Thursday, November 29, 2007

குரலை நெறிக்காதீர்கள் மலேசிய அமைச்சரே!




குரலை நெறிக்காதீர்கள் மலேசிய அமைச்சரே!



தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(30.11.2007)



செய்தி:


மலேசியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறிய கருத்துக்கு,
மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். "முதல்வர் கருணாநிதி இருப்பது தமிழகத்தில்; மலேசியாவில் அல்ல.
அவருடைய மாநிலத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அதைப்பற்றி அவர் கவலைப்பட வேண்டும். இங்குள்ள பிரச்சினை
பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை. எனவே இப்பிரச்சினையில் கருத்து தெரிவித்து பேசாமல் இருந்தால் போதும்' என்று
நஸ்ரி அஜீஸ் தெரிவித்ததாக "நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.


கேள்வி:

மலேசிய அமைச்சரே, கியூபா புரட்சியாளர்... மன்னிக்கவும் உலகப் புரட்சியாளர் சேகுவேரா புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.
சேவின் பாரம்பரியம் தெரிந்துகொள்ளும் நோக்கோடு ஒருவர் கடிதம் எழுதியிருப்பார். அந்தக் கடிதத்திற்கு சே பதில்
எழுதியிருப்பார்: "இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி
நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள்.'' என்று சொல்வார். இந்தக் கூற்று யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ..
சொரணையுள்ள தமிழர்கள் எல்லோருக்கும் கட்டாயம் பொருந்தும். உலகில் எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும்
சேகுவேராவைப்போல் ஆயுதம் தாங்கிப் போராட முன்வராவிட்டாலும், நியாயத்தை எடுத்துச் சொல்ல தமிழன் தயங்கியதே
இல்லை. அந்தவகையில்தான் தமிழக முதல்வர் கருணாநிதி தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார். நீங்கள் சொல்லிய
வண்ணம் தமிழகத்தில் பிரச்சினைகள் இல்லையா? என்றால், பிரச்சினையே இல்லாத நாடு, மாநிலம் எது என்று சொல்லுங்கள்
பார்க்கலாம். புத்த மதத்தை அதிகமாகப் போதிக்கிற நாடுகளில் எல்லாம்கூட அளவு கடந்த பிரச்சினைகள்தானே. காய்ச்சல்
கண்டிருக்கிற மகனை விட்டுவிட்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகனைத்தானே முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லவேண்டும். கேட்கிற உரிமையைக்கூட வழங்காத உங்கள் ஆட்சி முறையை குறை கூற யாருக்கும் உரிமை உண்டு. கேட்கிற
உரிமையை பறிக்கிற அதிகாரம் உங்களுக்கு மலேசியாவோடு முடியட்டும். கடல் தாண்டியும் அதிகாரப் பரவலாக்கம் செய்ய
விரும்பாதீர்கள். குரலை நெறிக்க வராதீர்கள்... இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லீம் சமுதாயத்தினர் சிறுபான்மை மக்கள். அவர்களுக்கு ஒரு குடையாக கருணாநிதி என்றைக்குமே இருந்து வந்திருக்கிறார். உங்கள் நாட்டில் இப்போது வேறுவிதமான நிலை. அங்கு இந்துக்கள் உங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றால், அதில் நியாயம் இருக்கிறபட்சத்தில் குரல் கொடுப்பது தவறில்லை. என்றைக்குமே தமிழன் நீதியின் பக்கம். சிறுபான்மையினர் பக்கம். (கலைஞரைப் பற்றி காரசாரமாக விவாதிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கலாம். சிறுபான்மை மக்களுக்காக அவர்
என்றைக்குமே குரல் கொடுக்க தயங்கியதே இல்லை.) நீதியை நிலைநாட்டத் தயாரா அமைச்சரே?


No comments: