Saturday, November 17, 2007

நடைவண்டிச் சாலைகள் (7)


சினிமாத்தனமான சிநேகிதமா?

உலகமொழிகள் எல்லாவற்றிலும் சிநேகிதம் என்ற சொல்லுக்குத் தனிச்சிறப்பு உண்டு. எல்லா உறவுமுறைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சிநேகிதம் முதன்மைக் கொடியைத் தூக்கிக் கொண்டு பயணிக்கிறது. 'அன்னையர் தினம்' போல் 'தந்தையர் தினம்' அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் 'சிநேகிதர்கள் தினம்' விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அப்படியிருக்கையில் சிநேகிதம் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?பூக்களுக்குக் காம்புகள்போல், ஒவ்வொரு மனிதருக்கும் சிநேகிதன் அடித்தளமாக இருக்க வேண்டும். தூய்மை, தியாகம், தன்னம்பிக்கை கொண்ட பிணைப்பு, தவறுகளுக்கு பாவமன்னிப்பு கேட்கத் தகுதி உடையவராக இருக்க வேண்டும். இத்தகைய பண்புகள் உள்ள சிநேகிதன் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. இதனால் ஒருவரோடு பழக வாய்ப்பு ஏற்படுவதாலேயே சிநேகத்தை உருவாக்கிக் கொள்கிறோம். பழகியபின். அவர் தவறை நாமோ, நம் தவறை அவரோ திருத்த முயற்சிப்பதே இல்லை. இது மேலே ஏறுகிற நண்டை, கீழே இழுக்கிற நண்டு கதையாகவே விபரீதத்தில் போய் முடியும். எனவே சிநேகிதன் தேர்வு என்பது விருப்பப்பாடத்தைத் தேர்வு செய்வதைவிட முக்கியமானது.வாழ்க்கையில் புதிய புதிய பரிணாமங்களை எடுத்து வைக்க விரும்புகிற நம் இலட்சியச் சிறகைத் துண்டிக்க விரும்பாத சிநேகிதனையே தேர்வு செய்ய வேண்டும். இதையெல்லாம் கழித்துவிட்டு இன்றைய சிநேகிதம் என்பது பல வழிகளில் தவறான பாதைகளில் போகிறவையாகவே உள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது. இதற்கு இன்றைய சினிமாக்களும் ஒருவகையில் சாமரம் வீசுகிறது என்பதுதான் வேதனை. முதுமையிலும் உதிர்ந்துவிடாத சிநேகிதத்தை, இளமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதுபோல் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. இளமை தொடர்பானவற்றிலும் ஆரோக்கியமான விஷயங்கள் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அப்படிப்பட்டதாக இல்லை, இன்றைய சினிமாக்கள். சிநேகிதன் என்றால் காதலுக்குத் துணை நிற்பவன், ஏதேனும் குட்டிச் சுவரில் அமர்ந்துகொண்டு போகிற பெண்களைக் கேலி புரிகிறவன், சங்கேத மொழிகளில் பேசுகிறவன், வாழ்க்கையைப் போதைக்கு விற்க வழிகாட்டுபவன், ஐந்து பேரோடு சேர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறவன் என்றுதான் பல சினிமாக்கள் சித்தரிக்கின்றன. இது அன்றாட வாழ்க்கையிலும் உள்ள சங்கதிதான் என்பதை மறுப்பதற்கும் இல்லை. உல்லாசமாக ஊர் சுற்றுவது, காட்டுக்கூச்சலுடன் அரட்டை அடிப்பது, தேர்வில் தோற்றால்கூட விருந்து என்ற பெயரில் உற்சாகப் பானம் அருந்துவது-இப்படித்தான் பலர் இளமையைக் கழிக்கின்றனர். இதுபோன்றவர்களால் எழுச்சியுள்ள சமுதாயத்தை எப்படி உருவாக்கிட முடியும்? இவர்களால் நல்லவர் சிலரும் பாதிப்புக்குள்ளாக வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே எட்டாத சிகரங்களை எட்ட விரும்புகிறவர்கள், சினிமாத்தனமாக நடந்துகொள்ளும் சிநேகிதர்களைத் திருத்தப் பாருங்கள். எண்ணற்ற முறை முயன்றும் திருந்தாவிடில், அவர்களிடமிருந்து ஒதுங்கியிருத்தலே நலம்.

No comments: