Monday, November 26, 2007

பகை வளர்ப்பதை விடுவாரா விஜய்?

பகை வளர்ப்பதை விடுவாரா விஜய்?






தேநீர் செய்திகள்?
தேள் கடி பதில்கள்!
(27.11.2007)




செய்தி-1 :

தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும் பசுமை தாயகம் அமைப்பும், "தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு "
என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதார மந்திரி அன்புமணி கலந்துகொண்டு பேசினார். "சினிமாவில் குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். எங்கள்
போராட்டத்துக்குப் பிறகு, ரஜினிகாந்த் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதேபோல் நடிகர் விஜய்யும்
சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும்'' என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மத்திய மந்திரி அன்புமணியின் இந்தக் கோரிக்கையை, நடிகர் விஜய் ஏற்றுக்கொண்டு அளித்த பேட்டி : "மத்திய மந்திரி அன்புமணியின் கருத்தை நான் வரவேற்கிறேன். புகைப்பழக்கத்திற்கு எதிரான அவருடைய போராட்டம்
ஆரோக்கியமான விஷயம்தான். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில்
நடிக்கமாட்டேன். நான் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அழகிய தமிழ்மகன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தேன்.
அதில், ஒரு வேடம் கெட்டவன், அவன் கெட்டவன் என்பதைக் காட்டவதற்காகவே, சிகரெட் பிடிப்பதுபோன்ற காட்சியை இயக்குநர்
வைத்திருந்தார். படத்தின் இறுதியில், அவன் திருந்துவதைக் காட்டுவதற்காக, சிகரெட்டைத் தூக்கி எறிவதுபோல்தான் காட்சி
அமைக்கப்பட்டு இருந்தது. இனிமேல், அதுபோன்ற காட்சிகளைக்கூட தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

கேள்வி :

வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தால்தான் திருமணத்திற்கு எல்லோரும் வருவார்கள். அதைப்போல் புகைப்பிடிப்பதுபோல்
நடிப்பதை விடவேண்டாம் என்று தன்னையும் தனிப்பட்ட முறையில் சொல்லியிருந்தால் எப்போதே விட்டிருப்பேன் என்பதுபோல்
இருக்கிறது, இனிமேல் சிகரெட் பிடிப்பதுபோல் நடிக்கமாட்டேன் என்று விஜய் கூறியிருப்பது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகப்
பொறுப்பேற்றதிலிருந்து அன்புமணி புகைப்பிடிப்பதற்கு எதிராகப் பேசி வருகிறார். போராடி வருகிறார். இப்போது
தனிப்பட்டமுறையில் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்ததும் மாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்காக இதைக் குறைத்தும்
சொல்லமுடியாது. ஆரோக்கியமான விஷயம் எப்போது, எந்த வகையில் ஏற்பட்டாலும் சந்தோஷமே. மூன்று ரூபாய் சிகரெட்டைத்
தூக்கிப் போடு என்றதும் தூக்கிப்போட்டுவிட்ட விஜய், இன்னும் தூக்கிப் போடவேண்டிய சில விஷயங்கள் : ஏய்... ஓய்... என்று காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டு சுயபுகழ்ச்சி வசனங்கள் பேசுவது. அரிவாள் கலாச்சாரத்தைப் பரப்புவது. பகைமை உணர்ச்சி பாராட்டி நடிப்பது. வடுமாங்கா ஊறுதுங்கோ தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ என்று ஆபாச வரிகளுடன்
கதாநாயகிகளின் இடுப்பைத் தடவி கெட்ட ஆட்டம்போடுவது. இதையெல்லாம் விட்டுவிடுவாரா? இது எல்லாம் இல்லாமல்
படமெடுக்க முடியாதே என்று சொல்வாரானால் அவரின் காதலுக்கு மரியாதை படத்தை அவரே ஒருமுறை பார்த்துக்கொள்ளட்டும்.
இதில் இன்னொன்று விஷயம் அன்புமணி சொன்னதும் ரஜினிகாந்த் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதுபோல் நடிப்பதை மட்டும்
விட்டுவிட்டார் என்கிறார்கள். அதற்குபிறகு ஒரு படமோ இரண்டு படமோதான் நடித்திருக்கிறார். ஆனால் இனி புகைப்பிடிக்கிற
காட்சி இடம்பெறாது என்று உறுதி வழங்கியிருக்கிறார் ரஜினி. சரி அதெல்லாம் இருக்கட்டும் நிஜத்தில் ரஜினி புகைப்பிடிப்பதை
விட்டுவிட்டாரா?
புட்டிப்பால் குடிக்கமுடியாததால் செத்துப்போன பொறியியல் கல்லூரி மாணவன்!

