Wednesday, November 28, 2007

`மீசையைத் தலையில் கட்டிக்குவேன்!'



மீசையின் இரண்டு பக்கமும் மல்லிகை பூவைச் செருகிக் கொண்டு "இம்சை அரசன்' படத்தில் வந்த வடிவேலுவைப் பார்த்து சிரித்தவர்கள் எல்லாம் கோவிந்தராஜன் மீசையைப் பார்த்தால்?
மாங்காயையோ, தேங்காயையோ, பூசணிக்காயையோ மீசையின் இரண்டு பக்கமும் வைத்து அவரைத் தூக்கிக்கொண்டு நடக்கச் சொன்னாலும் சொல்வார்கள்! இப்படிச் சொல்வதால் கோவிந்தராஜனை வைத்து "காமிடி...கீமிடி' செய்கிறோம் என்று நினைக்க வேண்டாம். சென்னை தி.நகர். கிருஷ்ணா சுவீட்ஸ் கடையில் செக்யூரிட்டியாக நிற்கும் அவரைப் பார்த்தால் நாங்கள் சொல்வதை உண்மை என நம்புவீர்கள். ஒன்றரை அடி நீளமுள்ள மீசை வைத்திருக்கிறார். இரண்டு பக்கமும் ஏதோ குத்தீட்டி போல விறைத்து நிற்கும். கொஞ்சம் தூரம்... நின்றே அவரிடம் பேசினோம்:
""இப்போது ஐம்பது வயதாகிறது. மீசை வளர்க்கிற ஆர்வம் கடந்த ஆறேழு வருடங்களுக்கு முன்தான் ஏற்பட்டது. அதுவும் எனக்குத் தானாக அந்த ஆர்வம் வந்துவிடவில்லை. திருச்சிதான் என்னுடைய சொந்தவூர். அங்குள்ள ஒரு சலூன் கடையில்தான் எப்போதும் முடிவெட்டுவேன். மீசையை நறுக்கி ஷார்ப்பாக வைத்துக்கொள்வதுதான் என் வழக்கம். அந்தச் சலூன்காரர்தான் முதலில் கடா மீசையை எனக்கு வைத்து நன்றாக இருக்கிறது என்று சொன்னார். ஆரம்பத்தில் கடா மீசை வைத்தது எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. "மீசை...மீசை' என்று எல்லோரும் கூப்பிடுவார்களோ என்கிற பயம் வேறு இருந்தது. ஆனால் நினைத்ததற்கு மாறாக, "எப்படி மீசையை இப்படி வளர்த்து வைத்திருக்கிறீர்கள்? உங்கள் மீசை நன்றாக இருக்கிறது' என்று எல்லோரும் பாராட்டத்தான் செய்தார்கள். இதன் பிறகுதான் மீசை வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் வந்தது.
முதலில் நான் கூட இவ்வளவு பெரிய மீசை வளர்ப்பேன் என்று நினைக்கவில்லை. தினமும் காலை எழுந்ததும் மீசையை இரண்டு பக்கமும் சீவி, தேங்காய் எண்ணெய் கொண்டு தடவி விடுவதை மட்டும் செய்துகொண்டிருந்தேன். இப்படிச் செய்யச் செய்ய மீசை கருகருவென வளர்ந்தது. இப்போது ஒன்றரை அடிக்கும் மேல் மீசை வளர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இவ்வளவு நீளத்திற்கு யாரும் மீசை வளர்க்கவில்லை. வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இதைவிட நீளமான மீசை வைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு நீளமான மீசை வளர்த்து கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இந்த இடத்தில் ஓர் உண்மையையும் சொல்லவேண்டும். இதுவரை நீளமான மீசை வளர்ப்போருக்கான போட்டி எதிலும் நான் கலந்துகொண்டதில்லை. முதலில் இந்தப் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது என்று தெரியாததுடன் எனக்குப் போதுமான நேரமும் இல்லை. என்னுடைய முழுநேரமும் வேலையிலேயே சென்றுவிடுவதால் இதில் கவனம் செலுத்தமுடியவில்லை. இனிமேல் கவனம் செலுத்துவேன்.
மீசை பெரிதாக இருப்பது பல்வேறு பிரச்சனைகளைக் கொடுக்கும் என்று சொல்வார்கள். எனக்கு அப்படி எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. என்னுடைய வீட்டில் மனைவி, பிள்ளைகள் உட்பட எல்லோருமே என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். சாப்பிடுகிற நேரத்தில் மட்டும் மீசையைப் பின்புறமாக இழுத்து தலையில் கட்டிக் கொள்வேன். மற்றபடி ஒரு பிரச்சினையும் இல்லை. மீசை வளர்ப்பதுபோன்று தாடி வளர்ப்பதில் எனக்கு ஏனோ ஆர்வமே இல்லை.'' என்கிறார் கோவிந்தராஜ்.
"மீசை வளர்த்திருப்பவர்கள் பெரும்பாலும் அதிக கோழைகளாகத்தான் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் எப்படி?' என்றோம் அவரிடம். முறைத்தார். ஓடிவந்துவிட்டோம்.

No comments: