Saturday, November 24, 2007

பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம்


பழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம் (செவ்வியல் - சிறுகதை)
அம்புரோஸ் பியர்ஸ்
24-06-1842 முதல் 11-01-1914.
அமெரிக்காவின் ஒஹியோவில் பிறந்தவர். பத்திரிகையாளர், எழுத்தாளர்.

பழைய மரப்பாலத்தின் மீது அவன் நின்றுகொண்டிருந்தான். அது ரயில் பாலமாகவும் இருந்தது. இருபது அடிக்குக் கீழே ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் அவன் பார்வை பதிந்து இருந்தது. அவன் கைகள் பின்புறமாக இறுக்கப்பட்டிருந்தன. சுருக்குக் கயிறு ஒன்று அவன் கழுத்தில் மாட்டப்பட்டிருந்தது. அதன் மற்றொரு முனை அவன் தலைக்கு மேலிருந்த ஒரு பருமனான குறுக்குக் கட்டையில் கட்டியிருந்தது. ரயில் பாதையின் தண்டவாள கட்டைகளுக்கு இடையே பலகைகளைப் போட்டுக்கொண்டு அதன் மீது அவனும் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடிய கொலைக்காரர்களும் நின்றிருந்தனர். கொலைக்காரர்கள் இராணுவத்தைச் சேர்ந்த இரு சிப்பாய்கள். ஒரு சார்ஜெண்ட் அவர்களுக்கு உத்திரவு கொடுத்துக் கொண்டிருந்தான். சிறிது தூரத்திற்கு அப்பால் ஒரு இராணுவ மேலதிகாரி ஆயுதங்களுடன் நின்றிருந்தான். பாலத்தின் இருமுனைகளிலும் இரு காவற்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர். பாலத்தின் நடுவில் என்ன நடக்கிறது என்பதை அறிவது இவர்களுடைய கடமையாகத் தோன்றவில்லை. ரயில் பாதையில் ஓரத்தில் உள்ள நடைபாதை வழியே பாலத்தில் யாரும் நுழைந்துவிடாமல், பார்த்துக் கொள்வது ஒன்றுதான் அவர்கள் வேலை.ஒரு காவற்காரனுக்கு அப்பால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருவரும் தென்படவில்லை. இரயில் பாதை நீண்டு சென்று காட்டிற்குள் வளைந்து மறைந்து விடுகிறது. சிறிது தூரத்திற்கு அப்பால் ஒரு இராணுவ சோதனைச் சாவடி இருந்தது. ஆற்றின் மறுகரை திறந்தவெளி. கரையின் மீது ஒரு பீரங்கி நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கும் பாலத்திற்கும் மத்தியில் பார்வையாளர்களாகச் சில சிப்பாய்கள் வரிசையாக நின்றிருந்தனர். அந்த வரிசையின் வலது மூலையில் இன்னொரு இராணுவ அதிகாரி வாளின் முனையைப் பூமியில் குத்தி நிறுத்தி அதன் பிடியின் மீது இருகைகளையும் வைத்திருந்தான். பாலத்தின் மத்தியிலிருந்த நால்வரைத் தவிர மற்றவர்கள் அசையவே இல்லை. அவர்கள் அனைவரும் பாலத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆற்றின் இருகரைகளையும் நோக்கிக் கொண்டிருந்த காவற்காரர்கள் பாலத்தையொட்டி அமைக்கப்பட்ட சிலைகளோ என்பதுபோலத் தோற்றம் அளித்தனர். இராணுவ மேலதிகாரி தன் கீழ் அதிகாரிகள் வேலை செய்வதை மவுனமாகப் பார்த்துக்கொண்டு கைகட்டி நின்றிருந்தான். மரணம் என்பது இயற்கையின் ஒரு பெரிய சக்தி. அது முன்னறிவிப்புடன் வரும்பொழுது, அதனுடன் அதிகமாகப் பழகிறவர்கள்கூட அதைச் சகல மரியாதைகளுடனும் வரவேற்கத்தான் வேண்டும். இராணுவத்தின் மரபுகளின்படி மவுனமும் அசையாமல் இருத்தலும் மரியாதைகளின் அடையாளங்கள்.தூக்கிலிடப்படவிருந்த அந்த மனிதனுக்கு வயது சுமார் முப்பத்தைந்து இருக்கலாம். அவன் இராணுவத்தைச் சேர்ந்தவன் அல்ல. அவன் உடையைப் பார்த்தால் தேயிலை, புகையிலை அல்லது காப்பித் தோட்டத்தின் சொந்தக்காரன்போல் தென்பட்டான். அழகான வாளிப்பான முகம். நீண்ட மூக்கு. உறுதியான உதடுகள். விசாலமான நெற்றி. கருத்து நீண்ட அவன் தலைமயிர் பின்புறமாகவே வாரிவிடப்பட்டு கழுத்துவரை தொங்கியது. மீசையும் கத்தரித்துவிடப்பட்ட தாடியும் வைத்திருந்தான். அகன்ற கருத்த சாம்பல் நிறக் கண்கள். தூக்கில் தொங்கப்போகும் ஒருவன் முகத்தில் அத்தனை கருணை ததும்பும் கண்கள் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கமுடியாது. எத்தகைய மனிதர்களையும் தூக்கில்விட இராணுவச் சட்டத்தில் இடமிருக்கிறதல்லவா? பெரும் செல்வந்தர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?முன் தயாரிப்புகள் அனைத்தும் நிறைவேறி விட்டன. இரு சிப்பாய்களும் விலகி தாங்கள் நின்றிருந்த பலகையை இழுத்துவிட்டனர். வாளில் கை தாங்கி நின்றிருந்த அதிகாரி மேலதிகாரி பக்கம் திரும்பி, விறைத்து ததும்பும் சல்யூட் அடித்துவிட்டு அவனுக்குப் பின்னால் போய் நின்றான். அந்த இராணுவ மேலதிகாரி கேப்டனாக இருக்கக்கூடும். அந்தக் கேப்டன் பலகையை விட்டு ஓரடி நகர்ந்தான். இவ்விதம் நகர்ந்ததால் தூக்கிலிடயிருந்தவனும் இன்னொரு அதிகாரியும் ஒரே பலகையின் இருமுனைகளில் நின்றிருந்தனர். அருகே நின்றிருக்கும் இன்னொரு அதிகாரி சார்ஜெண்டாக இருக்கலாம். முதலில் கேப்டனின் கனத்தினால்தான் பலகை நின்றிருந்தது. இப்போது இந்த சார்ஜெண்டின் கனம் அதை விழாமல் வைத்திருந்தது. கேப்டன் கையசைத்த உடன் சார்ஜெண்ட் தன் இடத்திலிருந்து நகர்வான். பலகை ஆற்றில் விழும். அதன் மறுமுனையில் நின்றிருக்கும் கைதி பாலத்தின் கீழே தூக்குக்கயிற்றில் தொங்குவான். இந்த ஏற்பாடு மிகவும் சுலபமாகவும் திருப்திகரமாகவும் அவனுக்குத் தோன்றியது. கைதியின் முகத்தை மூடவோ கண்களைக் கட்டவோ இல்லை. கைதி கீழே சிறு சுழல்களுடன் சுழித்துச் சுழன்று, சிறு அலைகளுடன் கொந்தளித்து ஓடும் ஆற்று நீரில் மிதந்து சுழித்து குதித்துப் போன ஒரு சிறு கட்டையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அது அவன் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அவன் பார்வை அதைத் தொடர்ந்தே சென்றுகொண்டிருந்தது. ஏதோ மொத்த வாழ்க்கை அதில்தான் இருக்கிறது என்பதுபோல பார்த்திருந்தான்.அதன் வாழ்க்கையின் அந்தக் கடைசிக் கணத்தில் தன் மனைவியையும் குழந்தைகளையும் பற்றி நினைத்துப் பார்க்க விரும்பினான் போலிருக்கிறது. அதற்காகவே கண்களை மூடிக்கொண்டான். காலையில் வெய்யிலில் உருக்கிய வெள்ளிப் பாளம் போல மின்னிக்கொண்டிருக்கும் ஆற்று நீர், சற்றே தள்ளி கரையெங்கும் அமைதியாக மூடிக்கொண்டிருந்த பனி, அருகே நின்றிருக்கும் சிப்பாய்கள். நீரில் மிதந்து கொண்டு போன கட்டை எல்லாம் அவன் கவனத்தை பல்வேறு புறமும் அலைக்கழித்தன. இப்பொழுது மற்றொரு புதிய விஷயம் அவன் கவனத்தை ஈர்த்தது. தன்னுடைய எண்ணங்களுக்கு மத்தியில் உலைக்களத்தில் சம்மட்டியால் அடிப்பது போன்ற ஓங்கிய பேரொலி அவனுக்குக் கேட்டது. அது என்ன ஓசையாக இருக்கும் என்று யோசித்தான். தூரத்திலிருந்து கேட்கிறதா, அருகாமையிலிருந்து கேட்கிறதா என்று கவனித்தான். இரண்டு இடத்திலிருந்தும் கேட்பதுபோல்தான் அவனுக்குத் தோன்றியது. நிதானமாக விட்டுவிட்டுக் கேட்ட அந்த ஒலி சர்வநிச்சயமாக சாவுமணி அடிப்பதுபோல இருந்தது. ஒவ்வொரு அடியையும் அவன் பொறுமையிழந்து, சந்தேகத்துடன் கவனித்தான். இது ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. ஒரு அடிக்கும் மற்றொரு அடிக்கும் மெüனத்தின் கனம் தாங்க முடியாதபடி கனத்தது. அந்த மெüனம் அவனை உன்மத்தம் பிடிக்க வைத்துவிடும் போலிருந்தது. அந்த ஒலியின் இடைவேளை அதிகரித்துடன் அதன் பலமும் அதிகமாயிற்று. கூச்சலிட்டு விடுவானோ என்று அவனுக்கே பயமாக இருந்தது. அவன் கேட்டது அவனுடைய கடிகாரத்தின் டிக்...டிக் ஓசைதான்!அவன் மறுபடியும் கண்ணைத் திறந்து தண்ணீரைப் பார்த்தான். "" என் கைகளை விடுவித்துக்கொண்டு, தூக்குக் கயிற்றைக் தூக்கி எறிந்துவிட்டு ஆற்றில் குதித்து விட்டால்! வேகமாக நீந்தி, தூப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தப்பிக் கரையேறி, காட்டில் மறைந்து வீடு போய்ச் சேர்ந்துவிடலாம்! கடவுள் அருளால் என் வீடு இவர்களுடைய எல்லைக்கு வெளியில்தான் இருக்கிறது. நல்ல வேளையாக என் மனைவியும் குழந்தைகளும் இந்தக் கொடூரர்களிடமிருந்து வெகு தூரத்தில்தான் இருக்கின்றனர்'' என்று ஓடியது அவன் சிந்தனை. அவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்கையில் கேப்டன் தலையசைத்தான். சார்ஜெண்ட் தான் நின்ற இடத்திலிருந்து விலகினான்.பார்க்கர் ஒரு பணக்கார தோட்ட முதலாளி. அந்த நகரத்தில் உள்ள ஒரு கெüரவமான, பாரம்பரியமான குடும்பத்தைச் சார்ந்தவன். அவனிடம் நிறைய அடிமைகள் வேலை செய்தனர். அதன் தென்பகுதிக்காரர்களை ஆதரிப்பவன். சிறுசிறு தடைகளால் அவனால் இராணுவத்தில் சேர முடியவில்லை. ராணுவத்தில் பணி செய்து பெருமையடைய வேண்டுமென்று அவன் மனம் பெரிதும் விரும்பியது. பெருமையடைவதற்கான வாய்ப்பு யுத்த காலங்களில் மற்றவர்களுக்கு வருவதுபோல் தனக்கும் வருமென்று எதிர்பார்த்தான். இதற்கிடையில் தன்னால் முடிந்ததை மட்டும் அவன் செய்து வந்தான். தென்பகுதிக்காரர்களுக்காக தான் செய்யக்கூடிய எந்தச் சேவையையும் அவன் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த அபாயத்தையும் பெரியதாக நினைக்கவில்லை. ""காதலிலும் போரிலும் எல்லாம் நியாயமே'' என்ற கோட்பாட்டில் அதிகம் நம்பிக்கை உள்ளவன் அவன்.ஒரு நாள் பார்க்கரும் அவன் மனைவியும் வீட்டிலிருந்து தோட்டத்திற்குப் போகும் வழியில்தான் சாய்விருக்கையில் அமர்ந்திருக்கையில் காக்கி உடையணிந்த ஒரு சிப்பாய் வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டான். அவன் மனைவி தண்ணீர் கொண்டு வருவதற்கு மகிழ்ச்சியுடன் எழுந்து சென்றாள். போர்முனைச் செய்திகள் பற்றி சிப்பாயிடம் பார்க்கர் விசாரித்தான்.""ரயில்பாதைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு தாக்குதலுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒüல்கிரீக் என்னும் நம்மருகேயிருக்கும் பாலத்திற்கு அருகில் வந்துவிட்டார்கள். அதன் மறுகரையில் ஒரு தளம் அமைத்து தடுக்கின்றனர். ரயில்பாதைகள், பாலங்கள், ரயில்கள் இவற்றை ராணுவத்தைச் சேராத யாராவது தொட்டால் உடனே தூக்கிலடப்படுவார்களென ராணுவத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவை எல்லா இடங்களிலும் ஒட்டியிருக்கிறார்களே நீங்கள் பார்க்கவில்லையா?'' என்றான் அந்தச் சிப்பாய்.""அந்தப் பாலம் இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்?'' என்று கேட்டான் பார்க்கர். ""சுமார் நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும்.""""ஆற்றின் இந்தப் பக்கம் இராணுவம் முகாமிட்டிருக்கிறதா?''""பாலத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு காவல் சாவடிதான் இருக்கிறது. பாலத்தின் முனையில் ஒரு காவற்காரன் மட்டும் நின்றிருக்கிறான்.""""இராணுவத்தில் சேராத ஒரு சாதாரணக் குடிமகன் அந்த இராணுவச் சாவடியை ஏமாற்றிவிட்டுப் பாலத்தின் அருகே சென்று அந்தக் காவற்காரனையும் முறியடித்து விட்டால் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டான் பார்க்கர்.சிப்பாய் சிறிது யோசித்துவிட்டு, ""நான் ஒரு மாதத்திற்கு முன் அங்கு போயிருந்தேன். முன்பு வந்த வெள்ளத்தில் ஏராளமான கட்டைகள் வந்து பாலத்தின் ஒரு கோடியில் அடைத்துக்கொண்டிருந்தன. அவை இப்பொழுது நன்றாகக் காய்ந்திருக்கும். வெறுமனே ஒரு தீக்கங்கு அல்லது தீயின் ஒரு சிறு பொறிபட்டால்கூடப் போதும் அனைத்தும் பற்றிக்கொள்ளும்"" என்று பதிலளித்தான்.இதற்குள் பார்க்கரின் மனைவி தண்ணீர் கொண்டு வந்து விட்டாள். சிப்பாய் அதை வாங்கிக் குடித்துவிட்டு, அவளுக்கு வழக்கமான முறையில் நன்றி தெரிவித்தான். அவளுடைய கணவனுக்கும் தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத் தன் குதிரை மீது ஏறிக்கொண்டு போய்விட்டான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மொத்தமாக அனைத்துச் சூழலும் இருட்டிய பின் அவன் வந்த திசையிலேயே திரும்பி வடக்கே சென்றுகொண்டிருந்தான். அவன் ஒரு இராணுவ உளவாளி.பலகை கீழே விழுந்தவுடன் பார்க்கர் தூக்குக் கயிற்றில் தொங்கினான். ஏறக்குறைய முன்பே அவனுக்கு நினைவு தவறிவிட்டிருக்கும். அவன் இறந்து விட்டவன் போலவே காணப்பட்டான். இந்த நிலையிலிருந்து அவனுக்கு எத்தனையோ காலத்திற்குப் பின் அவன் சடாரென நினைவு பெற்றதுபோல் தோன்றியது. கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த கயிற்றின் வலியும், மூச்சு அடைப்பும் ஒரு கணத்தை யுகமாகத் தோன்றும்படியாகப் பொழுதை நகர்த்திக் கொண்டிருந்தன. கொடிய வலி அவன் கழுத்தில் ஆரம்பித்து உடலின் ஒவ்வொரு நரம்பிலும் பாய்ந்தது. அந்த வலி வடிவமைத்த பாதைகள் வழியே மனம் தொடர்ந்து ஓடுவதுபோன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. ரத்தக்குழாய்களுக்குள் எரிமலைக் குழம்பு தொடர்ந்து பாய்ந்தோடுவது போல் இருந்தது அது. அவன் உடலில் சகிக்க முடியாத அளவுக்குச் சூடேறுவது போல் உணர்ந்தான். தலைக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்ச்சி. அவன் சிந்தனைக்கும் இந்த உணர்ச்சிகளுக்கும் எந்த தொடர்புமில்லை. அவன் அறிவு ஏற்கனவே மழுங்கடிக்கப்பட்டுவிட்டது போலிருந்தது. அவனுக்கு வெறும் உடல் உணர்வுகள்தான் இப்போது இருந்தது. அந்த உணர்வு அவனைச் சித்திரவதை செய்தது போலிருந்தது. அதிக வெளிச்ச வெள்ளமான மேகங்களுக்கிடையே நெருப்பினாலாக்கப்பட்ட ஒரு பந்துபோல் வெப்பமாகவும் பிரம்மாண்டமான கடிகாரத்தின் ஊசல்போல் தன்னுடல் ஊசலாடுவதாக அவன் உணர்ந்தான். திடீரென்று அவனைச் சுற்றியிருந்த ஒளி கடுமையான முறையில் மேல் நோக்கிப் பாய்ந்தது. காதில் ஒரு பெரும் சப்தம் கேட்டது. திடீரென்று வெப்பமும் ஒளியும் மறைந்து அவனைச் சுற்றிக் குளிரும் இருளும் படர்ந்திருந்தன. அனைத்தைக் குறித்தும் யோசிக்கும் திறன் அவனுக்குத் திரும்பவும் வந்தது. தூக்குக்கயிறு அறுந்து தண்ணீரில் வீழ்ந்துவிட்டதை அதன் பின்னாகவே அவன் உணர்ந்தான். கழுத்தில் இருந்த சுருக்குக் கயிறு மேற்கொண்டு அதிகமாக அழுத்தவில்லை. அது ஏற்கனவே நன்றாக அழுத்தி, நுரையீரல்களுக்குள் தண்ணீர் புகாமல் தடுத்தது. ஆற்றிற்கடியில் தூக்கிட்டுக்கொண்டு சாவதா? இந்த எண்ணம் அவனுக்கு அபத்தமாகத் தோன்றியது. கண்ணைத் திறந்தான். மேலே ஒளிக்கீற்று தெரிந்தது. ஆனால் அது மிக அதிக உயரத்தில், அவனுக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. அவன் மேலும்மேலும் மிகமிக அதிக ஆழத்தில், இன்னும் ஆழத்தில் மூழ்கிக்கொண்டே போனான். ஒளி மேன்மேலும் மங்கிக்கொண்டே போயிற்று. என்ன நிகழந்ததென்றே தெரியவில்லை. தான் நீர்மட்டத்திற்கு ஒட்டி வருவதாகவே நினைத்தான். இப்பொழுது அவனுக்குச் சுதந்திரமாக இருப்பது போலத் தோன்றியது. தூக்கிலிடப்பட்டு நீரில் மூழ்குவது அவ்வளவு மோசமான அனுபவமாக அவனுக்குத் தோன்றவில்லை. ""அவர்கள் என்னைச் சுடக்கூடாது. சுடப்படுவதை நான் விரும்பவில்லை. அது ஒருபோதும் நியாயமில்லை"" என்று நினைத்தான்.நான் எவ்வித முயற்சியும் செய்ததாக அவனுக்குத் தோன்றவில்லை. மணிக்கட்டில் மிகக் கடுமையாக வலி ஏற்பட்டது. அதனால் கட்டப்பட்டிருந்த தனது கையை விடுவித்துக்கொள்ள முயற்சித்தான். தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத விஷயம்போல் அதைக் கவனித்தான். என்ன ஆச்சரியம்! அந்தக் கயிறு தளர்ந்து வீழ்ந்துவிட்டது. கைகள் விடுபட்டு மேலே மிதந்தன. அதிகரித்து வரும் ஒளியில் இரு பக்கங்களிலும் கைகள் தெரிந்தன. அவை சுருக்குக் கயிற்றைத் தளர்த்தி எடுத்துத் தூர வீசி எறிந்தன. "" அந்தக் கயிற்றை மறுபடியும் கட்டிவிடு, கட்டிவிடு"" என்று தனக்குத் தானே மறுபடி மறுபடியும் உள்ளுக்குள் கூவுவதுபோல் அவனுக்குத் தோன்றியது. அதுவரை அவன் அனுபவிக்காத பெரும் வேதனை அந்தக் கயிற்றை எடுத்ததால் ஏற்பட்டது. கழுத்து வலி தாங்கமுடியவில்லை. மூளை தீயில் விழுந்ததுபோல் எரிந்து நொந்தது. மெதுவாக அடித்துக்கொண்டிருந்த இதயம் குதித்துத் துடித்துத் ததும்பியது. வாய்வழியாக அது வெளியே வந்துவிடுமோ என்று கூட தோன்றியது. ஆனால் அவன் கைகள் அவன் சொன்னபடி கேட்கவில்லை. அவை தண்ணீரைக் கீழ் நோக்கித் தள்ளி அவனை மேலே கொண்டு வந்தன. சூரியனின் தகிக்கும் வெளிச்சத்தில் கண் குருடாகிவிடும் போல் கூசியது. அவன் மார்பு விரிந்து பெரும் அளவு காற்றை உள்ளுக்கு இழுத்தது. உடனே அவன் மிகப் பெரும் கூச்சலின் மூலம் அதை வெளியே தள்ளிவிட்டான்.இப்பொழுது அவனுக்கு உடல் உணர்வுகள் எல்லாம் வந்துவிட்டன. அந்த உணர்வுகள் மிகவும் கூர்மையாக இருந்தன. இதற்கு முன் உணராதவற்றையெல்லாம் உணர்ந்தான். அவன் முகத்தின் மீது வந்து பட்ட சிற்றலைகளின் ஓசைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே அவனுக்குக் கேட்டன. ஆற்றங்கரையில் இருந்த காட்டைப் பார்த்தான். அதிலிருந்த ஒவ்வொரு மரமும், இலையும் இலையில் ஓடிய ஒவ்வொரு நரம்பும் தெளிவாகத் தெரிந்தன. அவற்றில் உட்கார்ந்திருந்த பூச்சிகளையும், ஈக்களையும், கிளைக்குக் கிளை கூட்டை அகலமாக விரித்துக் கட்டியிருந்த சிலந்திகளையும் கண்டான். பல்வேறு விதமாக காற்றின் அலைவரிசைகளுக்கேற்ப அசைந்தாடிக்கொண்டிருக்கும் புற்களின் நுனிகளில் இருந்த பனித்துளிகளின் வண்ண இசைவுகளெல்லாம் அவனுக்குத் தெரிந்தன. பூச்சிகளின் சப்தங்களெல்லாம் சங்கீதம்போல் அவனுக்குக் கேட்டன. அவன் கண்ணுக்குக் கீழே ஒரு மீன் பாய்ந்து சென்றது. அது தண்ணீரைப் பிளந்துகொண்டு செல்லும் சப்தம்கூட அவனுக்கு நன்றாகக் கேட்டது.தண்ணீரின் மேல்பரப்புக்கு வந்துவிட்டான். உலகம் தன்னைச் சுற்றி மட்டுமே சுழல்வதுபோல் தோன்றியது. பாலமும் , அதன் மீது சிப்பாய்களும், பீரங்கித் தளமும், காப்டனும் சார்ஜெண்டும் அவனுடைய இரு கொலையாளிகளும் தென்பட்டனர். அவர்கள் நீலவானின் பகைப்புலனில் நிழல் உருவங்களாகத் தெரிந்தனர். அவர்கள் அவனைச் சுட்டிக்காட்டி ஏதோ கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். காப்டன் துப்பாக்கியைக் கையில் எடுத்துவிட்டான். ஆனால் சுடவில்லை. மற்றவர்களிடம் ஆயுதங்கள் இல்லை. அவர்களுடைய ஆட்டங்கள் கோரமாகவும் கோமாளித்தனமாகவும் இருந்தன. அவர்களுடைய உருவங்கள் பிரம்மாண்டமாக இருந்தன.திடீரென்று வேட்டுச் சப்தம் கேட்டது. ஏதோ வந்து அவன் தலைக்கு மிகவும் அருகாமையில் தண்ணீரில் தாக்கியது. அதனால் எழுந்த நீர்த்துளிகள் அவன் முகத்தில் தெறித்தன. மற்றொரு வெடியொலியும் கேட்டது. காவற்காரர்களில் ஒருவனின் துப்பாக்கியிலிருந்து மெல்லிய நீலப்புகை போய்க் கொண்டிருந்ததைக் கண்டான். அவன் கண் சாம்பல் நிறமாக இருந்தது. அது தன் கண்ணையே உற்றுநோக்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். சாம்பல் நிறக் கண் உள்ளவர்கள் குறி பார்ப்பதில் நிபுணர்கள் என்று அவன் எப்பொழுதோ படித்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் இந்தக் குண்டு குறி தவறிவிட்டது.வெள்ளத்தின் சுழல் பார்க்கரைத் திருப்பிவிட்டது. மறுபடியும் ஆற்றங்கரையில் இருந்த காடு தெரிந்தது. பின்னாலிருந்து ஒருபெருங்கூக்குரல் ஒலித்தது. மற்றெல்லா சப்தங்களும் அதில் மறைந்துவிட்டன. சிற்றலைகள் தன் காதின் மீது வந்ததால் ஏற்பட்ட சப்தம்கூட கேட்கவில்லை. கரையில் இருந்த லெப்டினெண்ட் குறி பார்த்துச் சுடச் சொல்லி சிப்பாய்களுக்கு ஆரவாரத்துடன் உத்தரவிட்டான். பார்க்கர் தண்ணீருக்குள் மூழ்கினான். தண்ணீருக்குள் எவ்வளவு ஆழத்திற்குப் போக முடியுமோ அவ்வளவு ஆழத்திற்குப் போனான். தண்ணீர் பெரும் அருவியின் இரைச்சல் போல் காதில் ஒலித்தது. இருந்தாலும் துப்பாக்கி சுடும் சப்தமும் கூடுதலாகக் கேட்டது. மறுபடியும் தண்ணீரின் மேல்மட்டத்திற்கு வந்தான். தோட்டாக்கள் ஒளி வீசிக் கொண்டு தன்னை நோக்கிப் பாய்ந்து வருவது தெரிந்தது. அவை அவன் கழுத்தில் பாய்ந்தது. அதன் சூடு வேதனையூட்டியது. அதைப் பிய்த்து எறிந்தான்.மூச்சுத்திணற நீர்மட்டத்திற்கு மேலே வந்தான். வெள்ளம் தன்னை வெகு தூரம் அடித்துக்கொண்டு வந்துவிட்டிருந்தது தெரிந்தது. தண்ணீருக்கடியில் தான் வெகு நேரம் இருந்துவிட்டதை உணர்ந்தான். இப்பொழுது அபாயம் குறைந்திருந்தது! சிப்பாய்கள் துப்பாக்கியில் மறுபடியும் தோட்டாவை அடைத்துவிட்டனர். பாலத்தின் மீது காவல் இருந்தவர்கள் அனிச்சையாகச் சுட்டனர். ஆனால் அவர்களுடைய குண்டுகள் அவனைத் தாக்கவில்லை. ஒருபோதும் அவனுடலைத் தீண்டவுமில்லை.""அதிகாரி மறுபடியும் அந்தத் தவறைச் செய்யமாட்டான். இஷ்டப்படிச் சுடச் சொல்லி சிப்பாய்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டிருப்பான். இப்பொழுது அந்தக் குண்டுகளிலிருந்து தப்புவது கஷ்டம். தன்னைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்"" என்பதுபோல ஏதேதோ நினைத்தான்.அவனுக்கு மிக அருகில் பெரியதாக ஏதோ ஒன்று வந்து தண்ணீரைத் தாக்கியது. ஒரு பிரம்மாண்ட வெடிச்சப்தம் கேட்டது. அந்த ஒலியால் ஆற்றுத் தண்ணீர் அடிப்பாகம் வரை நடுங்கியது. அந்தப் பொருள் வீழ்ந்த இடத்திலிருந்து தெறித்த தண்ணீர்த் தகடு அவன் கண்ணை மறைத்தது. தன்னைக் கொல்வதில் பீரங்கியும் பங்குக்கொள்ள தொடங்கியருந்ததை அவன் அறிந்தான். துப்பாக்கிகளால் சுடும் சத்தமும் கேட்டது. தோட்டாக்கள் தலைக்கு மேல் பறந்துசென்று காட்டுமரங்களைத் தாக்கின.உடனடியாக அவன் பம்பரம்போல் சுழலத் தொடங்கினான். அனைத்துப் பொருள்களும் அதி வேகமாக அவனைச் சுற்றி சுழன்றன. அவற்றின் உருவமே தெரியவில்லை. வண்ணம் மட்டுமே தெரிந்தது. காடு, தூரத்தில் பாலம், பாலத்தின் மீது இருந்த மனிதர்கள், பீரங்கி மேடை எல்லாம் சுற்றிச் சுழன்றன. அவன் ஒரு நீர்ச்சுழலில் சிக்கிக்கொண்டுவிட்டான். அவனுக்குத் தலை சுற்றியது. மயக்கமாக இருந்தது. சில விநாடிகளில் வெள்ளம் அவனைத் தென்கரையில் ஒதுக்கியது. பின்னாலிருந்து ஒரு மேடு அவனை கொலையாளிகளின் பார்வையிலிருந்து மறைத்தது. அவன் சுற்றுவது நின்றுவிட்டது. அவன் ஒரு கை மணல் மேட்டில் பட்டதால் அவனுக்கு நினைவு வந்துவிட்டதுபோல் இருந்தது. அவன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். மணலை வாழ்த்தினான். அதை கை நிறைய வாரி தன் மீதே போட்டுக்கொண்டான். அந்தக் கரையோர வெற்று மணல் தங்கமாகவும் வைரமாகவும் நவரத்தினமாகவும் தோன்றியது. அந்த மணலைவிட அழகான பொருள் ஒன்றுமே உலகத்தில் இருந்ததாக அவனுக்குத் தெரியவில்லை. காட்டுமரங்கள் ஒரு அதி அற்புதமான தோட்டத்தின் செடிகள் போல் தோன்றின. அவற்றிற்குள் ஓர் ஒழுங்கு இருப்பதைக் கண்டான். அவற்றின் மலர்களிலிருந்து வந்த மணத்தை முகர்ந்தான். மரங்களின் மீது மிருதுவான ஒளி படர்ந்திருந்தது. அவற்றின் கிளைகளில் உராய்ந்து சென்ற காற்று, இனிய சங்கீதம்போல் ஒலித்தது. தப்பி ஓடவேண்டும் என்ற எண்ணம் கூட போய்விட்டது. அந்த ஆனந்தமான இடத்திலே கூட இருக்கலாம் என்று தோன்றியது. மரங்களில் பாய்ந்த தோட்டாக்களின் சத்தம் அவனைக் கனவில் எழுப்பியது. பீரங்கிக்காரன் கடைசி முயற்சியாக, ""திராட்சைக் குண்டுகளை"' பயன்படுத்தியிருந்திருக்கக் கூடும். அவன் அவற்றிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றி குதித்தெழுந்து, சரிவான ஆற்றங்கரை மீதேறி காட்டிற்குள் ஓடி மறைந்தான்.அன்றெல்லாம் வழிநடந்தான். காட்டிற்குள் ஒரு முடிவே இல்லை. எங்கும் ஒரு ஒற்றையடி பாதைக்கூட தென்படவில்லை. அவ்வளவு அடர்ந்த காட்டிற்கிடையில் மட்டுமேதான் இவ்வளவு காலம்தான் வாழ்ந்தது என்பதுகூடத் தெரியாது.சூரியன் மறைவதற்கு அவன் களைத்துப் போய்விட்டான். கால் வலித்தது. மனைவி குழந்தைகளின் ஞாபகம் அவனை இழுத்தது. கடைசியில் ஒரு பாதையைக் கண்டுபிடித்தான். அது சரியான திசையில் போவதாகத் தோன்றியது. நகரத் தெருக்களைப் போல் அது அகன்றும் விரிந்தும் இருந்தது. ஆனால் ஆள் அரவமே இல்லாத பாதை போலும் அவனுக்குத் தோன்றியது. அதன் பக்கத்தில் ஒருபோதும் நிலங்கள் இல்லை. அருகாமையில் வீடுகளே தென்படவில்லை. இருபக்கங்களிலும் உயர்ந்து வளர்ந்த மரங்கள் சுவர் வைத்ததுபோல் இருந்தன. அவற்றின் தொடர்வரிசை அடிவானம் வரை சென்று மறைந்தது. மேலே நிமிர்ந்து பார்த்தான். மிக ப்பெரிய விண்மீன்கள் ஏதொரு ஒழுங்குமின்றி அணிவகுத்து ஒலி வீசிக்கொண்டிருந்தன. ஆனால் அவற்றிற்குள் இனம்புரியாத ஓர் ஒழுங்கு இருப்பதுபோலத்தான் தோன்றியது. இருபுறத்திலும் உள்ள காடுகளிலிருந்து இனம்தெரியாத சப்தம் வந்துகொண்டிருந்தது. அந்தச் சத்தங்களினூடே யாரோ புரியாத மொழியில் பேசும் குசுகுசுப்பும் அனைத்தையும் மீறி அவனுக்குக் கேட்டது.இந்த வேதனைகளையும் மீறி நடந்துகொண்டிருக்கும்போதே அவன் தூங்கிவிட்டான். சந்தேகமே இல்லை தூங்கத்தான் தூங்கிவிட்டான். இப்பொழுது மற்றொரு காட்சியைக் கண்டான். தன் வீட்டுவாசலில் அவன் நிற்கிறான். தான் வீட்டிலிருந்து புறப்பட்டபொழுது இருந்ததுபோலவே எல்லாம் இருக்கின்றன. இரவெல்லாம் அவன் நடந்திருக்க வேண்டும். தன் அவன் வீட்டின் வெளிவாசலைக் கடந்து தோட்டத்துப் பாதை வழியே செல்லும்போது ஒரு பெண் அணிந்திருக்கும் ஆடைகளின் மெல்லொலி கேட்கிறது. அவன் மனைவி தாழ்வாரத்திலிருந்து மெதுவாகவும், அழகாவும் இறங்கி அவனை வரவேற்க வருகிறாள். அவள் கடைசி படிக்கு வந்து ஆனந்தமான புன்முறுவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறாள். இணையற்ற ஒயிலுடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறாள். எவ்வளவு அற்புத அழகுடன் அவள் இருக்கிறாள். இரு கைகளையும் நீட்டிக் கொண்டு தாவுகிறான். அவளைத் தழுவப் போகும் சமயத்தில் பின் கழுத்தில் பலத்த அடி ஒன்று விழுகிறது. கண்ணைக் குருடாக்கும் வெள்ளை ஒலி ஒன்று தன்னைச் சுற்றி பரவுகிறது. பீரங்கியின் முழக்கம்போன்ற ஒரு பிரம்மாண்ட சத்தம். பிறகு ஒரே இருள். ஒரே நிசப்தம்.பார்க்கரின் உயிர் போய்விட்டது. தொங்கிய தலையுடன் அவன் உடல் அந்தப் பழைய பாலத்திற்கு கீழே மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது.


மொழிபெயர்ப்பு: துரைபாண்டி.

4 comments:

Unknown said...

excellant

Unknown said...

nanru.

cheena (சீனா) said...

பத்தி பிரித்து எழுதி இருந்தால் படிப்பதற்கு சுகமாக இருந்திருக்கும். மிகச் சிரமத்துடன் இவ்வளவு பெரிய பகுதியைப் படித்து மறு மொழி இட முடியவில்லை. தூக்கிலிடப்படுவதில் இவ்வளவு ஏறபாடுகளா ? மரணத்திற்கு மரியாதை தரக்கூடியது இராணுவத்திலும் காவல் துறையிலும் தான்.

த.அரவிந்தன் said...

சிரமப்படுத்தியற்காக வருந்துகிறேன்.