செய்தி-2 :

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மகன் விது (18). இவர் சென்னையை அடுத்த குன்றத்தூர்
பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில்
தங்கியிருந்தார். மாணவர் விது மேல்நிலை பள்ளி வரையில் தமிழ் வழிகல்வி கற்றவர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1,023
மதிப்பெண்கள் பெற்று அரசு இடஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பொறியியல் கல்லூரியில் பாடத்திட்டம்
ஆங்கிலத்தில் இருந்ததால் அவரால் அதனைச் சரியாகப் புரிந்துகொண்டு படிக்க இயலவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளில் ஐந்து
பாடத்தில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இதனால் விது விரக்தியில் இருந்தார். இந்நிலையில் விது, விடுதியில் உள்ள குளியல்
அறையில் தனது லுங்கியை இரண்டாகக் கிழித்து அதைக் கயிறுபோல் திரித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவர் பிணத்தைக் கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். சாவுக்கான காரணம் குறித்து விது ஒரு
கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அதில், "எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சிறுவயதிலிருந்தே தமிழ்வழியில்
பயின்றுவந்தேன். பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆங்கிலத்தில்
படிக்க இயலாததால் தூக்குப் போட்டு இறக்கிறேன்."

கேள்வி :

சில இறப்புகள் வருத்தத்தை வரவழைக்கக்கூடியவை. சில இறப்புகள் வருத்தத்துடன் கோபத்தையும் வரவழைப்பவை. அப்படிப்பட்ட
இறப்புக்காகத்தான் விது இறப்பு உள்ளது. ஆங்கிலம் தெரியாது என்பதற்காகத் தூக்குமாட்டி யாராவது இறந்துபோவார்களா? அதுவும்
பனிரெண்டாம் வகுப்பில் 1,023 மதிப்பெண்கள் எடுத்த மாணவர். இது எப்படியிருக்கிறது என்றால் தாய்ப்பால் குடித்த குழந்தை
புட்டிப்பால் குடிக்க முடியவில்லையே என்று இறந்துபோனால் எப்படியிருக்குமோ அப்படி. ஆங்கில மொழி என்பது நமக்கு அந்நிய
மொழி, இதைத் தெரியாமல் இருப்பது அங்கீகார இழப்பென்றும். தெரிந்திருப்பவர்கள் அங்கீகாரம் பெற்றவர்கள் என்று கருதுவதற்கு
இடமே இல்லை. எல்லா மொழிகளிலும் இல்லாத மொழி வளம் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கிறது. தமிழை
அறிந்துகொள்வதற்காக, சங்க இலக்கியங்களைப் படிப்பதற்காக வெளிநாட்டினர் தமிழைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிற வேளையில்
ஆங்கிலம் தெரியவில்லை என்று இறந்துபோகிற மாணவர்களை என்னவென்று சொல்வது. பாடத்திட்டங்களைப் புரிந்து
கொள்ளமுடியாமல்தானே மாணவன் இறந்துபோயிருக்கிறான் என்று சிலர் கேள்வி எழுப்பலாம். தமிழ் வழியில் படித்துவிட்டு
ஆங்கிலத்தில் படிக்கிறபோது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். முயிற்சியிருந்தால் போகப்போக ஆங்கிலமும் தமிழ்போல
வந்துவிடும் என்பது புரிந்துகொள்வதில்லை இதுபோல் இறக்கும் மாணவர்கள். எப்படியிருந்தாலும் இது சிரமம் என்று
கருதுகிறவர்களுக்காக சில உதாரணங்கள். அப்துல்கலாம் தமிழ் வழிக் கல்வி படித்தவர்தான். அண்ணா பல்கலைக்கழகத்
துணைவேந்தராக இருந்த அனந்தகிருஷ்ணன் தமிழ் வழி கல்வி படித்தவர்தான். இப்படி பல
முன்னுதாரணங்களைஅடுக்கிக்கொண்டே போகமுடியும். இருப்பினும் இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க எல்லாத்துறை
படிப்பையும் தமிழ் வழியில் கொண்டுவர ஆவனச் செய்யவேண்டும். அறிவியல் தமிழ் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே...
அதை எப்போதுதான் முழுமையாக நிறைவேற்ற போகிறீர்கள்?

No comments: