Monday, November 26, 2007

கலையும் வயிறும் (யான் பெற்ற இன்பம்)

கலையும் வயிறும்


அகிலன்


எழுத்தாளனிடம் கலையும் இருக்கிறது; வயிறும் இருக்கிறது. ஆனால் வயிறு இருக்கிறதே என்ற நினைவோ கவலையோ அவனுக்கு
இருப்பதில்லை. அதனால்தான் அவனுடைய வயிற்றைப் பற்றி கலை உள்ளங்கொண்ட வேறுசிலர் கவலைப்படுகிறார்கள். கலைஞன்
உயிருடன் இருக்கும்போதே அவனுக்கு உதவ நினைப்பதற்கும், அவன் செத்தப்பிறகாவது அவனுடைய குடும்பத்திற்கு ஆதரவு
அளிக்க விரும்புவதற்கும் இதுதான் காரணம்.

இந்த மாதிரி உதவிகளின் நோக்கத்தில் தவறு எதும் இல்லை. ஆனால் இதைக்கொண்டு கலைஞனுடைய கலையை அநுபவிப்பவர்கள்
அவனுக்கு தங்கள் கடமையைச் செய்து விட்டதாகப் பெருமை கொள்வார்களானால் அது பெரும் ஏமாற்றமே. இந்த நிதி திரட்டும்
செயல் அவசியமற்றது என்றுதான் நானும் சொல்கிறேன். மற்றவர்கள் நிதி திரட்டி உதவவேண்டிய நிலையில் ஒரு கலைஞன்
இருந்தானென்றால் அது கலைஞனுடைய தவறல்ல. அவனை அந்த நிலையில் வைத்திருக்கும் சமூகத்தின் தவறு. காசில்லாமல்
கலையை அநுபவித்துவிட்டு, அதை அளிக்கும் கலைஞனைக் காற்றைச் சாப்பிடச் சொல்வது மனிதக் கூட்டத்தின் மன்னிக்க முடியாத
குற்றம்.

எழுத்தாளர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று ஆங்கில எழுத்தாளனும் அண்மையில் பிரதம மந்திரியாக இருந்து வந்தவனுமான
வின்ஸ்டன் சர்ச்சில் சொல்கிறான். "ஆனந்தமயமான கற்பனைகளின் உதவியால் தன் எழுத்துக்களை பத்திரிகையிலோ
புத்தகத்திலோ வெளியிட்டு அதன் மூலம் வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்லவா?'' என்று கேட்கிறான். உண்மைதான் கலைப்
பண்பும் மன வளர்ச்சியும் அடைந்த மக்களின் மத்தியில் உள்ள எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மை.
ஆனால் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள்? இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்ல; துரதிர்ஷ்டசாலிகள்.

எழுத்தாளன் தன்னுடைய இன்பத்திற்காகவே எழுதுகிறான். அவன் அப்படித்தான் எழுதவேண்டும். ஆனால், அவன் எழுத்தை
சமூகம் பயன்படுத்திக் கொள்கிறது. ஒருவனுடைய இன்பத்தில் பிறந்த எழுத்துக்கள், ஊருக்கெல்லாம் இன்பம் தருகின்றன. தனக்காக
அவன் எழுதுவதால் அவனைச் சுயநலவாதி என்பதா? ஒருவனுடைய சுயநலத்தால் பலருடைய பொதுநலம் பெருகும் போது, அந்தப் பலர் இந்த ஒருவனுடைய சுயநலத்தை வளர்க்க வேண்டியது அவசியமல்லவா?

எழுத்துக் கலைக்கும் எழுத்துத் தொழிலுக்கும் உள்ள வேறுபாட்டை வாசகர்கள் கவனிக்க வேண்டும். இன்றைக்கு நான் நாவல்
எழுதினால் அது கலை. சினிமாவுக்கு எழுதினால் தொழில். கலைஞன் தன்னுடைய கலையின் மூலமாகவே வாழவேண்டும்.
அப்போதுதான் கலை வளரும். கலைஞர்கள் பெருகுவார்கள். மொழி வளம் சிறக்கும். மனித பண்பில் அழகு மிளிரும்.

இதனால் கலை கலைக்காகவே என்று நான் கூறுவதாக அர்த்தம் இல்லை. அது மக்களுடைய இன்பத்திற்கும் வளர்ச்சிக்கும் உரிய
ஒன்று. ஆனால் ஒருக்காலும் கலை அதிலும் எழுத்துக்கலை தொழிலுக்காக வியாபார நோக்கத்திற்கென்றே உருவாகக் கூடாது.
எழுத்துக் கலையைத் தொழிலாக மாற்ற விரும்புகிறவர்கள், அந்தக் கலைஞனின் நோக்கம் கெடாமல் அழகு குறையாமல் அதைக்
கையாள வேண்டும்.

கடை சரக்காகவே கலை தயாரானால் அதை வாங்கக்கூடிய மக்களின் தரத்தை அறிந்து அவர்களுடைய ருசிக்கேற்ப அதை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்போது கலைஞனிடம் கலை இருக்காது. அவன் தனக்காக எழுதாமல் மற்றவர்களுக்காக எழுதுகிறான். கலையை மறந்து வயிற்றுக்காகப் பாடுபடுகிறவன் தன்னுடைய சொந்தக் கருத்தான கற்பனை சிகரத்தில் கம்பீரமாக தலை நிமிர்ந்து உலவாமல் கடைத்தெருவின் புழுதிக்கு இறங்கி வந்து அங்கே கூடி உள்ள சந்தைக்கூட்டத்தினரைத்
திருப்திப்படுத்துவதற்காக எழுத்தை மலிவு பொருளாக மாற்றி விடுகிறான். மனப்பண்பு வளராத நாடுகளில் மலிவு பொருள்களுக்குத்தான் கிராக்கி அதிகம். முட்டாள்களிடம் செய்யும் எந்தத் தாழ்வான வியாபாரமும் எப்போதும் நஷ்டமடைவதில்லை.

எழுத்தாளனுடைய சுயநலம் எழுதவேண்டும் என்ற ஆசை அவனுடைய நெஞ்சைச் சுற்றி வட்டமிட்டால் அது கலை. வயிற்றைச்
சுற்றி வட்டமிட்டால் அது தொழில். கலையே தொழிலாக மாறுகிறது. மாறவும் வேண்டும். ஆனால் கலையின் பிறப்பு பரிசுத்தமாகத்
தொழிலின் லாபநஷ்ட சிறுமைகளுக்கு அடங்காததாக எல்லையற்ற வெளிகளில் கட்டற்று திரியக்கூடியதாக இருக்க வேண்டும்.

எழுத்தை வியாபார நோக்கத்துடன் எழுதுபவர்கள் இருக்கட்டும். இன்னொரு வகையினரைக் கவனிப்போம். இவர்கள் தங்களுடைய
கொள்கைகளின் நிறைவேற்றத்திற்காக எழுத்தை உபயோகிப்பவர்கள். அவர்களுடைய கொள்கைகள் உயர்ந்தவனவாக மனித
சமுதாயத்தின் வளர்ச்சிக்கு ஏற்றனவாக இருக்கலாம். முற்போக்கு அரசியல்வாதிகளை, சமூக சீர்திருத்தக்காரர்கள், ஆன்மீக வளர்ச்சியில் நாட்டங் கொண்டவர்கள் அனைவரும் தங்களுக்குக் கருவியாக எழுத்தைக் கையாளுகிறார்கள். இவர்களுடைய நோக்கங்களின் அரிய கருத்துக்கள் பலவற்றை எழுத்துக் கலைஞனுடைய படைப்பிலும் பின்னிப் பிணைந்திருக்கக் காணலாம். அதற்காக எழுத்தாளனை அரசியல்வாதியுடனோ, சீர்திருத்தக்காரனுடனோ, ஆன்மீகத்துறையில் உள்ளவனுடனோ ஒப்பிடுவது
சரியல்ல. யார் யாருடைய எந்தெந்தக் கருத்துக்கள் அவனுக்குப் பிடித்திருக்கிறதோ அவற்றை எழுத்தாளன் எடுத்துக் கொள்கிறான்.
அவனுக்கு நல்லதாகத் தோன்றுவதைப் போற்றுவதும், கெட்டதாகத் தோன்றுவதைத் தூற்றுவதும் அவனுடைய இயல்பு.

கலைஞனுடைய சொற்களில் உயிரும் உணர்வும் அழகும் துடிப்பதால் அவனுடைய சொற்களில் தங்களுக்கு வேண்டியவற்றை
அரசியல், சமூக, ஆன்மீகத் துறையில் உள்ளவர்கள் எடுத்துக் கையாளுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும்
தங்களுடைய எல்லாக் கொள்கைகளையும் எழுத்தாளன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இல்லை. அவன்
ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். உலகத்தில், அவன் யாருக்கும் எந்தச் சக்திக்கும் அடிமையல்ல.

இதனால் எழுத்தாளன் எழுத்து வியாபாரி அல்ல என்பதும், குறிப்பிட்ட ஒரு சாதாரண நோக்கத்தைப் பரப்புவதற்காக எழுத்தைக்
கருவியாகக் கொள்பவன் அல்ல என்பதும் தெளிவாகிறது. எழுத்துக்கலை எவனைத் தன்னுடைய அழகையும் உண்மையையும்
வெளிப்படுத்தக் கருவியாகக் கொள்கிறதோ அவனே எழுத்தாளன். வியாபாரி தன் வியாபாரத்தினால் பிழைக்கிறான். அரசியல்வாதியோ, சீர்திருத்தக்காரனோ தன்னைப் பின்பற்றுகிறவர்களால் வாழ்கிறான். எழுத்துக்கலைஞனின் வயிற்றைக் கவனிப்பவர்கள் யார்?

ஒன்று அவன் பத்திரிகைகளுக்கு எழுதும் கதை, கட்டுரைகளைக் கொண்டு வாழ்வை நடத்தவேண்டும். அல்லது புத்தகங்களாக எழுதி
வெளியிட்டு அதன் வருவாயைக் கொண்டு வயிற்றை மறந்து கலையில் ஈடுபடவேண்டும். இந்த இரண்டு வழிகளில் ஒன்றுமே சாத்தியமாகாவிட்டால் எப்படிக் கலை வளரும்? பட்டினிக் கிடக்கும் வயிற்றை வைத்துக்கொண்டு எவனுமே கதை, கட்டுரை, கவிதை எழுதி மற்றவரை மகிழ்விக்க முடியாது.

எழுத்துக்கலையையே, முழுவதும் வயிற்றுக்கு நம்பக்கூடாது என்றும், ஓய்ந்த வேளைகளில் எழுதி கலைத் தொண்டு செய்தால் போதும் என்றும் சொல்பவர்கள் இங்கு பலர் இருக்கிறார்கள். காலஞ்சென்ற புதுமைப்பித்தனும், தம்முடைய துன்பம் நிறைந்த அநுபவத்தின் முடிவில் இதைத்தான் சொல்லிப் போயிருக்கிறார். ஆனால் ஓய்ந்த வேளைகளில் எழுதும் எழுத்தாளர்களால் எந்த உருப்படியான இலக்கியமும் உருவாக்க முடியாது. அவர்களுடைய இலக்கியக் கனவில் ஓரளவையாவது அவர்களது வாழ்நாளைக்குள் நனவாக்க முடியுமா என்பது சந்தேகமே. புதுமைப்பித்தன் கதைகளும், கு.பா.ரா.ராவின் கதைகளும் இந்நாட்டிற்குக் கிடைத்திருப்பது அவர்கள் முழுநேர எழுத்தாளர்களாக இருந்ததால்தான். எங்காவது தாலுக்கா ஆபீஸில் அவர்கள் குமாஸ்தாக்களாக இருந்திருந்தால், ஓய்வு நேர இலக்கியப் பணி செய்திருந்தால், இன்றைக்கு நமக்குச் சொல்லிக் கொள்ளக்கூட அந்த இருவரும் அகப்பட்டிருக்க மாட்டார்கள்.

கற்பனைக் கலை கணக்குத் தொழிலைப் போன்றதோ, கட்டிடத் தொழிலைப் போன்றதோ அல்ல. நினைத்த நேரத்தில் நினைத்தபடி
அதை ஆட்டி வைக்க முடியாது. காலத்திற்கும் நேரத்திற்கும் கட்டுப்பட்டு இயந்திர ரீதியில் எழுதிக்கொண்டு செல்பவர்கள்
காகிதங்களை நிரப்பலாம். கற்பனைச் செழிப்பைக் காணுவது அபூர்வம். எழுத்தாளனுக்குக் காகிதம், பேனா, ஓர் ஒதுக்குப்புறம்
இவற்றைத் தவிர வெறெதுவவுமே தேவை இல்லை என்பது பலரது எண்ணம். ஆனால் சிந்திப்பதற்கு பொழுது, சுற்றிலும் நடப்பதைக்
காண நேரம். இதர இலக்கியங்களை அநுபவிக்க அவகாசம் இவ்வளவும் அவனுக்கு மிகவும் தேவை. இவை எல்லாவற்றுக்கும்
மேலாக அவன் கட்டற்றவனாக நினைத்ததை எழுதக்கூடிய சுதந்திரம் உள்ளவனாக இருக்கவேண்டும். கூண்டுக்குயிலின் கீதத்தில்
இயற்கையின் இனிமையை எதிர்பார்க்க முடியுமா?

இதனால் எழுத்தாளன் எந்த நேரத்தையும் தன்னுடைய இலக்கியப் பணிக்குச் செலவிடத் தக்கவனாக யாருக்கும் கட்டுப்பட்டு
வாழ்க்கை நடத்தாதவனாக இருக்கவேண்டியது அவசியம் என்றாகிறது.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள உறவு இதுதான். கலைக்கும் வயிற்றுக்கும் மத்தியில்
இழுத்துப் பறித்துக்கொண்டு நிற்கும் மூன்று நான்கு நல்ல பத்திரிகைகள் தவிர, மற்றவை வியாபார நோக்கம் ஒன்றையே
குறிக்கோளாகக் கொண்டவை. இலக்கிய வளர்ச்சியைப் பற்றியோ, கலைப்பணியைப் பற்றியோ அவற்றிற்கு அக்கறை கிடையாது.
இந்தப் பத்திரிகைகளுக்கு ஏற்றாற்போல் வாசகர்களும் விசித்திரமாக அமைந்திருக்கிறார்கள். ஒரேமாதிரிக் கதைகளையே எந்தவிதப்
புதுமையும் அழகும் இல்லாமல் வாரா வாரம் அல்லது மாதா மாதம் திருப்பித் திருப்பிப் போட்டாலும் அவர்கள் பொறுமையோடு படிப்பார்கள்! ஆகையால் எழுத்தாளனைப் பற்றிப் பத்திரிகையாளனோ, பத்திரிகையானைப் பற்றி எழுத்தாளனோ தங்கள் தேவைக்கு எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமற் போய்விட்டது.

"நல்ல கதைகளே எங்களுக்கு வருவதில்லை" என்று பத்திரிகைக்காரர்களும், "நல்ல கதைகளையே எங்களால் படிக்க முடிவதில்லை"
என்று சில வாசகர்களும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் நல்ல கதைகளை எழுதக்கூடியவனை நேர்மையான மனத்துடன்
ஊக்குவிப்பதற்கு எத்தனை பத்திரிகையாளர்கள் முன் வருவார்கள்? வாசகர்கள் விழித்துக் கொள்கிற வரையில், அவர்கள் தங்களுடைய கலை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அடங்காத ஆசை கொள்கிற வரையில் பத்திரிகை முதலாளியின் பணப்பெட்டி பத்திரமாக மூடியே இருக்கும். கலைஞனின் வயிறும் காலியாகவே இருக்கும்.

கடைசியாகத் தமிழ் எழுத்தாளன் வாழவேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழியில் இன்று வரையிலும்
முள் நிறைந்து கிடப்பதால் இந்தப் பரந்த தமிழகத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் தமிழர்கள் என்று தங்களைச்
சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நிறைந்த உலகத்தில் ஒரே ஒரு எழுத்தாளன் கூடச் சுதந்திரமாக எழுதிப் பிழைக்க முடியவில்லை.
தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் உதவுகிறவன் என்றோ, மிகவும் உயர்ந்த சேவையைச் செய்யும் பெருமகன் என்றோ
எழுத்தாளனைச் சொல்லவில்லை. ஆனால் எழுத்தாளன் யாருக்கும் தாழ்ந்தவனல்ல. உயிருள்ள சமூகத்தின் முக்கியமான நாடி
நரம்புகளில் அவனும் ஒன்று.

யாருக்கும் எந்தப் பயனும் இல்லாதவர்கள், உடலுக்கோ உள்ளத்துக்கோ தீங்கு தரும் தொழிலைச் செய்பவர்கள் குபேரர்களாக
வாழும்போது, பண்பட்ட எழுத்தாளன்கூடத் தன் எழுத்தால் வாழ முடியவில்லை என்றால் அது அவனுடைய பலவீனமல்ல. அவன்
பிறந்த சமூகம் தெரிந்தோ தெரியாமலோ அவனுக்குச் செய்யும் துரோகம்.

இன்றைக்கு உள்ள அந்தக் கடைசி வழி எழுத்தாளன் புத்தகம் எழுதிப் பிழைப்பதுதான். இந்த வழி ஏன் அடைத்திருக்கிறது? எப்படி
அடைத்திருக்கிறது?

சுமார் இரண்டு லட்சம் பேராவது தமிழ்நாட்டில் பத்திரிகை படிக்கிறார்கள். இவர்களில் இருபதில் ஒருவராவது, பத்தாயிரம்
பேர்களாவது புத்தகம் படிக்கிறார்கள். இந்தப் பத்தாயிரத்தில் பத்தில் ஒருவர் கூடப் புத்தகத்தைப் பணம் கொடுத்து வாங்குவது
கிடையாது. இவர்களில் பாதி ஐயாயிரம் பேராவது இரவல் புத்தகம் படிப்பதை நிறுத்திப் புத்தகம் விலைக்கு வாங்க ஆரம்பித்தார்களானால் எழுத்தாளன் மானத்தோடு வாழமுடியும். நினைத்ததை எழுதி நேர்மையைப் பரப்பவும் முடியும்.

புத்தகத்தை விரும்பிப் படிக்கிறவர்கள் எல்லோருமே ஏழைகளல்ல. காசு கொடுத்துக் கலையை ரசிக்க முடியாதவர்கள் தாராளமாக
இரவல் புத்தகம் வாங்கிப் படிக்கட்டும். ஆனால் புத்தகத்தை வாங்குவதற்குப் பணக்காரர்கள் அவசியமே இல்லை. மாதத்தில் மூன்று
ரூபாயோ, ஐந்து ரூபாயோ செலவு செய்ய வழி உள்ளவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்று அர்த்தமா? கன்னியாகுமரி முதல்
வடவேங்கடம் வரையில் உள்ளவர்களில் இம்மாதிரி ஐயாயிரம் பேருக்கா பஞ்சம் வந்துவிட்டது? மண்வெளி பரந்துகிடக்கிறது:
ஆனால் மனவெளியில் பரப்பில்லை. மலைகள் உயர்ந்திருக்கின்றன. ஆனால் மனம் உயரவில்லை. காவேரி பாயும்
மணல்வெளிகளில் தான் செழிப்பைக் காணுகிறோமே தவிர கலைச் செழிப்பும் மனச்செழிப்பும் கொஞ்சமும் இங்கே கிடையாது.

பீடியோ சிகரெட்டோ எந்தப் பெட்டிக்கடைக்காரனும் யாருக்கும் இரவல் தருவதில்லை. சினிமாவுக்கோ, வேறு எந்தப்
பொழுதுபோக்குக் காட்சிக்கோ எவனும் அதற்குரிய காசு கொடுக்காமல் போக முடிவதில்லை. கடற்கரைக்குக் காற்று வாங்க கார்
ஏறிச்சென்றால், அந்தக் கார்காரனுக்குக் காசு கொடுக்கவேண்டியிருக்கிறது. ஒரே ஒருவனை மட்டும் ஊரெல்லாம் ஏமாற்றலாம். ஒரே
ஒருவனுடைய உழைப்பை மட்டும் ஊதியமில்லாமல் அப்படி ஏமாற்றப்படுபவனும், திருட்டுக் கொடுப்பவனும் எழுத்தாளன்
ஒருவன்தான்!

இந்த ஒரே ஒரு உதாரணத்தைக் கூறி வயிற்றுக்கு வஞ்சனை செய்யும் இந்தக் கலைப்படைப்பை முடிக்கிறேன்.

கூட்டம் நிறைந்த தெருவின் ஓரத்தில் கழைக்கூத்தாடி ஒருவன் தன்னுடைய திறமையைக் காட்டத் தொடங்குகிறான். மூங்கிலின்
உயரத்தில் நின்று பம்பரமாய்ச் சுழலும்போது கூட்டம் அவன் செயலைக் கண்டு வியக்கிறது. கைகொட்டி ஆரவாரம் செய்கிறது.
உயிரைத் திரணமாக மிதித்து அவன் அற்புதம் அற்புதமான வேடிக்கைகளைக் காட்டுகிறான். பந்துபோல் காற்றில் எழும்பியும், கயிறுபோல் உடலை முறுக்கியும், தாவியும் குதித்தும் தன் கலையை வெளிப்படுத்துகிறான். கூட்டம் மெய்மறந்து அவனிடம் ஈடுபடுகிறது.

கடைசியில் அவன் காசு வாங்கும் கட்டத்திற்கு வருகிறான். அந்தக் கூத்தாடியின் வார்த்தைகளைக் கேளுங்கள்.

"பையில் காசிருந்தால் ஒரு காலணாப் போடுங்கள்... காசு இல்லாதவர்கள் கூட்டத்தை விட்டுக் கலைய வேண்டாம். இருப்பவர்கள்
போட்டால் போதும். இன்னும் சில வேடிக்கைகள் காண்பிக்கிறேன். இருந்து பார்த்துப் போங்கள்."

கழைக்கூத்தாடி ஒரு கலைஞன், அவனுக்காக போடச் சிலரும் கைதட்ட பலரும் வேண்டும். ஆனால் எல்லோரும் கைதட்டுகிறார்கள்.
காசு வைத்திருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கூட்டத்தை விட்டு கலைந்து போகிறார்களே ஏன்?கழைக்கூத்தாடியின் நிலையில் இன்று எழுத்தாளன் இருக்கிறான். பணம் இல்லாதவர்களை விடப் பணம் உள்ளவர்கள்தான் அவனை ஏமாற்றுகிறார்கள். வெறும் புகழ்மொழிகளால் ஒருவன் வாழமுடியாது. வயிற்றுக்காக ஒருபுறம் அடிமை வேலை செய்துகொண்டும். கலைக்காக இன்னொருபுறம் கிடைக்கும் நேரத்தையெல்லாம் விரயம் செய்துகொண்டும் இருக்கமுடியாது. இந்தநாட்டு மக்களின் பண்பில் தேய்வு கண்டுவிட்டதால் கழைக்கூத்தாடிகள் அருகி மறைந்து வருகிறார்கள். எழுத்தாளர்களின் இனம் இன்னும் சரியாகத்
தோன்றவே இல்லை. குழந்தைப் பருவத்தில் இருக்கும்போதே அதைக் கொல்லக்கூடிய பாவத்தை வாசகர்கள் செய்யமாட்டார்கள்
என்று நம்புகிறேன்.

மேல்நாட்டு எழுத்தாளன் ஒருவன் சொல்லிய சொல் இது:

புத்தகத்தைப் பணம் கொடுத்து வாங்கிப் படியுங்கள். இரவல் கொடுக்காதீர்கள். கொடுக்க நேரிடும் என்று தெரிந்தால் படித்து முடித்தவுடன் அதை நெருப்பில் போட்டுக் கொளுத்துங்கள். எழுத்துக்கலை அப்போதுதான் வளரும்.

No comments: