Saturday, November 24, 2007

தேநீர் செய்திகள்? தேள் கடி கேள்விகள்!









தேநீர் செய்திகள்? தேள் கடி கேள்விகள்!
(25.11.2007)


குவாஹாட்டி ஆதிவாசிகள் புழுக்களா?

செய்தி- 1:

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று ஆதிவாசி மாணவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அந்தஸ்வது வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பெல்தோலா பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்குப் பிறகு அனைவரும் திஸ்பூரிலுள்ள மாநில சட்டப்பேரவைக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது பேரவை நடைபெறவில்லை. இப்பேரணியில் போதுமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இந்தப் பேரணியின்போது வன்முறை மூண்டது. பேருந்து உட்பட போக்குவரத்து வாகனங்கள் தீவைக்கப்பட்டன. இதனால் திஸ்பூரிலிருந்து பஷிஸ்தா வரை போர்க்களம் போல காட்சியளித்தது. இச்சம்பவத்தில் 12 ஆதிவாசி மாணவர்கள் உயிரிழந்தனர். 230 பேர் படுகாயமடைந்தனர்.

கேள்வி:


" இதோ பாரு பத்து தலை பூச்சி'' என்று இராவணனைப் பிடித்து வாலி அவனது குழந்தைக்கு விளையாட்டு காட்டுவானாம். இப்போது ஆதிவாசிகளை, தாழ்த்தப்பட்டவர்களை பூச்சிகளாய், புழுக்களாய் நினைத்து ஆள்வோர், சமூகத்தில் அதிகார வர்க்கம் செலுத்துவோர் கொல்கிறார்கள். ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினால் மட்டும் எப்படி வன்முறை வெடித்துவிடுகிறது? தலைகள் கொய்யப்படுகிறது. சுதந்திரமான இந்தியா ஒருசிலருக்கு மட்டும் சுதந்திரத்தையும் ஒரு சிலருக்கு விலங்குகளையும் வழங்குகிறபோதுதானே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் போகவேண்டியிருக்கிறது. குவாஹாட்டியில் தாழ்ப்பட்டோர் அந்தஸ்து கேட்டு ஊர்வலம் போயிருக்கிறார்கள் ஆதிவாசி மாணவர்கள். பாம்பு கடிக்கு தேள் கடி பரவாயில்லை என்பதுபோல இந்தக் கோரிக்கை கொஞ்சம் பரவாயில்லை எனலாம். சாதி சான்றிதழ் இல்லாததால் பள்ளிகளில் சேர முடியாத ஆதிவாசிகள் எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள்? சாதி ரீதியான அடக்குமுறை, அடிமைமுறை எல்லாம் இருந்தாலும், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு படிக்க வேண்டும் என்று வருகிறவர்களைப் படிக்க வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா? இவர்களைக் கொல்வது எவ்வளவு பெரிய கொடிய செயல். உன்னால் வழங்கமுடியாவிட்டால் சாதிகளே இல்லை என்கிற சட்டத்தைக் கொண்டுவந்துவிடு. சாதிகள் இல்லை எனக் குரல் கொடுத்துக் கொண்டே ஆட்சி அமைப்பதுதான் முறையாக இருக்கிறதே ஒழிய ஆட்சிக்கு வந்தபிறகு சாதியை ஒழிப்பதற்கு எந்த அரசியல்வாதியாவது முன்வந்திருப்பானா? இந்தச் சாதிக்கு இதைச் செய்தோம். அந்தச் சாதிக்கு அதைச் செய்தோம் என்று ஏழு பக்கம் அறிக்கை விடுகிறபோது, கோரிக்கையை நிறைவேற்றக்கோரி பேரணி நடத்துவதில் தவறு என்ன இருக்க முடியும்? மேல் சாதிக்காரன் உயிருக்கு ஒரு விலை என்றும் கீழ்ச் சாதிக்காரன் உயிருக்கு ஒரு விலை என்றும் இருக்கும் வரை இதுபோன்ற வன்முறைகள் இருந்துகொண்டே இருக்கும் என்பதுதான் வரலாறு. சாதியை ஒழிக்க முன் வருவீர்களா அரசியல்வாதிகளே? ஓட்டுகள் வாங்குவதற்கு உங்களுக்கு இதைவிட்டால் சுலபமான வழி ஏது? ஒழிப்பீர்களா என்ன?


யார் நுழைந்தால் என்ன?


செய்தி-2:




போலீஸ் பாதுகாப்புக்கும் இடையே கடந்த 19-ந்தேதி சபரிமலையில் ஒரு பெண் நுழைந்து சாமி கும்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய கேரள உள்துறை மந்திரி, போலீஸ் டி.ஜி.பி. ராஜீவனுக்கு உத்தரவிட்டார். இதன்படி போலீஸ் துணை சூப்பிரண்டு நாராயண பணிக்கர் கீழ் தனிப்படை அமைக்கபட்டு விசாரணை நடைபெற்றது. இதில் சபரிமலையில் தரிசனம் செய்தது பெண் அல்ல அரவானியே என்று தெரியவந்தது. அரவானியின் பெயர் செல்வி (35). புதுச்சேரியைச் சேர்ந்தவர்.






கேள்விகள்:






கேலிக்களுக்கே பயன்படுத்தி வந்த திருநங்கைகளுக்கு இப்படி அங்கீகாரம் கொடுத்ததற்காகச் சந்தோஷம். அவர்களை அந்தக் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கலாம் என்பதுபோல பேசி வருவது மகிழ்ச்சியே. அதேசமயம் பெண்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்தால் என்ன? சாமி கோபித்துக்கொண்டு ஓடிவிடுவாரா? எல்லாம் முடிகிற சாமியால் பெண் கோயிலுக்குள் நுழைகிறபோதே ஏன் தடுத்து நிறுத்த முடிவதில்லை. தடுக்க முடியவில்லை என்றால் சாமியும் பெண்களுக்கும் தரிசன வாய்ப்பு வழங்குகிறார் என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? பெண் நுழைந்துவிட்டதால் கோயிலின் கற்பு, சாமியின் கற்பு போய்விடுகிறது என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பவர்கள், சாமியைப் போல பெண் வாசனையே இல்லாமல் இருக்க வேண்டியதுதானே? மனைவி மக்களை விட்டு பிரிந்து விடவேண்டியதுதானே? சாமியே இருக்கிறார். நீங்கள் இருப்பதில் என்ன ஆகிவிடப்போகிறது?






2 comments:

cheena (சீனா) said...

பதில்கள் சொல்ல முடியாத கேள்விகள் எழுப்பப் படும் போது மறு மொழி இட யாரும் வர மாட்டார்கள் என்பது தெரிகிறது.

இந்நிலை மாறுமா ?

இருபாலினர் வாழும் வாழ்க்கை நம் நாட்டில் அங்கீரிக்கப் பட வேண்டிய ஒன்று. அவர்கள் படும் துன்பம் சொல்லில் வடிக்க முடியாது. இருபாலினராக இருப்பது அவர்கள் செய்த குற்றமா ??

த.அரவிந்தன் said...

விடைகள் காண்பதற்கே கேள்விகள். விடிவதற்கே இரவு!