு ("எல்லாவற்றையும் முறைப்படி செய்யவேண்டும்' என்று அவர் புன்சிரிப்போடு சொல்லிக்கொண்டார்) தன் மகளின் கையைப் பிடித்து நடனமாடும் பாணியில் உடலை வளைத்து இசை தொடங்குவதற்காக நின்றார்.
""மஸýர்க்கா தொடங்கியதும் அவர் ஒரு காலால் சுறுசுறுப்பாகக் குதித்து அடுத்த காலை வீசினார். அவருடைய உயரமான, கனத்த உருவம் நடன அறையைச் சுற்றிச் சுழன்றது. அவர் ஒரு சமயத்தில் மெதுவாகவும் நாகரிகமாகவும் மறு சமயத்தில் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் காலை மாற்றி நடனமாடினார். வாரென்காவின் ஒடிசலான உடல் அவரோடு சேர்ந்து சுழன்றது. அவள் தன்னுடைய சிறு, வெள்ளை ஸôட்டின் மூடிய கால்களை யாருக்கும் தெரியாமல் எப்பொழுதும் உரிய நேரத்தில் அவருடைய காலடிகளுக்கு இணையாக நீட்டி வைத்தாள் அல்லது குறுக்கி வைத்தாள். அந்த ஜோடியின் ஒவ்வொரு அசைவையும் விருந்தினர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் என்னிடம் பாராட்டைக் காட்டிலும் ஆழமான, பரவச உணர்ச்சி ஏற்பட்டது. அதிலும் கர்னலின் காலணிகளைப் பார்த்தபொழுது என் மனம் நெகிழ்ச்சி அடைந்தது. அவை ஆட்டுத் தோலில் தைக்கப்பட்ட நல்ல காலணிகளே. ஆனால் அவற்றில் குதிகால் பகுதி இல்லை. முன்பகுதி நாகரிக பாணியில் கூர்மையாக இருப்பதற்குப் பதிலாக சப்பையாக இருந்தது. அவை படைப் பிரிவைச் சேர்ந்த செம்மானால் தயாரிக்கப்பட்டவை என்பது தெளிவாகப் புலப்பட்டது. "தன் அன்புக்குரிய மகள் சிறப்பான உடைகள் அணிந்து உயர்ந்த வட்டாரங்களில் பழக வேண்டுமென்பதற்காக அவர் விலையுயர்ந்த காலணிகளுக்குப் பதிலாக சாதாரணமான காலணிகளை அணிந்திருக்கிறார்' என்று நான் நினைத்தேன். அதனால்தான் அவருடைய சப்பை முனைக் காலணிகளைப் பார்த்த பொழுது என் மனம் உருகியது. அவர் ஒரு காலத்தில் அழகாக நடனமாடியிருக்க வேண்டும். ஆனால் வேகமாகவும் அழகாகவும் சுழல்வதற்குச் செய்த எல்லா முயற்சிகளையும் நிறைவேற்றக் கூடிய அளவுக்கு அவருடைய கால்களில் நெகிழ்ச்சியில்லை. ஆனால் அவர் நடனமாடிக் கொண்டே இரண்டு தடவை அந்த அறையை அழகாகச் சுற்றி வந்தார். அவர் வேகமாகத் தன் கால்களை விரித்து மறுபடியும் அவற்றை ஒன்று சேர்த்தபொழுது எல்லோரும் கைதட்டினார்கள். அவர் ஒரு காலின் மீது அதிகமான பாரத்தை வைத்துவிட்டபடியால் கீழே விழுந்துவிட்டார். அவர் மகள் சிரித்துக்கொண்டே சிக்கிக்கொண்ட தன் உடையை விடுவித்துக் கொண்டு அவரைச் சுற்றி அழகாகச் சுழன்றாள். அவர் எழுந்து நின்று தன் மகளைக் காதோடு சேர்த்து அன்பாக அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். பிறகு என்னை அவளுடைய நடனஜோடி என்று நினைத்தவராக என்னிடம் கூட்டிக் கொண்டு வந்தார். நான் இல்லையென்று அவரிடம் கூறினேன்.
""அதனாலென்ன? நீங்கள் அவளுடன் நடனமாடுங்கள்'' என்று உறைக்குள் வாளைத் திணித்தபடியே அவர் சிரித்துக் கொண்டு கூறினார்.



""ஒரு பாட்டிலிலிருந்து வெளியே வருகின்ற முதல் துளியைத் தொடர்ந்து ஒரு அருவியே கொட்டுவதைப் போல வாரென்கா மீது எனக்கு ஏற்பட்ட காதல் என் ஆன்மாவில் திரண்டிருந்த காதல் உணர்ச்சி முழுவதையும் திறந்துவிட்டது. என்னுடைய காதலின் மூலம் நான் உலக முழுவதையுமே நேசித்தேன். வைர கீரிடத்தை அணிந்திருக்கும் விருந்தளித்த சீமாட்டியையும் அவள் கணவரையும் விருந்தினர்களையும் பணியாளர்களையும் நிச்சயமாக எனக்குக் கோபமூட்டிய அந்தப் பாழாய்ப் போன அனீசிமவையும் நான் நேசித்தேன். சப்பையான முனைக் காலணிகளும் அவளைப் போன்ற அதே புன்சிரிப்பும் கொண்ட அவள் தகப்பனாரைப் பொறுத்தவரை அவரிடம் எனக்கு அன்புப் பரவசம் ஏற்பட்டது.
""மஸýர்க்கா முடிவடைந்தது. விருந்தளித்தவர்கள் உணவருந்த வருமாறு எங்களைக் கூப்பிட்டார்கள். ஆனால் அதிகாலையில்தான் எழுந்திருக்க வேண்டுமென்று கூறி கர்னல் பி. மறுத்தார். விருந்தளித்தவரிடம் விடை பெற்றுக்கொண்டார். அவர் வாரென்காவையும் கூட்டிக் கொண்டு போய்விடுவாரோ என்று எனக்குக் கலக்கம் ஏற்பட்டது. ஆனால் அவள் தன் தாயாரோடு தங்கிவிட்டாள்.
""இரவு உணவுக்குப் பிறகு முன்பே முடிவு செய்தபடி நான் அவளோடு குவாட்ரில் நடனமாடினேன். நான் மிகவும் அதிகமான மகிழ்ச்சியை அனுபவிப்பதாகத் தோன்றியது. அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போயிற்று. நாங்கள் காதலைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. அவள் என்னைக் காதலிக்கிறாளா என்று நான் அவளைக் கேட்கவில்லை. என்னையும் கேட்டுக் கொள்ளவில்லை. நான் அவளைக் காதலித்தேன் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. என் மகிழ்ச்சியை ஏதாவது கெடுத்து விடலாம் என்ற ஒரே ஒரு அச்சம் மட்டுமே என்னிடம் ஏற்பட்டிருந்தது.
""நான் வீடு திரும்பியதும் உடைகளை மாற்றிக்கொண்டேன். தூங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் தூங்க முடியாது என்பதை உணர்ந்தேன். என் கையில் அவளுடைய விசிறி இறகையும் அவளுடைய கையுறைகளில் ஒன்றையும் வைத்திருந்தேன். அவளையும் அவளுடைய தாயாரையும் வண்டியில் ஏற்றி வழியனுப்பிய நேரத்தில் அவள் அந்தக் கையுறையை என்னிடம் கொடுத்தாள். அந்த நினைவுப் பொருட்களைப் பார்த்தபொழுது அவள் இரண்டு நபர்களில் ஒருவரைத் தன்னுடைய நடனஜோடியாகத் தேர்ந்தெடுத்தபொழுது, என்னுடைய இயல்பை ஊகித்தவளாக, இனிமையான குரலில், "இவ்வளவு கர்வமா? அடேயப்பா?' என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு என்னை நோக்கித் தன் கையை நீட்டிய காட்சி என் நினைவுக்கு வந்தது. இரவு உணவருந்தும் பொழுது அவள் ஷாம்பேனை ருசித்தபடியே அந்தக் கோப்பைக்கு மேல் தன் அன்பு விழிகளை உயர்த்தி என்னைப் பார்த்தது என் நினைவுக்கு வந்தது. ஆனால் அவள் தகப்பனாரோடு நடனமாடிய காட்சிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் தகப்பனார் சார்பிலும் தனக்காகவும் அங்கேயிருந்த பார்வையாளர்களை மகிழச்சியோடும் பெருமையோடும் பார்த்தபடியே அவருக்குப் பக்கத்தில் அவள் மென்மையழகோடு மிதந்து கொண்டிருந்தாள். என்னையறியாமலே அவர்களிருவரும் என் மனதில் ஒரே பிம்பமாகக் கலந்தார்கள். ஓர் ஆழமான அன்புணர்ச்சி அவர்களைத் தழுவியது.
அந்தச் சமயத்தில் என்னுடைய காலஞ்சென்ற சகோதரரும் நானும் தனியாக வசித்து வந்தோம். என் சகோதரருக்கு உயர்ந்த சமூகத் தொடர்புகள் பிடிக்கவில்லை. அவர் நடனங்களுக்கும் போக மாட்டார். அவர் முதுகலைப் பட்டத் தேர்வு எழுதுவதற்காகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். முன்னுதாரணமான வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் தூங்கிக் கொண்டிருந்தார். தலையணையின் மேல் பாதித் தலையை வைத்துக்கொண்டு உடலைப் போர்வையால் பாதி மூடியபடி அவர் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபொழுது நான் அவருக்காக வருத்தப்பட்டேன். நான் ஏன் ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது, அதைப் பகிர்ந்து கொள்ளவும் அவரால் முடியாது என்பதற்காக நான் வருத்தப்பட்டேன். என்னுடைய பணியாளான பெத்ரூஷா மெழுகுவர்த்தி விளக்கை எடுத்துக் கொண்டு வந்து என்னைச் சந்தித்தான். என் உடைகளைக் கழற்றுவதற்கு அவன் எனக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் நான் வேண்டாம் என்றேன். அவன் முகத்திலிருந்த தூக்கக் கலக்கத்தையும் தலைமுடி கலைந்து கிடந்ததையும் பார்த்தபொழுது எனக்கு அவன் மீது இரக்கம் ஏற்பட்டது. நான் சப்தமில்லாமல் அடிமேலடி வைத்து என் அறைக்குச் சென்று படுக்கையின் மீது உட்கார்ந்தேன். எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தபடியால் என்னால் தூங்க முடியவில்லை. அந்த அறை வெப்பமாக இருந்தது, எனவே என்னுடைய இராணுவ உடையை மாற்றிக் கொள்ளாமல் நான் சப்தமில்லாமல் ஹாலுக்குள் சென்றேன். என்னுடைய கம்பளிக் கோட்டை அணிந்து கொண்டு வாயிற் கதவைத் திறந்து வெளியே சென்றேன்.
""நான் நடன அறையிலிருந்து வந்தபொழுது அநேகமாக ஐந்து மணி ஆகியிருந்தது. அதற்குப் பிறகு சுமார் இரண்டு மணி நேரமாகியிருக்கும். எனவே நான் வெளியே போன பொழுது ஏற்கெனவே வெளிச்சம் ஏற்பட்டிருந்தது. குளிர்காலத் திருவிழாக் காலத்துக்கே உரித்தான பருவநிலை } மூடுபனி; சாலைகளில் ஈரப்பனி உருகிக் கொண்டிருந்தது, எல்லாக் கூரைகளிலிருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுது பி. குடும்பத்தினர் புறநகர்ப் பகுதியில், ஒரு பக்கத்தில் பெண்கள் பள்ளிக்கூடமும் மறுபக்கத்தில் உலாவுதிடலும் அமைந்திருந்த மைதானத்தின் ஓரத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். நாங்கள் வசித்துவந்த அமைதியான சந்தைக் கடந்து பிரதான வீதிக்கு வந்தேன். அங்கே பாதசாரிகளையும், சறுக்கு வண்டிகளில் மரப்பலகைகளை ஏற்றிக் கொண்டு வந்த வண்டிக்காரர்களையும் சந்தித்தேன். அந்தச் சறுக்கு வண்டிகளின் அடிச்சட்டங்கள் நடைபாதை வரை பனியைச் செதுக்கிக் கொண்டு சென்றன, குதிரைகள் வர்ணம் பூசப்பட்ட நுகத்தடிகளின் கீள் தாளலயத்தோடு தலைகளை ஆட்டியதும் மரவுரிப் பாய்களை முதுகில் அணிந்திருந்த வண்டிக்காரர்கள் கால்களில் பெரிய பூட்சுகளை அணிந்து கொண்டு சறுக்கு வண்டிகளுக்குப் பக்கத்தில் பனிச் சேற்றை மிதித்துக்கொண்டு ஓடியதும் சாலையில் இரு மருங்கிலும் அமைந்திருந்த வீடுகள் மூடுபனியில் உயரமாகத் தெரிந்ததும் } எல்லாம் குறிப்பிடத்தக்க வகையில் இனிமையாகவும் முக்கியமாகவும் தோன்றின.
மைதானத்தில் அவர்கள் வீடு இருந்த பகுதிக்கு நான் போனபொழுது மக்கள்உலாவுவதற்குப் பயன்படுத்தும் பகுதியின் முடிவில் கறுப்பாகவும் பெரியதாகவும் இருந்த ஏதோ ஒன்றைப் பார்த்தேன். இராணுவ இசைக் குழல் மற்றும் முரசு ஒலிக்கின்ற சத்தம் கேட்டது. அந்த நேரம் முழுவதும் என் உள்ளம் இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தது. மஸýர்க்காவின் இசை அவ்வப்பொழுது என் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் இது வேறுவிதமான இசை } கடுகடுப்பாகவும் பயங்கரமாகவும் ஒலித்தது.
""இது என்னவாக இருக்கும்?' என்று நினைத்தபடியே மைதானத்தின் குறுக்கே வழுக்கலாக இருந்த வண்டித் தடத்தின் வழியாக சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றேன். சுமார் நூறு தப்படிகள் நடந்த பிறகு அங்கே மக்கள் கூட்டமாக நிற்பதை மூடுபனியை ஊடுருவிப் பார்க்கத் தொடங்கியதும் கண்டேன். அவர்கள் படைவீரர்களாக இருக்க வேண்டும். "பயிற்சி நடைபெறுகிறது போலும்' என்று எண்ணியபடியே, எண்ணெய்க் கறை படிந்த சட்டையும் மேலங்கியும் அணிந்து, கையில் ஒரு பெரிய மூட்டையைத் தூக்கிக் கொண்டு வந்த ஒரு கருமானைத் தொடர்ந்து சென்றேன். கறுப்புக் கோட்டுகள் அணிந்த படைவீரர்கள் துப்பாக்கிகளோடு எதிரெதிராக இரண்டு வரிசைகளாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இராணுவ இசைக் குழலை வாசிப்பவனும் முரசடிப்பவனும் நின்றுகொண்டு அந்த இனிமையற்ற சங்கீதத்தைத் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.
"" அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று எனக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருந்த கருமானைக் கேட்டேன்.
""ஓடிப் போக முயன்ற தாத்தாரியனுக்குத் தண்டனை கொடுக்கிறார்கள் என்று அந்தக் கருமான் இரட்டை வரிசை முடிகின்ற இடத்தைப் பார்த்தபடியே பதலளித்தான்.
அந்தத் திசையில் நான் பார்த்தபொழுது படைவீரர்களின் வரிசைகளுக்கிடையில் பயங்கரமான ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அது ஒரு மனிதன். இடுப்பு வரை உடை இல்லை. பூமிக்குக் கிடைக்கோடாகப் பிடிக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் அவன் கட்டப்பட்டிருந்தான். அந்தத் துப்பாக்கிகளின் இரண்டு முனைகளையும் இரண்டு படைவீரர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கம்பளிக் கோட்டும் இராணுவத் தொப்பியும் அணிந்த உயரமான அதிகாரி அவனுக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை நான் ஏற்கெனவே பார்த்திருப்பது போலத் தோன்றியது அந்தக் கைதி உடல் முழுவதும் துடிக்க, உருகிக் கொண்டிருந்த பனிச் சேற்றைக் கால்களால் மிதித்துக் கொண்டு இரண்டு பக்கத்திலிருந்தும் அவன் மீது விழுந்த சவுக்கடிக்களுக்கு நடுவில் வந்து கொண்டிருந்தான். சில சமயங்களில் அவன் பின்னால் வளைந்தால், துப்பாக்கிகளைப் பிடித்துக் கொண்டிருந்த படைவீரர்கள் அவனைப் பின்னால் இழுப்பார்கள். அவனுக்குப் பக்கத்தில் அந்த உயரமான அதிகாரி, சிறிதும் பின்தங்கிவிடாமல் உறுதியான காலடிகளோடு வந்து கொண்டிருந்தார். சிவந்த முகமும், வெள்ளை நிற மீசையும் கிருதாவும் கொண்ட அதிகாரி வாரென்காவின் தகப்பனார்தான்.
""ஒவ்வொரு முறை சவுக்கடி விழுகின்ற பொழுதும் அந்தக் கைதி சவுக்கடி வந்த திசையை நோக்கி வலியினால் கோரமடைந்த தன் முகத்தைத் திருப்பி ஆச்சரிடயமடைவதைப் போலப் பார்த்து தன்னுடைய வெண்மையான பற்களைக் கடித்துக் கொண்டு எதையோ திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் எனக்குப் பக்கத்தில் வருகின்ற வரையிலும் அந்த வார்த்தைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவன் பேசினான் என்று சொல்வதைக் காட்டிலும் புலம்பினான் என்றுதான் சொல்ல வேண்டும். "சகோதரர்களே, இரக்கம் காட்டுங்கள்!' ஆனால் சகோதரர்களே, இரக்கம் காட்டவில்லை. அந்த ஊர்வலம் எனக்கு நேராக வந்தபொழுது ஒரு படைவீரன் உறுதியாக ஒரு எட்டு முன்னால் சென்று சவுக்கை ஓங்கி அவன் முதுகில் அடிப்பதைப் பார்த்தேன். அவன் அடித்த வேகத்தில் சவுக்கு காற்றைக் கிழித்து சப்தமிட்டது. அந்தத் தாத்தாரியன் முன்னோக்கி விழுந்தான். ஆனால் படைவீரர்கள் அவனைச் சுண்டியிழுத்துத் தூக்கினார்கள். எதிர்பக்கத்திலிருந்து மறுபடியும் அடி விழுந்தது, பிறகு இந்தப் பக்கத்திலிருந்து... கர்னல் அவனுக்குப் பக்கத்தில் நடந்து வந்தார். அவர் ஒரு சமயத்தில் தன் காலைப் பார்ப்பார், மறு சமயத்தில் அந்தக் கைதியைப் பார்ப்பார், ஆழமாகக் காற்றை மூச்சிழித்துத் தன் கன்னங்களை உப்ப வைத்துக் கொள்வார், பிறகு மூடிய உதடுகளுக்கு நடுவே அந்தக் காற்றை மெதுவாக வெளியே விடுவார். நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேராக அந்த ஊர்வலம் வந்தபொழுது வரிசையாக நின்று கொண்டிருந்த படைவீரர்களுக்கு இடையில் அந்தக் கைதியின் முதுகைப் பார்த்தேன். வரி வரியாகக் கோடுகள், இரத்தம் கசிந்து கொண்டிருந்தது, செந்நிறம், பார்க்கவே அருவருப்பான காட்சி. அது மனித உடலின் ஒரு பகுதி என்று என்னால் நினைக்க முடியவில்லை.
""அட கடவுளே!'' என்று எனக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கருமான் முணுமுணுத்தான்.
""ஊர்வலம் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. கெஞ்சிக் கொண்டும் தள்ளாடிக் கொண்டுமிருந்த அந்தப் பிறவியின் மீது இரண்டு பக்கங்களிலிருந்தும் சவுக்கடிகள் விழுந்து கொண்டிருந்தன. முரசு ஒலித்துக் கொண்டிருந்தது, இசைக் குழல் தொடர்ந்து கீச்சிட்டது. கைதிக்குப் பக்கத்தில் அந்த உயரமான, கம்பீரமான கர்னல் உறுதியாக நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று கர்னல் நின்றார். ஒரு படைவீரனை நோக்கி வேகமாகச் சென்றார்.
""சவுக்கடி தவறிவிட்டதா? உனக்கு நான் கொடுக்கிறேன்'' என்று அவர் கடுங்கோபத்தோடு சொல்வதைக் கேட்டேன். இதை வாங்கிக் கொள்! இதையும் வாங்கிக் கொள்.'
அந்தத் தாத்தாரியனின் இரத்தவிளாறான முதுகில் அந்தச் சிறு, பலவீனமான, படைவீரனின் சவுக்கடி பலமாக விழவில்லை என்பதற்காக அந்தக் கர்னலின் பட்டுக் கையுறையணிந்த பலமான கரம் அவன் முகத்தில் ஓங்கிக் குத்தியது.
""புதுச் சவுக்குகளைக் கொண்டு வா!'' என்று கர்னல் உத்தரவிட்டார். அவர் பேசிக் கொண்டு திரும்பிய பொழுது என்னைப் பார்த்தார். என்னைக் கண்டு கொள்ளாதது போலப் பாசாங்கு செய்தபடியே, பயமுறுத்துவதைப்போல முகத்தைச் சுளித்துக்கொண்டு வேகமாகத் திரும்பினார். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தபடியால் என் கண்களை எங்கே திருப்புவதென்று எனக்குத் தெரியவில்லை. ஏதோ வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும்பொழுது பிடிபட்டதைப் போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. நான் தலையைக் குனிந்து கொண்டு வேகமாக வீட்டுக்குத் திரும்பினேன். போகும் வழியெல்லாம் முரசு ஒலிப்பதும், இசைக் குழல் கீச்சிடுவதும் "சகோதரர்களே, இரக்கம் காட்டுங்கள்!' என்ற சொற்களும் "இதை வாங்கிக் கொள்! இதையும் வாங்கிக் கொள்' என்று ஆத்திரமான, சுய நம்பிக்கை நிறைந்த குரலில் கர்னல் திட்டுவதும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தன. இதனால் என் உள்ளத்தில் தீவிரமான வேதனையும் குமட்டல் உணர்ச்சியும் ஏற்பட்டதால் நான் பல தடவை நின்று போக வேண்டியதாயிற்று. நான் பார்த்த காட்சி எனக்குள் ஏற்படுத்திய அருவருப்பை வாந்தியெடுத்து வெளியே கொட்ட வேண்டும் என்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. நான் எப்படி வீட்டுக்குத் திரும்பினேன், கட்டிலில் எப்படிப் படுத்தேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் தூங்கத் தொடங்கிய மறுவினாடியே அங்கே நடந்த எல்லாவற்றையும் மறுபடியும் கண்டேன், கேட்டேன். நான் திடுக்கிட்டெழுந்தேன்.
""எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்' என்று கர்னலைப் பற்றி நினைத்தேன். அவருக்குத் தெரிந்திருக்கும் விஷயம் எனக்கும் தெரிந்திருக்குமானால் அதைப் புரிந்து கொண்டிருப்பேன். அந்தக் காட்சி எனக்கு இவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்காது என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் கர்னல் அறிந்திருந்த விஷயம் என்னவாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாலை வருகின்றவரை எனக்குத் தூக்கமும் வரவில்லை. அதிலும் ஒரு நண்பருடைய வீட்டுக்குச் சென்று எல்லாவற்றையும் மறக்கக்கூடிய வகையில் அதிகமாகக் குடித்தபிறகுதான் என்னால் தூங்க முடிந்தது.
""தீமையைப் பார்த்துவிட்டதாக நான் முடிவு செய்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி ஒன்றும் இல்லை. நான் கண்டவை இவ்வளவு நிச்சயத்தோடு செய்யப்பட்டு, எல்லோராலும் அவசியமானதென்று ஒத்துக்கொள்ளப்படுமானால் எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்' என்ற முடிவுக்குத்தான் நான் வந்தேன். அது என்னவென்று கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். ஆனால் அதைக் கண்டுபிடிக்க என்னால் ஒருக்காலும் முடியவில்லை. இராணுவத்தில் சேர வேண்டுமென்று நான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் இதைத் தெரிந்து கொள்ளாமல் என்னால் இராணுவத்தில் சேர முடியவில்லை. அது மட்டுமல்ல, வேறு வேலையிலும் நான் சேரவில்லை. அதன் விளைவாக உதவாக்கரையாகிவிட்டேன், அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.''
""நீங்கள் எப்படிப்பட்ட "உதவாக்கரை' என்பது எங்களுக்குத் தெரியுமே. நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் எத்தனையோ பேர் உதவாக்கரை ஆகியிருப்பார்கள் என்று சொல்லுங்கள். அதுதான் பொருத்தம்'' என்றார் விருந்தினர்களில் ஒருவர்.
""இது முட்டாள்தனமான பேச்சு'' என்று இவான் வசீலியெவிச் உண்மையான சங்கடத்தோடு சொன்னார்.
""போகட்டும். உங்கள் காதல் என்ன ஆயிற்று?'' என்று நாங்கள் கேட்டோம்.
""என் காதலா? அன்று முதல் என் காதல் தேய்ந்துவிட்டது. நாங்கள் உலாவப் போகும் பொழுது அவள் தனக்கு வழக்கமான முறையில் சோகத்தோடு சிரிப்பாள். அந்த மைதானத்தில் பார்த்த கர்னலின் உருவம் உடனே என் நினைவுக்கு வரும். அது எனக்குச் சங்கடத்தையும் வருத்தத்தையும் கொடுக்கும். நான் படிப்படியாக அவளைப் பார்க்கப் போவதை நிறுத்திக் கொண்டேன். என் காதல் தேய்ந்து மடிந்துவிட்டது. ஆகவே சில சமயங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதைப் போன்ற சம்பவங்கள்தான் மனிதனின் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடுகின்றன. நீங்கள் என்னடாவென்றால் சூழ்நிலையைப் பற்றிப் பேசுகிறீர்களே...'' என்று முடித்தார் இவான் வசீலியெவிச்.

நூல்: லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும்; தமிழில்: நா.தர்மராஜன்

No comments: